பைத்ருகம் – ஒரு பார்வை – 3

இப்படி ஒரு வறண்ட ஒரு கதையை யாரிடம் சொல்லியிருந்தாலும் இதைப்போய் எப்படி சினிமாவாக எடுப்பது என்று குழம்பிப் போயிருப்பார்கள். ஆனால் தெளிவான இயக்குனரான ஜெயராஜ் குழம்பவில்லை, மிகத் திறமையான திரைக்கதையுடனும், வசனங்களுடனும், அதைவிடத் திறமையான நடிகர்களுடனும், டெக்னிகல் குழுவோடும் இணைந்து ஓர் அருமையான, அழகான படத்தைத் தந்திருக்கிறார். இந்தக் கதையைச் சாதாரண இயக்குனர்கள் யாருமே சொதப்பியிருப்பார்கள். இதில் ஓர் ஆச்சரியம் இந்தப் படத்தின் கதையை எழுதியவர் வட்டத்து ஜார்ஜ், திரைக்கதையை அமைத்தவர் கொல்லூர் டென்னிஸ்.

படம் முழுக்க ஒரு விதமான மஞ்சளும் பழுப்புப் பச்சையும் கலந்த வண்ணத்திலான ஷேடில் எடுக்கப் பட்டிருப்பது படத்துக்கு ஒரு அசாதாரணத் தன்மையைக் கொடுக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து இயக்குனர் கேரளாவின் பழம் பாரம்பரியத்தைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே வருகிறார். அம்பலத்தில் அக்னி வளர்த்து, அக்னி கொண்டு சேர்க்கும் காட்சியில் ஆரம்பிக்கும் சினிமா முழுவதும், கேரள கிராமக் கோவிலும், அந்த அம்பலத்தை அலங்கரிக்கும் நெய்விளக்குகளும், புழைகளும், ஓடங்களும், வேதமந்திரம் ஓதும் சிறுவர்களும், செண்டை வாத்தியமும், வெளிச்சப்பாடும், தெய்யமும், கதக்களியும், மோகினி ஆட்டமும், யாகங்களும், நிறைந்து ஒரு கேரளப் பாரம்பரியத்தை முழுமையாகக் காட்டுகிறது பைத்ருகம். குருவாயூர் விளக்குகள் பல உயரங்களில் பல வடிவங்களில் பல கோணங்களில் எடுக்கப்பட்டு காட்சிகளுக்கு ஒரு கவித்துவத்தை அளிக்கிறது. நெய் விளக்குகளால் வரிசையாய், பல அடுக்குகளாய் அலங்கரிக்கப்பட்ட அமைதியான அம்பலத்தைக் காணும்பொழுது உடனே அங்கே சென்று தியானிக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிறது. படத்தின் வலு அதன் காட்சி அமைப்புகளில். காட்சி ரூபமான ஒரு அழகிய படம் இது.

கடவுள் நம்பிக்கைக்கும் மனித நம்பிக்கைக்கும் நடைபெறும் தத்துவப் போராட்டமே கதையின் கருவாக இருந்தாலும் அதைப் பெரும்பாலும் காட்சிபூர்வமாகவே கொண்டு செல்கிறார், சினிமா ஒரு காட்சிபூர்வமான மீடியம் என்பதை உணர்ந்த இயக்குனர். படத்தில் நாஸ்திகவாதம் பேசும் சுரேஷ் கோபியே அதிக வசனங்களை உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார். வசனங்கள் மிகக் குறைவாக உள்ளன. உணர்ச்சிபூர்வமான வசனங்களைப் பேசுவதில் வல்லவரான, ஆக்ஷன் நடிகரான சுரேஷ் கோபியிடமிருந்ந்து நல்ல நடிப்பைக் கொணர்ந்திருக்கிறார் ஜெயராஜ். இப்படிப்பட்ட ஒரு நாஸ்திக வேடத்தில் நடிக்கத்தான் அவ்வளவு தூரம் மனம் நொந்திருக்கிறார் சுரேஷ் கோபி.

அவரைவிட படத்தில் மிக கனமான பாத்திரம் அவரது தம்பியாக வரும் ஜெயராமுக்கு. தமிழ் நாட்டில் பிறக்க நேர்ந்தாலும் அதிர்ஷடவசமாக ஒரு மலையாள நடிகராகப் போனதனால் ஒரு அருமையான நடிகரின் திறமை வீணாக்கப் படாமல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு சின்னக் கோவிலின் வெகுளித்தனமும், அப்பாவித்தனமும் நிறைந்த அர்ச்சகராகத்தான் நம்முன் நிற்கிறார் ஜெயராம். ஒரு நாலுமுழ வேட்டி, மேல்துண்டுடன் அவர் பூஜை செய்வதும், பாடிலாங்குவேஜும், தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் “இத்தனை நாள் உன்னை பூஜை செய்ததற்கு இதுதான் தண்டனையா!” என்று கதறும் இடத்திலும் பிரமாதமாகச் செய்திருக்கிறார் ஜெயராம், அற்புதமான நடிகர்.

பெரிய நம்பூதிரி செம்மாதிரிப்பாடாக வரும் ப்ரொஃபசர் நரேந்திரன் மிகமுதிர்ந்த நடிகர். அதிகம் பேசாமலேயே தன் பாத்திரத்தின் அழுத்தத்தையும் மரியாதையையும் கொணர்கிறார். வசனம்மூலம் அல்லாமல் தன் நடிப்பினாலும் பார்வையாலுமே 5000 வருடப் பாரம்பரியத்தை நம்மை உணரச் செய்கிறார். அபாரமான நடிகர்கள். இயல்பான நடிப்பே இவர்களது பெரும் பலம். ஓர் இடத்தில்கூட யாரும் மிகையாக நடிப்பது கிடையாது. மிகக் கனமான ஒரு பாத்திரத்தை அநாயசமாகச் செய்திருப்பார்.

சர்ப்பக்காவு போன்றவை ஒரு குறியீடுகளே. பலவீனமான மனித மனத்துக்கு ஒரு சாய்மானமாக இருப்பவை. நமது பாரம்பரியம் என்பது பலமான அஸ்திவாரத்தினால் உருவானது என்பதே படத்தில் வரும் அம்பலங்களும், வெளிச்சப்பாடுகளும், தெய்யமும், யாகமும் குறியீடுகளாக உணர்த்துபவை. நம்பிக்கையே அதன் அடித்தளம், வெறுமைகளாலும், பலமில்லாத தத்துவங்களாலும் நிரப்பபட்ட நாஸ்திக வாதங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான ஆன்மீக பலத்தை. தேவையான அனுசரனையை அளிக்க முடியாதவை என்பதை இந்தப் படம் தெளிவாக உணர்த்துகிறது. இந்து மதத்தின் சாரம் அதன் உறுதியான அஸ்திவாரங்களில் அமைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

ஜெயராஜின் ஆரம்ப காலத்தில் 1993ல் எடுக்கப்பட்ட படம் என்பதனால் ஒரு சில குறைபாடுகளும் உண்டு. நான் வழக்கமாக பின்னணி இசையயை அவ்வளவாகக் கவனிப்பது இல்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணி இசையைமட்டும் தனியாகக் கேட்டால் அது மட்டுமே ஒரு அற்புதமான இசை ஆல்பமாக அமைந்துவிடும். எஸ்பி வெங்கடேஷின் அற்புதமான இசையில் ஜேசுதாஸ் பாடும் மூன்று பாடல்களில் மொத்தப் படத்தின் பின்னணியில்தான் படத்தின் முக்கியக் காட்சிகள் நகர்கின்றன. குறைந்த இசைக்கருவிகளுடன் அமைதியாகச் செல்லும் அந்தப் பாடல்கள் பாரம்பரியக் காட்சிகளுக்கு மெருகூட்டுகின்றன. இது ஒரு முழுக் கலைப்படம் அல்ல என்பதனால் பின்னணி இசையும், பாடல்களும் இடம் பெறுகின்றன ஆனால் அவை உறுத்தாமல் அழகாக அமைந்துள்ளன.

படம் மூட நம்பிக்கைகளைக் கிளப்புவதாகச் சொல்லி கேரள இடது சாரிகளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. இந்துக்கள் மைனாரிட்டியான அந்த மாநிலத்தில் இந்தச் சினிமா ஓடவில்லை, ஆனால் மலையாளப் படங்களில் அவசியம் பார்க்க வேண்டிய பட்டியலில் எப்பொழுதும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

சினிமா என்ற காட்சி ரூபமான கலைப் படைப்பில் இந்தக் கதை மிக அழகாகவே வந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் நான் ஜெயராஜின் இன்னும் இரு படங்களான தேஷாடானம், களியாட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்பொழுது இந்தப் படம் சற்றே பின்தங்கியதுதான். அந்தப் படங்களளப் பற்றியும் நான் தொடர்ந்து எழுதப் போகிறேன். இந்திய சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் அவை. அவற்றின் கருவுக்காக. கொஞ்சம் யோசித்தால் இது ஏற்கனவே அடித்துப் பிழியப்பட்ட ஒரு கதை என்பது புரியும். பிரஹலாதன் ஹிரண்ய கசிபு, கண்ணன், கம்சன் என்று அதே கதைதான். அதே நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான். ஆனாலும் திரைக்கதையில் தேவதத்தனின் அப்பாவித் தம்பி பாத்திரம் மூலம் ஒரு சுவாரசியத்தைக் கொண்டு வருகிறார் இயக்குனர்.

இந்தக் கதையில் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் இடையில் கிடந்து அல்லல்படும் அற்புதமான பாத்திரம் பானு நம்பூதிரிதான். ஒரு சாதாரண கதையை அந்தப் பானு நம்பூதிரி பாத்திரம் மூலம் சுவாரசியமாக்கியிருக்கிறார். அதுபோக அழகியல் உணர்வுடன் நுட்பமாகக் காண்பிக்கப்படும் காட்சிகள் மூலமாகவும், இசையின் மூலமாகவும், குறைவேயானாலும் சக்திவாய்ந்த வசனங்கள் மூலமாகவும் ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு படைப்பாக மாற்றியுள்ளார். இந்தக் கதையை நான் வெறுமே இங்கு சொல்லியிருந்தால் ‘அட போப்பா! இதில் என்ன இருக்கிறது’ என்று கொட்டாவி விட்டிருப்பீர்கள். அதைத் திரைவடிவில் மாற்றுவது ஒரு சவாலான வேலை. அதை ஜெயராஜ் திறம்படச் செய்திருக்கிறார்.

படம் வந்த காலத்தில் இடது சாரிகள் இவரைத் தாக்கிய விமர்சனங்கள் படிக்கக் கிட்டவில்லை. ஆனால் 94ல் இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நாயர் நண்பர் ஒருவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இந்தப் படத்தை சிலாகித்ததும் இடது சாரிகளைத் திட்டித் தீர்த்ததும் நினைவுக்கு வருகிறது. இது ‘Chac-The Rain God’ என்ற மயன் நாகரீகப் படக்கதையைத் தழுவி எடுத்த படமாகத் தெரிகிறது.

இறுதியாக, மனிதனுக்கு ஆஸ்திகத்தின் மீது நம்பிக்கை வரவழைக்க ஆழமான தத்துவார்த்தமான தாக்கத்துடன் கூடிய படங்களே எடுக்கப்பட வேண்டுமே ஒழிய விட்டலாசார்யா பாணி, ராம. நாரயணனின் குரங்கு/நாய் படங்கள் அல்ல. ரஜினிகாந்தின் அரைவேக்காட்டுத்தனமான பாபா போன்ற படங்களும் அல்ல. மேலும் இதுபோன்ற படங்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையை அழகாக, கவித்துமாகச் சொல்லவும் வேண்டும். பார்த்தவுடன் அந்தக் கோவில்களுக்குச் செல்லவோ, அந்தச் சடங்குகளை அனுபவிக்கவோ தோன்றவேண்டும். இந்தப் படத்தில் குத்து விளக்கொளியில் கோவிலின் பின்புலத்தில் காண்பிக்கப்படும் மோகினி ஆட்டத்தையும், கதக்களியையும் பார்க்கும்பொழுது அவசியம் அவற்றைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. அந்தக் கோவில்களின் அமைதியையும் அழகையும் நோக்கும்பொழுது அங்கு சென்று தியானிக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிறது. ஒரு நல்ல படத்தின் தாக்கம் அப்படி இருக்கவேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரியத்தை அழுத்தமாகச் சொல்லும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தில் வரும் ‘வால் கண்ணெழுதிய மகர நிலாவில்’ என்னும் பாடலைக் கேளுங்கள்:

3 Replies to “பைத்ருகம் – ஒரு பார்வை – 3”

  1. Great analysis with Viswamithra Touch. I AM A REGULAR READER OF vISWAMITHRA IN THINNAI.. Rocked again in Tamilhindu.com.

    Sridhar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *