காடென்னும் கடவுள்
சேதுபதி அருணாசலம்
14 Mar 2009 |
அச்சிட
என் கிராமத்து வீட்டில் ஒரு மிகப்பெரிய தோட்டம் இருந்தது. வீட்டின் சுற்றுச்சுவருக்குள்ளேயே இருந்த அந்தத் தோட்டத்தில் பலவிதமான பூச்செடிகளோடு பாதாம்மரம், வேப்பமரம் இந்த இரண்டும் இருந்தன. என்னுடைய மிகப்பழைய சிறுவயது நினைவுகள் இந்த மரங்களோடு தொடர்புடையவை. ஐந்தாம் வகுப்பின் கோடை விடுமுறைக்காக நான் என் அம்மாவுடனும், அக்காவுடனும் உறவினர் வீட்டில் ஒருமாதம் தங்கியிருந்துவிட்டு வந்தேன். அப்பா மட்டும் வீட்டிலேயே இருந்தார். விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பிவந்து பார்க்கையில் மொத்தத் தோட்டமும் அழிக்கப்பட்டிருந்தது. மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. அந்தத் தோட்டமிருந்த இடத்தில் ஒரு விசைத்தறித் தொழிற்சாலை கட்டுவதாக என் சகோதரர் முடிவு செய்திருந்தார். என் அப்பாவும் எங்களிடம் தோட்டத்தை அழிக்கப் போவதைப் பற்றித் தெரிவிக்கவில்லை.
அந்தப் பூச்செடிகளையும், மரங்களையும் பெரிதும் நேசித்த என் அம்மா வெட்டவெளியாக இருந்த நிலத்தைப் பார்த்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். எனக்குப் பெரிய வலியோ, இழப்போ இருக்கவில்லை. விசைத்தறிக் கருவிகளைப் பார்ப்பதற்கான ஒரு பெரிய ஆர்வம்தான் இருந்தது. சந்தோஷமாகச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் அழுகை எரிச்சலைத் தந்தது!
என்னுடைய சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன். நம் இந்திய வாழ்வில் சூழலியல் வகித்த பெரும்பங்கை நான் விளக்கிக் கூறத் தேவையில்லை. தாவரங்களும், விலங்குகளும் நம் தெய்வங்களோடும், வாழ்க்கை முறையோடும் இணைந்தவை. இது மேற்கின் பார்வையில் பழங்குடி முறைகளைப் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்படும் “Fear of unknown” காரணமாக விளைந்ததல்ல. மாறாக, இயல்பாகவே சூழலியல் குறித்து நம் மண்ணில் ஒரு ஆழமான புரிதல் இருந்தது. மனிதனைத் தவிர மற்றெல்லாவற்றையும் கீழானதாகக் கருதும் மேற்குலகுக்குத் தாவரங்களுக்கும் உயிரும் உணர்வும் இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவியதும் ஜகதீஷ்சந்திரபோஸ் என்ற இந்திய விஞ்ஞானிதான்.
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் வரும் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம் தினமும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரித்து வரும் ஒரு முதியவர். கிட்டத்தட்ட அந்தத் முதியவரை நினைவூட்டும் வகையில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கும் அய்யாசாமி என்ற பெரியவரைப் பற்றிய செய்திக்குறிப்பு ஒன்றை ‘தி இந்து’ நாளிதழில் படிக்க நேரிட்டது.
பெரிய கொடிவேரி நகரப் பஞ்சாயத்துக்குட்பட்ட வேட்டுவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த C.அய்யாசாமி என்ற 76 வயது முதியவர், தான் வளர்த்த மரங்களை “குழந்தைகள்” என்றுதான் குறிப்பிடுகிறார். அப்பகுதியைச் சேர்ந்த மக்களும், பறவைகளும் சந்தோஷமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக இந்த மரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், சூழலியல் குறித்தும் பெருங்கவலை அவருக்கு இருக்கிறது.
“மரங்களில்லாமல் நாம் எப்படி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்?” என்று கேட்கிறார் அவர். மிகக்குறைவான வருவாயைக் கொண்ட ஒரு சாதாரண பண்ணைத் தொழிலாளியான அவர் மரம் நடுதலை ஆரம்பித்தது ஒரு வானொலிச் செய்தியைக் கேட்டபின். “25 வருடங்களுக்கு முன்னால் நான் கேட்ட ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற அனைத்திந்திய வானொலியின் வேண்டுகோள்தான் மரம்நடுதலைக் குறித்த தீவிரமான எண்ணத்தைத் தந்தது” என்கிறார் அய்யாசாமி. “வீட்டுக்கு மட்டுமில்லாமல் கிராமம் முழுவதுமே மரக்கன்றுகளை நடலாமே என்று யோசித்தேன். ஏனென்றால் அப்போது பறவைகள் ஓய்வெடுப்பதற்காக நிறைய மரங்கள் இருக்கவில்லை” என்கிறார் அவர்.
“அய்யாசாமி இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்” என்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். ஆனால் அய்யாசாமியோ ‘25 வருடங்களாக மரக்கன்றுகளை நட்டுவந்ததைப் பார்க்கையில் பத்தாயிரம் என்பது குறைவான எண்ணிக்கை’ என்கிறார். ஆனால் அய்யாசாமியின் அத்தனை உழைப்பும் பயனில்லாமல் போகும் ஒரு நிலை இப்போது வந்திருக்கிறது. விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும் மரங்களைச் சில பேர் வெட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
“எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். வருவாய் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் இந்த மரங்களைப் பாதுகாக்கத் தங்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் அதனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை. நம்மைச் சுற்றியிருக்கும் மரங்களுக்காக நாம் அய்யாசாமி போன்ற தன்னலமில்லாத பெரியவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். தான் நட்ட மரங்கள் தன் கண் முன்னாலேயே சட்டவிரோதமாக வெட்டப்படும் அவலத்தைக் காண நேரிடும் அவரைப் பற்றிய அந்த செய்திக்குறிப்பு மனதைக் கணக்கச் செய்வதாக இருந்தது!
இன்றைய இந்தியாவின் சராசரி காட்டுப்பரப்பின் சதவீதம் 23.41 சதவீதம். ஆனால் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த மகாராஷ்டிராவில் இன்றைய காட்டுப்பரப்பு, தேசிய சராசரிக்கும் கீழான 20 சதவீதம்தான். Afforestation எனப்படும் வனவளர்ச்சிக்குப் பெரும்தடையாக இருப்பவர்கள் மாவோயிஸ்டுகள் என்று கடந்த டிசம்பரில் அகர்த்தலாவில் நடந்த ஒரு இந்திய அளவிலான கருத்தரங்கில் வனத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
வனத்துறை அதிகாரிகள் மீதும், வனவளர்ச்சி நடவடிக்கைகள் மீதும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தங்கள் வன்முறையைப் பிரயோகித்து வருவதால் தங்கள் பணிகளை மேற்கொள்வது உயிருக்கே ஆபத்தான விஷயமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, பீஹார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளாலும், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களாலும் வனவளர்ச்சித்துறைப் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் வனங்கள் அடர்ந்த கிழக்குப் பகுதிகளிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு பங்களாதேஷுக்குக் கடத்தப்படுகின்றன. “எரிபொருள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்ற பயன்பாடுகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு பங்களாதேஷுக்குக் கடத்தப்படுகின்றன” என்கிறார் திரிபுராவின் வனத்துறை அமைச்சர் ஜிதேந்திர செளத்ரி. கொஞ்சம் கொஞ்சமாக பச்சைப் போர்வையை இழந்து வருகிறது இந்தியா.
மரங்களை சட்டவிரோதமாக வெட்டிப் பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது ஒரு உலகளாவிய பிரச்சினை. ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியிலுள்ள மரங்களை வெட்டி ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனால் அந்தக் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் ஏற்படும் ஒரு காட்டின் அழிவை, ஜெயமோகன் தன்னுடைய ‘காடு’ நாவலில் மிக அழகாகப் பதிவுசெய்திருந்தார். காட்டின் ஒவ்வொரு அசைவையும், செடி, கொடி, விலங்குகளையும், வாழ்க்கையையும் மிக சுவாரசியமாகயும், நுணுக்கமாகவும் விளக்கிவிட்டு, அப்படிப்பட்ட காட்டை சில தனிநபர்கள் எப்படித் தங்கள் சுயலாபத்துக்காக அழிக்கிறார்கள், அவர்களுக்கு அரசு அதிகாரிகள் எப்படித் துணை போகிறார்கள் என்றும் அவர் எழுதியிருந்ததைப் படித்தபோது உண்மையிலேயே ஏதோ ஒரு சொல்லமுடியாத துக்கம் நெஞ்செல்லாம் பரவியது.
பூத்துக் குலுங்கும் பீச் மரங்கள்
அகிரா குரோஸாவாவின் Dreams என்ற குறும்படத் தொகுப்பை சமீபத்தில் பார்த்தேன். அதில் ஒரு கதையில் தங்கள் வீட்டுத் தோட்டத்திலிருக்கும் பீச் (peach) மரங்களை அந்த வீட்டினர் வெட்டிவிடுகின்றனர். வெட்டப்பட்ட பீச் மரங்களின் ஆத்மாக்கள் அந்த வீட்டு பொம்மைகள் வழியாக வந்து, அந்த வீட்டுச் சிறுவனைக் கடுமையாக மிரட்டுகின்றன. பயந்து போய் அழும் சிறுவன், அந்த மரங்கள் வெட்டப்பட்டபோது சோகமாக அழுதான், உண்மையிலேயே அந்த மரங்களை அவன் பெரிதும் நேசித்தான் என்று அந்த ஆத்மாக்களுக்குத் தெரியவருகிறது. அதனால் அந்த பொம்மைகள் அவனை மன்னித்து, வெட்டப்பட்ட பீச் மரங்களை, அவன் பார்வைக்கு மட்டும் தெரியும்படி ஒரே ஒருமுறை தோன்றச்செய்து அவனை மகிழ்வித்து மறைகின்றன. இந்தக் குறும்படம் வழியாக என் வீட்டு மரங்கள் வெட்டப்பட்டபோது சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருந்த என்னைப் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது அகிரா குரோஸாவாவின் ஆத்மா.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: dreams, ecology, environment, அகிரா குரோஸாவா, காடு, சுற்றுச்சூழல், ஜெயமோகன், மரங்கள், மாவோயிஸம், வனங்கள்
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
14 March 2009 at 2:50 pm
காடுகள் வெட்டபடுவதைப் பற்றி படிக்கும்போது வயிற்றினுள் ரொம்ப வேதனையை உணர்கிறேன்.
மன் மரம் மனிதன் என்னும் வலைபதிவை படியுங்கள்.vincent2511@gmail.coம்.,என்பது அவரது முகவரி.கோவையில் இருக்கிறார்.அவரால் இயன்ற அலோசனையை தருவார்.