டாவின்ஸியின் அறிவியல்: நூல் அறிமுகம்
அரவிந்தன் நீலகண்டன்
11 Feb 2009 |
அச்சிட
ப்ரிட்ஜாப் காப்ரா இந்தியர்களுக்கு நன்றாகவே அறிமுகமானவர். அவரது “இயற்பியலின் தாவோ” (Tao of Physics) ஒரு தலைமுறையினருக்கே பார்வை மாற்றத்தை கொண்டு வந்த நூல் எனலாம். அவர் அதில் அணுத்துகள் இயற்பியல் மற்றும் அதன் ஆதாரமான க்வாண்டம் இயற்பியல் கோட்பாடுகள் காட்டும் பிரபஞ்ச தரிசனத்துடன் இணைந்து நடராஜ தாண்டவத்தினை காட்டியது , நடராஜ தாண்டவத்தை ஒரு சக்திவாய்ந்த குறியீடாக மாற்றியது. தொடர்ந்து காப்ரா பல நூல்களை எழுதியுள்ளார். கார்ட்டீசிய தத்துவம் மற்றும் நியூட்டானிய இயற்பியல் மீது கட்டமைக்கப்பட்ட நமது பிரபஞ்ச தரிசனம், சமுதாய அமைப்புகள் மற்றும் பார்வைகள், உயிர் குறித்த நமது அறிதல் ஆகியவற்றின் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருபவர் காப்ரா. அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பால் க்வாண்டம் இயற்பியல் அடிப்படையிலான இயற்பியல் காட்டும் பிரபஞ்ச உண்மையை அடிப்படையாக கொண்டு ஒரு மாறுபட்ட மனமண்டலத்தை எழுப்பவும் முயற்சிப்பவர்.
காப்ராவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வந்தால் ஒரு விஷயம் புலப்படுகிறது. அது அவருடைய மனமண்டல விரிவாக்கமும் மாற்றங்களும். அவரது ‘இயற்பியலின் தாவோ’ ஒருவிதத்தில் மிகவும் நுண்ணிய ஒரு புள்ளியாக இருந்தது. மிகச்சிறந்த சறுகல்களுக்கு வழிவகுக்கும் ஒரு புள்ளி அது. காப்ராவின் நூலை அடியொற்றி அமைக்கப்பட்ட மைக்கேல் தால்போட்டின் நூலை படிப்பவர்களுக்கு அது புரியும். ஆனால் காப்ரா அத்தகைய எளிய கவர்ச்சியான சமன்பாடுகளுக்கு தன்னை கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் எழுதிய நூல்களான Uncommon Wisdom, The Turning Point ஆகியவை தொடங்கி அண்மையில் அவர் எழுதிய The web of life The hidden connections ஆகியவை ஒரு தொடர்ந்த வளர்ச்சியை காட்டுகின்றன. இதுவே ஒரு சிந்தனையாளர் என்ற முறையில் காப்ராவின் வெற்றி. என்றுதான் சொல்ல வேண்டும். காப்ராவின் அண்மை நூல் “The science of Leonardo“.
லியனார்டோ டாவின்ஸி ஐரோப்பாவின் புத்தெழுச்சியின் காலகட்டத்தில் வாழ்ந்தவர். இக்காலகட்டம் ஒருவிதத்தில் ஐரோப்பா தனது கிறிஸ்தவத்துக்கு முந்தைய வேர்களை மீள்-கண்டதால் ஏற்பட்டது. ஆனால் ஐரோப்பாவின் சமுதாய கட்டமைப்பாக கிறிஸ்தவ ஸ்தாபன மதமே இருந்தது. அரிஸ்டாடிலையும் விவிலிய பிரபஞ்ச பார்வையையும் இணைத்தெழுந்ததோர் அனைத்ததிகார உலகம் அது. இவ்வுலகில் வாழ்ந்தார் லியனார்டோ டாவின்ஸி. லியனார்டோ தமது வாழ்க்கையில் எழுதியெடுத்த குறிப்புகள் வரைபடங்கள் ஆகியவற்றில் நமக்கு கிடைத்திருப்பது ஏறக்குறைய 6000 பக்கங்கள். இந்த பக்கங்களில் கிடைக்கும் விவரணங்கள், படங்கள், மேலும் டாவின்ஸியே உருவாக்கிய மிகபிரபல சித்திரங்கள் ஆகியவற்றிலிருந்து லியனர்டோவின் மனமண்டலத்தை - அவர் எந்த அறிவியக்கம் மற்றும் அழகியல் ஊடாக தம்மை சுற்றியிருந்த மானுட உலகை, இயற்கையை தரிசித்தார் என்பதனை விவரிக்கிறார் காப்ரா.
லியனார்டோவின் வாழ்க்கையை ஒரு மனிதராகவும் ஒரு அறிவியலாளராகவும் இந்நூல் காண்கிறது. அமைதிவாதியாக, போரின் வீண்தன்மையை உணர்ந்தவரான ஒரு கலைஞர் டாவின்ஸி. சமயம் தாண்டிய ஆன்மிக அறிஞர். ஓவியர். சிக்கலான அதிசயமான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர். ஓரின சேர்க்கையாளர். சைவ உணவாளர். உயிர்வதையை வெறுத்தவர். சந்தைகளில் பறவைகளை காசு கொடுத்து வாங்கி அவற்றை விடுதலை செய்து மகிழ்பவர். தமது ஓவியங்களை குறியீட்டு செய்திகளாக மாற்றியவர். மோனாலிஸாவின் மர்மப்
புன்னகையின் பின்னால் அவர் புதைத்துவைத்துள்ள இரகசியங்கள் இன்றைக்கும் விவாதங்களை ஏற்படுத்துகிறது. இவை எல்லாவற்றுடனும் அவர் அறிவியலின் பிதாமகர் எனும் கோணத்தில் காண்கிறார் காப்ரா.
லியனார்டோ வின் காலத்தில் ஒரு அறிவுப்புலத்தை அறிவதென்பது அது குறித்து அதற்கு முன்பாக எழுதப்பட்ட அனைத்தையும் படிப்பது என்பதே. லியனார்டோ அதிலிருந்து மாறுபட்டார். அவர் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தார். தமது அனுபவ அறிவிலிருந்தே அவர் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்பவராக இருந்தார். டாவின்ஸி கலைக்காக இயற்கையை ஆழ்ந்து பார்த்து அனுபவித்தார். எந்த ஒரு பொருளை அவர் அவதானிப்பதாக இருந்தாலும் ஒரு கலைஞனின் கண்ணுடன் ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் உள்வாங்குபவராக இருந்தார். அவரது அறிவியல் அந்த கலைக்கான இயற்கை தரிசனத்தின் மூலமாக பெறப்பட்டது. இதன் விளைவாகவே நியூட்டன், பிரான்ஸிஸ் பேக்கன் ஆகியவர்களின் அறிவியல் கட்டமைப்புகளில் இருக்கும் இயற்கையிலிருந்து விலகிய, இயற்கையை அடிமைப்படுத்துகிற பார்வை டாவின்ஸியில் இல்லை என்பதனை காப்ரா சுட்டிக்காட்டுகிறார்.
இயற்கையின் பன்மைத்தன்மை, இயற்கையில் நாம் காணும் அசைவுகள்-ஓட்டங்கள் ஆகியவை லியனார்டோவை பெரிய அளவில் கவர்ந்தன. ஒவ்வொரு மரமும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியாக இல்லை என்பதையும், ஒரே மரத்தில் ஒவ்வொரு கிளையும் கொப்பும் தன்னளவில் வேறுபாடுகளை கொண்டதாக இருப்பதையும் அவர் உன்னிப்பாக கவனித்தார். குறிப்பாக நீரின் பலவித சுழலோட்டங்களையும் இயற்கையில் காணப்படும் இதர ஓட்டங்களையும் அவர் இணைத்துப்பார்த்துள்ளதை நாம் அவரது குறிப்புகளில் உள்ள ஓவியங்களில் உணர முடிகிறது. உதாரணமாக ஒரு குறிப்போவியம் மானுட முடிக்குழலின் இயற்கை வளைவு சுழிவுகளையும் நீரோட்ட வளைவு சுழிவுகளையும் அருகருகே காட்டுகிறது.
ஓடும் நீரின் சுழல்களில் டாவின்ஸிக்கு இருந்த ஆர்வம் நீராதாரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நகரங்களை அமைக்கும் திட்டமிடுதலை குறித்து அவரை சிந்திக்க வைத்தது. ஒரு நகரத்தினை வடிவமைக்கும் போது அந்த நகரம் எனும் கூட்டுயிரின் ஒரு பகுதியாகவே நதி நீரோட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென அவர் கருதினார். ஆனால் டாவின்ஸியின் சிந்தனையோட்டம் அவர் வாழ்ந்த காலத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்கு பிறகே நகர வடிவமைப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது. டாவின்ஸியின் அறிவியல்
மென்மையான அறிவியல் என்கிறார் காப்ரா.
ப்ரான்ஸிஸ் பேக்கனை போல இயற்கையை பிணைத்து அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் அறிவியல் அல்ல. உதாரணமாக அவரது பறக்கும்
இயந்திரம் பறவையின் உடல்பாகங்களை அப்படியே உள்வாங்கி வடிவமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் மனிதன் தானே பறவையாக மாறி பறக்கவேண்டும் எனும் கனவு வெளிப்படுகிறது என்கிறார் காப்ரா. லியனார்டோவின் குறிப்பேடுகளில் வரையப்பட்டுள்ள பல பறவை படங்களும் அவற்றின் இயக்க அழகை காட்டுவதாக அமைந்துள்ளன.
ஒரு கேள்வி எழும்புகிறது. லியனார்டோ தனது குறிப்பேடுகளை வெளியிடவேயில்லை. அப்படி அவர் வெளியிட்டிருந்தால் பின்னால் வந்த அறிவியலெழுச்சியின் பாதையை - நியூட்டானிய கார்ட்டீசிய பேக்கானிய பாதையை- அது எந்த அளவு மாற்றியமைத்திருக்கும்? நமக்கு இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை. ஆனால் இன்றைக்கு நவீன சூழலியல், உயிரியல், க்வாண்டம் இயற்பியல் இவையெல்லாம் காட்டும் பிரபஞ்ச தரிசனம் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்த உயிரோட்டம் கொண்ட உறவுகளால் உருவாகிய நெகிழ்ச்சியான ஆனால் உயிரோட்டமிக்க வரையறைகளால் ஆன புத்தாக்க இயல்பு கொண்டதோர் பிரபஞ்ச தரிசனம். இந்த தரிசனத்தை இத்தனை அறிவுப்புலங்களின் முன்னேற்றமும் ஏற்பட்டிராத அன்றே தரிசித்தவர் என்ற முறையில் லியனார்டோ டாவின்ஸி நிச்சயமாக இன்றைக்கும் முக்கியமானவராவார்.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
11 February 2009 at 11:20 am
தமிழ் இந்து தளத்தில் இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளும், மானுட சமுதாயத்திற்காக வாழ்ந்த நல்ல நல்ல அறிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்.அரவிந்தன் நீலகண்டனின் இந்த அருமையான கட்டுரை டாவின்சி என்ற ஓவியனாகவே எல்லோருக்கும் தெரிந்த ஒரு பன்முக ஆராய்ச்சியாளனை, மானுடத்தை, இயற்கையை நேசித்தவனை அறிமுகம் செய்கிறது. அருமை. வாழ்த்துக்கள் அரவிந்தன்.