கம்பனின் கும்பன் – 2

கம்பனின் கும்பன் – 2

ஹரி கிருஷ்ணன்

போர் தொடங்குதலும் உறக்கம் கலைந்த கும்பகருணன் நிலையும்

இதன் பிறகு காப்பியத்தில் கும்பகருணனை நாம் சந்திக்க முடிவதில்லை. அவன் தூங்கப் போய்விடுகிறான். போர் தொடங்குகிறது. முதற்போர் புரி படலத்தில் ஆட்களையும் ஆயுதங்களையும் இழந்து இராமன் கருணையால் இன்று போய் போருக்கு நாளை வா என்று அனுப்பப்படுகிறான் இராவணன்.

தருக்கன் செருக்கு அழிக்கும் செம்மல்

மனம் சோர்ந்து புலம்பிக் கொண்டிருக்கும் இராவணனுக்கு மகோதரன் என்னும் அரக்கன் கும்பகருணனைப் போருக்கனுப்பலாம் என்ற யோசனையைத் தெரிவிக்கிறான். ஆட்களை அனுப்பி உறங்குகின்ற கும்பகன்னனை எழுப்பி அழைத்து வரச்செய்கிறான் இராவணன். பெருந்தூக்கத்திலிருந்து எழுந்து வந்த கும்பகருணனுக்குப் பெருந்தீனி அளித்து போருக்குத் தயார் செய்கிறான். கும்பகருணனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

அன்ன காலையின் ஆரம்பம் யாவையும்
என்ன காரணத்தால் என்றியம்பினான்”.

மானிடரும் வானரப்பெருந் தானையரும் கோனகர்ப்புறம் முற்றினர். நீ போய் அவர்கள் உயிரை உண்ணும் போனகத் (போஜனத்) தொழில் செய். புறப்படு என்றான் இராவணன். முகம் மாறினான் கும்பகருணன். அவன் சொற்களில் அளவிட முடியாத அதிர்ச்சியும் திகைப்பும் வெளிப்படுகின்றன. மந்திராலோசனைப் படலத்தில் அவன் சொன்ன கருத்து, புதியதொரு மாற்றம் பெறுகிறது. சீதையை இனிமேல் திருப்பியனுப்புவது என்பது நம் புகழுக்கு இழுக்கு என்ற குரலை இப்போது காணோம். திடுக்கிட்டு வினவுகிறான்.

ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர்இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?

கிட்டியதோ செரு? கிளர்பொற் சீதையைச்
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால்?
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வன்மையே.

இன்னுமா சீதையை விடவில்லை? அவள் பார்வையாலேயே நஞ்சை உமிழும் திருஷ்டி விஷம்ராமனை வெல்வது எளிதா? (திட்டியின் விடம்) என்ற பாம்பைப் போன்ற கற்புடையவள் அல்லவா? அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? சீதையின் உடலைத் தழுவுதல் எத்தனை எளிதோ அத்தனை எளிதான செயலல்லவா அது? இந்திரனுக்கு அவன் உலகம் மீண்டும் கிடைப்பதற்கான செயலைச் செய்தனை. உன் உறவினரையும் மக்களையும் கெடுத்தனை. இதிலிருந்து மீட்சி ஏது? அவர்களோ (இராம இலக்குவனர்களோ) தருமமே வடிவானவர். வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் அவர்களைப் பகைத்துக் கொண்டு உய்வதற்கு என்ன குறை இருக்க முடியும்?

காலினின் கருங்கடல் கடந்த காற்றது
போல்வன குரங்குஉள; சீதை போகிலள்;
வாலியை உரம்கிழித்து ஏக வல்லன
கோல்உள யாம்உளேம் குறை உண்டாமோ?

காற்றைப் போல் கடலைக் கடந்து நடந்து வரக்கூடிய குரங்குகள் இருக்கின்றன. சீதையோ இன்னும் திரும்பத் தரப்படாதவளாய் இருக்கின்றாள். உன்னையே தோற்கடித்த வாலியின் மார்பைக் கிழித்த அம்புகள் அவர்பாலுள. அவற்றை மார்பில் தாங்கி வீழ்ந்து படுவதற்கு நாங்கள் இருக்கிறோம். உனக்கு என்ன குறை?

எப்படி மனம் வெறுத்துப் பேசுகின்றான் கும்பகருணன்! இந்த மொழிகளைப் பார்க்கும் போது அவன் மனத்தில் சீதையை இராவணன் திருப்பித் தந்துவிடுவான் என்ற எண்ணம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.சமத்துவ நாயகர் வவேசு ஐயர்

உறங்கி எழுந்தவுடன் இப்படி மாறுபட்டுப் பேசுவது என்ன காரணத்தால் இருக்க முடியும்? வவேசு ஐயர் சொல்கிறார்.

“The words of Vibhishana which he had heard in the war council must be supposed to have impessed themselves upon Kumbhakarnan’s mind and entered deeply into his soul during his hibernation…”

விபீஷணன் இராவணனுக்குக் இராவணன் மந்திரப் படலத்தில் கூறிய அறிவுரைகள் (இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இரணியன் வதைப்படலம் வீடணனால் சொல்லப்படுகிறது.) கும்பகருணன் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது அவன் மனத்திலும் ஆன்மாவிலும் ஆழப் பாய்ந்து அவனை மாற்றியிருக்க வேண்டும் என்கிறார்.

சீதையை அவர்பால் திருப்பியளித்துவிட்டு, அவர் பாதம் பணிந்து, வீடணனுடன் நட்புடன் இருப்பதே உய்வதற்கான வழி. இதை நீ ஏற்காவிட்டால் வேறொரு உபாயம் இருக்கிறது. நம் படைகளை சிறுகச் சிறுக அவர்மேல் செலுத்தி அவை அழிந்துபடுவதைக் கண்டு நாம் இருந்து தேம்பாமல், நம் அத்தனைப் படைகளையும் ஒன்று திரட்டி அவர்மேற் செல்வதே அறிவுடைமை என்று இராவணனுக்கு முன்னிருக்கும் உபாயங்களை எடுத்துச் சொன்னான் கும்பகருணன்.

இத்தகைய அறிவுரைகளுக்கு இராவணன்பால் எப்போதும் ஒரேஒரு மறுமொழிதான் உண்டு. ‘நீ என்ன என் அமைச்சனா? உன் வேலையைப் பார்க்கச் சொன்னால், ஏதோ என் அமைச்சனைப் போல் பேசுகிறாயே!’ என்பதுதான் அது.

“ஏவல் செய்கிற்றி என் ஆணைவழி எண்ணிக்
காவல் செய்அமைச்சர் கடன் நீ கடவது அன்றே!”

என்றுதான் ஆரணிய காண்டத்தில் மாரீசனை நோக்கிச் சீறினான்.

மாரீசனை மருட்டும் மாவேந்தன்

இப்போதும் அதையேதான் சொல்கிறான்.

உறுவது தெரிய அன்று உன்னைக் கூயது
சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை; அஞ்சினை
வெறுவிது நின் வீரம் என்று இவை விளம்பினான்.

இராவணனால் கோழை என்று பழிக்கப்பட்டான். ‘நன்றாகத் தின்றாகி விட்டதல்லவா? போய்த் தூங்கு போ! மனிதரை வழிபட்டு வாழ்தல் “ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; யான் அது புரிகிலேன். எழுக போகென்றான்” இராவணன்.

ஆணையிடுகிறான் அண்ணன்

தெளிந்த அறிவும் கடமை மாறா நிலையும்

இந்தச் சுடுசொற்களைக் கேட்ட கும்பகருணன் தன் சூலத்தை வலக்கையில் வாங்கினான். அறத்தின் நிலையும் அண்ணனின் மூர்க்கத்தனமான, மாற்றவொண்ணாத நிலையையும் எண்ணினான். இப்போது செய்யத் தக்கது யாது என்று மனத்தில் முடிவெடுத்துக் கொண்டான். நீ என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி, நிலைமையைத் தெளிவாக எடுத்துரைக்கிறான்.

வென்றிவன் வருவனென்று உரைக்கிலேன். விதி
நின்றது பிடர்பிடித்து உந்துகின்றது
பொன்றுவன் பொன்றினால் பொலன்கொள் தோளியை
நன்றென நாயக விடுதி நன்றரோ.

என்னை விதி பிடரியைப் பிடித்து உந்துவதால் செல்கிறேன். வெற்றியோடு திரும்புவேன் என்று சொல்ல மாட்டேன். இறந்து படுவேன். அப்போதாவது சீதையைச் சிறைவீடு செய்வாய். ஏனெனில், “என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை. ஆதலால்.”

போருக்குப் போனால் இறத்தல் திண்ணம் என்று தெளிவாக அறிந்திருந்தது மட்டுமல்ல. போரை என் சாவோடு நிறுத்தாவிட்டால் இந்திரஜித் இலக்குவனால் வீழ்வதும் திண்ணம் என்று எச்சரிக்கிறான். (இந்திரன் பகைஞனும் இராமன் தம்பிகை மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்.) இனி உன் முகத்தில் விழிக்கும் சந்தர்ப்பம் இருக்காது. எனவே நான் ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்று கூறிப் போருக்குக் கிளம்பினான்.

இந்த இடத்தில் உருவத்தைக் காட்டிலும் உள்ளத்தால் உயர்ந்தவனாகக் கம்பீரமான தோற்றம் தருகிறான் கும்பன். அடிமைத் தொழில் பூண்டவரில் யார் தோள் உயரம் என்றால், நான் தயங்காது கும்பகருணனையே தேர்ந்தெடுப்பேன். ஓர் ஆண்டானும் அடிமையும் வழி நடந்து கொண்டிருந்தனர். நடக்கும் வழியில் ஒரு புதைகுழி குறுக்கிட்டது. எதிரே புதைகுழி இருக்கிறது என்று அடிமை ஆண்டானுக்குச் சொல்கிறான். ஆண்டானோ “நான் அப்படித்தான் போவேன்” என்று போகிறான். “ஐயா! சற்றே நில்லுங்கள். நான் இறங்கிக் காட்டுகிறேன். நான் இறந்துபடுவதைக் கண்டேனும் தாங்கள் இதில் இறங்காமல் இருப்பதையே வேண்டுகிறேன்” என்று அந்த அடிமை சொல்வானானால் அது எத்தனை உயர்ந்த தியாகமோ அத்தனை உயர்வானது கும்பகன்னனின் இந்தச் செயல். இங்கே நான் அடிமை என்ற சொல்லை slave என்ற பொருளில் ஆளவில்லை. அன்பு பூண்டவன் என்ற பொருளில் சொல்கிறேன். இராமனுக்கு இலக்குவன் போல். அனுமன் போல். இவ்வாறு நான் சொல்வதன் பொருளையும் உணர்ந்தே சொல்கிறேன். லக்குவன் இராமனிடத்தில் செலுத்திய அன்பைக் காட்டிலும் இவன் இராவணன்பால் செலுத்திய அன்பு உயர்ந்ததாகுமா என்றால், ஆகும். இராமனும் இலக்குவனும் தர்மத்தினால் எதிரெதிர் துருவங்களாக நின்றவர் அல்லர். இராமனின் தம்பியாக இருக்க எவ்வளவோ பேறு செய்திருக்க வேண்டும். இந்த இராவணனின் தம்பியாக இருக்க என்ன பேறு செய்திருக்க வேண்டும்?

எண்ணிப் பாருங்கள். கும்பகருணன் வதைப்படலத்தின் ஆரம்பத்தில் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போன இராவணனை அல்லவா கண்டோம்? இராமன் வில்லாற்றலைச் சொல்லிச் சொல்லி எவ்வாறெல்லாம் புலம்பினான் இராவணன்?

போயபின் அவன்கை வாளி உலகெலாம் புகுவதல்லால்
ஓயுமென் றுரைக்க லாமோ ஊழி சாயினும்? ஊழித்
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும்
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ.

ஊழி உமிழும் கோதண்டம்

என்னப்பா இப்படி ஓயாமல் அம்பெய்கிறான் இந்த இராமன்! நிற்கவே மாட்டேன் என்கிறதே! அந்த அம்புகளானால் ஊழித் தீயையும் செல்லும் திசையையும் மட்டுமா எரிக்கின்றன! “இராமன் அம்பு” என்று சொல்லும் வாயும் எரிகின்றது! நினைக்கும் மனமும் எரிகின்றது! சீதை ஏன் என்னைப் பார்க்க மறுக்கிறாள் என்பது இப்போதல்லவா புரிகிறது? இவன் மேனியையும் இவன் வீரத்தையும் பார்த்த கண்களுக்கு நாமும், அந்த மன்மதனும் நாய்க்குச் சமமல்லவா?

போய்இனித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போலும்
வேய்எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீஎனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்
நாய்எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்.

இப்படிப்பட்ட இராவணன் கும்பகன்னனைக் கோழை என்று சீறுகின்றான். நீ போகாவிட்டால் என்ன? எமனே வந்து எதிர்த்தாலும் நானே போகிறேன். என் தேர் தயாராகட்டும் என்றெல்லாம் பூச்சி காட்டுகிறான். வந்திருக்கும் போர் எதனால் ஏற்பட்டது? ஏதாவது வலிய கருத்து வேறுபாடுகளாலா? நோக்க மாறுபாடுகளாலா? இராவணனின் முறையற்ற காமத்தினால் என்பதைத் தவிர வேறென்ன காரணம்? இதற்கு அரக்கர் மானம் அழியும் என்ற பூச்சு வேறு. இவன் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியற்ற மக்களை இந்தப் போரில் செலுத்தினான் என்பதல்லால் வேறென்ன சொல்ல முடியும்?

இப்படியொரு அண்ணனுக்காக, இறப்பது திண்ணம் என்பது தெரிந்தே ஒருவன் போர்முனைக்குச் செல்கிறான் என்றால், அதுவும் தனக்குச் சற்றும் உடன்பாடில்லாத ஒரு செயலால் விளைந்த போரில், அறமற்ற முறை என்று தானே ஒதுக்கிய ஒரு நிலைப்பாட்டின்பால் நின்று போரிட்டான் என்றால், “நான் இறந்த பிறகாவது உண்மையை உணர்வாய்” என்ற கோரிக்கையுடன் போர்மேற்கொண்டான் என்றால், அவன் உள்ளத்தின் உயர்வை, அண்ணன்பால் அவனுக்கிருந்த பற்றை மற்று என்சொல்லிப் பாராட்டுவது?

கும்பகன்னன் போர்க்களத்தை அடைதலும் வீடணன் – கும்பகன்னன் உரையாடலும்

கும்பகன்னன் போர்க்களத்தை அடைந்ததும் அவனுடைய உருவமே வானர சேனையில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. இராமனும் பிரமிக்கிறான். அருகிலிருக்கும் வீடணனைக் கேட்கிறான்.

தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால் நடுவண் நின்றதோர்
தாளுடை மலைகொலாம் சமரம் வேட்ட
ஆளென் றுணர்கிலேன் ஆர்கொ லாம்இவன்?

ஒரு தோளிலிருந்து இன்னொரு தோள்வரை பார்த்து முடிப்பதற்கே பல நாட்கள் ஆகும் போலிருக்கிறதே!

குரங்கு படை ஒறுக்கும் கும்பன்

கால்முளைத்த மலையென்று தோன்றுகிறதே தவிர, சண்டைக்கு வந்த ஆளென்று தோன்றவில்லையே! யார் இவன்? இவ்வாறு இராமன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே நமக்கு இன்னொன்று புலப்படுகிறது. கம்பனுக்குக் கும்பகன்னன் மேல் ஏதோ தனிப்பாசம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஒரு கருத்தோ கற்பனையோ கம்ப இராமாயணத்தில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டாலும், ஓர் இடத்தில் சொல்லப்பட்ட அதே சொல்லமைப்பு இன்னொரு இடத்தில் மீண்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இங்கே அந்த விதியைத் தளர்த்திக் கொள்கிறான் கம்பன். இராமன் வாயால் கும்பகன்னனைப் பற்றிப் பேசப்படுகின்ற வாக்கியத்துக்குள், சூர்ப்பனகை இராமனைப் பார்த்துக் காதலுடன் தனக்குள் சொல்லிக் கொண்ட வாக்கியம் மீண்டும் பயிலக் காண்கிறோம். மேற்சொன்ன பாடலின் முதலடியையும், கீழ்வரும் பாட்டின் மூன்றாம் அடியையும் பாருங்கள்.

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள்உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பு என்றாள்.

(ஆரணிய காண்டம் – சூர்ப்பனகைப் படலம்)

இதேபோல, கும்பகன்னன் போர்புரியும் போது, இரணியன் வதைப்படலத்தில் நரசிம்மத்தின் போரை வர்ணிக்கப் பயன்படுத்திய அதே சொற்றொடர்களைப் பயன்படுத்துவான். இந்தக் காதல்தான் கும்பகன்னனுக்கு இப்படியோர் உயரத்தைத் தரவைத்ததோ?

*கும்பகன்னன் – வீடணன் உரையாடல்*

சுக்ரீவன் யோசனைப்படி வீடணன், கும்பகன்னனை இராமன் பக்கம் சேர்ந்துவிடும்படிக் கேட்டுக்கொள்ள இராமனால் அனுப்பப்பட்டான்.

வீடணனுக்கும் கும்பகன்னனுக்கும் நடந்த உரையாடல் கும்பகன்னனின் உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது. வீடணன் தன்னை நாடி வந்ததைக் கண்டதும் துணுக்குற்றான் கும்பகன்னன். வீடணன் மீண்டும் அரக்கர்பால் இராமனை விடுத்து வந்துவிட்டானோ என்று குழம்பினான். காலில் வீழ்ந்தவனை உச்சி மோந்து அணைத்துக் கொண்டான். “உயிர் மூழ்கப் புல்லி” என்பான் கம்பன். ‘ஏனப்பா இங்கு வந்தாய்? நீ ஒருவனாவது உய்ந்தாய் என்று உவக்கும் என் மனம் கலக்கமுறுமாறு இங்கே நீ வந்த காரணம் யாது? நீ அபயம் பெற்றதையும் உனக்குறப் போகிற சிறப்புகளையும் எண்ணி மகிழ்ந்திருந்தேன். புலத்தியன் மரபு உன்னால் தழைக்கும் என்றெண்ணியிருந்தேன். என் வாய் ஈரம் உலர்ந்து போகும்படி நீயிங்கு வந்ததென்ன? நாங்கள் காலன் வாயிலே நின்று கொண்டு களித்திருப்பவர்கள். அமுதம் உண்ண வேண்டிய நீ நஞ்சுண்ண விரும்பி இங்கே வரலாமா? நீ பெற்ற சிரஞ்சீவித்துவ வரத்தினாலே இறப்பு என்ற பயம் இல்லாதவன். இப்போது இராமனைச் சேர்ந்திருப்பதாலே பிறப்பு என்ற பயமும் இல்லாதவன். போ! இந்தக் கணமே திரும்பிப் போ! ஏனெனில்

ஐயநீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை என்னின் மற்றிவ் அரக்கராய் உள்ளேம் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுதும் பட்டால்
கையினால் எள்நீர் நல்கிக் கடன்கழிப் பாரைக் காட்டாய்.

நாங்களெல்லாம் இராம இலக்குவனர்களின் அம்புகளாலே மடியப் போகிறோம். எங்களுக்கு எள்ளும் நீரும் இறைப்பதற்கு நீ ஒருவன் மிஞ்ச வேண்டாமா? போ. இலங்கைக்கு அரசனாகத் திரும்பிவா’ என்ற கும்பகன்னனின் உரை முடியும் வரை வாய்புதைந்திருந்தான் வீடணன். பின்னர் தான் வந்த கருத்தை வெளியிட்டான். நீயோ இராவணன் செய்வது அறத்தின்பாற் பட்டதன்று என்று உணர்ந்திருக்கிறாய். இருந்தபோதும் இப்படி அவனுக்காக உயிர் கொடுக்க வந்திருப்பது என்ன பயனைத் தரும்?

தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய்அவை தந்தைமார்என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்?
நீஅவை அறிதி அன்றே நினக்குநான் உரைப்பது என்னோ?
தூயவை தொடர்ந்த போது பழிவந்து தொடர்வ துண்டோ?

இந்தத் தீவினைக் கட்டெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு என்னுடன் வா. இராமன் என்பால் உள்ள கருணையால் நின்னை ஏற்றுக் கொள்வான். எனக்கவன் தரப்போகும் இந்த நாட்டை நான் உனக்கே தந்து உன் ஏவலில் நிற்பேன். வா அண்ணா!

உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வார்
கடலிடைக் கோட்டம் தேய்துக் கழிவது கருமமன்றால்
மடலுடை அலங்கல் மார்ப மதியுடையவர்க்கு மன்னோ.

உடலிலே ஓர் இரத்தக் கட்டி உண்டாகுமேயானால் அதை அறுத்து, அதன் கெட்ட இரத்தத்தை நீக்கி, காரமான மருந்துகளாலே அதைச் சுட்டு துயரம் தீர்வார்கள். இராவணன் அத்தகைய குருதிக் கட்டி போன்றவன். அவனை உதறி எறிவதை விட்டுவிட்டு, இது என் இரத்தக் கட்டி என்று கொஞ்சிக் கொண்டிருப்பவர்கள் போலவும் கடலின் நாற்றத்தை மாற்ற வாசனைப் பொருட்களை அதனுள் கொட்டி வீணப்படிப்பவர்கள் போலவும் செய்தல் அறிவுடையோர் செய்யலாகுமா?

காக்கலாம் நும்முன் தன்னை எனின்அது கண்ட தில்லை
ஆக்கலாம் அறத்தை வேறே எனின்அது ஆவ தில்லை
தீக்கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவி லாவி
போக்கலாம் புகலாம் பின்னை நரகன்றிப் பொருந்திற் றுண்டோ?

உன் அண்ணனைக் காப்பாற்றலாம் என்றால் அது முடியாத காரியம். அவன் செய்வது சரியே என்று கொள்ள வேண்டுமாயின் அறத்தையே மாற்றி அமைத்தால்தான் அது இயலும். அவ்வாறுநரகமே நம் கதி என்றான் கும்பகன்னன் மாற்றி அமைக்கவோ இயலாது. தேவர்கள் சிரிக்குமாறு போரில் உயிர் துறந்தாலும், நரகத்தைத் தவிர வேறெங்குச் செலுத்தப்படுவோம்? ஆகவே அறத்தை நாடி வருக. இராமன் உனக்கும் தஞ்சம் அளிப்பான். வேதநாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான் என்றான் வீடணன்.

கும்பகன்னன் சொல்லும் மறுமொழிகள் எப்படிப்பட்ட இரும்பு நெஞ்சத்தையும் இளக்கிவிடும். தம்பீ! நீயோ பிரமனிடமிருந்து சிரஞ்சீவித்துவம் பெற்றவன். தரும நெறி நிற்பவன்.

தலைவன்நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதேயாம்
புலையுறு மரணமேயும் எனக்கிது புகழதேயாம்.

நீ செய்தது உனக்குத் தகும். நான் செய்வதுதான் எனக்குப் புகழ் சேர்ப்பதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, நினைத்துப் பார் வீடணா! நாளை இராவணன் வீழ்ந்து கிடக்கையில், அவன் பிணத்திற்கு அருகே கிடக்க ஒரு தம்பியின் பிணமேனும் வேண்டாமா?

உம்பரும் பிறரும் காண ஒருவன் மூவுலகும் ஆண்டு
தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்?

இந்த அடிகளை நினைக்குந்தோறும் கண்களில் நீர் திரையிடும். வாழ்விலே பங்கு கேட்கும் தம்பிகளுக்கிடையே சாவிலே பங்கு கேட்க ஒரு தம்பி!

மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு வாழ்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான்அது புரிகிலேன் எழுக போகென்றான்

அல்லவா இராவணன்? அந்த மொழிகள் கும்பகன்னனின் மனத்தை உறுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். மேலும் சொல்கிறான் கும்பகன்னன்.

செம்புஇட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி
வம்புஇட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
அம்புஇட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞசோடு ஐய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்.

என் அண்ணன் உயிர்கொண்ட (கொள்ளப்போகும்) பகைவனை வாழ்த்தி, கும்பிட்டு வாழ என்னால் முடியாது.. நான் எமனையும் வெற்றிகொண்டவன். வீடணா! அண்ணன் தீமை செய்தால், திருத்த முடியும் என்றால் அதைத் திருத்தலாம். அப்படி முடியாவிட்டால், அவனுக்கு முன்னே இறந்துபடுவதே அவன் சோற்றை உண்டவருக்கு உரியது. கும்பகன்னன் இவ்வாறு சொன்னாலும், வீடணனைக் குறித்து உள்ளர்த்தம் கொண்ட சொற்களாக இவற்றைச் சொல்லவில்லை என்பது வெளிப்படை.

இந்தக் களத்தை நான் எப்படிக் கலக்கப் போகிறேன் என்பதைப் பார். பனிதுடைத்து உலகுவரும் பகலவன் போல நான் பகைதுடைத்து வருவதை நீ பார்க்கத்தானே போகிறாய் என்றெல்லாம் உற்சாகமாகப் பேசுவதுபோலக் காட்டிக் கொண்டாலும், ஒரு பாடலில் இராம இலக்குவனர்கள் உட்பட அனைவரையும் அழிக்கப்போவதாகச் சொல்லும் கும்பகன்னன், இன்னொரு பாடலில் அந்த இருவர் தவிர்த்து மற்றவரையெல்லாம் அழிப்பேன் என்று சொல்வதிலிருந்து மேலுக்காக இந்த வார்த்தைகளைப் பேசுகிறான் என்பது தெளிவாகிவிடுகிறது.

என்ன நடக்கப்போகிறதோ அதுவே நடக்கும். எங்களைக் குறித்து வருந்த வேண்டாம் என்று வீடணனை இறுக அணைத்து விடைகொடுத்தான். கண்ணில் நீர்வழிய வீடணனை நோக்கி “இன்றொடும் தவிர்ந்ததன்றே உடன்பிறப்பு” என்று சொல்லி விடைகொடுத்ததை நினைக்குந்தோறும் உள்ளம் உருகும். கும்பகன்னனுக்கும் வீடணனுக்கும் நடக்கும் .இந்த உரையாடல் வான்மீகியில் கிடையாது. முற்ற முழுக்கக் கம்பன் படைப்பு.

(இன்னும் முடியவில்லை)

One Reply to “கம்பனின் கும்பன் – 2”

  1. வால்மீகியின் கும்பகர்ணனை விட கம்பனின் கும்பகர்ண படைப்பு மிக சிறந்தது. படித்தோர் மனதில் மிகுந்த இன்பம் பயப்பது. இந்த தொடர் படைப்பை வழங்கிய ஹரிகிருஷ்ணணைக்கும், வெளியிட்ட தமிழ் இந்துவுக்கும் நம் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *