மகான்கள் வாழ்வில் – 6: திருவருட் பிரகாச வள்ளலார்

சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், சத்திய ஞான சபையையும் நிறுவியவர் வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள். ‘எல்லா உயிரையும் தம் உயிர் போல எண்ணுதல் வேண்டும். ஜீவஹிம்சை கூடாது. புலால் உண்ணக் கூடாது’ என்று பல ஜீவகாருண்யக் கருத்துக்களை முன்வைத்தவர். ‘உயிர்களின் பசிப்பிணி போக்குவதே இறைவனை அடையும் எளிய வழி’ என்று அன்பர்களுக்கு எடுத்துரைத்தவர்.

ஒருமுறை சத்திய ஞான சபைக்குக் கொடிமரம் வாங்குவதற்காக ஆறுமுக முதலியார் என்பவரை அனுப்பி வைத்தார் வள்ளலார். முதலியாரும் சென்னைக்கு வந்து பல இடங்களில் சென்று விசாரித்தார். சரியான மரம் கிடைக்கவில்லை. சில மரங்களோ அதிக விலை கொண்டனவாக இருந்தன. முதலியாரிடம் அவ்வளவு பணம் கையிருப்பு இல்லை. எனவே அடிகளாரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவர் வடலூர் திரும்பி விட்டார்.

வடலூரில் வள்ளலாரைச் சந்தித்து அனைத்து விவரங்களையும் கூறினார். வள்ளலாரோ ‘நீங்கள் சென்னைக்குச் செல்லுங்கள், நான் பின்னர் அங்கு வந்து சேர்கிறேன்’ என்று கூறி விட்டார். அதன்படியே முதலியார் மறுநாள் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினார்.

சென்னைக்கு வந்ததும் ஒரு பெரிய மரக்கடைக்குச் சென்றார் முதலியார். அங்கோ வள்ளலார் நின்று கொண்டிருந்தார். முதலியாரை நோக்கி வள்ளலார், ‘கொடிமரம் விலை பேசியாகி விட்டது. பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்று கூறிச் சென்றுவிட்டார். முதலியாருக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘தனக்குப் பின்னால் புறப்பட்ட வள்ளலார், எப்படி தனக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்?’ என்று ஆச்சர்யப்பட்டார். சிந்தனை செய்தவாறே கடைக்காரரிடம் மரத்தின் விலையை விசாரித்தார். அது, தான் முன்பு விசாரித்த விலையில் பாதியாக இருந்தது. மேலும் மரம் மிகுந்த தரமாகவும் இருந்தது. ‘எல்லாம் இறைவனின் அருள்’ எண்ணியவாறு பணத்தைக் கொடுத்து மரத்தை வாங்கிக் கொண்டு வடலூரை அடைந்தார் முதலியார். தனது அனுபவத்தை வியப்புடன் அன்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அவர்களோ, ‘என்ன ஆச்சர்யம்! வள்ளலார் காலைமுதல் எங்கும் வெளியில் செல்லவே இல்லையே, இங்குதானே இருக்கிறார், நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லையே’ என்றனர். முதலியாருக்கோ ஒன்றுமே புரியவில்லை. ‘வடலூரில் இருந்த அதே சமயத்தில், எவ்வாறு அடிகளார் சென்னைக்கும் வர முடிந்தது’ என்று புரியாமல் திகைத்தார். அடிகளாரின் சித்து விளையாடலை எண்ணி அவரைத் தொழுதார்.

இவ்வாறு, ஒரே சமயத்தில் பல்வேறிடங்களில் பல்வேறு நபர்களுக்குப் பலமுறை காட்சி அளித்திருக்கிறார் வள்ளலார்.

முந்தைய பகுதி…

Tags: , ,

 

4 மறுமொழிகள் மகான்கள் வாழ்வில் – 6: திருவருட் பிரகாச வள்ளலார்

 1. ராஜேந்திரன் on January 5, 2010 at 7:02 pm

  காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரித்தலே மெய்.

  வள்ளாரும் சாய்பாபாவும் யேசுநாதரும் இப்படி ஒவ்வொருவரும் செய்த அற்ப்புதங்களால் பசி பட்டினி பஞ்சம் உலகில் போய்விட்டதா? தாம் கடவுளை பார்த்ததாக கூரிய எவரும் மற்றவர்களுக்குக் காட்டவில்லை. ஒரு வேளை நாம் எல்லொரும் பிறப்பிலேயே பாவம் செய்தவர்களா? ஆம் என்றால் அது நமது தவறா அல்லது கடவுளின் படைப்பு குற்றமா? கடவுள்தான் தவறு செய்துவிட்டார் என்றால் அப்படிபட்ட கடவுள் நமக்குத் தேவையா! முடிவு உங்கள் சிந்தனையில்.

 2. John Kennedy G on August 16, 2010 at 1:26 pm

  திரு ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் கடவுளை பற்றி எதிர்மறை சிந்தனைகளை வளர்த்து வந்துள்ளீர்கள், இதனால் தான் நீங்கள் கடவுளை பற்றி இப்படி கருதுகிறீர்கள். கடவுள் என்பவர் ஒரு ஆள் கிடையாது. அவருக்கு உருவம் ஏதும் இல்லை. அவருக்கு பெயர் கிடையாது. பிரம்மா, அல்லா, பிதா என்பதெல்லாம் நாம் அவரை அழைப்பதற்காக நம்முடைய சௌகரியத்துக்காக நாமே வைத்து கொண்ட பெயர்கள். நன்றாக தியானம் செய்யுங்கள், கடவுளை அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள் அன்பரே.

 3. Balu on October 27, 2011 at 5:05 pm
 4. S.DILLIKUMAR on May 3, 2012 at 5:47 pm

  GOOD

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*