எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

பால கங்காதர திலகர்சிறுவயதிலிருந்தே நமக்கு சுதந்திர தினம் என்றால் மூவர்ணக் கொடி, அது உச்சியில் ஏறியதும் உதிரும் மலர், காந்தி, நேரு, கையில் மிட்டாய். அவ்வளவுதான்.

‘இரவில் சுதந்திரம் வாங்கினோம், இன்னும் விடியவே இல்லை’ என்று வருத்தப்பட்டார் ஒரு கவிஞர். கவிஞர்கள் உணர்ச்சி வசப்படுகிறவர்கள். ஆனால் சொல்வதில் உண்மை இருக்கும்.

அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் வாங்கினோம், அடிமை குணத்திலிருந்து வாங்கினோமா?

ஆரிய, திராவிட இனப் பிரிவினை; இந்தியர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள்; இங்கிருந்த புராதன, உலகளாவிய மதம் பிற்போக்கானது; எமது மகத்தான மொழிகள் காட்டுமிராண்டி மொழிகள் (தமிழகப் பெரியார் ஒருவருக்கும் அதே கருத்து இருந்தது!); எமது கடவுளர்கள் சாத்தான்களும் பேய்களும்; எமது மக்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே லாயக்கானவர்கள் என்று எத்தனை புளுகுகளை விதைத்துவிட்டுப் போனார்கள்! அதற்கு ஆதாரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டுத்தான் போனார்கள். அந்த விதைகளெல்லாம் இங்கிருக்கும் போலி மதச்சார்பின்மையாளர்கள் ஊற்றிய நீரில் செழித்து வளர்ந்து, மெய்யாகவே நமது நாட்டைக் காட்டுமிராண்டி நாடாக மாற்றத் தலைப்பட்டுவிட்டன.

நாம் வெள்ளைத்தோலுக்கு இன்னமும் அடிமைகள்தாம். அவர்களுடைய ‘ஆராய்ச்சிகள்’ (அவை தமது மதமே உயர்ந்ததென்று காட்டுவதற்காகச் செய்த புளுகுமூட்டைகளாக இருந்தாலும்) உண்மை என்று நாம் இன்னமும் நம்புகிறோம். தாய்மதத்தையும் கடவுளரையும் தூற்றுவதுதான் (அதே கடவுளரை ரகசியமாக வணங்கினாலும்) மதச்சார்பின்மை என்று நம்பவைக்கப் பட்டிருக்கிறோம். என்ன பரிதாபம்!

‘எனது நூல் மட்டுமே மெய்ஞான நூல்’, ‘நான் கடவுளுக்கு என் மொழியில் இட்டு அழைக்கும் பெயர் மட்டுமே மெய்யானது’, ‘இவ்விரண்டையும் நம்பி ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரகத்துக்குப் போவார்கள்; அவர்களைக் கொன்றாலும் நான் சொர்க்கத்துக்குப் போவேன்’ என்றெல்லாம் கண்மூடித்தனமாக நம்புகிறவர்களை நாம் சமத்துவ, சகோதரத்துவ வாதிகள் என்று நம்புகிறோம்!

‘ஒன்றே தெய்வம், அதை அறிஞர்கள் பல பெயர்களால் அழைக்கின்றனர்’ என்று உரத்து ஒலிக்கும் உலகின் தாய்மதமாம் இந்து மதத்தின் மீது பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கிறோம்.

நமது கோவில்கள் அரசுக்குப் பொன்முட்டையிடம் வாத்துக்கள். அதை எடுத்து ஹஜ் யாத்திரைக்கு அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால், அமர்நாத் யாத்திரை செல்லும் இந்துக்களின் வசதிக்காக சிறிது நிலம் கொடுத்தாலும் அந்த நடவடிக்கையில் அசையாமல் நிற்கும் உறுதி கிடையாது. நமது நிலத்தை நமக்கே மறுக்கும் வந்தேறி மதத்தினருக்கும் பெருந்தன்மை இல்லை.

இந்துக்களே சிந்தியுங்கள். காஷ்மீரி இந்து சொந்த நாட்டிலேயே அகதி. குளிர்மிகுந்த ஜம்முவிலும் டெல்லியிலும் தற்காலிக டெண்ட்டுகளில் வாழ்கிறான். அரசின், அரசியல் கட்சிகளின், சக இந்துக்களின் அலட்சியத்தையும், மாற்று மதத்தின் வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு எந்த நேரமும் உயிருக்கு அஞ்சியபடி விலங்கைப் போல வாழ்கிறான்.

நேற்று காஷ்மீர், நாளை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இது நிகழலாம். ஏனென்றால் ஆளுவோருக்கு இந்துக்களைப்பற்றிய அக்கறையில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓட்டு, அரசுக் கட்டில், பதவி, பணம். அங்கேயே முற்றுப் புள்ளி. தாய்மதமும் அது கூறும் அறமும் குப்பைத் தொட்டியில். அவர்களை நம்பிப் பயனில்லை.

பொய்களை நம்பி, பழியைத் தலைமேல் விரும்பிச் சுமந்துகொண்டு, அடிமைப்பட்டு நிற்கும் வரையில் இந்துக்களுக்கு ஏது சுதந்திரம்?

காலங்காலமாக உலகளாவிய வன்முறையாளர்களை அமைதி விரும்பிகளாகவும் கருணையாளர்களாகவும் நம்புகிற வரையில் இந்துக்களுக்கு ஏது சுதந்திரம்?

ஆனாலும், பிறந்த பொன்னாட்டை மதிக்கிறவர்கள் என்பதால் நாம் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடும் தெய்வங்கள் இங்கேயே தோன்றி உலகளாவி நிற்பவை என்பதால் இந்தப் புனித மண்ணின் அரசியல் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம். எல்லைக்கோட்டுக்கு அப்பால் எவரோ கூறும் ஆணைகளுக்குக் கட்டுப்படுகிறவர் நாமில்லை என்பதால் நாம் பாரத சுதந்திர தினத்தைத் தலைநிமிர்ந்து மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம்.

வந்தே ஆகவேண்டும் இன்னொரு சுதந்திரம்! அது இந்து வாழ்நெறி மற்ற மதங்களுக்கு இந்த மண்ணில் கொடுத்திருப்பதைப் போலவே இந்துக்கள் தாமும் இணையாகச் சுவாசிக்கும் சுதந்திரமாக இருக்கும்.

Tags: ,

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*