செய்திகள் மட்டுமே சித்திரமானால்…

மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு

slumdogநான் ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் திரை விமர்சகர் ஜீவானந்தம் திக்கற்றுத் தெரிவில் திரியும் சிறுவர்கள் எப்படி உருவாக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எத்தகையது என்பதை கூறும் படம் இது என்று சொன்னார். ஆர்வமும், ஆச்சரியமுமாக இருந்தது. ஏனென்றால், என் இளவயதில் நானே பழனிமலைப் பகுதிகளில் இலக்கின்றித் திரியும் பரதேசியாக இருந்திருக்கிறேன். எனது சமீபத்திய புதினம் ஒன்று முழுக்க முழுக்க பிச்சைக்காரர்கள் மிருகங்களைப் போல் வாங்கி விற்கப்படுவதையும், மிருகங்களைவிடக் குரூரமாக நடத்தப்படுவதையும் பற்றியதுதான். “இந்த ஸ்லம்டாக் படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.

இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.
அதை விடுங்கள். கேள்வி என்னவென்றால், ஒரு பிரிட்டிஷ்-இந்தியத் திரைப்படம் ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மும்பையின் சேரி வாழ்க்கையைச் சித்தரிக்க வேண்டும்?

இந்தப் படம் ஒரு வெளிநாட்டுத் தூதர் 2005-ல் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப் படுகிறது. இருப்பினும், உண்மையில் இந்தியாபற்றி ஊடகங்கள் கொட்டும் செய்திகள் தான் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தன என்று எண்ணத் தோன்றுகிறது. அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தில் வரும் இந்திய நாவல்களும் சரி, ‘மாற்றுத்’ (cross over) திரைப்படங்களும் சரி, அப்போதைய பரபரப்புச் செய்திகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தேசிய நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் கொண்டுவரும் மனித வாழ்க்கைச் சித்திரங்கள் பற்றிய செய்திகள். பொதுவாக அவை நமது கலாசாரத்தின் கீழ்தட்டில் இருக்கும் சேரி மக்கள், பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள் இவர்களையே அதிகம் கவனிக்கின்றன. என்னைப் பார்க்க வரும் பெரும்பாலான திரையுலக நண்பர்களில், மாற்றுத் திரைப்படங்கள் எடுக்க விரும்புவர்கள் எப்போதும் தங்கள் கண்களில் தட்டுப்படும் வித்தியாசமான செய்திகளைப் பற்றிப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

கடந்த பல வருடங்களாக, நமது ஆங்கில நாளிதழ்களின் பார்வை இந்தியாவுக்கு வரும் ஒரு மேற்கத்திய சுற்றுலாப் பயணியினுடையது போலவே முற்றாக மாறிவிட்டிருக்கிறது. அவற்றின் பதிவுகள் ஒரு சராசரி வெள்ளைக்கார சுற்றுலாப் பயணியின் ரசனைக்கு முற்றிலும் ஏற்றதாக இருக்குமாறு சமைக்கப் படுகின்றன. எனவே இன்று உலகெங்கும் பிரபலமாக இருக்கும் இந்திய-ஆங்கில எழுத்து, அடிப்படையில் நமது வெகுஜன ஆங்கில ஊடகங்களின் விரிவாக்கம் போலவே இருப்பதில் ஆச்சரியமில்லைதான். இந்த ஊடகங்கள் அத்தகைய எழுத்தை ஊக்குவிப்பதும் இயல்பாகவே நிகழும். அது ஒரு பரஸ்பரம் சாதகமான உறவு.

white-tigerஒரு நீண்ட பத்திரிகை விவரணமே படைப்பிலக்கியமாக ஆகிவிட்டதற்கு ஒரு சரியான உதாரணம் தி ஒயிட் டைகர் (The White Tiger). அதைப் படித்தவுடன், அதன் ஆசிரியர் அரவிந்த் அடிகா ஒரு பெரிய நாளிதழின் கவர் ஸ்டோரிக்காகக் காத்திருப்பது போலவே தோன்றியது. மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட, சீரமைக்கப்பட்ட, ஆனால் மிகமிகச் சாதாரணமான செய்திகளைக் கொண்ட உயிரற்ற சித்திரம். வழக்கமாக ஆங்கிலச் செய்திகள் படிக்கும் வாசகர்களுக்கு உடனே புரிந்துவிடக் கூடிய விவரிப்பு, ஏனென்றால் இதையேதானே அவர்கள் தினந்தோறும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தப் பரந்த தேசத்தின், பல்வேறு கலாசார, சமூக சூழல்களில் வாழும், பல்வேறுபட்ட மக்களையும் ஏற்றவாறு சித்தரித்துச் செல்லவேண்டிய மொழி பற்றி அடிகாவுக்கு முன் பெரிதாக எந்த சவால்களும் இல்லை. ஏனென்றால், அவர் நமது வெகுஜன ஆங்கில ஊடகம் பேசும் அந்த ‘மீண்டும் மீண்டும் முலாம் பூசப்பட்ட’ மொழியிலேயே கவலையின்றி சறுக்கி விளையாடலாம்.

அதனால், இயல்பாகவே ஒரு கதாசிரியர் என்ன செய்வார்? இந்திய செய்தி ஊடகங்களில் இருந்து ‘கதைகளை’ பொறுக்கி எடுப்பார். அப்புறம் மும்பைச் சேரி ஒன்றுக்கு ஒரு சின்ன விசிட் அடிக்கவேண்டியது, அவ்வளவு தான். விளைவு: ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஒரு படம். அது எப்போதுமே பாதுகாப்பான ஒரு ‘தீம்’, ஏனென்றால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்குலகம் இந்தியா பற்றிய ஒருவிதமான ‘யதார்த்தத்தை’ அப்படியே முழுதாக நம்புமாறு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. முந்தைய காலங்களில், மதமாற்றப் பிரசாத்திற்காகப் பெரும்பணம் திரட்ட வேண்டி, கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துஸ்தானத்தை ஒரு வளர்ச்சிகுன்றிய, பண்பாடற்ற, “கிறிஸ்தவ மேன்மைகள்” அற்ற காட்டுமிராண்டி பாகன் (pagan) தேசமாகச் சித்தரித்தார்கள். இன்றைக்கு, அதே கருதுகோள்தான் ஆங்கிலம் படிக்கும் மேல்தட்டு இந்திய மக்களிடமும் பரவலாக உள்ளது – அவர்கள் தங்களையறியாமலேயே உள்மனதில் ஐரோப்பியக் காலனியத்தின் வாரிசுகள் என்று தங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.

சல்மான் ரஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் ஆகட்டும், அடிகாவின் தி ஒயிட் டைகர் ஆகட்டும், இந்தப் படைப்பாளிகளின் அடிப்படை தாகம் ஒன்றுதான்: இந்தியாவைக் குத்திக் கேலி செய்தல். அவர்களது இந்தியா தன்னை இயல்பாக ஆளவேண்டியவரை இழந்துவிட்ட விசித்திர தேசம். ஆனால் இந்த விஷயம் சில இடங்களில் மட்டும் ஒரு அடிக்கோடாக மட்டுமே வரும். மேற்கத்திய தார்மீக முறைப்பாடுகள் இந்தியாவின் எல்லாத் தீமைகளையும் துடைக்கும் ரட்சகர்கள் போலக் காட்டப்படும் அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் நூலில் வருவது போல.

நான் ஏழாம் உலகம் கதையை எழுதியபோது, எனதே ஆன ஒரு சொந்த அனுபவத்தைத் திறந்துகாட்டி, திரைநீக்கம் செய்தேன். பிச்சைக்காரர்களுக்கு மத்தியிலும் நிலவும் அன்பு, பாசம், தியாகம் இவற்றை என் கண்களால் கண்டிருக்கிறேன். அந்தப் புதினம் இந்திய வாழ்க்கை எவ்வளவு இருண்டது என்பதையல்ல, இந்திய வாழ்க்கையின் என்றும் அழியாத நித்திய ஜீவனையே எடுத்துக் காட்டுகிறது என்று சொல்வேன். கடைக்கோடி வாழ்க்கையில் கூட இந்திய விழுமியங்களும், அதன் ஆன்மிகமும் ஆற்றும் பங்கை அது சித்தரிக்கிறது. திரைப்படத்திலும் கூட, இது இப்படியேதான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஏனென்றால் நான் இந்திய வாழ்க்கை எனும் நீள்பாதையில் வெறுமனே செல்லும் ஒரு வழிப்போக்கன் அல்ல. அதனை வெறும் செய்தியாகப் பதிவு செய்பவனோ அல்லது அன்னியமாக நின்று பார்த்து சாட்சி சொல்பவனோ அல்ல. நான் அதன் உள் ஆழ்ந்து உறைகிறேன்; என் எழுத்தின் மனிதர்களுள் ஒருவனாகவே நான் இருக்கிறேன், அவர்களது மொழியையே நானும் பேசுகிறேன். ஒரு கலைப் படைப்பின் அழகிலும், நுட்பத்திலும் உயிர்நாடியான விஷயமே இதுதான் என்று கருதுகிறேன்.

நம் மண்சார்ந்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதைப் பார்த்தாலே “மொழி” என்பதன் முக்கியத்துவம் நமக்குத் தெளிவாக விளங்கும். பெரும்பாலும், இந்த மொழியாக்கப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் மூலமொழியின் சொல்கட்டுமானம் மற்றும் அதன் கலாசார நுட்பங்களில் பிடிப்பும், தேர்ச்சியும் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலரே ஆங்கில மொழியைத் தினந்தோறும் பேசும், கேட்கும் சாத்தியம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்த விஷயத்தில் இன்னும் நன்கறிந்தவர்களாக இருக்கலாம். மொத்ததில், இந்திய ஆங்கில எழுத்தும், மாற்றுத் திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட வகையான படைப்புக்கள் என்று சொல்லலாம். அவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஆனால் அவற்றை ஒருபோதும் “இந்தியப் படைப்புகள்” என்று நாம் அழைக்கவே முடியாது. ஏனென்றால் அவை சித்தரிக்கும் இந்தியா ஒரு சராசரி மேற்கத்தியனின் சராசரிக் கற்பனையில் உதித்தது. உண்மையான இந்தியா அதன் சொந்த மொழிகளின் எழுத்தில்தான் உள்ளது, அதை ஒரு நாள் நாம் கண்டிப்பாகக் கண்டுகொள்வோம்.

ஒரு இந்திய ஆங்கில எழுத்தாளர் தென்னகத்தில் ஒரு கிராமக் கோயிலுக்கு விஜயம் செய்தது பற்றி என் நண்பர் ஒருமுறை சொன்னர். அந்த எழுத்தாளரின் பென்ஸ் கார் கிராமத்தின் ஒடிசலான, பழைய தெருவுக்குள் நுழையவே முடியவில்லையாம். கடைசியாக அவர் அகன்ற நால்வழி நெடுஞ்சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட வேண்டியிருந்ததாம். பல நேரங்களில் நம் ஆங்கிலமும் அப்படித்தான், அதனால் உண்மையான இந்திய யதார்த்தங்களை ஊடுருவி உள்செல்ல முடிவதே இல்லை. அதனால் செய்திகள் என்னும் நெடுஞ்சாலையிலேயே தள்ளி நின்றுவிடுகிறது.

4 Replies to “செய்திகள் மட்டுமே சித்திரமானால்…”

  1. Dear Sirs

    I am not a movie buff ! However in view of the hype created for Slumdog Millionaire, I watched the movie TWICE ! Once… only to see the movie and second time to find out what they wanted to convey as message to the moviegoers !

    In my opinion it is a grossly overhyped movie. A few unanswered questions that are haunting me are :-

    Why should a foreigner want to depict to the whole world a total negative side of India ?

    Why should they portrait a picture of Rama in repulsive blue colour, whereas at no point of time a cresent or cross was shown anywhere in the movie ? Is Hinduism such a cheap punching bag for all these people ?

    Is it a new way of dividing common Indian mass in terms of religion, caste and earn ?

    Does any normal Indian on a day to day life hear so many swearing words and filth in normal course of transaction ? Where is the need for portraying so much violence ?

    I also learnt that this movie has now developed a new type of tourism in India = SLUM TOURISM. As an Indian I really feel ashamed of this.

    It is a pity that the whole world is going to form an opinion based on these slum scenes, redlight areas and deal with Indians elsewhere in he world based on these impressions.

    We have great statesmen, scientists, astronomers, religious leaders, artists, mathameticians,economists, writers who have come up from very poor background. Why not someone try to make a movie based on that and project all over the world ????????

  2. இஸ்ரெலியப்படம் வால்ஸ் ஈம் பஷீர் (२००९) இதே போல் உலக அரங்கில் பேரும் புகழும் பெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தில் கதை சாப்ரா மற்றும் ஷடிலா பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் லெபனான் ராணுவம், இஸ்ரேலிய ராணுவத்துடன் நடத்திய கொடிய ஆள் வேட்டையால் மனதளவில் பாதிப்படைந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரனின் எண்ணப்போராட்டம் தான்.

    ஹிந்து சுய ஏளனத்தை எப்படி மேற்குலகம் போற்றிப் பரிசு வழங்குகிறதோ, அதோபொல் யூத சுய ஏளனத்தையும் போற்றிப் பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *