போகப் போகத் தெரியும்-12

துக்ளக் இதழில் வைக்கம்

வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்கள் 1972ஆம் ஆண்டு காரைக்குடிக்கு ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்தார்… அவ்வூரில் திரு. என்.ஆர். சாமி பெரியாரின் கொள்கைப் பிடிப்புள்ள திராவிடர் கழகச் செயல் வீரர்… பெரியார் திரு. என்.ஆர். சாமியின் திருமகன் திராவிடமணியின் ஒன்றரை வயதுக் குழந்தை பிராட்லாவை அன்போடு வாங்கி முகத்தோடு தழுவி முத்தினார். அவ்வாறு கொஞ்சும்போது பெரியார் அவர்களின் வெண்தாடியை வியப்போடு பார்த்த குழந்தை பிராட்லா தன் பிஞ்சுக் கரங்களால் நீவிப் பிடித்திருந்தது. குழந்தையின் பிஞ்சு விரல்களில் தந்தை பெரியாரின் தாடி முடி ஒன்று சுற்றிக் கொண்டு வந்துவிட்டது.

உடனே திரு. என்.ஆர். சாமி அந்தக் குழந்தையைப் பெரியாரிடமிருந்து வாங்கி, அதன் விரல்களில் சிக்கியிருந்த பெரியாரின் தாடி முடியை மெதுவாக அறுந்து போகாமல் பிரித்தெடுத்து, பெரியார் அங்கிருந்து புறப்பட்டதும், அதனை மூடி போட்ட ஒரு கண்ணாடிப் புட்டியில் வைத்து அன்போடு போற்றிப் பொன்போலக் காத்தார்.

இப்போது அவருடைய மூத்த மகனார் திரு. சாமி சமதர்மம் தொடர்ந்து அதனைப் பாதுகாத்து வருகிறார்.

-பக். 78,79 / நினைவு மலர்கள் / சாமி பழனியப்பன் / குமரன் பதிப்பகம்

‘ஆலயம் தொழுவது கேவலம்’ என்பது பட்டறிவில்லாதவர்கள் ஏந்திய பதாகை. அவர்களிடம் ‘ம’னாவின் மகிமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அடிமைப் பட்டியில் அடைபட்டவர்களிடம் வேறு வழிபாடுகளை எதிர்பார்க்க முடியாது.

வைக்கம் போராட்டத்தைப் பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்த முறையும் வைக்கம்தான் பேசப்படுகிறது. முதலில் பேசுபவர் கி. வீரமணி:

விமர்சனம் செய்யும்போது என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது உங்களுக்கு உரிமை. ஆனால் செய்திகளைச் சொல்லும்போது, உண்மைகளைச் சொல்லும் வரலாற்றைச் சொல்லும்போது நிச்சயமாக நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லக்கூடாது.

– பக்.76 / கா.வ.ம.உ.க.அ.

போராட்டத்தை, எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் ராஜாஜியின் எண்ணம். காந்தியாருடைய கருத்தும் இவருடைய கருத்தும் இரண்டும் ஒன்றுதான். இதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.

-பக்.31 / கா.வ.ம.உ.க.அ.

இரண்டாவதாக சின்னக்குத்தூசி:

காந்தி, சத்தியாகிரகத்துக்கு விரோதமாக எழுதி, பண உதவிகளையும் ஆட்கள் வருவதையும் தடுத்துவிடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

-பக்.346 / புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு

திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டம் என்றால்-தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் என்றால்-அதன் வெற்றியை அங்கீகரிக்கவோ ஜீரணிக்கவோ இயலாமல் வரலாற்றைத் திரித்துக் கூறுவதே சிலருக்குப் பிழைப்பாகிவிட்டது.

-பக்.348 / புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு

இருவர் சொல்வதும் இதுதான்.

விமர்சனம் செய்யும்போது உண்மையை மறைக்கக் கூடாது, போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது காந்திஜி மற்றும் ராஜாஜியின் எண்ணம், பண உதவி வராமல் அவர்கள் தடுத்தார்கள், வரலாற்றையும் திரித்துக் கூறுவதே சிலருக்குப் பிழைப்பாகிவிட்டது. இந்தக் கருத்துகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

உண்மையை யார் மறைக்கிறார்கள்? வழக்கறிஞரான கி. வீரமணிக்கு All the Truth எனபது மறந்துவிட்டது. உண்மையின் ஒரு பகுதியை மட்டும் சொல்வது நியாயமல்ல; முழு உண்மையைச் சொல்ல வேண்டும். ஆனால் வைக்கம் போராட்டத்தில் உண்மைகளை அவர் மறந்துவிட்டார், அல்லது மறைத்து விட்டார். அவை என்ன?

ஈ.வே.ரா.வுடன் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் திரு. டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயரும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார். ஈ.வே.ரா., மதுரை பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் திருவனந்தபுரம் சிறையில் சாதாரணக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர் என்று புகார் கூறி, தலைவர் ராஜாஜி திருவிதாங்கூர் மன்னருக்குக் கடிதம் எழுதினார். அதன் பின்னர் அவர்கள் சிறையில் விசேஷ வகுப்பில் வைக்கப்பட்டனர்.

– பக். 579 / விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ. சிவஞானம்

மூதறிஞர் ராஜாஜி, திரு. எஸ். சீனிவாச ஐயங்கார் ஆகிய பெருந்தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வைக்கத்திற்குச் சென்று, சத்தியாகிரகிகளை ஊக்குவித்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் சுற்றுலாச் செய்து, தொண்டர்களையும் பொருளுதவியையும் திரட்டித் தந்தனர்.

– பக்.577 / விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ.சிவஞானம்

ஈ.வேராவோடு சிறை சென்ற டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் பெயரைப் பெரியாரிஸ்டுகள் எங்காவது எழுதியிருக்கிறார்களா? அதைத் திராவிடத் திரை போட்டு மூடிவிட்டார்கள்.

ம.பொ.சி.யைத் தொடர்ந்து கோவை அய்யாமுத்து. அவர் சொல்வதைக் கேட்கலாம்:

rajajiஇராஜாஜியோடு நான் நேரடியாகத் தொடர்பு கொண்டது 1924ஆம் ஆண்டிலாகும். திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையிலிருந்து நான் வெளிவந்த அன்றே இராஜாஜியும் திருவனந்தபுரம் வந்திருந்தார்…

அன்று மாலை திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது. இராஜாஜியின் வருகையும் நான் விடுதலையாகும் செய்தியும் அறிந்த மக்கள் திருவனந்தபுரம் கண்டிராத அளவு கூடியிருந்தனர். குஞ்சு கிருஷ்ணபிள்ளை தலைமை வகிக்க இராஜாஜி பேசியதை நான் மெளனமாகக் கேட்டிருந்தேன்.

மறுநாள் அஞ்சுங்கோ சென்று அங்கொரு பிரம்மாணடமான கூட்டத்தில் பேசிப் பணம் வசூலித்து வைக்கத்திற்கு அனுப்பிவிட்டுக் கோவை திரும்பினேன்.

-பக். 13, 14 / ராஜாஜி என் தந்தை / கோவை அய்யாமுத்து

வைக்கம் சத்தியாகிரகத்தில் பிராமணர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்; ராஜாஜி உதவியிருக்கிறார்; காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈ.வே.ரா. தலைவராக இருந்திருக்கிறார் என்பதைத் தொடர்ந்து பல வகையாகச் சொல்லி வருகிறோம்.

பாரதியார் பாடல்களால் எழுச்சி ஊட்டப்பட்டதையும், அதைப் பதிவு செய்யாமல் ஒதுக்கி வைத்த நரித்தனத்தையும் பார்த்தோம், காந்திஜியின் வரலாற்றிலிருந்து சில பக்கங்களைப் பார்த்தோம், ஈ.வே.ரா., கி. வீரமணி, சின்னக் குத்தூசி, ஞாநி, சுப. வீரபாண்டியன் ஒருபுறமும் ம.பொ. சிவஞானம், கோவை அய்யாமுத்து, அன்பு, பொன்னோவியம், ம.வெங்கடேசன் எதிர்ப்புறமுமாக வைத்த வாதங்களைப் பார்த்தோம்.

வைக்கம் போராட்டம் தொடர்பான பெரியாரிஸ்டுகளின் கட்டுரைகளில் விழைவுகள்தான் உள்ளன, சரியான விவரங்கள் இல்லை என்பதைப் பார்த்தோம்.

இப்போது ஒரு முக்கியமான தேசபக்தரைச் சொல்லாமல் இந்த விவாதம் நிறைவடையாது என்பதால் அவரை அழைக்கிறேன்; அவர் நெல்லை ஜெபமணி.

வைக்கம் சத்தியாக்கிரகம் தொடர்பான சில கட்டுரைகளை நெல்லை ஜெபமணி துக்ளக்கில் எழுதினார். அதற்கிடையே கி.வீரமணியின் மறுப்பும் வெளியிடப்பட்டது. சுவாரசியமான அந்த கருத்துப் போரிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்:

1. வைக்கம் சத்தியாகிரஹம் – சில உண்மைகள் / நெல்லை ஜெபமணி / துக்ளக் / 15.11.1985
2. வைக்கம் போராட்டத்தை காந்தி ஆதரிக்கவில்லை – கி.வீரமணி / துக்ளக் / 1.12.1985
3. காந்திஜியின் ஆதரவு பெற்றே வைக்கம் சத்தியாகிரஹம் நடந்தது – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 1.1.1986
4. தொடர்ச்சி – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 15.1.1986
5. தொடர்ச்சி – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 1.2.1986

1. பெரியார் ஈ.வேரா வைக்கம் போராட்டம் முடிந்த அடுத்த ஆண்டே காங்கிரசை விட்டு வெளியேற, அப்போது சென்னை ராஜதானியில் மந்திரி சபை அமைத்திருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாருடன் சேர்ந்து கொண்டார். பெரியார் ஈ.வே.ரா.வுக்கு உண்மையிலேயே தீண்டாமை ஒழிப்பில் ஆழ்ந்த அக்கறை இருந்திருக்கும் என்றால் புதிதாக உறவு கொண்டாடிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினரிடம் ‘தமிழ் நாட்டைச் சேர்ந்த, தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட ஒருவருக்கோ அல்லது ஒதுக்கப்பட்ட வெறுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ மந்திரி சபையில் இடம் தர வேண்டும்’ என்று கூறியிருக்கலாம். அதைப் பெரியார் செய்யாதது ஏன்?… ஏன் செய்யவில்லை? தீண்டாமை ஒழிப்பைச் சட்டமாக்கியிருக்கலாமே. 1937-ல் சென்னை ராஜ்ஜியத்தின் பிரதம மந்திரியாக ராஜாஜி பதவி ஏற்றவுடன் காங்கிரசின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கையை சட்டபூர்வமாக்கினார். தனது மந்திரிசபையில் தாழ்த்தப்பட்ட ஒருவரை (திரு. முனுசாமிபிள்ளை) மந்திரியாக நியமித்தார்.

2. 15.11.1985, துக்ளக்: வைக்கம் சத்தியாகிரஹம் – சில உண்மைகள் என்ற கட்டுரையில் உண்மைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதைவிட உண்மைகளைப் பொய்த்திரை போட்டு மூடிவிடும் அற்ப புத்தியும் விஷம நோக்கமுமே விரவிக் கிடக்கின்றன. ‘வைக்கம் போராட்ட வீரர்கள் என்னை நம்பிக் கொண்டிருப்பாராயின் ஒடிந்த நாணல் குச்சி மீது தாங்கள் சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்’ என்று காந்தியார் குறிப்பிட்டுள்ளதிலிருந்தே வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் பங்கு என்ன என்பது விளங்குமே.

வைக்கம் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.

காந்தியாரின் தீண்டாமைக் கொள்கை அடிப்படையில் காங்கிரஸ் நடத்திய வைக்கம் போராட்டம் என்று துக்ளக் கட்டுரையாளர் கூறுவது அவரது அறியாமையையே காட்டுவதாகும்.

3. வீரமணி சற்றும் தயங்காமல் ஒரு மிகப் பெரிய பொய்யை, அணடப் புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார். தன்னுடைய பொய்யை நியாயப்படுத்த மகாத்மா காந்தியின் ஒரு கட்டுரையிலிருந்து ஒரு வாக்கியத்தை மட்டும் பிளந்து எடுத்து துக்ளக் வாசகர்களுக்கு முன்னால் வைத்திருக்கிறார். கட்டுரையின் மற்ற பகுதிகளை மறைத்திருக்கிறார். ஏனென்றால் அந்தப் பகுதியில் படித்தால் காந்திஜி வைக்கம் போராட்டத்தை எவ்வளவு ஆர்வத்துடன் ஆதரித்தார் என்பது தெளிவாகி விடும். மகாத்மாஜியின் சம்பந்தப்பட்ட கட்டுரை 19.2.1925-ல் யங் இந்தியா பத்திரிக்கையில் பிரசுரமாகியது…

“இயன்ற அளவில் விரைவில் வைக்கம் வர நான் ஆவலோடு இருக்கிறேன். அதற்கு அதிக நாள் ஆகாது என்று நம்புகிறேன். இதற்கிடையில் சத்தியாகிரகிகள் மனம் தளர்ந்துவிடக் கூடாது. அவர்கள் விரக்திக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. நான் படித்த தமிழ்ப் பாடங்களில் ஒரு பழமொழியாவது எனக்கு மிகப் பசுமையாக நினைவில் இருக்கிறது. ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்பதே அது……

திருவிதாங்கூர் தர்பார், சத்தியாகிரகிகளைக் கைவிடலாம். நான் அவர்களைக் கைவிடலாம். ஆனால் கடவுள் அவர்களைக் கைவிட மாட்டார். என்னை அவர்கள் நம்பிக் கொண்டிருந்தால் ஒரு ஒடிந்த நாணல் குச்சி மீது சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணரட்டும்….

வைக்கம் சத்தியாக்கிரகிகள் நடத்தும் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல”

பொய்ப் பிரசாரத்திற்காக கழகத்துக்காரர்களால் எவ்வளவு தாழ்ந்த செயலில் ஈடுபட முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

4. வைக்கம் போராட்டத்துக்கு நிதி உதவி கேட்டு வைக்கப்பட்ட கோரிக்கையை காந்தியடிகள் நிராகரித்ததாகவும் வீரமணி கூறியிருக்கிறார். உண்மை என்ன?

“வைக்கம் சத்தியாகிரகத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவும். நான் திருப்பித் தருகிறேன். மார்ச் மாதம் வைக்கம் போவதாக இருக்கிறேன் – காந்தி”

இப்படித் தந்தி மூலமாக ராஜாஜிக்கு 1925 பிப்ரவரியில் காந்திஜி செய்தி அனுப்பியிருக்கிறார்.

5. ‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே.

காந்திஜியின் கடிதங்களைச் சிதைத்து, அவற்றில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் எடுத்துப் போட்டு தன்னுடைய பொய்யான வாதத்திற்கு ஆதாரம் தேட முனைந்தார் வீரமணி. இதில் எனக்கு வியப்பில்லை. பெரியார் செய்ததைத்தான் வீரமணியும் செய்திருக்கிறார்.

திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவின் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைக் காட்டுவதற்காகப் பெரியார் ஒருமுறை ஒரு காரியம் செய்தார். ஜின்னா எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் வெளியிட்டு ஜின்னாவின் ஆதரவு பரிபூரணமாக இருப்பதாக ஆதாரம் காட்டினார் பெரியார். இதுபற்றி பத்திரிகைகளில் விமர்சனம் வரவும், ஜின்னா பார்த்தார். தன்னைப் பற்றி யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தன்னுடைய முழுக் கடிதத்தையும் வெளியிட்டு விட்டார். இதனால் பெரியாரின் பாடு தர்மசங்கடமாகப் போய்விட்டது.

இதற்கு மேல் திராவிட இயக்கத்தவர் தாங்கமாட்டார்கள் என்பதால், வைக்கம் போராட்டம் குறித்த அலசலை முடித்துவிட்டு வரலாற்றின் அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என்று நினைக்கிறேன். பயன்படுத்தாத கருத்துக் கணைகள் பல உள்ளன. இருக்கட்டும்; எதிர்த்தரப்பு நண்பர்கள் இளைப்பாற வேண்டும்.

‘திமிரு’ என்ற திரைப்படத்தில் வார்டன் வடிவேலுவைக் குட்டுவதற்காக மாணவர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். அதைப் போலவே விஸ்வாமித்ரா போன்ற தமிழ் ஹிந்து வாசகர்களும் அணிவகுக்கிறார்கள். வடிவேலுவுக்காவது அவர் அழுவதைப் பார்க்க ஒரு சமுதாயமே தயாராக இருக்கிறது. திராவிடர் கழகத்திற்கு அப்படி எதுவுமே இல்லை.

திரு. வையாபுரி பின்னூட்டம் இட்டுள்ளார். அதில் கூறியிருப்பவை பற்றி நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

திராவிடம் என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றதா என்று துருவித் துருவித் தோண்டினாலும் கிடைக்காது. அப்படி ஒரு சொல்லை பழங்காலத்திலும் சரி, இடைக்காலத்திலும் சரி எந்தக் கவிஞனும் கையாளவில்லை.

– பக். 23 / தமிழ்-தி.மு.க-கம்யூனிஸ்ட் / ச.செந்தில்நாதன்.

11 Replies to “போகப் போகத் தெரியும்-12”

  1. அருமை ஐயா.

    வெறுப்புப் பிரச்சாரத்தின் கசடுகளை உங்களது கட்டுரைகள் கரைக்கின்றன.

    தமிழர்கள் வெறுப்பு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, அன்பும் நேர்மையும் கொண்ட தங்களது ஹிந்துப் பாரம்பரியத்திற்கு மீண்டு உயர்வார்களாக.

  2. சுப்பு அவர்களுக்கு

    நான் சென்ற பதிவில் விடுத்த வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. தியாகி ஜெபமணி அவர்களுடன் நெருங்கிப் பழகிய ஒரு தொண்டன் நான். அவரது “கண்டு கொள்வோம் கழகங்கள்” துக்ளக்கில் தொடராக வந்தது அதன் பிறகு திராவிட இயக்கங்களின் போலி முகமூடிகளை நீங்கள்தான் களையத் துணிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் மன நிம்மதியும் அருளட்டும். கண்டு கொள்வோம் கழகங்கள் பின்னர் புத்தகமாகவும் வந்தது எந்தப் பதிப்பகம் என்பது தெரியவில்லை. தன் வாழ்நாள் முழுதும் திராவிட மாயையின் பிடியில் இருந்து தமிழ் நாட்டு மக்களை விடுவிக்கப் போராடிய ஜெபமணி அவர்களின் ஆன்மா உங்கள் கட்டுரையைப் படிக்குமானால் நிம்மதியாக சாந்தியடையும்

    அன்புடன்
    விஸ்வாமித்ரா

  3. மிக நன்று
    இப்படி தமிழ் நாட்டில் எழுதுவத்ற்கு துணிவு வேணும்
    அந்த துணிவுக்கு பாராட்டுகள்
    கே.க்ண்ணன்

  4. அன்புள்ள சுப்பு அய்யா,

    கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளை முட்டாளாக்கி, பனம் சம்பாதித்து தனது பிள்ளை குட்டிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கியதைத் தவிர இந்த திராவிட இயக்கங்கள் என்ன செய்தன?? தானாக நடந்த மறுமலர்ச்சிகளை தனது என சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வாழ்ந்து வருகிறது இந்த கூட்டம். இன்றைய தமிழக முதல்வர் ஆகட்டும், உண்மை விளம்பி வீரமனி ஆகட்டும், அவர்களது கல்லாப்பெட்டியை மட்டும் நிறைத்துக்கொண்டனர். இந்தி ஒழிக எனக்கூறிக்கொண்டு தமிழக மக்களை படிக்க விடமல் செய்து இந்தியா முழுதும் சென்று ஒளிவீச வேண்டிய தமிழக திறமைசாலிகளை தமிழ்நாட்டிலேயெ முடக்கிப்போட்ட பெருமை இவர்களையே சாரும். ஆனால் அவர்களது வீட்டுக் குழந்தைகள் மட்டும் இந்தி கற்றுக்கொள்ளலாம், ஆங்கில வழியில் கற்கலாம்.. மற்றவர்கள் அனைவரும் தமிழ் மட்டும் படித்தால் போதுமானது.

    உங்களது பதிவுகள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு கையேடாக விளங்கும். பொய்யும், புனைசுருட்டும் கொண்டு எழுதப்பட்ட திராவிட இயக்கங்களின் விஷத்திற்கு உங்கள‌து படைப்புகள் மாற்றாக விளங்கட்டும். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், குறைவற்ற செல்வத்தையும், நோயற்ற வாழ்வையும் அருளட்டும். உண்மை என்றும் உண்மையாளர்களின் பக்கமே இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

    ஜெயக்குமார்.

  5. சுப்பு,

    பின்வரும் பத்தியில் உள்ள செய்தி சரிவர விளக்கம் பெறவில்லையோ?

    \\2. 15.11.1985, துக்ளக்: வைக்கம் சத்தியாகிரஹம் – சில உண்மைகள் என்ற கட்டுரையில் உண்மைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதைவிட உண்மைகளைப் பொய்த்திரை போட்டு மூடிவிடும் அற்ப புத்தியும் விஷம நோக்கமுமே விரவிக் கிடக்கின்றன. ‘வைக்கம் போராட்ட வீரர்கள் என்னை நம்பிக் கொண்டிருப்பாராயின் ஒடிந்த நாணல் குச்சி மீது தாங்கள் சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்’ என்று காந்தியார் குறிப்பிட்டுள்ளதிலிருந்தே வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் பங்கு என்ன என்பது விளங்குமே.//

    ‘அவர்கள் இந்த விஷயத்தில் கடவுளை நம்பவேண்டும். அவ்வாறில்லாமல் என்னை நம்பினால், ஒடிந்துபோன நாணல் குச்சியின்மேல் சாய்ந்திருக்கிறோம் என்று அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்’ என்பதுபோல் (நினைவிலிருந்து சொல்கிறேன். சொற்பிறழ்ச்சி இருக்கலாம்) என்ற வாக்கியத்திலிருந்து ஒரேயொரு வாக்கியத் துணுக்கைத் தனிப்படுத்தி, பொருளைத் தலைகீழாகத் திரித்திருக்கிறார்கள் என்ற செய்தியும் துக்ளக் இதழிலேயே வெளிவந்தது (ஓரிரு இதழ்களுக்குப் பிறகு வெளிவந்ததாக நினைவு).

    வாக்கியங்களை உடைத்துச் சேர்த்துப் பொருளை வேறுவிதமாகத் தொனிக்கச் செய்யும் முயற்சி இது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். (காந்தியின் அந்தக் குறிப்பிட்ட கடிதம் இடம் பெற்றிருக்கும் தொகுதியின் விவரமம் துக்களக்கில் வெளிவந்திருந்தது. அதையும் தேடி எடுத்து புகைப்பட வடிவிலேயே தரலாம்.)

  6. தமிழ் மொழியை மட்டுமே தம் தாய் மொழியாகவும், தமிழுக்காக பல தியாகங்களைச் செய்த ஏராளமான தமிழ் பிராமண வகுப்பினர் ‘தமிழர்’களாக‌
    ஏற்றுக்கொள்ளப்படாதது மிக அநியாயமான, துரதிர்ஷ்டமான செயல். (ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் திரு. சோ அவர்களின் ‘எங்கே பிராமணன்’ தொடரை இங்கு அவசியம் குறிப்பிடவேண்டும்). பாரதியார், வ.வே.சு.அய்யர், மூதறிஞர் ராஜாஜி, தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத அய்யர், வீரத்திருமகன் வாஞ்சிநாதன் ஆகிய பலர் பிராமணர் என்ற ஒரே காரணத்தால் வளரும் இளைய தலைமுறையினருக்கு முறையாக தெறிவிக்கப்படாமல் வருங்காலத்தில் காணாமற் போனாலும் போகலாம் என்ற அச்சம் நிலவி வரும் கால கட்டத்தில், தீரமிக்க சுப்பு அவர்களின் கட்டுறைகள், பொய்த் திரைகளைக் கிழித்து உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும். அன்னாரது பெரு முயற்சிகளுக்கு (சேவை என்று கூட சொல்லலாம்) பாராட்டுகளும், வாழ்த்துக்களும். இவை அவசியம் அவருக்கும் ஊக்கம் அளிக்கட்டும். நன்றி சுப்பு அவர்களே.

  7. ஆரிய த்ராவிட மாயையை என்று நாம் புரிந்து கொள்கிறோமோ அன்றுதான் இந்த திராவிட கட்சிகளின் தாக்கங்களிலிருந்து விடுபடுவோம்..

    கிறிஸ்தவ மிஷினரிகளினால் உண்டாகப்பட்டதுதான் இந்த ஆரிய மாயை. ஆரியப்படையெடுப்பென்று ஒன்று இருந்ததே இல்லை.

    திரு சுப்பு அவர்கள் இதை வலியுறுத்தி வருகிறார்கள். அவர் முயற்சி வெற்றி யடைய ஆண்டவனை அருள் புரியட்டும்.

  8. You are doing a wonderful job. Keep continuing this. your tearing all the mask of the Atheist. One small request. If it is possible, kindly give the reply for Su.Ba. Veera Pandiyan in this website for the comments whenever he gives about Hinduism in Kalaignar TV daily morning in Ondre Sol Nandre sol.

  9. அறிவுக்கண்களை அகலத் திறக்க வைக்கிறீர்கள். நன்றி.

  10. அருமையான பதிப்பு. திராவிடக் கட்சிகளின் கோட்பாடு தான் மிக நன்றாகத் தெரிந்ததே. அது எப்படி என்றால்:

    திராவிடத்தின் தலைவர்: ஆ..! நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். சீ சீ, விரதமல்ல, அது வடமொழி. நான் நோன்பு இருக்கப் போகிறேன். காலையில் 4.45 க்கு முன்னால் டிபன் சாப்பிட்டு விட்டு, உண்ணாவிரதத்தை ஆரமித்தால் சரியாக இருக்கும்.

    உடன்பிறப்பே, உப்பைச் சிறிது தூக்கலாகப் போட்டு சமைத்து வையடா, 12.30 க்கு சாப்பிடுகையில் சரியாக இருக்கும்.

    உடன்பிறப்பு: டேய், தலைவர் உண்ணாவிரதம் இருக்காறாம்டா…!

    உடன்பிறந்த உடன்பிறப்பு: ஐயய்யோ, நான் இப்போத்தானே சாப்பிட்டேன்.

    உடன்பிறப்பு: அட என் அறிவுக்கொழுந்தே. உன்னை யார்ரா சாப்டியா இல்லையானு கேக்கப் போறா. நீ பாட்டுக்கு ஒரு மேடையிலே போய் உண்ணாவிரதம்னு ஒக்காந்துக்க, சிதம்பரம் ஃபோன் பண்ற வரைக்கும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *