காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த வன்முறை நிகழ்வுகளைப் பற்றி உச்சநீதி மன்றத்தின் ஆணையின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாண்புமிகு நீதியரசர் ஸ்ரீக்ருஷ்ணா அவர்கள் தன் அறிக்கையில், “வழக்கறிஞர்களின் தொழிலில் கட்டுப்பாடுடன் கூடிய ஒழுக்க விதிகள் சிறப்பாக அமையத் தேவையான மாறுதல்களை வழக்குரைஞர்கள் சட்டத்தில் ஏற்படுத்த இதுவே தகுந்த தருணமாகும். ஏனென்றால், தற்போதைய நிலவரம், வக்கீல்களை மட்டுமல்லாமல், வழக்கு தாக்கல் செய்தவர்களையும், பொது மக்களையும், நீதி மன்றத்தின் செயல்பாடுகளையும் பாதிப்பது மட்டுமல்லாமல், சட்டத்தின் ஆட்சியையும் நிலைகுலையச் செய்கிறது. அம்மாதிரியான சட்ட மாற்றங்கள் ஏற்படுத்தும் வரை, மாண்புமிகு நீதிமன்றம் வக்கீல்களின் ஒழுக்க நடைமுறைகளுக்கான விதிகளை வரையறை செய்து எல்லா நீதிமன்றங்களும் அவற்றை நடைமுறைப் படுத்தவேண்டும்” என்று பரிந்துரை செய்திருந்தார்.

திராவிட இனவெறி அரசியலிலும், அவ்வரசியல் செய்யும் கழகங்களின் ஆட்சியிலும் தமிழகம் சிக்கிக்கொண்ட கடந்த நாற்பது ஆண்டுகளில், வழக்குரைஞர்களின் தொழில்முறையிலும், செயல்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடின்மை அதிகரித்து வருவதை கண்கூடாகக் காண்கிறோம். தமிழகத்தின் வரலாற்றில், சட்டம், ஒழுங்கு, காவல்துறை, மற்றும் நீதி பரிபாலனம் எவ்வாறு கடந்த காலங்களில் இருந்தது என்பதை இத்தருணத்தில் திரும்பிப் பார்ப்பது, தற்போதுள்ள வழக்குரைஞர்கள், நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் கடமையாகும். தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக அவர்கள் அவ்வாறு வரலாற்றைத் திரும்பிப் பார்த்து ஆன்ம பரிசோதனை செய்வது அவசியமாகிறது. அப்போதுதான் காவல் துறையும், சட்டத் துறையும், நீதித்துறையும் நம் தமிழ்நாட்டில் எவ்வளவு அற்புதமாக செயல் புரிந்து, சாதனைகள் புரிந்து, புகழின் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். அதே சமயம், இத்துறைகள் தற்போது எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன என்பதும் பழைய மகோன்னத நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியும்.

கடந்த பல ஆண்டுகளாக வக்கீல்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த பனிப்போரே, பிப்ரவரி 19, 2009 அன்று எரிமலையாக வெடித்து வெளி வந்துள்ளது. வக்கீல்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பலமும், அரசியல் கட்சிகளின் பக்கபலமும் இருக்க, காவலர்களுக்குச் சங்கங்கள் இல்லாமையும், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையும் பெரும் பலவீனமாக உள்ளன. அவர்களை ஆளும் கட்சியினரும் காப்பதில்லை, எதிர்க் கட்சியினரும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். எந்தப் பக்கத்திலிருந்தும் ஆதரவின்றி அவர்கள் தனித்து விடப் படுகிறார்கள். சாதாரணப் போக்குவரத்து விதி மீறல் முதல் கிட்டத்தட்ட கொலைக்குற்றம் வரை, வக்கீல்கள் காவலர்களை மிகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மீது வெறும் ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) மட்டுமே போலீசாரால் பதிவு செய்ய முடிந்துள்ளது, அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிந்ததில்லை. இன்றைய தேதியில், அராஜகங்களில் ஈடுபடும் வக்கீல்கள மீது மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்னும் உண்மையே, வக்கீல்களின் புனிதமான தொழிலும், மேன்மையான கலாசாரமும் எந்த அளவுக்குத் தாழ்ந்து போய்விட்டது என்பதற்குச் சான்று.

துரதிர்ஷ்டவசமான மற்றும் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அடாவடித்தமான வக்கீல்கள், சட்டம் பயிலும் மாணவர்களிடத்துப் பெரும் தாக்கத்தை உண்டாக்குவது தான். மாணவர்கள் இவர்களின் நடவடிக்கைகளால் சுலபமாக ஈர்க்கப்பட்டுத் தமது எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்கின்றனர். இந்த வக்கீல்கள் மாணவர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு சட்டக் கல்லூரிகளிலும், கல்லூரி விடுதிகளிலும் கலாசாரமற்ற பழக்க வழக்கங்களும், நடவடிக்கைகளுக்கும் இடம்பெறக் காரணமாகி விடுகின்றது. வக்கீல்களிடையே நிலவும் ஜாதி மற்றும் கட்சி ரீதியான பிரிவு மாணவர்களிடத்திலும் தோன்றி அவர்களின் ஒற்றுமையை அழிக்கின்றது. சமீபத்தில் சட்டக் கல்லூரியில் ஷெட்யூல்ட் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இடையே நடந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதோடு மட்டுமல்ல, எவ்வளவு அருவருக்கத் தக்க, அழுகிப்போன சூழ்நிலையிலிருந்து எதிர்கால வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் வெளிவருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

மற்றொருபுறம் காவல் துறையினர் செய்வதறியாமல் அரசியல்வாதிகளின் உத்தரவுகளின்படி நடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நடவடிக்கை எடுத்தாலும் கண்டனம், எடுக்காவிட்டாலும் கண்டனம் என்கிற பரிதாபமான நிலைமையில் உள்ளார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவங்களைத் தடுக்காமல் இருந்ததற்கும் பொது மக்களிடம் கண்டனம்; உயர் நீதி மன்றத்தில் நடவடிக்கை எடுத்ததற்கும் கண்டனம். இதில் ஒரு வேதனையான வேடிக்கை என்னவென்றால், இரண்டுமே அவர்களாக எடுத்த முடிவு அல்ல. அவர்களுக்கு மேலே உள்ள அதிகார வர்க்கத்தினர் அளித்த உத்தரவின்படிதான் அவர்கள் சட்டக் கல்லூரியில் நுழையாமல் இருந்தும், உயர்நீதி மன்றத்தில் நடவடிக்கை எடுத்ததும்.

இந்த நிலைமைக்கு அவர்களே முக்கிய காரணம். அவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தாங்கள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்பதையும், தங்களுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை உண்டு என்பதையும் மறந்து, தாங்கள் சுயமாக சட்டத்தின்படி நடந்துகொள்ள அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்த் தவறிவிட்டார்கள். அவ்வாறு இல்லாதிருந்தால் தற்போதுள்ள கீழான நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.

நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவை பற்றிக் அதிகம் பேசாமலிருப்பதே நல்லது. சொல்லப் போனால் இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. நீதி பரிபாலனத்தில் நடைபெறும் ஊழல்களைப் பற்றிக் கருத்தரங்கங்களில் விவாதிக்கப் படுகின்றது. நாட்டின் பிரதம மந்திரியும், நாடாளுமன்ற சபாநாயகரும், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியும் அந்தக் கருத்தரங்குகளில் பங்கேற்கின்றனர். இதிலிருந்தே, நீதிபதிகளிடத்தும் ஊழல் மலியத் தொடங்கிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். நீதி பரிபாலனத்தில் மலிந்துள்ள ஊழல் நடவடிக்கைகளில் சில நீதிபதிகளுக்கு அவர்களின் தவறான குறிக்கோள்களை நிறைவேற்றச் சில வழக்குரைஞர்கள் துணை போகிறார்கள் என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாகப் பேசப்படுகிறது.

நீதிபதிகளுக்கு நம் உதவி எப்போதும் தேவைப்படுகிறது என்கிற எண்ணமே இவ்வக்கீல்களைத் தவறான, அடாவடித்தனங்களான காரியங்களில் தைரியமாக ஈடுபட வைக்கிறது. நாம் எந்தத் தவறையும் செய்துவிட்டு எளிதில் தப்பிவிடலாம் என்றும் எண்ண வைக்கிறது. உதாரணமாக ஒரு ஆண் நீதிபதியையும் நீதிமன்ற அலுவலரையும் அடித்த வக்கீல்களும், ஒரு பெண் நீதிபதியைத் தகாத வார்த்தைகளால் பழித்த வக்கீல்களும் இன்னும் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர்! மேலும் சக வக்கீலை நீதிமன்ற வளாகத்திலேயே அடித்துக் கொன்ற சம்பவமும் நிறைவேறியுள்ளது! காவலர்களையும், காவல்துறை ஆய்வாளர்களையும், உயர்நீதி மன்றத்திலேயே அடித்த வரலாறுகளும் உண்டு. அங்கு பணிநிமித்தம் வரும் பெண் காவலர்களை அசிங்கமாகச் சீண்டுவதிலும், தவறாகத் தீண்டுவதிலும் ஈடுபட்ட வக்கீல்கள் கூட உண்டு என்று அப்பெண் காவலர்களே கூறுவதுண்டு.

எனவே இம்மாதிரியான வக்கீல்கள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட பிரிவினர் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை நீதி மன்ற வளாகத்திலேயே கொண்டாடியதிலோ, அல்லது நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள அந்தத் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தையும், நீதிமன்ற வளாகத்தையும், தங்களின் சட்ட அலுவலகங்களையும் உபயோகப் படுத்திக் கொண்டதிலோ ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதைப்போலவே, திரு சுப்ரமணிய சுவாமி அவர்களையும், வழக்காடுதலைக் காண வந்திருந்த பார்வையாளர்களையும் நீதிபதிகள் கண்முன்னேயே வசைபாடி, முட்டைகளால் தாக்கியதிலும் ஆச்சரியம் இல்லை.

மேலும், தங்களை கைது செய்ய வந்த காவலர்கள் மீது கல் வீசி, அவர்களைத் தாக்கி, காவல் நிலையத்தைத் தீ வைத்து அழித்ததிலும் ஆச்சரியம் இல்லை. இந்த அளவிற்கு, எதையும் செய்யலாம், செய்துவிட்டுச் சுதந்திரமாக நடமாடலாம் என்று திமிர் பிடித்து இவர்கள் திரியும் அளவிற்கு இவர்கள் வளர்க்கப் பட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியம். ஒரு நீதிபதியை அடித்தபோதும், இன்னொரு நீதிபதியை திட்டியபோதும் இவர்களுக்குக் கடும் தண்டனை வழங்காமல் இவர்களுடன் சமாதானம் செய்தார்களே நீதிபதிகள், அது ஆச்சரியம். நாட்டில் தடை செய்யப்பட ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட இவர்களுக்கு கடும் தண்டனை வழங்காமல் இருந்ததே அரசாங்கமும், நீதிமன்றமும், அது ஆச்சரியம். இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இவர்களின் தகாத செயல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டார்களே சீனியர் வக்கீல்களும், பார் கவுன்சிலும், அது ஆச்சரியம். மாதக் கணக்கில் வேலை நிறுத்தம் செய்துகொண்டு, பொதுமக்களுக்கும், நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் இவர்களைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனவே, நீதிமன்றங்களும், அரசாங்கங்களும், பிரதம மந்திரி அலுவலகமும், ஜனாதிபதி அலுவலகமும், அது ஆச்சரியம்! எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஐந்து காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்த உச்சநீதி மன்றமும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை தற்காலிகப் பணிநீக்கம் செய்த உயர்நீதிமன்றமும், தவறு செய்த வக்கீல்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களிடம் மீண்டும் பணிக்குத் திரும்புங்கள் என்று கெஞ்சிக் கொண்டது தான்! ஜனநாயகத்தில் பொதுமக்களுக்கு ஒரு சட்டம், வக்கீல்களுக்கு ஒரு சட்டமா? நீதி பரிபாலனம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா?

நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா அவர்களின் பரிந்துரைக்கு வருவோம். வழக்குரைஞர்களுக்கான ஒழுக்க நடைமுறை விதிகள் என்று ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி திரு சுபாஷன் ரெட்டி அவர்கள் 25-விதிகள் கொண்ட ஆவணத்தைத் தயார் செய்திருந்தார்கள். ஆனால் அவ்வாறு தயார் செய்ய நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை, பார் கவுன்சிலுக்குத் தான் அதிகாரம் உண்டு என்று “அனைத்தும்” அறிந்த நம் “மாண்புமிகு” மத்திய சட்ட அமைச்சர் திரு. பாரத்வாஜ் அவர்கள், அரசியல் விளையாட்டு விளையாடி, பின்னர் நீதியரசர் சுபாஷன் ரெட்டி அவர்களைப் பணிமாற்றமும் செய்து ஒரு நற்காரியம் நடக்க விடாமல் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

சரி, முடிவு தான் என்ன? உண்டு! மனம் இருந்தால் மார்கம் உண்டு. முதலில் அரசாங்கமும், நீதிமன்றமும் தமிழகத்தின் நீதி பரிபாலனம் தன் மாட்சிமையை இழந்துள்ளது என்பதையும், தமிழகம் தலை குனிந்துள்ளது என்பதையும் உணர வேண்டும். பின்னர் வழக்குரைத்தலின் புனிதத்திற்கும் அத்தொழிலில் களங்கமின்றி ஈடுபட்டு வரும் பல வழக்குரைஞர்களின் பெருமைக்கும் பெரும் களங்கம் விளைவித்துள்ள அந்தப் பிரிவினரை இனம்கண்டு களையெடுக்க வேண்டும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி, அவர்களை பார் கவுன்சிலிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். அடிப்படையாகச் செய்ய வேண்டிய செயல்களாக, சட்டக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்; சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளைத் திறம்பட நிர்வாகம் செய்ய வேண்டும்; சட்ட மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது. சட்டப் படிப்பு முடித்த மாணவர்களை படிப்பு முடித்த கையோடு வழக்கறிஞர் சங்கங்களில் சேர்க்கக் கூடாது. சொல்லப்போனால், பார் கவுன்சில் தவிர மற்ற சங்கங்களை தடை செய்ய வேண்டும். பார் கவுன்சிலில் அங்கத்தினராகச் சேர்வதற்கு ஞாயமான விதி முறைகள் உண்டாக்க வேண்டும். அதாவது அந்த விதி முறைகள் மாணவர்களைத் தங்கள் தொழிலில் சிரத்தையுடன் முனைவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.

காவல் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கும், சட்டப் படிப்பு முடித்து வக்கீல் வேலைக்குத் தயாராக உள்ள மாணவர்களுக்கும் ஒன்றாகப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அதேபோல் வழக்குரைஞர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கூட அவ்வப்பொழுது ஒன்றாக, சட்டத்தின் மாட்சிமைப் பற்றியும், சமூகம் நன்றாக இருக்கச் சட்டம் ஒழுங்கு நிலை பெறுவதில் அவர்களின் பங்கு பற்றியும், மேலும் நீதி பரிபாலனம் பற்றியும் சிறப்பு பயிற்ச்சி வகுப்புகள் நடத்தலாம். காவல் துறையும், சட்டத் துறையும் ஒற்றுமையாக பணி புரிய வேண்டிய அவசியத்தை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டும். ’சட்டமும்’, ’ஒழுங்கும்’ ஒன்றாக இருந்தால் ’நீதி’ நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் நீதி பரிபாலனம் என்பது, மனுநீதிச் சோழனும், சிபிச் சக்கரவர்த்தியும், சங்க கால மன்னர்களும், கடையேழு வள்ளல்களும், மகோன்னத நிலைக்குக் கொண்டு சென்றதாகும். ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தபோது கூட, சென்னை நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர்கள் ஆங்கிலேயே நீதியரசர்களுக்கு அவர்களின் சட்ட நுணுக்கங்களையே கற்றுத் தரும் அளவிற்குச் சிறந்து விளங்கினார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சட்டத்தின் மாட்சிமைக்கும், நீதியின் பரிபாலனத்திற்கும் அற்புத வரலாறு படைத்துள்ளது தமிழகம். இப்போது சற்று இருள் சூழ்ந்துள்ளது. நீதி தேவதை சிறிது நேரம் கண் திறந்து பார்க்கட்டும். ஒளி வெள்ளம் பரவட்டும். தமிழகம் தலை நிமிரட்டும்!

19 Replies to “காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்”

  1. அன்புள்ள ஆசிரியர்
    மிகவும் நேர்மையான கட்டுரை வக்கிலாவதற்குத் தகுதி அற்றவர்கள் ஜாதி அடிப்படை கோட்டாவில் குறைந்த மார்க்கில் பாஸாகி, வக்கீலாகி,
    பெயில் எடுக்கக்கூட வாய்ப்புக் கிடைக்காத நபர்களின் நாடகமே நடந்த நிகழ்ச்சி.

  2. மிகவும் உண்மையாக எப்பக்கச் சாய்வுமின்றி எழுதப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு ஆய்வும் எழுத்தும் தமிழ் நாட்டில் எந்த ஒரு பத்திரிகையுமோ, தொலைக்காட்சியுமோ, அல்லது வேறு யாருமோ எழுதத் துணியாத விஷயம். சட்டமன்றத் தேர்வுகள் வெளியாகி, கருணாநிதி தான் முதலமைச்சராகப் போகிறார் என்று தெரிந்த உடனேயே, அவர் பதவி ஏற்கும் முன்னரே, அறிவாலயத்தில் பூச்செண்டுடன் முண்டியடித்துக்கொண்டு குழுமிய காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தைப் பார்த்ததுமே இந்த நாட்டின் நிர்வாகமும் சட்டம் ஒழுங்கும் பெரும் சரிவை நோக்கிச் செலலத் தொடங்கியதன் முதல் அறிகுறி என்பதை யாரும் சொல்லவில்லை. தினகரன் பத்திரிகை எரிந்த போது, காவல் அதிகாரிகளும் தொண்டர்களும் சூழ அழகிரி கோர்ட்டுக்கு வரும் ஊர்வலக் காட்சிகள், விமான நிலயத்திலிருந்து அழகிரியை பத்திரமாக ரகசியமாக காவல் துறை அதிகாரிகள் அழைத்து வந்த காட்சி, சட்டக் கல்லூரியின் முன் கைகட்டி வேடிக்கை பார்த்த காட்சி, வக்கீல்கள் கல்லெரியும் காட்சி, நீதிபதிகள் என்ன ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா, நீதி மன்றம் என்ன கட்டப் பஞ்சாயத்தா என்று ஆற்காடடார் பேசியதும், கருனாநிதி அதை, பூணைக்கு மணி கட்டிய வீரச்செயலாக ஆதரித்துப் பேசியதும், இதையெல்லாம் காணாது வாய்மூடி இருந்த நீதித்துறை, நூறு கோடி மக்களின் விதியை இரண்டு நீதிபதிகள் எப்படித் தீர்மானித்துவிடமுடியும் என்று திருவாய் மலர்ந்த, “என்றுமே நாங்கள் நீதிக்குத் தலைவணங்குபவர்கள்” என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முதலமைச்சர், இந்த முதலமைச்சரின் நிர்வாக குணாதியசங்களின் 1971 கால ஆரம்பங்களையே அன்றைய காவல் துறை அதிகாரி வைகுண்டத்தின் புத்தகத்தில் பார்த்திருக்கலாம், ஒன்றா இரண்டா, இன்றா நேற்றா, 40 வருட கால சீரழிவு.

    இதற்கெல்லாம் ஊற்றுக்கண், தமிழ் நாட்டின் சரித்திரத்தையும், சமூக குணத்தையும் மாற்றியமைத்த கருணாநிதியும் அவர் கட்டமைத்து வழிகாட்டிவரும் திராவிட அரசியலும். அதெல்லாம் சரி. உச்ச நீதி மன்றமும் ஏன் சரிந்து வருகிறது? சோனியா காந்தியின் வேஷதாரித்தனம் தெள்ளத் தெளிவானது. ஆனாலும் அவர் பற்றிய எந்த மனுவும் உச்ச நீதி மன்றத்ததில் தள்ளப்பட்டுவிடுகின்றனவே. யாரைத்தான் தனித்து குற்றம் சாட்டுவது? யாரை விடுவது? எதற்கும் வாய்மூடி மௌனித்திருக்கும் நேர்மையின் சிகரம், மன்மோகன் சிங். கருநாநிதிக்கு ‘சொக்கத் தங்கமாக’ தென்படும் சோனியா காந்தி, ‘வடவர் ஆதிக்கத்தை ஒழிக்க’ 14 வயதிலிருந்தே தன் போராட்டத்தைத் தொடங்கியதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழினத் தலைவரின் 84 வயதுப் பரிணாமம் இப்படி இருக்கும் என்று யாராவது கனவிலாவது கண்டிருக்க முடியுமா?

  3. ””ஐயையோ அந்நியாயமே! அம்மமா அநியாயமே!! நீதி கிடையாதா” என அக்காலத்து தெருக்கூத்தில் – ”சிலப்பதிகரம்” – ”மனுநீதிச் சோழன்” – ” சிபிச் சக்கரவர்த்தி” – ”மஹாபாரதக் கதையில்” (திரௌபதி பாடுவதைப்போல), அலறவேண்டும் போல இருக்கிறது. இந்நாளில் அது கூட முடியாது. வேறென்ன சொல்லமுடியும். இந்த வயிற்றெரிச்சல் என்று அடங்குமோ! ஐயோ-கடவுளே!!

    நிஜமாக தூங்குபவர்களை எழுப்பமுடியும். தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்கள் எப்ப்டி எழுப்பமுடியும்? இவர்கள் மத்தியில், மனசாட்சி உள்ள்வர்கள், என்னதான் செய்யமுடியும்? ஆம்! அதற்கு ஒரேவழி. இந்த லாயர்கள் (லையர்கள்?) ரௌடிகள் பாதையில் இறங்கவேண்டும். அவர்களிடம் தேகபலம் மாத்திரம் உண்டு. மனசாட்சி உள்ளவர்களிடம் தேகபலமும் ஆத்ம பலமும் உண்டு. அவர்கள் சென்ற பாதயை விடச் சிறந்ததாக திட்டம்போட்டு செயல்பட வேண்டும். நீதித்துறைக்கு நீதி வழங்கமுடியாத நிலை. அந்தோ பரிதாபம்! எனக்குத் தெரிந்த சட்டக்கல்லூரியில் முதலாவதாக, தேர்வடைந்து தங்கப்பதக்கம் பெற்று‌, தலைசிறந்த ஒரு பெரிய வக்கீலிடம் ஜூனியராக சிறப்பாக பெயர் எடுத்த ஒருவர், இந்த பரிதாப நிகழ்வுகளை நோக்கி தன் கருத்தை தெரிவித்தார். அவர் இப்போது ஒரு ஸிஏ வாக பிரக்டீஸ் செய்கிறார். இதை அக்காலத்தில் தெரிந்துதான் ஸிஏ தொழிலுக்கு வந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.

    அக்காலத்தில் ஸிபி ராமசாமி ஐயர் சொன்னதாகச் சொல்வார்கள். ”நான் வக்கீலாக எதோ எனக்குத் தெரிந்ததை உள்றிவிட்டு வருவதை விரும்புகிறேன். பல மூளையில்லாத ரௌடி வக்கீல்கள் புளுகி உளருவதை நாள் பூராவும் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை!” என்றாராம்.

  4. இவ்வளவுக்கும் பின்னணியில் இருப்பது யார் அல்லது என்ன என்று பார்க்க வேண்டும். சுப்ரமண்யசாமியை முட்டை வீசித் தாக்கியதற்கு உண்மையான காரணம் என்ன, அந்த முட்டைகள் எங்கிருந்து வந்தன என்பதும் தெரிய வேண்டியது. ஆக, முன்னமேயே மிகப் பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டு, பெரிய கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும், அதன் மூலம் தங்களது ‘மாஸ் பவரை’ நிரூபிக்க வேண்டும் என்பது ஒரு சிலரின் திட்டம். அதற்கு கைக்கூலிகளாக வக்கீல்கள் செயல்பட்டிருக்கின்றனர். இதை உளவுத் துறை மூலம் தெரிந்து கொண்ட அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையை அங்கே குவித்தது. ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கவும், அவ்வாறு நிகழ்ந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ‘முக்கியமானவர்’ மூலம் உத்தரவும் பிறப்பித்து விட்டிருந்தது.

    இப்போது அதே அர‌சு காவ‌ல்துறையையே ப‌லிக‌டாவாக்கியிருப்ப‌து கொடுமை. காவ‌ல்துறையின‌ர் குமுறிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். நேர்மையான, படித்த நல்ல‌ ப‌ல‌ வ‌க்கீல்க‌ளுக்கும் இந்த‌க் க‌ல‌வ‌ர‌ச் செய‌ல்க‌ளில் விருப்ப‌மில்லை. அவ‌ர்களும் ம‌ன‌ம் வெறுத்துப் போயுள்ள‌ன‌ர்.

    வ‌க்கீல்க‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்ய‌லாம், கேள்வி கேட்ப‌வ‌ர் யாரும் இருக்க‌க் கூடாது என்ற‌ ம‌ன‌ப்பான்மை ஆரோக்கிய‌மான‌து அல்ல. இது நீதித் துறையின் சீர‌ழிவையே காட்டுகிற‌து.

    மீடியாக்க‌ள், அர‌சு, ப‌த்திரிகைக‌ள் போன்ற‌வை சுய‌லாப‌ங்க‌ளுக்கு வ‌க்கீல்க‌ள் ப‌க்க‌ம் இருக்க‌லாம். ஆனால் ம‌க்க‌ளுக்கு உண்மை தெரியும். அவ‌ர்க‌ள் ந‌ட‌ப்ப‌து அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள் என்ப‌தை யாரும் ம‌ற‌ந்து விட‌க் கூடாது. காவ‌ல்துறையின் க‌ண்ணிய‌ம் மீட்டெடுக்க‌ப் ப‌ட‌ வேண்டுமானால் அவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் வியாதிக‌ளுக்கு ஜால்ரா அடிப்ப‌தை நிறுத்தி விட்டு, சுய‌ ம‌திப்புட‌ன் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். த‌ங்க‌ளுக்குள் ஒற்றுமையாக, நேர்மையாக‌ இருக்க‌ வேண்டும். காவல்துறையில் ஒரு சில தீயவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்லக் கூடாது.

    இர‌வு, ப‌க‌ல், வெயில், ம‌ழை என்று பாராம‌ல் உழைக்கும் அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் ந‌ன்றிக்கு உரிய‌வ‌ர்க‌ள்.

    இப்போது வீதிக்கு வ‌ந்த‌ போராடிய‌ வ‌க்கீல்க‌ள் இதுவ‌ரை நாட்டுக்காக‌ ஏதாவ‌து செய்த‌துண்டா, ம‌க்க‌ளின் உண‌ர்வுக‌ளை ம‌தித்து ந‌ட‌ந்த‌துண்டா, டிராஃபிக் ராம‌சாமி போன்ற‌ அப்பாவிக‌ளை அடித்து உதைத்து குரூர‌ திருப்தி அடைவ‌து ச‌முதாய‌ வ‌ள‌ர்ச்சிக்கும், த‌ங்க‌ள் க‌ல்விக்கும் ந‌ன்மை ப‌ய‌ப்ப‌தா? இனிமேலாவ‌து இவ‌ர்க‌ள் திருந்தினால் ச‌ரி, இல்லாவிட்டால் ம‌க்க‌ள்க‌ள் தான் திருத்த‌ வேண்டி வ‌ரும்! துணிச்ச‌லான‌ க‌ட்டுரை. வாழ்த்துக்க‌ள் த‌மிழ் இந்து.

  5. தமிழ்செல்வரே, பாராட்டு ‘ஷொட்டுக்கள்’ ‍ சபாஷ். மதிப்புற்குரிய வெங்கட் சாமிநாதன், செ. ராஜகோபாலன், அரவிந்த் அவர்களின் கருத்துக்களும் மிக மிக பாராட்டுக்குறியவை.

    ஜாதி என்ற போர்வைக்குள் புகுந்து, அப்பாவிகளின் பணத்தில் குளிர் காய்ந்துகொண்டு, ‘பிச்சை’ எடுப்பதற்கு சமமாக‌ ‘கையூட்டுகளை’ வரையறையின்றி பெற்று பணத்திமிரையும் வன்முறையையும் கையிலேந்தி, ஒரு சாராரை மட்டும் அடக்கி அவமதித்துக் கொண்டு, அனைத்து வகுப்பு மக்களின் நலன்களின் அக்கறை ஏதுமின்றி, அநியாய முறையில், தான் சொல்வதே வேதம், தன் விருப்பு வெறுப்புகளே சட்டங்கள் என்ற கொள்கைகளுள்ள‌ அராஜகத்தனமான‌வர்களின் கைக‌ளில் ஆட்சி கொடுக்கப்பட்டதன் விளைவுகளை வாக்காள பெருமக்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறு வழிமுறைகளை, நாட்டு மக்களின் நலன் காக்கக்கூடிய, (நியாயமான முறையில் நன்கு படித்த) உண்மையான அறிவு ஜீவி இளைஞர்கள் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முன்வந்தால்தான், எதிர்கால சந்ததியினர், வளமான எதிர்காலம் இல்லாவிட்டாலும், போராட்டமில்லா எதிர்காலத்தில் வாழ வழி கிடைக்கும். விழிமின், எழுமின் இளஞ்சிங்கங்களே!

  6. தமிழ் இணையதளங்களில் இந்த பிரச்சனையை ஆதியோடந்தமாக அதன் ஆழமான காரணிகளையும் சொல்லி விளக்கியிருக்கும் ஒரே கட்டுரை இதுதான். வாழ்த்துக்கள்

  7. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் வசிக்க வேண்டும் வேறென்ன செய்வது? இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்துவதற்கு பார்ப்பன பாசிச சக்திகள்தான் காரணம் என்று ஒரு கூட்டம் கூச்சலிடுகிறது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. நீதிமன்றங்களில் வாதம் செய்வது போய் வதம் அல்லவோ நடக்கிறது.

  8. நான் பள்ளியில் படித்தக் காலங்களில் (கடலூரில்) ஆற்றங்கரைத் தெருவில் இரண்டு மூன்று வக்கீல்களின் வீடுகள் உண்டு.அவர்களை நாடி வருவோர் பெரும்பாலும் ஏழைகளே. நியாயம் கிடைக்கும் என்று நம்பி வந்தவர்கள் மற்றும் எதிரிகள் அந்த வக்கீல்களின் சமரச திட்டத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாய் திரும்பிச் செல்வர். மனசாட்சியுடன் தொழில் செய்தது ஒரு காலம். இப்போது குற்றப்பின்னணியுடன் இருப்பவர்களே வழக்கறிஞர்கள்(? !). காலத்தின் கோலம் எனக் கொள்வதா அல்லது பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் வரிகளை நினைவு கூர்வதா?

  9. நண்பன்!
    மிக்க நன்றி.

    வெ சா ஐயா!
    தங்கள் பாராட்டுதல்களை ஆசிகளாக எடுத்துக் கொள்கிறேன். மனமார்ந்த நன்றி. கருணாநிதி, அழகிரி, வீராசாமி ஆகியோர் பற்றி நீங்கள் சொன்ன அனைத்தும், தமிழகத்தில் சட்டமும், நீதியும் என்ன பாடு படுகின்றன என்பதற்கு அத்தாட்சிகள். தாங்கள் சொன்னது போல் சோனியாவை எதிர்த்து வருகின்ற எல்லா மனுக்களும் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மன்மோகன் நேர்மையானவர் என்று சொல்வதைப் போல் மக்களை ஏமாற்றும் வேலை வேறு ஒன்று கிடையாது. அந்த வேலையைப் காங்கிரஸ்காரர்களும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளும் திறம்பட செய்கின்றன.

    சே ரா ஐயா!
    தங்கள் மறுமொழிக்கு நன்றி. தாங்கள் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் இருப்பது போல் தெரிகிறது. கவலை கொள்ளாதீர்கள். நிலைமை மாறும். தமிழகத்தில் சட்டத்தின் மாட்சிமை மீண்டும் நிலை பெரும். நீதி தலை நிமிரும்!

    அரவிந்த்!
    வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல சு.சுவாமியின் மீது நடந்த தாக்குதலுக்குப் பின்புலத்தில் ஒரு பெரிய சதி இருக்கிறது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. பதினேழாம் தேதி சாதிக்க முடியாததை, பத்தொன்பதாம் தேதி சாதிக்க நினைத்திருக்கலாம். உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்திருப்பதற்கும் சாத்தியம் உண்டு. காவல் துறை பற்றிய உங்கள் கணிப்பிற்கும் நான் ஒத்துப் போகிறேன்.

    ராமஸ்வாமி, அரவிந்தன்!
    உங்கள் இருவர் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    பட்டாபிராமன் சார்!
    வாதம் செய்யும் இடத்தில் வதம் நடக்கிறது என்று அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். புளிய மரமோ, வேப்ப மரமோ… பேய்க்கு வாழ்க்கைப் பட்டது நம் தவறு தானே! எவ்வளவு சீக்கிரம் விவாகரத்து செய்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. நம்பிக்கையுடன் இருங்கள்.

    உங்கள் அனைவருக்கும் நன்றி,

    அன்புடன்
    தமிழ்செல்வன்

  10. அருமையான கட்டுரை ஐயா. இந்த அதிமுக்கியமான பிரசினை பற்றிய ஆதாரத் தகவல்கள், இதன் பின்னணி இவற்றோடு தீர்வுகள் என்ன என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டு முழுமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்க‌ள்.

    த‌மிழ‌க‌த்தின் முக‌வரிகள் என்று சொல்லிக் கொள்ளும் வெகுஜ‌ன‌ ப‌த்திரிகைக‌ள் இந்த விவகாரத்தில் முழுப் பொய்க‌ளைக‌ளையும், காழ்ப்புண‌ர்வுக‌ளையுமே செய்திக‌ளாக‌வும், விம‌ர்ச‌ன‌ங்க‌ளாக‌வும் வெளியிட்டு வ‌ருகின்ற‌ன‌. இவை கோடிக் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளைச் சென்ற‌டைகின்ற‌ன‌.

    இந்தச் சூழலில் உண்மையை உர‌த்துச் சொல்லும் இத்த‌கைய‌ க‌ட்டுரை இணைய‌த்திலாவ‌து வ‌ருகிற‌து என்ப‌து ஆறுத‌ல். இது மேன்மேலும் அதிக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டைய‌வேண்டும்.

    அன்புட‌ன்,
    ஜ‌டாயு

    பி.கு: த‌ங்க‌ள் பெய‌ர் “த‌மிழ் செல்வ‌ன்” என்ப‌து இல‌க்க‌ண‌ப் பிழை. த‌மிழ்ச்செல்வ‌ன் என்று இருக்க‌வேண்டும் என்று நினைக்கிறேன்.

  11. விவாகரத்து செய்வதற்கும் கருப்பு அங்கிகளைதான் நாடவேண்டியிருக்கிறதே என்ன செய்ய?

  12. //விவாகரத்து செய்வதற்கும் கருப்பு அங்கிகளைதான் நாடவேண்டியிருக்கிறதே என்ன செய்ய?//

    மூன்று முறை “தலாக் தலாக் தலாக்” என்று சொல்லி முயன்று பாருங்களேன் 🙂 lol

  13. ரங்கநாதன்!
    தங்கள் மறுமொழிக்கு நன்றி. காலத்தின் கோலம் என்ற போதிலும், பாரதியின் வரிகளை நினைவு கூறினாலும், நம்பிக்கை தளரவேண்டாம். சட்டப் படிப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அதே போல வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் வருவதையும் வெகு நாட்கள் தடுக்க முடியாது. இவர்கள் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச காலத்திற்குத் தான்.

    ஜடாயு!
    பாராட்டுகளுக்கு நன்றி அய்யா!

    //பி.கு: த‌ங்க‌ள் பெய‌ர் “த‌மிழ் செல்வ‌ன்” என்ப‌து இல‌க்க‌ண‌ப் பிழை. த‌மிழ்ச்செல்வ‌ன் என்று இருக்க‌வேண்டும் என்று நினைக்கிறேன்.//

    நீங்கள் நினைத்தது சரி தான். ஆசிரியர் குழு ஒரு “ச்” போட்டால் தான் என்ன? “ச்” கொடுப்பதாக இருந்தால் தானே வெட்கப் பட வேண்டும்! (:-))

    பட்டாபிராமன், வினோத் ராஜன்!
    (:-)) தங்கள் இருவரின் நகைச்சுவையையும் ரசித்தேன்.

    நன்றி, அன்புடன்

    தமிழ்ச்செல்வன். (“ச்” கொடுத்துட்டேன்)

  14. நேற்றைய உச்ச நீதி மன்ற முடிவின்படியும் தமிழ் நாட்டில் இந்த ரௌடி வக்கீல்களின் செயலில் வெறுப்படைந்த போலீஸ்மனைவிகள்‍‍‍‍‍‍ / மகளிர் அணிகள் நடவடிக்கைகளும், மற்ற பொது கணிப்பை வைத்துப் பார்க்கையில், மேலும் தமிழ் ஈழ எல்டிடிஈ பற்றி பொதுவான அபிப்பிராயம் எல்டிடிஈ பிரபாகனுக்கெதிராக உள்ளதாலும், லையர்களின் (லாயர்) நிகழ்வுக்குப்பின் மெச்சத்தக்கதாக உள்ளது. இது மேலு்ம் வலுவடைந்தால் நாட்டுக்கு நல்லது. இதில் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல நல்ல வக்கீல்கள், மேலும் பழைய போலீஸ் அதிகாரிகளும் உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஈஸ்வரன்தான் நாட்டை இந்த புளுகுணிகளிடமிருந்து காக்க வேண்டும்.

  15. Judiciary has become the breeding ground for criminals and Court Campuses have become Jungles. People of India have lost faith and trust in Judiciary. Some say politics is criminalized. But Judiciary appears to have been paralyzed atleast in the State of Tamil Nadu.
    A hapless woman litigant was beaten up by about not less 10 militant advocates at the very premises of Family Court in public glare in the campus of the High Court, Chennai. The gruesome part is the very beaten up women was taken to the police station and police was forced to arrest her, at the threat of 100 Militant Advocates. She was remanded to jail hospital.
    The Hunted is termed as Hunter and the Fence is eating the Plants.
    It is not an isolated incident but almost a common practice, not only in Family Courts but also in all the Court Campuses in Tamil Nadu. Militant Advocates beat up Policemen, Litigants and even Judges. Finally the issue is buried with suspension of few innocent constables as scapegoats.
    The Family Court litigants are at greater risk, as they are statutorily required to appear in person while advocates are prohibited at Family Courts vide sec 13 of Family Courts Act. Still the Judges illegally permit Advocates to plead in Family Courts.
    There is no law and order in TN Court Campus. While the NCW and WCD are busy in leading young women of Karnataka into alcoholism, women litigants are mercilessly beaten up by the very Protectors of Justice
    Neither the Police nor the Judges has any control over the mafia Advocates. The Bar Council has become defunct and no effective steps are taken by the Regulatory Body.
    Te highest constitutional officers have expressed their helplessness in private, as the militant advocates are behaving like Mafias.
    Justice delivered under ‘fear of death’ is “absolute injustice” and Court campuses in Tamil Nadu have become virtual battlegrounds.
    Hon’ble President of India may
    Declare emergency at all Court campuses in Tamil Nadu
    Take over the day to day administration of Courts and leave the Hon’ble Judges to render Justice
    Deploy Central Para-military forces immediately on war footing
    Supercede the Bar council of Tamil Nadu and take over its administration and thereby
    Save Justice and Life of Family Court Litigants.

  16. Judiciary appears to have been paralyzed atleast in the State of Tamil Nadu.

    ஏன் த‌மிழ்நாடு நீதிம‌ன்ற‌ம் மாத்திர‌ம் ப‌ழி சாட்ட‌ப்ப‌டுகிறது? உச்சநீதி ம‌ன்ற‌ம் என்ன‌ வாழ்ந்த‌து? ஸ்ரீகிரிஷ்ணா ரிபோர்ட்டை என்ன‌ செய்த‌து? ஏன் போலீஸ் இடைக்காலத் தடை உத்த‌ர‌வை ர‌த்து செய்ய‌ ம‌றுத்த‌து? த‌ன் சொத்து விவ‌ர‌ங்க‌ளை ஏன் ர‌க‌சிய‌ம் என்று சொல்கிறது? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிமிஷம் உடன் நினைவுக்கு வருவது இவ்வளவுதான். பாக்கியை ஹரனிடம், அரவிந்தனிடம், அல்லது அட்வகேட் விஜயனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்

  17. அருமையான அலசல். நோய் முதல் வரை நாடி இருக்கிறார் தமிழ்ச்செல்வன். வக்கீல்கள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என்ற முத்திரைதான் இருக்கிறது. போலிஸ் என்றாலே பொதுஜனத்தை துச்சமாக மதிக்கும் மனநிலைதான் இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் அடித்துக்கொண்டதில் ஊடகத்தின் விளைவால் மக்கள் ஒரு தொலைக்கட்சி சீரியல் பார்க்கும் மனநிலையில்தான் இந்த அராஜகங்களைப் பார்த்திருப்பார்கள். அப்படித்தான் ஊடகங்கள் விஷயங்களை மக்களுக்குத் தருகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதெல்லாம் வெறும் கந்துடைப்பு மட்டுமே இனி. காவலர் நமது நன்பன் என்பதெல்லாம் சும்மா அழகுக்காக எழுதப்பட்ட வாசகம் போலாகிவிட்டது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

  18. சென்னை நீதிமன்றங்களில் நடந்த பல அராஜகங்களை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள் சுரேஷ் ராம். மிக்க நன்றி.

    வெ சா அய்யா! நீங்கள் சொல்வதும் சரி தான். உச்ச நீதி மன்றம் ஒன்றும் மற்ற உயர் நீதி மன்றங்களுக்கு சளைத்தது அல்ல. ஒரு உண்மை என்ன என்றால் முதல் இடத்தில் சென்னை நீதி மன்றமும், இரண்டாம் இடத்தில் உச்ச நீதி மன்றமும் உள்ளன. அதன் பின்னர் தான் மற்ற ஊர்கள் எல்லாம். தமிழர்கள் தலை குனிந்து நிற்க வேண்டிய அளவிற்கு நீதி பரிபாலனத்தை கெடுத்துள்ளார்கள் திராவிடக் கழகங்கள்.

    உங்கள் மறுமொழிக்கு நன்றி ஜெயகுமார். நீங்கள் சொல்வது போல் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் பயந்து போய் விடக்கூடாது. எதிர்கொண்டு நிலைமையை சீராக்கவேண்டும். முயற்சி செய்வோம்.

    அன்புடன்

    தமிழ்ச்செல்வன்

  19. தமிழகத்தில் இன்று வக்கீல்களாக இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்? தர்மம், நியாயம், கற்பு, மனசாட்சி இதெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகள் என்று தமிழகம் முழுதும் மேடைகளில் முழங்கிய திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்; பலர் தேச விரோத நக்சல் ஆதரவாளர்கள்; ப‌லர் கம்யூனிஸ்டுகள்; கடவுள் நம்பிக்கையும், தர்ம சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டிருந்த, சென்ற தலைமுறை வக்கீல்கள் இன்று குறைவுதான். நீதிபதி பதவிக்கு ஜாதி ஒதுக்கீடு கேட்ட இந்த புண்ணியவான்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? இவர்களது சமூக நீதியின் லட்சணம் இதுதான். இந்த புண்ணிய பாரதத்தின் தர்ம சாஸ்திரங்கள் மட்டுமல்ல; விதுர நீதி, அர்த்தசாஸ்திரம், கெளடில்யம் _ இவற்றின் பெயரைக் கூட அறியாதவர்கள்.
    காவல் துறை எப்படி? ஒருவனின் குடும்ப பின்னணி, தனிப்பட்ட நடத்தை பற்றிய கவலையே இல்லாமல் உயரம், எடை மட்டும் பார்த்து தேர்வு செய்து விட்டு இப்போது கவலைப் பட்டு பயன் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *