மதம் மாற்றாதீர்கள் !

Don’t target converts” என்ற தலைப்பில் அக்டோபர் 8, 2008 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் மைக்கேல் பிண்டோ எழுதிய கட்டுரையை விமர்சித்து டாக்டர் திருமதி. ஹில்டா ராஜா அவர்கள் எழுதிய Don’t Convert என்ற கட்டுரையின் முழு வடிவம். (இந்த பதில் கட்டுரை அந்த இதழில் பிரசுரிக்கப் படவில்லை).

மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்


மதம் மாற்றாதீர்கள்!

“மதம் மாற்றுபவர்களை குறிவைக்காதீர்கள்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் திரு மைக்கேல் பிண்டோ எழுதிய கட்டுரை பதில்களை விடப் பல கேள்விகளையே எழுப்புகிறது.

எவ்வளவுதான் தூண்டப்பட்டிருந்தாலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்பது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பது அத்தனை எளிதல்ல. எல்லோரும் காந்தீயவாதிகளுமல்ல, ஏசுவைப்போல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுபவர்களும் அல்ல. சில நாடுகளின் சட்டங்களே கூட “கண்ணுக்குக் கண்” என்ற வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

ஏதோ சில அடிப்படைவாத சர்ச்சுகளும், கிருத்துவர்களும் தீவிர மதமாற்ற கொள்கையை செயல்படுத்துகின்றனர் என்பதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அந்த கட்டுரையின் ஆசிரியர் சொல்லுகிறார். எவ்வளவுதான் வன்முறை தூண்டப்பட்டாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் சொல்லுகிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் படிக்கும்போதும், விவாதிக்கப்படும்போதும் சரியான கருத்துக்களாகவே தோன்றுகின்றன.

ஆனால், அப்படிப்பட்ட கொள்கைகளும் அறிவுப்பூர்வமான வாதங்களும் அவற்றைக் கூறும் மனிதர்களின் மனதில் நிலைகொண்டு இருந்தால் இவ்வுலகில் இத்தனை வன்முறை இருப்பது ஏன்? எதனால் சில நாடுகள் மற்ற நாடுகளின் உரிமைகளை மீறுகின்றன? எதனால் சட்டத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்களே சட்டத்தை மீறுகின்றனர்? காக்கி ஆடை அணிந்து, சட்டத்தைச் செயல்படுத்த வேண்டியவர்கள், எதனால் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறுகிறார்கள்?

இப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் நடுவில் மக்கள் சாதுவாக அடங்கி ஒடுங்கி, சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? அல்லது அந்த கட்டுரை ஆசிரியரின் வாதம் மதம் மாற்றும் வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்காகவென்றே முன்வைக்கப் படும் தர்க்கமா?

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு இறந்தபோது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தலைநகரில் காங்கிரஸ் கட்சிக் காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியும் அதை நியாயப்படுத்தியது.

ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டபோதும், தங்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டு, தங்களின் சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டபோதும், அந்த அநியாயத்தை வன்முறையை எதிர்த்து எந்தக் குரலும் எழவில்லையே?

மிகுந்த மரியாதைக்குரியவராக இருக்கின்ற ஒரு சன்னியாசியும் அவரது மூன்று சீடர்களும் அவரது ஆசிரமத்திலேயே பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட சமூக வலியின் இயற்கையான தொடர்ச்சியாக மத, சமூக, மற்றும் உணர்ச்சி கொந்தளிப்புகள் ஏற்பட்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அந்த ஆசிரியரின் கட்டுரை சொல்லும் கருத்துக்களுக்கு இருக்கிறதா?

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. ஒரு கன்னியாஸ்த்ரீ கற்பழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டால் அத்தனை நரகங்களும் அவிழ்த்து விடப்படுகின்றன – ஆனால், இங்கே தினசரி பல குழந்தைகள் (பாதிரிகளால், கன்யாஸ்த்ரீக்களால்) மானபங்கப்படுகின்றன, வன்புணரப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. அவற்றை எதிர்த்து

– எந்தக் குரலும் எழவில்லை

– எந்த சர்ச்சும் கண்டன ஊர்வலம் நடத்தவில்லை.

– ஆர்ச் பிஷப்புகளும், பிஷப்புகளும் முதல்மந்திரிகளை கண்டித்து வேதனையையும், வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.

– எந்த ஐரோப்பிய யூனியனும் வேறு ஒரு நாட்டில் வைத்து பிரதம மந்திரியிடம் அவர் நாட்டை குறித்து முறையிடவில்லை.

கிருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் தரகர்கள் இருப்பதால் அவர்களுடைய உயிர் புனிதமாகி விடுகிறது. அவர்களுடைய பாதுகாப்பை குறித்து வெளிநாட்டு சக்திகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பாகத்தான் பிரதம மந்திரியின் பொறுப்பு அமைந்துள்ளது. ஆனால் மற்றவர்களின் உயிர்களை ஒரு சிணுங்கல் கூட இல்லாமல் அழித்துக்கொள்ளலாம். இல்லையா?

இந்த திரிக்கப்பட்ட பார்வைக்கு முழுமுதற்காரணம் மதம் மட்டும் தானே?

அந்த கன்னியாஸ்த்ரீயின் கற்பழிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்காக இப்படிக் கேட்கவில்லை. நாம் வாழும் உலகம் கொடூரமானது என்று சுட்டிக்காட்டவும், மதத்தின் பெயரால் நமது பார்வையில் காணப்படும் பாகுபாட்டை வெளிப்படுத்தவும் தான் கேட்கிறேன்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக இருப்பதனால் மட்டும் அந்தக் குற்றம் கொடூரமான குற்றமாகிவிடுமா என்ன?

உலகம் எங்கும் வன்முறையும், இனப்படுகொலைகளும், சித்திரவதைகளும், அடக்குமுறைகளும் மதத்தின் பெயரால் நடத்தப்படுவதையும், மதம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் மனித உரிமைகளை அழிப்பதையும் தாலிபானிசம் முழுமையாக நியாயப்படுத்துவதை இந்த உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது.

ஆனால், ‘தீவிரவாதிகள் எந்த சமூகத்தையும் சார்ந்தவர்களில்லை, அவர்களுக்கு எந்த மதமும் தெரியாது’ என்று முழங்குகிறார்கள் நமது அரசியல்வாதிகள். அது சிறுபான்மை மததைச் சார்ந்த தீவிரவாதிகளுக்கு மட்டுமே பொருந்துமா என்ன? மதரஸாக்கள் உட்பட மதவாதக் குழுக்கள் நெருங்கி வாழும் எல்லா இடங்களிலும் (Ghettos) வன்முறை பாராட்டப் பட்டு, சிலாகிக்கப் படுகிறது என்பதைக் கண்டிப்பாக மக்களுக்குச் சொல்லவேண்டும். அப்பாவிகளின் ரத்தம் சிந்தப்படுவதைத் தூண்டவும், அத்தீவிரவாத நடவடிக்கைகளைப் புனிதப்படுத்தவும் கூடிய வலிமை உடையதாக மதம் இருக்கிறது என்பதையும் மக்களுக்குக் கட்டாயம் சொல்லவேண்டும்.

எத்தனைதான் தூண்டப்பட்டு இருந்தாலும் வன்முறையை நியாயப்படுத்தமுடியாது என்று மைக்கேல் பிண்டோ கூறுவது ஒரு கற்பனை ராஜ்யத்தில் தான் நடக்கும். இவ்வாறு தன் மீது உமிழப்படும் வெறுப்பை எதிர்க்காமல் (இந்து சமூகம்) பொறுமையைக் கடைப் பிடிப்பதென்பது கற்பனை செய்து பார்க்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், இதே எதிர்ப்பை கிறிஸ்தவர்கள் காட்டும்போது இந்த கொள்கை காணாமல் போய்விடுகிறது. மாறாக, இந்துக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட, தங்களது கலாச்சாரத்தைக் பாதுகாக்க முற்படும்போது இந்திய அரசியல் சட்டத்தின் உறுதிமொழிகள் முழங்கப்படுகின்றன. ஆர்ட்டிகிள் 30, சிறுபான்மையினரின் நிறுவனங்களை மேற்பார்வையிடவும், நிர்வகிக்கவும் அவற்றின் தன்மையை கட்டிக்காக்கவும் மட்டும்தானே உருவாக்கப்பட்டது?

அரசியல்வாதிகள் பஜ்ரங் தளத்தையும், விஸ்வ இந்து பரிஷத்தையும் சிமியுடன் ஒப்பிடுவது அதிர்ச்சியைத் தருகிறது. சிமி ஒரு தீவிரவாத அமைப்பு; பற்பல பெயர்களில் அதற்கு ரகசியக் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய நபர்கள் நாட்டின் பல குண்டு வெடுப்புகளில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தானிலும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரத்திலும் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள். இவ்வாறு தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொல்வதன் நோக்கம் தான் என்ன? நாட்டை பலவீனப்படுத்துவது, பதட்டத்தையும் பாதுகாப்பின்மையும் உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதுமே இதன் லட்சியம். நமது பாராளுமன்றம் தாக்கப்பட்டது எதனால்? அதனை நிகழ்த்தியவர்கள் யார்?

இத்தகைய கடும் குற்றங்களை பஜ்ரங் தளத்துக்கோ விஸ்வ இந்துபரிஷத்துக்கோ எதிராகச் சொல்வதற்கு மிகச் சிறிதளவு கூட முகாந்திரம் இல்லை. அவர்கள் அப்பழுக்கற்ற தேசியவாதிகள் என்பதில் ஐயமில்லை ; ஒருவேளை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கியிருந்தால், அந்த தாக்குதலுக்குத் தனிப்பட்ட காரணங்கள் உள்ளன – அதன் மூல காரணம் பலவந்தமான மதமாற்றலும், இந்துகடவுள்கள் பழிக்கப்படுவதும், இழிவு படுத்தப்படுவதும் தான்.

இருப்பினும், இவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களும் குற்றங்கள் புரிபவர்களும் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன்பு நிறுத்தப்படவேண்டும், தண்டிக்கப் படவேண்டும். அதை இங்கு யாரும் மறுக்கவில்லை. ஆனால் இந்த அமைப்புகளையே தடை செய்யவேண்டும் என்று கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இது ஓட்டுக்காக நடத்தப்படும் வெறும் அரசியல் தான்.

இது வரை ஒரு தீவிரவாதி கூட சட்டப்படி தண்டனை பெற்றதில்லை. இவ்வுலகின் நிதர்சனமான போர்களும், நிழலுலக தாதாக்கள் நிகழ்த்தும் கொலைகளும், போலீசின் பாதுகாப்பில் நிகழும் மரணங்களும், அரசியல் தலைவர்கள் தங்கள் எதிரிகள் மேல் ஏவிவிடும் பயங்கரங்களும் – எல்லாம் இன்றைய உலகின் குரூரமான உண்மைகள்.

பழங்காலத்தில் இருந்தே மத மாற்றம் வன்முறையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்திய சரித்திரம் இத்தகைய நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. அடக்குமுறையாலும் , பலவந்தத்தாலும், சித்திரவதையாலும், படுகொலையாலும் இந்தியர்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டது வெறும் புனைகதைகள் அல்ல. “The inquisition” எனக்குறிப்பிடப்படும் புனித விசாரணையும் அதன் நிகழ்வுகளும் உலக வரலாறு. இவை எல்லாம் மத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டவை தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறை மேலும் வன்முறையையே வளர்க்கும் – இது இயற்கையின் நியதி.

“Don’t target converts” என்று சொல்லும் கட்டுரையாசிரியருக்கு ஒருவர் தனது மதத்தை பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் அனுமதியளிக்கும் நாட்டில், மதம் மாற்றுபவர்கள் குறிவைக்கப்படுவது வினோதமாகத் தோன்றுகிறது. ஆனால், பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் மட்டும்தான் இந்த நாட்டின் அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது; மோசடியாலும், பலவந்தத்தாலும் மக்களை மதமாற்றம் செய்ய அது அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.

இலவசங்கள் மூலம் ஆசை காட்டி, ஒருவரின் நம்பிக்கையை, மதத்தை மாற்றுவதை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விளம்பரப்படுத்தப்படும் வியாபாரப் பொருட்களுடன் அந்த கட்டுரையாசிரியர் ஒப்பிட்டு நியாயப் படுத்துவதைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். வியாபாரப்பொருட்கள் இவ்வாறான கவர்ச்சிகரமான தூண்டுகோல்களால் விற்கப்படும்போது இதே வழிமுறைகள் மக்களின் நம்பிக்கையையும், மதத்தையும் மாற்றப் பயன்படுத்தப்பட்டால் என்ன என்று வாதிடுகிறார் அவர்.

அப்படியானால், மக்களின்ஆழ்ந்த நம்பிக்கைகள் என்பவை சந்தையில் விற்கப்படும் பண்டங்களுக்கு சமமாக கீழிறங்கிவிட்டவை தானோ? இவ்வாறு ஒப்பிடுவதால் இத்தகைய தூண்டுகோல்கள் மூலம் தான் மதமாற்றம் செய்யப்படுகின்றன என்று அவரே தெளிவாக ஒப்புக்கொள்கிறார், இல்லையா?

வெளிநாட்டு சர்ச்சுகள் மூலமாக வெளிநாட்டுப் பணம் இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது; இந்தச் சர்ச்சுகளின் கடவுள்களுக்கு ஆள்சேர்ப்பு என்பது மேலும் மேலும் அவசியமாகிறது; எவ்வளவுக்கெவ்வளவு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தச் சர்ச்சுகளின் கடவுள்களுக்கு பலமும் கூடுகிறது; இதனால் இதன் தரகர்கள் முழுமுனைப்புடன் ஏழைகளை குறிவைத்து இயங்குகிறார்கள். மதம் மாறுவதற்காக இவர்களுக்கு இந்த உலகில் ஒருவேளை உணவோ, ஒரு துண்டு ரொட்டியோ, தங்க இடமோ கிடைக்கும் என்று வாக்களிக்கப்படுகிறது. அல்லது மறு உலகத்து சுகங்கள் இவர்களை சூடேற்றுகின்றன.

யாருக்கு எது அத்தியாவசியமாக உள்ளதோ அதைத் தூண்டுகோலாக வைத்தாலும், அவர்களின் மதமாற்றத்தின் ஆரம்பம், அவர்கள் வணங்கிவரும் கடவுள்களை இகழ்வது, ஏசுவது, இழிவுபடுத்துவது, பின் அவர்களின் வழிபாட்டுச்சின்னங்களை அழிப்பது இவற்றில் தான் தொடங்குகிறது.

இதன் அடுத்தக் கட்டம், இத்தகைய அப்பாவிகளின் மனத்தில் அவர்களின் கடவுள்கள் பொய்யானவையோ என்ற சந்தேகத்தை விதைத்து, உண்மையான கடவுளிடம் அவர்களை அழைத்துச் செல்ல கிறித்துவத்தால் மட்டுமே முடியுமென்ற பொய்யான நம்பிக்கையை விதைப்பது.

இவ்வாறு நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை அழித்து இதனால் பலவீனமடைந்தவர்களிடம் நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப “New Life”க்குள் சென்று “Born Again”ஆக மாற தயாராக்கப்படுகிறார்கள். இந்த பொய்யான பிரசாரம் மற்றொரு மதத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய கொடுமையாகும்.

இவ்விதமாகத் தூண்டிவிடுவதை நாம் சட்டை செய்யாமலிருப்பது எளிதல்ல. ஏனென்றால் அவதூறையும் இகழ்வையும் எதிர்ப்பது மனித இயல்பு.

ஏசுவின் அன்னையான மேரியை ஒரு வேசியென்றும், ஏசுவின் பிறப்பு கன்னிப் பிறப்பல்ல என்றும் ஒருவர் பிரசாரக்காகிதம் அச்சடித்து வினியோகித்தால் அதற்கு கட்டுரையாசிரியர் என்ன கூறுவார்? திருமணத்துக்குப் பிறகு ஜோசப், மேரி கர்ப்பமாக இருப்பதையறிந்து அவரை விலக்கி வைக்க நினைத்தார். ஒரு தேவன் குறுக்கிட்டு அவரை அத்தகைய விபரீதத்தைச் செய்யாமல் தடுத்தார். இதை சொல்லுவது பைபிள். இதை பிரச்சாரத்திற்கு சிலர் பயன்படுத்தினால், கத்தோலிக்க மற்றும் இன்ன பிற நன்கொடை சர்ச்சுகள் மௌனமாகப் பார்த்திருக்குமா என்ன?

ஜெயலலிதாவை கன்னிமேரியாக உருவகப்படுத்தி சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டபோது அதை எதிர்த்து மிகப்பெரிய கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் மாதுரி தீக்ஷித் துர்க்கையாக உருவகப்படுத்தப்பட்டாலோ, துர்க்கையின் படம் நிர்வாணச் சித்திரமாகத் தீட்டப்பட்டாலோ, அது அந்தக் கலைஞனின் கருத்துரிமைச் சுதந்திரமாகிறது. இதில் வேற்றுமை என்னவென்றால் அதே கலைஞர் தனது கருத்துரிமைச் சுதந்திரத்தின் மேன்மையை முன்னிறுத்தி அல்லாவை மிக உயர்ந்த நிலையில் கூட சித்திரமாகத் தீட்ட துணியமாட்டார். நமது சாசனத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்தை, அதன் இயக்கத்தை இப்படித்தான் “ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பையும்” வைத்துப் பார்க்கிறோம் நாம்.

“New Life” பெற்று, “Born Again” ஆக மாற, ஒருவர் தனது கலாசாரத்தையும் சமுதாயப்பழக்க வழக்கங்களையும் விட்டொழித்து, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதாலும், மேற்கத்திய வழிபாட்டு முறைகளைக் கடைபிடிப்பதாலும் தான் முடியும். மதம் மாறியவர் “இந்தியத் தன்மை” இழந்து அன்னியனாக மாற்றப்படுகிறார்; தனது நாட்டில் உள்ள மற்றவர்களிடம் இருந்து அன்னியப்படுத்தப்படும் செயல்திட்டத்திற்கு பலியாகிறார். இவை மிக ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்துபவை. தேசத்தின் எதிர்காலத்தை வெகுவாக பாதிப்பவை.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை திடீரென்று 27 சதவீதமாக வெறும் பத்து வருடத்தில் உயர்ந்தபோது இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து சென்றது எதனால்?

இதேபோல நமது நாட்டிலேகூட நடந்திருக்கிறதே. இஸ்லாமியரும், இந்துக்களும் சமாதானமாக ஒன்றாக ஒரு நாடாக வாழ முடியாது என்ற இஸ்லாமியத் தலைவர்களின் கொள்கையின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் பிரிவினை நடந்தது. மத மாற்றமுள்ள இடத்தில் சமாதானம் இருக்காது என்பதற்கான சான்றுகள் இந்திய சரித்திரத்திலும், உலக சரித்திரத்திலும் ஏராளமாக உள்ளன.

இதற்குக் காரணம்: மதமாற்றம் வன்முறையை உள்ளடக்கியது; உடல்ரீதியான, மனரீதியான, சமுதாயரீதியான, கலாச்சார ரீதியான வன்முறையை உயிராகக் கொண்டு இயங்கும் கொடூரத்தின் பெயர்தான் மதமாற்றம். அது ஒருவரை சொந்த நாட்டிற்கே துரோகம் செய்யவைக்கும்.

சில சமயங்களில் சர்ச்சின் சட்டதிட்டங்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உள்ளன. கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட தனிமனிதச் சட்டங்கள் உள்ளன. தேசத்திற்கான ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்போது கிறிஸ்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்பார்களா அல்லது தங்களது சர்ச்சின் தலைவர்கள் கூறும் கட்டளைகளை ஏற்பார்களா?

ஒருவருடைய விசுவாசம் இரு கூறுகளாக பிளவு பட்டு நிற்கும்போது அவர் சித்தப்பிரமை கொள்வதுதான் நிகழும்.

காஷ்மீரின் ஒரு தலைவர் நமது பாராளுமன்றத்தில் “நான் முதலில் இஸ்லாமியர், பின்னரே இந்தியர்’ என்று கொட்டி முழக்கி அறிவித்தார். எந்த ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, ”தான் முதலில் ஒரு இந்தியர்,அதன் பின்னரே இஸ்லாமியர்/கிறிஸ்தவர்” என்று அறிவிக்கமாட்டார்.

ஒருவர் விரும்பினால் தனது மதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் அவர் பிறந்த நாட்டை தன் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், இந்திய அரசியல்வாதிகளும் இந்தியக்குடிமக்களை இந்தியர்களாகப் பார்க்காமல், சமூக/சாதி/மதப் பிரிவுகளாகவே கண்டு இவ்விதப் பிரிவினை வாத சக்திகளுக்கு உடந்தையாகவே இருந்து வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இவ்வாறான மதமாற்ற வியாபாரம், மதமாற்றப்படுபவர்கள் நேரடியாகக்கூட இல்லாமல், அவர்களின் பிரதிநிதிகளை வைத்து மறைமுகமாகக் கூட நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, பல பெயர்கள் கொண்ட ஒரு காகிதப்பட்டியல் ஒரு கிறித்துவ ஆயருக்கு முன் வைக்கப்பட்டது. அந்த பட்டியலில் இருந்த யாரும் அங்கே இல்லை. ஆனால், அந்த பட்டியலில் இருந்தவர்களுக்கு அந்த ஆயர் ஞானஸ்நானம் செய்து வைத்தார். இதை மதமாற்றமாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள்தான். எனது புரிதலின்படி கன்வர்ஷன் என்பது வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தொடர்ந்து தேடும் ஒரு வாழ்க்கைமுறை. மத மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம், ஒரு தெருக்கூத்தல்ல, எண்ணிக்கையைக் கூட்ட நிகழ்த்தப்படும் ஒரு செயலுமல்ல. மதமாற்றம் என்பது கண்டிப்பாக ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மனிதர்களை களவாடும் வேலை அல்லவே அல்ல.

பல அடிப்படைவாத சர்ச்சுகள் கிறித்துவத்தின் மற்ற பிரிவுகளிலிருந்து தங்களது பிரிவுக்கு ஆள் பிடிப்பதும் உண்டு. அதாவது, ஒரு கிறிஸ்தவப்பிரிவின் ஏசு மற்றொரு கிறிஸ்தவப்பிரிவின் ஏசுவிலிருந்து மாறுபட்டவர். இது கிறிஸ்தவச் சமூகத்துக்குள்ளேயே பிரிவினையையும் இணக்கமின்மையையும் வளர்க்கிறது.

சுதந்திரம் என்பது எப்போதுமே கட்டுப்பாட்டுடன் வருவதுதான். சுதந்திரம் என்பது எப்போது அடுத்தவருடைய அல்லது அடுத்த சமூகத்தினுடைய சுதந்திரத்தில் குறுக்கிடுகிறதோ அப்போது அது கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகிறது. கட்டுப்பாடு இல்லாதபோது சுதந்திரம், சுதந்திரம் இழக்கிறது. உரிமை என்பது ஒருவருக்கு அதிகமாகவும் மற்றவருக்கு குறைவாகவும் இருக்கமுடியாது. எப்போது மதமாற்றங்கள் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகிறதோ அப்போதே அவை தடை செய்யப்பட வேண்டியதாகிறது. ஊரடங்கு உத்தரவைப்போல், வேலைநிறுத்தத்தைத் தடை செய்வது போல்.

எதற்காக மதம் மாற்றவேண்டும் என்பதுதான் இங்கு மிக முக்கியமான கேள்வி. வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னோடியா அது? அன்னிய நாட்டு நிறுவனங்கள் எதற்காக இவ்வித மதமாற்றத்திற்குப் பண உதவி புரிகின்றன? வளர்ச்சிப் பணிகள், ஏழைகளை முன்னேற்றுவது என்கிற போர்வையில் வெறும் மதமாற்றம் மட்டும் தான் நடைபெறுகிறது.

வளர்ச்சிப் பணிகள், ஏழைகளை முன்னேற்றுவது – இவைதான் சர்ச்சுகளின் நோக்கம் என்றால் அதை அவர்கள் முஸ்லீம்களிடம் செய்ய வேண்டியது அதிக முக்கியத்துவம் பெற்றதாகிறது. ஏனென்றால், சாச்சார் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் தான் பொருளாதார நிலையிலும், படிப்பறிவிலும் மிகவும் பின் தங்கி உள்ளனர். ஆனால் ஒரு முஸ்லீம் கூட கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்படாமல் இருப்பது வினோதமாக இல்லையா?

மைக்கேல் பிண்டோவின் கூற்றுப்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1971ல் 2.6 சதவீதத்தில் இருந்து 2001ல் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் அர்த்தம் காளான்களைப் போல பரவும் அடிப்படைவாதச் சர்ச்சுக்களால் லட்சக்கணக்கில் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதல்ல. இன்று நமது ஜனத்தொகை நூறு கோடி என்றால் 2.3 சதவீதமுள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? (1971ல் இருந்து 2001க்குள் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கெடுத்துக்கொள்ளுங்கள். இந்த அதீத மக்கள்தொகைப் பெருக்கத்தில், 2.3 சதவீதம் கிருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் எண்ணிக்கை எந்த அளவு அதிகரித்துள்ளது என்று புரிந்துகொள்ளுங்கள்.)

இந்த எண்ணிக்கைகளை ஒருவர் நினைத்துப் பார்க்கும்போது, வேறு சில காரணிகளும் குறிப்பிடப்பட வேண்டும்; கிறிஸ்தவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பதும், கன்யாஸ்த்ரீகளும், பாதிரியார்களும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதும், இடஒதுக்கீட்டிற்காகவும் சாதீய வசதிகளுக்காகவும் மதம் மாறிய பலரும் அரசாங்க ஏடுகளில் மதமாற்றத்தை குறிப்பிடாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கவை.

மதமாற்றம் என்பது அடிப்படைவாதச் சர்ச்சுக்களால் ஒரு வர்த்தக வியாபாரமாகவே ஆக்கப்பட்டு விட்டது. மதமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இவர்களுக்குக் கிடைக்கும் அன்னிய நாட்டு பண உதவியின் அளவு அமைகிறது.

இதை நாம் சட்டை செய்யாமல் விட்டு விட முடியாது. சர்ச்சுகளுக்கு வரும் அன்னிய நாட்டு பண வரவை நாம் சட்டப் படி தடை செய்து விட்டு, அதற்குப் பிறகு எவ்வளவு மத மாற்றங்கள் நடை பெறுகின்றன என்று தான் பார்க்கலாமே! எல்லாச் சட்டங்களும், ஓட்டைகளுடனும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தோன்றும் சிக்கல்களுடனும் சேர்ந்தே தான் உருவாகின்றன. அதற்காக அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே தடை செய்ய வேண்டுமா என்ன?

இந்த தேசத்தில் அனைத்து மக்களிடையிலும் அமைதியும் சமாதானமும் நிரந்தரமாக நிலவ வேண்டும் என்றால் மதமாற்றத்தை தடை செய்யத்தான் வேண்டும். மதமாற்றம் இருக்கும்வரை அமைதி இருக்காது. அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

~ டாக்டர் திருமதி ஹில்டா ராஜா

டாக்டர் திருமதி ஹில்டா ராஜா சென்னை ராணி மேரி கல்லூரியில் சமூகவியல் பேரரசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்திய கத்தோலிக்க பிஷப் சம்மேளனத்தின் தேசிய பரிந்துரைக் குழுவின் (National Advisory committee of the CBCI) முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

6 Replies to “மதம் மாற்றாதீர்கள் !”

  1. /////மதமாற்றம் என்பது அடிப்படைவாதச் சர்ச்சுக்களால் ஒரு வர்த்தக வியாபாரமாகவே ஆக்கப்பட்டு விட்டது. மதமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இவர்களுக்குக் கிடைக்கும் அன்னிய நாட்டு பண உதவியின் அளவு அமைகிறது.

    இதை நாம் சட்டை செய்யாமல் விட்டு விட முடியாது. சர்ச்சுகளுக்கு வரும் அன்னிய நாட்டு பண வரவை நாம் சட்டப் படி தடை செய்து விட்டு, அதற்குப் பிறகு எவ்வளவு மத மாற்றங்கள் நடை பெறுகின்றன என்று தான் பார்க்கலாமே! எல்லாச் சட்டங்களும், ஓட்டைகளுடனும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தோன்றும் சிக்கல்களுடனும் சேர்ந்தே தான் உருவாகின்றன. அதற்காக அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே தடை செய்ய வேண்டுமா என்ன?

    இந்த தேசத்தில் அனைத்து மக்களிடையிலும் அமைதியும் சமாதானமும் நிரந்தரமாக நிலவ வேண்டும் என்றால் மதமாற்றத்தை தடை செய்யத்தான் வேண்டும். மதமாற்றம் இருக்கும்வரை அமைதி இருக்காது. அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

    ~ டாக்டர் திருமதி ஹில்டா ராஜா/////

    true words… thankyou Mam.

  2. A very good article. Thanks Madam.

    But why is that our country is so blind to the facts? If a Newspaper publishes a cartoon of Mohammad, the entire world protests and the publisher was forced to apologize. But when MF Hussain draws Vedic goddesses naked, then it is art. Well quoted by the author, but why should we hesitate to name such hypocrites.

    We are still slaves to the western thoughts. No one is united as a Hindu/Indian. Everything leads to separatism (it was funny to read about Tamil Eelam problem linked to Aryan invasion pseudo-theory and brahmin bashing in some forums 🙂 ) Unless we are united as Indians, we can’t do away with such issues.

    Satish

  3. Very good article.
    Like Dr.Abdul Kalam, who has become hero for Hindu Nationalists and not to Muslims, in the same way you will become leader for Hindus. Your fellow christians will hate you.
    I appreciateyour boldness to tell the truth. This country will respect you.

  4. A very good article in a right time and also from a right person. Even if some other person from Hinduism express this, all the Dravidian parties will criticise this, since it is against a minority religion. Mrs. Hilda Raja is in a very rationalistic way. She is following the real teachings of Christianity. A small request to Mrs. Hilda Raja. Why can’t she take this message to the christian mission, since she has already been in the advisory committee of the catholics association. If already this initiative has been taken. A great applause from the hindu society.

  5. மதம் என்ற மதம் பிடித்து அலையும் மாய்மால மத வியாபாரிகளுக்கு ஸ்ரீமதி ஹில்டா ராஜாவின் இக்கட்டுரை ஒரு சரியான சௌக்கடி மட்டுமல்ல, செருப்படியும் கூட. ஆனால் மான அவமானமற்ற ஈனப் பிறவிகளான மத வியாபாரிகளுக்கு இந்த தொழிலே, வயிற்றுப் பிழைப்பு! வேறு என்ன செய்வார்கள் பாவம்.

    தமிழ் மொழியாக்கம் செய்த இக்கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

    அன்புடன்
    ஆரோக்யசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *