சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்

May 22, 2008
By

சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம் (அமெரிக்காவிலிருந்து)

விவேகானந்தர்

என் வீர இளைஞர்களே, … அன்பு, நேர்மை, பொறுமை-இவை மூன்றும் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை. வளர்ச்சி, அதாவது விரிந்து பெருகுதல், அதாவது அன்பு-இதைத் தவிர வாழ்க்கை என்பது வேறு என்ன? எனவே எல்லா அன்பும் வாழ்வு. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே-இந்த உலகமோ, அல்லது மறு உலகமோ இது உண்மை. நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. நமது பார்வைக்குத் தென்படுகின்ற மனித மிருகங்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இறந்தவர்கள், வெறும் பிணங்கள். ஏனெனில் என் இளைஞர்களே, அன்புடையவனைத் தவிர பிறர் வாழ்பவர்கள் அல்ல. என் குழந்தைகளே, உணர்ச்சி கொள்ளுங்கள், உணர்ச்சி கொள்ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லுங்கள். இதயமே நின்று, மூளை குழம்பி, உங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடுமெனத் தோன்றும்வரையிலும் உணர்ச்சியில் மூழ்குங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்தராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது அற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். பாடுபாடுங்கள், பாடுபடுங்கள்-கடந்த பத்து ஆண்டுகளாக இதுவே எனது குறிக்கோளாக இருந்துவந்தது. பாடுபடுங்கள்-இதையே இன்னும் சொல்கிறேன். என்னைச் சுற்றிலும் இருளாக இருந்தபோதும் ‘பாடுபடுங்கள்’ என்றேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும் ‘பாடுபடுங்கள்’ என்று அதையே சொல்கிறேன். என் குழந்தைகளே, பயம் வேண்டாம். நட்சத்திரங்கள் மின்னுகின்ற அந்தப் பரந்த வானம் இடிந்த வீழ்ந்து உங்களை நசுக்கிவிடுமோ என்று பயத்துடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்காதீர்கள். கொஞ்சம் பொறுங்கள், இன்னும் சில மணித்துளிகள்தான், அந்த வானம் உங்கள் காலடியில் கிடக்கும். பொறுங்கள்,; பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை, அன்பு ஒன்றே பயன்தருவது; துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான்.

பணக்காரர்கள் என்கிறார்களே அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உயிருள்ளவர்கள் அல்ல, செத்து மடிந்தவர்கள் என்றே கூறலாம். நம்பிக்கைக்கு இடமாக இருப்பது நீங்களே ஆரவாரமற்றவர்களான, சாமானியர்களான, ஆனால் நம்பிக்கை நிறைந்துள்ள நீங்களே. இறைவனை நம்புங்கள்; பெரிய திட்டங்கள் எதுவும் தேவையில்லை, அவற்றால் ஒன்றும் நடப்பதில்லை. துயருறுபவர்களுக்காக அனுதாபம் கொள்ளுங்கள்; உதவிக்காக விண்ணை நோக்குங்கள், உதவி வந்தேதீரும்.

இதயத்தில் இந்தச் சுவையைத் தாங்கி, அறிவில் இந்தக் கருத்தை ஏற்று பன்னிரண்டு ஆண்டுகளாக நான் அலைந்துள்ளேன். செல்வந்தர், பெரிய மனிதர் என்றெல்லாம் சொல்லப்படுபவர்களின் வாசல்தோறும் போயிருக்கிறேன். ரத்தம் சொட்டும் இதயத்துடன் உதவி நாடி, உலகில் பாதியைக் கடந்து வேற்று நாடாகிய இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடவுளின் மகிமைக்குக் குறைவில்லை. அவர் எனக்கு உதவுவார் என்பது எனக்குத் தெரியும். குளிர் காரணமாகவோ பசி காரணமாகவோ இந்த நாட்டில் நான் அழிந்து விட நேரலாம்; ஆனால் இளைஞர்களே, இந்த அனுதாப உணர்ச்சியை, ஏழை, பாமரர், ஒதுக்கப்பட்டவர் ஆகியவர்களின் நலனுக்காகப் போராடுகின்ற முயற்சியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இப்போதே இந்தக் கணமே, பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்லுங்கள்; கோகுலத்தின் ஏழைகளும், தாழ்ந்தவர்களுமான இடையர்களுக்கு யார் தோழராகத் திகழ்ந்தாரோ, வேடனான குகனைக் கட்டித் தழுவுவதற்கும் யார் கூசிப் பின்வாங்கவில்லையோ, யார் தமது புத்தாவதாரத்தில் பிரபுக்களின் அழைப்பையெல்லாம்விட விலைமகள் ஒருத்தியின் அழைப்பையே மேலானதாகக் கருதி ஏற்று அவளைக் காத்தாரோ அந்த இறைவனின் முன், ஆம், அந்த இறைவனின் முன் வீழ்ந்து பணிந்து, பெரியதொரு பலி செலுத்துங்கள். எந்த மக்களுக்காக அவர் அவ்வப்போது அவதரிக்கிறாரோ, எந்த மக்களை அவர் மற்றெல்லாவற்றையும்விட அதிகமாக நேசிக்கிறாரோ, அந்த வறியவர், தாழ்ந்தவர், ஒடுக்கப்பட்டோருக்கு உங்கள் முழு வாழ்க்கையைப் பலி கொடுங்கள்.

பணக்காரர், பெரிய மனிதர் என்று கூறப்படுபவர்களை எதிர்பார்க்க வேண்டாம். இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பாரக்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்.

மூலம்:http://www.appusami.com/v2/Default.asp?ColsName=2&ColsValue=2653

Tags: , ,

 

4 மறுமொழிகள் சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்

 1. Revathi on May 25, 2008 at 2:41 am

  Sir,

  A great letter. Thanks for translating and posting it here. I wish your site is updated daily.

 2. vijayasreeRaman on June 20, 2008 at 11:21 pm

  Sir,

  Inspiring letter.for youth.Kindly publish few more.

 3. J.Thiruvarulsundar on September 15, 2010 at 11:21 pm

  He is my inspiration. Pls publish more detais about him.

 4. ranganathanpillai on March 19, 2012 at 8:03 pm

  நல்ல தஹவல் நன்றி sir

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*