மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்

வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன். பாரதத்தில் பல்வேறுபட்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. கேள்விகளையும் விடைகளையும் வரிசையாக இடுவதாக உத்தேசித்திருக்கிறேன். ஐயங்களை எழுப்பிய நண்பர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய ஐயங்களையும், என் விளக்கங்களையும் இந்தப் பக்கங்களில் பதிகிறேன். தன் பெயரை இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நண்பர்களுடைய பெயர்கள் உடுக்குறிகளால் (*******) காட்டப்படும். மற்றவர்களுடைய பெயர்கள் இடம்பெறுகின்றன.

வாசகர்கள் பங்குபெற விரும்பினால், வாசகர்களுக்கு ஐயங்கள் இருந்தால் அவையும் வரவேற்கப்படுகின்றன. கேள்விகளை editor@tamilhindu.com முகவரிக்கு அனுப்பலாம். தெரிந்தெடுத்த கேள்விகள்/ஐயங்களை விளக்கவும் விவாதிக்கவும் செய்யலாம். தளத்தின் நோக்கத்துக்கும் கொள்கைக்கும் பொருத்தமான கேள்விகளைத் தேரும் உரிமை ஆசிரியர் குழுவைச் சார்ந்தது.

முதல் இடுகை, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பரின் கேள்வியோடு தொடங்குகிறது. இந்தப் பக்கங்களில் நான் மேற்கொள்ளப் போகும் நிலைப்பாட்டுக்கு விளக்கமாக இதைச் சேர்த்துக் கொள்கிறேன்.

****** எழுதியது:

இங்கே விவாதம் திசை திரும்புகிறது என்று நினைத்தாலும் நீங்கள் துரோணர் பற்றி எழுதியதால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் ஆசிரியர். ஆசிரியர் பணி என்பது பிராம்மண வர்ணத்தைச் சேர்ந்தது. ஆனால் கர்ணன் தொடையில் வண்டு துளைக்கும்போது அவன் க்ஷத்திரியன் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லவா அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

அன்புள்ள ******,

இந்த விவாதங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சிறிய தன்னிலை விளக்கம் கொடுத்துவிடுகிறேன்:

1) நான் உள்ளதை உள்ளபடி மட்டும்தான் எழுதுவேன் ஆகவே, எழுதியது எல்லாமும் என் கருத்து என்று முத்திரையிட்டுவிட முடியாது. அங்கே என்ன இருக்கிறதோ அதைச் சொல்வேன். அத்தனையையும் நான் ஒப்புக்கொண்டேனா, இல்லையா என்ற முடிபுகளுக்கு இவை இடம் தாரா. ஒருவேளை அவ்வாறு யாரும் முடிவுகளுக்கு வந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. எப்படி இருந்தாலும் அவை என்னைக் கட்டுப்படுத்தான் போவதில்லையே.

2) சில உண்மைகள் சிலருக்கு வருத்தத்தைத் தரலாம் ‘நான் அங்கே அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன்’ போன்ற பலவிதமான எதிர்வாதங்கள் எழலாம் அவ்வாறு எழுந்தால், புதியனவாக ஏதும் கருத்துகள், உண்மைகள், தெளிவுகள் ஏற்படுமாயின் அவற்றைக் கற்றுக்கொள்ள நானும் முயல்வேன் ஆனால், தேவையற்ற விவாதம் என்று எனக்குத் தோன்றுவனவற்றுக்கு நான் விடை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் அவ்வாறு நான் விடுத்து, அவசியமாக நான் விடையளித்தே ஆகவேண்டும் என்று நண்பர்கள் கருதுபவனவற்றச் சுட்டிக் காட்டினால் என்னால் இயன்றவரை விடையளிக்க முயல்வேன்.

3) இப்படி, பலவிதமான பதிப்புகள் இருந்து, பலர் பலவிதமாக அபிப்பிராயப்பட இடங்கொடுக்கும்படியான ஆய்வுகளும், முடிபுகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால், நான் பேசுவது மூலநூல்களான வியாச பாரதம் (நெருக்கமான மொழிபெயர்ப்பாகக் கருதப்படும் கிஸாரி மோகன் கங்கூலியின் பதிப்பு, மற்றும் சமஸ்கிருதப் பதிப்பு), வில்லி பாரதம் போன்றவற்றின் அடிப்படையில் பேசப்படுபவை, என்னிடம் உள்ள பதிப்புகள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, எனவே, நான் இங்கே சொல்வன எல்லாமும் என்னிடமுள்ள பதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே என்பதை முதலில் தெளிவாக்கி விடுகிறேன். இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு There are as many Ramayans as there are scripts என்பது இராமாயண ஆய்வாளரான வின்டர்நீட்ஸ் சொல்வது. எத்தனை ஓலைச் சுவடிகள் உள்ளனவோ அத்தனை இராமாயணங்கள் உள்ளன என்பதும் உண்மையே ஒவ்வொரு பிரதியிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் தெரியும். அவற்றையெல்லாம் ஒரு நிலைப்படுத்தி ஒரு standard recension கொண்டுவந்துவிட்டனர் என்னிடம் உள்ள recensions அப்படிப்பட்டவையே ஆகவே நான் இந்தப் பதிப்புகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற நம்புகிறேன்.

4) வர்ணம் முதலியனவற்றில் எனக்கு ஈடுபாடு கிடையாது நான் அந்த நோக்கில் இவற்றைப் பயின்றதும் இல்லை இருந்தபோதிலும், ‘எதிரியே வந்து கேட்டாலும் அவன் வெல்வதற்கு முகூர்த்தம் குறித்துக் கொடுப்பது என் கடமை’ என்று சொன்ன சகாதேவனைப் போல், என் கருத்துக்கு இடம் கொடாமல் உள்ள உண்மைகளை உள்ளவாற எடுத்து வைக்கிறேன் இந்த உவமை முற்றிலும் பொருத்தமான ஒன்றன்று இங்கே என்னைக் கேட்பவர்கள் என் எதிரிகளுமல்லர்; அவர்கள் வெல்வதற்கு நான் வழி சொல்லவும் இல்லை ஆயினும் நடுவுநிலைமை என்ற மனப்பாங்குக்கு உதாரணமாக மட்டுமே இதைச் சொன்னேன். மேலே சொல்லியிருப்பவை என் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் என்ற நம்புகிறேன் வாதப் பிரதிவாதங்களைக் காட்டிலும் ஐய வினாக்களுக்க விடையளிப்பது மட்டுமே என் பணி என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன் Treat me as a resource person and not as a rival to compete with ‘பிறரைக் காட்டிலும் நான் மேம்பட்டவன்’ என்ற நிறுவவேண்டிய அவசியம் எனக்கில்லை அவ்வாறு நான் கருதவுமில்லை. ****** அவர்கள் மேற்படிப் பத்தியில் சொல்லியிருக்கும் விவரங்களில் அடிப்படை உண்மை இருந்தாலும், அவற்றின் கான்டெக்ஸ்டிலிருந்து சற்றே விலகுகின்றன. கான்டெக்ஸ்ட் இல்லாமல் எதையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது என்பத என்னுடைய உறுதியான நம்பிக்கை இவற்றையும் விளக்க அடுத்த மடலிலிருந்த முற்படுகிறேன்.

(இங்கிருந்து விவாதங்கள் தொடர்கின்றன)

முதலில் இந்த மடல் சொல்கின்ற சில செய்திகளை எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பத்தியாகத் தனித்தனியே பேசுகிறேன்.

வில்வித்தை அல்லது தனுர் வேதம் என்றழைக்கப்படும் துறையிலும் அந்தணர்களுக்குப் பயிற்சி இருந்திருக்கிறது (தேவையான இடங்களில், ‘அந்தணர்களில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு’ என்று பொருள் கொள்ளவும்.) க்ஷத்திரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கருத இடமுண்டு அவ்வாறே ‘தெய்வத்தின் குரல்’ தொகுதிகளிலும் பெரியவர் சொல்கிறார்.

துரோணருடைய தந்தையான பரத்வாஜரும், கிருபருடைய தந்தையான சரத்வானும் இந்தப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினவர்கள் என்பதற்கான குறிப்புகள் மஹாபாரதத்தில் உள்ளன. துரோணரும் கிருபரும் வில்வித்தை பயின்றதும், பயிற்றுவிப்பதற்கான நோக்கத்துக்காகவே என்பதும் தெளிவு, துரோணர் தன் தந்தையிடம் பயின்றார் கிருபரையும் அவருடைய சகோதரியான கிருபியையும் சந்தனு காட்டில் கண்டெடுத்துத் தன் அரண்மனையில் வளர்த்து வருகையில் கிருபருக்கும் தனுர் வேதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தனுர் வேதம் என்பது வில்லையே பொதுவாகக் குறித்தாலும், வில், வாள் என்பன ஆயுதங்களுக்கு உரிய பொதுப் பெயர்கள் ஆகவே, தனுர் வேதம் என்றால் வில்வித்தை என்பது மட்டுமில்லை; வாள், வேல், கதை இன்ன பிற ஆயுதங்களையும் சேர்த்துப் பொதுவாக ஆயுதப் பயிற்சி என்பதையே குறிக்கிறது.

ஆனால் துரோணர் பின்னர் அரசரானார் பாஞ்சால மன்னனுடன் அவருக்கிருந்த வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து, தன் மாணவர்களை அவனோடு பொரச் செய்து, பாஞ்சால நாட்டை வென்று, அதில் ஒரு பாதியைத் தான் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பாஞ்சால மன்னனுக்கே தந்து, ‘இப்போது நீயும் நானும் சமம்’ என்ற தம் வேறுபாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் துரோணர் ஆனால் வேறுபாடுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை க்ஷத்திரிய கோபம் அவ்வளவ சீக்கிரத்தில் ஆறாது என்பதும் மஹாபாரதம் சொல்லும் செய்திகளில் ஒன்று. அதனால்தான் பாஞ்சாலன், துரோணரைக் கொல்வதற்காக யாகம் செய்த திருஷ்டத்யும்னனைத் தோற்றுவித்தான் அதற்குள் இப்போது நுழைய வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை ‘பாணன்’ என்ற ஒரு பொருள் இந்தச் சொல்லுக்கு உண்டு மஹா பாரதக் கதையைச் சொல்பவரே (வியாசரிடமிருந்த கற்றுக் கொண்டு ஜனமேஜய ராஜாவின் சத்ர யாகத்தின் போது வந்திருந்த) ரோமஹர்ஷணர் என்ற சூதர்தான் அவரை அந்தணர்கள் வரவேற்று உபசரித்து, அர்க்கியங்கள் கொடுத்து, கதையை அவர் வாயிலாகக் கேட்கத் தொடங்குகின்றனர். பிறகு வைசம்பாயனர் கதை சொல்லச் சேர்ந்துகொள்கிறார்.

சூதன் என்ற சொல்லுக்குத் தேரோட்டி என்ற பொருள் உண்டு தேரோட்டி, சூத்திரன் இல்லை. இதைப் பற்றிய முக்கியமான மஹாபாரதக் குறிப்பு ஒன்றை (கர்ணன் வாய்மொழியாகவே வரும் பொருள் வரையறையைப்) பின்னால் பார்க்கலாம். பின்னால், விராட பர்வத்தில் கீசகனைப் பல சமயங்களில், பல இடங்களில் பாஞ்சாலி ‘சூத புத்ர’ என்றே அழைப்பதைப் பார்க்கலாம்.

தேரோட்டி மகன் என்ற எள்ளலுக்குப் பலமுறை–குறிப்பாக பீமனால்–கர்ணன் ஆளாகியிருக்கிறான். பாஞ்சாலி, சுயம்வரத்தின்போது, ‘நான் சூதனை வரிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், கர்ணனை துரியோதனன் உள்ளிட்ட ஏனையோரும், மிகக் அன்புடனும் மரியாதையுடனும் ‘சூத புத்ரா!’ என்று அழைப்பதைப் பார்க்கலாம். இதற்கான வியாச பாரத ஆதாரங்களைப் பின்னர் இடுகிறேன். ஆகவே, ‘சூத புத்திரன்’ எனப்படும் விளி வெறும் எள்ளல் குறிப்பு மட்டுமே அன்று. பீமன் மட்டுமே, அல்லது பாண்டவர்கள் மட்டுமே, அல்லது கர்ணனுக்கு எதிரானவர்கள் மட்டுமே இவ்வாறு அழைத்திருந்தால் அதை அவ்வாறு கொள்ள இயலும். துரியோதனன், திருதிராஷ்டிரன் உள்ளிட்ட, கர்ணனிடம் பேரளவில் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்களும் அப்படி அழைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த விளியில் எள்ளல் இல்லை. இப்படிப் பொதுவாகவே அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

ஆனால், வண்டு துளைத்ததை வைத்து அவன் க்ஷத்ரியனே என்று கண்டறிந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை பரசுராமர் க்ஷத்ரியர்களை அழிப்பதை விரதமாக மேற்கொண்டிருந்தவர் ஆகவே க்ஷத்திரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் அவரிடத்தில் ‘நான் பிராமணன்’ என்று கர்ணன் பொய் சொன்னதன் காரணத்தால், ‘நீ பிராமணன் இல்லை; க்ஷத்ரியன்’ என்ற பரசுராமர், தான் அவ்வாறு முடிவுக்கு வந்ததன் காரணத்தைச் சொல்லிச் சபிக்கிறார்.

ஆனால், பரசுராமர் க்ஷத்ரியர்களில் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கவில்லையா என்று கேட்டால், ‘அது அப்படியில்லை, க்ஷத்ரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்’ என்றுதான் விடை சொல்ல வேண்டியிருக்கும். பீஷ்மருடைய குரு யார்? பரசுராமர்தானே!அவர் க்ஷத்ரியர் இல்லையா! பிறகு ஏன் அவருக்குக் கற்பித்தார்! இதற்கு விடை காணப் புகுந்தால் திசை மாறும் எனவே இங்கே இதனை விட்டுவிடுகிறேன்.

கற்பிப்பதில் சாதி பார்த்தார் என்று துரோணர் மேல் ஒரு குற்றச்சாட்ட உண்டு கர்ணன் தொடக்க நாளில் துரோணரிடம் பயின்றவன்தான் துரியோதனனும் கர்ணனும் சேர்ந்துகொண்டு, பயிற்சி பெற்ற காலங்களில் பாண்டவர்களைச் சதா காலமும் சீண்டிக் கொண்டிருந்ததற்கான குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. இவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்.

சாதி என்ற திறக்கில் பார்த்தால், அடுத்ததாக ஏகலவ்யன் (ஏகலைவன் இல்லை; ஏகலவ்யன்) கதைக்குள் இட்டுச் செல்லும் ஏகலவ்யன் ஏதோ ஓர் ஏழை வேடன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத ராஜனுடைய மகன் ஏகலவ்யன் நிஷாதன் என்பது வேடர் இனத்தைத்தான் குறிக்கும்; ஆயினும் ஏகலவ்யன் வேடர் குலத்து அரசனுடைய மகன் ‘அவன் பின்னால் என்ன ஆனான் என்பது தெரியவே இல்லை’ என்றெல்லாம் (பாலகுமாரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள்) சொல்லியிருக்கிறார்கள் ஏகலவ்யன் பின்னாளில் அரசாண்டான்; தரும புத்திரன் நடத்திய ராஜசூய யாகத்துக்கு வந்திருந்தான்.

“பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே – செம்பொன்
….. ….. …..பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்”

என்று பாரதியின் பாஞ்சாலி சபதம் பேசுகிறது; ‘ஏகலவ்யனுக்கு ஏன் முதல் மரியாதை செய்யக் கூடாது?’ என்று சிசுபாலன் அர்க்யாஹரண பர்வத்தில் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைக் குறித்துக் கேட்கிறான் (“When the invincible Bhishmaka and king Pandya possessed of every auspicious mark, and that foremost of kings–Rukmi and Ekalavya and Salya, the king of the Madras, are here, how, O son of Pandu, hast thou offered the first worship unto Krishna? “),

ஏகலவ்யனுக்குப் பயிற்சி அளிக்காகதற்கு சாதி மட்டுமே காரணமாக இருந்திருக்கவில்லை தான் யாருக்காகப் பணியாற்றகிறோமோ அந்த மன்னனுக்க எதிரான சக்தியாக இவன் வளர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக துரோணர் கருதியதன் விளைவே அது பின்னால் யுத்தத்தில் துரியோதனுடைய பக்கத்தில் நின்ற போரிட்டவர்களில் ஏகலவ்யனும் ஒருவன் என்பதையும் கவனிக்க வேண்டும்.

சாதி என்பதைக் காட்டிலும் அரசியல் என்பதே சரியான காரணமாக இந்தக் குறிப்பிட்ட விஷயத்துக்குப் பொருத்தமான ஒன்றாக இருக்க முடியும். சாதியைக் காரணம் காட்டி ஏகலவ்யனை துரோணர் விலக்கினார் என்றால், கர்ணனை ஏன் விலக்கவில்லை? அவனுக்கு ஏன் பயிற்சியளித்தார்? ஒன்று, கர்ணன் எதிரியாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்திருக்வில்லை என்பதாக இருக்க வேண்டும்; இல்லை, சாதிதான் காரணம் என்றால், கர்ணனுடைய ‘சூத புத்திர’ நிலைப்பாட்டில், ‘சூதன்’ என்பது விலக்கப்பட வேண்டிய, பயிற்சிக்க ஏற்புடையதாகாத இனத்தைச் சேர்ந்தவன் என்பது தவறாக இருக்க வேண்டும். இல்லையா? நான் இவற்றில் முன்னதான காரணத்தையே பெரிதும் ஏற்புடையதாகக் கருதுகிறேன்.

அப்படி ஏற்புடையதானால், ஏகலவ்யன் விஷயத்திலும் அரசியல் நிலைப்பாடே காரணமாக இருக்க முடியும் சிறிய, அல்லது குறுநில மன்னர்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்வதும் அரசனுடைய அவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்தது. இந்தக் காரணத்தால்தான், ‘நான் உன்னோடு வருகிறேன்’ என்று அனுமன் சொன்ன நேரத்தில், கார்காலப் படலத்தில் தனியே தங்கப் போன இராமன் அனுமனுக்குப் பின் வருமாறு சொல்கிறான்:

‘நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா!

வாலி இப்போதுதான் வீழ்ந்து, சுக்ரீவன் அரசேற்றிருக்கும் இந்த நிலையில், ‘அரும்புவ நலனும் தீங்கும்’ நல்லதும் நடக்கும்; அல்லதும் நடக்கும் ஆகவே அவற்றை எதிர்கொள்ளத் தக்க துணைவனாக நீ இப்போது சுக்ரீவன் பக்கத்தில் இருப்பதே சரியானது’, அல்லதும் நடக்கும் என்றால் அதற்கு என்ன பொருள்? கம்பனே வேறொரு இடத்தில் விடை சொல்கிறான்:

உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல்.

(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 75)

பேரரசன் ஒருவன் சற்றே அயர்ந்தானானால் ‘குறும்பு தலை எடுப்பதைப் போல’ ஆம்பல் மலர்ந்தது குறும்பு என்றால், குறுநில மன்னன், சிற்றரசன், chieftain என்பது பொருள்.

****** அவர்களுடைய மடலின் மற்ற பத்திகளுக்குச் சற்றுப் பொறுத்து வருகிறேன்.

(விவாதப் பதிவுகள் தொடரும்)

அடுத்த தவணை

Tags: , , , , , , ,

 

26 மறுமொழிகள் மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்

 1. Rama on November 12, 2008 at 10:15 am

  Truly enjoyed your explanations, I humbly salute your knowldge on our great epics, please continue your good work
  Ramji

 2. Srinivasan Venkataraman on November 12, 2008 at 10:32 am

  ஆஹா பிரமாதம்.
  இவ்வளவு ஆழம் .
  இத்தனை விவேகமான புரிதல் .
  மிகவும் சுகமாக இருக்கிறது.
  மிகுந்த நன்றி.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 3. ராஜா. ஆர். எஸ் on November 12, 2008 at 1:23 pm

  அருமை ! அருமை ! மிக்க நன்றி.

  ஆனால் அவருடைய “அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.” என்ற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லையே ? அதையும் சொல்லிவிட்டீர்களானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  Also in ”When the invincible Bhishmaka and king Pandya possessed of every auspicious mark, and that foremost “, does that refer to any Pandya King from the south ??

 4. விஸ்வாமித்ரா on November 13, 2008 at 10:47 am

  ஹரி அவர்களே

  பிரமாதமான தொடக்கம். மஹாபாராதத்தை ஆழ்மாகப் புரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. ஆர்வத்துடன் படிக்கக் காத்திருக்கிறோம் தொடருங்கள்

  அன்புடன்
  விஸ்வா

 5. ஹரி கிருஷ்ணன் on November 13, 2008 at 2:06 pm

  திருவாளர்கள் ராமன், ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன், விஸ்வாமித்ரா: உங்களுடைய நன்மொழிகளுக்கு நன்றி.

  திரு ராஜா: நீங்கள் கேட்டது:
  “ஆனால் அவருடைய “அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.” என்ற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லையே ? அதையும் சொல்லிவிட்டீர்களானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.”

  சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  வைத்ததொரு கல்வி, மனப்பழக்கம் – நித்தம்
  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தகையும்
  கொடையும் பிறவிக் குணம்

  என்ற ஔவையின் பாடலை அறிந்திருப்பீர்கள். குறிப்பிட்ட சில குணங்கள், குறிப்பிட்ட சில இனங்களில் பெரிதும் காணப்படுவதாகப் பலகாலமாக நம்பப்பட்டும் வருகிறது; இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு எதிரான உதாரணங்களும் பண்டைய இலக்கியங்களில் அகப்படத்தான் செய்கின்றன.

  மேற்படிச் சம்பவத்தில், வலியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல், க்ஷத்ரியனுக்கு–அந்தணனைக் காட்டிலும் அதிகமாகவும், இயற்கையாகவும்–அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டாலும், யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் துரோணரைக் குறித்து தர்மபுத்திரன் ‘அவரை நான் நன்கறிவேன். பெருத்த சிரமங்களை அநாயாசமாகத் தாங்குவார்’ என்று குறிப்பிடுகிறான். பெரிய அளவில் வலியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் இருந்திராவிட்டால், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற அந்தணர்கள் துரியோதனன் சார்பில் போரிட்டிருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

  ஆகவே, இப்படிப்பட்ட ‘இன்னார் இத்தகையார்’ என்பதான பொதுப் பேச்சுகள், ‘பொறுமையும், அன்பும், நிதானமும், தயையும் பெண்களுக்கு இயல்பான ஒன்று. பொறாமையும், போட்டியும், மூர்க்கத் தன்மையும் ஆண்களுக்கு இயல்பான ஒன்று’ என்று இன்றளவும் கருதப்பட்டு வருவதைப் போன்றவைதாம். மூர்க்கம் நிறைந்த பெண்களும் உண்டு; கருணை நிறைந்த ஆண்களும் உண்டு என்பதனை நாம் நன்கறிந்திருந்த போதிலும், ‘காருண்யம் பெண்ணுக்கும், மூர்க்கம் ஆணுக்கும்’ என வழங்கி வருவதும் உண்மை அல்லவா?

  அப்படித்தான், பரசுராமர் கர்ணனை க்ஷத்ரியன் என்று ஊகித்ததும். அவருடைய ஊகம் அந்தச் சந்தர்பத்தில் சரியாகவும் இருந்தது. தன்னுடைய ஊகம் தவறாகவும் இருக்கலாம் என்பதனை பரசுராமர் அறியாதவரா! அப்படிக் கருதியதால்தான் ‘உண்மையைச் சொல்’ என்று கேட்கவேண்டிய அவசியம் அதனால்தான் அவருக்கு ஏற்பட்டது. இல்லாவிட்டால், அப்படிக் கேட்டறிய வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நேரடியாகவே சபித்திருக்கலாம் அல்லவா!

 6. ஹரி கிருஷ்ணன் on November 13, 2008 at 2:24 pm

  திரு ராஜா, மறந்துவிட்டேன். உங்களுடைய அடுத்த கேள்விக்கு வருகிறேன்.

  Also in ”When the invincible Bhishmaka and king Pandya possessed of every auspicious mark, and that foremost “, does that refer to any Pandya King from the south ??

  ஆமாம். தென்னாட்டைச் சேர்ந்த பாண்டியன்தான். மலயத்வஜ பாண்டியன், பாண்டவர்களுடைய நண்பர்களாகவும் இருந்தான். பாரதப் போரில் பங்கேற்றான். பதினேழாவது நாள் போரின்போது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.

  பாண்டியர்கள் மட்டுமல்ல; சோழர்களைப் பற்றியும் மஹாபாரதம் பேசுகிறது.

 7. ராஜா. ஆர். எஸ் on November 13, 2008 at 7:06 pm

  Thanks a lot Harikrishnan !

  Which book talks of Malayathwaja Pandian and Cholas in Mahabharata ? Vyasa Bharatham ?
  This is really interesting. Can I get any URL on this which I can pass it on to my friends who don’t know of this ?

 8. ஹரி கிருஷ்ணன் on November 14, 2008 at 9:23 am

  ராஜா,

  உங்களுடைய ஆர்வம் எனக்குப் புரிகிறது. மலையத்வஜ பாண்டியன், சோழர் போன்ற குறிப்புகளெல்லாம் not more than fleeting references in a book which runs to more than 15,000 A4 pages. எல்லா இடங்களையும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமில்லை. இருந்தபோதிலும் மலையத்வஜ பாண்டியன் கொல்லப்படும் சந்தர்ப்பம் உடனடியாக நினைவுக்கு வருவதால் அந்த இடத்திலிருந்து இந்த ஸ்லோகத்தைக் குறிப்பிடுகிறேன்:

  19 एवम उक्तस तदेत्य उक्त्वा परहरेति च ताडितः
  कर्णिना थरॊण तनयं विव्याध मलयध्वजः
  ரோமனைஸ்ட் வடிவம்:
  19 evam uktas tathety uktvā prahareti ca tāḍitaḥ
  karṇinā droṇa tanayaṃ vivyādha malayadhvajaḥ
  (மஹா பாரதம், எட்டாவது – கர்ண பர்வம் வடமொழியில் 15வது அத்தியாயம்)

  முழு அத்தியாயத்தையும் இங்கே பார்க்கவும்: http://www.sacred-texts.com/hin/mbs/mbs08015.htm

  இந்த ஸ்லோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது:

  Thus addressed, Pandya answered, “So be it.” Then Drona’s son, telling him “Strike,” assailed him with vigour. In return, Malayadhwaja pierced the son of Drona with a barbed arrow. (Mahabharata, 8th Book, Karna Parva, Chapter 20) [You will note the diffrence in the Chapter number between the Sanskrit and English versions. It is not that easy to match the Sloka and its meaning, since the chapter numbers do not agree.)

  மலையத்வஜ பாண்டியன் கொல்லப்படும் இந்தக் கட்டத்தின் முழு ஆங்கில மொழிபெயர்ப்பையும் இங்கே பார்க்கலாம்: http://www.sacred-texts.com/hin/m08/m08020.htm

  இப்படிப்பட்ட நல்ல கேள்விகளை ஆசிரியருக்கே அனுப்பி வைத்தால், இந்த உரையாடல்களிலேயே விடை சொல்ல ஏதுவாக இருக்கும். பின்னாளில் தேடிப்பிடிக்கவும் எளிதாக இருக்கும். அந்ததந்தப் பக்கத்தில் சொல்லப்படும் விடை, தேடி எடுப்பதற்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது.

 9. Mariappan on November 14, 2008 at 2:50 pm

  Hi,
  Is there any proof found in Tamil Nadu talking about Malayathvaja Pandiyan.

 10. ஹரி கிருஷ்ணன் on November 14, 2008 at 3:56 pm

  Thiru Mariappan: No. I don’t have any immediate proof to that effect. Nevertheless, there are numerous references to Mahabharata incidents in Sangam literature, Silapadikaram etc. Purananuru Verse 2, for instance, says a Chera king fed the contending armies of Pandavas and Kauravas. Similarly, the Kali Thogai refers to Asvataman killing Dhrishtadhuymna.

  Anyone is welcome to disprove the refrence in Mahabharata about the Pandya king.

 11. அரவிந்தன் நீலகண்டன் on November 14, 2008 at 6:09 pm

  அருமையான விளக்கங்கள் ஹரிகிருஷ்ணன் சார். தமிழ்நாடு நிச்சயமாக உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. வேஷதாரி தாத்தாச்சாரிகள், வெறுப்பியல் அரசியல் கலைஞர்கள் இந்து தரும இதிகாச புராணங்கள் குறித்து மேம்போக்காகவும் வக்கிரமாகவும் சொல்லும் பொய்களின் நடுவே வெம்பிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உங்கள் எழுத்துக்கள் ஒரு அமிர்த பிரவாகம்.

 12. E.V.S.Giri on November 15, 2008 at 11:28 am

  Excellent article!
  I thought of one more angle to the Ekalavya episode.Ekalavya did not learn directly from Drona. What he did was like using a copyrighted software in an unauthorised way. That is why he was punished
  Giri

 13. Mariappan on November 17, 2008 at 2:05 pm

  One of the problem with our Indian literatures are we are not able to say when it happened. All are prediction. Everything is written as poems. So that multiple meanings can be understood. One more thing is “uraigal(Tamil)” are written after thousands of years. So there might be contradiction. For Thirukkural there are lot of “uraigal”. Even contradiction.

  People who don’t believe god also did very good job. They also have some flaws. But they have done more good things.

  We should not scold people who don’t believe God. Let them do their job. In the same time we should not be tensed by the words about god from the people who don’t believe god. They also have equal rights in this world. It is their feelings. We should not think they are hurting Hiduism. If we are real follower then we should follow “ahimsa”.

  Asking more questions will make as very clear.

 14. ராஜா. ஆர். எஸ் on November 17, 2008 at 7:26 pm

  Thiru. Mariappan,

  Puranaanooru 2nd verse goes like this ( I just copy pasted, I am not an Tamil expert ).

  This verse has mentions about Veda Dharma ( Veda Neri ), Himalayas ( Imayam ), Aivar ( Pandavas ? ), Brahmins (Andhanar) etc.

  All these indicate that ancient Tamilians had respected or followed Vedic values as opposed to what present day TN politicians try to portray as Aryan-Dravidian stories etc !

  போரும் சோறும்!

  பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
  பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
  திணை: பாடாண்.
  துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

  மண் திணிந்த நிலனும்,
  நிலம் ஏந்திய விசும்பும்,
  விசும்பு தைவரு வளியும்
  வளித் தலைஇய தீயும்,
  தீ முரணிய நீரும், என்றாங்கு
  ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
  போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
  வலியும், தெறலும், அணியும், உடையோய்!
  நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
  வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
  யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
  வான வரம்பனை! நீயோ, பெரும!
  அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
  நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
  ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
  பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
  பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
  நாஅல் வேத நெறி திரியினும்
  திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
  நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
  சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
  அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
  முத்தீ விளக்கிற், றுஞ்சும்
  பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

 15. ராஜா. ஆர். எஸ் on November 17, 2008 at 7:36 pm

  Some discussion on the mention of Mahabharata war in Puranaanooru !

  http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=4083

 16. ஹரி கிருஷ்ணன் on November 18, 2008 at 12:45 pm

  நண்பர்கள் மாரியப்பன், ராஜா. நன்றி.

  திரு மாரியப்பனின் கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடையளிக்கிறேன்.

 17. ராஜா. ஆர். எஸ் on November 18, 2008 at 3:35 pm

  Proof of Malayadhwaja in Tamil Nadu

  http://www.thehindubusinessline.com/life/2004/12/31/stories/2004123100080200.htm

  City of temples
  There are numerous temples in and around Madurai. Azhagar Koil, situated about 20 km from the city, is dedicated to Lord Vishnu. It was built by King Malayadhwaja and finds mention in several puranas. Known as the Southern Tirupati, the twelve Alwars or Vaishnavaite saints have visited this place and sung hymns in praise of the deity.

  The Pandava brothers Arjuna and Yudhishtra are believed to have bathed in the holy teertham here.

 18. ஹரி கிருஷ்ணன் on November 19, 2008 at 4:16 pm

  நண்பர் ராஜா குறிப்பிட்டிருப்பதுபோல், மலையத்வஜ பாண்டியன் மதுரை மீனாட்சி கோவிலைக் கட்டியவன்; அது மட்டுமல்ல. மதுரை மீனாட்சியே அவனுடைய மகளாக அவதரித்தவள்தான். ‘மலையத்வஜன் பெற்ற மாதவமே’ என்றொரு வரி பாபநாசம் சிவன் இயற்றிய ‘தேவி நீயே துணை’ என்ற கீரவாணி ராகப் பாடலில் வரும்.

  இந்த மலையத்வஜன்தான் அந்த மஹாபாரத மலையத்வஜனா என்பதற்கான குறிப்பு ஏதும் இல்லை என்பதைத்தான் நான் முதலில் சொல்ல நினைத்தேன். அந்த வாக்கியம் முழுமையாக அமையவில்லை.

  ஆனால் ஒன்று. This name Maladhwaja is nothing new or alien to the land of Tamils என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

 19. ராஜா. ஆர். எஸ் on November 20, 2008 at 1:00 pm

  Hari Krishnan,

  One more thing to note. In ancient Tamil Nadu, there is a practice of many kings in a dynasty bearing the same name.

  Like Rajendra-1, 2 etc..
  So some Malayathwaja should have participated in the war. As you say, it shows this name is not alien to TN.

 20. Arun on December 4, 2008 at 9:54 pm

  Dear Sir,
  Can we interpret that the referred Chola, Pandiya and Mahabharatha Period are in equal time line ?. I was thinking Mahabharatha was much earlier than Chola and Pandiya empires.
  Pl explain.

 21. ஹரி கிருஷ்ணன் on December 4, 2008 at 10:11 pm

  Dear Arun,

  There is a lot of refrence to the Chola, Pandya and Chera kings in the Mahabharata. And in Sangam literature–and later Tamil literature like Silappadhikaram–too there is considerable reference to Mahabharata events. Purananuru refers to Krishna and Balarama, and similar is the case with Paripadal. Balarama is referred by the name Vali in Sangam classics. Vali means ‘one who is white in complexion’. in Tamil. I will substantiate all this in due course.

 22. அருள் on December 21, 2008 at 6:58 pm

  சல்யபர்வத்தில் பாண்டியனைப் பற்றிய இன்னொரு சுட்டி.. முன்னர் குறித்திருக்கிரீர்களா தெரியவில்லை. இருந்தாலும்:
  (சல்யபர்வம் இரண்டாவது அத்யாயம்): ஸுதக்ஷிணனும், பெளரவனான ஜலஸந்தனும்,….. அந்தப்போரில் கொல்லப்பட்டதர்க்கு அதிர்ஷ்டத்தைதவிர வேறு யாது காரணம்?அவ்வாறே, மஹா பலசாலியும், சஸ்திரங்களைப்பிடித்த எல்லா வீரர்களுள்ளும் சிறந்தவனான பாண்டியனும் பாண்டவர்களால் யுத்ததில் கொல்லப்பட்டான். அதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர யாது காரணம்? ப்ருஹத்பலனும்,…
  (ஸ்ரீ மஹாபாரதம், ஸ்ரீ உ.வே. T.V.ஸ்ரீநிவாஸாசார்யர் மொழிபெயர்ப்பு,1923)
  அருள்

 23. Dr. S. Subramanian on December 18, 2009 at 7:54 pm

  Regarding the characteristics of an individual being determined at birth (the so-called piRavik guam), there are some indications from the recent studies in genetics that it is possible. While it is not determined in a primordial manner that somebody will be a carpenter, priest, warrior, or a poet, once somebody develops a talent in a particular profession, it is quite likely (not a guarantee) that his offspring would also attain similar if not comparable talents. A new discipline in molecular biology called “Epigenetics” has been shedding light on this subject. Way back it was called “Lamarckian genetics”. Basically it provides evidence that if am ironsmith keeps working for years pounding the hot iron in his foundry his muscles would get strong and this will have a reciprocal effect through an external modification of some genes which would exhibit an effect if he has offspring after years of working at the foundry such that his son might also have a talent for ironsmithy work. While some fathers would want their sons to follow their own profession, it is a combination of nurturing plus some reciprocal effect of the profession that was chosen on the genes of the progenitor that would dictate the profession chosen by the son. This genetic phenomenon has been going on for millennia although it is being investigated only of late due to advances in modern science.

 24. Kasi on September 26, 2011 at 6:45 pm

  ஹரி அவர்களே (மன்னித்து கொள்ளுங்கள் ஐயா)

  எனக்கு ஒரே ஒரு Doubt ஐயா. 1) கர்ணன் பிறப்பில் சூர்யா புத்திரன் என்றால் அவன் சத்திரியனகவோ அல்லது பிரமணனகோவே இறுக்க வேண்டும் ஏனனில் அவனை போலா பிறந்த தர்ம,பீமா, அர்ஜுன, நகுல, சகாதேவர்களும்
  சத்திரியனகவோ அல்லது பிரமணனகோவே இறுக்க வேண்டும். ஏனனில் அவர்களுக்கு துரோணர் அஸ்திர பிரயகோங்களை சொல்லி கொடிதிருக்க மாட்டார்.
  2) கர்ணன் பிறப்பில் சூர்யா புத்திரன் என்றால் அவன் சத்திரியனகவோ அல்லது பிரமணனகோவே இறுக்க வேண்டும் அப்படி இருந்தால் எல்லாம் அறிந்த பலராமருக்கு கர்ணன் பிரமணன் என்று தானே தெரிய வேண்டும்.
  3) கர்ணன் பிரமணன் இல்லை என்றால் அவனை போலா பிறந்த தர்ம,பீமா, அர்ஜுன, நகுல, சகாதேவர்களும்
  சத்திரியனகவோ பிரமணன் இல்லை என்று தானே பொருள் கொள்ள வேண்டும்?
  தயவு செய்து எனது iyyathai தீருங்கள் ஐயா!!!

 25. Arun Prakash on November 1, 2011 at 9:30 pm

  வணக்கம் நண்பர்களே,
  வணக்கம் திரு.காசி அவர்களே ,.ஒரு கதவு பாதி மூடியிருக்கிறது என்றால் ,பாதி திறந்திருக்கிறது என்று பொருள், முழுவதும் மூடியிருக்கிறது என்றால் முழுவதும் திறந்திருக்கிறது என்று பொருளா?
  என்னமோ போங்க ….

 26. sakthi on April 18, 2015 at 1:53 pm

  கட்டுரை பயனுள்ளதாக இருந்தது புதிய கருத்துகளை தெரிந்துகொள்ள முடிந்தது கர்னன் கனவு ஏதேனும் கண்டதுன்டா?(அவனது பிறப்புப் பற்றி)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey