காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

July 2, 2009
By

[இன்று திருச்செந்தூர் திருக்கோயில் கும்பாபிஷேகம்]

லைகள் கடலில் சென்று அமிழ்வது போல,
சேர்ந்த வினைகள் சென்றழியும்;
அதனால் இவன் சன்னிதி வாருங்கள், வாருங்கள்” என்று
அலைவரிசைகள் மனிதரை ஆர்ப்பரித்து அழைக்கும் கடற்கரையில் நிற்கிறான் குகன்.
அவனே என் இதயக் கமலத்தில் உறைபவன்.

– சுப்பிரமணிய புஜங்கம், 5 (ஆதிசங்கரர்)

தென் தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூர், பாரத தேசத்தின் புராதனமான புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். திருச்சீரலைவாய், ஜயந்திபுரம், செந்தில் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இத்திருத்தலம், அறுபடை வீடுகளில் ஒன்று. ஸ்கந்த புராணத்தில், சிவரகசிய காண்டத்தில், கந்தமாதன பர்வதத்தின் சாரலில் முருகன் சிவபிரானை வழிபட்டு சூரசம்ஹாரம் புரிந்த இடம் இதுவே என்று சம்பிரதாயமாக அறியப் படுகிறது. ஸ்ரீமத்பாகவதத்தில் பலராமன் தீர்த்த யாத்திரையில் செந்தூரையும், கன்னியாகுமரியையும் வணங்கிச் சென்ற குறிப்பு உள்ளது. ஆதிசங்கரரும், தமது திக்விஜயத்தின் போது, இங்கு வந்து குமரக் கடவுளை வழிபட்டு சுப்ரமணிய புஜங்கம் என்கிற அழகிய துதியை இயற்றினார் என்று கூறப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப் படை இத்தலம் பற்றிப் பேசுகிறது. முருகனின் அறுமுகங்களையும், பன்னிரு கைகளையும், வேலையும், மயிலையும், சேவற்கொடியையும் போற்றிப் பின்,

”உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே”

என்ற வரிகள் உலகம் போற்றும் புகழுடையது என்று இத்தலத்தைக் குறிப்பிடுகின்றன.

கந்த புராணத்தில், கச்சியப்ப சிவாச்சாரியர் சூரனை அழித்த சுடர் வேலின் திறம் கூறி, திருச்செந்தூர் அமர் செல்வனைப் பாடுகிறார் –

சூரலை வாயிடைத் தொலைத்து மார்பு கீண்டு
ஈரலை வாயிடும் எஃகம் ஏந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம்.

(சூர் – சூரபத்மன் என்கிற அசுரன், கீண்டு – கிழித்து, ஈரலை வாயிடும் – ஈரலை உண்ணும், எஃகம் – வேல், வெள்ளி வெற்பொரீஇச் – வெள்ளி மலையாகிய கைலாசம் போன்ற, சேய் – குழந்தை)

இதற்கேற்ப, கந்த சஷ்டித் திருநாளின் போது சூரசம்ஹாரம் மிகச் சிறப்பான விழாவாக செந்தூர் கடற்கரை மணல் திட்டுகளில் ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது. மாசியிலும், ஆவணியிலும் மனதைக் கொள்ளை கொள்ளும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஆறுமுகன் அவதரித்த வைகாசி விசாகப் பெருநாளும் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப் படும் விழாவாகும்.

கந்த புராணத்தின் படி, முருகனது படைவீரர்களாக செயலாற்ற வேண்டி அன்னை பார்வதியின் பாதச் சிலம்பிலிருந்து ஒன்பது வீரர்கள் உதித்தனர். இவர்கள் “நவ வீரர்கள்” என்று அழைக்கப் படுவர். இவர்களின் தலைவர் வீரபாகு. இந்த நவ வீரர்களின் வழிபாடு தமிழகத்தின் எல்லா முருகன் கோவில்களிலும் உள்ளதென்றாலும் திருச்செந்தூரில் மிகச் சிறப்பாக நடத்தப் படுகிறது. தமிழ் நாட்டின் வீரத் தெய்வமாகத் திருமுருகன் காலம்காலமாக விளங்கி வருகிறான். “வீர வேல், வெற்றி வேல்” என்ற கோஷமே அதற்குச் சான்றாகும்.

thiruchendur_1

லத்தின் பழமையைக் கூறும் வரலாற்றுச் செய்திகள் பல உள்ளன.

பாண்டியன் வரகுண மாராயன் (கிபி. 875), கோநேர்மை கொண்டான் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவன் (கிபி. 1282) காலத்திய கல்வெட்டுகள் சுற்றியுள்ள கிராமங்கள் கோயில் ஆராதனைக்குப் பொருட்கள் வழங்க ஆணையிட்டும், அதற்காக மன்னர் அந்தக் கிராமங்களுக்குக் கொடைகள் அளித்தது பற்றியும், கிராமங்களில் அந்தணர்களுக்குக் கொடைகள் வழங்கியது பற்றியும் பேசுகின்றன. கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவும் (1729-58) திருசெந்தூர் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். உதய மார்த்தாண்ட கட்டளை என்ற பெயரில் இன்றும் அவர் பெயரில் அதிகாலை வழிபாடு நடத்தப் படுகிறது.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவர் திருமலை நாயக்கர். இவரது ஆட்சிக் காலத்தில் கேரளக் கடற்கரையின் கொச்சித் துறைமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெடுநாட்களாக வியாபாரம் செய்துவந்த போர்ச்சுகீசியர்களுடன் திருமலை நாயக்கரது அரசு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் கிழக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக் காரர்களும் வர்த்தகத்தில் இறங்கத் தொடங்கினர். அவர்களது வர்த்தகத்தால் கவரப் பட்ட திருமலை நாயக்கர், 1646-ஆம் ஆண்டு டச்சுக் காரர்கள் காயல்பட்டினத்தில் வணிகத் துறைமுகமும், கோட்டையும் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்; போர்ச்சுகீசியர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த போர்ச்சுகீசியர்கள் ஏராளமான சரக்குகளுடன் காயல் துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த டச்சுக் கப்பல்களைத் தாக்கி அழித்தனர். கோட்டையைக் கைப்பற்றி, அங்கிருந்த டச்சுக் காரர்களையும் விரட்டியடித்தனர். டச்சுக்காரர்கள், இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை ஏற்கனவே காலனிப் படுத்தியிருந்த டச்சு கவர்னரிடம் முறையிட, உடனடியாக டச்சுப் படைவீரர்கள் பல படகுகளுடன் மணப்பாடு துறை வழியாக மன்னார் கடற்கரைப் பகுதிகளில் உட்புகுந்தனர். வீரராமபட்டிணம் என்ற ஊரில் இருந்த போர்ச்சுகீசிய சர்ச்சை முதலில் கையகப் படுத்திய பின், அவர்கள் திருச்செந்தூர் கோயில் உட்புகுந்து அதனையும் ஆக்கிரமித்தனர். பீரங்கித் தளவாடங்களுடன் கோயிலை தங்கள் கொத்தளமாக மாற்றினர்.

இது கண்ட அப்பகுதி மக்கள் பீதியும், வருத்தமும், கோபமும் அடைந்தனர். மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் திருமலை நாயக்கர் சரக்குகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், திருச்செந்தூர் கோயிலை உடனடியாகக் காலி செய்யுமாறும் டச்சுக்காரர்களுக்கு உத்தரவிட்டார். டச்சுக் காரர்கள் அந்த உத்தரவை மதிக்காதது மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று அவற்றைக் கொள்ளையிட்டு, சூறையாடவும் தொடங்கினர். தாங்கள் வெளியேற வேண்டுமானால் 40,000 டச்சு நாணயங்கள் (reals) பணயமாகத் தரப்படவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர். தங்களால் இயன்ற அளவு பணயத் தொகை கொடுப்பதாகச் சொல்லிய ஊர்மக்களின் வேண்டுகோளை டச்சுக் காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஆக்கிரமிப்புக்கும், அச்சுறுத்துதலுக்கும் எதிராகத் திருச்செந்தூர் மக்கள் திரண்டெழுந்து போரிட்டனர். கோயிலிலிருந்து டச்சுக் காரர்களை அகற்றுவதற்காக நடந்த இந்தக் கிளர்ச்சிப் போரில் ஏறத்தாழ நூறு பேர் மாண்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. இவர்களில் மன்னரின் படைவீரர்களும், ஊர்மக்களும் அடங்குவர்.

சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக் காரர்கள், அடுத்த கிளர்ச்சி தொடங்கு முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர். போரைத் தவிர்க்க விரும்பிய நாயக்கர், தமது தூதராக வடமலையப்ப பிள்ளை என்பவரை அனுப்பி, கோயில் சொத்துக்களைத் திருப்பித் தருமாறு டச்சுக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்னரின் மனக்கருத்தை அறிந்த டச்சுக் காரர்கள் பணயத் தொகையை 100,000 டச்சு நாணயங்களாகக் கூட்டினர், இந்த நடவடிக்கைகள் டச்சுக் காலனிய அதிகார பீடங்கள் வரை எட்டின. பிரசினை வலுக்குமுன், கிடைத்த பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டு விலகுமாறு டச்சு கவர்னர் ஆணையிட்டார். இவ்வாறாக, செந்திலாண்டவன் திருவுருவச் சிலையும், கோயில் சொத்துக்களும் மீட்கப் பட்டன.

இந்த சம்பவம் நடந்து, பின்னர் கோயில் கும்பாபிஷேகம் 1651ம் ஆண்டு நடைபெற்றதாக வடமலையப்ப பிள்ளையின் கல்வெட்டிலிருந்து அறியப் படுகிறது.

thiruchendur_2இந்த வரலாற்றுச் சம்பவம் பற்றி நாட்டார் கதை வழக்குகளிலும், இலக்கியங்களிலும் வேறு விதமான குறிப்புகள் உள்ளன. கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை; விக்கிரகங்களை உருக்கித் தங்கத்தை எடுத்துச் செல்லலாம் என்று முயன்ற போது, விக்கிரகங்களை உருக்க முடியாமல், அப்படியே எடுத்துக் கப்பலில் போட்டனர். கப்பல் கிளம்பியவுடன், பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது, சூறைக் காற்று அடித்தது. கப்பல் நிலைகுலைந்தது. கோயில் விக்கிரகங்களைக் கடலிலேயே எறிந்து விட்டு டச்சுக் காரர்கள் ஓடிவிட்டனர்.

அப்போது திருநெல்வேலியில் ராஜப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்ப பிள்ளை தீவிர முருக பக்தர். சுவாமியின் உருவச் சிலையை டச்சுக் காரர்கள் கொள்ளையிட்டது பற்றிக் கேள்விப் பட்டுப் பெரிதும் வேதனையுற்ற அவர், அதே போன்ற பஞ்சலோக விக்கிரகங்களை வடிவமைத்து பிரதிஷ்டை செய்வதற்காக திருச்செந்தூருக்கு எடுத்து வந்தார். அப்போது வடமலையப்பரது கனவில் முருகப் பெருமான் தோன்றி, கடலில் சென்று தனது திருவுருவச் சிலையை மீட்குமாறு பிள்ளைக்கு ஆணையிட்டார்.

அதன் படி, கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று முழுகாமல் மிதக்கும் என்றும் அந்த இடத்தைச் சுற்றி வானில் கருடன் வட்டமிடும் என்றும் அங்கு தான் சிலை கிடைக்கும் என்றும் கனவு உரைத்தது . வடமலையப்பர் கடலில் இறங்கியபோது, அந்த அடையாளங்களுடன் இருந்த இடத்தில் தெய்வச் சிலைகள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அவர் கட்டிய வடமலையப்ப பிள்ளை மண்டத்தில் இன்றும் ஆவணி, மாசி மாத விழாக்களின் போது அவர் பெயரில் கட்டளைகள் நடைபெறுகின்றன. அந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் மேற்சொன்ன தகவல்கள் உள்ளன. வென்றிமலைக் கவிராயர் எழுதிய திருச்செந்தூர் தல புராணத்திலும், பிள்ளையைப் புகழ்ந்து எழுதப் பட்ட “வடமலை வெண்பா” என்ற நூலிலும் இந்த தெய்வச் செயல் பற்றிய செய்திகள் உள்ளன.

இந்த நாட்டார் மரபின் பல செய்திகள் வரலாற்றுத் தகவல்களே என்பதில் ஐயமில்லை. காலனிய வரலாற்றை எழுதிய எம்.ரென்னல் என்பவரது நூலில் (A Description, Historical and Geographical, of India – published in Berlin, 1785), திருச்செந்தூர்க் கோயில் பற்றிய செய்திகள் உள்ளன. டச்சுக் கம்பெனியின் படைத்தலைவர் ஒருவரிடமிருந்து தனக்குக் கிடைத்த விவரங்கள் இவை என்று அவர் குறிப்பிடுகிறார் – “1648ல் திரும்பி வரும்போது கடற்கரையில் இருந்த கோயிலை அழிக்க முயற்சி செய்தனர். பீரங்கிகள் கொண்டு கனரக வெடிகுண்டுகள் அந்தக் கோயில் மீது பொழியப் பட்டன. ஆயினும் அதன் கோபுரம் இவற்றுக்கு சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. லேசான சேதாரம் மட்டுமே ஏற்பட்டது”.

இந்த மீட்சிக்குப் பின்னர் பல திருப்பணிகள் நடந்தேறின. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தேசிகமூர்த்தித் தம்பிரான் ராஜகோபுரம் எழுப்பினார். 1862ல் கோயிலின் பல பகுதிகள் சிதிலமடைந்திருந்ததைக் கண்ட மௌன சுவாமி என்கிற துறவி ஆலயத்தை எடுத்துக் கட்டி, மேலைக் கோபுர வாசலையும் புதுப்பித்தார். இவர் எங்கிருந்து வந்தவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற எந்த விவரமும் இல்லை. முழுமையாக மௌனவிரதத்தில் ஆழ்ந்திருந்த இவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி வழங்கியும், மணலில் எழுதிக் காட்டியுமே, திருப்பணிக்குத் தேவைப் பட்ட பணத்தைச் சேர்த்தார். 1872ல் காசியிலிருந்து வந்த காசி சுவாமி என்பவர் ஊரூராகச் சென்று திருப்பணிக்கு பொருட்கள் சேகரித்து இவருக்கு உதவினார். சண்முக விலாசம், வசந்த மண்டபம், பிராகாரங்கள் ஆகியவை இந்தக் காலகட்டத்திலேயே விரிவு செய்யப் பட்டன. பின்னர் ஆறுமுக சாமி (1885-1940) என்ற அடியார் திருச்செந்தூர் கோயிலின் திருப்பணிக்காகத் தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இவ்வாறு விரிவாக்கம் செய்யப் பட்ட கோயிலின் கும்பாபிஷேகம் 1941ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நடந்தேறியது.

கோயில் நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நாயக்க மன்னர்கள் காலத்தில் பல கோயில்களில் பூஜை முறைகள் மாற்றியமைக்கப் பட்டது போல இங்கும் துளுவ பட்டர்களான போற்றிகள் (போத்தி) என்னும் அர்ச்சக சமூகத்தினர் பூஜைகளுக்கு உரியவர்களாக நியமிக்கப் பட்டனர். முக்காணியர்கள் (த்ரிஸ்வதந்திரர்கள்) எனப்படும் அந்தண சமூகத்தினரும் இக்கோவில் வழிபாட்டு முறைகளில் பங்குபெறுபவர்கள். மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சான்றோர் எனப்படும் நாடார் சமூகத்தினர் காலனிய வரலாற்றில் கடைநிலை சாதியினராக சித்தரிக்கப் பட்டனர். ஆனால் அவர்கள் பல தலைமுறைகளாக திருச்செந்தூர்த் திருக்கோயிலில் வழிபட்டு வந்ததற்கான கல்வெடுச் சான்றுகள் கோயிலுக்குள்ளேயே உள்ளன. “பஞ்சமர்களான மனிதர்களும் (ந்ருணாம் அந்த்யஜானாம்) தன்னை வந்து வழிபடுமாறு அருள் வழங்கும் தெய்வம் இந்தக் குகனை விட்டால் வேறு யார்?” என்று சுப்பிரமணிய புஜங்கத்திலும் ஓர் வரி உள்ளது.

கோயில் நிர்வாகங்களில் இப்போதிருப்பது போலவே மன்னர் காலங்களிலும் ஊழல்கள் இருந்தன. 1800களில் புதிதாக வந்த திருச்செந்தூர்க் கோயில் அதிகாரி ஒருவர் பற்றி கோயில் பணியாளர் எழுதிய தனிப்பாடல் ஒன்று சுவாரசியமானது. புட்டுக்குப் பதிலாக தவிடு நிவேதனமாகிறதாம், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் யானைகளே வற்றலாகி விட்டனவாம். அதை எங்கே போய்ச் சொல்வது? முருகனிடமே முறையிடுகிறார் புலவர் –

கொட்டை கட்டி மானேஜர் செங்கடுவாய் வந்த பின்பு
சுத்த வட்டையானதென்ன சொல்வாய் குருபரனே!

வேலவர்க்கு முன்னிற்கும் வீரவாகு தேவருக்கு
சாயரட்சை புட்டு தவிடோ குருபரனே! – மாநிலத்தில்

காய்கனி கிழங்கு வற்றல் சொல்லக் கேட்டதுண்டு – செந்தூரில்
ஆனை வத்தலானதென்ன ஐயா குருபரனே.

(நன்றி: கொங்குதேர் வாழ்க்கை – எஸ்.சிவகுமார் – யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு)

thiruchendur_3ற்பல பக்தி இலக்கிய நூல்களில் திருச்செந்தூர் இடம் பெறுகிறது. சுவாமிநாத தேசிகர் எழுதிய திருச்செந்தூர்க் கலம்பகம், குமரகுருபரரின் கந்தர் கலி வெண்பா, கந்தசாமிப் புலவர் எழுதிய திருச்செந்தூர் நொண்டி நாடகம், தேவராய சுவாமிகள் எழுதிய கந்த சஷ்டி கவசம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருச்செந்தில் பிரபந்தம், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து ஆகியவை குறிப்பிடத் தக்கவை. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் செருக்குப் பிடித்த தமிழ்ப் பண்டிதர்களை வாதில் முறியடிக்க திருச்செந்தூர் நிரோட்ட யமக அந்தாதி என்ற நூலை எழுதினார். இந்த நூலின் பாடல்கள் முழுவதையும் படிக்கையில் உதடுகள் ஒட்டவே ஒட்டாத வகையிலான சொற்களைக் கொண்டு இயற்றப் பட்டிருக்கிறது. (நிரோட்ட = நிரோஷ்ட = நிர் + ஓஷ்ட, உதடுகள் இல்லாமல் என்ற பொருள் தரும் சம்ஸ்கிருதச் சொல்).

”கயிலை மலை அனைய செந்திற்பதி வாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே”

என்றும்

”சிந்துரமின் மேவு போகக்கார
செந்தமிழ் சொல்பாவின் மாலைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார … பெருமாளே”

என்றெல்லாமும் செந்திலாண்டவனைப் பாடிக் களிக்கிறது அருணகிரிநாதரின் திருப்புகழ்.

பகழிக் கூத்தர் என்ற வைணவர் எழுதிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் என்பதும் ஒரு அருமையான நூல். இதில் பல்வேறு வகையான முத்துக்களின் பெயர்களைக் கூறி, இவை எல்லாவற்றிற்கும் விலை உண்டு, ஆனால் உன் கனிவாய் முத்தத்திற்கு விலை இல்லை என்று சொல்லும் பாடல் படிக்கும் தோறும் இன்பம் தருவது.

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டு

தத்துங் கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம் தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தருநித் திலந்தனக்குக்
கூறுந் தரமுண்டு; உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலைஇல்லை
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.

(கத்தும்-முழங்கும்; தரங்கம்-அலை; கடுஞ்சூல்-கடுமையான கர்ப்பம்; உளைந்து-வருந்தி; வாலுகம்-வெண்மணல்; கான்ற மணி – சொரிந்த முத்து; கரடம்-மதம் பிடித்த; விகடம்-கூத்தாடுகின்ற; தடம்-மலை போன்ற; தந்திப் பிளைக்கூன் மருப்பு-யானையின் பிறைச் சந்திரன்போல் வளைந்திருக்கின்ற கொம்பு; தரளம்-முத்து; சாலி-நெல்; கொண்டல்-மேகம்; நித்திலம்-முத்து; கனிவாய் முத்தம்-கொவ்வைக் கனிபோன்று வாயின் முத்தம்)

செந்தூர்க் கடற்கரையில் நின்று கொண்டு கடல் அலைகளின் நடனத்தையும், கந்தனின் திருக்கோயிலையும், பக்தர்களின் பேராரவாரத்தையும், மணலில் ஓடிவிளையாடும் குழந்தைகளையும் பார்ப்பதும், “ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்ட” பின், அதன் எதிரொலியை மகா சமுத்திரத்தின் அடிநாதமாக உணர்வதும் ஓர் பேரானந்த அனுபவம்.

2004ஆம் ஆண்டில் சுனாமியின் அதி பயங்கர ஆழிப் பேரலைகள் கூட செந்தூர்க் கோவிலைத் தொட்டுத் தழுவி, வணங்கிச் சென்று விட்டன.. காலங்காலத்திற்கும் கந்தனின் அடியார்களை ஆர்ப்பரித்து அழைத்து வருவன அல்லவோ அந்த அலைகள்!

நம: ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்
புன: ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்து ||

கடலே, உனக்கு நமஸ்காரம்,
கடல்தேசத்தானே, கந்தனே, கடவுளே, உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

Tags: , , , , , , , , , , , , ,

 

22 மறுமொழிகள் காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

 1. Haranprasanna on July 2, 2009 at 9:53 pm

  இந்தக் கட்டுரைக்கு மிக நன்றி ஜடாயு.

 2. ப.இரா.ஹரன். on July 2, 2009 at 11:27 pm

  அருமையான கட்டுரை ஜடாயு. திருச்செந்தூர் முருகப் பெருமான் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் அருளட்டும்.

  அன்புடன்

  ப.இரா.ஹரன்

 3. ராம்குமரன் on July 2, 2009 at 11:43 pm

  தென் தமிழக மக்களுக்கு திருச்செந்தூர் பிரியமான, மிக முக்கியமான‌ வழிப்பாட்டுத் தலம். கந்த சஷ்டி விழா இங்கு மிகப்பிரபலம். பலர் சபரிமலைக்கு செல்வதுபோல விரதமிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர். ‘செட்டி கப்பலுக்கு செந்தூரன் துணை’ என்று ஒரு சொல்வடை ஆழ்கடலில் வியாபாரம் செய்யப் போகும் செட்டியார்களின் துணைவனாக‌ கடற்கரையில் வீற்றிருக்கும் முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை காட்டுகிறது.

  டச்சுக்காரர்கள் எடுத்து சென்று பின் கண்டெடுக்கப்பட்ட முருகன் திருஉருவை கோவிலினுள்ளே நாம் ஜெயந்திநாதர் என்ற பெயரில் காணலாம். அவர் திருமேனியில் கடலில் இருந்ததற்கான அறிகுறிகள் இருக்கும். மாசி மாதம் திருவிழாவின் பொழுது எட்டாம் திருநாளில் ஜெயந்திநாதர் திருவுலா வருவார். முன்பக்கம் பார்க்க முருகப்பெருமானை போலவும், பின்புறம் பார்க்க நடராஜரை போலவும் தெரியும்படியாக அலங்காரம் செய்திருப்பார்கள்.

  வெற்றி வேல், வீர வேல்

 4. maithreyan on July 3, 2009 at 9:33 am

  அருமை. டச்சுக் கொள்ளையர் பற்றி எழுதியது கட்டுரையை ஆழப்படுத்தியது. யூரோப்பிய காலனியம் எப்படி எல்லாம் இந்தியாவை அழிக்க முயன்றது என்பது நம் மக்களுக்குச் சொல்லித் தரப்படாமல் தொடர்ந்து மேலையரை மேதாவிகள் என்றும் நம் மக்களை இழிவாகவும் கருதவே நம் படித்த வர்க்கம் இன்னமும் முயல்கிறது. நமக்கு அறிவு ஒளியே மேற்கத்தியரால்தான் கிட்டியது என்று சொல்லும் பகுத்தறிவுகளும் நம்மிடையே நிறையவே இருக்கிறார். ஆமாம், கொள்ளையரும், கொலைகாரரும்தான் நமக்கு அறிவு ஒளியைக் கொணர்ந்தார், என்ன ஒரு விசித்திரக் கதை இவர்களுடைய கட்டுக் கதைகளெல்லாம்!
  மைத்ரேயன்

 5. களிமிகு கணபதி on July 3, 2009 at 11:00 am

  மனதைத் தொடுகிறது.

  இந்த நவீன காலத்தில் தகவல்களே போர் ஆயுதங்கள். தகவலைத் தருவதே போர். ஜடாயு வெளிப்படுத்தும் தகவல்களைப் படிக்கும்போது பாரதம் தன் போர்க்குணத்தை இழந்துவிடவில்லை, இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறது என்பது தெரிகிறது.

  அவருடைய நடையைப் படிக்கும்போது, அக்காலத்தில் வாளும், வேலும் ஏந்தி, வீர வேல் வெற்றிவேல் என்ற கோஷங்களிட்டுக் கொண்டு மரணத்தைக் கண்டு அஞ்சாது, ஆனால், அதே சமயம் தர்மத்தின் அடிப்படையில் போர் எப்படிப் போர் புரிந்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

  தமிழ்த் தெய்வம் நின்று போரிடுகிறது.

 6. களிமிகு கணபதி on July 3, 2009 at 11:06 am

  தமிழ்நாட்டில் கிறுத்துவர்கள் அழித்த கோயில்கள் என்பதைப் பற்றி யோசிக்கும்போது, அதற்கு எதிராக எத்தனை சாதாரண மக்கள் போரிட்டு மடிந்திருக்கிறார்கள் என்பது நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

  எதிரி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்ற எந்த இந்து அரசனும் கோயிலைத் தாக்கியதில்லை. ஆனால், கிறுத்துவர்கள் கண்ணில் கோயில்கள் எப்போதும் முட்களாகவே இருந்துவருகின்றன.

  மருது சகோதரர்களில் பெரிய மருதுவைப் பிடிப்பதற்காக வெள்ளையர்கள் கோயிலை பீரங்கியால் தகர்க்க முயன்றது நினைவுக்கு வருகிறது.

  அது எந்தக் கோயில்? அந்த வரலாற்று நிகழ்வு பற்றியும் எழுதுங்களேன். விண்ணப்பம்.

 7. bharathaputhran on July 3, 2009 at 11:09 am

  திருச்செந்தில் முருகனின் கோவில் வரலாறை அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். அருமையாக இருந்தது. செந்தில் முருகன் உங்களுக்கு எல்லா நலன்களையும் அருள்வானாக.

 8. சந்தேகப் பிராணி on July 3, 2009 at 11:15 am

  ஐயா,

  கிடைத்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு வந்து சேருமாறு டச்சு கவர்னர் உத்தரவிட்டதாகவும், அதன்படி பணத்தை வாங்கிக்கொண்டு டச்சுக்காரர்கள் முருகனின் திருவுருவச் சிலையையும், மற்ற கோயில் சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்ததாகவும் எழுதியுள்ளீர்கள்.

  ஆனால், சில பாராக்கள் கழித்து கடலிலிருந்து முருகனின் திருவுருவச் சிலை மீட்கப் பட்டதாகச் சொல்லுகிறீர்கள்.

  அப்படியானால், மீட்கப்பட்ட சிலையும், கடலில் இருந்து எடுக்கப்பட்ட சிலையும் வேறு வேறா?

  திருச்செந்தூர் கோயிலுக்குப் போனால் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண முடியுமா?

  தமிழக அரசு இந்த வரலாற்றைக் குறித்த தகவல்களை அந்தக் கோயிலில் எங்கேனும் வைத்துள்ளார்களா?

  (இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதே போதுமானது. இந்தக் கேள்விகளை வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை.)

 9. ஜடாயு on July 3, 2009 at 11:41 am

  பிரசன்னா, ஹரன், கணபதி, மைத்ரேயன், பாரதபுத்திரன் அனைவருக்கும் மிக்க நன்றி.

  சந்தேகப் பிராணி ஐயா, உங்கள் கேள்வி –

  // அப்படியானால், மீட்கப்பட்ட சிலையும், கடலில் இருந்து எடுக்கப்பட்ட சிலையும் வேறு வேறா? //

  ஒன்று தான். கட்டுரையில் முதலில் டச்சுக் காரர்கள் பணம் கேட்டது பற்றிய தகவல்கள் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தவை. வரலாற்று அறிஞர் நீலக்ண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து எடுக்கப் பட்டவை. இதன் படி சிலைகள் பணம் கொடுத்து மீட்கப் பட்டன.

  ”இந்த வரலாற்றுச் சம்பவம் பற்றி நாட்டார் கதை வழக்குகளிலும், இலக்கியங்களிலும் வேறு விதமான குறிப்புகள் உள்ளன” என்று ஆரம்பித்து வருவது இதே சம்பவம் பற்றி மக்கள் மத்தியிலும், தமிழ் நூல்களிலும் வழங்கும் விவரணம். இதன்படி சிலைகள் மீட்கப் பட்டது தெய்வச் செயல் மூலமாக. அதோடு, கோவிலை அழிக்க டச்சுக் காரர்கள் முயன்றது பற்றி நாம் அறிவதும் இந்த விவரணங்கள் மூலம் தான்.

  // திருச்செந்தூர் கோயிலுக்குப் போனால் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண முடியுமா?//

  கண்டிப்பாக. இன்று பிரதானமாக வழிபடப் படும் ஷண்முகர் பஞ்சலோகத் திருவுருவமே அது தான். ஜயந்திநாதர் என்று ராம்குமரன் அவர்கள் தன் மறுமொழியில் குறிப்பிட்டிருப்பதும் இந்தத் திருவுருவம் தான்.

  வடமலையப்பர் உருவாக்கிக் கொண்டு வந்த சிலைகளை அவர் மீண்டும் எடுத்துச் சென்று, திருநெல்வேலியில், பாளையம் கோட்டைக்கு அருகே உள்ள முருகன் குறிச்சி என்ற ஊரில் பிரதிஷ்டை செய்தார் – திருப் பிரந்தீஸ்வரர் ஆலயம் என்று இது அழைக்கப் படுகிறது.

 10. விஷ்வா on July 3, 2009 at 2:00 pm

  எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். சூரசம்ஹாரத்தின்போது முருகன் மயிலாகவும் சேவலாகவும் மாறிய சூரபத்மனை கொடியாகவும் வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.

  சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனின் கொடி என்ன கொடி? வாகனம் எது?

  எனது சந்தேகத்தை யார் சரியான விளக்கமளித்து தீர்த்து வைக்கப் போகிறிர்கள்.

 11. surya on July 4, 2009 at 2:03 pm

  நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் வலைப்பதிவு வழியே இங்கு வந்தேன்.
  நெய்தல் நிலத்தில் நின்றருள் பெய்யும் செந்தில் குமரன் அவன் இதழ் முத்தமதை
  நாடி பகழி பாடிய பிள்ளைத் தமிழுக்கோர் ஈடில்லை என அறிந்தேன். !! என் அறியாமை
  உணர்ந்து நீர் சொரிந்தேன்.
  நன்றி.
  வளர்க தங்களது தெய்வீகப்பணி.

  சுப்பு ரத்தினம்.

 12. ஓகை நடராஜன் on July 4, 2009 at 10:38 pm

  மிகச் சிறப்பான கட்டுரை தந்த ஜடாயு அவர்களுக்கு நன்றி.

  நடராஜன்.

 13. kumar on July 4, 2009 at 11:58 pm

  vetrivel murukanukku aroharaaa!

 14. S. Rajagopalan on July 6, 2009 at 1:41 am

  ஜடாயூ ஐயா அவர்களுக்கு நிக்க நன்றி,

  அருமையான கட்டுரை. மீண்டும் மீண்டும் படித்து சுவைத்து ரசித்தேன். இன்னும் பற்பல இடங்களைப்பற்றியும் எழுத தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  சேஷாத்ரி ராஜகோபாலன்

 15. Kannabiran Ravi Shankar (KRS) on July 6, 2009 at 7:55 pm

  நல்ல விரிவான கட்டுரை ஜடாயு ஐயா!

  //முருகனது படைவீரர்களாக செயலாற்ற வேண்டி அன்னை பார்வதியின் பாதச் சிலம்பிலிருந்து ஒன்பது வீரர்கள் உதித்தனர். இவர்கள் “நவ வீரர்கள்” என்று அழைக்கப் படுவர்//

  வீர்பாகு முதலான இவர்களின் பெயர்களைக் கூறுங்களேன்!

  // திருச்செந்தூர் கோயிலுக்குப் போனால் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண முடியுமா?//

  திருச்செந்தூர் உற்சவரான சண்முகரை இன்றளவும் காணலாம்! சண்முகர் மட்டுமல்ல! ஆடல்வல்லான் நடராஜர் சிலையும் அவ்வாறு மீட்கப்பட்டே இன்றும் ஆலயத்தில் உள்ளது!

 16. Kannabiran Ravi Shankar (KRS) on July 6, 2009 at 8:01 pm

  @விஷ்வா
  //சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனின் கொடி என்ன கொடி? வாகனம் எது?
  எனது சந்தேகத்தை யார் சரியான விளக்கமளித்து தீர்த்து வைக்கப் போகிறிர்கள்.//

  ஹா ஹா ஹா!
  சரி…இதோ…முருகப் பெருமானுக்கு மூன்று வாகனங்களைச் சொல்வதுண்டு! மயில், யானை, ஆட்டுக் கிடா!
  சுவாமிமலை முதலான தலங்களில், மயிலுக்குப் பதில் யானையே இருக்கும்! நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில் பிணிமுகம் என்ற யானை மீதேறி, முருகன் வரும் காட்சியையே காட்டுவார்!

  ஆனால் சூர சங்காரத்துக்குப் பின் தான் மயில் என்ற ஒரு ஊர்தியே உண்டானது என்று கால வரிசையாகப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சும்! அதற்கு முன்னரே, போட்டியில் வெல்ல மயில் மீது உலகம் முழுதும் பறந்து வந்தான் என்ற குறிப்புகளும் உள்ளன!

  எனவே மயில் என்பது புதிதாகத் தோன்றிய வாகனம் அல்ல! சூரனை மயிலாக ஆக்கிக் கொண்டான் என்பதே சாலவும் பொருந்தும்!

 17. ஈஸ்வர் on July 9, 2009 at 3:36 am

  //சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனின் கொடி என்ன கொடி? வாகனம் எது?
  எனது சந்தேகத்தை யார் சரியான விளக்கமளித்து தீர்த்து வைக்கப் போகிறிர்கள்.//

  திருசெந்தூரில் மூலவர் சந்நிதிக்கு முன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறது ! அங்கு இரண்டு மயில்களும் ஒரு நந்தியும் இருக்கும். ஒரு மயில்
  சூரஸம்ஹாரத்துக்கு முன் சுவாமிக்கு வாகனமாக இருந்ததை
  குறிக்கிறது. இரண்டாவது மயில் சூரஸம்ஹாரத்துக்கு பின் வந்த மயிலைக்ககுறிக்கிறது. இது ஒரு குறிப்பே தவிர கால (time/chronology), வெளி (space) பரிமாணத்தில் பார்க்கவேண்டாம். திரு KRS கூறியது சரியான பதில் – மயில் என்பது புதிதாகத் தோன்றிய வாகனம் அல்ல!

  ஸ்கந்த புராணத்தில் சுவாமி சூரஸம்ஹாரத்துக்கு புறப்படும்போது இந்திரன் சுவாமியிடம் பக்தியினால் வேண்டிக்கொண்டு மயில் வடிவம் எடுத்து வாகனமாக ஆனான் என்று இருக்கும். இந்திரன் மயில் வடிவம் எடுப்பதற்கு முன்னரே சுவாமியின் வாகனம் மயில்தான். வேறு வாகனங்களும் உண்டு.

  இப்போது திருசெந்தூரில் மூலவர் சந்நிதிக்கு முன்னால் இருக்கும் நந்தி எம்பெருமானைப்பற்றி பார்ப்போம். மூலவர் பூஜா மூர்த்தி. கையில்
  புஷ்பம் வைத்திருப்பார். அவருக்கு இடது புறத்தில் சுவரில் லிங்கம் இருக்கும். அந்த லிங்கத்துக்குத்தான் முன்னே சொன்ன நந்திஎம்பெருமான் மூலவர் சந்நிதி முன் இருக்கிறார்.

 18. அக்கினிபுத்திரன் on December 4, 2009 at 7:13 pm

  நாரதர் செய்த யாகத்திலிருந்து ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. முருகப்பெருமான் அதை அடக்கி தனது வாகனமாக்கிக்கொண்டார்

 19. AMARNATH MALLI CHANDRASEKARAN on September 17, 2010 at 11:56 pm

  திருச்செந்தூர் போகும் பொது பிரகாரங்களில் இருந்து மீட்கப்பட்ட முருகன் சிலையைப் பற்றியும் அட்டூழியம் செய்த வெளிநாட்டவர் பற்றியும் ஓரளவுக்குத் தெரியும். ஆனால் தங்கள் கட்டுரை மிக விரிவாக விளக்கியது. அதைத் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்த – சந்தேகங்கள் கேட்ட நண்பர்கள் தயவால் மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட பதிவுகள் அதிகமாக வரவேண்டும். மதுரை கோவில் – திருபரங்குன்றம் கோவில் இவை எல்லாம் எப்படி வெளிநாட்டவர்கள் – அந்நிய இனத்தவரால் சூறையாடப்பட்டன- யார் காலத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டன போன்ற தகவல்கள் இப்படி எழுதப்பட வேண்டும். அப்போது தன உண்மை நிலையை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள். தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

 20. eswaran on November 15, 2010 at 10:28 pm

  சுனாமி ஏற்ப்பட்டபோது நாகூர் தர்க்காவுக்குள்ளும் வேளாங்கன்னி சார்ச்சுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்து பெரும் நாசம் விளைவித்தது.ஆனால் ,திருச்செந்தூரில் கடல் ஒரு கிலோமீட்டருக்கு உள்வாங்கியது குமரியம்மன் (கன்னியாகுமரி) சந்நிதியில் ராஜகோபுர நிலைப்படிதாண்டி கடல் அன்னை வராமல் நின்றுகொண்டாள்.ஆகம முறைப்படி கட்டப்பட்ட ஹிந்துக் கோவில்களில் என்றும் எந்த அசம்பாவிதமும் நடவாது என்பதே உண்மை.
  ……………………………ஈஸ்வரன்,பழனி.

 21. T.Mayoorakiri sharma on March 13, 2012 at 3:36 pm

  கொள்ளித் தலையில் எறும்பது போலக் குமுறும் என்தன்
  உள்ளத் துயரை ஒழித்தருள்வாய் ஒரு கோடி முத்தம்
  தௌ;ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
  வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே

  மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் எழுதிய திருச்செந்தில் பற்றிய இக்கட்டுரை போலவே ஆறுபடைவீடுகள் பற்றியும் அற்புதமான கட்டுரைகள் கடந்தகாலம், நிகழ் காலத்தை பேசுவனவாக.. இத்தளத்தே வெளி வரவேண்டும் என்று நம்பெருமானாய வள்ளி மணவாளன் திருவடிகளைப் போற்றுகிறோம்..

  உண்மையில், இக்கட்டுரை முருகபக்திமை ஊட்டவல்லதாக விளங்குகிறது..

 22. T.Mayoorakiri sharma on June 17, 2012 at 8:01 am

  திருச்செந்தூர் என்ற ஸ்ரீ ஜயந்திபுர ஸ்தல ஸ்ரீ சுப்பிரம்மண்ய ஸ்வாமி பேரில் பாடப்பெற்ற சரவணபவ ஷட்கம் என்ற ஆறங்கப் பாமாலை

  சரவணபவ ஷட்கம்

  பார்வதீ ப்ரிய நந்தனம் குஹம்
  அருணகிரீஸ்வர கீத வசீகரம்
  குங்குமவர்ணம் வல்லீ ஸமேதம்
  குமாரம் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  சூரபத்மாசுர சம்ஹார மஹாவீரம்
  சிம்ஹ முகாசுர ஜீவ ஹரம்
  விஸ்வ ஸ்வரூபம் தாரகாசுரகாலம்
  ஷண்முகம் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  கமல ருத்ராக்ஷ சக்தி தரம்
  குக்குடத்வஜ ஹஸ்தகம் சிவம்
  கடம்பமாலா ப்ரியம் தேவஸேனாபதிம்
  ஸ்கந்தம் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  மரகத மயூர வாஹந மூர்த்திம்
  மதனகோடி ப்ரதாபம் சௌந்தரம்
  மஹா சிந்து சமுத்ர தீரநிவாஸம்
  மதுரமயம் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  கங்காபுத்ரம் கருணாம்ருத சாகரம்
  ஹம்ஷவாஹந ப்ரம்ம ஸேவிதம்
  சைல வாஸிநம் சத்ருசம்ஹாரம்
  சிவகுரும் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  சரவணபவ ஷட்கோண மத்யநிலயம்
  ஸர்வ ஸம்பத்ப்ரதம் ஸர்வானந்தம்
  ஷஷ்டீபூஜந ப்ரியம் வல்லிமநோஹரம்
  ஸ_ரபதிம் ஸ்ரீ ஜயந்திபுர நாதம்

  ஸ்ரீ.தி.மயூரகிரி சர்மா

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey