‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

bharati1வாழ்க்கை வரலாறுகள் குறித்து, சென்னை இலக்கியச் சிந்தனையில் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் பேச அழைத்திருந்தார்கள். பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத்தான் என்னுடைய பேச்சின் குவி மையமாக எடுத்துக் கொண்டேன். ‘தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருப்பது பாரதிக்குதான். தமிழ்நாட்டில், சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து இறந்து போனவர்களுள், மிகப்பல விதமான பிழைகளும், அதீத உணர்ச்சிக் கலப்புகளும், ஒரு பக்கம் சாய்ந்த (ஒன்று ஒரேயடியாகத் தூக்கல் அல்லது தரைமட்டத்துக்கும் கீழே தாக்கல்) பார்வைகளும் நிறைந்து, கொஞ்சமும் தெளிவில்லாமல், ஏதோ ஒருசில அம்சங்களை மட்டுமே வெளிக்காட்டி. பல அம்சங்களில் தெளிவுபெறுவதற்காக மிக அதிகமாகப் போராட வேண்டியருப்பது யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் என்றால், அதுவும் பாரதிக்குதான் சொந்தமாகிறது’ என்று அன்று பேசினேன்.

பாரதி வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு பதிவாளரின் விவரிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு வண்ணம் உடையதாகத் தென்படுகின்றது. பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதைப் பற்றி விவரிக்கும் ‘சித்திர பாரதி’ (மிகவும் போற்றப்படும் பாரதி ஆய்வாளர்களில் ஒருவரான ரா அ பத்மநாபன் அவர்கள் எழுதியது) தீட்டியுள்ள சித்திரம் எவ்வளவு நாடகத்தனமானது, அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன; அடிப்படையே இல்லாத ஒரு கற்பனையான விவரிப்பு, எப்படிப் பல தவறான ஆய்வுகளுக்கும் ஊகங்களுக்கும் முடிவுகளுக்கும் இட்டுச் செல்கின்றது என்பதையெல்லாம் தமிழோவியம்.காம் தளத்தில் நான் எழுதிய ‘ஓடிப் போனானா’ தொடரில் விவரித்திருந்தேன்.

பாரதி தொடர்புள்ள செய்திகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டாவதாக ஒரு வேறுவடிவம் இருந்தே தீரும் என்பது ஒரு பொதுவிதியாகிவிட்டது. நோபல் பரிசு பெற்ற தாகூரோடு போட்டியிட்டு, தான் அந்தப் பரிசைப் பெற விரும்பினான் என்ற (நகைப்புக்கிடமான) பேச்சில் தொடங்கி, பற்பல கற்பனைகள் பாரதி வாழ்க்கை வரலாற்றோடு கலந்தே கிடக்கின்றன. இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று இனங்காண்பது பாரதி அன்பர்கள், ஆய்வாளர்களுடைய பொறுப்பு.

‘ பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா’ என்ற தலைப்பில் அண்மைக் காலமாக இணையத்தில் பரவிக்கொண்டிருக்கும் கட்டுரைக்கு வெகு நேர்த்தியான விளக்கம் ஒன்றை அன்பர் வெங்கடேசன் அளித்திருக்கிறார். அவருடைய அணுகுமுறை மிகத் துல்லியமாகவும், பதிப்பி்க்கப்பட்ட பாரதி எழுத்துகளின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர்கள் எழத் தொடங்கிவிட்டார்கள் என்பதே பாரதீயம் என்றும் தழைக்கும் என்பதற்கான சிலாசாசன சாட்சியமாக உறுதியாகவும் உயரமாகவும் நிற்கின்றது.

திரு வெங்கடேசன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் கட்டுரை, பாரதிதாசன் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு சிறுபகுதியைச் bharatidasanசிதைத்துத் திரித்துத் தன்போக்கில் வளைத்திருக்கிறது. இதை வெங்கடேசன் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சமும் உண்டு. விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடல் எந்தச் சூழலில், என்ன காரணத்துக்காக இயற்றப்பட்டது என்பதை பாரதிதாசன் பார்வையிலிருந்து மட்டும் பார்த்தால்கூட மேற்படி ‘திரிப்புக் கட்டுரை’ செல்லாக் காசுகூட பெறாது என்பது விளக்கப்பட்டுவிட்டது.

விஷயம் அத்தோடு முடிந்துவிடவில்லை. பாரதி வாழ்க்கைப் பதிவுகள் எவ்வளவு தூரம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகக் காட்சியளிக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் எழுந்ததற்கான சூழலும் ஓர் எடுத்துக்காட்டு. இப்போது அப்படிப்பட்ட வேறுவேறு வர்ஷன்களை எடுத்துப் பார்ப்போம். இந்தப் பாடல் எழுந்த விதத்தைக் குறித்து ஐந்து வேறுவிதமான வர்ஷன்கள் இருக்கின்றன:

1) முதலாவது, வெங்கடேசன் எதிர்கொண்ட கட்டுரையில், திரித்துச் சொல்லப்பட்ட, வெங்டேசன் விளக்கியதான பாரதிதாசன் கட்டுரை. குயில் பத்திரிகையில் பாவேந்தரே வெளியிட்ட ஒன்று.

2) இரண்டாவது, அ. மாதவையர் எழுதியுள்ள குறிப்பு. மேற்படி போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடலை இயற்றிவர் இவர் என்ற வகையில் இவர் சொல்லும் குறிப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. “பொது நன்மைக்காக உழைத்துவரும் எனது நண்பர் ப்ரும்மஸ்ரீ S V விஸ்வநாதையர் இந்தியாவின் அருமை பெருமைகளையும் சாமான்ய கல்வியும் கைத்தொழில்களாகிய தற்கால நாகரிகங்களும் தழைத்து நாம் அபிவிருத்தி அடைவதற்கான சாதனங்களைப் பற்றி, எளிய தமிழ் நடையில் இயற்றப்படும் தமிழ்ப் பாட்டுகளுக்கு இரானடே, கோகலே என்னும் தேசாபிமானிகள் பேரில் ரூ.300 வரை பரிசுகள் கொடுப்பதற்காகப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்தார்’ என்று அ. மாதவையர் ‘பொதுதர்ம சங்கீத மஞ்சரி’என்ற புத்தகத்தின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

இதன்படி பார்த்தால், போட்டியை நடத்தியவரே பாண்டிதுரை தேவர் அல்லர். விஸ்வநாதையர். போட்டியில் முதல் பரிசு வென்றவர் சொல்கிறார். எதை ஏற்கலாம்?

2அ) மேற்படி மாதவையரின் கூற்றுக்கு அணுக்கமாக, நாவலர் சோமசுந்தர பாரதியார் (பாரதியின் இளம்பருவத் தோழர்) பாரதியின் தம்பியான சி விசுவநாத ஐயருக்கு 7.3.1944 அன்று எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘தமிழ் இளைஞர்களுக்கு தேசபக்தியூட்டும் சிறந்த தேசியப் பாடல்களுக்கு இரண்டு பரிசுகள் வழங்கப் போவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு எஸ் வி விசுவநாத ஐயர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். எனது இலக்கிய நண்பர்களுக்குப் போட்டியில் கலந்துகொள்ள எழுதுமாறு (திரு எஸ்.வி.வி) என்னிடம் கேட்டுக்கொண்டார். அக்காலத்தில் சிறந்த இரு தமிழ்க்கவிஞர்களாக விளங்கிய திரு சி. எஸ். பாரதிக்கும் மதுரை கந்தசாமிக் கவிராயருக்கும் எழுதினேன்…… போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசும் பெறுவேன் எனப் பாரதியார் மிக்க நம்பிக்கையுடன் எழுதினார். போட்டிக் களத்திற்குப் பாரதியார் வருவதை அறிந்த கந்தசாமிக் கவிராயர், பிறரைக் கிரகணம்போல் மறைத்துப் பாரதியாரே போட்டியில் முதல் பரிசு பெற்றுவிடுவார் என்றும், கவிதைப் போட்டியில் அவருடன் எவரும் போட்டியிட முடியாதென்றும், முதன்மை பெறும் நம்பிக்கை தமக்கில்லை ஆதலால் போட்டியிட விரும்பவில்லை என்றும் எனக்கு எழுதினார்.”

இந்தக் கடிதத்ததின்படி,

  • பாரதி போட்டியில் பங்குபெற விரும்பினார். பரிசு பெறுவேன் என்ற நம்பிக்கையோடு அதில் பங்கு பெறவும் செய்தார்.
  • போட்டியில் பங்கேற்கவில்லை என்று ஒதுங்கியவர் இன்னொருவர். மதுரை கந்தசாமி கவிராயர். அதற்கான காரணத்தையும் சோமசுந்தர பாரதியின் கடிதம் சொல்கிறது.

இப்போது, அ. மாதவையர், நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோருடைய கூற்றுகளை ஏற்றால், நாம் பேச எடுத்துக் கொண்ட ‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா’ என்ற அந்த வெறுப்புக் கட்டுரையின் அடிப்படை கலகலத்துப் போகிறது. இந்த இருவர் சொல்வதை ஏற்கக் காரணங்களும் உள்ளன. மாதவையர் சம்பந்தப்பட்ட போட்டியில் கலந்துகொண்டு, பரிசும் வென்றவர். அவருக்கே அந்தப் போட்டியைப் பற்றிய விவரங்கள், அதை நடத்தியவர் இன்னார் என்று தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நாவலர் சோமசுந்தர பாரதியோ, மிகச் சிறிய வயதிலிருந்து சுப்பிரமணிய பாரதியோடு பழகிய தோழர். இருவரும் ஒன்றாகவே சேர்ந்து பல நூல்களைப் படித்ததைப் பற்றியெல்லாம் நாவலர் சொல்லியிருக்கிறார். அவரே சுப்பிரமணிய பாரதிக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். ‘நான் பங்கேற்கிறேன்’ என்று பாரதி பதில் கடிதமும் எழுதியதாகச் சொல்கிறார்.

எனில், ‘பாரதி, தமிழ், தமிழ்நாட்டின்மேல் பாடல் புனைய ஆர்வமில்லாது ஒதுங்கினான்’ என்ற பேச்சே பொருளற்றதாகப் போய்விடுகிறது.

3) யதுகிரி அம்மாள், பாரதியுடன் அவருடைய மகளைப் போல் பழகியவர். சகுந்தலா பாரதியின் சம வயதுத் தோழி. அவர் எழுதிய பாரதி நினைவுகள் என்ற புத்தகத்தில் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்ற தலைப்பில் ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார். அவர் சொல்வதன்படி,

  • போட்டியை நடத்தியவர்கள் சென்னையில் இருந்த ‘ஒரு சங்கத்தார்’. இன்ன சங்கத்தார் என்று அவருக்குப் பெயர் தெரிந்திருக்கவில்லையோ என்னவோ, அந்தப் பெயரை யதுகிரி அம்மாள் குறிப்பிடவில்லை.
  • பாரதி இந்தப் போட்டியில் பங்கேற்றான். மூன்றாம் பரிசான ரூ.100 அவனுக்குக் கிடைத்தது.

இதன் பின்னால், ‘பாரதி பாட்டுக்கு மூன்றாவது பரிசா’ என்று வருத்தப்பட்டு யதுகிரி அம்மாள் எழுதியிருப்பவை இருக்கின்றன. ‘பாரதி இன்னவாறு இதைப் பற்றிச் சொல்லியிருப்பார்’ என்ற வகையில் தன் அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார்.

4) உவேசா (தமிழ்த் தாத்தா உவேசாதான்) இந்தப் பாடல் எழுந்ததன் பின்னணியைத் தன்னுடைய ‘நினைவு மஞ்சரி’யில் எழுதியிருக்கிறார். உவேசா, மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில், மாணவர் சங்கத்தில் கனம் வி கிருட்டினசாமி ஐயர் என்பவர் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்தச் சொற்பொழிவுக்கு பாரதியும் அழைக்கப்பட்டு, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டான். அன்று கிருட்டினசாமி ஐயர் நிகழ்த்திய உரை பாரதியைப் பெரிதும் ஆட்கொண்டது; அதனால் பெற்ற உந்துதலின் காரணமாக அன்றிரவே இந்தப் பாடலை பாரதி இயற்றினான் என்று உவேசா சொல்கிறார்.

5) ‘ஒருவேளை போட்டியில் பரிசு கிடைத்தால், வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பாரதிக்கு அந்தத் தொகை உதவியாக இருக்கலாம்’ என்ற நல்லெண்ணத்தின் பேரில், பாரதிக்குத் தெரியாமலேயே பாரதியின் நண்பர்கள் அந்தப் பாடலைப் போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்’ என்று தொமுசி ரகுநாதன் அபிப்பிராயப்படுகிறார். (பரிசு பெறத் தவறிவிட்ட பாரதியின் பாடல்–தாமரையில் வெளிவந்த கட்டுரை).

இவை அனைத்துமே டாக்டர் ச சு இளங்கோவன் எழுதிய ‘பாரதிதாசன் பார்வையில் பாரதி’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன (பக்கம் 117 முதல் 126 வரை).

இப்போது, மேற்படி ஐந்து வர்ஷன்களில் எதை ஆதாரமாகக் கொள்வது? மேலே சொல்லப்பட்டிருபவர்களில் அ. மாதவையர், சோம சுந்தர பாரதியார், யதுகிரி அம்மாள், பாரதிதாசன், உவேசா ஆகிய ஐவருமே பாரதி வாழ்வில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள். தொமுசி ரகுநாதன் சொல்வது வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது. ஆகவே அதை ஆதாரமாகக் கொள்ள இயலாது.

என்னைக் கேட்டால், மாதவையர், நாவலர் சோமசுந்தர பாரதி இருவரும் சொல்வதைத்தான் ஏற்க முடியும் என்பேன். ஏனெனில் யதுகிரி அம்மாள் அந்தச் சமயத்தில் பத்து வயது நிரம்பாத சிறுமி. மேலோட்டமாக விஷயங்களை அறிந்திருக்க முடியும். அந்தப் பருவத்தில் உணர்ந்ததை, அவருக்கு வயதேறிய பிறகு பதிந்திருக்கிறார்.

பாரதிதாசன்? ஒரு கேள்விக்குப் பதில் சொன்ன பிறகு அதுகுறித்துப் பேசலாம். பாரதியும் பாரதிதாசனும் சந்தித்தது, வேணுநாயகரின் வீட்டுத் திருமணத்தில். இதை பாரதிதாசனே எழுதியிருக்கிறார். அவர்களுடைய முதல் சந்திப்பு, பாரதி பாண்டிச்சேரிக்கு வந்துசேர்ந்து, சில வருடங்கள் கழிந்த பின்னரே நடந்தது என்பது பாரதிதாசனுடைய அந்த ‘ரவிவர்மா பரமசிவ படம்’ போல இருந்த பாரதியை அவர் சந்திக்கும் அருமையான விவரிப்பே உறுதிப்படுத்துகிறது. ‘அவர்களுடைய சந்திப்பு 1915 வாக்கில் நடந்திருக்கலாம்’ என்று முனைவர் பா இறையரசன் குறிப்பிடுகிறார் (இதழாளர் பாரதி, பக்கம் 26-27).

‘பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த’ பாரதிதாசனுக்கு எழுதிய அறிமுகக் கடிதத்தின் தேதியை அடிப்படையாக வைத்து இந்த அனுமானம் செய்யப்பட்டுள்ளது. கடிதம் எழுதப்பட்ட தேதியையும் ‘அன்றுதான்’ இருவரும் சந்தித்திருக்க முடியும் என்பது பாரதி, பாரதிதாசனைச் சந்தித்ததைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்பிலிருந்தும் இந்த அனுமானம் சரியாக இருக்கலாம் என்று தோன்றினாலும், பாரதிதாசன் சொல்லியிருக்கும் ‘வேணுநாயகர் வீட்டுத் திருமணத்தில் நடந்த‘ சந்திப்பில்லை இது என்பது வெளிப்படை. ஆகவே, பாரதியின் கடிதத்தில் காணப்படும் தேதிக்கு ஓரிரு மாதங்கள் முன்னதாக இந்தச் சந்திப்பு நடந்திருக்கக் கூடும். பாரதிதாசன், கவிபாடக் கூடியவர் என்ற செய்தியை பாரதி அறிய இதற்கும்மேல் காலம் எடுத்திருக்க முடியாது அல்லவா? அப்படி, இருவரின் முதல் சந்திப்பும் நடந்தது 1915 அல்லது 1914ன் இறுதிப் பகுதி என்றே வைத்துக் கொள்வோம்.

அப்படி ஒரு முடிவுக்கு வந்தால், பாரதியுடன் பாரதிதாசன் பழகியது பத்தாண்டுகளில்லை; மூன்றாண்டுகள் மட்டுமே என்பது தெளிவாகிறது. இது இரண்டு கவிஞர்களுடைய வாய்மொழி மூலமாகவும் உறுதியாகிறது.

அதற்குமேல், போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். அதாவது, பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முன்னால். அல்லது அவர்கள் அந்தச் சமயத்தில் சந்தித்திருந்ததாகவே வைத்துக்கொண்டாலும், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம்.

‘இந்தியா பத்திரிகையைத் தன் தோளில் சுமந்து, பாரதிதாசன் தெருக்களில் விற்றார்’ என்ற கூற்று அடிப்படையற்றது என்று ‘இதழாளர் பாரதி’ நூலில் முனைவர் பா. இறையரசன் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஏனெனில் இருவரும் சந்தித்தது 1915ல், இந்தியா பத்திரிகை நின்று போனது 1910ல் என்பது அவருடைய கருத்து. (இதழாளர் பாரதி, பக்கம் 27) இப்படி, சில இடங்களில் பாரதிக்கு மிக நெருக்கமானவர்கள் சொல்லும் தகவல்கள் பிழையாகவும், தவறாகவும், பொருத்தமற்றனவாகவும் தென்படுகின்றன. இவற்றைப் பற்றி என்னுடைய மற்ற கட்டுரைகளில் (வெடிக்காய் வியாபாரம்–ஓர் எடுத்துக்காட்டு) குறித்திருக்கிறேன்.

எனவே, பாரதி வாழ்க்கையை, அவன் கருத்தை, அவன் கொண்டிருந்த நம்பிக்கைகள், அடைந்திருந்த முடிபுகள், வாழ்க்கையையும் மரபையும் பற்றிய அவனுடைய கருத்துகள் என்று எதுவாக இருந்தாலும், அதற்கு அணுக்கச் சான்றாக எடுத்துக் கொள்ளக்கூடியதில் முதல் பங்கு வகிப்பது என்னவோ அவனுடைய எழுத்து மட்டும்தான். மற்றவர்கள் எழுதியிருப்பதை எல்லாம் நுணுக்கமாகப் பரிசீலித்த பிறகே ஒரு முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில், பாரதிதாசன் சொல்லும் கருத்தில் அவ்வளவாக வலு இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

அடிப்படையே இல்லாத ஒரு விவரிப்பு. அதிலும் ஒரு வாக்கியத் துணுக்கை மட்டும் கத்தரித்து எடுத்து, தற்போக்கில், தன் விருப்பத்துக்கு இணங்க ஒரு விளக்கம். பாரதியை வெறுக்கிறோம், காழ்ப்பை உமிழ்கிறோம் என்று அறிவித்தபடி இயங்கும் இப்படிப்பட்ட சிலருடைய கருத்துகளை ஒருமுறைக்கு நான்குமுறை பரிசீலித்த பிறகே எந்த முடிவையும் எடுக்கலாகும் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரு வெங்கடேசன் போன்றவர்கள், திறந்தநிலை ஆய்வுகளை மேற்கொள்ள இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்தத் தக்கது.

4 Replies to “‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி”

  1. ஹரிகி ஐயாவின் ஆழ்ந்த இலக்கிய அனுபவமும், பாரதி வரலாற்றில் அவருக்கிருக்கும் பரந்த அறிவும் வெங்கடேசன் ஐயாவின் முந்தய கட்டுரைக்கு அரணாய் இருக்கின்றன. விருப்பு வெறுப்பற்று பாரதியைப் புரிந்துகொள்வதே நாம் பாரதியின் நினைவுக்கு காட்டும் முதற்கண் மரியாதை.

    நன்றி

    ஜயராமன்

  2. பாரதியைப் பாரதியாகப் பார்க்க எவ்வளவு தடைகள்? தடங்கல்கள்?முட்டுக்கட்டைகள்? குழப்பங்கள்?

    ஹ‌ரிகிருஷ்ண‌னின் தெளிவான‌ அல‌ச‌லுக்கு என் பாராட்டுக‌ள்.
    இத‌ற்குக் கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ர்க‌ளுக்கும் என் ந‌ன்றி! இல்லையென்றால் இந்தப் பொருளின் ப‌ல‌ கோண‌ங்க‌ளைப் புரிந்துகொண்டிருக்க‌ முடியாது!

    ப‌சுப‌தி

  3. பாரதியை மட்டுமல்ல யாரையும் அவர் கூறும் கருத்துகளை நேர்மையுடன் காணும் பக்குவம் வளராமல் இருப்பது வருந்தத்தக்கது.

    என் கணிப்பில், இதற்கு அடிப்படையான காரணம், கற்றவர்களே நேர்மையான பாதையில் இருந்து விலகி, அறிந்தே சாய்வுகள் கொண்டிருப்பது.

    இந்துத்துவம், தலித்துவம், இசுலாமியத்துவம், கிறித்துவத்துவம், ஆரியத்துவம், திராவிடத்துவம், இன்னும் பல்வேறு இறுக்கமான சாதி-சமய வன்சாய்வுகள் எல்லாம் இதற்கு எடுத்துக்காட்டுகள். உலகில் எல்லோரையும் திருத்த முடியாது. தனிமனிதர் தன்னை திருத்திக்கொள்ளலாம்.

    அரிகிருட்டினன் அவர்களின் அருமையான அலசலுக்கு என் நன்றிகளும் உரித்தாகும்.

    செல்வா

  4. எப்படியாவது பாரதியை தமிழின் எதிரி மற்றும் ஆரியன் என நிரூபிக்க முயலும் முட்டாள்களுக்கு பதில் சொல்வதன் மூலம் பாரதியைப் பற்றிய அரிய தகவல்களை கிடைக்கவைத்திருக்கின்றனர் அம்மக்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி. தமிழறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *