இந்து சேவை அமைப்புகளின் தொண்டு
அரவிந்தன் நீலகண்டன்
12 Jun 2008 |
அச்சிட
மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள் உள்ளன. நாங்கள் மருத்துவம் கல்வி ஆகிய தொண்டுகளை ஏழைகளுக்காக செய்கிறோம். ஆனால் இந்து மதத்தில் அத்தகைய செயல்பாட்டை காணமுடியவில்லையே. இதற்கு காரணம் இந்து மதம் கர்மம் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டிருப்பதுதான்’ என சொல்லுகிறார். அவர் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது. இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் கூட மாற்றுமத அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவைதானே? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
~ சொர்ணப்பன், மேட்டுப்பாளையம்
இந்தக் கேள்விக்கு இந்து தர்மம் சார்ந்த எண்ணிறந்த அமைப்புக்கள் ஆற்றும் தொண்டுகளைப் பட்டியலிடமுடியும்.
இதோ நீங்கள் இணைந்து சேவை செய்ய
சில இந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரங்கள்
இந்து மதத்தின் சேவை அடிப்படையைப் பற்றி உங்களுக்கு எடுத்துக் காட்டிவிட்டு ஒரு சில தொண்டு நிறுவனங்களின் உன்னத சேவைகளைப் பற்றி விளக்கிச் சொல்ல முற்படுகிறேன்.
இந்து தருமத்தில் தொண்டு நிறுவனம் இல்லை என்பதும், ஊழ்வினை-கர்மம் கோட்பாட்டால் ஒருவித “விதியே” என வாழும் போக்கு ஏற்பட்டுவிட்டது என்றும் சொல்வது கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பிரச்சாரமாகும். இது காலனிய சக்திகளால் செய்யப்படும் பிரச்சாரம். துரதிர்ஷ்டவசமாக நம்மவர்களிலேயே படித்தவர்கள் சிலரும் இதனை நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்ன? இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் மேற்கத்திய சமய பிரச்சார அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை அமைப்புரீதியில் ஒத்திருக்கவில்லையே தவிர குவித்தன்மையற்ற விதத்தில் ஊர் ஊராக தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டன. குடும்பங்களில் கூட தொண்டு என்பது கடமையாக செயல்பட்டது. இவற்றின் உள்ளார்ந்த தொண்டு மதிப்பீடுகள் சரியாக மதிப்பிடப்பட்டதே இல்லை.
உதாரணமாக, இந்துக்களை தாக்கி அவர்கள் “மூடநம்பிக்கையாளர்கள் கல்லை வணங்குபவர்கள்” என்றெல்லாம் எழுதும் ஒரு ஐரோப்பிய மாற்றுமதத்தவர் இந்துக்களின் தொண்டு அமைப்பை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
“இந்துஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட தொண்டு அமைப்புகளை நீங்கள் காணலாம். நீர் நிலைகள் இளைப்பாறும் இடங்கள் கிணறுகள் உணவு அளிக்கும் இடங்கள் என …அவை அனைத்து மனித குலத்துக்கு நன்மை அளிக்கவேண்டும் (They are intended for the benefit of mankind) ஆயிரக்கணக்கான சக மக்களின் நன்மைக்காக - அந்த ஒரு குளம் இல்லாவிட்டால் தண்ணீருக்காக தவித்துவிடும் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக - தன் செல்வத்தை செலவு செய்து குளங்களை வெட்டும் இந்த தனி மனிதர்களை மனிதகுலத்துக்கு நன்மை செய்பவர்கள் என சொல்லத்தான் வேண்டும். இவ்வாறு மானுடகுல நன்மைக்காக தொண்டு செய்வதென்பது இந்துக்களின் எந்த அளவு மதிக்கப்படுகிறது என்றால் பெரும் அளவில் செல்வமில்லாதவர்கள் கூட இத்தகைய தொண்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மரத்தோரங்களில் தண்ணீர் பந்தல்கள் வைக்கிறார்கள். யாசகர்களுக்கு உணவு அளிக்கிறார்கள்….ஐரோப்பா இந்த விஷயங்களை இந்துக்களிடமிருந்து சிறிதாவது பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.”[1]
மருத்துவ துறையிலும் இந்துக்களின் தொண்டும் பங்களிப்பும் சிறிதும் குறைந்தது அல்ல. தொழு நோயாளிக்கு சைதன்ய மகாபிரபு சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். இந்திய கிராமங்கள் பலவற்றிலும் அம்மை நோய் தடுப்பு குழந்தைகளுக்கு அளிப்பதற்கு தொண்டுள்ளம் கொண்ட பிராம்மணர்கள் ஊர் ஊராக சென்று பாரம்பரிய நோய் தடுப்பு முறையொன்றினை பயன்படுத்தி வந்தார்கள். இந்த முறையைக் கொண்டு பின்னாளில் ஜென்னர் இன்று புகழ்பெற்றிருக்கும் அம்மை தடுப்பு ஊசியை உருவாக்கினார். 1767 இல் வங்காளத்தில் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்ததை ஹோல்வெல் என்பவர் குறிப்பிடுகிறார். 1805 இல் அன்றைய பிரிட்டிஷ் சுகாதார தலைமை அதிகாரியாலும் இந்த முறை செயல்பட்டு வருவது ஒத்துக்கொள்ளப்பட்டது. வரலாற்றாசிரியர் நெயில்ஸ் ப்ரிம்னஸ் (ஆர்த்தஸ் பல்கலைக்கழக வரலாற்று துறை டென்மார்க்) தமது ஆராய்ச்சிக்கட்டுரையில் இந்த தரவுகளை அளிக்கிறார். அவர் கூறுகிறார்: “Despite this recognition of the indigenous roots of variolation, the colonial authorities from the outset sought to detach the practice from its Indian context.”[2] அதாவது ஜென்னரின் தடுப்பூசி முறை இந்து மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட அதனை அந்த இந்திய சூழலிலிருந்து காலனிய அதிகாரிகள் முழுவதுமாக அறுத்தெறிந்தனர்.
ஆக, இந்து தொண்டு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டன. எவ்வித உள்நோக்கம் - உதாரணமாக மதப்பிரச்சாரம்- ஆகியவை இல்லாமல் செயல்பட்டன. எனவே ஏதோ மேற்கத்திய மத நிறுவனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவது போல கூறுவது தவறான பார்வை ஆகும். எட்மண்ட் வெப்பர் எனும் இறையியல் பேராசிரியர் இதனை விளக்குகிறார்:
“இந்தியாவின் பாரம்பரிய அமைப்பில் தனிமனிதர், உறவுமுறைகள், சாதி-பந்தங்கள், சமுதாய தொண்டு ஆகியவை செயலாற்றின. சிறிய அளவுக்குள் இயங்கி வந்த இந்த அமைப்புகளின் பங்களிப்பின் பொருளாதார மதிப்பு இன்று வரை கணக்கில் எடுக்கப்பட்டு எந்த ஆராய்ச்சியும் நான் அறிந்தவரை நடைபெறவில்லை. அது கணக்கிடப்பட்டால் அதன் மதிப்பு மிக மிக பெரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பாரம்பரிய தொண்டு அமைப்புகள் என்ன ஆயின (அவை இருட்டடிப்பு செய்யப்பட்டது) மிகக் கொடுமையான காலனிய வரலாற்றுப் பொய் உருவாக்கம் ஆகும். காலனிய மத பிரச்சாரகர்கள் இந்திய பாரம்பரிய தொண்டு நிறுவனங்கள் மதிப்பில்லாதவை போலவும் தாம் மட்டுமே தொண்டு செய்பவர்கள் என்றும் ஒரு சித்திரத்தை உருவாக்க முனைந்தார்கள். இதை சில படித்த இந்தியர்களும் நம்பிவிட்டார்கள்.”[3]
அண்மைகாலங்களில் இந்து அமைப்புகள் செய்யும் சேவையானது இந்த பாரத தொண்டு பாரம்பரியத்துடன் ஒட்டியதாகவே கருதப்பட வேண்டுமே அல்லாது அவை மேல்நாட்டு மத பிரச்சார அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவை என கருத இயலாது. உதாரணமாக, கரும வீரர் காமராசர் அவர்களின் மதிய உணவு திட்டம், பின்னர் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் சத்துணவு திட்டமென கொண்டு வரப்பட்டது. இது நவீன உலகில் வளரும் நாடுகளுக்கு இந்து தொண்டு சித்தாந்தத்தின்/அமைப்புகளின் பங்களிப்பாகும்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையே நம் இந்து தர்மத்தில் வேரூன்றி நிற்கும் “உணவினை மக்களுடன் பகிர்தல் (பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்)” என்னும் பாரம்பரியமாகும். “அன்னம் பஹு குர்விதா தத் விரதம்… ந கஞ்சன வஸதௌ ப்ரத்யாசஷீத தத் விரதம்” என்பது உபநிஷத்தின் சொல். அதாவது, “உணவினை மிகுந்த அளவில் உற்பத்தி செய்வதும் அதனை பறையறிந்து தெரிவித்து உலக மக்களுடன் பகிர்ந்து கொள்வதும் மனித குலத்தின் தவிர்க்கமுடியாத தவிர்க்க கூடாத விரதங்கள்” என வேதம் இந்துக்களுக்கு ஆணையிடுகிறது.
இந்த பாரம்பரிய ஞானத்தின் சிறந்த தமிழ் இலக்கிய உதாரணமாக ஆபுத்திரனும் மணிமேகலையும் விளங்குகிறார்கள். வேத மரபினை பின்பற்றி மாணாக்கர்களுக்கு இலவச பால் வழங்கும் தொண்டினை ஏழைக்குழந்தைகளுக்கு நாள் தோறும் பசும் பால் கொடுக்கும் இந்த ஷீரதானத்தை கலவல கண்ணன் செட்டி செய்து வந்தார்.தன் வாழ்நாளுக்கு பின்னரும் இந்த தானம் தொடரவேண்டுமென அவர் தன் உயிலிலும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்த இலவச பால் பராமரிப்பு இன்றளவும் கண்ணன் செட்டி வாழ்ந்த இல்லமாகிய கலவலகிரகத்தில் நடந்து வருகிறதாம்.[4]
இம்மரபே மிகச்சிறந்த சமுதாய புரட்சியாக கர்மவீரர் காமராஜரால் கொண்டு வரப்பட்டது. பின்னர் இதற்கு புத்தெழுச்சி ஊட்டியவர் வள்ளலாக மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார். இன்று தமிழ்நாடு மக்கள்-நல்வாழ்வு அளவையில் அகில இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக உள்ளதென்றால் அதற்கு இந்த வேதபாரம்பரியத்திலிருந்தும் முகிழ்த்த உணவினை பகிர்ந்து தேவைப்படுவோருக்கு அளிக்கும் தொண்டு சித்தாந்ததத்திலிருந்து உருவான தொண்டுதான் காரணம்.[5] இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றுள்ளது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். அதன் அக்ஷயபாத்திரம் திட்டத்தின் மூலம் மத பேதமில்லாமல் அனைத்து அரசு பள்ளி குழந்தைகளுக்கும் ஊட்ட சத்து மிக்க உணவு அளிக்கப்படுவதுடன் அதனால் சத்துமிக்க உணவால் குழந்தைகள் கல்வி தரம் நன்றாக மாறுவதையும் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.பெங்களூரில் ப்ரேஸர் டவுணுக்கு அப்பால் உள்ள உருது பள்ளிகளில் பயிலும் 3000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகளுக்கு இந்த இயக்கத்தின் அக்ஷயபாத்திர திட்டத்தின் மூலம் உணவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[6] 14 பிரதேசங்களில் ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 4500 பள்ளிகளில் 8,53,000 குழந்தைகள் இதனால் ஒவ்வொருநாளும் பயனடைகிறார்கள்.
புகழ்பெற்ற ஏசிநெல்ஸன் புள்ளியியல் நிறுவனம் அக்ஷயபாத்திரம் விளைவு குறித்து கூறுகிறது:
“… enrolment data shot up during the first year of program implementation across almost all locations, significant improvement in school attendance and the retention of students in school, and better student performance after implementation of the Akshaya Patra school meal program”.[7]
மருத்துவ துறையிலும் 50க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்துகளை (ஆரியோமைஸின், wide spectrum anti-bacterial medicine ஆகியவை உட்பட) கண்டுபிடித்த யெல்லப்ராத சுப்பாராவ் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரின் உந்துதலால் மனிதசேவையே மகேசன் சேவை என மருத்துவ துறையில் சென்றவர். அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆசியாவிலேயே தலை சிறந்த தொண்டு நிறுவனமாக சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. அதுவே மிக அதிக அளவில் கண் மருத்துவ முகாம்களை நடத்துகிறது.
ஜெய்பூர் செயற்கை கால்கள் எவ்வித காப்பீட்டு உரிமையும் பெறாதவை ஆகும். இதன் விளைவாக அவை பல இலட்சம் மானுடகுடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளன. இதனை உருவாக்கிய ஸ்ரீ ராமச்சந்திர ஷர்மா சேத்தி ஆகியோர் இதற்காக எவ்வித காப்பீட்டு உரிமையும் கோரவில்லை. ஏனெனில் நரசேவையே நாராயண சேவை என்பதே அவர்களது வாழ்க்கை இலட்சியமாக அமைந்துள்ளது. இன்று 18 நாடுகளில் இந்த அமைப்பு இயங்குகிறது. கால்கள் இழந்த 20000 பேருக்கு ஜெய்ப்பூரில் மட்டும் இந்த செயற்கை கால்கள் பொருத்தப்படுகின்றன.[8] ஏன் இந்த ஜெய்ப்பூர் கால் அறிவு-காப்புரிமை பெறவில்லை? இதனை உருவாக்கிய ராமச்சந்திர ஷர்மா இன்றும் காலையில் 4:30 க்கு எழுந்து பகவானை பிரார்த்தித்து பசுவுக்கு பால் கறந்து எளிய வாழ்க்கையே வாழ்கிறார்.
“பகவான் மகாவீர் விகலங்க் சகாயதா சமிதி” எனும் அமைப்பு மூலம் ஜெய்ப்பூர் கால்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது பயிற்சி பட்டறைகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. வேத இந்துவான ராமசந்திரா ஒரு ஜைன அமைப்புக்கு தம் தொழில்நுட்பத்தை அளிக்கிறார். அது உலகெங்கும் போலியோவாலும் கண்ணிவெடிகளாலும் கால்களை இழந்த மக்களுக்கு பயன்படுகிறது. “மக்களின் முகத்தில் மலரும் புன்னகையே எனக்கு ஊதியம். காப்புரிமை பெற்றால் நான் பணக்காரன் ஆகலாம். ஆனால் மக்களின் முகத்தில் தெரியும் இந்த சந்தோஷத்தை பார்க்கமுடியுமா?” என கேட்கிறார் ராமச்சந்திர ஷர்மா.[9]
இவை தவிர ஓராசிரியர் பள்ளிகள் மூலம் வனவாசிகளுக்கு கல்வி சேவை நடத்தப்படுகிறது. 24006 ஓராசிரியர் பள்ளிகள் மூலம் 720182 வனவாசி மாணவர்கள் பயனடைகிறார்கள்[10] விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் வளங்குன்றா வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை கிராமமக்களுக்கு வழங்குகிறது. இதற்காக அதற்கு “ஆஷ்டன் சர்வதேச சூழலியல் விருது” வழங்கப்பட்டது.[11]
இதில் நூற்றில் ஒரு பகுதி செய்திருந்தாலும் மேற்கத்தியராக இருந்திருந்தால் இந்நேரம் எத்தனை புகழ் எத்தனை பாராட்டு கிடைத்திருக்கும்?
இதுதான் இந்து தருமத்தில் தொண்டு செய்வதன் சிறப்பு தன்மை. நாம் தொண்டு செய்கிறோம் - எந்த உள்நோக்கமும் இல்லாமல், அனைவருக்கும் தொண்டு செய்கிறோம் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தொண்டு செய்கிறோம். விளம்பரங்கள் இல்லாமல். இதனை பிற மத சகோதரர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய தொண்டு பாரம்பரியத்தையும் அதன் நிகழ்வையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொண்டு ஸ்தாபனங்களுடன் நீங்களும் ஏன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கூடாது?
இதோ நீங்கள் இணைந்து சேவை செய்ய
சில இந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரங்கள்
சான்றுகள்:
- [1] John Howison, European Colonies, in Various Parts of the World:Aborgines of India, ஆக்ஸ்போர்டு:1834, பக்.62-3)
- [2] நெயில்ஸ் ப்ரிம்னஸ், Variolation, Vaccination and Popular Resistance in Early Colonial South India, Med Hist. 2004 April 1; 48(2): 199–228.
- [3] எட்மண்ட் வெப்பர், Charity in Inter-religious Perspective, Journal of Religious Culture, No. 46 (2001), ப்ராங்க்பர்ட் பல்கலைக்கழகம்
- [4] ராண்டார் கை எழுதிய அன்றைய சென்னை பிரமுகர்கள் 5-1-1992 தினமணி கதிர்
- [5] Raja M , India fights illiteracy with lunch, மே 20 2008:
“In January 2008, a national conference on human development ranked Tamil Nadu among the top three states in India, after Kerala and Punjab. A senior bureaucrat Naresh Gupta attributed Tamil Nadu’s growth to various poverty alleviation and development programs in the state as well as to the noon-meal scheme.”
- [6] Akshaya Patra program, http://www.bangalorebest.com
- [7] http://www.akshayapatra.org/documented_impact.html
- [8]தர்ஷன் தேசாய், Helping the disabled stand on their feet, இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 22 1998
- [9] டிம் மெக்ரிக், The $28 Foot , டைம்ஸ் - Heroes of Medicine
- [10] http://ekalindia.org
- [11] http://www.ashdenawards.org/winners/vknardep
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
12 June 2008 at 8:54 am
அற்புதமான கட்டுரை. மேலும் பல இந்து சேவை இயக்கங்களின் பட்டியலையும் இதில் இணைக்க வேண்டுகிறேன்.