உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்

Death on a Full Moon Day – Pura Handa Kaluwara (1997)

எதன் மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் மனிதனை நீங்கள் சந்தித்திருக்கிறீ்ர்களா? குறைந்த பட்சம் எதன் மீதும் நம்பிக்கையில்லாமல் இருத்தல் என்ற சித்தாந்தத்தின் மீதாவது நம்பிக்கை கொண்டவராகத் தான் அவர் இருக்க முடியும். வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஏதாவது ஒரு கொள்கையிலோ, தத்துவத்திலோ அல்லது செயலிலோ நம்பிக்கை கொள்ள வேண்டிய தேவை நம் எல்லோருக்கும் இருக்கிறது – வாழ்வின் ஆதாரமாக அதுவே தான் இருக்கிறது. நம்பிக்கைகள் என்பவை அவரவர் அறிவிற்கேற்ப கண்டுணரும் உண்மைகளே.

அவ்வுண்மைகளையும் அவற்றிலிருந்து பிறக்கும் நம்பிக்கைகளையும் தன் சுய தேவைக்காவது தொடர்ந்து ஸ்தாபித்துக் கொள்ள மனித மனம் எப்போதும் முயன்று கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் குலையும் போது – தப்பானவை என்று சவாலுகுட்படுத்தப்படும் போது அந்த நம்பிக்கையிலிருந்து விலகி நடுநிலைமையிலிருந்து உண்மையை கண்டறிய அசாத்திய மனத்துணிவும் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் ஒரு போருக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளும் மன விடுதலையும், உண்மையை தரிசிக்கும் வேட்கை கொண்டோருக்கே அமைகிறது. அப்படிபட்ட நம்பிக்கையும் ஆழ்ந்த வேட்கையும் கொண்ட மனிதனாக வண்ணிஹாமி, பிரசன்ன விதனாகே இயக்கிய “Death on a full moon day” திரைப்படத்தில் நம் கண்முன் தோன்றுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிகமாக ஓடும் படம். ஆனால் அதன் தாக்கம் அந்த ஒரு மணி நேரத்தையும் தாண்டியதாக இருக்கிறது – எந்த ஒரு சிறந்த திரைப்படத்தைப் போல.

இலங்கையில் நிகழும் உள்நாட்டு போரினில் ராணுவப்படையில் சேர்ந்து போர் புரியச் சென்ற மகன் சவப்பெட்டியில் திரும்பவருவதிலிருந்து துவங்குகிறது கதை. பணம் சம்பாதித்து அடமானத்தில் இருக்கும் வீட்டினை மீட்கவும், சகோதரியை திருமணம் செய்து கொடுக்கவும், வயதான குருட்டு தந்தையை காப்பாற்றவும் செங்கல் சூளையை விட்டு விட்டு ராணுவத்தில் சேர்ந்த மகன் சவப்பெட்டியில் திரும்ப வருவது வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பதினருக்கு பேரிடியாக அமைகிறது. இறந்த சில தினங்களுக்குப் பின் அவன் இறப்பதற்கு முன் அனுப்பிய கடிதம் தபாலில் வருகிறது.

குருட்டு தந்தைக்கு தன் மகன் இறந்ததை ஏற்க முடியாததாகவே இருக்கிறது. அவனுடைய கடிதம் அவருக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது. இறந்த சில மாதங்களில் சந்தைக்கு செல்லும் போது கூட மகனுக்காக சட்டை வாங்குகிறார். அவன் திரும்பி வருவதற்குள் அடமானத்தில் இருக்கும் வீட்டின் வேலைகளை முடித்து விட வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த நம்பிக்கை எந்த அளவிற்கு செல்கிறதென்றால் இழப்பீட்டு தொகையாக அரசாங்கம் அளிக்கும் ஒரு லட்சம் ரூபாயையும் அவர் கோர மறுக்கிறார். ஓட்டை குடிசை, அடமானத்தில் இருக்கும் வீடு, நிலையான சம்பளம் இல்லாத குடும்பம், திருமணம் செய்து கொடுக்கப்பட வேண்டிய மகள் – இவை எல்லாவற்றுக்கும் மேல் மகனின் மரணத்திற்குப் பின் மூன்றாம் மாதத்தில் செய்யப்பட வேண்டிய சடங்கு என பணத்திற்கான தேவை அனேகம் இருக்கும் போதும் மறுக்கிறார். மகள்கள் அவருக்கு புரிய வைக்க முயற்சிக்கிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற கல்யாணத்திற்கு காத்திருக்கும் மகள் ஒரு துணிஆலையில் வேலைக்கு செல்லத் துவங்குகிறாள்.

