அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

பாரதி தமிழ்ச் சங்கம் - புத்தாண்டு விழாபாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விரோதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டாலும், தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த கலாசார முறைமைப்படியும், பாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்திலேயே தமிழ் புத்தாண்டான விரோதி வருடத்தை வரவேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. ஏப்ரல் 25ம் தேதி, சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை, பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்ட சித்திரைத் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள்.

பூர்ணிமா ரெங்கராஜன் அவர்களின் இனிய குரலில் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கப் பட்டது. நிகழ்ச்சியினை இட்ஸ்டிஃப் வானொலியினை (www.itsdiff.com) நடத்தி வரும் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா அவர்கள் தொகுத்து வழங்கினார். சிறுவன் வருண் தமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்பது குறித்தும், விரோதி வருடத்தின் சிறப்புக்கள் குறித்தும் பேசி புது வருடத்தில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற வேண்டினார் . கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவருக்கும் ஏன் தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குகிறது என்பதற்கான பூகோள முக்கியத்துவங்களையும், கிரக நிலைக் கணக்குகளையும் எளிமையாக விளக்கும் கார்ட்டூன் படங்களினால் ஆன ஒரு கையேடு வழங்கப் பட்டது. சித்திரை மாதத்தில் புது வருடம் துவங்கும் காலக்கணக்கின் பொருளை, அறிவியல் பூர்வமாகவும், விவசாயம் மற்றும் வானவியல் ரீதியாகவும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பாக வான சாஸ்திரங்களில் சிறந்த நம் முன்னோர்களின் கணக்கிட்ட விதத்தை அக்கையேடு எளிமையாக விளக்கியது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், வைஷ்ணவ பிரபு, ரேணுகா மோகன் குமார், வசுதா ஐயர் ஆகியோர் வழங்கிய கர்நாடக இசைப் பாடல்கள் அரங்கேறின. வளர்ந்து வரும் டிரம்ஸ் வாத்ய இளம் இசைக் கலைஞர் சுபாஷ் ரமேஷ் சில பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்தார். ராஜலஷ்மி வழங்கிய சிறப்பான வீணை இசை தொடர்ந்தது. பாடல்களையும் வாத்திய இசைக் கச்சேரிகளையும் தொடர்ந்து சாஸ்த்ரீய நடனங்கள் கலந்து கொண்டோரின் பெரும் வரவேற்பைப் பெற்றன. தீபா மகாதேவனின் மாணவியான ஷ்ருதி அரவிந்தன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாரதியார் பாடலுக்கு பரத நாடியமும், மணீஷா நல்லமுத்து ப்ரூச்சேவா என்ற பாடலுக்கு குச்சுப் புடி நடனமும், ப்ரியா ராஜகோபால் அவர்களின் மாணவிகளான ப்ரியா சுப்ரமணியன், ஷோபனா கங்காதரன் இருவரும் பல்வேறு பாரதி பாடல்களுக்கு நிகழ்த்திய பரத நாட்டிய நடனமும், நாத விநோதமும் என்ற பாடலுக்கு அஜிதா ஆடிய பரத நாட்டியமும், ஸ்ருதி ஸ்வரலயா வித்யா வெங்கடேசன் மாணவியான ஸ்ரீவித்யா ராஜனின் பந்தாட்ட நடனும் காண்போர் அனைவரையும் கவர்ந்து ஏகோபித்தப் பாராட்டுக்களைப் பெற்றன. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு ஆடப் பட்ட நடனங்கள் வெகு அற்புதமான நடனங்களகாக அமைந்து அவையினரை மெய்மறக்கச் செய்து பலத்த கரகோஷத்தினைப் பெற்றன.

Group danceதனி இசைகளையும், நடனக்களையும் தொடர்ந்து சிறுவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு வழங்கிய சேர்ந்திசை நடனங்கள் அரங்கேறின. பானுப்ரியா அவர்கள் இயக்கி வழங்கிய சம்திங் சம்திங் என்ற பாடலுக்கான ஒத்திசைந்த நடனத்தில் ஆடிய சிறுவர்கள் ஒபாமாவின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலை மாற்றி நடனமாடினார்கள். அதை அடுத்து ஆரத்தி ஷங்கர் இயக்கிய சிறுவர் குழுவினரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. சிவசுந்தரி ராஜராஜன் அவர்களின் சிறுவர் குழுவும் ஆர்த்தி சஞ்சய் அவர்கள் குழுவும் இரண்டு திரையிசைப் பாடல்களுக்கு குழு நடனம் ஆடினர். நித்யவதி சுந்தரேஷ் இயக்கத்தில் ’அஞ்சாத சிங்கம் என் காளை’ பாடலுக்கான நடனமும் மேலும் திரையிசைப் பாடலுக்கு ஆடப் பட்ட ஒரு குழு நடனமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. சிவசுந்தரி ராஜாராஜன் மற்றும் சாந்தி சாம்பசிவன் அவர்களின் இயக்கத்தில் சிறுவர்கள் குடையுடன் வந்து ஆடிய மேகம் கருக்குது, சின்ன சின்ன மழைத்துளி ஆகிய மழைப் பாடலுக்கான குழு நடனம் அனைவரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றது. பொதுவாகவே அனைத்து குழு நடனங்களுமே தமிழ் திரைப்படப் படங்களில் வரும் சிறப்பான குழு நடனங்களை மிஞ்சும் வண்ணம் வண்ணமயமாகவும், மிக நேர்த்தியான ஒத்திசைந்த அடிகளுடனும், உடைகளுடனும், முக பாவனைகள், அபிநயங்களுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. காயத்ரி ராமநாதன், ராஜேஷ்வரி ராமநாதன் ஆகியோர் தங்களது தனித்தன்மையான குரல் வளத்தில் வழங்கிய பாடல்களும் அவையினரை வெகுவாகக் கவர்ந்தன. சகோதரிகள் இருவரும் தனியான இசை ஆல்பங்கள் உருவாக்கும் அளவுக்கு சிறப்பான குரல் வளம் படைத்திருந்தனர். கொளரி சேஷாத்ரி இயக்கத்தில் சிறுவர்கள் கலந்து கொண்ட நாடகம் ஒன்றும் இடம் பெற்றது. சிறுவர்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்புக்களும், நடிப்பும் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றன.
சிறுவர், இளைஞர்களின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விரோதி வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியான பட்டி மன்றம் நடை பெற்றது. “குடும்ப மகிழ்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பவர்கள் மனைவியே, கணவனே” என்ற சுவாரசியமான விவாதம் பட்டி மன்றத்தின் கருப் பொருளாக விவாதிக்கப் பட்டது. தமிழ் ஆர்வலரும், வளைகுடாப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பைத் தந்து கொண்டிருப்பவருமான இளங்கோ மெய்யப்பன் அவர்கள் நடுவராகக் கலந்து கொண்டார். மனைவியே என்ற தலைப்பில் சாந்தி சாம்பசிவம், கோமதி, நித்யவதி சுந்தரேஷ் ஆகியோரும், கணவனே என்ற அணியில் திருமுடி, ஷங்கர், கௌரி சேஷாத்ரி ஆகியோரும் கலந்து கொண்டு தத்தம் அணியினரின் விவாதங்களை மிகத் திறமையாகவும், நகைச்சுவையுடனும், தர்க்கபூர்வமான ஆதாரங்களுடனும் கம்பீரமான இனிய தமிழில் பேசி அவையினரின் கரகோஷங்களைப் பெற்றார்கள். இரு அணியினரும் நிகழ்கால சம்பவங்களையும், தலைவர்களையும், தத்தம் தரப்பிற்கு ஆதரவாக இழுத்துப் பேசியது சுவாரசியமான ஒரு விவாதத்தை உருவாக்கி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர். கல்ந்து கொண்ட அனைவரும் மிகச் சுத்தமான தமிழ் உச்சரிப்புடனும், சிறப்பான குரல் வளத்துடனும் பேசினார்கள். நடுவர் இளங்கோ மெய்யப்பன் அவர்களின் துவக்க உரையும், இறுதித் தீர்ப்பும், ஒவ்வொரு அணியினரையும் ஊக்குவித்துப் பேசிய பேச்சுக்களும் இனிய தமிழில் மிக அருமையாக அமைந்திருந்தன. 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அரங்கு நிறைய அமர்ந்து ரசித்த இந்தபட்டிமன்றம் அருமையான செவிக்குணவாக அமைந்தது.

இயல், இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒரு நகைச்சுவை நாடகமும் அரங்கேறியது. வெங்கடேஷ், சாய் ஷங்கர், வெங்கடாச்சலம், அஷ்வின், லஷ்மி, வித்யா, ஷ்யாம், பானு, வாசு, ராஜா ஆகியோர் அடங்கிய குழு வாய் விட்டு சிரிக்க வைத்த இந்த நகைச்சுவை நாடகத்தினையும் வழங்கி அத்துடன் அற்புதமான திரையிசைப் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பல இளம் திறமைகள் இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தினையும், பாராட்டுதல்களையும் பெற்றனர்.

வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ்ச்சமுதாத்தின் அனைத்து தனித்துவமான திறமைகளுக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டற்றதொரு மேடை வழங்கி அவர்களது திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் தொடர்ந்து வளர்த்து வரும் தொண்டு, கலந்து கொண்ட அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது.

தமிழ் புத்தாண்டினைத் தொடர்ந்து பாரதி தமிழ்ச் சங்கம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து விரிகுடாப் பகுதி தமிழர்களுக்காக வழங்க உள்ளது. இவ்வரிசையில், வரும் ஜூன் மாதம் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பேரன்களான நாதஸ்வர இசை மேதைகள் ஷேக் சின்னமௌலானா காசீம், பாபு ஆகியோரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் சில இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி வாழ் தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்கள் நல்லாதரவினை பாரதித் தமிழ்ச் சங்கத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு நல்கி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கும், பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.

கோவிந்தராஜன்: 408-394-4279
ஹரிஹரன்: 510-383-6146
சுந்தர்: 408-390-5257
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com
இணைய தளம்: www.batamilsangam.org

One Reply to “அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா”

  1. வணக்கம் ,
    தமிழ் நாட்டிலேயே தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைத் திருநாளன்றுக் கொண்டாடாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழ் மக்களின் விருப்பத்தைச் சிறிதும் விசாரிக்காமல் அவரவர் தம் விருப்பபடித் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு யார அதிகாரம் கொடுத்தது? என் கண்டனத்தை எப்படியேனும் வெளிப்படுத்த வேண்டும் என்றெண்ணியே நான் இந்த இ-மெயில் -ஐ அனுப்புகிறேன்.

    நன்றி.
    உங்கள் நேயன்,
    லோகநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *