முத்தாலம்மன் பொங்கல்

Chariot of Kallupatti templeகிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம் தலைவிரிச்சி ஆடுனப்ப ஆந்திராவுல உள்ள நவாப்புக படைஎடுப்புனால எங்க ஊருக்கு ஒரு பாட்டி ஆறு பெண் கொழந்தைகளோட வந்தாங்க.. கிராமத்துல அன்னைக்கு நல்ல வசதியா இருந்த அக்ரகார ராவ் ( அப்ப அவரு கிரமத்தலைவரா இருந்தவரு) வீட்டுலையும் நாயக்கரைய்யா வீட்டுலையும் பாட்டி புள்ளைங்களோட தங்குச்சி.. கிராமத்துக்கு வந்து அடைக்கலமான அவங்கள தங்களோட புள்ளையாவே நெனச்ச கிராமத்து மக்கள் அந்த ஆறு பொண்ணுங்களுக்கும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அந்த பாட்டி நாங்கல்லாம் தெய்வ பிறவிக.. எங்களுக்கு விதிச்ச சாபத்தால மனுசப்பிறவிகளா நடமாடிக்கிட்டிருக்கோம்.. சாபம் முடிஞ்சா பொறப்பட்டுருவோம் அப்படின்னாங்க..

உடனே ஊர் ஜனங்க எல்லாமா சேந்து அம்மா நீங்களும் உங்க புள்ளைங்களும் இங்க வந்த பின்னாடிதான் பஞ்சம் எல்லாம் போயி மழை தண்ணி வந்துச்சு எங்கள விட்டுட்டு போறேன்னு சொல்றீங்களே அப்படின்னு மொறையிட உடனே அந்த பாட்டியும் ஆறு பொண்ணுங்களும் நாங்க தீக்குளிச்ச பின்னால சுத்துப்பட்டியுலுள்ள நாப்பத்தெட்டு கிராமத்திலயும் தூவுங்க. நாங்க ஆதிபராசக்தியின் வடிவமா ஆயிருவோம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி உங்க மகள்களா இருந்து உங்க கொறைஎல்லாம் தீர்த்துவைப்போம் அப்படின்னு சொன்னாங்க..

இதுல எங்க ஊரைச்சுத்தி இருக்குற ஆறு கிரமத்துலையும் அவங்கவுங்க அம்மனுக்கு பேரு வச்சு வழிபட்டாங்க.

தமிழ்நாடே தண்ணியில தத்தளிச்சாலும் எங்க ஊருக்கு மட்டும் தூறல் மட்டும்தான் வரும்.. அப்படி ஒரு பூமி எங்களோடது.

அதனால அந்த பாட்டியும், பொண்ணுங்களும் சொன்ன மாதிரி ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி திருவிழா எடுப்போம் எங்க ஊரு முத்தாலம்மனுக்கு.. பக்கத்துல இருக்குற தேவன்குறிச்சியில ஆதிபராசக்தின்னும், கல்லுப்பட்டியில சரஸ்வதி அப்படின்னும், வன்னிவேலம்பட்டியில மகாலக்ஷ்மின்னும், அம்மாபட்டியில பைரவின்னும் , காடனேரியில திரிபுரசுந்தரின்னும், கிளாங்குலத்துல சபரின்னும், சத்திரப்பட்டியில சவுபாக்கியவதின்னும் கும்புடுறோம்.

எல்லா ஊர்லயும் ஒவ்வொரு பேரு இருந்தாலும் நாங்க அவள கூப்புடுறது முத்தாலம்மான்னுதான்..

வழக்கமா தீபாவளி முடிஞ்ச அடுத்த வாரமே வரும் இந்த திருவிழா.

அம்மன் செய்தல்

திருவிழாவுல மொதல்ல அம்மா பட்டியிலதான் எல்லா ஊரு அம்மனும் செய்வாங்க.. அம்மா பட்டி அம்மன் அங்கேயே இருக்குறதுனால அதுக்கு சப்பரம் கிடையாது.. மத்த ஊரு அம்மனும் இங்கதான் உருவாகும்கிறதால எல்லா ஊர்ல இருந்தும் சப்பரம் கட்டி எடுத்துக்கிட்டு வருவாங்க அவங்க ஊரு அம்மன கூட்டிக்கிட்டுப்போக. ஏழு ஊரு அம்மனும் ஒரே இடத்துல உருவாகி கண்ணு மட்டும் தொறக்காம வச்சிருப்பாங்க.. ராத்திரி எட்டு மணிக்கு மேல கண் தொறப்பாங்க.. அதுக்கு அப்புறம்தான் ஊர்க்காரங்க போய்ப்பாக்கலாம். ராத்திரிஎல்லாம் ஏழு ஊர்க்காரங்களும் அம்மாபட்டிக்கு வந்து கண் தொறந்த அம்மனப்பாப்பாங்க.. மறுநாள் காலையில அவங்க அவங்க ஊரு சப்பரத்த எடுத்துக்கிட்டு வந்து அவங்க ஊரு அம்மன கூட்டிட்டுப்போவாங்க.. அந்த நேரத்துல மொத்த கிராம மக்களும் என்னமோ சொந்த மகள வெளியூருக்கு அனுப்புறமாதிரி கண்ணு கலங்குரதென்ன, கொலவ போடுரதென்ன அப்படியே உணர்ச்சி மயமா இருக்கும்.. எந்த ஊரு அம்மன் அவளோட ஊருக்கு கெளம்பினாலும் அம்மாபட்டி அக்காவ பாத்துகிட்டேதான் இருக்குறமாதிரி தூக்கிட்டுப்போவாங்க.. ஊர் எல்லைய தாண்டுனதும் சீக்கிரமா சப்பரத்தோட அவங்க ஊருக்கு போயி அம்மனுக்கு பொங்கல், படையல், நேத்திக்கடன் எல்லாம் சீரும் சிறப்புமா நடக்கும்.. எப்படி இருந்தாலும் ஒரு பாட்டம் மழை கண்டிப்பா உண்டு..

சப்பரம் கட்டுதல்..

இந்த சப்பரம் கட்டுறது மாதிரி ஒரு சந்தோஷம் எங்கேயும் கிடைக்காது. அம்மாபட்டி தவுர எல்லா ஊர்க்காரங்களும் அவங்க ஊர் அம்மன கூட்டிட்டுபோக சப்பரம் கட்டிட்டு வருவாங்க.. அம்மன கவுரதையா கூட்டிட்டுபோக.. என்ன இருந்தாலும் அவங்க அவுங்க ஊர் தெய்வம் இல்லையா ?? அதனால அந்தந்த ஊர் சக்திக்கு ஏத்த மாதிரி சப்பரம் கட்டிட்டு வருவாங்க. இந்த மோட்டார் வச்சி இழுக்குறது.. சக்கரத்துல கட்டி இழுக்குறது அப்படிங்கிற கதையே கிடையாது.. தலைமேலேயே தூக்கிட்டுப்போறதுதான்.

திருவிழா சாட்டுன ஒடனேயே சப்புரம் கட்டுறதுக்கு வேலை ஆரம்பமாயிரும்.. மூங்கில் கம்பையும், தென்னங்கயிறையும் ஊர் தெப்பக்குளத்துல போட்டு ஊற வைக்க ஆரம்பிச்சிருவாங்க.. அப்புறம் ஊர்ல பரம்பரையா சப்புரம் கட்டுற எங்கூரு ஆசாரி சப்பரத்த நிப்பாட்ட மூனும் மூனும் ஆறு தாங்கிய கட்டிவச்சிட்டு அதுக்கு மேல இருந்துதான் சப்பரம் ஆரம்பமாகும்.. ஒவ்வொரு அடுக்கா கட்ட ஆரம்பிக்க எங்கள மாதிரி சிண்னபபயளுகளுக்கு கலர் பேப்பர் ஓட்டுற வேலையும், ஜிகினா ஓட்டுற வேலையும், சனலு, கயிறு அத இத எடுத்துத்தர்ற வேலையும் குடுப்பாங்க. பாத்துக்கிட்டே இருக்கும்போது சப்பரம் சரசரன்னு உசரமாயிட்டிருக்கும்.. அப்படியே அப்புறம் அம்மன கூட்டிட்டு வார அன்னிக்கு காலையில வரைக்கும் அலங்காரம் நடக்கும். மைக்செட் கட்டி பாட்டு ஓடிக்கிட்டிருக்கும்.. இந்த படத்த பாத்தீங்கன்னாலே தெரியும் எப்படி தூக்கிட்டுப்போறாங்கன்னு .. ஊர்ல தலைக்கட்டுக்கு இத்தனைன்னு வரி வசூல் பண்ணி மொத்த செலவையும் பகிர்ந்துக்குருவோம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி வார திருவிழா இது.. சும்மா கொண்டாடிரவேனாமா ???
ஊரே ஜெகஜோதியா சீரியல் செட்டு என்ன, ஆடலும் பாடலும் என்ன, பட்டிமண்டபம் என்ன, இசைக்குழு என்ன, குறவன் கொறத்தி ஆட்டம் என்ன, கரகாட்டம் என்ன அப்படின்னு ஊரே மூணு நாளைக்கு அமர்க்களப்படும்.

கரைவேட்டி, வட்டம் சதுரம்னு எவனாவது பேசுனா வாயிலயே போடுவாய்ங்க.. நம்மூரு திருவிழா .. நீ கல்லுப்பட்டிக்காரன் அவ்வளவுதான்.. அதைத்தாண்டி யாரும் யோசிக்க மாட்டாங்க.. சப்பரம் தூக்கும்போது ஒரு லட்சம்பேரு ஓ ன்னு சத்தம் போட்டா எப்படி இருக்கும்.. அப்படியே நம்மூரு சப்பரம் மேல வந்துருச்சிரா அப்படின்னு ஒரே சந்தோஷமும் கும்மாளமுமா இருக்கும். தூக்க ஆரம்பிச்ச உடனேயே விறுவிறுன்னு ஓட ஆரம்பிச்சிருவோம்.. சப்புரம் தூக்க ஒரு செட்டுக்கு அம்பது பேருன்னா கூடயே ஒரு அம்பது ஓடி வருவாங்க.. யாருக்காவது முடியலைன்னா கைமாத்தி விட்டுட்டு அவங்க வெளிய வந்துரனும்.. அடுத்த ஆளு தாங்குவாங்க.. இப்படியே அம்மாபட்டி வர்றதுக்குள்ள ஒரு அஞ்சி வாட்டி கீழே வச்சு வச்சு தூக்கிட்டுப்போவாங்க.. அம்புட்டு கணம் இருக்கும்.. அம்மாபட்டி எல்லைக்குள்ள வரும்போது மத்த அஞ்சு ஊர்ல இருந்தும் சப்பரம் வரும் எல்லாம் ஒரே நேரத்துல அம்மாபட்டிக்குள்ள நுழையும்போது திருவிழான்னா எப்படி இருக்கும்னு பாக்கலாம்.. அத்தனை தலைக.. அத்தனை ஆளுங்க ஒரே பக்திமயமா இருக்கும்.. ஒரு சண்ட.. ஒரு பஞ்சாயத்து.. ஒரு பிக்பாக்கெட் ஒன்னு இருக்கனுமே.. எல்லாருக்கும் ஒரே எண்ணம்தான் .. அது முத்தாலம்மன் மட்டும்தான். அப்புறம் எல்லா ஊர் அம்மனுக்கும் தீபாராதனை நடத்தி அந்தந்த ஊர் பூசாரி அம்மன தூக்கிட்டு அவங்க அவங்க ஊருக்குப் போவாங்க..

ராத்திரிவரைக்கும் எல்லாரம் பூஜை பண்ணிட்டு ராத்திரி கிட்டத்தட்ட பனிரெண்டு மணிக்கு அம்மன கரைக்கபோவாங்க.. அதுவரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்த மாதிரி இருந்த நம்மூரு அம்மன் பிரிவுசோகத்துல சிரிப்ப விட்டுட்ட மாதிரி இருக்கும்.. கரைக்கிற இடத்துக்கு ஆம்பளைக தவிர யாருக்கும் அனுமதி கிடையாது.. பொம்பளைங்க பாத்தா மனசு தாங்காதுங்கிரதுனால அவங்களுக்கு அனுமதி இல்லை. அம்மனுக்கு கறிச்சோறு ஊட்டி விட்டு தீபாரதனைஎல்லாம் காட்டி கடைசியா தள்ளிவிட்டு உடைச்சிருவங்க.. மறுநா தாண்டிருச்சின்னா இதேபோல திருவிழா நடக்கணும்.. அம்மன தினமும் திருவிழா கோலத்துலையே வச்சுஇருந்தா ஊருதாங்குமா.. அதனால பூசைய பண்ணிட்டு நம்ம கொறைகள சொல்லிட்டு அம்மன கரைச்சி விட்டுருவோம்.. அத்தோட திருவிழா முடியும்..

சிறப்பு என்னன்னா.. எந்த மூலையில இருக்குற கல்லுப்பட்டிக்காரானுகளயும் அன்னைக்குப்பாக்கலாம். நீ நாயக்கரு, செட்டியாரு, தேவரு, தலித்து அப்படின்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஊரே ஒண்ணா சேர்ந்து கொண்டாடுற திருவிழா இது. இன்னைக்கு வரைக்கும் முத்தாலம்மன் அருளால எந்த பிரச்சினையும் இல்லாம போய்க்கிட்டிருக்கிற எங்க ஊர் முத்தாலம்மன் பொங்கல் இதுமாதிரி எப்பவும் நடக்கனும்னு வேண்டிக்கிட்டு இந்த கட்டுரைய படிக்கிற எல்லாத்துக்கும் எல்லாம் நல்லபடியா நடத்திக்குடு தாயேன்னு வேண்டிக்கிறேன்.

Tags: , , , , , , , ,

 

15 மறுமொழிகள் முத்தாலம்மன் பொங்கல்

 1. மதுரபாரதி on December 11, 2008 at 11:37 am

  //ஏழு ஊரு அம்மனும் ஒரே இடத்துல உருவாகி கண்ணு மட்டும் தொறக்காம வச்சிருப்பாங்க.. ராத்திரி எட்டு மணிக்கு மேல கண் தொறப்பாங்க.. அதுக்கு அப்புறம்தான் ஊர்க்காரங்க போய்ப்பாக்கலாம். ராத்திரிஎல்லாம் ஏழு ஊர்க்காரங்களும் அம்மாபட்டிக்கு வந்து கண் தொறந்த அம்மனப்பாப்பாங்க..//

  சென்னை நங்கநல்லூரிலிருந்து மூவரசன்பேட்டைக்குப் போகும் வழியில் ‘ஏழூரம்மன் கோவில்’ என்று ஒன்றிருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

  கட்டுரையின் மொழிநடை வாசிக்கச் சுகமாக இருந்தது.

 2. ஜடாயு on December 11, 2008 at 12:48 pm

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜயக்குமார். நேரில் நின்று பேசுவது போன்ற இயல்பான மொழிநடை.

  இது போன்று மண்ணின் மணம் கமழும் பல பண்பாட்டுப் பதிவுகளை தமிழ்ஹிந்து.காம் மேன்மேலும் வெளியிட வேண்டும்.

 3. Narayan on December 11, 2008 at 6:56 pm

  Interesting to read your narration. Directions to this place would be most appreciated.

 4. தமிழ்செல்வன் on December 11, 2008 at 9:07 pm

  அற்புதம் ஜெயகுமார். அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்; நானும் அனுபவித்து படித்தேன். உண்மையான நேர்மையான கள்ளம் கபடம் இல்லாத ஆன்மீகம் இருக்கின்ற இடத்தில் ஜாதி பேதங்கள் கரைந்து விடுகின்றன என்பதற்கு உங்கள் ஊர் ஒரு சிறந்த உதாரணம். ஒவ்வொரு ஊரும் இந்த மாதிரி இருந்தால் அன்னிய சக்திகள் உள்ளே வராது.

  உங்களுக்கு முத்தாலம்மன் அருள் பாலிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்.

  நன்றி, அன்புடன்

  தமிழ்செல்வன்

 5. அருமையான கட்டுரை குமார். மண்ணின் நிகழ்வுகள் குறித்த இது போன்ற வட்டாரக் கட்டுரைகள் நிறைய வரவேண்டும். எளிமையான நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

 6. Madhusudhan on December 12, 2008 at 8:11 am

  நல்ல கட்டுரை. ஆற்றொழுக்கான மொழிநடை, நல்ல புகைப்படங்கள். தொடர்ந்து இதுபோன்ற கிராமியத் திருவிழாக்களை அறிமுகப்படுத்தவும்.

 7. g ranganathan on December 12, 2008 at 10:34 pm

  இந்த மாதிரியான மண்மணத்துடன் கட்டுரைகளை வெகுஜனப்பத்திரிக்கைகளில் படிக்க முடிவதில்லை. படிக்க இயல்பாயிருந்தது.நன்றி ஜெயக்குமார்.

 8. இன்று அரசியலாலும் அன்னிய ஆதிக்க சக்திகளாலும் பிளவுபட்டு நிற்கிற சமுதாயத்துக்கு நல்ல ஒத்தடம் அளிக்கும் மருந்தாக அமைகிறது உங்கள் கட்டுரை. இத்தகைய சமுதாய ஒற்றுமை ஆன்மநேய ஒருமைப்பாட்டால் மட்டுமே உருவாக்கப்பட முடிந்த ஒன்று. இதனை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கினால் தமிழ்நாடு சமரச நல்லிணக்க சமுதாயமாக ஒரே குடும்பமாக மாறிவிடும். அழகிய நடையுடன் வாசிப்பவர்களையும் திருவிழாவில் பங்கேற்க வைத்துவிட்டீர்கள் நன்றி.

 9. கணேசமூர்த்தி on December 13, 2008 at 6:44 pm

  உங்க கூடவே உங்க ஊருக்கு வந்து திருவிழாவ பார்த்த மாதிரி இருந்தது ஜெயகுமார். அருமையான நடை.மண் வாசனை தூக்கிருச்சி.
  மேலும் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
  அன்புடன்
  மூர்த்தி
  லா ரோஸ்.

 10. ravi on December 14, 2008 at 3:37 pm

  As Mr. Madhura Barathi asked,

  i would like to Know , regarding Nanganallure Ezhur amman koil link ,

  any relation between both ?

  Ravi

 11. Harihara Subramanian on December 18, 2008 at 9:15 am

  Very nice description.Written from the heart in a racy style.

  I saw your comment on my picture in Picasaweb (Valliyur). Is there any connection between the Muthalamman Koil there and the ones above?

 12. girija on August 21, 2009 at 12:32 am

  Hi,

  Nanum T.Kalluppatti dhan.Endha katturai paththadhum yenga veettu pakkathula erukura yellaruttum parunganu kamuchchen. I m very happy about this I m not expected this katturai. I m searching just samayal kurippugal but the link connected atlast this pongal I m very excited Now i m in chennai. Ayyo romba sandhoshama erukku yenga ooru super. Thanks Thanks Thanks you very much vetri selvan last time na pongaluku oorukku varala but ennaiku paththutten thanks again and again.

  bye from
  girija

 13. balaji on August 27, 2010 at 3:38 pm

  hai i am balaji………….

 14. MURUGESH RAJA on November 4, 2010 at 12:38 pm

  Hi i am MURUGESH RAJA FROM MUMBAI
  i am also T Kallupatti i like this pictures & editions this is very good to see all the peoples
  who are in other states, so it is very good continue ……..

 15. Manikandaprabu.c. on April 29, 2015 at 4:28 pm

  Nanum kalluppatti karan dhan.boss.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*