குடும்பத்தை நடத்தவும் எதிர்காலத்திற்கும் அரசாங்கம் அளிக்கும் ஒரு லட்சம் ருபாயை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்துகின்றனர். வீட்டை அடமானம் வாங்கிய கிராம அதிகாரியும் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார். அந்த ஊரிலிருக்கும் புத்த பிட்சு அவரது மகன் நினைவாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பல மாதிரியிலிலும் அவரை சுற்றியிருப்பவர்கள் மகனின் மரணத்தை சுவீகரிக்கச் சொல்கிறார்கள். ஒரு நிலையில் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் அழுத்தம் தாங்காமல் அவர் அத்வானத்தில் போய் படுத்துக் கொள்கிறார்.

அந்த குருட்டு கிழவன் இழப்பீட்டுத் தொகையை ஏற்க மறுப்பது போரினை தொடரும் சமுக கட்டமைப்பை உடைக்கும்/ மறுதலிக்கும் ஒரு செயலாகத் தோன்றினாலும், அவரின் செயல்களிலோ பேச்சிலோ எங்குமே சமுக கோபமோ அரசாங்கத்தின் மீதோ தமிழ்ப் போராளிகள் மீதோ எந்த விதமான விமர்சனமோ போராட்ட தொணியோ தென்படவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவரது மகளை மணக்க இருப்பவன் “ராணுவத்தில் சேருவதன் மூலம் தான் கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும்” என்று கூறுகிறான். தன்னுடைய குடும்பம், அடகிலிருக்கும் வீடு என்று ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் அந்த மனிதரின் மூலம் எந்த அரசியல் கருத்தும் திணிக்கப்படவில்லை என்பதே என் அவதானிப்பு.

ஒரு கட்டத்தில் பணத்தை வாங்குவதன் மூலம் தன் நம்பிக்கையை தானே உடைக்க வேண்டும் அல்லது நம்பிக்கையோடு இருந்து பணத்தை ஏற்காமல் இருக்க வேண்டும். ஆனால் தன் நம்பிக்கையை எப்படி ஆதாரங்களில்லாமல் ஏற்பது – அதுவும் அவன் திரும்ப வருகிறேன் என்று கடிதம் அனுப்பிய பின்பும்? இறுதியில் தானே உண்மையை கண்டரியும் பொருட்டு சவக்குழியிலிருந்து சவப்பெட்டியை தோண்டி எடுக்க முயற்சிக்கிறார் – சவப்பெட்டி திறக்கப்படுவதன் மூலம் இழப்பீடு தொகை கோறும் உரிமையை அவர் இழக்கக்கூடும் என்று அறிந்தும்.

புத்தமத பிரச்சாரமாக இல்லாவிடிலும் சமய கருத்துகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன. புத்த மதத்தினரைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் முக்கியமான நாள். அதன் காரணமாகவே கிழவரின் மகன் பௌர்ணமியில் இறப்பதிலிருந்து இயக்குனர் துவக்குகிறார் என்ற அவதானிப்பு தவிர்க்க முடியாததாகிறது. உண்மையை கண்டெடுக்கும் இந்த வேட்கையில் மதக்குறிப்பு அடங்கியிருப்பதாக என் எண்ணம்.

பொதுவாகவே நியோரியலிஸ படங்கள் மனிதத்தையும் மனிதனின் மனதையும் அதன் நிலையிலேயே கொண்டாடுபவை. அந்த வகையில் இந்த திரைப்படம் நியோ ரியலிஸத்தின் கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது, ஆனால் சமுக அவலங்களையும் அரசியல் சார்பான பிரச்சனைகளையும் முன்னிறுத்தும் படமாக எனக்குத் தோன்றவில்லை. சமுகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதனின் வாழ்வாதார சிக்கல்களை பிரதிபலிப்பதாக அமைந்தாலும் – இந்த படம் வாழ்வாதார பிரச்சனைகளை முன்நிறுத்துவதன்று. அதையும் தாண்டிய மனிதனின் அதி முக்கியமான “வாழ்க்கை”-யையும் அதன் அதிநாதமான நம்பிக்கையும் பற்றியதாக அமைகிறது. தன் மகன் போரில் இறந்திருக்க மாட்டான் என்று தீவிரமாக நம்பும் தந்தை, தன் குடும்பத்தை காப்பாற்ற தேவைப்படும் பணத்தை இழப்பீடாக கோர மறுப்பதோடு தன் மகன் இழப்பீடு பெற்றுத் தருவதற்காக ராணுவத்தில் சேரவில்லை என்று கூறுகிறார். தனது பரம்பரையின் கௌரவத்தைப் பற்றியும் தன் ரத்தம் தன் மகனின் உடலில் ஓடுவதாகவும் சுயமரியாதையுடன் பெருமையாக பேசுகிறார்.

ஆர்பாட்டமில்லாத படம். வாத்திய இசை திரைப்படத்தில் எங்குமே இல்லை என்று தான் தோன்றுகிறது – இயற்கையான சத்தங்கள் மட்டும் தான் – இரவில் நாய் ஊளையிடுகிறது, காக்கை கரைகிறது, சேவல் கூவுகிறது, கிரிஸ் இல்லாத சைக்கிள் சத்தம் போடுகிறது, எம் 80 போன்ற ஒரு ஸ்கூட்டர் டபடபக்கிறது. படத்தில் யாருமே அதிர்ந்து பேசுவதில்லை. எல்லாவற்றையும் அமைதியோடே எதிர் கொள்கின்றனர். ரேயின் படங்களிலில் இது போன்ற ஒரு கனத்த அமைதி/ மௌனம் படம் முழுவதும் வருவதை கவனித்திருக்கிறேன் – இது நியோ ரியலிஸ தன்மையை வலிந்து கொடுப்பதற்காக ஏற்படுத்த பட்டதாகக் கூட சமயத்தில் தோன்றும். சகோதரன் இறக்கும் போது கூட மாரடித்துக் கொண்டெல்லாம் சகோதரிகள் ஓலமிடுவதில்லை – அவர்கள் அழுகை சற்று தொலைவிலிருந்து கேட்கும் சத்தமாகவே இருக்கிறது. பதேர் பாஞ்சாலியில் கூட துர்கா இறந்தவுடன் அவள் தாய் வெறித்த முகத்துடன் கண்ணீர் விடுவதோடு சரி. கதறுவதெல்லாம் கிடையாது. ஆனால் பை சைக்கிள் தீவ்ஸ்-இல் அந்தோனியோ புருனோவை (அந்தோனியோவின் மகன்) வெறுப்பில் அடிப்பது போன்ற காட்சி உண்டு.

சிறப்பான ஒரு சிறுகதைக்கு மிகச்சிறப்பான திரைவடிவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றிற்று. ஜோ அபேவிக்ரம குருட்டு கிழவனாக வருகிறார். அமைதியான பாவங்களால் மனிதர் மிரட்டுகிறார். இதே போன்ற எளிய மனிதர்களை முன்னிறுத்தும் முயற்சிகள் தமிழில் தற்போது தோன்றிக்கொண்டிருந்தாலும் அவை சினிமாத்தனங்கள் குறைந்து வாழ்கைக்கு அருகில் செல்ல வேண்டிய தேவை இன்னும் எஞ்சியிருக்கிறது. பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் இரண்டும் தற்போதையை முயற்சிகளைக் காட்டிலும் வாழ்க்கைக்கு அருகில் செல்லும் துணிவு கொண்டவையாக எனக்கு படுகிறது. இந்த படத்தைப் போல வருடத்திற்கு ஒரு படமேனும் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமா கலை வடிவமாக மாறும் சாத்தியக்கூறுகள் தோன்றும்.

One Reply to “உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்”

  1. சந்திரசேகர் கிருஷ்ணன் அவர்களுக்கு

    இது போன்ற அபூர்வமான படங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். இந்தப் படம் பத்மராஜன் எழுதிய் இயக்கிய ”மூணாம் பக்கம்” என்ற மலையாளப் படத்தினை நினைவு படுத்துவதாக உள்ளது. திலகனின் நடிப்பில் வெளி வந்த ஒரு அற்புதமான படம் அது. இந்த சினிமா அளவுக்கு ரியலிசம் உடையது அல்ல என்றாலும் கூட என்னுள் மிகுந்த தாக்கத்தை எழுப்பியது மூணாம் பக்கம். இந்த சினிமாவும் நிச்சயம் அதே உணர்வை எழுப்ப வல்லது என்பதை உங்கள் விமர்சனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

    அன்புடன்
    ச.திருமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *