காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?

இன்றைக்கு காயத்ரி மந்திரம் ஏராளமான இந்து இல்லங்களிலும், கல்விக் கூடங்களிலும், சமயக் கூட்டங்களிலும், தியான முகாம்களிலும் எல்லோருக்கும் தெய்வீக ஒளியை வழங்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இத்தகைய கேள்விகளும், அவற்றுக்கு சில “பண்டிதர்களும்”, “குருமார்களும்” வழங்கும் குறுகிய, கட்டிப் பெட்டித்தனமான, குழப்பவாத பதில்களும் கூட அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன.

சென்ற நூற்றாண்டின் பெருமதிப்பிற்குரிய இந்துத்துறவி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் (1920-1985) இது பற்றிக் கூறியவற்றை இங்கே அளிக்கிறோம். சுவாமிகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி சிவானந்தரிடம் சன்யாச தீட்சை பெற்றவர். புகழ்பெற்ற பகவத்கீதை உரை, திருவாசக உரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வேத, வேதாந்த, சமய நூல்களை இயற்றிய பெரும் அறிஞர். அந்தர்யோகம் எனப்பட்ட சமய, ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளைத் தமிழகமெங்கும் கொண்டு சென்று ஏராளமான மக்கள் வாழ்வில் ஞான, ஆன்மிக ஒளியேற்றிவர். திருப்பராய்த்துறையில் அவர் உருவாக்கிய ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் பற்பல சமய, சமூகத் தொண்டுகளைத் தொடர்ந்து செய்துவருகிறது.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “காயத்ரீ” என்ற நூலில் இருந்து –

வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639115.

நம்முடைய தேசிய மந்திரமாக இருப்பது, தேசிய லட்சியமாக இருப்பது, மானுட வர்க்கத்துக்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம். வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் லட்சியத்தை அது விளக்குகிறது.

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர்

காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும் அமைந்திருக்கிறது. பரப்பிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்குப் பல காயத்ரீ மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளைத் தேவீ காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்பிரமணிய காயத்ரீ, கணேச காயத்ரீ என்று பாகுபடுத்தலாம். இத்தனைவிதக் காயத்ரிகளுள் நாடு முழுதுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொதுவாக இருந்துவருகிற காயத்ரி ஒன்றேயாம். அது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப் படுகிறது. இனி, பரமஹம்ச காயத்ரீ என்பது ஒன்றுண்டு; அது துறவிகளுக்கு உரியதாகும். துயவியர்கள் உட்பட வழிபாடு செய்கின்ற மக்கள் எல்லார்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி.

ஒரு மந்திரத்தினுடைய அர்த்தம் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அதை உச்சரிக்கின்ற அளவு உச்சரிக்கின்றவர்களை அது பக்குவப் படுத்துகிறது. அந்த வல்லமை மந்திர சக்தி என்று சொல்லப் படுகிறது. மந்திரத்தின் ஓசைக்கு அலாதியான சக்தி இருக்கிறது. இறைவனுய குறிப்பிட்ட திருநாமம் மந்திரமாகிறது. ”ஓம் நம்: சிவாய” என்பது மந்திரம். “ஓம் நமோ நாராயணாய” என்பது மந்திரம். இவை சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உரிய மந்திரங்களாம். பிரம்ம காயத்ரியை எந்தத் தெய்வத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தெய்வத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது தத்துவ உபாசனை பண்ணுகிறவர்களும் இதை மந்திரமாக வைத்துக் கொள்ளலாம். இது மனிதனைப் பாரமார்த்திக உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது.

காயத்ரி மந்திரத்தைக் குறித்து இடைக்காலத்தில் வந்துள்ள கொள்கை ஒன்று உண்டு. அதாவது இந்த மந்திரத்தைச் சூத்திரர்களும், பெண்பாலரும் உபயோகப் படுத்தக் கூடாது. இக்கொள்கையைத் தத்துவபூர்வமாக வியாக்கியானம் பண்ணுமிடத்து, காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து பிரயோஜனப் படுத்த முடியாதவர்கள் சூத்திரர்களாம். இதை அறிந்து உபயோகப் படுத்துகிறவர்கள் எல்லாரும் துவிஜர்கள் ஆகின்றனர். துவிஜன் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான். அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்திருப்பது தான் காயத்ரி மந்திரம்.

பெண்பாலரைப் பற்றி இடைக்காலத்தில் வந்துள்ள இன்னொரு கொள்கை ஒன்றுண்டு. அவர்கள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லக் கூடாது; வேதம் கற்கக் கூடாது. இதுவும் பொருளற்ற கொள்கையாம். சமுதாயம் சீர்கேடு அடைந்துவர ஆரம்பித்தபொழுது இக்கொள்கை உருவெடுத்தது. இப்பொழுது சமுதாயம் புதிய வலிவு பெற்று வருகிறது. இக்காலத்தில் அவதரித்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சூத்திரர், பெண்பாலர் ஆகிய இருகூட்டத்தாரைப் பற்றிய கொள்கைகளை மாற்றியமைத்திருக்கிறார். வேதம் கற்பதற்குப் பெண்பாலர் தகுதியற்றவர் என்பதை மாற்றிப் பரஞான குருவாகச் சாரதா தேவியாரை ஸ்ரீராமகிருஷ்ணர் அமைத்துள்ளார். பெரிய பெரிய துறவியர்களுக்கே ஞானகுரு ஸ்தானம் வகிக்கின்ற பெரிய நிலையில் ஸ்ரீசாரதா தேவியாரை அவர் அமைத்து வைத்தார். அதன் மூலமாகப் பெண்பாலருடைய பாங்கைப் பழைய பெருநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவர் துவக்கம் செய்து வைத்தார்.

இடைக்காலத்தில் வந்துள்ள ஐதிகம் சூத்திரர்கள் சன்னியாசத்துக்குத் தகுதியற்றவர்கள் என்பதாம். அவர்கள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லக் கூடாது என்பதாம். சன்னியாசத்துக்குத் தகுதிவாய்ந்தவர்கள் யார் என்பது கேள்வி. பரமஹம்சர் இக்கேள்விக்கும் விடை கொடுத்திருக்கிறார். அவருக்கு வாய்ந்த சிஷ்யக் கூட்டத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் தலைத்தரமான சன்னியாசிகள் என்பது வெளிப்படை. துறவறத்தின் உச்சநிலையை அவர்கள் எட்டியுள்ளவர்களாவார்கள். மக்களுள் மாணிக்கங்கள் என்று அவர்களைப் பகரவேண்டும். பிறப்பையோ, குலம் கோத்திரத்தையோ பரமஹம்சர் கருத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. பண்பாடு ஒன்றையே அவர் முன்னணியில் வைத்தார். இடைக்காலத்தில் வந்த ஐதிகத்தைத் திருத்தியமைத்த பெருமை அவருடையதாம்.

கல்வியறிவில்லாத ஒரு வேலைக்காரனாக லாட்டு என்று அழைக்கப்பெற்ற இளைஞன் இருந்தான். குலத்தில் அவன் உயர்ந்தவன் அல்லன். எனினும் அவனிடத்து நல்ல சம்ஸ்காரங்கள் அமைந்திருப்பதைப் பரமஹம்சர் கவனித்தார். அவனுக்கு நல்ல பயிற்சியையும் அவர் கொடுத்தார். பிறகு தமது துறவியர் கூட்டத்தில் லாட்டு என்பார் எடுத்துக் கொள்ளப் பட்டார். அற்புதானந்த சுவாமி என்ற பெயர் அவருக்கு வருவதாயிற்று. அவர் வாழ்ந்த பெருவாழ்வு ராமகிருஷ்ணருடைய அற்புதங்களுள் ஒன்றாகும். ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்ற ஜடநிலையில் இருப்பவர்களை எடுத்துப் பெரிய மூர்த்திகளாக உருவாக்குவது இறைவனுக்குச் சாத்தியம்” (The Lord shall have his chosen ones from stocks and stones). பரமஹம்சர் அப்படிப் பண்ணியிருக்கிறார். சன்னியாச ஆசிரமத்திற்குத் தகுதியுடையவர்கள் யார் என்ற கேள்விக்கு ஸ்ரீராமகிருஷ்ணருடைய செயல் சரியான விடையாக வந்தமைந்திருக்கிறது. மனபரிபாகத்தை அவர் கருத்தில் எடுத்தார். பிறப்பை அவர் புறக்கணித்து விட்டார். எக்குடியில் பிறந்தவன் என்பதை முன்னிட்டு இடைக்காலத்தில் வந்தவர்கள் வருணத்தை நிர்ணயித்தார்கள்; எத்தகைய பாங்கு படைத்தவன் என்பதை முன்னிட்டுப் பரமஹம்சர் வருணத்தைப் பாகுபடுத்தினார். அவர் வகுத்து வைத்துள்ள முறை உலகம் முழுதுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

எந்த உயர்ந்த லட்சியத்தை இடைக்காலத்தில் நாடு கடைப்பிடிக்கவில்லையோ, கடைப்பிடிக்காததன் விளைவாக நாடு க்ஷீணதசை அடைந்ததோ, அந்த லட்சியத்தைத் தக்க காலம் வந்தபொழுது பரமஹம்ச தேவர் ஓர் ஆசாரிய புருஷராக எழுந்தருளி ஸ்தாபிதம் பண்ணுகிறார். அவருடைய சிஷ்யக் கூட்டமே அப்புதிய அமைப்புக்கு விளக்கமாக வந்தமைந்திருக்கிறது.

இடைக்காலத்தில் பெண்பாலர் பின்னண்ணியில் இருந்தனர். இப்பொழுது காலநிலை மாறியமைந்து வருகிறது. பெண்பாலர் அதிவேகம் கல்வியில் மேல்நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நாட்டை ஆள ஒரு பெண்பாலுக்கு இயலும் என்பது இன்றைக்கு நிரூபிக்கப் படுகிறது. கல்வி ஸ்தாபனங்களில் இன்றைக்குப் பெண்கள் கற்கிற பாங்கில் ஆண்கள் கற்பதில்லை. இன்னும் ஐம்பது வருஷங்களுக்குள் ஒருவேளை ஆண்பாலரைவிடப் பெண்பாலர் மேல்நிலைக்குப் போக முடியும். பெண்பாலர் துறவறத்திலும் ஈடுபடுகிற நிலை வந்துள்ளது.

இடைக்காலத்தில் நாம் க்ஷீணதசை அடைந்ததற்குக் காரணத்தை விவேகானந்த சுவாமிகள் கன்னியாகுமரியில் பெற்ற ஞான அனுபவத்திற்குப் பிறகு எடுத்துரைத்தார்” “பாமரர்களையும், பெண்பாலரையும் பின்னணியில் வைத்ததன் விளைவாகவே நாடு க்ஷீணதசை அடைந்தது. அக்குறைநிலையை நிறைநிலையாக்குதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அடிகோலினார். பாமரர்களையும், பெண்பாலரையும் பரம்பொருள் சொரூபமாகக் கருதி அவர் பாராட்டியது அவர் துவக்கி வைத்துள்ள புதிய இயக்கமாம். மனபரிபாகம் அடைந்திருப்பவர்களைப் பரமஹம்சர் நேர்பார்க்கின்றார். பரிபாகம் ஆனவர்களைத் தமக்குச் சொந்தமாக அவர் எடுத்துக் கொள்கிறார். சமுதாயத்தில் ஆங்காங்குள்ள நல்லாரைப் பொறுக்கி எடுத்து ஒரு பெரிய சான்றோர் கூட்டத்தை அவர் அமைக்கின்றார். அத்திருக்கூட்டம் உலகம் முழுதுக்கும் பொதுவானது. அவருடைய இயக்கம் உலகம் முழுவதிலுமே பரவி வருகிறது. மானுட வர்க்கம் முழுதுக்கும் அது பொதுவானது.

இந்த இயக்கத்தை அடிப்படையில் வைத்துத் தத்துவத்தை நாம் ஆராய்ச்சி பண்ணவேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் தேசியப் பிரார்த்தனையாகவும், தேசிய மந்திரமாகவும் இருந்துவருகிற காயத்ரி மந்திரத்தைப் பொதுவுடைமையாக்க வேண்டும். மறுமலர்ச்சிக்கு அது இன்றியமையாதது. ஆன்மிகத் துறையில் நாடு மறுமலர்ச்சி பெற்று வருகிறது. அதற்குப் பொருத்தமான மந்திரமாக அமைந்திருப்பது காயத்ரீ. பால்வேற்றுமையின்றி, பிறப்பு வேற்றுமையின்றி அதைப் பயன்படுத்தக் கூடியவர்களுக்கெல்லாம் அதை உரியதாக்க வேண்டும்.

யந்திரத்தைச் சரியாக இயக்குகின்றவர்கள் யந்திரிகள், இஞ்சினியர்கள், பொறியியல் வல்லுனர் – இப்படியெல்லாம் பகரப் பெறுகின்றனர். யந்திரத்தைச் சரியாக இயக்கத் தெரியாதவர்கள் இஞ்சினியர் அல்லர். அதே விதத்தில் காயத்ரீ தத்துவத்தை அறிந்து பழக்கத்தில் கொண்டுவர முடியாதவர்கள் இன்னும் பரிபாகம் அடையாதவர்களாம். அன்னவர்களைச் சூத்திரர் எனலாம். மன அமைப்பிலும், வாழ்க்கை முறையிலும் அவர்கள் மேல்நிலைக்கு வந்தவர்கள் அல்லர். மக்கள் என்றும், மாக்கள் என்றும் சமுதாயத்தில் இருப்பவர்களை இரண்டாகப் பிரிக்கிறோம். மாக்கள் நிலையில் இருப்பவர்கள் சூத்திரர்கள். சமுதாயத்தில் எப்பொழுதுமே சூத்திரர்கள் இருப்பார்கள். ஆனால் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு லட்சக் கணக்கான பேரைச் சூத்திரர் என்று ஒதுக்குவது ஒவ்வாது. அப்படிச் செய்வது பெரிய பிழையாகும். பெருவாழ்வுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் எங்கு, எந்நிலையில் இருந்தாலும் அவர்களை உயர்நிலைக்கு உயர்த்துவது தெய்வ வழிபாட்டுக்கு ஒப்பான செயற்கரிய செயலாகும்.

நாடு செய்துள்ள மற்றொரு பிழையின் விளைவை இன்றைக்குக் கண்கூடாகக் காண்கிறோம். பண்பட்ட மேல்நிலையில் இருக்கும் மனிதன் ஒருவன் தன் பண்பாட்டைத் தகுதிவாய்ந்துள்ள மற்றவர்களைத் தேடியெடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படிச் செய்யாது மேன்மையானது தனது தனிப்பிறப்புரிமை என்று வைத்திருப்பானாகில் அம்மேன்மை அவனை விட்டு நழுவிப் போய்விடுகிறது. பிறகு அம்மனிதன் தானே மேன்மைக்குத் தகுதியற்றவனாகிறான். இது வாழ்க்கையை ஒட்டிய ஒரு தத்துவம். யக்ஞம் என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது இது. இன்றைக்கு நாட்டில் அந்தணர் இல்லை. அதற்குக் காரணம் தனியுரிமை படைத்தவர்கள் அந்தணர் தருமத்தைச் செய்ய மறந்தனர்; அந்தணர் தருமத்தைச் செய்ய மறுத்தார்கள். ஆதலால் அன்னவர் அந்தணர் தன்மையை இழந்தனர்.

நாட்டு மக்களுக்கு இது ஒரு பெரிய பாடம். எத்துறையில் மனிதன் எத்தகைய மேம்பாடு அடைந்திருக்கின்றானோ, அந்த மேம்பாட்டை அவன் பொதுவுடைமையாக்க வேண்டும். அப்படிப் பொதுவுடைமை ஆக்குவதற்கேற்ப அது அவனிடத்து வளருகிறது. பொதுவுடைமையாக்க மறுப்பதற்கு ஏற்ப அம்மேன்மையை அவன் இழக்கிறான். இது எக்காலத்திலும் எல்லார்க்கும் பொதுவாய் உள்ள சனாதன தர்மமாம்.

“Sinners are teachers in disguise” என்று விவேகானந்தர் பகர்ந்தார். “பாபம் செய்கின்றவர்கள் அப்பாபத்தின் பயனை அனுபவிப்பவதன் வாயிலாக அப்பாபத்தை யாரும் செய்யலாகாது என்று மறைமுகமாகப் புகட்டுகின்ற போதகாச்சாரியார்கள் ஆகிறார்கள்” – இதுவே அந்த ஆங்கில முதுமொழியின் கருத்தாகும். தகுதி வாய்ந்தவர்களுக்கு மேலான தத்துவத்தை எடுத்து வழங்கி அதைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும். அப்படிச் செய்ய மேன்மக்கள் என்பார் மறுத்தது ஒரு பாபச் செயலாம். அந்தப் பாபச் செயலைச் செய்தால் என்ன விளைவு வரும் என்பதை அன்னவர்கள் இன்று நிரூபித்து வருகிறார்கள். சமுதாயம் இனி அப்பாபத்தில் ஈடுபடலாகாது. அதைத் திருத்தியமைப்பது எங்ஙனம் என்பதைப் பரமஹம்ச தேவர் தமது ஜீவிதத்தின் வாயிலாக விளக்கியிருக்கிறார்.

பரமஹம்சர் புகட்டிய போதனையை நாம் இப்பொழுது பின்பற்றுகிறோம். ஆயிரக்கணக்கான வருஷங்களாக நம்முடைய தேசியப் பிரார்த்தனையாக இருந்துவரும் காயத்ரி மந்திரமானது இடைக்காலத்தில் பொதுமக்களிடமிருந்து மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதைப் பொதுவுடைமை ஆக்குவது முறை. அதைப் பொதுவுடைமை ஆக்குவதற்கு ஏற்ப நாடு செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடுகிறோம்.

காயத்ரி மந்திரத்தின் தத்துவத்தை இப்பொழுது விளக்குகின்றோம். யாருக்கு அத்தத்துவம் விளங்குகிறதோ அவர்கள் அதைக் கையாளத் தகுதிவாய்ந்தவர்கள். காயத்ரி மந்திரத்தைக் கையாள்வதற்கு ஏற்ப பாரமார்த்திக மேன்மை வாய்க்கிறது.

(தொடரும்).

ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நூல்கள் பட்டியல்

அடுத்த பகுதி: காயத்ரி மந்திரத்தின் பதவுரை, தெளிவுரை, உட்பொருள் விளக்கம்.

Tags: , , , , , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?

 1. vidya nidhi on June 20, 2009 at 9:43 am

  வித்யா நிதி

  காயத்ரி மந்த்ரம் தெரியாதவர்களே இருக்கக்கூடாது. அந்த அளவிற்கு காயத்ரி மந்த்ரத்தை மழலையர் பள்ளியிலிருந்து துவங்கி பிரார்த்தனையில் அறிமுகப்படித்திட வேண்டும். சிறு ஸ்டிகர் களாக அச்சடித்து எல்லா இடங்களிலும் ஒட்டி அனைத்து ஹிந்துக்களும் காயத்ரி மந்திரத்தை அறிந்து கொள்ளும் வண்ணம் செய்திடவேண்டும். காயத்ரி மந்த்ரம் ஹிந்துக்களின் தாரக மந்திரம். இதில் ஜாதி வித்யாசம் கிடையாது.

 2. வினோத் ராஜன் on June 20, 2009 at 12:16 pm

  //க்‌ஷீணதசை//

  சொல்லின் முதல் எழுத்தாக வரும் நிலையில் ‘க்ஷ” என்ற சம்யுகதாக்‌ஷர வடிவத்தை பயன்படுத்துவது நல்லது

  க்ஷீணதசை , க்ஷேத்திரம், க்ஷயம் – என்ற வாறு

 3. Bharathaputhran on June 20, 2009 at 4:04 pm

  எல்ல மந்திரங்களுக்கும் தாயான காயத்ரி மந்திரத்தை எல்லோரும் உச்சரித்து நல்வாழ்வு எய்துவோம்.

 4. Bharathaputhran on June 20, 2009 at 4:05 pm

  காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…

 5. ஆசிரியர் குழு on June 20, 2009 at 4:12 pm

  வினோத் ராஜன் June 20th, 2009 12:16 pm —>

  // சொல்லின் முதல் எழுத்தாக வரும் நிலையில் ‘க்ஷ” என்ற சம்யுகதாக்‌ஷர வடிவத்தை பயன்படுத்துவது நல்லது //

  சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இத்திருத்தம் செய்யப் பட்டு விட்டது.

  Bharathaputhran June 20th, 2009 4:05 pm ——>

  // காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…//

  அடுத்த பாகத்தில் வருகிறது.

 6. Baskar T on June 21, 2009 at 1:14 pm

  காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…

 7. M.G.Bala on May 12, 2011 at 2:18 pm

  தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி
  காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள்ளது
  சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்
  தொடர்புக்கு: M G பாலா 9345342424

 8. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on May 12, 2011 at 3:03 pm

  காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியது என்பதில் அணு அளவும் சந்தேகம் இல்லை. வேதத்தின் சாறாக உள்ளது காயத்ரி மந்த்ரம். வேதமாதாவாக காயத்ரி கருதப்படுவதாலும் அன்னை கலைவாணி சரஸ்வதி கையில் வேத சுவடிகளைக் கொண்டிருப்பதாலும் பெண்கள் காயத்த்ரி ஜபம் செய்யக்கூடாது என்பது தவறு. யார் உபநயனம் காயத்ரி தீக்ஷை செய்விக்கப்படு கிறார்களோ அவர்களே பிராமணர் அன்றி பிறப்பால் யாரும் வைதீகர் ஆகிவிட முடியாது.
  காயத்ரி மந்த்ரம் ஒருசிலருக்கே அளிக்கபபட்டதனால் ஹிந்து மக்கள் அல்லலுறுகின்றனர்.
  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் காயத்ரி என்னும் நூலை படிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அதன் பயனாக உபநயனம் இன்றியே காயத்ரி மந்திரம் ஜபித்து வந்தேன். பின்னாளில் உபதேசமும் கிடைத்தது. காயத்ரி ஜபம் ஆன்ம விழிப்பை ஏற்படுத்த வல்லது இஷ்ட தெய்வத்தின் உபாசனையோடு இதனையும் செய்வது பன்மடங்கு பலனளிக்கும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு ஏழு வயதுக்கு பின்னால் காயத்ரி கற்றுக்கொடுத்தல் மிக அவசியம். இதனால் அவர்தம் விழிப்புணர்வு அதிகரிக்கும். இக பர சௌக்கியம் வழங்கும் காயத்ரி ஜபம் அனைவரும் செய்வோம். அனைவருக்கும் காயத்ரி தீக்ஷை வழங்கும் காயத்ரி பரிவார் போன்று இன்னும் உள்ள வைதீக நிறுவனங்களும் ஆர்வலர்களுக்கு பிரம்மோபதேசம் செய்வித்தல் நன்று.

 9. பெருந்துறையான் on May 12, 2011 at 9:24 pm

  வெகு ஜனனகளுக்குச் சென்று சேர வேண்டிய கட்டுரை.
  சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ‘காயத்ரி மந்த்ரம்’ (சந்தயாவந்தனம்) தொடர்பான நூல் இம்மந்திரத்தை மூவர்ணத்தாருக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறது. இக்கட்டுரையின் அடிநாதத்தை அது பிரதிபலிப்பதாக ஒரு அடிக்குறிப்பைச் சேர்க்கலாமே…!

 10. Dr Rama Krishnan on August 5, 2020 at 7:22 am

  “ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்ற ஜடநிலையில் இருப்பவர்களை எடுத்துப் பெரிய மூர்த்திகளாக உருவாக்குவது இறைவனுக்குச் சாத்தியம்” (The Lord shall have his chosen ones from stocks and stones)
  With due apologies to Swamy Ji. Jesus Christ never existed and even if there was an historical Jesus, one has to acknowledge that there are a lot of atrocious stuff älso in the Bible attributed to him.
  My problem with RK mission is their tendency to come out with this “All religions are same” stuff. Swamy Sarvapriyanda Ji also does this unfortunately .

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*