மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் –

Manikka Vasagarநாம் வாழும் இந்த பூமியானது பிரபஞ்சத்தினுடைய ஒரு சிறுபகுதியே. இந்த சிறுபகுதியிலேயே எல்லையற்ற அழகு மண்டிக்கிடக்கிறது. இவ்வழகு பிரபஞ்சத்தினுடைய பிறபகுதிகளிலும் நிறைந்து நிற்கின்றது என்பது தெளிவு. சந்திரமண்டலத்தில் காலடி எடுத்து வைத்த மனிதன் இந்த மண்டலத்தின் அழகை தன்னுடைய ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் வெளியிட்டிருக்கிறான்.

இத்தகைய அழகும் அற்புதமும் இப்பூமண்டலத்தோடும் சந்திரமண்டலத்தோடும் மட்டும் நின்றுவிடவில்லை. இவை போன்ற எண்ணற்ற பிற கோளங்களையும் தழுவி நிற்கின்றன. அவை ஒன்றன்பின் ஒன்றாக வயங்கி வியத்தகு காட்சியின்பம் பயக்கின்றன. கூரையின் வழியாக சூரியனின் கிரகணம் பாய்கிறது. அந்த கிரகணத்திலே எண்ணற்ற நுண்துகள்கள் வண்ண ஜாலங்கள் செய்வதைக் காண்கின்றோம். இவைப் போன்றவைதான் இப்பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு பகுதிகளும் அவற்றின் எழில் கோலங்களும்.

எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்:

அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துள்ளணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன்

இந்த இறைவன்தான் நாளும் தோன்றும் சூரியனைப் படைத்து அதற்குப் பிரகாசத்தைக் கொடுத்தான்.; பொலிவு பொருந்திய சந்திரனைப் படைத்து அதற்குக் குளுமையைக் கொடுத்தான்; வலிமை உடைய நெருப்பைப் படைத்து அதற்கு வெப்பத்தை அளித்தான்; கண்ணால் காணமுடியாததாயினும் நிச்சயமாக இருக்கிற ஆகாசத்தைப் படைத்து அதற்கு வியாபிக்கும் தன்மையைக் கொடுத்தான்; வேகம் நிறைந்த காற்றைப் படைத்து அதற்கு அசைவைக் கொடுத்தான்.; தெள்ளிய நீரைப் படைத்து அதற்கு சுவையைக் கொடுத்தான்.; மண்ணைப் படைத்து அதற்கு திட்பத்தைக் கொடுத்தான். இவ்வாறாக என்றென்றும் பல கோடியானவற்றைப் படைத்து அவை ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தன்மையை கொடுத்த அவன் அவ்வளவு பெரியவனாக இருக்கிறான். இதைத்தான் மாணிக்கவாசகர்,

அருக்கனிற் சோதி யமைத்தோன் திருத்தகு
மதியில் தன்மை வைத்தோன் திந்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப் பலகோடி யெனைப் பலபிறவும்
அனைத்தனைத் தவ்வயி னடைந்தோன்

என்று பாடுகிறார்.

இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே சிருஷ்டிகள் அனைத்தும் படைத்தான். அஃதாவது சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனுடைய தன்மையையும் திறனையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனால் அனைத்து சிருஷ்டிகளும் நிலம், நீர், நெருப்பு காற்று விண் எனப்படும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பது தொன்மையான கருத்து. எனவே இந்த ஐம்பெரும் பூதங்களின் மூலமாக இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்பது பெறப்படும்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் மூலமாக எல்லாவுயிர்களையும் தோற்றுவித்த இறைவனோ தோற்றமில்லாதவனாக இருக்கிறான். அது போலவே இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் ஒரு காலத்தில் அழிந்து இறைவனிடத்தில் சேரக்கூடியவை. ஆனால் அந்த இறைவனோ அழிவற்றவானாகவும், வேறெதிலுமே ஒன்றாதவனாகவும் இருக்கிறான். ஐம்புலன்களின் இயல்புகளும் இறைவனிடத்திலிருந்து தோன்றியுளவாயினும் அந்த ஐம்புலன்களுக்கும் எட்டாதவனாக அந்த இறைவன் இருக்கிறான்.

நன்றி: இந்து சமய செய்தி: டிசம்பர்-1982 இதழ்

3 Replies to “மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்”

  1. அண்டத்தில் பிண்டத்தைக் காண்பதும், பிண்டத்தில் அண்டத்தைக் காண்பதும் நம் முன்னோரின் தெளிந்த பார்வைக்கு சான்று. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சாதிக்கவில்லையா பிரகலாதன் ?

    எல்லாம் வல்ல இறைவன் கடந்தும் உள்ளேயும் உள்ளதால் தானே கடவுள் என்கிறோம். எழுதுவதும் அவன், எழுத்தைப் படிப்பதும் அவன், எழுத்தும் அவன், எழுதுகோல் அவன் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது எழுதுபவர் முகம்மதியராக இருந்தால் என்ன, இந்துவாக இருந்தால் என்ன. மணியான பாடல்களின் மறைவான, உயர்ந்த கருத்துக்களை அல்லவா அவர் எடுத்துரைக்கிறார்.

    நம் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உருவத்தைக் கொண்டிருந்தாலும், பல சமயங்களில் ஒரு பாகம் மற்றொரு பாகத்துக்கு கெடுதல் விளைவித்தாலும் அதை நாம் இல்லை என்று ஒதுக்கிவிடுவோமா? பற்களால் பல முறை கடிபட்ட நாக்கு அதே பற்களின் நடுவில் வாழ்வது மட்டுமில்லை, அவைகளின் நடுவில் சிக்கி உள்ள கல்லை எடுக்க உதவுவது இல்லையா ? நம் பார்வையில், காணும் கோணத்தில் உள்ள வித்தியாசங்கள், விருப்பு வெறுப்புக்கள் தான் வெளியே விருப்பத்திற்குரிய, வெறுத்தற்குரிய வித்தியாசங்களாக தெரிகின்றன.

    பண்பாளர் மு.மு.இ. அவர்களின் கட்டுரையின் மறுபதிப்பிற்கு நன்றி.

    மணிவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…

  2. மணிவாசகத்தின் திருவண்டப்பகுதி ஒரு காலங்கடந்து நிற்கும் உயர் படைப்பு. அதற்கு மேதகு மு மு இஸ்மாயில் அவர்களின் விமரிசனம் மிக இனிமை. வாழ்க வையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *