நகரம் நானூறு – 7

‘பசும்புல் தலைகாண்பரிது‘ என்று சொன்ன மைலாப்பூர்காரர் இப்போது மைலாப்பூருக்கு வந்து பார்த்தால் விசும்பின் துளி வீழ்ந்துகொண்டிருந்தாலும் பசும்புல் தலை காண்பது அரிது என்ற புது உண்மையை உணர்ந்துகொள்வார். பெங்களூரில் பத்துப் பதினைந்து அருகம்புல் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறது! பூஜைக்கு வேண்டும் என்று அதையும் வாங்குகிறார்கள். புல்லும் விலைபோகும் புதுக்காலம் இல்லையா இது! இந்தப் படம் சென்னை மடிப்பாக்கத்தில் எடுக்கப்பட்டது. சாலையெல்லாம் காங்க்ரீட் போட்டு மெழுகினால், பசு எதைத்தான் மேயும! சுவரில் உள்ள வாசகத்தைப் பாருங்கள்! புல்லை மேய்வதை விட இது எவ்வளவோ மேல் என்று சொல்வது போலில்லை!

cows-0081

தார்மெழுகி காங்க்ரீட் தளமிட்டுச் சாலைகள்;
வேர்பிடித்துப் புல்முளைக்கா வீதிகளில் – கார்செல்லும்
திக்கெட்டும் பச்சையெதும் தென்படவே இல்லையெனில்
பக்கெட்டை மேயும் பசு.

3 Replies to “நகரம் நானூறு – 7”

  1. இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா குரவமே(குரவம் என்பது மரம்) கமழ் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி என்றார் திருமஙகையாழ்வார். தற்போது நிஜமாகவே இரவியின் (ஸுரியன்)கதிர்கள் நுழையாத மாடங்களையுடைய அடுக்குமாடிகள் உடைய கூவமே கமழ் அல்லிக்கேணியாகிவிட்டது. எஙகள் அடுக்குமாடி குடியிருப்புக்கு பக்கத்தில் ஒரு வேப்ப மரம் தப்பிபிழைத்திருக்கிறது. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கில் பச்சைக்கிளிகள் அந்தமரத்தில் கூடுகின்றன. இதுபோல் இன்னும் பல மரங்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்று மனம் ஏங்குகிறது.

  2. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு

    உங்கள் கவிதை ஒரு சோகத்தைச் சொல்லாமல் சொல்கின்றது. தார் சாலைகளும், சிமிண்டு தளங்களும் மண்ணை மூட புல் கிடைக்காத நகரத்துப் பசுக்களுக்கு சுவரில் ஒட்டிய போஸ்டர்களே புல்லாகிப் போயின.

    அன்புடன்
    ச.திருமலை

  3. ஹரிகி அண்ணா!

    பக்கெட்டை நக்கும் பசுத்தாயின் நாக்கிற்கு, சப்புக் கொட்டத்தான் ஏதும் கிடைத்திருக்குமா? என்ன ஒரு சோகம்? அந்த பக்கெட், வீட்டின் வாசலில் இருப்பதால், அது “குப்பை” தாங்கியாக இல்லாமல் “கழுநீர்” தேங்கியாக இருக்க வேண்டுமே என்று மனது அடித்துக் கொள்கிறது. பக்கத்தில் பாருங்கள் சனி பகவானை….பசுத்தாய் ஏதும் மிச்சம் வைப்பாளா என்று காத்திருக்கிறான்!

    திருமலை அவர்கள் சொன்னது போல் இக்கவிதையின் சோகம் பாதிக்கத்தான் செய்கிறது. கவிதை மறைத்துச் சொன்ன சோகத்தை காமிரா பகிரங்கமாகக் காண்பித்து விட்டது.

    ப. இரா. ஹரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *