உலகத் திரை: The Shawshank Redemption

shawshankredemptionmovieposterThe Shawshank Redemption

உங்களுக்கு தலை வலிக்கும் போது எப்படி இருக்கும் – இந்த வாழ்க்கை சந்தோஷமானது என்று தோன்றுமா? விடாது தொடர்ந்து காய்ச்சல் அடிக்கும் போது? வைத்தியம் செய்யக்கூட ஒரு பைசா கையில் இல்லாத போது ஆட்கொள்ளி நோய் ஒன்று உங்களை பீடித்த சமயத்தில் கூட அப்படி நினைக்க முடியுமா? ஒரு வேளை வாழ்க்கையின் மீதும் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் இருந்தாலே ஒழிய அப்படி இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படி நம்பிக்கை கொண்ட ஒருவனை நீங்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால் எப்படி எதிர் கொள்வீர்கள்?

அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றிய கதை தான் The Shawshank Redemption. அற்புதமான ஆளுமையைப் பற்றிய நம்பிக்கையூட்டும் திரைப்படம். 1994ல் வெளியானது.

செய்யாத கொலைகளுக்காக (மனைவி மற்றும் அவள் கள்ளக்காதலன்) இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஷாஷெங் சிறைக்கு அனுப்பப்படுகிறான் ஆண்டி (Andy), ஒரு பெரிய நிதி நிறுவனத்தில் Vice President ஆக வேலை பார்ப்பவன். சிறை என்பது மகிழ்ச்சியை தேக்கி வைக்கும் கூடாரமல்ல என்பதை அங்கு சென்ற முதல் நொடியிலேயே அறிந்தவனாக இருக்கிறான். சமுதாயத்தின் மேல் தட்டில் வாழ்ந்த ஒருவன் சடாரென அனைத்து சலுகைகளும் பிடிங்கப்பட்டு அடிமையாக நடத்தப்படும் ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆறுக்கு ஆறு அடி அளவில் அவனுடைய எதிர்காலமும் வாழ்க்கையும் சுருங்கிப் போய்விடுகிறது. இந்த புதிய இடத்தில் ரெட் என்ற ஒரு ஐரிஷ் மனிதனின் நட்பு கிடைக்கிறது. ரெட் போன்ற ஒருவன் எல்லா ஜெயிலிலும் இருப்பான் – கைதிகளுக்கு தேவையான வஸ்துகளை வெளியுலகிலிருந்து வாங்கித் தரும் சாமர்த்தியமான போக்கிரி. பல வருடங்களுக்கு முன் சிறைக்கு வந்தவன்.

ஆண்டி, நாம் உலக சினிமா வரலாற்றில் பார்த்த ஆளுமைகளில் முக்கியமான ஆளுமை. ஆண்டியை நாம் ரொபர்டோ பெனினி-இன் Life is beautiful இல் வரும் கிடோ (பெனினியே ஏற்று நடித்த பாத்திரம்) உடனோ அகிரா குரசாவாவின் இகுரு-இல் வரும் கஞ்சி வாட்டன்பே (தகோஷி சிஷோமரா நடித்த பாத்திரம்) உடனோ ஒப்பிடலாம்.

ரெட்-இன் குரலிலேயே நமக்கு ஆண்டியின் வாழ்க்கை அறிமுகமாகிறது. ரெட் சொல்வது போல் ஒரு பலத்த காற்று அவனை பெயர்த்து எறிந்து விடுவது போல இருந்த ஒரு மனிதன், தன் மனதின் மீது மிகுந்தஆளுமை கொண்டிருப்பவனாக திரைப்படம் நகர நகர கொஞ்சம் கொஞ்சமாக நமக்குத் தெரிய வருகிறது. சிறையில் இருக்கும் ஓரிண சேர்க்கையாளர்களின் வன் புணர்ச்சிக்கு ஆளாகிறான். ஆனால் ஒவ்வொரு முறை அவர்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் போது அவர்களுடன் சண்டையிடுகிறான். அவன் எப்போதாவது ஜெயிப்பதுண்டு. ரெட்டின் குரலில் சொல்வது போல் ஒவ்வொரு முறை அவன் புதிய காயத்துடன் தோன்றும் போதும் அவன் தனக்கு என்ன நேர்ந்தது என்றும் யாரால் நேர்ந்தது என்றும் சொன்னதில்லை – என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்குமே தெரிந்தே இருந்தது.

தன்னுடைய மனதை எந்த விதமான சோர்வும் அவநம்பிக்கையும் அண்டாதவாறு சதா ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான். ரெட் மூலம் சிறிய கற்களை செதுக்கும் சிறிய சுத்தியலை வாங்கி கற்களால் ஆன செஸ் போர்டை செய்வதன் மூலம் தன் பொழுதைக் கழிக்கிறான். தன் இஷ்ட நடிகையான ரீட்டா ஹேவொர்த்தின் ஆளுயர போஸ்டரை வாங்கி சிறையில் வைத்துக் கொள்கிறான். கனவு காண்கிறான். மெக்ஸிகோவில் இருக்கும் ஒரு நகரத்தில் கடற்கரையோரம் தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று ஏறக்குறைய நடக்கவே சாத்தியமில்லாத கனவு காண்கிறான். அப்போது விளையாடத் தேவைப்படும் என்று அந்த கனவின் மீது நம்பிக்கை கொண்டவனாய் செஸ் போர்ட்டை தயார் செய்கிறான்.

தனக்கு கிடைக்கும் சின்னஞ்சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறான்.

ஒரு முறை சிறையின் மேற்கூரையில் வேலை செய்ய வேண்டிய பணியில் ஈடுபடுத்தப்படும் போது, சிறை அதிகாரி ஒருவன் தனக்குக் கிடைத்த சொத்தில் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டியிருக்கும் வரி பற்றி நொந்து கொள்ளும் போது – குறுக்கே தலையிட்டு சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி வரிகட்டுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லிக் கொடுக்கிறான். அதற்கு உதவியாக ஓரிண சேர்க்கையாளார்களை கடுமையாக தண்டிக்கிறான் அந்த அதிகாரி.

சிறையில் இருக்கும் ஒரு வயதான கைதி விடுவிக்கப்படுவதால் அவர் பார்த்து வந்த சிறை நூலக அதிகாரி பொறுப்பு ஆண்டிக்கு கொடுக்கப்படுகிறது. தன் பெரு முயற்சியால் நூலகத்தை விரிவாக்கம் செய்து பலரும் படிக்கும் வகை செய்கிறான். நூலகத்தை விரிவாக்கம் செய்யும் பகுதியில் அலெக்ஸாண்ட்ரெ டுமாவைப் பற்றிய ஒரு ஜோக் உண்டு. அது போன்ற ஒரு ஜோக் நம் சமுகத்தில் திரைப்படம் போன்ற் ஒரு ஊடகத்தில் தோன்ற வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். நூலகத்தைத் தவிர புதிதாக வரும் இளம் கைதிக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறான். மற்ற சிறை அதிகாரிகளுக்கு வருமான வரி தாக்கல் செய்ய உதவுகிறான். தன் அறிவின் மூலம் அடுத்தவர்களுக்கு உதவுவதால் சிறையில் முக்கியமான மனிதனாக தன்னை உருவாக்கிக் கொள்கிறான்.

சிறையிலிருந்தாலும் ஒரு உன்னதமான உலகை கனவு கண்டவனாகவே இருக்கிறான். ஒரு முறை வார்டனின் அறையில் இருக்கும் ஒலிப்பெருக்கியின் மூலம் மொசார்ட்டை கசிய விடுகிறான். தான் வாழுவேண்டிய இடம் எதுவென எனக்குத் தெரியும் என்றும் தான் மட்டுமல்ல என்னைச் சுற்றிய சிறைவாசிகள் எல்லோரும் இந்த இசைக்கு தகுதியானவர்கள் என்று உரக்கச் சொல்லும் மனப்பாங்கு அது. இதே போல ஒரு காட்சி Life is Beautiful-இலும் உண்டு. நாசி காண்செண்ட்ரேஷன் கேம்பில் இருக்கும் போது டோரவுக்கு தான் உயிரோடு இருப்பதை உணர்த்த கிடோ, அவர்கள் சேர்ந்து ரசித்த ஓபரா இசையை கசியவிட்டு அதை அதிக ஒலி அளவில் வைப்பான்.

சிறை வாழ்க்கையில் சிற்சில பிரச்சனைகளைத் தவிர பொதுவாகவே அமைதியாக செல்வதெல்லாம் சிறையின் வார்டன் சிறை கைதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வரையில் தான். மிகக்குறைந்த சம்பளத்திற்கு கைதிகள் வேலை செய்யக்கூடிய சாத்தியம் ஏற்படுவதால் மற்ற முதலாளிகள் தங்கள் ஆட்களை பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த முதலாளிகள் வார்டனுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச்சொல்கின்றனர். இதனால் வரும் பணத்தை ஒரு பிணாமி கணக்கை ஏற்படுத்தி அந்த கணக்கில் சேமித்து வருகிறார் – அதாவது இல்லாத ஒரு மனிதன் பேரில் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் உருவாக்கி, வசிப்பிட சான்றிதழ் உருவாக்கி, ஏணைய ஆவணங்களையும் தயாரித்து அவன் பேரில் பணம் சேமிக்கிறார் – எந்த சிக்கல் வந்தாலும் அந்த மனிதனை யாராலும் பிடிக்க முடியாதென்பதால். இதற்கான அக்கவுண்டிங் வேலையெல்லாவற்றையும் செய்து கொடுப்பது ஆண்டி தான்.

ஒரு நிலையில் சிறைக்கு வரும் ஒரு இளைய கைதியின் மூலம் ஆண்டியின் மனைவியையும் அவள் காதலனையும் கொலை செய்தது யார் என்று தெரியவருகிறது. இந்த செய்தியை வார்டனிடம் சொல்லி தன்னுடைய கேஸை மீண்டும் திறக்க அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கிறான் ஆண்டி. ஆண்டி வெளியே செல்வதால் தன்னுடைய குட்டு வெளிப்படும் வாய்ப்பு இருப்பதால் அதை மறுத்து விடுகிறார் வார்டன். மேலும் ஆண்டியிக்கு சாதகமான சாட்சியியாக மாறக்கூடிய அந்த இளம் கைதியையும் கொன்று விடுகிறார்.

இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் திடீரென ஆண்டி சிறையிலிருந்து காணாமல் போகிறான். முதல் நாள் இரவு வரை இருந்தவன் எப்படி மறுநாள் விடிகாலை காணமல் போயிருக்க முடியும்? அவனின் அறையில் கோபத்தின் உச்சியில் வார்டன் வீசி எறியும் சிறு கல் ஆண்டி யாருக்கும் தெரியாமல் அதுவரை சுவரை குடைந்து வழி ஏற்படுத்தியிருந்ததைக் காட்டிக் கொடுக்கிறது. வெளியே சென்ற ஆண்டி வங்கிக்கு சென்று வார்டனின் பணத்தை தன் பெயரில் எடுத்துக் கொள்வதுடன் வார்டனின் மோசடியையும் காட்டிக் கொடுக்கிறான்.

தான் தப்பிப்பதற்கு முன்னர் தன் சொந்த ஊரில் ஒரு இடத்திலிருக்கும் மரத்தடியை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று ரெட்டிடம் சத்தியம் வாங்குகிறான். அர்த்தமெதுவும் புரியாமல் சரி என்று ஒப்புக் கொள்கிறான். சில வருடங்களுக்குப் பின் விடுதலையாகும் ரெட் ஆண்டி சொன்ன அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறான் – அங்கு ரெட்டிற்காக ஆண்டிவிட்டுச் சென்ற செய்தி காத்திருக்கிறது. அதை தொடர்ந்து சென்று ஆண்டியை ஒரு மெக்ஸிகோ கடற்கரையில் கண்டு பிடிக்கிறான் ரெட்.

சில காட்சிகள் Clint Eastwood நடித்த Escape from Alcatraz-ஐயும் ஞாபகப்படுத்தியது. உதாரணத்திற்கு, ஆண்டி சிறையில் குடைந்த கற்களையும், சுவர் காரைகளையும் திறந்த வெளியில் நடக்கும் போது யாருக்கும் தெரியாமல் உதிர்க்கும் காட்சி மிகவும் தொடர்புடையதாக தொன்றியது. ஏறக்குறைய 50 வருடங்கள் சிறையிலேயே கழித்துவிட்டு உலகை மிக வயதான எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அந்த கிழவரின் episode குறிப்பிடத்தகுந்தது.

ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமிது. மிகவும் மன எழுச்சியை ஏற்படுத்தும் திரைப்படம் இது. தொடர்ந்து கனவு காணுவதன் மூலமும் அந்த கனவின் மீது நம்பிக்கைகொண்டு சாத்தியமில்லாத இலக்கை அடைவதைப் பற்றி பேசும் கதை. நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் படம். ஆங்கிலம் நன்றாக புரிந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்க்க வேண்டாம் – எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாக கடின வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். என்னுடைய all time favorite பட்டியலில் இந்த படத்திற்கு தனியிடம் உண்டு. ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம்.

5 Replies to “உலகத் திரை: The Shawshank Redemption”

  1. Dear KC

    SR is my all time favorite too. It is in my DVD collections. I recommend this as one of the 100 must see movies ever made. It induces lot of self confidence and motivation in the viewer. This one of the prison movies that i cherish. Escape from Alcatraz, Pappilon, great escape, American History X are few other good prison movies. Thanks for introducing such good movies

    Regards
    Sa.Thirumalai

  2. I think most of the movies that talk about under privilege circumstances are optimistic in nature. Some element of hope or other will always be there – It is only that attracts all of us towards that. I am more interested in the strategy part of such stories – I especially like how Nicholas Cage and co build team and plan for robbery in “Gone in 60 seconds”.

    Btw, Haven’t seen “Pappilon” and “The man escaped” yet.

  3. நல்ல பதிவு கிருஷ்ணா. இந்தத் திரைப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். மிக அற்புதமான ஒரு படைப்பு. imdb.com இல் தொடர்ந்து பல காலமாக முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் இது. முடிவைப் பற்றி நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால், இனி பார்க்க இருப்பவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறன். நல்ல பகிர்வுக்கு நன்றி

    -ப்ரியமுடன்
    சேரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *