போகப் போகத் தெரியும்-14

அணுகுண்டு, துப்பாக்கி, அஹிம்சை, கீதை

Trinity Explosion 1945

Trinity Explosion 1945. Copyright: U.S.Federal Govt. Courtesy: Wikimedia Commons

1945ஆம் ஆண்டு ஜுலை 16. அன்று திங்கட்கிழமை. காலை 05.30 மணி. அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் பகுதியில் ஒரு பரிசோதனை நடந்தது அப்போது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டை பரிசோதனையாக வெடித்துப் பார்த்தது அங்கேதான். அதுதான் முதல் பரிசோதனை. நெருப்புப் பந்து வெடித்து வானில் வெளிப்பட்டது அதிசயப் பிரகாசமாய். ஒரு மைல் தொலைவிற்குள் இருந்த அத்தனை உயிர்களும் அழிக்கப்பட்டன.

ஒன்பது மைல் தொலைவிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இயற்பியல் துறையின் விஞ்ஞானிகள். அந்தக் குழுவின் தலைவர் ஜெர்மனியைச் சேர்ந்த ராபெர்ட் ஒபென்ஹீமர். அவர்களுடைய ஆறு வருட உழைப்பின் பயன் அங்கே கிடைத்தது.

oppenheimer

J. Robert Oppenheimer. Copyright: U.S.Federal Govt. Courtesy: Wikimedia Commons

அந்த நேரத்தில் தனக்குள் முட்டி மோதிய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒபென்ஹீமர். பகவத் கீதையின் இரண்டு ஸ்லோகங்களை நினைவு கூர்ந்தார் அவர்.

ஒரே சமயத்தில் வானத்தில் ஆயிரம் சூரியன்கள் உதிப்பதால் ஏற்படும் பிரகாசம் விசுவரூப பரமாத்மாவின் ஒளிக்கு நிகராகும்

– கீதை 11:12

பகவான் கூறினார்: காலம் நான். உலகங்களை அழிப்பவன். எல்லா மக்களையும் ஈடுபடுத்த நான் வந்திருக்கிறேன். உங்களைத் தவிர இரு தரப்பிலும் இங்கு காணப்படும் வீரர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.

– கீதை 11:32

கீதை ஒபென்ஹீமருக்கு வாழ்க்கைத் துணையாக இருந்தது. அவரும் சில நண்பர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் நண்பர் ஒருவர் வீட்டில் கூடுவார்கள். கீதை, பர்த்ருஹரி, காளிதாஸன் பற்றிய பாடங்கள் அங்கே நடத்தப்படும்.

‘கீதையும் வேதாந்தமும் விஞ்ஞானத்தோடு முரண்படுவதில்லை’ என்கிறது ஒபென்ஹீமரின் அத்தாட்சிப் பத்திரம்.

உலகமொழிகளில் கீதை / சுப்பு / சக்திவிகடன் 10.03.2005

இந்திய தேசிய எழுச்சிக்கு இந்தியா பற்றிய பெருமிதமும் உரிமை உணர்வும்தான் அடிப்படை. இந்தப் பெருமிதத்தில் பெரும்பகுதி இந்துக் கலாசாரத்தோடு தொடர்புடையது. இந்த வரலாற்று உண்மை பிரிட்டிஷ்காரர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்துக் கலாசாரத்தை இழிவுபடுத்த வேண்டும், அதன்மூலம் தேசிய இயக்கத்தைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களுடைய அரசியல் நெறியாக இருந்தது. அதில் பிறந்ததுதான் திராவிட இயக்கம். தேசிய எழுச்சிக்குக் காரணமாக இருந்த பகவத் கீதையைப் பற்றி இந்த முறை பார்ப்போம்.

Bhagavat Gitaஇந்திய எழுச்சியை உருவாக்கியதில் பகவத் கீதைக்கு முக்கியமான பங்கு உண்டு. அணுகுண்டு தயாரிக்கும் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல அஹிம்சையே தவம் என்று ஆன்ம விடுதலைக்காக உழைத்த மெய்ஞ்ஞானிகளுக்கும் பகவத் கீதை கையேடாக இருந்திருக்கிறது. நாட்டு விடுதலைக்காகத் துப்பாக்கி ஏந்திய வீரர்களுக்கும் கீதையோடு தொடர்பு இருந்திருக்கிறது.

ஆசாரியர்களுக்குப் பிரமாணமாகவும் அருளாளர்களுக்குச் சமயச் சின்னமாய் இருந்தது கீதை. உடலும் உள்ளமும் பயணம் போகும்போது உள்ளே இருப்பான் சாட்சியாக இருக்கிறான் என்று உணரவைப்பது கீதை. இது வானகத்திற்கு வழி; வையகத்தின் மொழி.

இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் கீதையைப் படித்திருக்கிறார்கள். கீதையின் மொழிபெயர்ப்புகளைப் பற்றி சுவாரசியமான புத்தகமே எழுதலாம். ஆங்கிலத்திலே பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன.

இங்கேதான் ஏகப்பட்ட உரைகள் இருக்கின்றனவே, இதில் ஆங்கிலேயர் கருத்தால் ஆகப்போவது என்ன என்று நீங்கள் யோசிக்கலாம்.

சுழி எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. அது குஜராத்தில் புறப்பட்டு ஐரோப்பா வழியாகத்தான் குருக்ஷேத்திரத்திற்குப் போகும்.

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தார் (1888-89). இருபது வயது அவருக்கு. “நாங்கள் கீதையைப் படிக்கப் போகிறோம். நீங்களும் வரவேண்டும்” என்று அழைத்தனர். இரண்டு நண்பர்கள். மாணவருக்கு கீதை அறிமுகமில்லை. அவசரத்துக்கு உதவியது ஆர்னால்டின் ஆங்கில மொழி பெயர்ப்பு – எட்வின் ஆர்னால்டின் ‘தி ஸாங் ஸெலஸ்டியல்’ (The Song Celestial). கீதை அவருடைய வாழ்க்கையை மாற்றியது. காலப்போக்கில் மாணவர் அஹிம்சையில் ஈடுபாடு கொண்டு மகாத்மாவானார். மகாத்மா காந்தி எழுதிய கீதை விளக்கம் பக்தியோடு படிக்கப்பட்டது. ஆகவே ஆங்கிலம் அவசியம்.

கீதையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1785 ஆம் ஆண்டில் வெளிவந்தது; மொழிபெயர்த்தவர் சர். சார்லஸ் வில்கின்ஸ் என்ற ஆங்கிலேயர்.

வில்கின்ஸின் சமஸ்கிருத ஆர்வத்திற்குக் காரணமானவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். கொல்கத்தாவிலிருந்து செயல்பட்ட ஹேஸ்டிங்ஸ் மற்ற ஆங்கிலேயர்களிடமிருந்து வேறுபட்டிருந்தார். அவருக்கு சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி இருந்தது. மகாபாரதத்தின் சில பகுதிகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உருது, வங்காளம், பாரசீகம் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பரிச்சயம் இருந்தது.

பல லட்சம் இந்தியர்களை ஆட்சி செய்த ஹேஸ்டிங்க்ஸ், தன்னுடைய நிர்வாகம் வெற்றிபெற இந்தியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கருதினார். “இந்தியர்கள் தரம் கெட்டவர்கள், தந்திரக்காரர்கள், தீயவர்கள்” என்று பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் நினைத்திருந்த காலம் அது. ஆனால் ஹேஸ்டிங்க்ஸின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ஆங்கிலேயர்களை இந்தியமயமாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஹேஸ்டிங்ஸ் கேட்டுக் கொண்டபடி காசியைச் சேர்ந்த பண்டிதர்களிடம் வில்கின்ஸ் சமஸ்கிருதம் படித்தார். அவர்களிடம் இருந்த கீதைச் சுவடிகளையும் படித்தார். பிறகு, வில்கின்ஸ் உருவாக்கிய பகவத் கீதை மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு ஹேஸ்டிங்ஸ் அரும்பாடு பட்டார்; கீதை வெளியீட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று கம்பெனியின் டைரக்டர்களைத் துளைத்தெடுத்தார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதங்கள் வரலாற்றுப் புகழ் கொண்டவை.

“இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர் என்பதற்கான அடையாளங்கள் மறைந்த பிறகும் அந்த ஆட்சியின் அடிப்படையான அதிகாரமும் செல்வமும் மறைந்துபோன பிறகும், வெகு காலத்திற்கு இந்தியத் தத்துவ ஞானிகளின் கருத்துகள் நீடித்திருக்கும்” என்று கடிதத்தில் எழுதினார் வாரன் ஹேஸ்டிங்ஸ்.

கீதையைப் பற்றிச் சொல்லும்போது ஒரு ஜெர்மானியரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவர் வில்லியம் வான் ஹம்போல்ட். ஹம்போல்ட் பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். “உபநிஷதம், பத்மபுராணம் ஆகியவற்றைப் படித்ததால் கீதையைப் புரிந்து கொள்ள முடிந்தது” என்றார் அவர்.

“கீதை ஒப்பிலாத அழகுடையது. நாமறிந்த இலக்கியங்கள் அனைத்திலும் இது ஒன்றுதான் உண்மையில் தத்துவம் கலந்த கவிதையாகும். உலகத்தின் படைப்புகளிலேயே பகவத் கீதைதான் உன்னதமானது; ஆழ்ந்த பொருள் கொண்டது” என்றார் ஹம்போல்ட். பெர்லின் நகர ராயல் அகதெமியில் (1825) கீதையைப் பற்றிய பேருரை ஒன்றை நிகழ்த்தினார் அவர்.

ஹம்போல்டின் உரை பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்திய தத்துவத்திற்கு ஆதரவாக ஜெர்மனியில் ஓர் அறிஞர் கூட்டம் உருவானது.

இந்தியாவின் வெற்றி இன்னொரு திசையிலும் இருந்தது. தத்துவ அறிஞரான ஹெகல், தன்னுடைய தர்க்க முறையான ‘முரணியக்க முறை’ (Dialectics) இந்தியாவில் தோன்றியது என்பதை ஏற்றுக் கொண்டார்.

ஹெகல் உருவாக்கிய முரணியக்க முறையைக் கருவியாகக் கொண்டு வரலாற்றை அளந்தார் ஒருவர். அவரை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பொதுவுடமைக் கட்சியை ஏற்படுத்திய காரல் மார்க்ஸ்.

ஆனால் தோட்டத்துப் பச்சிலையைத் தோழர்கள் பயன்படுத்துவதில்லை. முரணியக்கப் பொருள்முதல் வாதத்திற்கான முதலீடு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்பதை இங்கிருக்கும் தோழர்கள் இன்னும் உணரவில்லை.

தோழர்களுக்கு மட்டுமல்ல, சில ‘அறிஞர்களுக்கும்’ இந்த அம்னீசியா இருக்கிறது. தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் வகுப்பு நடத்தும் பேராசிரியர் நன்னன் ‘கீதை ஒரு குப்பை’ என்கிறார். அதைச் சொல்லும் போது அவருடைய முகத்தில் வெளிப்பட்ட அசூயையே அவர் ‘சான்றோர்’ என்பதற்கான சான்று. தமிழ்ப் பயிற்சி அளிக்கும் நன்னன், ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்’ என்ற தமிழ் மறையைப் படித்துப் பார்த்துக்கொண்டால் அவருடைய சூடு தணியும்.

நாம் கீதைக்கு வருவோம்.

பக்கிம்சந்திரர், விவேகானந்தர், அரவிந்தர், திலகர், சாவர்க்கர், பாரதி, வினோபா பாவே போன்ற பலரும் கீதைக்கு உரை எழுதியுள்ளனர்.

தத்துவத்திற்கு மட்டுமல்ல நடைமுறைக்கும் கீதை உதவியது.

ஆங்கில அரசு புரட்சியாளர்களின் இடங்களைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து பகவத் கீதைப் பிரதிகளை கைப்பற்றியும், டாக்கா நகரிலிருந்த அனுசீலம் சமிதியில் 17 பகவத் கீதை பிரதிகளையும் அரவிந்தரின் சகோதரர் பரிந்திர கோஷின் மாணிக் தோலா தோட்ட ஆசிரமத்திலிருந்து மூன்று பிரதிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

1918ல் வெளியிடப்பட்ட ரெளலட் கமிட்டி அறிக்கை, புரட்சி இயக்கத்தின் மீது பகவத் கீதைக்கு இருந்த செல்வாக்கைப் பற்றிக் குறிப்பிட்டது.

1908ம் ஆண்டு இந்தியாவில் முதல் வெடிகுண்டு வழக்கான அலிபூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குதிராம் போஸ், தூக்குமேடைக்குச் செல்லும்போது பகவத் கீதையை எடுத்துச் சென்றார்.

அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானிக்கு கீதையின் அறிவியல் நுட்பங்கள் புலப்பட்டிருக்கிறது. நாட்டு விடுதலைக்காக துப்பாக்கி ஏந்திய புரட்சிக்காரருக்கு மறுபிறவி குறித்த கீதைக் கோட்பாடு வழிகாட்டியிருக்கிறது. அஹிம்சையைப் போதித்த அண்ணலுக்கு கீதை வலு சேர்த்திருக்கிறது. அணுகுண்டோ, துப்பாக்கியோ, அஹிம்சையோ, அவரவர் நிலைக்கு ஏற்றபடி கீதை வெளிப்பட்டிருக்கிறது.

பண்பாளர்க்கு கீதை எப்படிப் பயன்பட்டது என்பதைப் பார்த்தோம். உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அது உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதையும் பார்த்தோம். தேசிய எழுச்சியில் பகவத் கீதையின் தாக்கம் பற்றி ஒரளவு சொல்லியிருக்கிறேன்.

கீதையிலிருந்து ஒரு மேற்கோளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதினைந்தாவது அத்தியாயத்தின் துவக்கத்தில்

“எப்போதாவது சிருஷ்டி என்னும் அதிசய மரத்தைப் பார்த்திருக்கிறாயா? அது வெட்ட வெளியிலிருந்து பூமிக்கு இறங்குகிறது. காரணங்களிலிருந்து விளைவுகள், காரணங்கள் மேலே, விளைவுகள் கீழே. எனவே வேர்கள் மேற்புறமும் கிளைகள் கீழ்ப்புறமும் உள்ள மரமிது. உன்னிலும் இது எண்ணங்களிலிருந்து செயல்களாக இறங்குகிறது”

என்கிறான் இறைவன்.

கடவுளின் படைப்பே தலைகீழாக இருக்கும்போது நம்முடைய கட்டுரை மட்டும் விதிவிலக்காகுமா? காலக்கிரமம் சற்று முன்பின் ஆகத்தான் இருக்கும்.

1917ல் தொடங்கி திராவிட இயக்க வரலாற்றை ஆராயும்போது அதற்கான வரலாற்றுப் பின்னணியைச் சொல்லியிருக்க வேண்டும்; விட்டுப் போய்விட்டது. அந்த ஆண்டுக்கு முற்பட்ட காலத்தின் சுவடுகளை இங்கே சொல்லியிருக்கிறேன். திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள இது உதவும்.

வரலாற்றுச் சுவடுகள்

* 1799 – வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்படல்.
* 1801 – கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் தமிழ்ப்பகுதிகள்
* 1836 – மெக்காலே கல்வித் திட்டம்
* 1845 – இங்கிலாந்து ஜவுளி இறக்குமதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட நெசவாளிகள் மற்றும் நிலவரிக் கொடுமையால் நிலத்தை இழந்த விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாக இலங்கை, பர்மா, மலாயா, மொரிஷியஸ், நேடால், ஃபிஜி போன்ற நாடுகளுக்குச் செல்லுதல்.
* 1853 – இந்தியாவில் புகை வண்டிப் பயணம்.
* 1856 – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
– கால்டுவெல் பாதிரியார்.
* 1857 – ஆங்கில அரசின் ஆட்சி
* 1866 – The Sacred Books of the East / மாக்ஸ் முல்லர் வெளியீடு
* 1870 – நீலகிரியில் பண்டிதர் க. அயோத்திதாசர் ‘அத்துவைதானந்த சபை’யை உருவாக்குதல்.
* 1872 – வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவுதல்.
* 1876/78 – தமிழ்நாட்டில் பஞ்சம்
* 1878 – ‘தி ஹிந்து’ நாளிதழ் துவக்கம்.
* 1882 – ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பு.
* 1882 – காலின் மெக்கன்ஃபீ சுவடி தொகுப்பு வெளியீடு.
* 1885 – பம்பாயில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ துவக்கம்
* 1892-1903 – உ.வே. சாமிநாத அய்யர் சங்க கால இலக்கிய பதிப்புகள்
* 1893 – சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உரை.
* 1899 – சிவகாசி காசிவிசுவநாத ஆலயத்தில் நுழைய நாடார்கள் போராட்டம்.
* 1906 – வங்காளப் பிரிவினை.
* 1906 – சூரத் காங்கிரஸ் – திலகருக்கு தமிழகத் தலைவர்கள் ஆதரவு.
* 1907 – லண்டனில் சாவர்க்கர், வ.வே.சு. ஐயர் புரட்சிக்குழு அமைப்பு.
* 1908 – பாரதியாரின் ‘ஸ்வதேச கீதங்கள்’ வெளியீடு.
* 1908 – தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரம், சுப்பிரமணிய சிவா கைது.
* 1908 – ‘சுதேசமித்திரன்’ கட்டுரைகளுக்காக ஜி. சுப்பிரமணிய ஐயர் கைது.
* 1909 – மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம்.
* 1911 – மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொலை. வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம்.
* 1913 – தென்னாப்பிரிகாவில் தில்லையாடி வள்ளியம்மை தியாகம்.
* 1914 – முதல் உலகப் போர் துவக்கம்.
* 1915 – மகாத்மா காந்தி சென்னை விஜயம்.
* 1915 – ஆப்கனிஸ்தான் தலைநகரான காபூலில் ‘சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு’ அமைக்கப்படுதல்; அயல்நாட்டுத்துறை அமைச்சராக டாக்டர். செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்.
* 1916 – அன்னிபெசன்ட் அம்மையாரின் ‘ஹோம் ரூல்’ இயக்கம்.
* 1917 – ரஷ்யப் புரட்சி
* 1917 – ‘தேசபக்தன்’ ஆசிரியராக திரு.வி.க.

இட ஒதுக்கீடு பற்றி கேள்வி கேட்டுள்ள நண்பர் அன்பழகனுக்குப் பதில் அடுத்த பகுதியில் வரும்.

மேற்கோள் மேடை:

“பரந்து கிடக்குமிந்த படைப்பு முழுவதையும் சரி செய்து தூக்கி நிறுத்த ஒருவர் முயற்சி செய்கிறார். இது, காய்ந்து போன மரத்தின் இலைகளின் மீது நீரைத் தெளிப்பது போலாகும். இன்னொருவர் தன்னுடைய விடுதலைக்காகத் தவம் செய்கிறார். இது, அந்த மரத்தின் வேருக்கு நீருற்றுவது போலாகும்”.

– கீதையின் சாரம் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள்.

12 Replies to “போகப் போகத் தெரியும்-14”

  1. சுப்பு அய்யாவின் இந்தவார பகுதி வழக்கம்போல அருமை. அதிலும் தமிழ் சான்றோரான நன்னனின் கீதை மீதான வெறுப்புக்கு பரிந்துரைத்துள்ள மருந்து அருமை. கீதையைப் பற்றிய வாரன் ஹேஸ்டிங்ஸினின் கருத்து பொய்த்துப் போகவில்லை.

    // இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர் என்பதற்கான அடையாளங்கள் மறைந்த பிறகும் அந்த ஆட்சியின் அடிப்படையான அதிகாரமும் செல்வமும் மறைந்துபோன பிறகும், வெகு காலத்திற்கு இந்தியத் தத்துவ ஞானிகளின் கருத்துகள் நீடித்திருக்கும்” என்று கடிதத்தில் எழுதினார் வாரன் ஹேஸ்டிங்ஸ்.//

    அருமை அய்யா தொடருங்கள்.

  2. அன்புள்ள சுப்பு,

    ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறீர்கள்..வார்த்தைகள் பிரவாகமாய் வந்து விழுந்திருக்கின்றன..ஆனாலும் பின்புலத்தில் ஓர் அமைதி..நிறைய சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்…இயலவில்லை..மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருக்கிறேன்..

    வாழ்த்துக்கள்…

  3. ஐந்தாம் வகுப்பு மாணவன் M.Sc. கணிதப் புத்தகத்தைப் பார்த்தால் ஒரே கிறுக்கல் என்றுதான் சொல்வான்.

  4. அருமை , தமிழ் இந்துவில் தினமும் ஒரு பகவத்கீதை செய்யுளை அர்த்ததுடன் பதிப்பிற்கலாமே, அனைவரும் கற்க ஏதுவாக இருக்கும்.

  5. என்ன ஒரு அருமையான கட்டுரை! ஆற்றொழுக்கான நடை! பரந்த அறிவைச் சரியாகக் கோத்து அளிக்கும் திறன்! சுப்பு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    “* 1857 – ஆங்கில அரசின் ஆட்சி” என்பது * 1857 – ஆங்கில அரசின் நேரடி ஆட்சி” என்று இருக்க வேண்டும். அதற்கு முன்பு இருந்ததும் ஆங்கிலேயரின் ஆட்சிதான். ஆங்கில அரசின் தனிப்பெரும் ஆசியும் ஆதரவும் ஏகபோக வியாபார உரிமையும் பெற்ற ஆட்சி அது. கிழக்கிந்தியக்கம்பெனியின் எல்லா தீர்மானங்களும் சட்டங்களும் போர்களும் அவற்றிற்கான தளவாட சேர்ப்பும், ஆயுத கொள்முதலும், படைவீரர் சேர்ப்பும் பிரிட்டிஷ் அரசின் முழு ஆதரவுடனேயே அதன் கண்காணிப்பிலேயே நடந்தது. அதன் அத்தனை செயல்களிலும், கொள்ளைகளிலும், களங்களிலும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இருந்த பங்குக்கு பிரிட்டிஷ் அரசின் பங்கு இம்மியும் குறைந்ததல்ல.

  6. கீதையின் மதிப்பை அளவிட இயலாது. உலகப் பெரியோர்கள் பலருடைய நெஞ்சங்களை அபகரித்த ஒரேநூல் அதுவே என்றால் மிகையாகாது. ஆனால், எத்தனை இந்தியர்கள் அதனைப் படிக்கிறார்கள்? மஹாத்மா காந்தியின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் நாட்டை ஆண்டுவரும் அவருடைய வாரிசுகளும் கீதையைப் படித்து அதன்படி நடந்து கொள்கிறார்களா என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்காது.
    கட்டுரை ஒரு நல்ல முயற்சி. நன்றி. வணக்கம்.
    சீனிவாஸன்

  7. அருமையான கட்டுரை. கீதை ‘ஒரு கொலை நூல்’ என்று பகுத்தறிவாளர் திலகம் வீரமணி அருமையானதொரு “ஆராய்ச்சி” நூல் அருளியுள்ளார். அதைப்பற்றிய விமர்சனங்களையும் த்ருமாறு வேண்டுகிறேன்.

  8. ஸ்ரீமத் பகவத் கீதை

    அர்ஜுன ரதத்தின்மீது கொடிவடிவில் அமர்ந்திருந்த
    ஆஞ்ஜநேயர் எழுதிய உரைதான் முதல் உரை என்பது மரபு.
    அது பைசாச மொழியில் அமைந்தது என்பர்.
    ஸ்வாமி வேதாந்த தேசிகர் தரும் கீதைக்கான உரைப்
    பட்டியலிலிருந்து ஸ்ரீ ராமானுஜருக்கு முன்னரேயே பல விரிவுரைகள்
    இருந்தது தெரிய வருகிறது. விடுதலைப் போரில் சிறையிலிருந்த
    தலைவர்களுக்கு வழிகாட்டிய பெருமை கீதைக்கு உண்டு.

    ருஷிய மொழியில் Vladimir Antonov என்பவர் கீதைக்கு விளக்கம் எழுதினார்.
    ஸ்ரீ ராகவேந்திரர், மதுஸூதந ஸரஸ்வதி, அரவிந்தர்,
    பரமஹம்ஸ யோகாநந்தர், விவேகாநந்தர் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள்
    போற்றிய கீதையைப் பழிப்பதுதான் பகுத்தறிவா?

    தேவ்

  9. பகவத் கீதையை பற்றி எதிர்மறையாக விமரிசனம் செய்பவர்கள் யானையின் உடலில் ஒரு பகுதியை மட்டும் தடவி பார்த்துவிட்டு ஒரு முடிவிற்கு வரும் கண் பார்வையற்றவர்களை போன்றவர்கள்
    அவர்கள் ஏற்க்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு முடிவுடன் அதை அணுகுவதால் அவர்களால் எந்த காலத்திலும் அதன் உண்மை பொருளை துய்த்து உணர முடியாது.
    எந்த பொருளின் உண்மையை தெரிந்துகொள்ளவேண்டுமேன்றாலும் நடுநிலைமையுடன் அதை ஆராய்ந்தால்தான் உண்மை தெளிவாகும்
    உண்மையில் நாட்டம் கொண்டவர்கள் இது போன்ற குப்பைகளை தள்ளிவிட்டு அமைதியாக சிந்தித்தால் உண்மை தானாகவே வெளிப்படும்.

  10. நண்பர் சுப்பு,

    /// 1945ஆம் ஆண்டு ஜுலை 16. அன்று திங்கட்கிழமை. காலை 05.30 மணி. அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் பகுதியில் ஒரு பரிசோதனை நடந்தது அப்போது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டை பரிசோதனையாக வெடித்துப் பார்த்தது அங்கேதான். அதுதான் முதல் பரிசோதனை. நெருப்புப் பந்து வெடித்து வானில் வெளிப்பட்டது அதிசயப் பிரகாசமாய். ஒரு மைல் தொலைவிற்குள் இருந்த அத்தனை உயிர்களும் அழிக்கப்பட்டன. ///

    லாஸ் அலமாஸில் செய்த முதல் அணு ஆயுதச் சோதனையில் ஒரு மைல் தொலைவில் எந்த உயிரும் அழிய வில்லை. உயிரினங்கள் சோதனையில் வைக்கப் படவில்லை. வெறும் குடிசைகள், தளவாடங்கள் போன்ற உயிரில்லாச் சாதனங்கள் மட்டுமே சோதனையில் பங்கெடுத்தன.

    ஜப்பானில்(ஹிரோஷிமா, நாகசாக்கி நகர்களில்)போட்ட அணு ஆயுதங்களே பல்லாயிரம் மனிதரையும் உயிரினங்களையும் அழித்தன.

    சி. ஜெயபாரதன், கனடா

  11. Although early indologists, in their missionary zeal, widely vilified the Vedas as primitive mythology, many of the worlds greatest thinkers admired the Vedas as great repositories of advanced knowledge and high thinking

    Arthur Schopenhauer, the famed German philosopher and writer, wrote that: I “…encounter [in the Vedas] deep, original, lofty thoughts… suffused with a high and holy seriousness.”

    The well-known early American writer Ralph Waldo Emerson, read the Vedas daily. Emerson wrote: “I owed a magnificent day to the Bhagavat-Gita”

    Henry David Thoreau said: “In the morning I bathe my intellect in the stupendous philosophy of the Bhagavad Gita… in comparison with which… our modern world and its literature seems puny and trivial.”

    So great were Emerson and Thoreau’s appreciation of Vedantic literatures that they became known as the American transcendentalists. Their writings contain many thoughts from Vedic Philosophy.

    Other famous personalities who spoke of the greatness of the Vedas were: Alfred North Whitehead (British mathematician, logician and philosopher), who stated that: “Vedanta is the most impressive metaphysics the human mind has conceived.”

    Julius Robert Oppenheimer, the principle developer of the atomic bomb, stated that “The Vedas are the greatest privilege of this century.” During the explosion of the first atomic bomb, Oppenheimer quoted several Bhagavad-gita verses from the 11th chapter, such as:

    “Death I am, cause of destruction of the worlds…”

    When Oppenheimer was asked if this is the first nuclear explosion, he significantly replied: “Yes, in modern times,” implying that ancient nuclear explosions may have previously occurred.

    Lin Yutang, Chinese scholar and author, wrote that: “India was China’s teacher in trigonometry, quadratic equations, grammar, phonetics… ” and so forth.

    Francois Voltaire stated: “… everything has come down to us from the banks of the Ganges.”

    Carl Sagan stated, “Vedic Cosmology is the only one in which the time scales correspond to those of modern scientific cosmology.”

    Nobel laureate Count Maurice Maeterlinck wrote of: “a Cosmogony which no European conception has ever surpassed.”

    French astronomer Jean-Claude Bailly corroborated the antiquity and accuracy of the Vedic astronomical measurements as “more ancient than those of the Greeks or Egyptians.” And that, “the movements of the stars calculated 4,500 years ago, does not differ by a minute from the tables of today.”

    Voltaire, the famous French writer and philosopher) stated that “Pythagoras went to the Ganges to learn geometry.” Abraham Seidenberg, author of the authoritative “History of Mathematics,” credits the Sulba Sutras as inspiring all mathematics of the ancient world from Babylonia to Egypt to Greece.

    https://www.archaeologyonline.net/artifacts/scientific-verif-vedas.html

    அருமையான கட்டுரைகள் ஆசிரியர் அவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *