அழகியல் அரசியல்
வனமாலி
14 Dec 2008 |
அச்சிட
ரோஹிந்தன் மிஸ்த்ரி என்ற இந்திய ஆங்கில எழுத்தாளரின் “Family Matters” என்ற நாவல் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பரவலான கவனிப்பைப் பெற்ற ஒன்று. சுவையாக எழுதப்பட்ட இந்த நாவலில் மும்பையில் வசிக்கும் ஒரு பார்ஸி குடும்பத்தின் வாழ்க்கை முறை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இக்கதையின் நாயகன் நாத்திகனாக இருக்கும்போது மிக நல்லவனாகவும், வாழ்க்கை மேல் காதல் கொண்டவனாகவும், கலகலப்பான ஆசாமியாகவும் சித்தரிக்கப்பட்டு, கதையின் இறுதிக்கட்டங்களில் பார்ஸி வாழ்க்கை, மதக்கோட்பாடுகள் மேல் நம்பிக்கை வரும்போது மிகவும் கோபக்காரனாகவும், வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விரும்பாதவனாகவும் காட்டப்பட்டிருக்கும்.
மிகவும் நுணுக்கமாக, ஒரு மனிதனின் இறை நம்பிக்கை, அவன் தன்னியல்பை இழக்கச்செய்வது போல் இந்த நாவலில் ரோஹிந்தன் மிஸ்த்ரி காட்டியிருப்பார். இது பெரும்பாலான நவீன இந்திய-ஆங்கில எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்கும் ஒன்று. இந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறு சிறு விவரங்களினால் ஒரு நம்பகத்தன்மை எழுப்பப்பட்டு யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பது போலக் காட்டப்படுகிறது. ஆனால் அவற்றினூடே ஓடும் ஒரு கருத்துச் சார்பு நமக்கு உடனே புலப்பட்டு விடுவதில்லை. எழுத்தாளரின் மனச் சாய்வு, அல்லது முன் தீர்மானப் பார்வை ஆகியன நாவலின் கதைப் போக்கைத் தீர்மானிக்கின்றன என்பது விவரப் பெருக்காலும், சொல்லழகினாலும், வார்த்தைகளின் கச்சித நளினத்தாலும் திறம்பட மறைக்கப்பட்டிருக்கும்.
ஒரு தனிமனிதனின் பிரச்சினை சமூகப் பின்னணியில் கேள்விகளை எழுப்பாத விதமாகப் பொருத்தப்பட்டு, மிக லாகவமாக சமூகமும், கலாச்சாரமும், இறை நம்பிக்கைகளுமே, அவன் தோல்விக்குக் காரணங்களாக அடுக்கப்பட்டுவிடுகின்றன.தனிமனிதரின் அத்தனை குணாதிசயங்களும், குற்றம் குறைகளும் சமூகக் காரணிகளால்தான் தோற்றுவிக்கப்படுகின்றன என்று நம்மை நம்ப வைக்க முயலும் ஒரு எழுத்து இது. இந்த வகை விரிந்த விவரணைகளைப் படித்து இலக்கியத்தை அணுகும் வாசகருக்கு யதார்த்த உலகைத் தாம் புரிந்து கொண்டு விட்டதான பிரமை கூட இந்தப் புத்தகங்களில் இருந்து கிட்டும். உலகத்தை விளக்க வந்த புத்தகம், உலகத்தைப் பற்றிய புனைவே உலகம் என்று வாசகரை நம்ப வைத்துவிடும். மிஸ்திரியின் இந்த எழுத்து மோசம் என்று சொல்ல நான் முயலவில்லை. ஆனால் இவருடைய எழுத்துக் கலை யதார்த்தத்தின் திறப்பு அல்ல, யதார்த்தத்தின் மீது செய்யப்படும் மறுகாலனியப் பூச்சு வேலை. இந்த வருடம் புக்கர் பரிசு பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger புத்தகமும் இப்படிப்பட்ட ஒரு புத்தகமே.
அழிப்பைக் கொண்டாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் எந்த சமூகத்தை அழிக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அதே சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவர்களாகவும், புகழ் அடைந்தவர்களாகவும் இருக்க முயல்வது ஒரு வரலாற்று வக்கிரம். ஆனால் இந்த வகை கருத்தாளர்கள் நிரம்பி வழியும் கருத்துலகு இந்தியக் கருத்துலகு. இவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியத்தையும், மரபு சமுதாயத்தையும் எந்தப் புத்தகம் இருளாகக் காட்டுகிறதோ அது முற்போக்கான, உற்சாகமளிக்கக் கூடிய பொக்கிஷம்.
இது ஒருபுறமிருக்க, இன்னொருபக்கம், சமூகத்தின் எந்த ஒரு பிரச்சனையையும் உளவியல் ரீதியாக அணுகி, சமூக அமைப்பின் மீது பழியைப் போடும் கூத்தும் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் பொதுமக்களால் கண்டிக்கப்பட்டபோது, தொலைக்காட்சித் துண்டுப்படத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தலித் மாணவர்கள் என்பதால், வன்முறையைக் கண்டித்த புத்தி பிராமணீயக் கட்டமைப்பின் உருவாக்கம் என உளவியல் ரீதியாக நிறுவினார் ஒரு பிரபல மனநல மருத்துவர்.
இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இப்படி உளவியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுபவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள் என்றாலும், எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக அணுகுதல் மார்க்சியத்திலேயே கூட இல்லை. உளவியல் என்பதே மார்க்சியப் பார்வையில் சந்தேகத்துக்கு உரியது. உளவியல் வல்லுநர் ஃப்ராய்டைக் கூட மார்க்சியம் வெகு காலம் தீண்டத்தகாத ஒரு சிந்தனையாளராகவே கருதியது. உளவியல் பார்வையால் உலகை அணுகிய காஃப்காவைக் கூட இடதுசாரி அறிவுஜீவுகள் வெகு காலம் ஒரு இழிவான சிந்தனையாளர் என்று கருதி அப்படியே அவர் குறித்துப் பிரசாரமும் செய்தனர்.
எல்லாத் தனிமனிதக் குறைகளுக்கும் ஒரு சமூக அமைப்பில் விடை தேடுவது ஒருவித தப்பித்தல் மனப்பான்மைதான். தம் குறைகளுக்குப் பொதுச் சமூகத்தையோ, அண்டை வீட்டாரையோ, இஸ்லாமியத் தீவிரவாதிகளையோ, பார்ப்பன சமூகத்தையோ காரணமாகக் காட்டி அவர்கள் அனைவரையும் அழித்து ஒரு புது சமுதாயத்தைப் நிர்மானம் செய்வோம் வாருங்கள் என்று அறைகூவி, அதற்குப் பல ஆயிரம் இளைஞர்கள் பலியாவதைப் போல அபத்தம் வேறெதுவுமில்லை.
பெரும்பாலான பொதுமனிதர்களுக்கு மக்களின் துயரங்களையும், ஏழ்மை, நோய், மற்றும் சமுதாய அடுக்குகளால் நேரும் துன்பங்களையும் கண்டு நெக்குருகிப் போகும் இயல்பு உண்டு. எந்தக் கட்சியையோ, கொள்கையையோ சார்ந்திராத இதுபோன்ற மக்கள்தான் எந்த ஒரு சமூகத்திலும் பெரும்பான்மையானவர்கள். இந்தப் பொதுமனிதர்களின் அடிப்படைக் கருணை உணர்வை வெகு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் பல தேர்ந்த உள்நோக்கங்கள் கொண்ட எழுத்தாளர்களும், அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ பேசும் அறிவுஜீவிகளும்.
எந்தவிதப் பிரச்சாரநெடியும் அடிக்காமல், மிக நுட்பமாகவும், அழகியலோடு கூடியும், பொது மனிதத் துன்பங்கள் மேல் மிகுந்த கரிசனம் கொண்டவர்கள் போல் காட்டி, வெகு நுணுக்கமாக இந்திய தேசியத்தையோ, இறை நம்பிக்கையையோ, பொத்தாம் பொதுவாக பிராமணீயத்தையோ துன்பங்களுக்கான காரணங்களாக நிறுவிவிடுகிறார்கள். ஏழை, எளிய மக்கள் மேலும், துன்பப்படுபவர்கள் மேலும் அன்பும், கரிசனமும் இருப்பதாகக் காட்டிக்கொள்தல்; அவர்கள் துன்பங்களுக்கான காரணங்களை அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ, சமூகவியல் ரீதியாகவோ நிறுவுதல். வேறென்ன வேண்டும் மக்களைத் தம் பக்கம் கவரவும், தம்மைப் புரட்சியாளராகவும், அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்ள?
நான்கு வருடங்களுக்கு முன்னால் ‘அன்பே சிவம்’ என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அதில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டவர் ஒரு சிவபக்தர். எந்நேரமும் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்பவர். திருடனாக வந்து எல்லோருடைய பெட்டி படுக்கைகளும் சுருட்டிக் கொண்டு ஓடுபவர் சமஸ்கிருதம் தெரிந்தவர்; உபநிஷத்துகளைச் சரளமாகச் சொல்பவர். அவர் திருடி வைத்திருக்கும் பொருட்களுக்குக் காவலிருப்பவர் ஒரு இந்து சாமியார்.
அதே சமயம் ஏழைகளுக்காக இறுதிவரை பாடுபடுவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு கம்யூனிஸ்ட். அந்த கம்யூனிஸ்ட்டைக் காப்பாற்றி அன்பே உருவாக நிற்பவர் கிறிஸ்துவர். இது எதுவுமே கறுப்பு-வெள்ளை எனப் பிரச்சாரம் போல் செய்யாமல், நாயகனை இறுதிவரை நல்லவனாகவும், கடுமையான துன்பங்களைத் தாங்கி சமூகத்துக்கு சேவகம் செய்பவனாகவும் காட்டி, மக்கள் மனதில் நுட்பமாகத் தம் கருத்துகளைப் பதித்துவிடுகிறார் இப்படத்தின் படைப்பாளி.
சமீபத்தில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ என்றொரு திரைப்படத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்களாகக் காட்டப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், நன்றாகக் குலுக்கப்பட்ட கோகோ-கோலா போலக் கொதித்தெழுந்த சாருநிவேதிதா ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் இந்துக்கள் படுமோசமாக சித்தரிக்கப்பட்டதற்காகக் கொதித்தெழவில்லை. இத்தனைக்கும், ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களைச் சித்தரித்த விதத்துக்கும், ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் இந்துக்களை சித்தரித்த விதத்துக்கும் கருத்தியல் ரீதியாகவே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
எத்தனையோ திரைப்படங்களில் கெட்டவர்களாக பல்வேறு ஜாதியினரும், மதத்தினரும் வந்து போவது போல் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இரண்டு காட்சிகளில் வந்துபோயின. ஆனால் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் மரணப்படுக்கையிலிருக்கும் நாயகனிடம், “நான் தெனமும் பூஜை செய்யறேண்டா… நான் வணங்கற சிவன் என்னைக்
கைவிடமாட்டான்.. நீ செத்துப்போவடா” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதுபோல் அப்பட்டமாக, இறை நம்பிக்கையையும், வஞ்சகத்தையும் சமமாக்கி வெளிப்படையாகவே காட்டியிருப்பார்கள். ஆத்திகம் பேசுபவரை அடியார் என்றும், நாத்திகம் பேசுபவரை நல்லவர் என்றும் அப்படப்பாடல் சொல்வது தற்செயல் இல்லை. இந்து மத நம்பிக்கைகளையோ, இந்துக் கடவுள்களையோ இழிவுபடுத்துவது நம் அறிவுஜீவிகளால் முற்போக்கான விஷயம் என்று முடிவுசெய்யப்பட்ட ஒன்று.
ஆனால் சிறுபான்மையினரை ஒரு கதாபாத்திரமாகக் கூட கெட்டவர்களாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்துக்காகக் கொதித்தெழும் நம் முற்போக்குவாதிகள் இதுவரை மும்பை குண்டுவெடிப்புகளை ஒரு சம்பிரதாயத்துக் கூட கண்டிக்காதது எந்த அளவுக்கு இவர்கள் நடுநிலையானவர்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.
எத்தனையோ சிவபக்தர்களும், ஆத்திகர்களும் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் குளமாகி, நெக்குருகி நின்றிருக்கிறார்கள். காரணம் திரைப்பட ஊடகத்தின் அழகியல். அரசியல் கட்சிகள் போல மேடை போட்டு, கெட்ட வார்த்தை பேசவில்லை இப்படம். ஒரு மிகப்பெரிய அறிவுஜீவித்தனத்தை முன்வைப்பது போலவே, ரோஹிந்தன் மிஸ்த்ரி, அரவிந்த் அடிகா நாவல்கள் போலவே, அருந்ததிராயின் அரைகுறைக் கட்டுரைகள் போலவே ஒரு தத்துவம் போல், இலக்கியம் போல் தன்னை முன்வைத்துக் கொண்டது ‘அன்பே சிவம்’ திரைப்படம்.
ஒரு கருத்தியலை முன்வைக்கவோ, எதிர்கொள்ளவோ பிரச்சார மொழியில் மேடை போட்டுக்கூவுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தன்னை நடுநிலையாகக் காட்டிக்கொண்டு, அறிவியல், இலக்கிய, கலை ரீதியாகப் பேசுவதும் அவசியமாக இருக்கிறது. இதைப் புறந்தள்ளும் எந்த ஒரு இயக்கமும் வெற்றிபெற சாத்தியமில்லை. இதற்கான சான்றுகளை சர்வதேச அரசியலிலிருந்து, திராவிடக் கட்சிகளின் அரசியல் வரையும், உள்ளூர் சிறுபத்திரிகைகள், அறிவுஜீவிகள் வரையிலும் காண முடியும்.
தொடர்ந்த இடதுசாரிப் பிரச்சாரத்தையும், அறிவுஜீவிகளையும் எதிர்கொள்ள அமெரிக்க வலதுசாரிகள் நடத்திய இலக்கிய பத்திரிகை ‘The Encounter’ என்பது. 1953-இல் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகைக்கான பண உதவிகளை ரகசியமாகச் செய்து வந்தது அமெரிக்க அரசாங்க உளவு நிறுவனமான CIA. ‘The Encounter’ கீழ்த்தரமான அரசியல் நெடியடிக்கும் கட்டுரைகளையோ, வெகுஜன கதைகளையோ பிரசுரிக்கவில்லை. இந்தப் பத்திரிகையில் பிரசுரமானவை அரசியலைப் பூடகமாகக் கொண்ட பல சிறந்த கலைப்படைப்புகள், கவிதைகள், கட்டுரைகள். பல இடதுசாரி அறிவுஜீவிகள் கூட தொடர்ந்து படித்து வந்த புத்தகம் இது.
அறுபது வருடங்களாக தமிழகத்தைச் சுரண்டி வரும் திராவிடக்கட்சிகளின் விதை, ஏழைகளுக்காக கோர்ட்டில் அவேசமாக முழங்கிய பராசக்தி திரைப்படத்தில் இருக்கிறது; வெறும் பாட்டுக்களால் நிரம்பி இருந்த திரை ஊடகத்தை, வசனங்களால் நவீனப்படுத்தித் தன்னை முன்னிருத்திக் கொண்டதில் இருக்கிறது; ஆரியர்-திராவிடர் என நிரூபணமேயில்லாத பிரிவினையை அறிவியல் ரீதியாகக் கண்டுபிடித்தது போல் நம்பவைத்து, மக்கள் மனதில் ஆழமான காழ்ப்புணர்வையும், வேற்றுமையையும் தூண்டியதில் இருக்கிறது.
‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற தத்துவத்துக்கு, ‘நானே பிரம்மம், என்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் அழிப்பேன்’ என்ற வெகு குழந்தைத்தனமான அர்த்தத்தை ஆதிசங்கரருடன் வாதிட்டவரால் கூட சொல்லியிருக்க முடியாது. ஆனால் அதையே தவளை, காகம் என்றெல்லாம் படிமங்களைக் கொண்டு பேசும்போது அழகான கவிதையாகிறது. இப்போது வெளிவரும் சிறுபத்திரிகைகளில் தரமானதான ஒன்றான ‘வார்த்தை’ இதழில் கூட இக்கவிதை பிரசுரமாகிவிடுகிறது. ஏனென்றால் அக்கவிதை முன்வைக்கும் காழ்ப்புணர்வு வெகு திறமையாக வார்த்தைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கலை, இலக்கியம், அறிவியல் துறைகளிலிருந்து தூர ஓடிப்போகும் எந்த ஒரு இயக்கமும் மக்களைச் சென்றடைவது சாத்தியமேயில்லை.
என் நண்பர் ஒருவர் சிறந்த சமூக சேவகர். துன்பப்படும் மக்களுக்கு உண்மையான பரிவுடனும், அக்கறையுடனும் உதவி செய்பவர். மறைமுகமான லாபங்களுக்காக மக்களுக்குச் சேவை செய்வதுபோல் நடிக்கும் இயக்கங்களைக் கடுமையாகச் சாடி எதிர்த்து வரும் அவருக்கு அறிவுஜீவிகள் என்றாலே ஆகாது. இரண்டு வரிகளுக்கொரு முறை திடீர் திருப்பத்தைத் தராத எந்தக் கட்டுரையையும் அவர் நான்கு வரிகளுக்கு மேல் படித்தது கிடையாது. பலதுறைகள் தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் ‘திண்ணை’ இணையதளத்தைக் கூடப் பார்வையிடுவது கிடையாது. ஓய்ந்திருக்கும் வேளையில் அவர் புரட்டிப்பார்ப்பது தன் அலமாரியிலிருக்கும் மறைந்த எழுத்தாளர் தேவன் எழுதிய புத்தகங்களைத்தான். கடுமையாக திராவிடக் கட்சிகளைச் சாடும் அவர் தினமும் பார்த்துப் புளகாங்கிதம் அடைவது கலைஞர் டிவி, ஜெயா டிவி, சன் டிவி இவைகளைத்தான்.
சென்றமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது கலைஞர் டிவியில் அவர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது தசாவதாரம் திரைப்படத்தில் வரும் ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் கிடையாது’ என்ற ‘அர்த்தம் மிகுந்த’ பாடலை! கடவுள் சிலையுடன் கட்டிக் கடலில் வீசியது கமலஹாசனை இல்லை, தன்னைத்தான் என்பதை அவர் எப்போது புரிந்து கொள்ளுவார் என்று தெரியவில்லை.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
14 December 2008 at 8:48 pm
இன்று ஏஷியாநெட்டில் ராஷ்ட்ரம் என்ற படத்தைக் காண்பித்தார்கள். கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்தவர்களும் மக்களுக்கு நன்மை செய்வதாகக் காண்பித்திருந்தனர், வில்லன்களை எதிர்த்து ஹீரோ(இவர் ஒரு கிறிஸ்தவர்) முதன் மந்திரியானதும் ஒரு வில்லனின் மகன் கேட்கிறார், “இதற்குத்தான் கோவில் கோவிலாகச் சென்றும், குருவாயூருக்கும் தேவிக்கும் வழிபாடு செய்தீர்களா “ என்று..இதைக் கேட்டதும் நான் ”அன்பே சிவத்தையும்” நாசரின் பாத்திரப்படைப்பையும், அவர் கூறும் “தென்னாடுடைய சிவனே “ என்ற வசனத்தையும் தான் நினைத்துக்கொண்டேன்.
மிக நல்ல கட்டுரை. உங்கள் பணி தொடரட்டும்.
-ஸ்ரீனி