மலைக்குல மயில்
எஸ்.ஜயலக்ஷ்மி
2 May 2009 |
அச்சிட
“அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ததா
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம்
மஹா பாதக நாசனம்”
இந்த வரிகளை என் தாயார் சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேற்சொன்ன ஐந்து கற்புக்கரசிகளையும் மனதில் நினைத்தால் பாபங்கள் எல்லாம் விலகிவிடும் என்று சொல்வார்கள்.
ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்.
வாலியைத் தடுத்த தாரை:
இந்த மலைக்குல மயிலைக் கம்பன் அறிமுகப்படுத்துவதே ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான். அறிமுகம் செய்யும் போதே அவளுக்குப் பின்னால் வரப்போகும் தீமையையும் சேர்த்தே அறிமுகம் செய்கிறான். இராமன் சொன்னபடி சுக்ரீவன், வாலியைப் போருக்கழைக்கிறான். சுக்ரீவனின் அறைகூவலைக் கேட்ட வாலி போருக்குக் கிளம்புகிறான். தாரை இடை விலக்குகிறாள்.
ஆயிடைதாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்
வாலியின் கண்களிலிருந்து தோன்றிய கோபத் தீயிலிருந்து உண்டான புகை வாய்வழியாக வெளிவருகிறது. வாலி கண்களிலிருந்து வரும் தீயில் இவளுடைய நெடுங்கூந்தல் தீய்கிறதாம். அவ்வளவு கோபம் அவனுக்கு. தாரைக்கு வரப்போகும் தீமையை, அமங்கல நிலையை முன்னரே கவிஞன் குறிப்பிடுகிறான். அவளை அமிர்தம் போன்றவள்
என்று அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் அவளுக்கு வரப்போகும் துன்பத்தையும் குறிப்பிடுவதால், தாரையிடம் நமக்கு அனுதாபம் உண்டாகிறது. இடை விலக்கிய தாரையை வாலி கடிந்து கொள்கிறான்.
’விலக்கலை, விடு, விடு, விளித்துளான் உரம்
கலக்கி, அக்கடல் கடைந்து அமுது கண்டென
உலக்க இன்னுயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்
மலைக்குல மயில்!’’
’’மலைக்குல மயிலே! அன்று பாற்கடலைக் கடைந்து அமுது எடுத்தது போல் இன்று சுக்ரீவனின் உடலைக் கடைந்து அவன் உயிராகிய அமுதம் குடித்து வருவேன். என்னைத் தடுக்காதே’’ என்கிறான். இதைக் கேட்ட தாரை, ”சுக்ரீவன் காரணமில்லாமல் போர் செய்ய அறைகூவல் விடுக்க மாட்டான். நிச்சயம் அவனுக்குத் தகுந்த துணை கிடைத்திருக்க வேண்டும்’’ என்கிறாள். சுக்ரீவன் வலிய வந்து போருக்கழைத்த காரணத்தை ஊகித்தறிகிறாள் தாரை. இங்கு அவளுடைய அறிவுத்திறனைப் பார்க்கிறோம்.
ஆனால் வாலியோ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படவேயில்லை. அவனுக்குத் தன் தோள்வலி பற்றி அவ்வளவு கர்வம், நம்பிக்கை. அந்தப் பெருமையால் ”அன்று திருப்பாற்கடல் கடைந்த சமயம் தேவர்களும் அசுரர்களும் கை சோர்ந்து என்ன செய்வோம் என்று திகைத்தபோது நான் தனி ஒருவனாகத் தயிர் கடைவது போலக் கடைந்து அமுதம் கொடுக்க வில்லையா?’’ என்று பழைய நிகழ்ச்சியை ஞாபகப் படுத்துகிறான். இந்த இடத்தில் தாரையை, மயில் இயல் குயில் மொழி என்று அழைக்கிறான். குறிஞ்சி நிலப் பறவை மயில். கிஷ்கிந்தை மலையில் வாழும் தாரையை மலைக்குல மயில் என்றழைப்பது மிகவும் பொருத்தமானதே.
”எனக்கு இயற்கையாக இருக்கும் வலிமையோடு என்னை எதிர்ப்பவர்களின் வலிமையில் பாதியும் எனக்குச் சேர்ந்துவிடும் என்பது நீ அறியாததா?’’ என்று மேலும் தைரியம் சொல்கிறான். இதைக் கேட்ட தாரை ”அரசே, சுக்ரீவனுக்கு இனிய உயிர்த் துணைவனாக இராமன் என்பவன் வந்திருக்கிறானாம். நமக்கு மிகவும் வேண்டியவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்” என்கிறாள். தாரை இப்படிச் சொல்வதால் நாட்டில் எங்கெங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் அவளிடம் இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் சுக்ரீவன் வலிமை குறைந்தவனாகவே இருந்தாலும் சுக்ரீவனுக்குத் துணையாக வந்திருக்கும் எதிரியின் பலத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுகிறாள். அவன் எப்படிப் பட்டவனாக இருப்பானோ? அவன் வரபலம், உடல்பலம் எப்படியோ?’’ மாற்றானின் துணை வலிமை பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தன் சந்தேத்தைத் தெரிவிக்கிறாள்.
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்
என்ற குறளின் பொருள் உணர்ந்தவளாகப் பேசுகிறாள் தாரை. இங்கும் தாரையின் அரசியல் அறிவைப் பார்க்கிறோம்
வாலியின் நம்பிக்கை
ஆனால் வாலியோ இராமன் என்ற பெயரைக் கேட்டதுமே பக்திப் பரவசத்தில் திளைத்து ”தருமமே தன்னைத் தவிர்க்குமோ? இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் தருமத்தின் வழிகளைக் காட்டிய அவனையா தவறாக நினைக்கிறாய்? அவன் யார்? தனக்குக் கிடைத்த அரசுரிமையை மாற்றாந்தாய் ஏவ, அவள் விரும்பியபடியே பரதனுக்கு வழங்கிய ஐயனையா இப்படிப் பழிக்கிறாய்? நீ உன் பெண்புத்திக்குத் தகுந்தபடி பேசுகிறாய். பாவி! உன் பெண்மையால் நீ பிழைத்தாய். நீ பெண் என்பதால் போனால் போகிறதென்று உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன்’’ என்று அவளை மிகவும் கடிந்து பேசுகிறான்.
”ராமன் என்ன சாமானியப்பட்டவனா? அவன் கையிலிருக்கும் கோதண்டத்தின் பெருமைதான் கொஞ்சமோ? அவ்வளவு பெருமையுடைய கோதண்டபாணியான ராமன் கேவலம் ஒரு புன்தொழில் குரங்கோடு நட்புக் கொள்வானோ? ராமன், தம்பிமார்களைத்தவிர தனக்கு வேறு உயிர் இருப்பதாகவே எண்ணாதவன். அவன் அருளின் ஆழியான். கருணைக் கடலான அவன், நானும் என் தம்பியும் போர் செய்யும்போது இடையே புகுந்து முறையில்லாமல் போர் செய்வானோ? ஒருக்காலும் செய்ய மாட்டான். நீ கவலையை விடு. நான் போய் என்னைப் போருக்கழைத்த சுக்ரீவன் உயிரை ஒரு நொடியில் குடித்து, உடன் வந்தவர்கள் கருத்தையும் அழித்து மீண்டு வருவேன். நீ இங்கேயே இரு. கலங்க வேண்டாம்” என்கிறான். இங்கும் தாரை அஞ்சியபடியே நடந்தது என்பதைப் பார்க்கிறோம்.
தாரையின் புலம்பல்
வாலி வீழ்ந்து கிடக்கிறான். இந்த மலைக்குல மயில் வேடன் கை பட்ட மயில்போலத் துடிக்கிறது. வாலியின் மார்பிலிருந்து பெருகிய ரத்த வெள்ளத்தில் புரண்டு அழுகிறாள். துடிக்கிறாள். இவள் மார்பிலும் குங்குமக் குழம்பு கொட்டியது போலிருக்கிறது அந்த ரத்தம். மயில்தோகை போன்ற நெடிய கூந்தலும் ரத்தச் சிவப்பாகி விடுகிறது! இந்த மலைக்குல மயில் இத்தனை காலமும் வாலியின் மலை போன்ற தோள்களில் வலம் வந்தது. இப்போது அந்த மலையே பிளந்து விட்டது!
’’பகையாத பண்பினாய்! விதி ஆன தெய்வமே! உயிர் போனபின் உடல் மட்டும் வாழுமா?” என்று கதறுகிறாள். இந்த யமதர்ம ராஜனுக்குத்தான் கொஞ்சமாவது நன்றியணர்வு இருக்கிறதா? அன்று நீ கடல் கடைந்தபோது அமுதம் பெற்றதால் சாகாவரம் பெற்ற எமனுக்குக் கொஞ்சமாவது நன்றியுணர்வு இருந்தால் இன்று உன் உயிரைக் கொண்டுபோயிருப்பானா?
”பொய் உரையாத புண்ணியா, ஐயா,
நீ எனது ஆவி என்றதும் பொய்யோ?
என்று கேள்வி தொடுக்கிறாள்.
உயிரும் உடலும் வாலியும் தாரையும், ஓருயிர் ஈருடல் என்பதுபோல் ஒத்த அன்புடையவர்களாய் வாழ்ந்தனர். ”உன் உள்ளத்தில் நான் இருந்தேன் என்பது உண்மையானால் ராமபாணம் என்னையும் தாக்கியிருக்க வேண்டுமே? என் உள்ளத்தில் நீ இருப்பது உண்மையானால், நான் உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் நீயும் உயிரோடு இருக்க வேண்டுமே? அப்படி நிகழ வில்லையே! இந்த வாசகமும் பொய்யோ?
செரு ஆர் தோளா! நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெஞ்சரம் என்னையும் வவ்வுமால்
ஒருவேன் உள் உளை ஆகின், உய்தியால்
இருவே(ம்) உள் இரு வேம் இருந்திலேம்
என்று புலம்புகிறாள்
வாலியின் வள்ளன்மை
ராமன் ஒளிந்து நின்று அம்பு எய்ததைத் தாரையால் ஜீரணிக்க முடியவில்லை. ‘’ராமன் கேட்டால் நீ எல்லாவற்றையுமே கொடுத்து விடுவாயே. சாவா மருந்தாகிய அமுதத்தையும் கொடுத்திருப்பாயே! இது தெரியமல் இராமன் ஒளிந்து நின்று அம்பு துரந்தானே.’’
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த ராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின், வாழ்வு எலாம்
ஈயாயோ?அமிழ்தேயும் ஈகுவாய்?
என்று அரற்றுகிறாள். நான் முன்பே சொன்னேன் நீ அதைக் கேட்கவில்லை. இராமன் ஒருக்காலும் அப்படிச் செய்ய மாட்டான் என்று நம்பிக்கையோடு போர் செய்யச் சென்றாய்.
ஊழிக்காலம் முடிவதையும் கண்டு வாழவேண்டிய நீ வீழ்ந்தாய். நான் இனி உன்னைக் காண்பேனோ? நீ நெருக்கித் தாக்கினால் மேருவும் பொடியாகி விடுமே! அப்படியிருக்கக் கேவலம்
ஒரு அம்பு உன் மார்பைத் துளைக்குமா? துளைக்காது. இது நிச்சயம் தேவர்கள் செய்த மாயமே. இங்கிருப்பது மாயத்தால் வந்த வாலியோ?’’ என்றெல்லாம் கதறுகிறாள்.
அருமைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்.
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றால் கட்டதோ?
‘தருமம் தான் தன்னைத் தவிர்க்குமோ?’ என்று வாலி கேட்டானல்லவா? அந்தக் கேள்விக்கு பதிலளிப்பது போல் இந்த வினாவைத் தொடுக்கிறாள். “அற்றம் அகற்றும் வில்லியார் ஒரு மைந்தர்க்கும் அடாதது உன்னினாரே” என்று அழுது கொண்டே பதிலளிக்கிறாள். இப்படிக் கதறியழும் தாரையை வானரமகளிர் அந்தப்புரம் கூட்டிச் செல்கிறார்கள். வாலி ’’வானுலகுக்கு அப்புறத்து உலகன் ஆகிவிட்டான்!
இராம இலக்குவரின் சீற்றம்.
இராமன் ஏற்கெனவே சொல்லியனுப்பியபடி கார்காலம் கழிந்தும் சுக்ரீவன் வரவில்லை இதனால் ராமன் கோபமடைகிறான். தன் சீற்றத்தை இலக்குவனிடம் தெரிவிக்கிறான். சீற்றமடைந்த இலக்குவன் நேராக கிஷ்கிந்தை வருகிறான். இது கண்ட அங்கதன் சேதி சொல்ல விரைகிறான். ஆனால் சுக்ரீவன் மது மயக்கத்தில் இருந்ததால் விரைந்து அனுமனிடம் செல்கிறான். இருவரும் தாரையிடம் சென்று செய்தி சொல்கிறார்கள்.
இதைக் கேட்ட தாரை அவர்களைக் கடிந்து அறிவுரை சொல்கிறாள். ‘’செய்நன்றி மறந்தீர்களே. எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறீர்கள்? அதனால் வரும் கேடுகளை நீக்க இப்பொழுது வழி தேடுகிறீர்கள். நீங்கள் எப்படித் தப்பி வாழப் போகிறீர்கள்? சேனைகளைக் கூட்டி வாருங்கள் என்று ராமன் குறிப்பிட்ட நாள் தவறி விட்டீர்கள். நான் பலமுறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. இந்த் தண்டனை உங்களுக்கு வேண்டியதுதான்’’ என்று கண்டிக்கிறாள்.
’’தேவியைப் பிரிந்து வாழும் ராமனின் துயரத்தைப் புரிந்து கொள்ளாமல் சிற்றின்ப மயக்கத்தில் கடமையை மறந்து விட்டீர்கள். சத்தியம் தவறி விட்டீர்கள் செய்த உதவியை மறந்தீர்கள். அதனால் விளையும் கேடுகளை நினைக்கவில்லை.’’ என்று கண்டித்து அறிவுரை சொல்கிறாள். இங்கும் தாரையின் அறிவாற்றலையும், நன்றி மறந்தால் உய்வில்லை என்பதை உணர்த்துவதையும் பார்க்கிறோம்.
இதற்குள் இலக்குவன் மிகுந்த கோபத்துடன் கதவை உதைத்துத் திறந்து கொண்டு வருகிறான். இதைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடுகின்றன.நிலைமை கட்டுமீறிப் போவதைக் கண்டு என்ன செய்யலாம் என்று தாரையிடம் யோசனை கேட்கிறார்கள்
தாரையின் சமயோசிதம்
தாரை ஒரு வழி சொல்கிறாள்.’’நீங்கள் எல்லோரும் அப்பால் செல்லுங்கள். நான் சென்று இலக்குவன் எண்ணம் என்ன என்பதை வினவி அறிந்து வருகிறேன்’’ என்கிறாள். வானரர்கள் சென்றதும் தாரை தன் தோழிமார்களுடன் செல்கிறாள். ஆவேசமாக வரும் இலக்குவனை அரண்மனை வாயிலில் எதிர்கொள்கிறாள் தாரை. தோழிமர்கள் வந்து சூழ்ந்து
கொண்டதும் இலக்குவன் அவர்களைப் பார்க்கவும் அஞ்சுகிறான். மாமியார் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட மருமகனைப் போலக் கூச்சத்துடன் நிற்கிறான். அன்னியன் எதிரே வந்து நிற்க வேண்டியதற்காகக் கூச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறாள் தாரை. உள்ளமும் உடலும் நடுங்கக் கூசி நிற்கிறாள். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசுகிறாள். இங்கு தாரையின் குண விசேஷத்தைப் பார்க்கிறோம் என்ன அழகாகப் பேச்சை ஆரம்பிகிறாள். என்ன நயம்! என்ன வினயம்!
அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப்பெற்று, வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ?
’’அளவில்லாத நீண்ட நெடுங்காலமாகத் தவம் செய்த புண்ணியத்தால் நாங்கள் பெற்ற பயனாகவே நீ வந்திருக்கிறாய் என்றே நினைகிறேன். இந்திரன் முதலானவர்களுக்கும் கூட இந்தப் பேறு கிடைக்காது. உன் திருவடிகள் எம்மனையில் பட்டதால் நாங்கள் வாழ்வு பெற்றோம். எங்கள் வினைகளும் நீங்கப் பெற்றோம். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்?’’
தன் கணவனைக் கொன்றவன் தம்பியான இலக்குவனிடம் எவ்வித வேறுபாடும் இல்லாமல் என்ன ஒரு பணிவோடும் நயத்தோடும் பேசுகிறாள் தாரை! அதனால்தான் இவளைத் ”தூமன நெடுங்கண் தாரை’’ என்று போற்றுகிறான் கவிஞன்
எதற்காக வந்திருக்கிறாய் என்று கேட்பது மரியாதைக் குறைவாகும், நாகரீகமும் இல்லை என்பதை உணர்ந்த தாரை, “ஐயனே! நீ இராமனை விட்டுப் பிரிய மாட்டாயே, அப்படியிருக்க இப்பொழுது அவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?’’ என்று சாமர்த்தியமாகவும் வினயமாகவும் வினவுகிறாள். பொங்கிவரும்
பாலில் தண்ணீர் தெளித்ததும் அடங்குவது போலத் தாரையின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இலக்குவன் கோபம் அடங்கி கருணை மேலிடுகிறது. இவ்வளவு இனிமையாகப் பேசியவர் யார் என்ற ஆர்வம் மேலிட கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கிறான். பார்த்தவன் துக்கம் நெஞ்சடைக்க நைந்து போகிறான்.
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்து கொட்டாப்
பொங்கு வெம்முலைகள் பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான்
பேரழகுடைய இந்த மலைக்குல மயில் மகாராணியாய் நெடுங்காலம் வாழ்ந்தவள், இன்று கணவனான வலியை இழந்து கண்டவர் இரங்கத்தக்க நிலையை அடைந்து நிற்கிறாள்! இவளைக் கண்ட இலக்குவனுக்கு ஊரில் இருக்கும் தன் தாய்மார்களான சுமித்திரை, கோசலையின் நினைவு வருகிறது. தாரை எப்படி கழுத்து மறையும்படி மேலாடையால் இழுத்துப் போர்த்துக் கொண்டு நிற்கிறாள் என்பதைக் கவிஞன் குறிப்பாகச் சொல்கிறான். பார்த்த மாத்திரத்திலேயே தொழத்தக்கவளாகத் தன் தாயார்களை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறாள் தாரை.
சினம் அடங்கிய இலக்குவன் வந்த காரியத்தைச் சொல்கிறான் இதைக் கேட்ட தாரை,
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்க விட்டீர்
‘’இப்படி நீங்கள் பேருதவி செய்திருக்கும் போது உம்மை மதிக்காதவர்கள் இம்மை, மறுமை இரண்டையும் இழந்து விடுவார்களல்லவா? வாலியையே வதைத்த உங்களுக்கு வேறு துணையும் வேண்டுமோ? சீதை இருக்கும் இடத்தைத் தேடித் தரக்கூடியவரை மட்டும் நாடி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்களைச் சரணடைந்துள்ள சுக்ரீவன் அப்பணியை நல்ல முறையில் நிறவேற்றித் தரக் கடமைப்பட்டவன்’’ என்று முடிவாகச் சொல்கிறாள். இங்கு இலக்குவனை ”செம்மை சேர் உள்ளத்தீர்கள்” என்ற அடைமொழி கொடுத்து இலக்குவனிடம் பேசுகிறாள்.
ராமனைத் துணையாகக் கொண்டு தன் கணவனைக் கொன்ற சுக்ரீவனிடம் பகைமை பாராட்டாமல், மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களில் தன் கவனத்தைச் செலுத்தும் தாரையை இங்கு பார்க்கிறோம். ராமனிடமிருந்தே எழுந்த சீற்றத்தையும் மாற்றி இலக்குவனை வெகு லாவகமாக எதிர்கொண்டு அவனது கோபத்தை மாற்றி கிஷ்கிந்தையைக் காப்பாற்றுகிறாள். சுய பச்சாதாபத்தையோ பகைமை உணர்ச்சியோ காட்டாமல் நாட்டு நலனில் அக்கறை கொண்ட தாரையை இங்கு தரிசிக்கிறோம். அவளின் பண்பட்ட விசாலமான உள்ளத்தைப் பார்க்கிறோம்
அயோத்தியிலே கைகேயியை நாடக மயிலாகப் பார்க்கிறோம். நல்லவளாக இருந்த கைகேயி நாடகமாடி ராமனைக் காட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். ஆனால் தாரையோ வாலியை இழந்த பின்பும் கூடத் தன் கம்பீரம் குறையாமல் மலைக்குல மயிலாகவே வலம் வருகிறாள்!
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
2 May 2009 at 1:26 pm
ம்ம்ம்ம் குறுக்கிட்டுச் சொல்வதற்கு மன்னிக்கணும், பஞ்சகன்யாவிலே வரும் தாரா, பிரஹஸ்பதி என அழைக்கப் படும் தேவகுருவின் பத்தினியான தாரா. வாலியின் மனைவி தாரை இல்லை. பலரும் இப்படியே தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நான் பல ஆன்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அதோடு பெயரிலும் வித்தியாசம் உண்டு. வாலியின் மனைவி தாரை. குருவின் மனைவி தாரா. ஸ்லோகத்தில் தாரா என்ற பெயரே வரும். தாரை பஞ்ச கன்யாக்களில் ஒருத்தி நிச்சயமாய் இல்லை. மீண்டும் மன்னிக்கவும்.