வெறும்கால் அறிவியல்

“மூக்குக் கட்டைப் பிரிக்கப் போகிறேன். ரத்தம் வந்தால் குடித்துவிட வேண்டும். என் மேல் துப்புகிற வேலையெல்லாம் வேண்டாம். ஒருவர் என்மேல் துப்பி, என் சட்டையெல்லாம் ஒரே ரத்தக் கறையாகிவிட்டது. கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் செய்தபின் ஒரு பொட்டு கூட ரத்தம் வராமல், வலியும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தெம்பாக சுற்றிக்கொண்டிருந்தேன். கட்டு பிரிக்கப்போனால் இப்படி ரத்தம், வலி என்றால் வயிற்றைக் கலக்காமல் என்ன செய்யும்!

படுக்க வைத்து என் வயிற்றின் மேலேயே மருத்துவக் கருவிகள் நிறைந்த துண்டையும் வைத்தார். மெல்ல மெல்ல கட்டை அவிழ்த்து, ஒரு இடுக்கியை உபயோகித்து என் மூக்குக்குள் இருக்கும் பஞ்சை சரேலென்று உருவினார்.

என் கண்ணை யாரோ பிடுங்கிப்போட்டது போல் வலித்தது. முகத்தை அசைக்கவோ, முனகவோ கூட முடியாதபடி வலி. கண்களிலிருந்து கட்டுப்பாடில்லாமல் தாரை, தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

“You are a man! அழக்கூடாது!” என்றார் டாக்டர்.

ஒரு பக்கத்தில் வலி எப்படி இருக்கும் என்று புரிந்து போனதால், இன்னொரு பக்கத்துக்கான வலியை எதிர்பார்த்துப் படுத்திருந்தேன். ஒவ்வொரு மைக்ரோ விநாடியிலும் முதுகில் ஏதோ ஊர்ந்து நகர்ந்தது. எதிர்பார்ப்பு இன்னும் வலியை அதிகரிப்பதாக இருந்தது.

அடுத்த மூக்கிலிருந்தும் பஞ்சை உருவினார் டாக்டர்.

மீண்டும் கண்ணைப் பிடுங்கிய வலி. மீண்டும் கண்ணீர். கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். முகத்தின் ஒரு பக்கத்தில் வலி சேற்றைப் பூசியது போல் விறு, விறுவென்று இறுக ஆரம்பித்தது. அதுவரை என் வாழ்நாளில் அப்படிப்பட்டதொரு வலியை அனுபவித்ததே இல்லை.

“கண்ணைத் திறந்து பார்… இப்படி பயந்து கொண்டிருக்கிறாயே? உன் மூக்கில் எத்தனை நீளம் பஞ்சு இருந்தது என்று பார்க்கவேண்டாமா?”

கண்களைத் திறந்து பார்த்தேன்.

ஒரு முழநீள பஞ்சுத்துணியை இடுக்கியில் பிடித்துக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.

இவ்வளவு நீளமான பஞ்சா என் மூக்கில் இருந்தது? மூக்கு இன்னும் அதிகமாக வலிப்பதைப் போலிருந்தது.

கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் இந்தியர்களுக்கு இருக்கும் வளைந்த மூக்குத்தண்டு (Deviated septum) எனக்கும் இருந்தது. ஆனால் நாளாக, நாளாக ஒரு பக்கம் கிட்டத்தட்ட முழுவதுமாக மூடி, மூச்சே விடமுடியாமல் தவித்தேன். டாக்டர்கள் சில வருடங்கள் முன்பே கேட்டுக்கொண்டும் தள்ளிப்போட்டுக்கொண்டே போய், ஒரு வழியாய் அலுவலக வேலையில் சற்று ஓய்வு கிடைத்ததும், ஆபரேஷனுக்கு நாள் குறித்துக் கொண்டேன். ஆபரேஷனுக்கு முதல்நாள் அட்மிட் ஆனால் ஆபரேஷனுக்கு அடுத்த நாள் ரிலீசாகி விடலாம் என்றிருந்தார் டாக்டர். மொத்தம் இரண்டு நாட்கள் மருத்தவமனையில் இருக்க வேண்டும்.

மருத்துவமனையில் படுத்துக்கொண்டு எந்தத் தொந்தரவும் இல்லாமல் புத்தகங்களைப் படிப்பதைக் குறித்த ஒரு ரொமாண்டிக்கான எண்ணம் எனக்கு உண்டு. பதினைந்து நாட்கள் படுத்துக்கொள்ள நேர்ந்தால் படிப்பதற்காகவே ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸிஸ்’ஸை இன்னும் படிக்காமலே வைத்திருக்கிறேன். மூக்கு ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குப் போகும்முன் கர்மசிரத்தையாக என்னிடம் இருக்கும் புத்தகங்களை அலசி நான் தேர்வு செய்தது ரிச்சர்ட் ஃபெயின்மனின்(Richard Feynman) “யார் என்ன நினைத்தால் உனக்கென்ன?” (What do you care what other people think?) என்ற புத்தகம்.

என் வாழ்வில் மிகவும் தாமதமாகத்தான் நான் ஃபெயின்மனைக் கண்டடைந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் புத்தகக்கடைகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது தற்செயலாக இரு பொக்கிஷங்களைக் கண்டெடுத்தேன். ஒன்று பொக்கிஷமென்று நான் தெரிந்தே வாங்கியது – நீண்டநாட்களாய் தேடிக் கொண்டிருந்த புத்தகம் – “The man who knew infinity” – கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு. இன்னொன்று ‘அட, தலைப்பு சுவாரசியமாக இருக்கிறதே’ என்று நினைத்து வாங்கிய “Surely you are joking Mr.Feynman” என்ற புத்தகம். அப்போது எனக்கு ஃபெயின்மன் என்றால் யாரென்றே தெரியாது.

ஃபெயின்மன் இயற்பியலில் க்வாண்டம் எலெக்ட்ரோடைனமிக்ஸில் (Quantum Electrodynamics) தன்னுடைய பங்களிப்புக்காக நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியபோது அதனை ஆய்வு செய்து மூலகாரணத்தைக் கண்டுபிடித்தார். அமெரிக்க அணு ஆயுத ஆராய்ச்சி, உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அணுக்கருப்பொருட்களுக்கிடையேயான உறவுகளைப் பற்றிய இவருடைய வரைபடங்களான “Feynman Diagrams”, இயற்பியலின் சில முக்கிய கருத்தாக்கங்களில் (String theory, M theory) இன்றும் பெரும்பங்கு வகிக்கின்றன.

“Surely you are joking Mr.Feynman” ஏற்படுத்திய சுவாரசியத்தைத் தொடர்ந்து ஃபெயின்மனின் பிற புத்தகங்களைப் படித்தேன். இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும், இவருடைய வகுப்பறைப் பாடங்களான “Feynman Lectures” என்ற தொகுப்பின் பல பகுதிகளைப் படித்தேன். இயற்பியலின் எவ்வளவு அழகான, சுவாரசியமான, அற்புதமான விஷயத்தை என் பள்ளி நாட்களில் இழந்திருக்கிறேன் என்பதை இப்பாடங்களைப் படித்தபின் தெரிந்துகொண்டேன்.

வறட்டுத்தனமாக இல்லாமல், இயற்பியலின் அடிப்படைப் பயன்பாடுகளை நாம் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களைக் கொண்டே சிறிது, சிறிதாக ஒரு ஆபராவோ, கர்நாடக சங்கீதக் கச்சேரியோ முன்னேறிச் செல்வது போல், எளிய விதிகளிலிருந்து, கடினமான கோட்பாடுகளை நோக்கி நகர்த்திச் சென்றார் ஃபெயின்மன். “ஒரு எளிய மனிதருக்குப் புரியும்படி ஒரு விஷயத்தை நமக்கு சொல்லத் தெரியவில்லையென்றால், அந்த விஷயம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று அர்த்தம்” என்பது ஃபெயின்மனின் கோட்பாடு.

இயற்பியல் இவ்வளவு சுவாரசியமான விஷயம் என்பது, என் பொறியியல் கல்லூரியின் முதல் வருடத்தில் “Resnick and Halliday” என்ற இருவர் எழுதிய இயற்பியல் பாடப்புத்தகங்களைப் படித்தபோதே புரிந்திருந்தது. ஆனால் முழுக்கவனமும் செலுத்தும்படியாக இல்லாமல் முதல் வருடத்துக்கான ஒரு சம்பரதாயமான சப்ஜெக்டாகவே அது இருந்தது. கூடவே கல்லூரி நாட்களுக்கான வழக்கமான கவனச்சிதறல்களும் சேர்ந்து கொண்டன. ஆனாலும் அந்தப்புத்தகத்தை எங்கள் பாடப்புத்தகமாகத் தேர்வு செய்தது என் கல்லூரி செய்த வெகு சில நல்ல விஷயங்களுள் ஒன்று. ஏனென்றால் அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் இயற்பியல் பாடப்புத்தகமாக ஒரு மிகவும் தண்டமான புத்தகம் இருந்தது. அது நம் மாநிலப் பள்ளிக் கல்வித்திட்டத்தின் அறிவியல் புத்தகங்களை விட மோசமானதாக இருந்தது. ஒரு வரையறை, அதற்குக் கீழே நான்கு வரிகள். அதற்குக் கீழே கேள்வியும், கேள்விக்கான பதிலும்! தேர்வில் இந்தக் கேள்வி வரும், அதற்கான பதில் இது – என்பதற்கான புத்தகமாக மட்டுமே சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் புத்தகம் இருந்தது.

“Resnick and Halliday” எழுதிய அந்த அற்புதமான புத்தகம் இருந்தும், என் கல்லூரி மாணவர்கள் பலர் சென்னைப் பல்கலைக்கழகப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்கள். “R&H” படித்தவர்களிலும் பலபேர் அதை நெட்டுரு போட்டுதான் படித்தார்கள். “எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு” என்ற நியூட்டனின் மூன்றாவது விதியை விளக்கும்போது ஒரு உதாரணம் “R&H”-இல் தரப்பட்டிருந்தது. ஒரு மனிதன் கதவை உதைப்பது “வினை”யாகவும், உதைத்தபின் காலில் ஏற்படும் வலி “எதிர்வினை”யாகவும் அந்த உதாரணத்தில் சொல்லப்பட்டிருந்தது. நகைச்சுவையாக “வெறும்காலோடு உதைத்தால் வலி இன்னும் அதிகமாக இருக்கும்” என்றும் அந்த உதாரணத்தில் சொல்லப்பட்டிருந்தது. தேர்வில் கேள்விக்கு உதாரணத்தோடு பதில் எழுதிய நண்பன், மறக்காமல் அந்த “particularly when the foot is bare!” என்ற வரியையும் எழுதி வைத்தான்.

இது அந்த நண்பனின் தவறாக நான் சொல்லமாட்டேன். இந்த செக்குமாட்டுத்தனம் பள்ளிக்கல்வியிலிருந்து ஆரம்பிக்கிறது. இது இந்தியக் கல்வித்திட்டம், குறிப்பாக மாநிலக் கல்வித்திட்டத்தின் விளைவு. அறிவியல் மட்டுமில்லை, கணிதம், வரலாறு, புவியியல் எதுவுமே கேள்விகளாலும், பதில்களாலும் மட்டுமே நம் பள்ளிப்பாடங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு தலைப்பையும் நம் வாழ்வுடனோ, அன்றாடப் பயன்பாடாகவோ பார்ப்பதற்கு நம் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதில்லை. நம் பாடத்திட்டத்தை, முக்கியமாக அறிவியல் பாடங்களையும், பயிற்று முறையையும் வைத்துக் கொண்டு, நாம் மேதைகளை உருவாக்க முடியாது. விதிவிலக்குகள் மட்டுமே நம் அறிவியல் கிடங்கின் மூலதனமாக இருக்கும்.

“What do you care what other people think” புத்தகத்தில் “The making of a scientist” என்ற கட்டுரையில் ஃபெயின்மன், தன் மிகச்சிறு வயதிலேயே தன் தந்தையிடமிருந்து புத்தகத்தில் படித்த விஷயங்களை, உருவகப்படுத்திப் பார்ப்பதன் மூலம் எப்படிப் புரிந்து கொள்வது என்று கற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார்.

“நானும், என் அப்பாவும் டைரான்னசரஸ் ரெக்ஸ் என்ற அழிந்த உயிரினத்தைப் பற்றி என்சைக்ளோபீடியாவில் படித்துக்கொண்டிருப்போம் – ‘இந்த டைனோசரின் உயரம் 25 அடி. அதன் தலையின் நீளம் 6 அடி’ என்று புத்தகத்தில் எழுதியிருக்கும். என் அப்பா படிப்பதை நிறுத்தி விட்டு என்னிடம் சொல்வார் – ‘இந்த வரிகளில் என்ன சொல்கிறார்கள் என்று யோசித்துப் பார்ப்போம். இந்த டைனோசர் நம் வீட்டின் முன் பகுதியில் இருந்தால், அதன் தலை நாம் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த இரண்டாவது மாடியின் ஜன்னல் வரைக்கும் வரும். ஆனால் அதன் தலை, இந்த ஜன்னலை விட அகலமானது. அவர் எனக்கு புத்தகத்திலிருந்து படித்துக்காட்டிய ஒவ்வொரு விஷயத்தையும், ஏதாவது ஒரு நடைமுறை விஷயத்துடன் தொடர்பு படுத்தி விளக்கிச் சொல்வார். என்னுடைய அப்பாவிடமிருந்து நான் படிக்கும் விஷயங்களை எப்படி உருவகித்துப் பார்ப்பது என்பதை கற்றுக் கொண்டேன். சிறு வயதிலேயே, ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கும், ஒரு விஷயத்தின் பெயரை மட்டும் தெரிந்து கொள்வதற்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டேன்” என்கிறார்.

ஃபெயின்மன் பாடங்களும், “Resnik and Halliday” பாடங்களும் நம் பள்ளிக்கல்வியின் பாடங்களாக அமைய வேண்டும். ஃபெயின்மன் பிரேசிலின் பாடத்திட்டத்தை விமர்சித்து ஆற்றிய உரையில் அவர் குறிப்பிடும் பிரேசிலின் கல்வித்திட்டமும், பள்ளியின் அறிவியல் புத்தகங்களைப் பற்றிய விமர்சனமும் வரிக்கு வரி நம் இந்தியப் பள்ளிக்கல்வித்திட்டத்துடன் ஒத்துப் போகிறது. அதே உரையில் அவர் அறிவியல் எப்படி நடைமுறை வாழ்வுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு நம் பாடத்திட்டங்களை நிர்ணயிப்பவர்களுக்கும், பாடப்புத்தகங்களை எழுதுபவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தரப்படவேண்டும்.

ஃபெயின்மன் “Surely you are joking Mr.Feynman” எழுதப்பட்டதற்குப்பின் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய ‘கல்ட்'(Cult) ஆகவே மாறிப்போனார். அதற்கு அவர் அறிவியல் ஆளுமை மட்டும் காரணம் இல்லை. இயல்பிலேயே ஃபெயின்மன் ஒரு பெரிய குறும்புக்காரர். மேலும் பலதுறைகள் மேல் ஆர்வமும் கொண்டவர். ஃபெயின்மன் தன்னுடைய மத்திம காலத்துக்கு மேல் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்; பிரேஸிலுக்கு சென்றிருந்தபோது பாங்கோ வாத்தியம் இசைக்கக் கற்றுக்கொண்டார்; கி.மு 3-ஆம் நூற்றாண்டின் மயன் நாகரிகத்தின் மிகவும் கடினமான சுவரெழுத்துக்கலையில் (Hieroglyphics) ஆர்வம் கொண்டு அவற்றைப் பாதுகாப்பதிலும், புரிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்தினார். லாஸ் அலமோஸின் (Los Alamos) அணு ஆராய்ச்சிக்கூடத்தில் பணிபுரிந்தபோது, ரகசிய ஆவணங்களை வைத்திருக்கும் அலமாரிகளைத் திறந்து, அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என நிரூபித்தார். ஒவ்வொரு முறை பூட்டுக்களை வலுவாக்கும்போதும், அத்தனை பூட்டுகளையும் திறந்து காண்பித்தார். இறுதியில் அரசாங்கம் பூட்டுக்களை பொருத்துவதற்கு முன் ஃபெயின்மனை விட்டு சோதிக்கச் சொல்லும்படி ஆனது.

ஃபெயின்மனின் இப்படிப்பட்ட வண்ணமயமான, உற்சாகமான இயல்பால் கவரப்பட்டு அவரை வழிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவருடைய பிராபல்யம் அறிவியல் வட்டாரத்தில் நிறையபேரின் எரிச்சலையும், பொறாமையையும் தேடித்தந்தது. ஒரு இயற்பியலாளரை தலை கலைந்து போய், எப்போதும் மோட்டுவளையைப் பார்த்தபடி வெகு தீவிரமான யோசனையில் ஆழ்ந்தவராகவே எதிர்பார்க்கும் பலருக்கு, குறும்புத்தனங்களைச் செய்த, உற்சாகமான ஃபெயின்மன் சங்கடமளிப்பவராக இருக்கிறார்.

அரசியல்வாதி, டாக்டர், போலிஸ் என ஒவ்வொருவரைப் பற்றியும் நமக்குள்ளே ஒரு பிம்பம் இருக்கிறது. நானும் கூட, ராக் ஸ்டார் போல தலையலங்காரம் (Hair-do) செய்திருந்த டாக்டரைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனேன். எனக்கு மூக்கில் ஆபரேஷன் செய்த டாக்டர் விடுமுறையில் சென்றுவிட்டதால், தன்னுடைய நண்பரான இன்னொரு டாக்டரிடம் என்னுடைய மூக்குக்கட்டைப் பிரிக்கச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். அந்த டாக்டர்தான் ராக்-ஸ்டார் போன்றிருந்த, உயரமான, உற்சாகமான இளைஞர். நிமிடத்திற்கு நான்கு ஜோக் அடித்தார்.

அவர் தோற்றம்தான் அப்படியென்றால், அவரிடம் வந்த மருத்துவக்கேஸோ அதற்கு மேல். கட்டுப் பிரித்த வலியால் கண்களை இறுக்க மூடிப்படுத்திருந்த என்னிடம், “என்னப்பா, இப்படி சோர்ந்து போயிருக்கிறாய்? இவரைப் பார். இவர் காதுக்குள் ஏதோ போய்விட்டதாம். அவரென்ன உன்னைப் போலவா துடித்துக் கொண்டிருக்கிறார்?” என்றார்.

கண்களைத் திறந்து பார்த்தேன். எனக்கு அடுத்த கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த ஒரு இளைஞரின் காதிலிருந்து ஒரு கரப்பான்பூச்சியை மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டிருந்தார் டாக்டர்.

சுவாரசியங்கள் ரிச்சர்ட் ஃபெயின்மனுடன் முடிந்துவிடுவதில்லை.

7 Replies to “வெறும்கால் அறிவியல்”

  1. One of the most interesting piece of write up ! I enjoyed reading and re-reading the same ! Hats off to Sri Sethupathy Arunachalam, he started from opening his dressing of the nose and ended opening many blind folds !

    Great !

  2. Very good writing on one of the most interesting scientists of all time. The best part about Feynman was his ability to connect with common man like us.

    An interesting anecdote about Feynman

    According to Professor Steven Frautschi, a colleague of Feynman, Feynman was the only person in the Altadena region to buy flood insurance after the massive 1978 fire, predicting correctly that the fire’s destruction would lead to land erosion, causing mudslides and flooding. The flood occurred in 1979 after winter rains and destroyed multiple houses in the neighborhood

    Courtesy : https://www.jewishvirtuallibrary.org/jsource/biography/feynman.html

  3. சேது

    என் மூக்கு இப்பொழுது வலிக்கிறது. நீங்கள் யுலிசெஸைப் படிக்காமலேயே இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். பெய்ன்மேன் பற்றிய சுவாரசிய்மான அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அவரைப் போன்றவர்கள் ஆசிரியர்களாகக் கிட்டியிருந்தால் இந்தியாவில் நிறைய நோபல்கள் உருவாகியிருப்பார்கள்

    அன்புடன்
    விஸ்வா

  4. ஃபெயின்மனும் பெயின்மேனும் (painman) என்று சொல்லலாமோ? சேது, மிக அழகாக விவரிக்கிறீர்கள். தொடக்கமும் முடிவும் சம்பந்தமில்லாததுபோல் தோன்றினாலும், பதிவுக்கு ஓர் அழுதத்தைக் கொடுப்பதே அதுதான். இசையை இப்படித்தான் மிக அழகாகச் சித்திரித்திருந்தீர்கள். இப்போது அறிவியல். இவைபோன்ற–தமிழில் அதிகம் அறியப்படாத–தலைப்புகளைில் மேலும் மேலும் நிறைய எழுதி, சிறந்தோங்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  5. 25 அடி, ஆறு அடி என்றால் ஃபெய்ன்மேன் எப்படி உருவப்படுத்திக்கொண்டாரோ அப்படித்தான் நானும் படித்தேன். ஆனால் நான் ஃபெய்ன்மேன் ஆகவில்லை. 🙂 ஜோக்ஸ் அபார்ட், எனக்குப் பாடம் சொல்லித் தந்த நிறைய வாத்திமார்கள் நன்றாக சொல்லித் தந்தார்கள். அவர்களுக்கு இணையான அளவில் ஒன்றுமே நடத்தாமல் இருந்த வாத்திகளும் இருந்தார்கள். ஆனால் இன்று ஒன்றும் தெரியாமல் ஆசிரிய வேலைக்கு வந்துவிடும் பலரைப் பார்கிறேன். கோட்டா என்று எழுதினால் செருப்பால் அடிப்பார்கள். கோட்டா மட்டுமே காரணமில்லை. அதுவும் ஒரு காரணம். கூடவே பொறுப்பின்மையும் ஒரு காரணம். என் தாத்தா ஆசிரியராக இருந்தவர். அவரது டெடிகேஷன் யாருக்கும் வராது.

    எனக்கு கல்லூரியில் ஆசிரியராக இருந்த பேராசிரியர்கள் 35 வருட அனுபவம் உள்ளவர்கள். ஒவ்வொரு முறை வகுப்பிற்கு வருமுன்பும் நோட்ஸ் எடுத்துக்கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். அதுவே வயது குறைந்த இன்னொரு பேராசிரியர் நோட்ஸ் எடுத்துக்கொள்ளமாட்டார், நோட்ஸ் வாங்கிப் படிச்சுக்கோங்க என்று சொல்லிவிடுவார். தலைமுறை இடைவெளிக்குள் டெடிகேஷன் மிகக்கடுமையாக குறைந்த்துவருகிறது.

    தினமும் ஒரு பதிவு எழுதக்கூட என்னால் முடியவில்லை. பல டைவர்சன்கள். டிவி, பாட்டு, குழந்தையுடன் விளையாட்டு, சும்மா இருப்பது, தூங்குவது என. மாற்றிக்கொள்ளவேண்டும்.

  6. பயனுள்ள பதிவு. நமது கல்வியாளர்களை எதிர்பார்ப்பதைவிட விளக்கெண்ணெய் கொண்டு ……….. கழுவிவிடலாம். மேசைவிளக்காயன்றி உமது அறிவு கலங்கரை விளக்காய் விளங்கும் பொருட்டு, இதுபோன்ற நூல்களை நீங்களே மொழிபெயர்த்தால் தமிழுலகம் வணங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *