கம்ப ராமாயணம் - மூலம், உரை, மொழிபெயர்ப்பு
ஹரி கிருஷ்ணன்
1 Jun 2008 |
அச்சிட
கம்பர்
இயற்றிய
இராமாவதாரம்
(கம்பராமாயணம்)
பாயிரம்
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1
சொற்பொருள்: அலகு – அளவு
எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.
Translation: We surrender unto our Lord who indulges in the endless games of Materialising, Establishing and Destroying all (that is known as) the Worlds.
Elucidation: It is He who makes ‘Existence’ from ‘Nothingness’; Protects, Saves and Maintains; and brings about the Destruction of all this that is known as the Worlds, Galaxies and the Universe. These are the Games Endless that He indulges in. We surrender unto Him.
சிற்குணத்தர் தெரிவு அரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
சொற்பொருள்: சிற்குணத்தர் – அறிவு என்னும் குணத்தை உடையவர்; ஞானியர். எண்ணிய மூன்றினுள்: சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள் மூன்றனுள். முற்குணத்தவர் சத்வ குணத்தவர்
மிகச் சிறந்த ஞானியர்களாலேயே உணர முடியாததாகிய ஈசனுடைய தன்மையை என்னாலா சொல்ல முடியப் போகிறது! அது எனக்கு மிகவும் அரிதாகிய ஒன்று. சத்வம், ராஜஸம், தாமஸம் எனப்படுபவனவற்றுள் முதன்மையாகிய சத்வ குணம் நிறைந்தவரே தேவர்கள் அனைவருக்கும் முதன்மையானவர். அப்படிப்பட்டவரின் நற்குணம் என்னும் கடலில் மூழ்கிக் குளித்தல் நன்மையைத் தரும்.
Translation: When it is impossible for even the Wisest to perceive the stature (of qualities) of the Supreme, how am I to do so! He is the chief among all celestials and His is the first of the three qualities. It would benefit us to immerse in that ocean of His Satvik quality.
Elucidation: What am I to say about His qualities when the wisest among men find it impossible even to perceive them! Of the three qualities, namely, Satvik, Rajas and Tamas, He is an ocean of the Satvic. And it would be of immense benefit for us to take the plunge in Him.
ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார். 3
சொற்பொருள்: அரி என ஓதினர் – ஹரி ஓம் என்று ஓதுதல்.
அளவில்லாதவையும் என்றும் நிலைத்து நிற்பவையுமான வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும் ‘ஹரி ஓம்’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்கள்.
Translation: The wise, the saintly, chant ‘Hari Om’ at the commencement and end of their recitals of the varied and everlasting Vedas. They are void of all attachments but for the one firm hold on His Feet.
Elucidation: The saintly and the wise begin and end their recitals of Vedas, which are immeasurable and beyond Time, by chanting His Name, ‘Hari Om!’ He is the One to whom the Path of Truth leads to. The pursuers of this path are void of all attachment, but for one. They remain ever attached to His Feet Divine.
அவையடக்கம்
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
சொற்பொருள்: பூசை – பூனை. காசு – குற்றம். மற்று, அரோ – அசைநிலை (பொருள் இல்லை)
பெரிய ஓசையுடன் கூடிய அலைகள் வீசும் பாற்கடலுக்குச் சென்ற பூனை (கடற்கரையில் நின்றவாறு) ‘இந்தப் பால் முழுவதையும் நக்கிக் குடித்துவிட வேண்டும்’ என்று விரும்புவதைப் போல, குற்றமில்லாத வெற்றியை உடைய இராமனுடைய கதையை நான் என்னுடைய ஆசையினாலே சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
கோப்பை பாலைப் பார்த்தாலே அடக்க முடியாத ஆவலை உறும் பூனை, ஒரு பால் கடலையே பார்த்தால் அது அத்தனையையும் நக்கிக் குடித்துவிடவேண்டும் என்று துடிப்பதுபோல நானும் அளவில் மிகவும் பெரியதும், சுவையில் மிக உயர்ந்ததுமான இராமனுடைய கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். அந்தப் பூனைக்கு இருக்கும் ஆசையைப் போல்தான் என் ஆசையும். அப்படி ஒரு ஆசையால்தான் (என் சக்திக்கு மீறிய செயலான) இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.
Translation: Like the cat standing on the shores of the Ocean of Milk desiring to lick the ocean clean, I have ventured to sing the story of Rama of immaculate Victory out of sheer desire.
Elucidation: The cat who licks a cup of milk clean, reached the Ocean of Milk and stood on its shore, witnessing the immensity of the Milky Ocean, with its terrifying roar of waves. Not perceiving its ability and the immensity of the task in hand, the cat twitched of the desire to lick the Ocean clean, as it did its cup of milk. I am like that cat. What I have before me is the Ocean of Milk. Though it is beyond my ability, I have begun this venture out of sheer love for reciting the story of Rama, of untainted Victory, Glory.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை!
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5
சொற்பொருள்: நொய்தின், நொய்ய – மிக எளிமையான, அழகோ பொலிவோ இல்லாத. வைத வைவு – சாபம், கோபித்துச் செய்த அதட்டல். ‘மாக்கதை செய்த, செய் தவன்’ பெரிய கதையைச் செய்தவனும் செம்மையான தவத்தை உடையவனுமான வால்மீகி.
மிகப் பெரியவர்கள் சினந்து சொன்ன சொல் எவ்வளவு எளிதாகச் சுடுமோ அவ்வளவு எளிதாக ஏழு மராமரங்களைத் துளைத்துச் செல்லுமாறு அம்பு எய்தவனின் பெருங்கதையைச் செம்மையான தவம் உடைய கவியான வால்மீகி செய்து முடித்துவிட்டார். அவருடைய சொல்லோ இந்த தேசத்தில் நின்று நிலவிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், எந்தவிதமான அழகும் பொலிவும் இல்லாத எளிய சொற்களைக் கொண்டு நானும் இராமனுடைய காதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். (இது என்ன பேதைமை!)
Translation: When the story of Rama, who shot his arrow through the Sal trees seven, as easily as a curse, has already been rendered in the (dazzling) verses of Valmiki, the Poet Saint and they have taken deep roots and are widely read, I have ventured to narrate it with my words that are simpler than the simplest. (Shame on me!)
Elucidation: Valmiki, of extraordinary penance, the Adi Kavi, the many splendoured Poet, had already sung the story of Rama, whose arrow went through the seven Sal trees as simply and as unfailingly as the curse of Rishis. Shooting through seven trees was as simple for Rama as it is for a Rishi to curse. And neither the curse, nor his arrow failed ever. The Epic of Valmiki made of illuminating words is still prevalent among the masses. It has taken deep roots in their hearts. In such a situation, me, endowed with nothing more than plain words of no splendour, the puny, has ventured upon to undertake the same task that a Titan had already completed. Shame on me!
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6
சொற்பொருள்: -
இந்த உலகம் என்னை இகழும். என் பெயர் மாசடையும். என்றபோதிலும் நான் இராம காதை சொல்வதாகிய இந்த முயற்சியில் இறங்கியிருப்பது ஏனென்றால், கொஞ்சமும் பொய் கலவாத அறிவுத் திண்மையை உடையவர் எழுதியிருக்கும் தெய்விகமான பெருங் காவியத்தின் தன்மை, பெருமையைக் காட்டவே.
என் படைப்பு மூல காதையின் அருகேகூட நிற்க ஒண்ணாதது என்பதனை நான் அறிவேன். அதற்குமேல் இந்த முயற்சியால் உலகம் என்னைக் கொண்டாடப் போவதில்லை. மாறாக இகழத்தான் போகிறது. என் எளிய புலமையால் என் பெயர் மாசடையத்தான் போகிறது. ‘அப்படித் தெரிந்தும் ஏன் இதைச் சொல்லத் தொடங்கியிருக்கிறாய்’ என்று கேட்கிறீர்களா? என்னுடையதைப் போன்ற ஓர் எளிய காதை வடிவம் இருந்தால் அல்லவா இதை ஒரு ஒப்பீட்டு அளவாக வைத்து, மூல காவியம் எவ்வளவு சிறப்பானதாகவும் மேன்மையானதாகவும் இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். ஆகவே, என்னுடைய திறமைக் குறைவையும் அறிவுக் குறைவையும் பொருட்படுத்தாமல் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன்.
Translation: Why is that I venture into narrating this story, though I know that the people are going to scoff at me and that my name would be ruined? It is just to demonstrate the excellence of the truly scholastic Poet who had sung it already.
Elucidation: If you ask, ‘You say that you are not adequately equppied or read enough to undertake a venture of this nature. You seem to know that your work is not going to earn you anything but mockery and that it would be a slur on your name. If so why do you dare doing a thing which you know that you are incapable of completing well? Well, I would just say that I just wanted to provide you with a point of reference, a scale by which to measure the immensity of the breathtaking work that the Original Poet did. If I cannot excel him, at least I can serve as a scale by which you can, by reason of comparison, understand the greatness of the unblemished Scholar that Valmiki was!
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்என் பாஅரோ. 7
சொற்பொருள்: துறை அடுத்த – பல வகையான வேறுபாடுகளை உடையதான. நறை – தேன். அசுணம் – மேன்மையான இசையை உணரக்கூடியதான ஒரு (கற்பனையான) விலங்கு. ஒழுங்கற்றதும், அதிரக்கூடியதுமான ஓசையைக் கேட்ட மாத்திரத்திலேயே உயிரை விட்டுவிடும் என்பது ‘இன்னளிக் குரல்கேட்ட அசுணமா அன்னாள்’ என்பன போன்ற மொழிகளால் அறியலாம்.
எத்தனையோ வகைப்பட்டதான (சந்த வேறுபாடுகளுடன் கூடிய) விருத்தங்களைக் கேட்டுப் பழகிய செவிகளுக்கு என் பாடல், யாழ் இசை என்ற தேனை மட்டுமே கேட்டுப் பழகிய அசுணம் என்ற (நல்லிசையை உணரக்கூடிய) விலங்கின் காதில் பறையொலி அதிர்ந்து அடித்தது போல் இருக்கும்.
நான் சொல்வதெல்லாம் ஒரு பாடலா? நல்ல ரசிகர்களாகிய நீங்கள் இதுவரையில் மிகச் சிறந்த சந்த நயங்களோடு கூடிய விருத்தங்களை மட்டுமே கேட்டுப் பழகியிருக்கிறீர்கள். யாழோசையை மட்டுமே கேட்டு வாழ்ந்திருந்த அசுணத்தில் காதுகளில் பறைஒலி வந்து அறைவதைப் போல என் கவிதை உங்கள் காதுகளில் வந்து அறையப் போகிறது. எனக்குப் படிப்பும் இல்லை. நல்ல இசையறிவும் இல்லை.
Translation: The legendary creature Asuna is known to enjoy and thrive on good music and would drop dead on hearing the noisy drum. (My readers!) You have all been used to the wide, varied and mellifluous rhythm of all the Great Poets and you are all like the Asuna who has been used to the melody of the lyre. And, here I come with my noisy drum!
Elucidation: Bear with me, my reader, for you have all been used to the pleasing rhythm of great poets who have rendered their verses in widely varying, nonetheless pleasing, metres. I am a mere noisy drummer. You all are like the legendary Asuna, that cannot bear the noisy and unrhythmic beat of the drum. I have nothing more than this noisy drum beat to offer to you.
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 8
சொற்பொருள்: பன்ன - ஆராய
இயல், இசை, நாடகத் துறைகளில் மிகத் தேர்ச்சி பெற்று விளங்கும் உத்தமமான கவிஞர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘பைத்தியக்காரர் சொன்ன சொல்லும், முட்டாள் சொன்ன சொல்லும், பக்தர்கள் சொன்ன சொல்லும் சொல்லுக்கும் ஒரு பொருளும் இல்லை. அவற்றில் ஆராய்வதற்கு எதுவும் இருப்பதில்லை.
சித்தம் கலங்கியவன், முட்டாள், பக்தன் ஆகிய மூவரும் மனநிலையால் ஒன்றே போல் இருக்கின்றனர். மூவருடைய மனமும் பற்றியதே பற்றி நிற்கும்; மூவருடைய வாயும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும். பிதற்றல் மொழியில் ஏது பொருள்? (குழந்தைகள் விளையாடும்போது மணலாலே சோறு பொங்கி விளையாடுகிறார்கள் என்றால் அதில் எவ்வளவு கல் இருக்கிறது என்று ஆய்வதில் என்ன பொருள்? நெற்சோறில் கல் எண்ணலாம்; மணற்சோறில் கல் எண்ணி என்ன பயன்!
Translation: Let me just say this much to the Poets who are well-versed in the prosaic, poetic and dramatic elements of the language. There is no use in taking up the words of the lunatic, the fool and the devotee, for a serious pursuit.
Elucidation: I am neither learned nor well-versed in the art of poety. Let me just tell this much to all those poets who are masters of both. Of what merit is the word uttered by either the mentally deranged, or the fool, or one whose heart is given to devotion! Their minds are not in their control and they blabber alike. Consider my words as one of those.
(பாயிரம் நிறைவுபெற்றது. End of Payiram)
அடுத்த பகுதி - கம்பராமாயணம் ஆற்றுப்படலம்…

தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
2 June 2008 at 1:02 am
நல்ல பணி. எப்படியாது முழுமையாகச் செய்து முடிக்கவும். வாழ்த்துகள்.