உலகத்திரை – Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

turtles-can-flyஈராக் துருக்கி எல்லையில் இருக்கும் அகதிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இத்திரைப்படம். அமெரிக்க படையெடுப்பில் சதாம் ஹுசேனின் வீழ்ச்சி தொடங்கும் காலகட்டத்தில் நிகழ்கிறது இத்திரைப்படத்தின் களம். மலையோரத்தில் கூடாரம் அமைத்துக்கொண்டு வாழும் அகதிகளில் சாட்டிலைட் என்னும் ஒரு சிறுவனையும், அவன் காதல் கொள்ளும் அக்ரின் என்ற பெண்ணையும் சுற்றிச் சுழல்கிறது இத்திரைப்படம். அக்ரினிக்கு இரண்டு கைகளும் இல்லாத ஒரு அண்ணனும், கண் தெரியாத ஒரு மகனும் இருக்கிறார்கள். அக்ரின் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள். தனது மகன் தன் மகனல்ல என்று சொல்லிக்கொள்கிறாள். அதேசமயம் அவன் மீது பாசம் வைக்காமலும் அவளால் இருக்கமுடியவில்லை.

அந்தப் பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கண்ணி வெடிகளை எடுத்து விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். அக்ரினின் அண்ணன் தனது இரண்டு கைகளும் இல்லாத நிலையில், தான் வாயால் கண்ணி வெடிகளை அகற்றுகிறான். அமெரிக்கக் கண்ணி வெடிகள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. சாட்டிலைட் தனக்குத் தெரிந்த கொஞ்சம் ஆங்கிலத்தில் எல்லோருடனும் பேசுவதன்மூலம், எல்லா சிறுவர்களையும் தனக்குக் கீழ் வைத்துக்கொள்கிறான். வெளிநாட்டுக்காரன் என்று சொல்லி, உள்ளூர்க்காரனிடமே பேரம் பேசுகிறான். சந்தைக்குச் சென்று, அமெரிக்க கண்ணிவெடிகளை விற்று, துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறான். அமெரிக்கப் படையெடுப்பு தங்கள் குர்தீஷ் இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்று நம்புகிறான். அவனுக்கு சாட்டிலைட் நிறுவத் தெரியும் என்பதாலேயே அவனை எல்லோரும் சாட்டிலைட் என்று அழைக்கிறார்கள். உள்ளூர் தலைவர்கள் சதாம் ஹுசேனின் செய்தியை அறிந்துகொள்ள சாட்டிலைட்டைத்தான் நம்பியிருக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட சானலைப் பார்க்கக்கூடாது என்று சொல்லும் உள்ளூர் தலைவர்கள், சாட்டிலைட்டை செய்திக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்கிறார்கள்.

turtles_can_fly_02சாட்டிலைட்டுக்கு அக்ரினின் மேல் ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. அமெரிக்கப் படைகள் அங்குவந்து மாஸ்க் தரும்போது, அவளுக்கு ஒன்றைத் தருகிறான். குளத்தின் ஆழத்தில் உள்ள சிவப்பு மீனை அவளுக்காக எடுக்கச் செல்கிறான். அவளது வாழ்க்கையில் உள்ள சோகம் அவனுக்குத் தெரியவில்லை.

அக்ரின் எப்போதும் சோகமான முகத்துடனும், பதட்டமான கண்களுடனும் எப்போதும் சாவையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக நடமாடுகிறாள். ஒரு கட்டத்தில் தன் மகனைக் கட்டிப்போட்டுவிட்டு சாகச் செல்கிறாள். ஆனாலும் அவளால் சாகமுடியவில்லை. போரில் ராணுவ வீரர்களால் வன்புணரப்பட்டதன் விளைவாகப் பிறந்த மகனை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் திணறுகிறாள்.

turtles_can_fly_03அக்ரினின் அண்ணனுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை உள்ளுணர்வால் அறிந்துகொள்ள முடிகிறது. அவன் சொல்லும் விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அமெரிக்கப்படைகள் ஈராக்கைத் தாக்கப்போகின்றன என்று சொல்கிறான். அதன்படியே தாக்குதல் தொடங்குகிறது. ஒருநாள் இரவு தன் தங்கை அவளது மகனைக் கொல்வதுபோல் கனவு காண்கிறான். அதேபோல் அக்ரின் தன் மகனைக்கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்கிறாள்.

அதே நாளில் போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்கப் படைகள் ஊருக்குள் நுழைவதை அடுத்து தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்பும் குர்தீஷ் மக்கள், தங்கள் மலையைவிட்டு, நகருக்குள் செல்கிறார்கள். சாட்டிலைட்க்கு ஒருவித ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த அமெரிக்க படையின் வெற்றியும், சதாம் ஹுசேனின் தோல்வியும் நிகழ்ந்துவிட்டபோதும், அவனால் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. அக்ரினின் மரணமா அல்லது அமெரிக்க வெற்றிக்குப் பின்பும் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்கிற குழப்பமா என்று தெரியாமல் அவன் நடந்து செல்வதோடு படம் முடிவடைகிறது.

இத்திரைப்படம் எல்லையில் இருக்கும் போர் அகதிகளின் வாழ்க்கையை மிக அருகில் சென்று காண்பிக்கிறது. அமெரிக்கப் படையெடுப்பையும், சதாம் ஹுசைனின் சர்வாதிகரத்தின் வீழ்ச்சியையும் எதிர்பார்த்துக்கிடந்த குர்தீஷ் இன மக்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்கையை விவரிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் கண்ணி வெடியை அகற்றியே வாழ நேரும் அவலத்தை பிரசாரத் தொனியின்றி இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முக்கியமாகச் சொல்லவேண்டியது. பெரியவர்கள் குறைவாகவும், கண்ணி வெடியில் கைகால்களை இழந்த சிறுவர்கள் அதிகமும் வாழும் சூழலில், அவர்களே மீண்டும் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் இறங்கவேண்டியதாகிறது. அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக தினக்கூலிக்கு வேலைக்கும் செல்கிறார்கள்.

Bahman Ghobadi

Bahman Ghobadi

பெர்லின் திரைப்பட விழாவில் அமைதிக்கான விருதைப் பெற்ற இத்திரைப்படத்தில் வரும் சிறுவர்கள் எல்லோருமே நிஜமாகவே அகதிகள். அங்கிருக்கும் குர்தீஷ் இனமக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்த இயக்குநர் Bahman Ghobadi அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்து, அதிலிருந்து படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறார். இயக்குநரும் குர்தீஷ் இனத்தைச் சார்ந்தவரே என்பதால், இத்திரைப்படம் ஒரு இனத்தின் ஒரு சாராரின் குரலாகவே மாறிவிடுகிறது. இத்திரைப்படம் அமெரிக்கப் படையெடுப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்கிற விமர்சனமும் உண்டு. அமெரிக்கப்படைகளின் வரவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் நிலை, அமெரிக்கப் படைகளின் வெற்றிக்குப் பின்பு என்னானது என்பதைப் பற்றி இயக்குநர் ஒன்றுமே சொல்லவில்லை என்பது அக்குற்றச்சாட்டின் சாராம்சம். அமெரிக்கப் படைகள் சதாம் ஹுசைனின் சிலைகளையெல்லாம் தகர்க்கின்றன. சதாம் ஹுசைனின் உடைந்த கையை எடுத்துக்கொண்டு வரும் சிறுவனும் சாட்டிலைட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகளில், குர்தீஷ் இனமக்களின் குரல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்கப்படைகளோடு சேர்ந்து சிறுவர்கள் தடைசெய்யப்பட்ட சானல்களைப் பார்கிறார்கள் என்கிறான் ஒரு சிறுவன். அவன் குரலில் தெரிவது மகிழ்ச்சியா ஏக்கமா வருத்தமா என்பது அவனுக்கே தெரியவில்லை. இந்த பாரம்பரிய மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அமெரிக்கப் படைகளில் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டு, புஷ்ஷைக்கூட மிஸ்டர் புஷ் என்று அழைக்கும் சாட்டிலைட்டுக்கும், சதாம் ஹுசைனின் கையைக் காணும்போது வெறும் கலக்கமே மிஞ்சியிருக்கிறது. அக்கலக்கத்துக்கும் காரணம் குழப்பமே என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு சிறுவன் இனி தான் நகரத்துக்குச் செல்லப்போவதாகச் சொல்லிச் சொல்கிறான். சர்வாதிகாரம் தகர்ந்துவிட்டதன் காரணமாகவே அவன் நகருக்குச் செல்வதாகக் காட்டப்படுகிறது. இத்தனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த அமெரிக்கப்படைகளைப் பார்க்க மனமில்லாமல் சாட்டிலைட் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடக்கிறான். அதே குழப்ப நிலையில் திரைப்படம் முடிவடைகிறது. ஒருவகையில் இந்த அமெரிக்கப் படைகளில் வெற்றியோடு ஈராக்கில் மறுமலர்ச்சி வந்துவிட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்பதையே இயக்குநர் கூறவருவதாகத் தோன்றுகிறது. அதேசமயம் சதாம் ஹுசைனின் வீழ்ச்சியையும் அம்மக்களில் பலர் எதிர்பார்த்துக்கிடந்தார்கள் என்பதையும் அவர் சொல்லிவிடுகிறார்.

இப்படத்தில் மனதை பதறச்செய்யும் சில காட்சிகள் உள்ளன. போரில் அகதிகளாக்கப்படும் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகள் ஒருபுறம் என்றால், போரில் இப்படி சீரழிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை இன்னொருபுறம் காண்பித்து நம்மை நெகிழச் செய்துவிடுகிறார் இயக்குநர். எப்போதும் தன் சாவையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அக்ரின் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, அவளது கண் தெரியாத மகன், அவளைத் தேடி அலைகிறான். அவனது குரலைக் கேட்டுக்கொண்டிருக்கும் அக்ரின் அப்படியே அமர்ந்திருக்க, அந்தப் பையன் எங்கெல்லாமோ அலைந்து அவளைத் தேடி வந்தடைகிறான். தான் இறந்துவிட்டால், இவன் இப்படித்தான் அலையவேண்டியிருக்குமோ என்கிற அவளின் தவிப்பு அவளது கண்ணிலேயே தெரிகிறது. தான் போய்விட்டால் தன் மகனை யாராவது காப்பாற்றுவார்கள் என்று சொன்னாலும், அவ்னை நினைத்து அவள் அழுகிறாள். இந்த இரண்டு நிலைகளுக்குள் அக்ரின் கொள்ளும் தவிப்பு அபாரமாக வெளிப்பட்டுள்ளது. கண் தெரியாத சிறுவன் கண்ணி வெடியை மிதிக்க இருக்கும் காட்சியும் நம்மை பதறச் செய்துவிடுகிறது. கண்ணி வெடிகளை எடுத்துக்கொண்டு, சந்தைக்குச் சென்று சிறுவர்கள் துப்பாக்கி வாங்கும் காட்சிகளில், போர் அகதிகளின் சிறுவர்களின் நிலையை காட்டிவிடுகிறார் இயக்குநர். சிறுவர்களின் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரச் சொல்லி வாதிடுகிறார். ஆனால் சாட்டிலைட்டோ அவர்களுக்கு வேண்டியது ஆயுதமே என்று சொல்லி வாதிடுகிறான். ஒரு கட்டத்தில் ஆசிரியர் சாட்டிலைட்டின் வாதத்தை ஏற்றுக்கொள்கிறார். இப்படி படம் நெடுக போர் வன்முறையின் பல்வேறு கோர முகங்களை காட்டிச் செல்கிறது இத்திரைப்படம்.

சிறுவர்களின் வாழ்க்கையை அவர்களது கோணத்தில் காட்டுவதில், உலக அளவில் ஈரானியத் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈரானியத் திரைப்படங்களில் இருந்து, தனது படங்களை வேறுபட்டதாக, குர்திஸ்தான் மக்களின் வாழ்க்கையாகக் கூறும் இயக்குநர், அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.

Tags: , , , ,

 

6 மறுமொழிகள் உலகத்திரை – Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

 1. Bharathaputhran on June 29, 2009 at 2:21 pm

  நன்றாக இருந்தது உங்கள் விமர்சனம். ஈரானிய திரைப்படங்கள் சர்வதேச அளவில் எப்போதும் கவனத்தைப் பெறுகின்றது. குர்திஸ்தான் என்ற கனவு எப்போது நனவாகுமோ தெரியாது.. ஆனால் அதை சதாமின் அடக்குமுறையிலும் அவர்கள் உயிரோடு வைத்திருந்தது பெரிய விஷயம்..

 2. ஜடாயு on June 29, 2009 at 5:59 pm

  அருமையான விமர்சனம் ஹரன்பிரசன்னா. படத்தின் தலைப்பும் மிகவும் கற்பனையைத் தூண்டுவதாக உள்ளது.

  // ஈரானியத் திரைப்படங்களில் இருந்து, தனது படங்களை வேறுபட்டதாக, குர்திஸ்தான் மக்களின் வாழ்க்கையாகக் கூறும் இயக்குநர், அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும். //

  உண்மை. போரின், புலம்பெயர்வின், இன அழிப்பின் சோகங்களைப் பதிவு செய்யும் இத்தகைய இயக்குனர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

  ஆனால் நம் நாட்டில் நந்திதா தாஸ் போன்ற இயக்குனர்கள் இதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஏற்படும் இழப்புகளையே பெரிதாகக் காட்டி படம் பண்ணுகிறார்கள். அதற்கு பாகிஸ்தான் அரசு விருதும் கொடுக்கிறது.

  காஷ்மீரி இந்துக்கள் தங்கள் தாயகத்தை இழந்தது, இலங்கைத் தமிழர்களின் போர் அவலங்கள், வங்கதேச இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் இவற்றைப் பற்றி உலக அளவில் பேசப் படும் படங்கள் ஏன் எடுக்கப் படவில்லை? நம் இயக்குனர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்விகள் இவை.

 3. களிமிகு கணபதி on June 30, 2009 at 3:42 am

  நல்ல விமரிசனம்.

  உலகில் உள்ள அனைத்து அகதி முகாம்களையும் ஆபிரகாமிய மதங்களில் மூன்று மதங்களே உருவாக்கியுள்ளன. உருவாக்கிவருகின்றன. அந்த மூன்று மதங்கள் பின்வருமாறு:

  1. கிறுத்த்துவம்

  2. இஸ்லாம்

  3. கம்யூனிஸம்

  எதனால் வேறு எந்தக் கொள்கைகளும் இந்த அளவு கொடூரங்களை நடத்துவதில்லை?

 4. வினோத் ராஜன் on June 30, 2009 at 3:55 pm

  கம்யூனிஸம் எப்போது மதமானது 😉 ?

 5. களிமிகு கணபதி on June 30, 2009 at 8:01 pm

  //கம்யூனிஸம் எப்போது மதமானது 😉 ?//

  எப்போது நம்பிக்கையாக அது மாறியதோ அப்போதே அது மதமாகிவிட்டது.

  மற்ற ஆபிரகாமிய மதங்களைப் போல ஒரே புத்தகம், ஒரே உண்மை, ஒரே நபி கொண்ட கோட்பாடு கம்யூனிசம்.

  ஒரு மதத்திற்கான அனைத்து அம்சங்களையும் நாம் அதில் காணலாம்.

 6. களிமிகு கணபதி on July 1, 2009 at 3:48 am

  இந்தியாவில் குண்டுவெடிப்புகளாலும், தீவிரவாதத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் குழந்தைகளின், சிறுவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டையும்விட அதிகம். இருப்பினும், அவர்களது வாழ்க்கை கொடூரங்கள் குறித்து ஏன் ஒரு படம்கூட வரவில்லை?

  அமெரிக்கா உதவி இல்லாததாலா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*