முகப்பு » புத்தகம், வரலாறு

ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்


நரசய்யா

நரசய்யா

லவாய் என்ற பழம் பெயரின் தலைப்பில் நரசய்யா மதுரை மாநகரத்தின் கதையைச் சொல்கிறார். கதையைத் தொடங்கும் முதல் பக்கத்திலேயே, முதல் வரியிலேயே “மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்துள்ளன, இவற்றின் மூலத்தைத் தெரிந்து கொள்வது கடினமாகும்” என்று மிகச் சரியாகவே சொல்லித் தான் தொடங்குகிறார். நாம் தமிழ் படிக்கத் தொடங்கும் போதே, தமிழின், தமிழ் இலக்கியத்தின் தொடக்கமாக மூன்று சங்கங்களோடு தான் தொடங்குகிறோம். அவற்றில் கடைச் சங்கமாவது கற்பனையில்லை என்பதற்கு தமிழ் இலக்கியம் தொடங்கும் சங்க நூற்கள் சாட்சியம். மதுரை சங்கங்களோடும் சங்கங்களை ஆதரித்த பாண்டிய மன்னர்களோடும் தொடர்பு கொண்டது. மதுரை கபாடபுரம் என்றும், ஆலவாய் என்றும் நமக்குப் பழக்கமான பெயர்களில் அறியப்பட்டது. இதன் சரித்திரத்தை மதுரையைச் சுற்றியுள்ள தமிழ் ப்ராஹ்மி கல்வெட்டுக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்லும்.

வால்மீகி ராமாயணமும், வியாசபாரதமும் கூட பாண்டியர்களைப் பற்றியும் கபாடபுரத்தைப் பற்றியும் பேசுகின்றன. இன்னமும், அத்தொன்மையில் மதுரையைப் பற்றி பெரிப்ளஸ் என்னும் நூலும், ப்ளினி, மெகஸ்தனீஸ் போன்றாரும் பதிவு செய்யக் காண்கிறோம். ஆக, இத்தகைய தொன்மையிலிருந்து இன்று வரை, 2009 வரை என்றே சொல்வோமே, மதுரை தமிழர் வாழ்வில் மையமான, செல்வாக்கான இடம் பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை ஒரு தொடர்ந்த சரித்திரம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகம் நீளும் ஒரு சரித்திரம் கொண்டுள்ளது மதுரையின் சிறப்பு. இதைச் சுற்றி, புராணங்கள், சரித்திரங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், கோயில்கள், சிற்ப வளங்கள், நீளும் மன்னர் வம்சாவளிகள் என இத்தனை சிறப்புக்கள் கொண்ட ஒரு நகரம் என வேறு எதைச் சொல்லமுடியும்?

தமிழும் இலக்கியமும் வளர்த்த சங்கங்கள் மதுரையில் மையம் கொண்டதால், சங்க காலத்தில் மதுரையைத் தம் பெயரின் முன் வைத்து தம்மை அடையாளம் காட்டிக்கொண்டனர் எண்ணற்ற புலவர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், மதுரை ஈழத்து பூதந்தேவனார், மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் எல்லாம் நமக்குத் தெரியவந்த பழக்கமான பெயர்கள். ஆனால் இது போல் மதுரை தமிழ் நாயனார், மதுரைக் கூத்தனார், மதுரைக் காடாத்தனார், என எண்ணற்ற புலவர் வரிசையைக் காணலாம். இது மதுரையின், தமிழின் ஒரு சிறப்புக் கூறு. சம்பந்தர் சமணர்களோடு வாதிட்டு வெற்றி கொண்டது இம்மதுரையில் தான். மாணிக்கவாசகர் அமைச்சராக விருந்ததும் இங்குதான் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தான்.

மதுரையைச் சிறப்பிக்கும், அதை மையமாகக் கொண்டுள்ள இலக்கியங்கள் என்றால், சங்கப் பாடல்கள், புறநானூறு, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, பரிபாடல் திருமுருகாற்றுப்படை என்றெல்லாம் தொடங்கி அவற்றைக் கடந்து, திருவிளையாடற்புராணம், சுந்தர பாண்டியம் என்றெல்லாமும் கடந்து மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் என எத்தனையோ நூற்றாண்டுகள் பரந்து கிடப்பவை.

சரித்திரமோ, முற்காலப் பாண்டியரில் தெரியவரும் முதல் பெயரான ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என கி.பி.50-75 தொடங்கி பிற்காலப் பாண்டியர், சோழர், பின்னர் விஜயநகர மன்னர்கள், பின் நாயக்கர்கள், நவாப்புகள், தஞ்சை மன்னர்கள், ஆங்கிலேயர்களை எல்லாம் கடந்து இன்று கி.பி. 2009 வருடத்திய மு.க.அழகிரி வரை பட்டியல் நீளும். எத்தனை சமண குகைகள், படுக்கைகள் மதுரையைச் சுற்றி! எத்தனை கல்வெட்டுகள் தமிழ் ப்ராமியிலும், வட்டெழுத்திலும்!, எத்தனை செப்பேடுகள்!. கோவில்களில் திருப்பெருங்குன்றம், அழகர் மலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் எல்லாமே 6-நூற்றாண்டிலிருந்து சங்கப்பாடல்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் தேவாரத்திலும் பாடப் பெற்றவை. எதைத் தொட்டாலும் ஒரு இடையறா தொடர்ச்சி.

மதுரை மீனாட்சி கோயில்

மதுரை மீனாட்சி கோயில்

இக்கோயில்கள் இன்றும் வாழும் வழிபாட்டு ஸ்தலங்கள். தொல்பொருள் துறையின் போர்டு ஒன்று கடமைக்குத் தொங்கும், நம் அலட்சியத்தில் அழிந்து வரும் புராதனங்கள் இல்லை அவை இன்று 2009-ல் நாம் மீனாட்சி அம்மன் கோயிலின் உட்சென்று சன்னதி அடைந்து வணங்கி நின்றால் அந்த மீனாட்சி அம்மன், 2000 ஆண்டுகளுக்கு முந்திய அர்த்த சாஸ்திரம் “நகரத்தின் மத்தியில் கோயில் கொண்டிருக்கும் மதுரைத் தெய்வம்” என்று சொல்லும் மீனாட்சி அம்மன் தான். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்து விட்டன! நரசய்யாவே ஒரு இடத்தில் சொல்கிறார்: “கோவிலின் ஆடி வீதியை ஒரு தடவை சுற்றி வந்தோமானால் பல யுகங்களைக் கடந்து வந்த பிரமிப்பு ஏற்படும்…… அத்துடன் சரித்திரத்துப் பக்கங்களையும் நமக்கு அறிமுகப் படுத்தி வைக்கின்றன”

இத்தனை பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் இடையில், இன்னும் ஒரு இடையறாத சரித்திர பதிவையும் மதுரையைப் பற்றிச் சொல்லவேண்டும். இதுவும் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருவது. இஸ்லாமிய கொள்ளை, ஆக்கிரமிப்பு, வன்முறை, பலவந்த மதமாற்றம். இதன் தொடக்கம் மதுரையைப் பொறுத்த வரை மாலிக் கா•பூர் மதுரையைக் கொள்ளை அடித்துச் சென்ற கி.பி. 1311. எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது, அரச வம்சத்தில் நிகழ்ந்த சகோதரப் பொறாமைக் காய்ச்சல் மூத்தவன் வீரபாண்டியனை வீழ்த்த, இளையவன் சுந்தரபாண்டியன் மாலிக் க•பூரை உதவிக்கு அழைக்கிறான். வேறென்ன வேண்டும்! இதுவே சரித்திரம் முழுதும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது. மதுரை சூறையாடப்பட்டது ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம். இதன் நிரூபணத்தை இன்றைய தமிழ் சரித்திரமே நமக்குச் சொல்லும்.

மதுரை பெற்றுள்ளது போன்ற ஒரு நீண்ட சரித்திரம் வேறு எந்த வாழும் நகரத்திற்கு உண்டு? தில்லிக்கு உண்டு. இந்திர ப்ரஸ்தம் என்ற இதிகாசப் பெயரிலிருந்து தொடங்கி இன்று வரை நீளும்தான் அதன் சரித்திரம். ஆனால் அதிலும் சில இடைவெளிகள். வாரணாசிக்கு இல்லை. இன்றைய வாரணாசியும் விஸ்வநாதர் கோயிலும் மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றம் முருகனும் போல தொன்மை கொண்டவையல்ல. பெயரைத் தவிர. பலமுறை இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது அந்தக் கோயில் முஸ்லீம் அரசர்களால், முன்னதன் அடையாளம் தெரியாது.

உலகப் பரப்பிலேயே ரோம், ஏதென்ஸ், ஜெருசலேம், பாக்தாத் பாஸ்ரா என்று ஒரு சில பெயர்கள் தான் மனதில் நிழலாடுகின்றன. நீண்ட சரித்திர பதிவும் உணர்வும் கொண்ட ஒரு பழமையான நாகரீகம் என்னும் சீனாவில் கூட பெய்ஜிங்கின் தொன்மை ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு மேல் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் மதுரை பற்றிச் சொல்லமுடிவது போல, இன்னமும் வாழும் காஞ்சீபுரத்தின், திருவரங்கம்-திருச்சி என்ற இரட்டை நகரத்தின் சரித்திரத்தையும் ஆறாம், எட்டாம் நூற்றாண்டுகளிலிருந்து தொடங்கலாம்.. திண்டுக்கல், வேலூர் ஒரு முன்னூறு வருட சரித்திரம் எழுதப் படக்கூடியது தான்.

ஒரு சர்வ தேச நாடக விழாவில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நடிகையும் இயக்குனருமான ஒருவர் சொன்னார். “எங்கள் நாட்டின் ஒவ்வொரு கல்லும் ஒரு நீண்ட சரித்திரம் சொல்லும்,” என்று. சில வருடங்களுக்கு முன் கள்ளிக்கோட்டைக்குப் போயிருந்தேன். கடைத்தெருவில் ஓரிடத்தில் எஸ்.கே.பொற்றெக்காடின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. “எஸ்.கே. பொற்றெக்காட் அடிக்கடி நடமாடிய தெரு இது. அதன் நினைவாகத்தான் இங்கு அவர் சிலை” என்றார் எனக்கு ஊரைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருந்த அந்த நண்பர். வியப்பும் மகிழ்ச்சியுமாக அவரைப் பார்த்தேன். அவர் தொடர்ந்து, “ஆனால் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரும் ஒரு சரித்திரம் சொல்லும். எங்களுக்கு அது இல்லை” என்றார். இல்லாது போன வருத்தம் அவருக்கு. இருந்தும் அதன் பெருமை அறியாத அலட்சியத்தில் அதை இழந்து கொண்டிருக்கும் வருத்தம் எனக்கு.

இப்புத்தகத்தை நரசய்யா எழுத நேர்ந்தது, முன்னர் அவர் எழுதிய கடல் வழி வணிகம், மதராஸ் பட்டினம் போன்ற நூல்கள் எழுதத் தூண்டியதும் இச்சரித்திர உணர்வு தான். இவை எதிலும் அவர் ஏதும் ஆராய்ச்சி செய்து இது வரை காணாத செய்திகள் எதையும் வெளிக்கொணரவில்லை. அதுவல்ல அவர் காரியம். இப்புத்தகங்களில் அவர் கொண்டு சேர்த்துள்ளது எல்லா சரித்திரச் செய்திகளும் சான்றுகளும் ஏற்கனவே எண்ணற்ற இடங்களில் சிதறிக்கிடப்பவை தான். பல்வேறு கட்டங்களில், மெகஸ்தனீஸ், இபின் படூடா போன்ற யாத்திரிகர்களின் பிரயாண நூல்களில், சங்க இலக்கியங்களில், கல்வெட்டுக்களில், அரசாங்க கெஜட்டீயர்களில், செப்பேடுகளில், சாசனங்களில், பல்வேறு நூலகங்களில் இலக்கியங்களில், ஹாலாஸ்ய மகாத்மியம் மற்றும் அதன் தமிழாக்கமான பல்வேறு திருவிளையாடற் புராணங்களில், ஸ்தானிகர், தல வரலாறுகளில், சங்க கால நாணயங்களில் இப்படி பல மூல ஆதாரங்களிலிருந்து கிடைப்பவற்றையெல்லாம் தேடிச் சென்று ஒன்று சேர்த்து அவற்றை சாதாரண வாசகனுக்கு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய காரியம் தான். அதற்கு உழைப்பு மாத்திரம் இருந்தால் போதாது. சரித்திர உணர்வின் உந்துதல் வேண்டும். எங்கு எதைத் தேடுவது என்ற தகவல் அறிவும் வேண்டும்.

மதுரையின் கதை பல்வேறு கட்டங்களாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப இரண்டு நூற்றாண்டுகளிலான சங்க காலம், பின்னர் இருண்ட காலம் எனச் சொல்லப்படும் களப்பிரர் காலம்,- இது சமணர்களும் பௌத்தர்களும் செல்வாக்கு பெற்றிருந்த காலம், அதைத் தொடர்ந்த பாண்டியர் காலம் கி.பி. 550 லிருந்து கி.பி.966 வரை. பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மதுரை சோழ மன்னர்களில் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சோழப் பேரரசின் பொற்காலம். அவ்வப்போது சிங்களவர் துணையுடன் பாண்டிய மன்னர்கள் போர் தொடுத்தாலும், சோழப் பேரரசின் கீழேயே அவர்கள் ஆளுநர்களாகக்தான் இருக்க வேண்டி வந்தது. ராஜராஜன் காலத்தின் இலங்கையும் சோழர் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. ஆனால் கி.பி.1160 லிருந்து சுமார் 200 வருட காலம் பாண்டிய வம்சம் மதுரையை மீட்டது. இந்த ஆட்சி மாற்றங்கள் நாட்டின் நாசத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லவில்லை. சோழரோ பாண்டியரோ, கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் மான்யங்களைப் பற்றியும் கட்டிட விரிவாக்கங்களைப் பற்றியுமே பேசுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கட்டுவித்தவன் முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன். ஆனால் பின் வந்த பாண்டியர்கள் காலத்தில், பராமரிப்பின்றி திருப்பணியின்றி சீரழிகின்றன. அரச குடும்ப சகோதரச் சண்டையில் வருந்தி அழைக்கப்பட்ட மாலிக் க•பூரின்கொள்ளை தொடங்குகிறது (1311 ஏப்ரல் 13 செவ்வாய்கிழமை). கோயில் சன்னதியைத் தவிர மற்றவையெல்லாம் இடிபடுகின்றன. 1317-ல் ஹாஸன் என்ற ஹிந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய குஸ்ரு கான் மறுபடியும் மதுரையைக் கொள்ளைஅடிக்கிறான்.

1372-ல் தான் மதுரை கம்பண உடையார் என்பவர் கோவிலை புதுப்பிக்கிறார். மதுரை 1370 வரை இஸ்லாமிய கொள்ளை-கொடூர ஆட்சியோ தப்பிக்க முடிவதில்லை. விஜய் நகர் மன்னர்கள் மதுரையைக் கைப்பற்றி தம் ஆட்சிக்கீழ் கொணரும் வரை. விஜயநகர் மன்னர் / நாயக்க மன்னர் காலத்தில் மதுரை நகரும் கோவிலும் விரிவும் வளமும் பெறுகின்றன. முதலில் விஜய நகர மன்னர்களின் ஆட்சியின் கீழும் பின்னர் அவர்கள் மேலாண்மையை உதறி சுதந்திரமாகவும் நாயக்கர்கள் ஆட்சி 1732-1736-ன் மீனாட்சி என்னும் அரசியின் காலம் வரை நீள்கிறது. திருமலை நாயக்கர் காலத்தில் நிறைய கட்டிடப் பணிகள் நடைபெறுகின்றன. சோழர் காலத்திற்குப் பிறகு இதுவே மதுரையின் பொற்காலமும் ஆகும். கடைசிக் கால நாயக்கர்கள் இஸ்லாமியர்களின் தொல்லையிலிருந்து தப்ப அவர்களுக்கு அவ்வப்போது கொடையும் கப்பமும் அளித்து வந்தனர். பெயர் பெற்ற மங்கம்மாள் காலத்தும் அப்படித்தான்.

உறவினர் சதியால் நாடு நாசமடைவதன் கொடூரம் மீனாட்சி காலத்தில் நடந்தது. மீனாட்சி தத்தெடுத்த பிள்ளையின் தகப்பனே ஆர்காட் நவாப் சந்தா சாகிப்பை மதுரையைப் படையெடுக்க அழைத்தான். ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு தான் படையெடுப்பதில்லை என்று மீனாட்சிக்கு குரான் மீது கைவைத்து சத்தியம் செய்தான். ஆனால் சந்தா சாஹிப் தன்னை அழைத்த பங்காரு திருமலையையும் கொன்று மீனாட்சியையும் சிறை பிடித்தான். மீனாட்சி விஷம் உண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டாள். சந்தா சாகிப்பின் முடிவும் இப்படிக் கொடூரமாகத் தான் முடிகிறது. காரணம், குரான் மீது கைது பொய் சத்தியம் செய்தவனுக்கு உரிய முடிவுதான் என்று முஸ்லீம்களே சொன்னார்களாம். இப்படி நாயக்கர் வம்சமும் முடிவுக்கு வந்தது. இடையில் ஹைதர் அலி, திப்பு சுலதான் என்றெலாம் சரித்திரம் கடந்து 1801-ம் வருடம் மதுரை ஆங்கிலேயருக்கு கை மாறியது.

ஆங்கிலேயர் வசம் மதுரையோ கோவிலோ சீரழியவில்லை. நாசமடைந்தது சீரமைக்கப்பட்டது. விரிவாக்கப்பட்டது. அந்த சரித்திரம் நமக்குத் தெரிந்தது தான். மதத்தின் பெயரில் நாசவேலைகள், கொலை கொள்ளை என்பது அவர்கள் கொள்கை அல்ல.

நரசய்யா தம் மதுரையின் இரண்டாயிரம் ஆண்டு கதையை வெறும் ஆண்ட மன்னர்களின் பட்டியலாகச் சொல்லவில்லை. பாண்டிய சோழ, நாயக்கர் வம்சங்களின் கதையும் அல்ல. இந்த அணிவகுப்பின் சரித்திரத்தோடு மதுரையின் கதையே மையமாகிறது. புற மாற்றங்கள் மதுரையையும் அதன் சுற்றையும் பாதித்து அழித்த அல்லது வளப்படுத்திய சிறப்புச் செய்த கதையையும் சொல்லிச் செல்கிறார். சுருக்கமாக, எளிமையாக.

இந்த நீண்ட கதையில் நான் இதற்கு முன் அறிந்திராதவற்றில், மிகவும் சுவாரஸ்யமானவை சிலவற்றைச் சொல்லத் தோன்றுகிறது எனக்கு. அவற்றில் சிலவற்றைச் சொல்வது நான் எழுதியவற்றைப் படிப்பவர்கள், இத்தோடு நில்லாது நரசய்யாவின் புத்தகத்தையும் படிக்கத் தூண்டும் என நினைக்கிறேன்.

கி.பி.1160 லிருந்து கி.பி.1360 வரையிலான 200 வருடங்களில் முப்பது பாண்டிய மன்னர்கள், ஜடாவர்மன், விக்கிரம பாண்டியன், சுந்தர பாண்டியன் என்ற பெயர் குழப்பம் கொடுக்கும் மன்னர் கால நிகழ்வுகளையும் மன்னர்களையும் சரியாக அடையாளம் காண உதவுவது பஞ்சாங்க குறிப்புகள் தாம் என்று சொல்கிறார் ஆய்வாளர் சேதுராமன்.

(அனேகமாக எல்லாக் கல்வெட்டுக்களும் சாசனங்களும் இப்படித்தான் எழுதப்படுகின்றன.(உ-ம்)” வாட்டை கற்கடக நாயிற்றி வெள்ளிக்கிழமை பெற்ற ஆயிலெ(ய)த்தினான்று சூ(ற்)றிய கிரண வேளை(ள)க் (கு)றை கிராணம் பற்றின அன்று முதலாக இக்கல(ம்)….

எல்லா மெய்கீர்த்திகளுக்கும் ஒரு முத்திரை இருக்கும் தீக்ஷிதர் கிருதிக்கு ‘குரு குஹ” என்றிருப்பது போல. ‘பூதல வனிதை” என்று தொடங்கினால் அது சடையவர்மன் குலசேகரன் (1237-1266) மெய்கீர்த்தி. ‘பூவின் கிழத்தி’ என்று தொடங்கினால் அது சடைய வர்மன் குலசேகரன் (1190-1218) மெய்கீர்த்தி. பூதல மடந்தை என்று தொடங்கினால் அது சடைய வர்மன் குலசேகரன் (1162-1177) மெய்கீர்த்தி. இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் போல் இவர்களுக்கும் பெண் பெயர்களில் ஒரு மோகம் போலும்.

இதற்கு மாறாக ஒரு கல்வெட்டில் ஸ்ரீரங்க பெருமாளே தன் கைஒப்பத்தைக் கொடுத்துள்ளார்.

“…..கோயில் ஸ்ரீரங்க விமான மதலான பலவிமானங்களும் சுந்தர பாண்டியன் திருமதிலும் கோபுரமும் பொன்வேந்து நமக்குப் பூண ஒருபடியாக ஆபரணங்களும் ஏறச் சிவிகையும் பல பொற் பணிகளும் செய்கையாலே……

இக்கல்வெட்டில் நிறைய நமக்கு-கள் வருகின்றன. இரண்டு வரிகள் நான் தந்தது உதாரணத்திற்கு.

பழங்காலத்தில் ஜேஷ்டா தேவிக்கு (மூதேவிக்கு) கோயில்கள் இருந்தன. திருப்பரங்குன்ற குகையில் ஜேஷ்டைக்கு கோயில் உண்டு. பூஜைகள் இப்போது இல்லையென்றாலும். கி.பி. 11-12 நூற்றாண்டுகளில் ஜேஷ்டா தேவி மூதேவியாக வணங்கப்படும் தெய்வ அந்தஸ்தை இழந்து விடுகிறாள்.

மாலிக் க•பூர் செய்த நாசத்தில் மீனாட்சி கோவிலின் 14 கோபுரங்கள் கொண்ட மதிற்சுவர்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

மூக்கறுத்தல் என்ற சொல் தமிழில் ஒரு அணி என்றே நினைத்தேன் இது வரை. அது தவறு. “(மூக்கை அறுப்பது அக்காலத்தில் எதிரிக்குத் தரப்படும் அவமானச் சின்னம்). “மைசூர் அரசன் சிறையிலிடப்பட்டவர்களின் மூக்குகளை அறுக்கச் சொன்னான். படைவீரர்களோ, வழியில் கண்ட பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோர் மூக்குகளையும் காட்டு மிராண்டித் தனமாக அறுத்து அறுக்கப்பட்ட மூக்குகளை சாக்குகளில் கட்டி அனுப்பிவிட்டனர்.” இப்படியான மூக்கறுப்பு பல சண்டைகளில் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

“திருமலை நாயக்கரின் செப்பேடு, “கல்லும் காவேரியும் புல்லும் பூமியுள்ளவரை புத்திர புத்திர பாரம்பரியமாய் அனுபவித்து….”என்று சொல்கிறது. மதுரை ஆண்ட திருமலை நாயக்கர், நிரந்தத்திற்கு அடையாளமாக வைகையைச் சொல்லவில்லை. காவேரியைச் சொல்கிறார்.

பிரொயென்சா பாதிரி 1665-ம் ஆண்டு பால் பாதிரிக்கு எழுதிய கடிதத்திலிருந்து: “இந்த முஸ்லீம் கேப்டன் சுற்றியிருந்த இடங்களைச் சூறையாடி, மக்களை ஈவிரக்கமின்றி கொல்ல ஆரம்பித்தான். தம் பெண்டிரும் குழந்தைகளும் இஸ்லாமிய வன்முறைக்கு ஆளாகமல் இருக்கவேண்டி பெரியமனிதர்கள் பலரும் தம் மனைவி மக்களைக் கொன்று விட்டு அதே கத்தியால் தம் உயிரை மாய்த்துக்கொண்டனர்.”

1704-1705-ம் ஆண்டு சௌராஷ்டிரர்கள் பூணூல் அணியலாமா என்ற வழக்கு ராணி மங்கம்மாள் முன் வந்த போது, அவர்களும் வடநாட்டிலிருந்து வந்த அந்தணர்களே ஆகையால் அவர்கள் பூணூல் அணியலாம் என்று கவிதார்க்க சிம்மம், தண்டலம் வெங்கட கிருஷ்ணய்யங்கார் போன்றோர் அடங்கிய அறிஞர் குழு தீர்மானிக்க, ராணி மங்கம்மாள் அவ்வாறே ஆணை இட்டாள். சாசனம் தெலுங்கில் உள்ளது.

சந்தா சாஹிப் திருச்சியின் பெயரை ஹஸ்ரத் நாதர் வாலி என்னும் இஸ்லாமிய சாதுவின் நினைவில் நாதர் நகர் என்று மாற்றினான்.

வாலாஜா நவாப் இராமநாதபுரத்தை அலி நகர் என்றும் சிவகங்கையை ஹ¤ஸைன் நகர் என்றும் வழங்குமாறு செய்தான்.

பனையூரில் வெள்ளாள ஜாதியில் பிறந்த மருதநாயகம், இஸ்லாமியனாக மாறி முகம்மது யூசூ•ப் ஆனான். சிறந்த தளபதியாக கான் சாகிப் என்று பெயர் பெற்றான். “..அப்போது மதுரையில் கோட்டை மிகப் பெரியதாய் இருந்தது. இரு மதில் சுவர்களைக் கொண்ட அந்தக் கோட்டை 22 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது..”….கான் சாஹிப் மதுரைக் கோட்டையை சீர்படுத்தி காவலை ஒழுங்கு செய்தான். இந்துக்களின் உதவி வேண்டி கோவில் பூஜை முறைகளையும் புதுப்பித்தான். கோவிலின் முன்னர் இஸ்லாமியர் தொழுமிடம் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. அதையும் நீக்கியதால் கான் சாஹிபின் மதிப்பு இந்துக்களிடையில் உயர்ந்தது.”

1755-ம் ஆண்டு கர்னல் ஹெரான் திருமோகூருக்கு படையுடன் சென்று அங்குள்ள கோவிலைச் சிதைத்து, சூறையாடி, மக்களுக்கு இன்னல் பல விளைவித்தார். இதைப் பொறுக்காத கள்ளர்கள் பழிவாங்க, ஆங்கிலேயர் சூறையாடிய பொருட்களை ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு திருச்சிக்குத் திரும்புகையில் அவர்களைத் தாக்கி திருடிச் சென்ற சிலைகளையும் பொருட்களையும் கோவிலுக்கு மீட்டனர். (18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் பாண்டி நாட்டில் ஒட்டகங்களை சுமை தூக்கும் வாகனங்களாக்குகின்றர்! ஆச்சரியம் தான்.)

1812-ல் ரௌஸ் பீட்டர் (ரௌஸ் பாண்டியன் என்றும் பெயர் பெற்றவர்) மதுரை கலெக்டர் ஆனார். அவரை ஒரு மழைநாளில் ஒரு சிறுமி இடியால் நாசமாகவிருந்த வீட்டிலிருந்து கைபிடித்து அழைத்து வெளியேற்றி உயிர் காப்பாற்றியதாக “பீட்டர் பாண்டியன் அம்மானை” சொல்கிறது. அச்சிறுமி மீனாட்சி அம்மனே என்று நம்பிய பீட்டர் அம்மனுக்கு விலை உயர்ந்த கற்கள் நிறைய பதித்த தங்க மிதியடிகளை அளித்தார். இன்றும் அம்மனின் குதிரை வாகன புறப்பாட்டின் போது அம்மன் இம்மிதியடிகளையே அணியக்காணலாம்.

1837-ம் ஆண்டு கலெக்டாரக வந்த ஜான் ப்ளாக் பர்ன், மதுரைக் கோவிலைச் சுற்றியிருந்த பாதுகாப்புக் கொத்தளங்களை நீக்கி, சுற்றியிருந்த அகழிகளையும் ஏலம் விட்டு வீடுகள் ஒரே மாதிரியாகக் கட்டச் செய்து மூன்று வெளி வீதிகளை உருவாக்கினார். கொத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் வைகையில் கற்பாலம் அமைக்க பயன்பட்டன.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் எனக்கு புதிதாகவும் ஆச்சரியம் தருவனவாகவும் இருந்தன. நரசய்யா தொகுத்துத் தந்திராவிட்டால் இவை எனக்கு அறியக் கிடைத்திராது, வேறு எந்த சரித்திரப் புத்தகத்திலும். இவையும் சுவாரஸ்யமானவை என்ற தேர்வுக்கு ஒரு பிரக்ஞை வேண்டும்.

———————————————————————————————————————————————————–
ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை – நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14 ரூ 275/-

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

 1. Sa.Thirumalai on July 14, 2009 at 6:20 am

  Dear Sir

  In depth review of Mr.Narasaiyyaa’s book. I have to order this book immediately. Although I was grown up at Maduari, I don’t know many historical details of Madurai when I was there. Every lane and bye-lane of Madurai has thousands of years history behind it. Thanks for your introduction

  Regards
  Sa.Thirumalai

 2. Aravindan Neelakandan on July 14, 2009 at 9:03 am

  Great Review I will buy this book today

 3. sundaresh on July 14, 2009 at 9:32 am

  Thanks to Ve.Sa for this amazing review!

  “இல்லாது போன வருத்தம் அவருக்கு. இருந்தும் அதன் பெருமை அறியாத அலட்சியத்தில் அதை இழந்து கொண்டிருக்கும் வருத்தம் எனக்கு”.

  How true!

 4. Sundararajan on July 14, 2009 at 5:43 pm

  Nice review..
  How to purchase this book online

 5. Venkat Swaminathan on July 15, 2009 at 7:41 am

  How to purchase the book on line will have to be answered by knowledgeable persons like Haran Prasanna.

 6. பாரதபுத்ரன் on July 15, 2009 at 8:37 pm

  மதுரையின் சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும்பயணம் என்ற இந்த புத்தக விமர்சனத்தின் தலைப்பு கொஞ்சம் அதிகமோ என்ற எனது எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் திரு வெங்கட்சுவாமிநாதன் அவர்கள். மதுரையின் ஒவ்வொரு அங்குலமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சரித்திரத்தின் ஏதேனும் ஒரு துளியை கொண்டிருக்கும்.. என்னதான் பிளக்ஸ் பேனர்களும், அஞ்சாநெஞ்சனின் போஸ்டர்களும் வந்துவிட்டாலும் பெரியார் பஸ்டாண்டிலிருந்து தெற்கே போகும் வண்டிகளின் பேருந்து நிறுத்தத்தின் வெளிப்புறச்சுவர் எப்போதோ கட்டியது.. மீணாட்சி அம்மனின் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மொட்டைக்கோபுரம், உள்ளே இருக்கும் முக்குறுனி விநாயகர், பொற்றாமரைக் குளம், மாரியம்மன் தெப்பக்குளம், மங்கம்மாள் சத்திரம், ஊருக்கு வெளியே திருமோகூர் பெருமாள் கோவில், ஆனைமலை நரசிம்மசுவாமிகோவில், திருப்பரங்குன்றம் மலை இன்னும் நிறைய இடங்கள் மனதில் வந்து சென்றது.. சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. நல்லவிதமாய் அறிமுகம் செய்திருக்கிறார் திரு.வெங்கட் சுவாமிநாதன் அவர்கள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவனான எனக்கு இந்தப் புத்தக விமர்சனம் எனது ஊருக்குப் போகும் ஆசையைத் தூண்டிவிட்டு விட்டது.. மதுரைய சுத்துன கழுதைகூட ஊரைவிட்டுப் போகாது என்பார்கள். .. அவ்வளவுதூரம் கட்டிப்போடும் அழகும், ரம்மியமும் கொண்டது மதுரை நகரமும், அதன் வாழ்க்கையும்..

 7. Venkataramanan V on July 17, 2009 at 10:26 pm

  Nandri Thiru. Venkat Swaminathan.

  Please advise on how to procure it over the internet ? I will be coming to Madurai / India next month. Will it be available in Higginbotham’s ?

  BTW, it is a fantastic review.

 8. Venkat Swaminathan on July 18, 2009 at 5:53 am

  It is published by Palaniappa Bros. They may be having a shop at Madurai. Please also enquire from the author, K.R.A Narasayya his phone Nos. 044/ 2442 4104, 2445 4319, and cell 098409 70242.

  I had already knocked at the door of Haran Prasanna. He did not seem tohear the knock. He is at “haranprasanna@gmail.com”

 9. AMARNATH MALLI CHANDRASEKARAN on July 20, 2010 at 1:31 am

  நான் மதுரை மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணி மதுரையின் தொன்மைப் பற்றி அறிய பல நூல்கள் வங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலருக்கு வாய்மொழியாக சிறப்புகளை கூறினேன். அனால் நரசய்யாவின் படைப்பைப் பற்றிய அருமையான உள்ளத்தைத் தொடும் கட்டுரை என்னை உடனே இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது. நான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் என் நண்பரிடம் கூறி வாங்கச் சொல்லி இருக்கிறேன். வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.-ம.ச.அமர்நாத்

 10. singaravel on July 28, 2012 at 5:32 pm

  thanks for your godfaith please write azhagar koil history

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*