சிறிய திருவடி

அனுமார்பாதங்கள் இவை என்னில்…

இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு போகும் கவிஞர்களுக்கு. ‘மொத்தம் மூணு இடங்களில் அவனுடைய திருவடி பட்டது’ என்று சொல்கிறார் அருணகிரி நாதர். ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ அவன் பயணப்படுவதற்காக ஏறி உட்கார்கிறான் பார், மயில், அது மேல அவன் அடியிணை பட்டது. அங்கே மட்டுமா பட்டது? இல்லை; தேவர்களின் பகையை அழித்தவன்; இந்திரனுக்கு அவன் உயிரையும், இந்திராணிக்கு அவள் மாங்கல்யத்தையும் மீட்டுத் தந்தவன் ஆகையினாலே தேவர்கள் எல்லோரும் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகிறார்கள். அந்தக் காரணத்தினாலே அவர்கள் தலையிலும் பட்டது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர்கள் தலையிலும்’.

அப்ப மூன்றாவது இடம் எது என்று கேட்டால் சொல்கிறார், ‘என் பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ!’ அந்த இரண்டு இடங்களில் மட்டுமில்லை; நான் எழுதி வைத்திருக்கிறேன் பார் கந்தர் அலங்காரம், அந்த ஓலைச் சுவடியிலும் அவன் திருவடி பட்டது.’

மயில் மீது பட்டது என்றால் அவன் பயணம் செய்ய வேண்டிய காரணத்துக்காக அவன் ஏறி அமர்கிறான்; அதனாலே பட்டது. தேவர் தலையிலே பட்டது என்றால், அவர்களுக்கு அவன் பேருபகாரம் செய்திருக்கிறான்; அதனாலே பட்டது. எந்தக் காரணமும் இல்லாமல், அவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட ஒரே காரணத்தால், அவனை நான் பாடியது செந்தமிழ் கொண்டு என்ற ஒரே காரணத்தால், நான் அவன் மீது பாட்டெழுதி வைத்திருக்கும் இந்தச் சுவடியின் மீதும் பட்டது என்றார்.

தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் மருகன்றன் சிற்றடியே.

அவங்க மாமன் என்ன பண்ணினான் என்றால், குள்ளனாக வந்து மாவலியிடம் மூன்றடி இடம் யாசித்தான்; பிறகு அந்தக் குள்ளனுடைய அடிகள் பெரிதாக வளர, அவை மூன்று உலகங்களையும் அளந்தன. மாமனுடைய பாதங்கள் பட்ட இடமோ மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் என மூன்று. அவன் மருமகனுடைய பாதங்கள் பட்ட இடமும் மூன்றுதான் – மயில், தேவர் தலை, அவன் மீது பாட்டெழுதிய என் ஏடு.

பாதங்கள் அவ்வாறு பெருஞ்சிறப்பைக் கொண்டவையாகப் பேசப்படுகின்றன. ஆரண்ய காண்டத்தில் விராதனை வதை செய்தான் இராமன். ‘எந்த ஆயுதத்தாலும் என்னைக் கொல்ல முடியாது. உன்னுடைய பாதங்களால் மட்டும்தான் அது நிகழும் என்று சாபம் பெற்ற அன்றே எனக்குச் சொல்லப்பட்டது. ஆகவே, உன் பாதங்களால் என்னை இந்தச் சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டான் விராதன். ‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்த’ அந்தப் பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனஉன்
பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ

‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன் வியந்தால், ‘அது எப்படி இருந்தா எனக்கென்ன? எனக்கு இந்த இரண்டு பாதங்கள் போதும்’ என்று பரிபாடலில் கடுவனிளவெயினனார் சொல்கிறார்.

‘நின்னிற் சிறந்த நின்தாள் இணைஅவை
நின்னிற் சிறந்த நிறைகடவுள் அவை…’

இந்த இரண்டடிகளுக்குள்ளே போய்ப் பேச முனைந்தோமென்றால் இன்னும் விரியும். இறைவனை விடவும், இறைவனின் தாளே அவ்வளவு பெருமைக்கும் உள்ளாகியிருக்கிறது; அதிகமாகத் துதிக்கப்படுகிறது; அதிகமாக நாடப்படுகிறது என்பதைச் சொல்லவே இவ்வளவு பேசினோம். முகம் என்றால், சடையும் நதியும் தாங்கியதாயிருக்கலாம்; நீள்முடி கொண்டதாயிருக்கலாம்; கரம் என்றால் ஒண் மழு கொண்டதாயுமிருக்கலாம்; சக்கரப் படை கொண்டதாகவுமிருக்கலாம்; மார்பென்றால் பொடி பூசியுமிருக்கலாம்; திருமகள் உறைவிடமாகவும் இருக்கலாம்; இடை என்றால் புலித்தோலை உடுத்ததாகவும் இருக்கலாம்; பீதாம்பரத்தை அணிந்ததாகவும் இருக்கலாம். பாதத்திற்கு எந்த வேறுபாடும் இல்லை. அடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருவது ஒன்றைத் தவிர வேறெதனாலும் அடையாளம் காண முடியாதவை பாதங்கள். ‘உன்னை விடவும் சிறந்தது உன் பாதம்; உன்னை விடவும் பெரிய கடவுள் அந்த இரண்டும்’ என்று பாடப்பட்டது அதனால்தான்.

இராமாயணத்தின் முதுகெலும்பாக விளங்கும் பாத்திரம் யாரென்றால் சற்றும் தயங்காமல் சொல்லலாம் அனுமன் என்று. அனுமன் என்ற பாத்திரம் இல்லாமல் இராம காதை ஆரணிய காண்டத்துக்கு அப்புறம் இல்லவே இல்லை. சுந்தர காண்டம் என்ற ஒரு முழு காண்டமும் அனுமனைச் சுற்றித்தான் நடக்கிறது. பால காண்டம் என்றால், இராமனின் குழந்தைப் பருவத்தைச் சொல்லும் காண்டம்; அயோத்தியா காண்டம் என்றால் இராமனுக்கு அயோத்தி கிடைக்க இருந்ததையும், அவன் அயோத்தியை நீங்கியதையும் சொல்லும் காண்டம்; ஆரணிய காண்டம் என்றால் இராமன் காட்டிலே வாழ்ந்ததைச் சொல்லும் காண்டம். கிஷ்கிந்தா காண்டம் என்றால், இராமனுக்கும் கிஷ்கிந்தைவாசிகளுக்கும் நட்பு ஏற்பட்ட விதத்தைச் சொல்லும் காண்டம். யுத்த காண்டம் என்றால் இராமன் அரக்கர்களுடன் யுத்தம் செய்ததையும், அவர்களை அழித்ததையும், சீதையை மீட்டதையும் சொல்லும் காண்டம். சரி. அப்ப சுந்தர காண்டம் என்றால்? சுந்தர காண்டம் என்றால் சுந்தரன் சீதையைக் கண்டு, அவளை அமைதிப்படுத்தி, இலங்காபுரியில் சேதம் விளைவித்து, இராவணனுடைய எழில் நிறைந்த பிள்ளையான அக்ககுமாரனை வதைத்து, இந்திரஜித்தோடு மோதி, இராவணனைக் கண்டு, இலங்கைக்குத் தீ வைத்து, இராமனிடம் மீண்டு, செய்தியை உரைத்த சம்பவங்களைத் தொகுத்துச் சொல்லும் காண்டம். அப்படியானால் சுந்தரன் யார்? அனுமன் அல்லவா?

மற்ற ஐந்து காண்டங்களுக்கும் பெயர்க்காரணம் சொல்லவேண்டுமானால் இராமனை வைத்துச் சொல்லிவிடலாம். இராமயணத்தில் பெரிதும் கொண்டாடப்படும் சுந்தர காண்டத்துக்குப் பெயர்க் காரணம் சொல்லவேண்டுமானால், இராமனைச் சம்பந்தப்படுத்தியன்று; அவன் அடியவனைச் சம்பந்தப்படுத்தித்தான் சொல்லவேண்டி வருகிறது. ஒரு முழு காண்டத்தின் நாயகன் அனுமன். யுத்த காண்டத்தில் பெரும் பகுதி அனுமனுடையது. பெரும் பங்கு அவனுடையது. உயிர் பிரியும் தருணத்தில் வாலி சொல்கிறான்: ‘அனுமன் என்பவனை ஆழி ஐய, நின் செய்ய செங்கைத் தனு என நினைதி’. இந்த அனுமன் இருக்கிறானே, அவனை எப்படி நினைக்கலாம் தெரியுமா? உன் கையில் வைத்திருக்கிறாயே பெரு வில், இலக்குத் தவறாமல் எய்யக் கூடிய வில், எஞ்ஞான்றும் உன் கையிலேயே நின்று உனக்கு ஏவல் செய்யக் கூடிய வில், தருமத்தை நிலைநாட்டக் கூடிய வில்; மூவுலகையும் அழிக்க நீ நினைத்தாலும் அப்படியே செய்து முடிக்கும் வில், அந்த வில்லை நீ எவ்வாறு நினைப்பாயோ, எப்படியெல்லாம் பயன்படுத்துவாயோ, அது எவ்வளவு நம்பக்தன்மை கொண்டதோ அவ்வளவுக்கும் உரியவன் இந்த அனுமன்.

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு. பெரிய திருவடி என்று கருடனையும், சிறிய திருவடி என்று அனுமனையும் அழைக்கிறார்கள். திருவடி என்று ஏன் அழைக்கிறார்கள்?

(“அனுமன்: வார்ப்பும் வனப்பும்” – கிழக்குப் பதிப்பக வெளியீடு – முதல் பாகம் – மீள் பிரசுரம்)

4 Replies to “சிறிய திருவடி”

  1. vanakkam,
    this web site like to first of all but without thirukural tamil website. so consider my point

  2. எம்பெருமானின் திருவடித் தாமரைகளை தாங்கிக் கொண்டு விளங்குபவர்கள் என்பதால் கருடாள்வாரையும் அனுமனையும் ’திருவடி’ என்பர். கருடரை பெரிய திருவடி என்றும் அனுமனை திருவடி என்றும் வேறுபடுத்திக் கூறுவர்.

    ’திவ்யப்பிரபந்த அகராதி’ 665ம் பக்கத்தின் ’பெரிய திருவடி’ பதத்திற்கு விளக்கம்: :…..கருடன் ஹனுமான் இருவருக்கும் ’திருவடி’ என்று ஸம்பிரதாயப் பெயராயிற்று. இருவரில் பெரியவராகையாலே கருடன் ’பெரிய திருவ்டி’. ஹனுமானுக்கு ’சிறிய திருவடி’ என்று பெயரில்லை. திருவடி ம்ட்டுமே.
    quote ends.

  3. ஆஞ்சநேயர் சிறிய திருவடி வணங்கி வாழ்வில் இடர் களைவோம். ஆஞ்சநேயர் / மாருதி/ அனுமான் படத்துக்கு முன் அமர்ந்து இராமன் திருப்பெயரை தியானம் செய்தால் , வார்த்தைகளில் விவரிக்க இயலாத மன அமைதி கிடைக்கிறது. வாழ்க அனுமனின் அனுக்கிரஹம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *