கம்பனின் கும்பன் – 3

கம்பனின் கும்பன் – 3

ஹரி கிருஷ்ணன்

கும்பகன்னன் நடத்திய போர்

வரும்போதே இறக்கத்தான் போகிறோம் என்று உணர்ந்து வந்தவன்தான் கும்பகருணன். ஆயினும் போர் தொடங்கியவுடன் அவன் நிகழ்த்திய வீரச்செயல்களை எழுதின் இன்னொரு கட்டுரையாய் விரியும். ஆகவே மிகமிகச் சுருக்கமாக அந்தப் போரைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். ஒன்றை மட்டும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கும்பகன்னனின் போரும், இரணியன் வதைப்படலத்தில் நரசிம்மம் செய்த போரும் கம்பனால் ஒன்று போலவே காட்டப்படுகின்றன. ஓர் உதாரணத்தைக் காண்போம்:

பேருடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும் பேரா
பாரிடைத் தேய்க்கும் மீளப் பகிரண்டத் தடிக்கும் பற்றி
மேருவில் புடைக்கும் மாள விரல்களின் பிசையும் வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும் நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்.

(இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மத்தின் போர்)

நாச அவுணர் நலன் கெடுக்கும் நரசிம்மம்

வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை அடிக்கும் வாரி
நீரிடைக் குமிழி ஊட்டும் நெருப்பிடை நிமிர வீசும்
தேரிடை எற்றும் எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி.

(கும்பகருணன் வதைப் படலத்தில் கும்பகருணனின் போர்)

கம்பனுக்கேற்பட்டிருக்கும் கும்பன் காதல் புலனாகிறதல்லவா? நான் விரிவஞ்சி ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். இப்படி, ஆண்ட சொற்றொடரையே மீண்டும் ஆளுதல் கம்பனிடத்தில் வேறெங்கும் காண முடியாதது.அவ்விடம் நீங்கும் அனுமன்

அனுமனும் கும்பகருணனும் போரிட்டனர். அப்போது மாருதி, பெரிய மலை ஒன்றைப் பேர்த்தெடுத்து கும்பகன்னன் மீது வீசுகையில், இதை மட்டும் நீ தாங்கி நிற்பாயேல் உன்னோடு போர் புரிவதை நிறுத்திக் கொள்வேன் என்று சொன்னான். கும்பகருணனை அனுமன் வீசிய மலை ஒன்றுமே செய்யாததால் அனுமன் அவ்விடம் விட்டு நீங்க நேர்ந்தது.

இலக்குவன், நீலன், சாம்பவான் என்று அத்தனை வீரர்களும் கும்பகன்னனுடன் போரிட்டனர். கடைசியாக, சுக்ரீவனுக்கும் கும்பகருணனுக்கும் நடந்த போரில், மயங்கி விழுந்த சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இலங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான் கும்பகருணன்.

ராவணன் தம்பி கண்ட ராமன்வானர சேனை கலங்கியது. தலைவனைப் பிடித்துவிட்டால் மற்றெல்லா வீரர்களின் ஊக்கமும் அழிந்துபடும் என்பதை உணர்ந்த இராமன் அம்புகளால் ஒரு மதில் அமைத்து கும்பகருணன் வழியை அடைத்தான். இராமனைக் கண்ட கும்பகருணன் என்ன சொல்கிறான் தெரியுமா?

காக்கிய வந்தனை என்னின் கண்டஎன்
பாக்கியம் தந்தது நின்னை; பல்முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி என்முனைப்
போக்குவென் மனத்துறு காதல் புன்கண்நோய்

சுக்ரீவனைக் காப்பாற்றுவதற்காக நீயே என்னெதிர் வந்ததல்லவா என் பாக்கியம்!

இதற்கு முன் நான் தேவர்களோடும் மற்றோரோடும் இயற்றிய போர் எல்லாம் இப்போது நிகழ்த்தி என் அண்ணனுக்கு மனத்திலேற்பட்டிருக்கும் காதல் நோயைப் போக்குவேன் என்கிறான்.

மேலாகப் பார்த்தால் இது ஒரு வீரஉரை போலத் தோன்றினாலும் பாக்கியம் என்ற சொல்லே இதன் உட்கிடையை எடுத்துக் காட்டும்.

இவ்வளவு ஆழப்புதைந்திருக்கும் இந்த அம்புகள் உன் மனத்திலிருந்த சீதை இருக்கிறாளா போய்விட்டாளா என்று தேடிப்பார்கின்றனவோ என்று இராவணன் உடல் மீது விழுந்து அழுதாளே மண்டோதரி

வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்இருக்கும் இடன்இன்றி உயிர்இருக்கும் இடன்நாடி இழைத்த வாறோ?
கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

அன்றுதான் தன்முன் மனத்துறு காதல் நோய் தணியும் என்று அறியாதவனா கும்பகருணன்? (இந்திரஜித்தின் மரணம்தான் இராவணனின் பிறன்மனை நாட்டத்திற்கு அடிக்கப்பட்ட சாவுமணி.) போக்குவென் மனத்துறு காதல் புன்கண்நோய் என்ற அடி, சாவி என்றறியப்படும் கம்பனின் உத்திமுறைகளில் ஒன்று. இங்கே முடிச்சுப் போட்டு வைப்பான் வேறெங்கோ நூறு இருநூறு பாடல்களுக்கப்பால் நினைவாய் முடிச்சவிழ்ப்பான். சில இடங்களில் ஆயிரம் பாடல்கள் தாண்டியும் முடிச்சவிழ்ப்பது உண்டு. இந்தப் பாடலின் முடிச்சவிழும் இடத்தைப் பின்பு பார்ப்போம்.

கும்பனின் நெற்றியின் இரு பக்கங்களிலும் இரண்டு அம்புகளைப் பதியுமாறு செலுத்தவும் பெருகிய உதிரவாரி மேலே விழுந்ததால் மயக்கம் தெளிந்த சுக்ரீவன் அவன் காதுகளையும் மூக்கையும் கடித்து எடுத்துக் கொண்டு இராமன்பால் சேர்ந்தான்.

மூக்கில்லா முகம் என்று தேவர்களும் கேலி பேசும் அளவுக்குத் தன்நிலை இழிந்ததை உணர்ந்த கும்பகன்னன் தன் வாளைக் கையிலெடுத்து வானர சேனையை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தான். இராமன் போர் ஆற்றலால் அரக்கர் படை அழியவும் தனியனானான் கும்பகன்னன். அவன் தனிமையைக் கண்ட இராமன்,

ஏதியோடு எதிர்பெருந் துணை இழந்தனை எதிர்ஒரு தனிநின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின்உயிர் நினக்கு ஈவேன்
போதியோ பின்றை வருதியோ அன்றெனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தொ¢ந்து அம்மா!

விபீஷணனோடு பிறந்தவன் என்பதால் உன்உயிர் உனக்குத் தர விரும்புகிறேன். போய் பிறகு வருகிறாயா இன்றேல் இருந்து போரிட்டுச் சாகிறாயா என்று கேட்டான்.

நீதியோனுடன் பிறந்த நின்உயிர் நினக்கு ஈவேன்

இராவணனை நோக்கி “இன்று போய் போருக்கு நாளைவா” என்று சொன்ன போது அவனை இருக்கிறாயா போகிறாயா என்று கேட்டானில்லை இராமன். போய் வா என்று மட்டும்தான் சொன்னான். கும்பகன்னனை இராமன் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு இது அடையாளம். போக மாட்டேன். நின்று போரிடுவேன் என்கிறான் கும்பன். செவியையும் மூக்கையும் இழந்த நான் திரும்பித்தான் செல்ல முடியுமா? இந்த முகத்தை எப்படி இனி எம்மனோர்க்குக் காட்டுவேன்? மூக்கிழந்தபின் அண்ணன் முன் அழுகையோடு ஓடிப்போய் விழ நானும் என்ன என் தங்கையா என்று சொல்லும் கும்பகன்னனின் போர் தொடர்கிறது.மூக்கு அறுபட்டாள் மூர்க்கனின் தங்கை

இராமனுக்கும் கும்பகன்னனுக்கும் நடந்த அப்போர் எத்தனை பயங்கரமாய் இருந்திருக்க முடியும்? ஒரு சொல் ஒரு வில் ஓர் இல் (ஒக மாட ஒக பாண ஒக பத்னி) என்று பெயர் பெற்றவன்தான் இராமன். தாடகையை வீழ்த்தியது ஓர் அம்பு. சுபாகுவை வீழ்த்தியது ஓர் அம்பு. மாரீசனைச் சாய்த்தது ஓர் அம்பு. ஏழு மராமரங்களை உருவிப் பாய்ந்ததும் வாலியின் மார்புக்குள் ஆழப் புதைந்ததும் ஒரே ஓர் அம்புதான். ஆனால் கும்பகன்னன் மீது?

பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டுஎழில் அகல்மார்பம்
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்றுபுக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடிக்கணை என்றாலும்
சிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன் கறங்கெனப் பெருஞ்சாரி.

தன் உடலில் ஆயிரமாயிரம் இராமசரங்களை ஏற்றுச் சாரி வந்தான் கும்பகன்னன். கையில் வாளை எடுத்துப் பெருமளவில் வானர சேனையைக் கொன்று குவித்தான். இது கண்ட இராமன், வாள் பிடித்த அந்தக் கையை வெட்டி வீழ்த்தினான். விழுந்த கையை மற்றொரு கையால் எடுத்துக் கொண்டான் கும்பகன்னன். வெட்டப்பட்ட அந்தக் கையையே தன் ஆயுதமாக்கிக் கொண்டு அதனால் வானரங்களை அடித்துக் கொன்றான். “உள்ள கையினும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின உலகு எல்லாம்” என்பான் கம்பன்.

இன்னொரு கையையும் வெட்டினான் இராமன். கால்களால் மிதித்து வானரரை அழித்தான் கும்பன். ஒரு காலை வெட்டினான் இராமன். நொண்டி கட்டி அழித்தான் கும்பன். மற்ற காலையும் வெட்டினான் இராமன். மலைபோன்ற தன் தேகத்தை உருட்டிப் புரட்டி அதனடியில் வானரர் சிக்கி நசுங்குண்டு இறக்கச் செய்தான் கும்பன். தன் பேழ் வாய் திறந்து மலைகளையும் பெரும் பாறைகளையும் கவ்வி எடுத்து தன் நாவினால் உந்தி கற்களை வீசி, தன் வாயையே ஒரு உண்டிவில்லாகப் பயன்படுத்தி வானரரை அழித்தான் கும்பன். ஆனால் உடலிலிருந்து குருதியும், சக்தியும் ஆவியும் ஒழுகிக் கொண்டே இருப்பதால் தொடர முடியாமல் இதற்குமேல் இராவணனுக்கு உதவ முடியவில்லையே என்று வருந்தினான்.

தீயினால் செய்த கண்ணுடையான் எழும் சிகையினால் திசை தீய
வேயினால் திணிவெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி
பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும்
வாயினால் செலவீசினன் வள்ளலும் மலர்க்கை விதிர்ப்புற்றான்.

கம்பன், இராமனின் விற்பிடித்த கை நடுங்கியது என்று எழுதினான் பாருங்கள் அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன்.

ஐயன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தேன் வேறுஇனி உதவல்ஆம் துணை காணேன்
மையல் நோய்கொடு முடித்தவன்நான் என்றும் வரம்புஇன்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன்உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான்.

போக்குவென் மனத்துறு காதல் புன்கண்நோய். என்று விழுந்த முடிச்சு இருபத்து நான்கு பாடல்களுக்குப் பின் இங்கே அவிழ்கிறது. கடைசியாக இரண்டு வரங்களை இராமன்பால் கேட்கிறான் கும்பகன்னன்.

என் தம்பி வீடணனை, ஒருபோதும் உன்னையோ இலக்குவனையோ அனுமனையோ பிரியாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவனைத் தனியாகப் பார்க்க நேரிட்டால், இராவணன் இவனைத் தம்பியென்றும் பாராமல் கொன்று விடுவான். அடுத்ததாக,

மூக்கில்லா முகமாகக் கிடக்க நான் விரும்பவில்லை. என் சிரத்தை அறுத்துக் கடலிலே எறிந்து விடுவாய் என்று கேட்டுக் கொள்கிறான்.

கீழே விழுந்தவன் மீது ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று இராமன் தயங்கினாலும், வரங்கொண்டான் இனிமறுத்தல் வழக்கன்றென்று வயிரவாளி ஒன்றாலே சிரங்கொண்டு அதனைக் கடலில் அழுத்தினான் இராமன்.

கும்பகன்னன் வதைப்படலத்தின் முடிவில் நம் நெருங்கிய நண்பன் ஒருவனை இழந்ததைப் போல வெறுமையாய் உணருகிறோம். அண்ணன் தீமை செய்கையில் கண்டித்தான். திருத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது கடமை தவறாமல் தன்னால் இயன்ற வரையில் – அதற்கும் பலபடிகள் மேலேயே – போரிட்டான். வீடணன் எடுத்த நிலை தான் எடுத்த நிலைக்கு எதிரானதே என்றாலும் அதிலிருந்த தருமத்தையும் தன்நிலையில் இருந்த நியாயத்தையும் உணர்ந்தே இருந்தான். தன் கடமை ஆற்றி முடித்தபின் தன் தம்பியின் பாதுகாப்பைப் பற்றி – தருமத்தின் பாதுகாப்பைப் பற்றிய தன் கவலையை வெளியிட்டான். கும்பகருணன் கம்ப இராமாயண மகுடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரம். எத்தகைய சாதாரணமான பாத்திரமாயினும் கம்பனைப் போன்ற படைப்பாளியின் கைபட்டால் எத்தகைய பரிமாணம் எடுக்க முடியும் என்பதற்கு உதாரணம்.

***************
பின் குறிப்பு:

‘மூக்கிலா முகமாக நான் கிடக்க விரும்பவில்லை; என் தலையை அறுத்துக் கடலிலே வீசிவிடு’ என்று கும்பகர்ணனைச் சொல்ல வைத்ததற்கான சம்பவம் இது.

கும்பகர்ணனுடைய கரங்களில் சிக்குண்டிருந்த சுக்ரீவன் அவன் காது மடல்களையும் மூக்கையும் கடித்துத் தனியாக எடுத்துக் கொண்டு ராமன் பக்கம் மீண்ட சமயத்தில் ஒரு சின்ன சித்திரத்தைக் காட்டுகிறான் கம்பன்.

ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்; தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம் மண்ணைப் பார்க்குமால்-
‘சீ சீ உற்றது!’ எனத் தீயும் நெஞ்சினான்.

வானத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் அதிவேகமாகக் களத்தில் இறங்கி, கும்பகர்ணனுக்கு அருகில் வந்து அவனைச் சீண்டினர்; ஏசினர். ஏசி-உற்று-எழும் விசும்பினர். அருகில் வந்து, tease செய்து மீண்டும் வான் நோக்கிப் பறக்கும் தேவர்கள். இந்த நிலையில் தன் மூக்கைப் பார்த்தான்; இதற்கு முன்னர் தான் இருந்த நிலைமையை எண்ணிப் பார்த்தான்; பிறகு தலை கவிழ்ந்து கொண்டான். ‘சீசீ! என்ன நிலைமைக்கு ஆளானோம்’ என்று மனத்தில் மான உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்தது. எனவேதான் ‘மூக்கு இல்லா முகம் என்று நான் கைகால்களோடு இருந்த நேரத்திலேயே என் அருகில் வந்து கேலிபேசிய வானவர், நான் இறந்து கிடக்கும் நேரத்தில் என்னென்ன செய்வார்கள் என்று அறியேன். எனக்கு அத்தகைய அவமானங்கள் நேரவேண்டாம். என் தலையை அறுத்துத் தள்ளுவாய்’ என்று ராமனிடம் வரம்கேட்கிறான். இது அழகுணர்ச்சியன்று. அவமான உணர்ச்சி.

4 Replies to “கம்பனின் கும்பன் – 3”

  1. வணக்கம்,

    அரக்கன் என்றாலும் கூட தன அண்ணனின் அநியாயத்தை எடுத்து உரைப்பதிலும், தவறே செய்கிறான் அண்ணன் என்றாலும் தனது செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டிய நிர்பந்தத்தால், போரில் மாள்வோம் என்று அறிந்தும் ராமனின் கணைகளால் வீழ்வோம் என தெரிந்தும் கூட தர்மத்தை எதிர்த்து போர்புரிய புறப்படும் நிலையிலுமாக தன் இரு நிலையிலும் சற்றும் கும்ப கர்ணன் சளைத்தவனாக இல்லை, இதை கம்பனார் தவிர இத்துணை நயமாக எடுத்து உரைக்க யாராலே முடியும்? அருமை, அருமை, கவிச்சக்கரவர்த்தி அல்லவா?

    அருமையான கட்டுரையினை, அழகாக தொகுத்து அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  2. கர்ணனின் மரணத்தைப் பற்றிப் படிக்கும்போது மனம் கலங்கி இருக்கிறேன். இராமாயணத்தைப் பல முறைப் படித்து இருக்கிறேன். ஆனால் இதுவரை கலங்கியது இல்லை. ஆனால் இப்போது கூறப்பட்டு இருக்கும் மொழியின் மாட்சி என்னைக் கலங்க வைத்துவிட்டது. அருமையான விளக்கம். கம்பனின் கவிதிரத்தை எடுத்துக்கட்டியமைக்கு மிக்க நன்றி. களத்தை வென்ற உரை. – ம.ச.அமர்நாத்

  3. கும்பகர்ணன் தன் அண்ணன் செய்த தவறால் தம் இனமே அழியப்போகிறது என்பதை உணர்ந்துதான் போர்க்களம் புகுந்தான். கும்பகர்ணன் வதைப்படலம் நம் மனத்தில் மிகுந்த வருத்தத்தை உண்டுபண்ணுகிறது. வாழ்க அவன் புகழ்.

  4. ஐயா வணக்கம்.
    ‘வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான் ‘ என்ற செய்தி வான்மீகத்தில் வருகிறதா அல்லது கம்பன் மட்டுமே சொல்வதா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *