ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்!

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருள் பற்றி சுவாமி விவேகானந்தரின் அழகிய உரை:

…ஸ்ரீராமருக்குப் பிறகு, ஆண் பெண் குழந்தைகள் முதலிய அனைவராலும் பல்வேறு விதங்களில் மிகுந்த அன்புடன் போற்றப் படும் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றுகிறார்.

‘மற்ற அவதார புருஷர்கள் பகவானுடைய சில அம்சங்களின் தோற்றங்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் பகவானே அவதாரமாகி வந்தவர்’ என்று பாகவதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கையின் பல திறப்பட்ட அம்சங்களைப் பார்த்தால், இவ்விதம் சொல்லியது ஆச்சரியமல்ல. அவர் முற்றுந்துறந்த துறவியாக இருந்தார். அதே சமயத்தில் அதி ஆச்சரியமான கிருஹஸ்தராகவும் இருந்தார். அவரிடம் ரஜோ குணத்தால் உண்டாக்கப் பெற்ற சக்தி அளவற்று இருந்தது, அத்துடன் பரம சாத்வீகம் பொருந்திய தியாகத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தார். நீங்கள் கீதையை புரிந்துகொள்ளாத வரை கிருஷ்ணனை அறிந்துகொள்ள முடியாது. அவர் தம்முடைய உபதேசங்களின் உயிர் பெற்ற உருவமாக இருந்தார். எல்லா அவதார புருஷர்களும் தாங்கள் உபதேசிக்க வந்த தத்துவங்களுக்கு லட்சியமாக விருந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரும் தாம் உபதேசித்த கீதையின் லட்சியமாய் விளங்கினர். பற்றின்றி வாழ்தல் என்ற கீதையின் முக்கிய உபதேசத்திற்கேற்ப அவர் வாழ்ந்து வந்தார். அவர் தம் ராஜ்ஜியத்தையும் பொருட்படுத்தாது விட்டு விடுகிறார். அரசர்கள் அனைவரும் அவரை வந்து வணங்கினார்கள். ஆனால் அவர் அரசராக விருக்க விரும்பவில்லை. கள்ளங் கபடற்ற சுபாவத்துடன் கோபிகளுடன் விளையாடுகிறார்.

அவருடைய அதி ஆச்சரியமான அந்த பிருந்தாவன லீலைகளை அர்த்தம் செய்து கொள்ளுவது மிகக் கடினம். ஒருவன் மிக உயர்ந்த, தூய்மையான தன்மையைப் பெற்றாலொழிய, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது, மிகப் புனிதமான அன்பைப் பருகித் திளைத்தவர்கள்தான் அந்த அதி அற்புதமான அன்புக் கதையை அறிந்துகொள்ள முடியும். எதையும் வேண்டாத, சுவர்க்கத்தையும் விரும்பாத, உலகப்பொருள்கள் அனைத்தையும், அத்துடன் மறுமையையும் நினைக்காத, அந்த கோபிகளின் உன்னதமான பேரன்பின் தன்மையை யாரே உணர வல்லார்! என் சிநேகிதர்களே! ‘இக் கோபிகளுடைய அற்புதமான அன்பின் மூலம் ரூபக் கடவுள் அரூபக் கடவுள் என்ற பிரச்சனை தீருவதை காண்பீர்கள்.

பார்க்க: கண்ணன் என்னும் தமிழர் கடவுள்

மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் அரூபக் கடவுள் என்பதை நாம் உணர்வோம். எல்லாவற்றிலும் உயிர்க் குயிராய் நின்றிலங்கும் அரூபக் கடவுளே தத்துவ விசாரத்தின் முடிவென்பதையும் நாம் அறிவோம். எனினும், நாம் வழிபாடு செய்வதற்கும் பக்தி செய்வதற்கும், நமது மனது கிரகிக்கக் கூடிய ஒரு வடிவத்தை நாடுகிறது. எனவே ரூபக்கடவுள் தான் மனிதன் நினைவுக்கு எட்டக் கூடிய உயர்ந்த லட்சியமாக இருக்கிறது. எனினும் புத்தியும் தர்க்க ஞானமும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. பிரம்மசூத்திரங்களில் கேட்கப்பட்டிருக்கும் அப் பழைய கேள்வி மறுபடியும் கிளம்புகிறது. திரௌபதி யுதிஷ்டிரரிடம் கேட்கிறாள்: “சர்வ சக்தி வாய்ந்த ரூபக் கடவுள் ஒருவர் இருந்தால், நரகம் போன்ற இந்த உலகம் என் சிருஷ்டிக்கப் பட்டது? இது அவர் சிருஷ்டியாக விருப்பின், அவர் பாரபட்சமுடையவராகத் தானே இருக்க வேண்டும்?’ ஆதலால் ரூபக் கடவுள் என்ற கருத்து அறிவால் ஒப்புக்கொள்ளக் கூடியதாக வில்லை. அரூபக் கடவுளை கிரகிக்க முடிவதில்லை.

கடவுள் ரூபத்துடன் கூடியவரா அல்லது அரூபமானவரா என்ற இப்பிரச்சினையை கோபிகளுடைய ஒப்பற்ற அன்பின் மூலம்தான் தீர்க்க முடியும். அவர்கள் கிருஷ்ணனுடைய புகழைக் கேட்க விரும்பவில்லை. அவர் சகலத்தையும் சிருஷ்டி செய்தவர், சகல சக்தியும் வாய்ந்தவர், எதையும் சாதிக்க வல்லவர் என்றெல்லாம் அவர்கள் உணர விரும்பவில்லை. அவர்கள் அறிந்த ஒரே விஷயம் அவர் எல்லையற்ற கருணைக்கடல் என்பதுதான். தங்களுடன் பிருந்தாவனத்திலிருந்த இளம் கிருஷ்ணனைத்தான் அவர்கள் போற்றிவந்தார்கள். அனைவருக்கும் தலைவனாய் அரசர்க்கு அரசனாய் அமர்ந்திருந்த அவர், அவர்களுக்கு என்றும் கோபாலனாகவே இருந்தார். “உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், போர் வேண்டேன், கல்வியும் செல்வமும் யான் வேண்டேன், சுவர்க்கமும் சுகமும் எனக்கு வேண்டாம். ஏ பகவானே! உன்னைப் பக்தி செய்து தொழுவதற்காக அந்த அன்பை அனுபவிப்பதற்காக, கணக்கற்ற நற்பிறவிகளை எனக்கு அளிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

வேறு ஒரு நோக்கமும் இல்லாமல் அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தை குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதார புருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது. அத்துடன் பயத்திற்காகவும் பொருட்களை இச்சித்தும் கடவுளைத் தொழுத காலம் ஒழிந்தது, அதற்குப் பதிலாக, அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை என்ற அதி உன்னதமான கருத்து தோன்றிற்று.

அந்த அன்புதான் எத்தகையது! அவர்கள் அன்பின் தன்மையைத் தெரிந்து கொள்வது மிகக் கடினம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்த அதி அற்புதமான அன்பைத் தப்பர்த்தம் செய்யும் மூடர்கள் நம்மிடமும் இல்லாமலில்லை. இதைக் கேவலமாக நினைக்கும் இழிந்த அறிவீனர் நம் ரத்தத்தில் பிறந்தவர்களுள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். கோபிகளுடைய அன்பை வருணிக்கும் சரித்திராசிரியர் பிறவியிலேயே மிகப் புனிதமான சுகதேவர் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். மனிதன் மனதில் சுயநலம் இருக்கும்வரை, கடவுளை உண்மையாக நேசிப்பது அசாத்தியம். அத்தகையவர்களின் அன்பு வெறும் வியாபாரமே யொழிய வேறல்ல. ” பகவானே! நான் உனக்கு ஒன்று தருகிறேன், அதற்குபதிலாக நீ வேறொன்று தா ” என்று உரைக்கின்றது அவர்கள் அன்பு. ” நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்” என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்? ” ஓ உன்னுடைய முத்தம் ஒன்று கொடுத்தருள்வாய். உன்னால் முத்தமிடப்பட்டவர்களுக்கு உன்மேலுள்ள அன்பு சதா தழல்விட் டெரிகிறது; அவர்கள் துன்பமெல்லாம் தொலைந்து, உன்னைத்தவிர மற்ற நினைவுகள் அனைத்தையும் மறக்கிறார்கள்” என்று அவர்கள் தெய்வீக அன்பால் உன்மத்தரானார்கள்.

முதலில் பொன், பெயர், புகழ் முதலிய இவ்வற்ப ஆசைகளை மறந்துவிடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கோபிகளுடைய அன்பின் தன்மையை உணர முடியும். அப்புனிதமான அன்பை பூரண மனப் பரிசுத்தமடையாதவர்களால் அறிய முடியாது. காமமும், லோபமும் மற்ற ஆசைகளும் நிறைந்த அற்ப மனிதர்களுக்கு கோபிகளின் மாசற்ற அன்பில் குறைசொல்லத் தைரியமிருக்கிறதா? இவ்வன்பு தான் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் மகிமையாகும். கீதையின் உயர்ந்த தத்துவங்கள் கூடத் தன்னை முற்றிலும் மறந்த இவ்வன்புக்கு ஈடாகாது. ஆன்மிக லட்சியத்தைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் படிப்படியாக உயர்ந்துசெல்லும் மார்க்கம் கீதையில் உபதேசிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கு, அன்பு மதுவுண்டு, பேரின்பத்தில் தன்னையும் மறந்து திளைத்து, குரு,சிஷ்யன், வேதங்கள், சுவர்க்கம், கடவுள் என்ற அத்தனையும் மறந்து, தாம் அன்புசெய்யும் கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. அன்பின் முதிர்ச்சியால் சகலமும் கிருஷ்ணமயமாகி, ஒவ்வொரு முகமும் கிருஷ்ணன் முகமாகத் தென்படுகிறது. தாங்களும் கிருஷ்ண மயமாகி விடுகிறார்கள். இது தான் அந்த அற்புதமான ஸ்ரீகிருஷ்ணனுடைய அன்பின் தன்மையாகும்.

தொடர்ச்சி: அடுத்த பகுதி

மூலம்: சுவாமி விவேகானந்தரின் உரை “இந்தியப் பெரியோர்கள்”
மொழியாக்கம்: அமரர் திரு தி.சு.அவினாசிலிங்கம்,
நன்றி: இந்தியப் பிரசங்கங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை வெளியீடு.

One Reply to “ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1”

  1. எனக்கு நிறைய எழுதவேண்டும் என்ற என்ன்னம் உண்டு. ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாது . இன்று தான் கற்றுக்கொண்டேன். தங்கள் கட்டுரை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *