கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும

திண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையை இங்கே மீள்பதிப்பிக்கிறேன்.

மரபு மீறல் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எப்படிச் செய்யப் படக்கூடாது என்பதை தனது ஆழ்ந்த கலை, இலக்கிய அனுபவங்களின் அடிப்படையில் மிக அழகாகக் கூறியிருக்கிறார்.

இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
மலர் மன்னன்

மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது அல்லவா?

நேரம் கடந்துவிட்டதும் இதை விளக்கிப் பேசுவதற்குச் சாதகமாக இல்லாது போயிற்று. கூட்டம் கலைந்தபின் தஞ்சாவூர்க் கவிராயர் என்கிற அபூர்வமான கவிஞர் நெருங்கி வந்து கூட்டத்தில் பேசுகையில் நான் தெரிவித்த கருத்தை மேலும் விரிவாகப் பேசுவது அல்லது கட்டுரையாக எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார். இது விரிவாக விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய விஷயம். ஆகையால் போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போனதாக இல்லாமல் கட்டுரையாகவே பதிவு செய்துவிடுமாறு கூறினார். இதையே வேறு சில எழுத்தாளர்களும் கூட்டம் முடிந்தபின் சொன்னார்கள்.

ஆகையால் மரபை மீறுவதும் மரபைச் சிதைப்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தாம் என்று உணரலானேன். ஏனெனில் மரபை மீறல் என்கிற நினைப்பில் மரபைச் சிதைத்தல் சில சமயங்களில் சில படைப்பாளிகளால் செய்யப்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்முடைய மரபில் நமக்கு ஆழ்ந்த புரிதல் இல்லாமல் போயிருப்பதுதான். நம்முடையதுதானே என்கிற அலட்சியத்தில் எல்லாம் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டு நமது மரபு பற்றிய அரைகுறை ஞானத்தை வைத்துக் கொண்டே அதை மீற முயற்சித்து, மீறியதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டு ஆனால் சிதைத்துவிடுகிறோம்.

மரபைப் பற்றிய புரிதல் மிகவும் அரிதாகவே இருப்பதால் அது எங்கே மீறப்பட்டிருக்கிறது, எங்கே சிதைக்கப்பட்டுவிட்டது என்பதும் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. சிலசமயங்களில் அந்தச் சிதைப்பு சிலாகிக்கவும் படுகிறது!

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாரதியார் சொன்ன மாதிரி நம்முடைய கலாசாரம் மிக மிகத் தொன்மையாக இருப்பதனாலேயே நமது மரபும் மிகவும் தொன்மை யாகிப் போனது. இப்படியொரு தொன்மை மிக்க கலாசாரமும் அதன் மரபும் அவற்றைச் சார்ந்த படைப்பாளிக்கு உறுதியான அடித்தளமாக அமையக்கூடும்; அதுவே கழுத்தில் கட்டிக் கொண்ட கல்லாகவும் ஆகிவிடக் கூடும். எல்லாம் மரபைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்கும் சாமர்த்தியத்தைப் பொருத்தது.

என்ன செய்ய, முன்னூறு ஆண்டுகள் போல நமக்கு வாய்த்த கல்வித் திட்டம் நமது மரபிலிருந்து நம்மை அந்நியப்படுத்திவிட்டது. எந்தவொரு விளைவிலும் நன்றும் தீதும் கலந்தே இருக்கும். இது இயற்கையின் நியதி. விளக்கின் கீழேயே நிழல் இருந்துவிடுகிற மாதிரி. நமக்கு வாய்த்த கல்வித் திட்டத்தால் சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைக்கலாயின. காலனி ஆதிக்கம் நீங்கியபின் புத்திசாலித்தனமாக அதில் சில மாற்றங்களைச் செய்து ஒரு சுதந்திர தேசத்திற்கு உகந்ததாக மட்டுமின்றி பிற தேசங்களுக்கு வாய்க்காத அதன் தொன்மைச் சிறப்பினை உணர்ந்த பிரக்ஞையோடு பொருத்தமான புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இன்றளவும் இது நடக்காமலேயேதானிருந்து வருகிறது. குலபதி கே.எம். முன்ஷி போன்ற நமது கலாசரத்தில் வேரூன்றிய அறிஞர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டு பார்த்தார்கள். ஆனால் நமது கலாசாரப் பின்னணியை முன்னேற்றத்திற்குச் சாதகமற்றதென எண்ணிகொண்டிருந்தவர்களின் செல்வாக்கே அதிகார பீடத்தில் செல்லுபடியாகிக் கொண்டிருந்ததால் அது செயலுக்கு வராமலே போயிற்று.

நமது படைப்பாளிகளுக்குச் சிலுவை என்பது எதன் குறியீடு என்கிற விஷயம் சரியாகவே புரிந்திருக்கிறது. வெறும் விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கொண்டு போகிறவனை அவன் தனது சிலுவையைச் சுமந்துகொண்டு செல்வதாக எவரும் எழுதுவதில்லை. ஆனால் அரசவையில் அமர்ந்தவன் அங்குள்ள அரசுக் கட்டிலில் அமர்ந்தவனுக்கே விசுவாசம் காட்டி உத்தரவு கேட்க வேண்டும் என்கிற மரபின் பிரகாரம் பதினெட்டு நாள் பாரதப் போரில் முதல் பத்து தினங்கள் கௌரவ ஸேனையை வழி நடத்திவிட்டு, விரும்பும் தருணத்தில் சாவைத் தழுவலாம் என்கிற இச்சா மரண சாபல்ய யோக்கியதை பெற்றிருந்தும் குருட்சேத்திரக் களத்தில் அம்புப் படுக்கையில் உடல் கிடத்தி, உத்தராயணத்திற்காகக் காத்திருந்து, பரமனிடமே அனுமதி பெற்றுத் தமது சடலத்தைத் துறந்த பீஷ்ம பிதாமகரை முள் புதரில் விழுந்தவனோடு இணை காட்டத் தோன்றுமானால் அது மரபின் நுட்பம் உணராத மரபின் சிதைப்பு. இதில் படைப்பாளி மீது குற்றம் இல்லை. திணிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் தாக்கம் அது. மேற்கத்தியப் பார்வையுடன் சொந்த மரபைக் காணப் பயிற்றுவிக்கப்பட்டதன் விளைவு. பீஷ்மரைப் படிமம் ஆக்குகிறபோது அவரது பிரமாண்டமான ஆகிருதியையும் ஆளுமையினையும் கவனத்தில் கொண்டு இணை வைக்க வேண்டும். தவறினால் அபத்தமாகப் போய்விடும்.

தற்காலத் தமிழில் மௌனி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப் பித்தன், கு. அழகிரிசாமி, எனப் பலரும் மரபை அழகாக மீறியிருக்கிறார்கள். ஒரு முன்னோடியாகத் தமது பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரும் கம்பீரமாக மீறியிருக்கிறார். இவர்களைக் கருத்தூன்றிப் படித்தால் யார் யார் எங்கெங்கே கண்களை உறுத்தாதவாறு மரபை மீறியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். கி. ராஜ நாராயணனுங்கூட மிகவும் சுவாரஸ்யமாக இதைச் செய்திருக்கிறார். கவிஞர்களில் ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், ஸல்மா, தஞ்சாவூர்க் கவிராயர் எனப் பலரும் மரபைச் சிதைக்காமல் மீறிச் சென்றிருக்கிறார்கள். அது வாசலில் போட்ட கோலத்தை மிதித்துக் கொண்டு போகாமல் எச்சரிக்கையுடன் சுற்றிக் கடந்து செல்வது போன்றது. எனக்குத் தெரியாத இன்னும் பலரும், குறிப்பாக பா. வெங்கடேசன் போன்ற இளம் தலைமுறைப் படைப்பாளிகளும் இதைச் செய்திருக்கக்கூடும்.

மரபை ஆழமாய்ப் புரிந்துணர்ந்து, அதன் பின் அவசியம் கருதியும், காலப் பொருத்தம் பார்த்தும் அதனை மீறுதல் முறையான மரபு மீறல். இதற்கும் ஓர் எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது.

One Reply to “கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும”

  1. மெக்காலே கல்வித்திட்டத்தின் மூலம் நமது பாரத நாட்டின் மரபை ஆங்கிலேய பாதிரிகளும், ஆங்கிலேயரின் பல்லக்குதூக்கிகள் ஆன, திராவிட இயக்கங்களும் , தமிழகத்தில் ஏராளம் சிதைத்தனர். ஆனால் உண்மை எப்போது மறையாது,இறுதி வெற்றி உண்மைக்குத்தான். விரைவில் மெக்காலே கல்விமுறையும், அதற்கு வால் பிடித்த திராவிட இயக்கங்களும் ஒழியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *