பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

இந்து நாகரீகமும், கலாசாரமும் மிக மிகத் தொன்மையானது என்றாலும், நம் கலாசாரத்தில் மிகப் பழங்காலத்தில் இருந்தே பெண்களுக்கு அதிகமான சுதந்திரமும், மதிப்பு மரியாதையும் இருந்து வந்திருக்கின்றது.

முந்தைய பகுதி: பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!

சங்க காலத்தில் சுமார் 33 பெண்பால் புலவர்கள் இருந்ததாய்த் தெரிய வருகின்றது. அவர்களில் ஒளவையார் முக்கியமானவர். புறநானூற்றுப் பாடல்களைப் பாடியவர்களில் முக்கியமானவர் ஒளவையார் ஆவார். அதிலும் அவருக்கு மன்னர்களிடம் இருந்த அளவிடற்கரிய செல்வாக்கைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. மன்னர்கள் போர் செய்யும்போது அவர்களின் தவறுகளை இடித்து உரைக்கும் அளவுக்கும், போரில் ஒருவருக்கொருவர் சமாதானம் பேசும் அளவுக்கும் செல்வாக்குப் படைத்தவர் ஒளவையார் என்று தெரியவருகின்றது. அவருக்குப் பின் வந்த பல பெண் புலவர்களும், அவரின் அடியை ஒற்றி, தங்கள் பெயரையும் ஒளவையார் என்றே சொல்லிக் கொண்டதாயும் ஓர் ஆய்வு கூறுகின்றது.

அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த ஒளவையார் வேறு எனவும், ஆத்திச்சூடி போன்றவற்றை எழுதியவர் வேறு என்றும், சேரமானுடன் இருந்தவர் வேறு எனவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும் பொதுக்கருத்து என்னவென்றால் இவற்றை எல்லாம் எழுதியவர் ஒளவையார் என்ற பெண் என்பதே ஆகும். அதிலும் ஒளவையார் குண்டலினி யோகம் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் அறியத் தரும் விநாயகர் அகவலை அறியாதோர் இல்லை. யோக சாத்திரம் மட்டுமின்றி, அரச நீதியிலும், அதை அரசர்களுக்கு எடுத்துச் சொல்லுவதிலும் வல்லவராய் இருந்ததோடு அல்லாமல், தாம் கற்ற யோகாப்பியாசத்தின் விளைவால் தம் உடம்பையும் மூப்பு, பிணி போன்றவை அண்டாமலும் காத்து வந்திருக்கின்றார் என்பது புலனாகின்றது. இவர் எந்த ஒளவையாக இருந்தாலும் பெண் புலவர் என்பதே இங்கு கவனிக்கத் தக்கது.

இது தவிரவும், காக்கைப் பாடினியார் என்ற புலவரும் சங்ககாலத்தில் போர் செய்யும்போது ஒரு தாய், காட்டிய வீரத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பாடி இருப்பதை நோக்கும்போது, பெண் புலவர்கள் மட்டுமின்றி புலவர்கள் அல்லாத மற்றப் பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களாய் இருந்திருக்கவில்லை என்பதும் புலனாகின்றது. பெண்கள் தங்கள் கணவன்மாரை மட்டுமின்றித் தம் வயிற்றில் பிறந்த பிள்ளைகளையும் மிக்க துணிச்சலுடனும், வீரம், விவேகம் போன்றவற்றுடனும் போர்க்களத்திற்கு அனுப்பிய வரலாறுகளைக் காண முடிகின்றது. இத்தகைய பாடல்களைக் காக்கைப் பாடினியார் என்ற பெண்பாற்புலவரே பாடியதாயும் தெரிய வருகின்றது.

பெண்ணியம், பெண்ணியம் என்றெல்லாம் இன்று நாம் பேசிக் களிப்புறுகின்றோம். பெண்களுக்கு அவலக் குரலைக் கொடுப்பது இப்போது சமீபத்தில் நடப்பதே எனவும் எண்ணுகின்றோம். என்ன ஒரு பரிதாபம்!! இத்தகைய பெண்ணியமும் சரி, விதவைகளின் மறுவாழ்வும் சரி, சங்ககாலப் பாடல்களிலேயே பாடப் பட்டு இருக்கின்றதே! அதிலும் அதைப் பாடியதும் ஒரு பெண்பாற்புலவரே! பெருங்கோப்பெண்டு என்ற பெண்பாற்புலவர் அத்தகைய பாடல்களைப் பாடியதாய்த் தெரியவருகின்றது. ஆகவே நாம் இன்று பேசும் பெண்ணியமும் புதியதே அல்ல! எதுவுமே புதியது இல்லை. சுழன்று, சுழன்றே வருகின்றது அனைத்துக் கருத்துகளும்.

இன்னும் சொல்லப் போனால் வீரம் செறிந்த பெண்களும் பலர் இருந்திருக்கின்றனர். புலமை மட்டுமின்றி, கலைகள் பலவற்றிலும் பெண்கள் சிறந்திருக்கின்றனர். அரசாட்சி புரிவதிலும் வல்லவர்களாகவே இருந்திருக்கின்றனர். பாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். அரசர்களுக்கு மனைவிகளாகவும், பட்டமகிஷிகளாயும் சிறந்து விளங்கிப் பெயர் பெற்ற பெண்கள் பலர் இருந்திருக்கின்றனர். போர்க்கலையில் வல்ல பெண்கள் இருந்திருக்கின்றார்கள். ஆட்டக்கலையில் வல்ல ஆட்டன் அத்திக்கு ஈடு கொடுத்து ஆடிய ஆதிமந்தி போன்ற பெண்களுக்கும் குறைவில்லை. எல்லாவற்றிலும் பெண்கள் சிறந்தே விளங்கி வந்திருக்கின்றனர்.

பக்தி இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலோ, ஆண்டாளை விடச் சிறந்த இலக்கியகர்த்தா யார் இருக்க முடியும்?? ஆண்டாள் தன் காதலை வெளிப்படுத்திய விதமும், அதை அழகான பாடல்களில் வடிவமைத்த விதமும் சரி, இன்றுவரை நம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்துகின்ற ஒன்று. நாட்டின் இயற்கை வளம் மட்டுமின்றி, சீதோஷ்ண நிலைகளையும் நன்கு கற்றறிந்ததாலேயே ஆண்டாளால், தன் நாட்டின் வளத்தைக் குறிக்கும் பாடலான “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” பாடலையும், மழை பெய்வது குறித்த பாடலான “ஆழி மழைக்கண்ணா!’ பாடலையும் பாட முடிந்தது. வான சாத்திரமும் அறிந்தே வைத்திருக்கின்றாள் அவள். அது அவள் பாடலில் வரும் கீழ்க்கண்ட வரிகளில் இருந்து தெரியவருகின்றது அல்லவா??

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

அதோடு நில்லாமல் தன் துணையைத் தானே தேடிக் கொள்ளும் நிலையும் இருந்திருக்கிறது என்பது புலனாகின்றது அல்லவா?? மனதில் அளவில்லா காதல் மட்டுமின்றி, துணை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்ததாலேயே ஆண்டாளால், “மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய், மன்மதனே!” என்று சொல்ல முடிந்தது. அப்படியே வாழவும் முடிந்தது. ஆகவே இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் நாம் இப்போது அப்படியா இருக்கின்றோம்?? இல்லையே?? நம்மை நாமே பல வழிகளிலும் தாழ்த்திக் கொள்ளுகின்றோம், அல்லது மற்றவர் தாழ்த்தியாய் நினைக்க இடம் கொடுக்கின்றோம். கொடுத்துவிட்டோம். ஆனால் அதை நாம் உணராமல் அது தான் நம் சுதந்திரம் என்ற தவறான எண்ணத்துக்கும் உட்படுத்தப் பட்டிருக்கின்றோம். ஒரு தாயாய், மனைவியாய், சகோதரியாய், அன்னையாய், நல்லாசிரியையாய், தோழியாய் நாம் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்தோம் ஆனாலே போதுமே! ஆனால் அவ்வாறு செய்கின்றோமா??ஆங்கிலத்தில் சொல்வது போல் இன்றைய நாட்களில் இது ஒரு million dollar question.

(தொடரும்…)

3 Replies to “பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்”

  1. அருமையாக எழுதியுள்ளீர்கள் கீதா அவர்களே.

    // தாம் கற்ற யோகாப்பியாசத்தின் விளைவால் தம் உடம்பையும் மூப்பு, பிணி போன்றவை அண்டாமலும் காத்து வந்திருக்கின்றார் என்பது புலனாகின்றது. //

    ஆமாம். உடல் ஆரோக்கியம் பற்றி ஔவை எழுதியிருக்கும் மற்ற பாடல்களும் (நன்னெறி, மூதுரை..) அவர் ஒரு மிகத் தேர்ந்த யோகி என்பதைப் பறைசாற்றுகின்றன.

    இன்று கூட பெண்களுக்கு அரசாட்சி மட்டுமல்ல, அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுக்கும், மத ஆட்சி நடக்கும் நாடுகள் உள்ளன. ஆனால் நமது கலாசாரத்தில் எப்பேர்ப்பட்ட பெண்ணரசிகளை உரிமையும், பெருமையும் தந்து உருவாக்கியிருக்கிறது என்று தங்கள் கட்டுரை மிக அழகாக விளக்கியது. மிக்க நன்றி.

  2. மிக்க நன்றி திரு ஜடாயு அவர்களுக்கு. பெண்கள் போகப் பொருட்களாய் மாறி இருப்பது சமீப காலங்களிலேயே. அந்நிய நாட்டு ஆட்சியை விட மிக அதிகமாய் அந்நியர் கலாசாரம் ஊடகங்கள் மூலம் இன்று ஊடுருவி நம் கலாசாரத்தையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து வருகின்றது. முதலில் பெண்கள் அதிலிருந்து விடுபடவேண்டும். அப்போது தான் சமூகமே மாறும். நாடும் முன்னேற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *