வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

குனிந்த தலையுடன் ஆசிரியர் கூறும் கணக்கை அடக்க ஒடுக்கமாக மாணவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். “ஐந்து ஆடுகள் ஒரு புல்வெளியிலுள்ள புல்கள் அனைத்தையும் 28 நாட்களில் தின்று முடித்துவிடும் என்றால் எத்தனை ஆடுகள் சேர்ந்து 20 நாட்களில் அவற்றை தின்று முடிக்க முடியும்?” கணித ஆசிரியரின் குரல் அந்த வகுப்பறை சுவர்களில் மோதி எதிரொலி அடங்கவில்லை. “ஏழு ஆடுகள் சார்” ஒரு மாணவனின் குரல் கணீரென எழுந்தது. “யாரடா அந்த அதிகப்பிரசங்கி கணக்கை எழுதாமல் உத்தேசமாக பதில் சொல்லுபவன்?” ஆசிரியரின் உக்கிரமான கேள்விக்கு “பாலன் சார்” என்று பதில் குரல்கள் சில மாணவர்களிடமிருந்து எழுந்தன. பாலன் என அழைக்கப்பட்ட அந்த சிறுவனின் அருகே சென்றார் ஆசிரியர். கணக்கை எழுதியிருந்தான்; ஆனால் எங்கும் வகுக்கவோ பெருக்கவோ இல்லை. “எங்கே செயல்முறை செய்திருக்கிறாய் காட்டு” என்றார் ஆசிரியர். ஒரு குறும்பு சிரிப்புடன் அந்த மாணவன் காட்டினான் “இங்கே” என்று தன் தலையை. ஆசிரியர் வியந்து போனார்.

அவனது புத்தியின் வண்ணம் அன்று கண்ட ஆசிரியருக்கு அவன் மன உறுதியின் வண்ணத்தையும் காண வாய்ப்பு விரைவில் கிடைத்தது. அன்று மதியம் வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியருக்கு வந்தது கோபம். காரணம் வகுப்பறை தரையில் சிதறிக்கிடந்த தோல்கள்தாம். “யாரடா இங்கே வேர்கடலைத் தோல்களைச் சிந்தி அசிங்கப் படுத்தியிருப்பவன்?” கர்ஜித்தார் ஆசிரியர். ஒருவராவது முனக வேண்டுமே, மௌனமே நிலவியது அங்கே. ஆத்திரம் மேலோங்க பிரம்பை எடுத்தார் ஆசிரியர். செய்த குற்றத்தைச் செய்தவன் ஒத்துக் கொள்ளாவிட்டால் வகுப்பில் அனைவருக்கும் அடி என்று அறிவித்தார். ஒவ்வொரு சிறுவனுக்கும் கையில் இரண்டு அடிகள். பாலனின் முறை வந்த போது அமைதியாக, ஆனால் உறுதியாகக் கையை நீட்ட முடியாது என சொல்லிவிட்டான். வகுப்பே அதிர்ந்து பார்த்தது.

”நான் வேர்க்கடலையைச் சாப்பிடவில்லை, தோலையும் போடவில்லை. யார் போட்டார்கள் என தெரியாது. யாரோ செய்த தவறுக்காக நான் அடி வாங்க முடியாது.”

ஆசிரியருக்கு அவனது மன உறுதி சங்கடமாக இருந்தது. இப்படி நிமிர்ந்து நிற்கும் சிறுவனை அவன் கண்களில் தெரியும் உண்மையை மீறி அடிக்க அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் மாணவனுக்கு முன்னால் தாழ்ந்து போகவும் முடியாது. “போடா வெளியே… நாளைக்கு உன் தந்தையை அழைத்து வந்தால்தான் உனக்கு என் வகுப்பில் இடம்.” என்று சொல்லி அவனை வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினார். மறுநாள் அந்தச் சிறுவனின் தந்தை வந்தார். தன் மகனுக்கு வீட்டுக்கு வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கமும் கிடையாது அவனுக்கு அப்படி பணம் கொடுத்து அனுப்பும் பழக்கம் தனக்கும் கிடையாது என விளக்கினார்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. அந்த சிறுவன் வளர்ந்துவிட்டான். இனி அவன் என சொல்ல முடியாது அவர் என்றே சொல்லுவோம் மரியாதையுடன். ஆனால் இந்த மரியாதை அவரது வயதுக்கு மட்டுமேயான மரியாதை அன்று என்பதையும் சொல்லவேண்டும். அதே உறுதியுடன் நிற்கிறார் அவர். அதே நெருப்பு, உண்மையின் நெருப்பு அவரது விழிகளில். அவர் நிற்கும் இடம் நீதி மன்றத்தின் குற்றவாளி கூண்டில். சாட்டப்பட்டிருக்கும் குற்றமோ இராஜ துரோகம். இதோ ஜூரிகள் முடிவு செய்துவிட்டனர். “தீர்ப்புக்கு முன்னால் சொல்ல ஏதாவது உண்டா?” என கேட்கின்றனர் அவரிடம். அவர் எழுந்து நிற்கிறார். நீதிபதி பதட்டத்துடன். குற்றம் சாட்டப்பட்டவரோ திடமாக அமைதியாக. குற்றவாளி கூண்டில் நிற்கும் அவர் சொல்கிறார்:

நான் சொல்ல விரும்புவதெல்லாம், ஜூரிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் குற்றமற்றவன்தான். உயர்ந்த சக்திகள் மானுடத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன. எந்த இலட்சியத்தை நான் ஏற்றெடுத்திருக்கிறேனோ அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு, நான் சுதந்திரமாக இருப்பதைக் காட்டிலும் நான் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு சிறையில் இருப்பதே உதவக்கூடும் என்பது தெய்வ இச்சையாக இருந்தால் அதுவே நடக்கட்டும்.

நீதிபதி இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கடும் கோபமடைகிறார். ஆறு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு சிறைவாசம் என்பதுடன் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறார்.

இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் “சுதந்திரம் எனது பிறப்புரிமைஎனும் கோஷத்தை இந்த தேசத்துக்கு தந்த மகான் பாலகங்காதர திலகர். லோகமான்யர்.

திலகர் செய்த குற்றம் தான் என்ன? 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, வங்காளத்தின் முஜாபர்பூரில் குதிராம் போஸ் பிரபல்ல சாகி எனும் இரு இளைஞர்கள் பாரத தேசியவாதிகளை கொடுமையாக தண்டித்து வந்த கிங்க்ஸ்போர்டு எனும் வெள்ளைக்கார நீதிபதியை பழிவாங்க குண்டுகளை எறிந்தனர். துரதிருஷ்டவசமாக கிங்க்ஸ்போர்டு தப்பினான். ஆனால் இரண்டு ஆங்கிலேய பெண்கள் அவன் வழக்கமாக செல்லும் கோச் வண்டியில் சென்றதால் பலியானார்கள். பூனாவில் இருந்து வெளியாகும் திலகரின் கேசரி பத்திரிகையை இந்த குண்டு வீச்சுடன் இணைத்து அரசு அவரை கைது செய்தது. இது குறித்து திலகர் தன் நண்பரிடம் சொன்னார்:

இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? அன்னிய ஆட்சி இந்த தேசத்தையே ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றியுள்ளது. நான் ஒரு பெரிய சிறை சாலையில் இருந்து சிறிய சிறைச்சாலைக்கு செல்கிறேன் அவ்வளவுதான்.

திலகர் பர்மாவில் மாண்டலே எனும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே 20க்கு 12 அடி கொண்ட அறையில் – அதனை அறை என சொல்ல முடியாது கூண்டு என்றுதான் சொல்லவேண்டும்- ஆறாண்டுகள் சிறைவாசத்தைக் கழித்தார். சிறை வாசத்துடன் இணைந்த நாடுகடத்தலில் அவர் உடல் ரீதியாக பல துன்பங்களை அனுபவித்தார். ஏற்கனவே சிறைவாசத்தில் தினமும் கைகளில் கொப்பளங்கள் ஏற்படும் வரை கயிறு திரிக்கவேண்டும்; பாய் முடைய வேண்டும், என்பது போன்ற கொடுமைகளை அனுபவித்தவர் அவர். ஆனால் துன்பத்தையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பாலி ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். திலகர் சிறையில் வாடிய இந்த காலகட்டத்தின் போதுதான் அவரது துணைவியார் சத்தியபாமா இறந்தார். இந்த சிறையில்தான் மிகவும் ஆழமான கீதை ஆராய்ச்சியாகக் கருதப்படும் “கீதா இரகசியம்” திலகரின் மனதில் உருவானது. இந்நூலின் சிறப்பு அதன் தத்துவ ஆழங்களில் மட்டுமல்ல. தமது உயிரினும் மேலான கீதையை ஒரு ஆராய்ச்சியாளரின் கண்ணோட்டத்துடன் அணுகுவதையும் திலகரால் சரியான பார்வையில் எடுத்துக்கொள்ள முடிந்தது என்பதையும் காட்டுவதுதான்.

உதாரணமாக கீதையின் காலம் குறித்த விவாதத்தை திலகர் அணுகும் முறையை எடுத்துக்கொள்ளலாம். கீதையின் காலம் குறித்து பல்வேறு கருத்துகளை, குறிப்பாக மேற்கத்திய இந்தியவியலாளர்களின் கருத்துகளைக் கூறிவிட்டு ஆனால் அவை புற ஆராய்ச்சிகள் என்றும் அத்தகைய ஆராய்ச்சி தம் நூலின் நோக்கமல்ல என்றும் கூறுகிறார். ஆனால் இந்த ஆராய்ச்சி முடிவுகளை தொகுத்தளிக்கிறார்:

இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கீதையில் காணப்படும் பழமையான சொல்லமைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, இந்த நூல் கிறிஸ்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அது மட்டுமன்றி கீதையில் விவரிக்கப்பட்டுள்ள பக்தி மார்க்கம் (பிற்காலத்தில் தோன்றிய) கிறித்துவ மதத்திலிருந்து தழுவப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.: இது முற்றிலும் ஆதாரமற்ற கூற்றாகும். மற்றொரு ஆராய்ச்சியாளர் கீதையின் 16-ஆவது அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நாத்திகவாதக் கருத்துக்கள் அனேகமாக பௌத்த சமயக் கருத்துக்களாக இருக்கலாம் என்றும் அனுமானித்து கீதை புத்தர் காலத்திற்குப் பிறகு தோன்றியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இன்னொரு ஆராய்ச்சியாளரோ ‘கீதை பிரம்ம சூத்திர காலத்துக்கு பின்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும்’ என சாதித்துள்ளார். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய் யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு பிரமஞானத்தை போதிப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும், இந்த அற்புதமான வேதாந்த ஆய்வு நூல் பிற்காலத்தில் மகாபாரதத்தில் யாரோ ஒருவரால் இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். இத்தகைய புறநிலை ஆராய்ச்சிகள் எல்லாம் பயனற்றவை என்று கூறிவிடமுடியாது.ஆனால் எந்த ஒரு நூலின் மறை பொருளையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் இப்படிப்பட்ட புறநிலை ஆய்வில் நேரத்தை வீணாக்கக் கூடாது.

இம்முன்னுரையில் கீதையின் காலகட்டத்தை மிகவும் கீழே கொண்டு வரும் ஆராய்ச்சிகளை எவ்வித கண்டனத்துக்கும் உள்ளாக்காமல் திலகர் குறிப்பிடுகிறார் என்பதை கவனிக்கவேண்டும். அவர் கண்டிக்கும் ஒரே “ஆராய்ச்சி” கீதைக்கு கிறிஸ்தவ தாக்கத்தை கற்பிக்கும் உள்நோக்கம் கொண்ட “ஆராய்ச்சி”யை மட்டுமே.

rishis-2இதைப் போலவே அவர் வேதத்தின் கால நிர்ணயம் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியும் முக்கியமானது. பலர் அவரது “ஆர்டிக் பிரதேசத்தில் வேத பண்பாட்டினரின் தாயகம் இருந்திருக்கலாம்” எனும் (தவறான) கருதுகோளை மட்டுமே இவ்விவாதத்தில் அவரது பங்களிப்பாக கருதுகின்றனர். ஆனால் அவரது மிகவும் முக்கியமான பங்களிப்பு வேதத்தின் கால நிர்ணயத்தில் வானியல் தரவுகளை பயன்படுத்துவது குறித்ததாகும். இதிலும் அவர் காட்டியிருக்கும் சத்திய வேட்கை சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் ஒரு முக்கிய பாடமாகும். 1893 இல் வெளிவந்த இந்த ஆராய்ச்சி நூலின் பெயர் ஓரியன் (மிருகசீரிஷம்) என்பதாகும். வேதங்களில் உள்ள வானியல் தரவுகளின் அடிப்படையில் அதன் காலம் மாக்ஸ்முல்லர் போன்ற இந்தியவியலாளர்கள் கணித்த கிமு1500-1200 எனும் காலத்தைக் காட்டிலும் குறைந்தது ஆயிரத்து ஐந்நூறு – இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தையதாக இருக்க வேண்டுமென அவர் நிறுவினார். அதே சமயம் மகாபாரத-இராமாயண காலகட்டத்தை வானியல் அடிப்படைகளில் கிமு 5000-6000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர் சிலரின் தரவுகளை தாம் இந்நூலில் பயன்படுத்தவில்லை என சுட்டிக்காட்டுகிறார். அதாவது பழமையாக காட்ட வேண்டும் என்பதற்காகவே அகவயப்பட்டு தரவுகளை கொடுக்கும் தன்மை அவரிடம் இல்லவே இல்லை. திலகர் அளிக்கும் பண்டைய இந்தியாவின் காலகணக்கு

மிகப்பழமையான வேத செய்யுள்: கிமு 6000-4000
ஆருத்ரா விண்மீன் கொண்ட செய்யுட்களின் காலம்: கிமு 4000-2500
கிருத்திகா விண்மீன் கொண்ட வேத செய்யுட்களின் காலம்: கிமு 2500-1400
பௌத்தத்திற்கு முந்தைய காலகட்டம்: கிமு 1400-500

இதில் திலகர் மகாபாரத நிகழ்வு நடந்ததாகக் கூறுவது கிமு 1400 1950க்கும் முந்தைய மாபெரும் இந்திய ஆளுமைகளில் வெள்ளையர்களின் கருதுகோள்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சுயமான ஆராய்ச்சியாளர்களாக விளங்கியவர்களுள் முக்கியமானவர்கள் திலகரும் அம்பேத்கரும்.

திலகரின் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வைட்னி போன்ற மேற்கத்திய இந்தியவியலாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டன. வேத இலக்கியங்களில் வானியல் தரவுகள் இருப்பதையே வைட்னி மறுதலித்தார். அவரைப் பொறுத்தவரை இந்தியர்கள் வானியல் தரவுகளை அறிவியல்பூர்வமாக அறிந்து கொண்டதே கிரேக்கர்களுடன் இந்தியர்களுக்கு தொடர்பு ஏற்பட்ட பிறகுதான். ஆனால் திலகரோடு எவ்வித தொடர்பும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வேத இலக்கியங்களில் உள்ள வானியல் தரவுகளை ஆராய்ந்த மற்றொரு புகழ் பெற்ற மேற்கத்திய இந்தியவியலாளர் ஹெர்மான் ஜெக்கோபி என்பவராவார். (இவரே மகாவீரரும் ஜைன சமயமும் புத்தரின் மற்றும் பௌத்தத்தின் மாறுபட்ட வடிவங்களல்ல என மேற்கத்திய இந்தியவியலாளர்களுக்கு நிரூபித்தவர். அதுவரை புத்தரையே இந்தியர்களில் ஒரு பிரிவினர் தவறுதலாக மகாவீரர் என கருதுவதாகவே மேற்கத்திய இந்தியவியலாளர்கள் கருதினர். அதாவது இந்தியர்களின் நம்பிக்கைகள் இயல்பாகவே தவறாகத்தான் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் அவற்றை சரி என நிரூபித்தாலொழிய என்பதுதான் மேற்கத்திய இந்தியவியலின் அடிப்படை தேற்றம் : மாக்ஸ்முல்லர் முதல் மைக்கேல் விட்ஸல் வரை.) இன்றைக்கும் வேத இலக்கியத்தின் வானியல் தரவுகள் ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு சவாலாக விளங்குகிறது என்பதை பெல்ஜிய இந்தியவியலாளரான எல்ஸ்ட் சுட்டிக்காட்டுகிறார்:

வானியல் தரவுகள் (இந்திய இலக்கிய கால ஓட்டத்தில்) முரண்பாடுகளற்று இருக்கின்றன. …நிச்சயமாக வானியல் தரவுகளை முழுமையாக எடுத்துக்கொள்ளும் போது அவை ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு காட்டும் கால வரையறைகளுக்கு முரணாகவே உள்ளன.

திலகர் வேத கால பாரதத்தை ஒரு சுயச்சார்பு கொண்ட தேசமாகக் கண்டார். அத்தகைய சுயசார்பு கொண்ட தேசமாக பாரதம் மீண்டும் வடிவெடுக்க வேண்டுமென விரும்பினார். இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒரே பண்பாட்டு ஆன்மிக தளமாக இருப்பதை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். 1906 ஆம் ஆண்டு வாரணாசியில் ஒரு கூட்டத்தில் அவர் கூறினார்:

வேத காலங்களில் பாரதம் சுயமாக நிற்கும் தேசமாக இருந்தது. அது மாபெரும் தேசமாக தன்னுடைய ஒற்றுமையால் திகழ்ந்தது. அந்த ஒற்றுமை அழிந்ததே நாம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமாகும். தேசத்தலைவர்களின் பெரும் பொறுப்பு அந்த ஒற்றுமையினை மீண்டும் உருவாக்குவதே ஆகும். காசியில் வாழும் ஒரு ஹிந்து எந்த அளவு ஹிந்துவோ அதே போலத்தான் சென்னையிலும் பம்பாயிலும் வாழும் ஹிந்துவும். இராமாயணம், மகாபாரதம் ஆகியவை இந்த தேசத்தினை ஒரே சிந்தனையோட்டத்தில் வைத்திருக்கின்றன. இவையல்லவா நம்முடைய பொதுவான பாரம்பரியம்? நாம் இதில் கவனம் வைத்தால், இந்த மகத்தான ஒற்றுமையின் முன்னால் சிறிய சிறிய வேற்றுமைகளை மறந்து இணைந்து செயல்பட்டால், தெய்வ சங்கல்பத்துடன் விரைவில் நம் நாட்டில் வாழும் அனைத்துவித வழிபாட்டு முறைகளையும் ஒற்றுமையாக ஒரு மகத்தான ஹிந்து தேசமாக ஒருமுனைப்படுத்திவிட முடியும். இதுவே ஒவ்வொரு ஹிந்துவினுடையவும் வாழ்க்கை நோக்கமாக இருக்கவேண்டும்.

Photo courtesy: INDRANIL MUKHERJEE/AFP/Getty Images
Photo courtesy: INDRANIL MUKHERJEE/AFP/Getty Images

மக்களை ஒன்று திரட்ட அவர் மக்கள் வீடுகளுக்குள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தியை வீதிக்கு கொண்டு வந்து அதனை மக்கள் சக்தி ஒருங்கிணையும் திருவிழாவாக மாற்றியமைத்தார். சிவாஜி மகாராஜாவின் திருநாளை பிரபலப்படுத்தினார். ஹிந்து ஸ்வராஜ்ஜியம் கண்ட அந்த மாவீரனது திருநாள் தேச விடுதலைக்கு மக்களை அணிதிரட்ட பயன்பட்டது. இன்றைய சூழலில் திலகரின் இந்த கருத்தியல் சிலருக்கு கேள்விகளை ஏற்படுத்தலாம். ஆனால் திலகரின் பெரிய வெற்றியே இந்த பண்பாட்டு ஆன்மிக தேசிய ஒருங்கிணைப்பில் அனைத்து மத மக்களையும் பிரிவினையின்றி ஈடுபட வைத்ததுதான். திலகரின் உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கியவர் முகமதலி ஜின்னா. திலகரின் மறைவு வரை ஜின்னா அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார்.. அதன் பின்னரே அவர் பாதை தடுமாறி பிரிவினைவாதியானார். மற்றொரு தேசியவாதியான முகமது கரீம் சாக்ளா தன் வாழ்நாளின் இறுதிவரை திலரின் பக்தராக வாழ்ந்தார். பிறப்பால் பாகிஸ்தானியராக இருந்து பின்னர் மானுடநேயவாதியாக வாழ்ந்த அன்வர் ஷேக் 1990களில் எழுதிய கட்டுரையில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் திலகர் காசியில் கூறிய அதே கருத்துகளை பிரதிபலிப்பதை காணலாம். அன்வர் ஷேக் எழுதுகிறார்:

பாரத தேசத்தில் வாழ்பவர்கள் எந்த கடவுளை வேண்டுமென்றாலும் வழிபடலாம். வேத பண்பாட்டில் கடவுளரிடையே பொறாமை கொண்ட தேவன் என்பது கிடையாது. ஏனெனில் வேத புனிதத்துவம் கடல் போன்றது. இந்த சுதந்திரமானது மிகவும் முற்போக்கான வேத சிந்தனைகளிலிருந்து பெறப்பட்டது. காலத்தின் சுழற்சியில் எல்லா மாற்றங்களும் ஏற்படும் எனவே மத நம்பிக்கை சமூக மோதல்களுக்கு இடம் கொடுக்கலாகாது எனும் உயரிய எண்ணத்திலிருந்து எழுந்தது. ஆனால் இந்த வேத சுதந்திரத்துக்கு ஒரு கட்டுப்பாடு/நிபந்தனை உண்டு. இந்த தேசத்தில் வாழ்பவன் இந்த தேசத்தை இந்த மண்ணை பாரதத்தை தன் அன்னையாக வணங்க வேண்டும் என்பதே அது.

திலகர் இந்துத்துவத்தின் மூலநாதம் என கருதலாம். ஹிந்துத்துவம் என்பது பிற மதத்தினரை வெறுப்பது அன்று. மாறாக நாம் நம்மில் ஒற்றுமையும் தேசபக்தியும் நம் ஆன்மிக பண்பாட்டின் மீது அறிதலும் பிடிப்பும் கொண்டு ஒழுகினால் நம் நாட்டில் வாழும் அனைத்து மத மக்களும் இந்த தேசத்தின் பண்பாட்டை அதன் மகோன்னதத்தை உணர்ந்து நடப்பர் என்பதால் அத்தகைய ஒற்றுமையை உண்டாக்குவதே திலகர் முன்வைத்த ஹிந்துத்வம் ஆகும்.

இவ்வாறு தேசபக்தி, பலமுனை மேதமை ஆகியவற்றுடன் தியாகம், சமரசமற்ற உண்மை வேட்கை ஆகியவற்றுடன் வாழ்ந்த திலகர் பெருமானின் பிறந்த நாள் ஜூலை 23.

வீர மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனத்திகழ்
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்கமலத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே

வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே
வீழ்க கொடுங் கோன்மை வீழ்க வீழ்கவே
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே
நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே

ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே

-மகாகவி

16 Replies to “வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …”

  1. சுதந்திரம் எனது பிறப்புரிமை.. அதை அடைந்தே தீருவேன் எனக் சொன்ன பால கங்காதர திலகரைப் பற்றிய கட்டுரை மிகப் பொருத்தம். மிக நன்றாய் எழுதப்பட்டுள்ளது. நமது குழந்தைகளுக்கு தேசத்திற்கு உழைத்த உத்தமர்களைப் பற்றிச் சொல்லித்தருதல் அவசியம்.

    சர்தார் வல்லபாய்ப் படேல் அவர்களைப் பற்றிய கட்டுரையை வெளியிட இயலுமா??

    ஜெயக்குமார்

  2. Wonderful. I thank TamilHindu for bringing articles on all the national leaders. When the sacrifices of such great personalities have been forgotton (or made to forget) these days, such articles really enlightens all. Today, the myth has been created that only Nehru and his clan are the national leaders of India. Even Gandhi has been sidelined in the recent past. The current generation should realize the sacrifice of such great leaders and their contribution to the society.

    Thanks once again.
    Satish

  3. I just cried reading this. em munnor kanniral katha payirai karuka vittu nirkirom…

  4. ஆரம்பம் ஒரு நடையிலும் பிற்பகுதி ஒரு நடையிலும் இருந்து, இரண்டு ஆளுமைகள் இக்கட்டுரையை எழுதியது போன்ற ஒரு பிரமை. கட்டுரையின் பிற்பகுதி நன்று. //பெல்ஜிய இந்தியவியலாளரான// – இந்தியவியலாளர் என்றால் என்ன அர்த்தம்?

  5. இந்தியவியலாளர் என்றால் என்ன அர்த்தம்?

    INDOLOGY
    Indology is the academic study of the languages, texts, history and cultures of the India and as such a subset of Asian studies.

    தேவ்

  6. இந்தியர்களின் நம்பிக்கைகள் இயல்பாகவே தவறாகத்தான் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் அவற்றை சரி என நிரூபித்தாலொழிய

    INTHAKKARUTTHU INDRUM NAM MAKKALIDAYEYUM NILAVUVATHU MIGUNDHA VADHANAIKKURIYATHU
    GALILIO BOOMI URANDAI ENDRU KANDU PIDITTHAR ENBATHUTHAN INDRAIKKUM PADANGAL
    NADAKKINDRANA AANAL MANICKAVASAGARIN ” ANDAIPPAGUTHIYIL UNDAI PIRAKKAM ” VARIGALAI
    MANNIKKAVUM VAIRA VARIGALAI ETTHANAI NABARUKKU THERIYUM.

  7. வணக்கம்,

    திலகரை ஒரு சதந்திரப் போராட்ட வீரராக மட்டுமே இது வரை நான் நினைத்து இருந்தேன், அனால் அவர் வேத ஆராய்ச்சியாளர் என்பது இப்போதுதான் அறிகிறேன், மிக்க நன்றி நண்பர் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்களே. மிகவும் பயனுள்ள, அனைவரும் அறிந்துகொள்ள அவசியமான கட்டுரை.

  8. You are doing great service by bringing out articles like this. Many leaders who fought for us to gain freedom have long been forgotten by the present generation. It is better they are reminded of the great tradition of our country. Thank you for this great service.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *