மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை
தமிழ்செல்வன்
16 Jul 2009 |
அச்சிட
ஜூலை முதல் வாரம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் ஸம்ஸ்க்ருதத் துறைப் பேராசிரியர் மைக்கேல் விட்சல் நம் நாட்டுக்கு ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டு சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விக் கணைகளை தொடுத்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும் . விட்சல் தமிழ் இந்து தளத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில்கள் தருவாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். நம் சென்னை மாநகரில் அவரது நிகச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளாவது இக்கேள்விகளை அவர்கள் அழைத்து வந்த அமெரிக்க அறிஞருக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்புவோம்.
இந்நிலையில் மைகேல் விட்சலின் மேதா விலாசத்தையும் யோக்யதாம்சங்களையும் வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவரது வருகையை ஒட்டி சென்னையில் நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இதிலிருந்து தெரிந்து கொள்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதுமாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
மைகேல் விட்சலின் மேதா விலாசம் மற்றும் யோக்யதாம்சங்கள்:
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் “ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்”! நம் நாட்டில் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு என்ன பாடங்கள் இருக்குமோ, அவற்றை தான் ஹார்வார்ட் பல்கலை வகுப்புகளில் இவர் நடத்துகிறார்; இவருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசத் தெரியாது; சம்ஸ்க்ருதத்தில் சுத்தமாகப் புலமை இல்லை என்று கூறப் படுகிறது. இவர் ஆரிய திராவிட இனவாதம், ஆரியப் படையெடுப்பு ஆகிய ஆதாரம் இல்லாத, அறிவியலுக்கு ஒவ்வாத கோட்பாடுகளில் (அவை பொய் என்று தெரிந்தும்) நம்பிக்கை கொண்டு அவற்றைப் பரப்புவதற்கு பெரிதும் முயன்று வருபவர்.
ஆரிய இனவாதம் விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளதாகக் கூறுபவர். மத்திய ஆசியாவில் உள்ள மக்கள் அனைவரும் விவிலியப் பிரளயத்திற்குப் பின்னர் நோவாவின் சந்ததிகளே என்று வாதம் செய்பவர். ஸம்ஸ்க்ருதம் இந்திய மொழி அல்ல என்றும் மத்திய ஆசிய மொழியென்றும் சாதிப்பவர். சம்பிரதாய மொழியியல் (Philology) ஒரு உண்மையான விஞ்ஞானம் என்று சொல்பவர் (ஆனால் உண்மையில் Philology விவிலியக் “கதைகளை” உண்மையென நிரூபணம் செய்ய “ஏற்பாடு” செய்யப் பட்ட ஒரு போலி விஞ்ஞான மார்க்கம் தான். pseudo-science.)
DNA அறிவியல் அதற்கு எதிரானது என்று கூறுபவர்; கார்பன் டேடிங் (Carbon Dating) அகழ்வாராய்ச்சி (Archaeology) ஆகியவை போலி-விஞ்ஞானம் என்பவர்;
பாரதத்தின் பழம்பெரும் நாகரிகத்தில் குதிரைகள் கிடையாது என்றும் அவை கழுதைகள் தான் என்றும் சாதிப்பவர். பாரத கடல் எல்லைகளில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் முன்னர் இருந்த நாகரிகத்தை உறுதி படுத்துகின்றன என்று கூறிய அமெரிக்க டர்ஹாம் பல்கலைக் கழகம் (University of Durham) ஹிந்துத்துவவாதிகளுடன் சேர்ந்து சதி செய்துள்ளது என்று கூறுபவர்.
மொத்தத்தில் விவிலிய நம்பிக்கைகளுக்கு எதிரான அனைத்தும் போலி விஞானம் என்றும் அவை ஹிந்துக்களின் சதி என்றும் சொல்பவர். ஹிந்து மதம், ஹிந்து கலாசாரம், வேத நாகரிகம், ஹிந்துத்துவம், பாரதம், ஸம்ஸ்க்ருதத்தின் புனிதம் ஆகிய அனைத்திற்கும் எதிரானவர். எதிராக வேலை செய்பவர். உதாரணமாக, “ஓம்” என்ற சொல் ஒருவரின் மனைவியையோ அல்லது ஆட்டையோ (Goat) அழைக்கும் சொல் என்று இயம்பி தன் மேதாவிலாசத்தை இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் மதப்பிரசார இயக்கங்களுடன் கூட்டு ச் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகப் பணி புரிபவர். இந்து தர்மத்தை எள்ளி நகையாடியவர். கிறிஸ்துவப் பார்வையுடனேயா உலகத்தை அணுகுபவர். ஹிந்து சமூகத்திலிருந்து தலித்களைப் பிரிக்க, கிறிஸ்துவ சர்ச்சினால் இயக்கப்படும் தலித் விடுதலை இணைப்பு (Dalit Freedom Network) என்கிற இயக்கத்துடனும் தொடர்பு வைத்திருப்பவர்.
மேலும், இவர் நம் நாட்டின் உயர்ந்த வல்லுனர்களை, ஆராய்ச்சியாளர்களை, கல்வி அறிவாளர்களைக் கேவலப் படுத்தியவர். சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியிலும், மொழி ஆராய்ச்சியிலும் பல ஆண்டுகள் உழைத்து மிகவும் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளைத் தந்துள்ள சான்றோர் திரு டாக்டர் கல்யாணராமன் அவர்களை விட்சல் தரக் குறைவாக நடத்தியிருக்கிறார். சமீபத்தில் கூட ரிக் வேதம் பற்றி சிறந்த நூல் ஒன்றை நமக்களித்த சான்றோர் திரு ஸ்ரீகாந்த் தலகெரி என்பவரை தரமற்ற வார்த்தைகள் சொல்லி அவமதித்துள்ளார்.
சான்றோர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் சிறந்த கல்விமான்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அவர்களுக்கிடையே வாத விவாதங்கள் நடப்பதும் சகஜம். ஆனால் அம்மாதிரிச் சமயங்களில், தெருச் சண்டைக்கு ஈடாக, அடுத்தவர் மீது தரமற்ற சொற்களை உபயோகித்து அவர்களை அவமானப் படுத்துபவர் இந்த மைகேல் விட்சல். இத்தனைக்கும் அவர்களின் கால் தூசி பெறாதவர் இவர்! ஸ்டீவ் ஃபார்மர் என்று இவருக்கு ஒரு அடிப்பொடி இருக்கிறார். அவரும் மேற்சொன்ன புனிதப் பணியில் இவருடன் சேர்ந்து கொள்பவர்.
மைகேல் விட்சலின் சமீபத்திய “சாதனை”:
அமேரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் வரலாறு பாடத் திட்டத்தில் இந்து மதத்தைப் பற்றியும், இந்து கலாசாரம் மற்றும் ஆன்மிகம் பற்றியும் தரக்குறைவாக மிகவும் கொச்சைப் படுத்தி பல அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டன. மற்ற மதங்களைப் பற்றிய பாடங்களை அவரவர்களே தயார் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்து மதப் பாடத் திட்டங்களை கலிபோர்னியப் பாட நூல் நிறுவனமே கிறிஸ்துவர்களைக் கொண்டு தயார் செய்தது. வீட்டில் பெற்றோர்கள் கற்றுத் தரும் விவரங்களிலிருந்து பள்ளியில் பாடப் புத்தகங்கள் மற்றும் ‘வெள்ளை’ ஆசிரியர்கள் கற்றுத் தரும் விவரங்கள் முற்றிலுமாக மாறி இருப்பதைக் கண்டு மிகவும் குழம்பிப்போன நம் இந்துக் குழந்தைகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
பதறிப்போன பெற்றோர்கள் California Parents for the Equalisation of Education Materials (CAPEEM) என்கிற குழுவின் கீழ் ஒன்று திரண்டு, கலிபோர்னிய நீதிமன்றத்தில் பாடநூல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஹிந்துக்களுக்கு எதிராகவும், பாடத் திட்டங்கள் மாற்றப் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், கொலராடோ சர்ச்சுடன் சேர்ந்து இயங்கியவர் மைகேல் விட்சல். ஹிந்துப்பெற்றோர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருந்தும் கூட, தான் பெரிதாகச் சாதித்துவிட்டதாகக் கொக்கரித்து வருகிறார் என்றும் கேள்வி.
மைகேல் விட்சலின் இந்தியப் பயணம்:
கிறிஸ்துவ இயக்கங்களுக்கே உரிய முறையில் மைகேல் விட்சலின் இந்தியப் பயணம் ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது போலும். அவருடைய பிரயாண விவரங்கள் உறுதி செய்யப்படாமல் கசிந்திருகின்றன. முதலில் அவர் ஸம்ஸ்க்ருத கல்லூரிக்கு எட்டாம் தேதி தான் வருவதாக சொல்லப் பட்டுள்ளது. நிகழ்ச்சியை யார்/ எந்த நிறுவனம் நடத்துகிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டுமே அழைப்பிதழ்கள் சென்ற போது தான், அதாவது மூன்றாம் தேதி வாக்கில், மைகேல் விட்சலின் நிகழ்ச்சி ஆறாம் தேதி மாலை என்பதும், அதை நடத்துகிறவர்கள் ஸம்ஸ்க்ருத கல்லூரியும் அதன் உள்ளேயே அமைந்திருக்கும் “குப்புஸ்வாமி சாஸ்த்திரி ஆராய்ச்சி நிறுவனம்” என்பதும், என்று தெரியவந்துள்ளது. சிந்துவெளி ஆராய்ச்சிகளில் பெரும் சாதனை படைத்த ஆய்வாளர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களும் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மைகேல் விட்சல் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களையும் முன்பு கடுமையாக விமரிசனம் செய்துள்ளார். “ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஒரு கற்றுணர்ந்த சான்றோர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். இருந்தும் (கல்வி நெறிமுறைகளைக் கருதி??) மகாதேவன் அவர்களின் நூல் ஒன்றை ஹார்வார்ட் பல்கலை மூலமாக அமேரிக்காவில் வெளியிடவும் அவர் ஏற்பாடு செய்தார். மகாதேவனே இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தும் இருக்கிறார். தனது “Early Tamil Epigraphy: From the Earliest to the Sixth Century A. D” என்ற நூலின் அறிமுக மடலில், “I received an offer from Prof. Michael Witzel, the Department of Sanskrit and Indian Studies, Harvard University, USA, to have the work published in the Harvard Oriental Series (HOS). I thank him for honour and I am also grateful to my friend, Mr N. Ram, Frontline, Chennai, who had earlier introduced me to Prof. Witzel”, என்று பதிவு செய்துள்ளார். அதே கல்வி நெறிமுறைகளைக் கருதி, மகாதேவனும் விட்சல் அவர்களது சென்னை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாரோ என்னவோ?
ஆனால் விட்சலையும் அவருடைய ஹிந்து விரோத, இந்திய விரோத நடவடிக்கைகளையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் சில ஆர்வலர்கள், அவர் பழம்பெருமை வாய்ந்த ஸம்ஸ்க்ருத கல்லோரியிலேயே கால் வைக்கப் போகிறார் என்று அறிந்ததும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒரு பாரம்பரிய மிக்க நிறுவனமே, ஒரு ஹிந்து விரோதியை அங்கீகரித்து பெருமை சேர்த்தது போலாகுமே என்று மனம் வருந்தியிருக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்கள். சரஸ்வதி நதி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் கல்யாணராமன், விஜில் (VIGIL) இணையதள ஆசிரியர் திருமதி ராதா ராஜன் மற்றும் கட்டுரையாளர் திரு பி ஆர் ஹரன் ஆகியோர் ஸம்ஸ்க்ருத கல்லூரி நிர்வாகிகளையும், ஐராவதம் மகாதேவனையும் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய கடைசி நிமிடம் வரை முயற்சி செய்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி ரத்து செய்யப் படவில்லை என்பது திங்கள் மாலை தெரிந்து விட்டது. ஒரு கல்வி சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிக்கு சிறிதும் பொருந்தாத வகையில் ஸம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் காவல் பாதுகாப்பு வேறு போடப் பட்டிருந்தது. எதிர்ப்புக் குழுவினரில் சிலர் ஸம்ஸ்கிருத கல்லூரி வளாகத்திற்கு உள்ளே சென்று மேற்குறிப்பிட்ட விவரங்கள் அடங்கிய ”தெரிந்து கொள்ளுங்கள் மைகேல் விட்சலை” (Know your Witsal) என்ற பிரசுரத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
வேறு சிலர் வெளியில் வந்து மைகேல் விட்சலை எதிர்த்து எழுதப்பட்ட சில அட்டைகளை வைத்துக் கொண்டு வாசலில் நின்றபோது காவல் துறையினர் விசாரணை செய்ய, நடந்தவற்றை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். அப்போது அங்கே சென்று சேர்ந்து கொண்ட ஹரன் அவர்களும் தான் கையில் கொண்டு சென்ற நோட்டீஸ்களை நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் கொடுக்க முயன்றபோது, காவல் துறை அதிகாரிகள் நிகழ்ச்சி முடிந்து வந்திருந்தவர்கள் வெளியே போகும்போது கொடுங்கள் என்று சொன்னவுடன் சரி என்று நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து பின்னர் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து மைகேல் விட்சலைப் பற்றிக் கேட்டறிந்த காவல் துறையினர் “இப்பேர்ப்பட்ட ஒருவரை கூப்பிட்டு இங்கு கௌரப்படுத்த வேண்டுமா!” என்று வியந்து, “சீருடையில் இல்லையென்றால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு நோட்டீஸ்களை கொடுத்திருப்போம்” என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
மைகேல் விட்சலின் வருகைக்கு ஆட்சேபம் தெரிவித்தவர்கள் சமூக விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ, அல்லது தீவிரவாதிகளோ அல்ல. சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் அறிஞர்கள், படைப்பாளிகள் அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால், விட்சலுடன் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்க சில நிமிடங்கள் ஒதுக்கியிருந்தால், நிகழ்ச்சியை நடத்துகின்றவர்கள் பெரிதும் பாராட்டப் பட்டிருப்பார்கள். ஆனால் ஏதோ சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முயல்வதைப் போல காவல் துறைப் பாதுகாப்பு கேட்டதும், கருத்தரங்கத்தில் மைகேலிடம் கேள்விகள் கேட்க அனுமதிக்காததும், அவரின் “மேதா விலாசம்” வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்கான திட்டமிடலோ என்று சந்தேகப் படத் தோன்றுகிறது. சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட ஒரே அகாடமிக் நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும்!
நிகழ்ச்சி நிகழ்வுகளும், உரைகளும்
(நிகழ்ச்சிக்குச் சென்று கலந்துகொண்ட நண்பர், கட்டுரையாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர் திரு வேதப்ரகாஷ் அவர்களிடம் கேட்டுப்பெற்ற தகவல்களைத் தருகிறேன்).
நிகழ்ச்சியில் வரவேற்புரை அளித்த டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், “ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் சொற்பொழிவாற்ற மிகவும் பொருத்தமானவர் திரு மைகேல் விட்சல். ஜெர்மனியில் பிறந்து 29 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மைகேல் விட்சல் அவர்களுக்கு இப்போது 66 வயது ஆகிறது. இந்தியர்களாகிய நாம் ரிக் வேதத்தை மறந்து விட்டோம். ஆனால் விட்சல் தினமும் அதைப் பாராயணம் செய்கிறார் . ரிக் வேதம் 4,32,000 ஒலிகளை உடையது. அது 8000 ஆண்டுகள் பழமையானது என்று திலகர் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அதற்கும் முன்னதாக அதன் காலம் இருக்கும். ஆனால் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அதை ஒத்துக் கொள்வதில்லை” என்று பேசினார்.
பின்னர் ராமர், கிருஷ்ணர் காலங்கள், தொல்காப்பியத்தின் பெருமை, ஸம்ஸ்க்ருத-தமிழ் மொழிகளின் பிணைப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசிய டாக்டர் மகாலிங்கம் அவர்கள், “தொலைந்து போன லெமூரிய கண்டத்தைப் பற்றிய விவரங்களையும் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அச்சமயத்தில் இருந்த மொழிகளைப் பற்றியும், மைகேல் விட்சல் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மைகேல் விட்சலைப் பற்றி இணையத்தில் உள்ள தகவல்களை வைத்தும், ஹார்வார்ட் பல்கலையில் இருக்கிறார் என்கிற காரணத்தினாலும், அவர் “ரிக் வேதம் தோற்றுவித்த மொழி மற்றும் கலாசாரம்” என்கிற தலைப்பில் பேச வந்திருக்கிறார் என்கிற காரணத்தாலும், அவர் தினமும் ரிக் வேதம் பாராயணம் செய்கிறார் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாகப் பட்டது. மேலும் சற்றும் வரலாற்று ஆதாரம் இல்லாத லெமூரிய கண்டம் பற்றி பேசியதும் வியப்பாக இருந்தது. ஆதாரம் இல்லாத ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் சொன்னதும் ஆச்சரியம் தான்.
ஸம்ஸ்க்ருதக் கல்லூரியின் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் டாக்டர் S. சங்கரநாராயணன் அவர்கள் தலைமை உரையாற்றும்போது, “ரிக் வேதத்தின் காலம் 1000 BCE அல்லது 1500 BCE என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அது ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தையதா, ஹரப்பாவுடன் சேர்ந்ததா அல்லது ஹரப்பாவின் பின் வந்ததா என்றும் கூற இயலாது. 600 CE வருடம் வரை “சம்ஸ்க்ருதம்” என்ற வார்த்தை ஒரு மொழியைக் குறிப்பதற்காக உபயோகப்படுத்தப் படவில்லை. ஸம்ஸ்க்ருதக் கவிஞர் தண்டியின் காலத்திலிருந்து தான் அதை ஒரு மொழியாகக் குறிக்க ஆரம்பித்தனர். உண்மையில், “இங்கிலாந்து” மொழி “இங்கலிஷ்” என்றும் “பிரான்ஸ்” மொழி “பிரெஞ்சு” என்றும் இருப்பது போல பாரதத்தின் மொழி “பாரதி” என்று இருந்திருக்க வேண்டும். “ப்ரஹ்ம்மி பாரதி” என்றே அமரஸிம்ஹன் சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட யாகத்தில் “பாரதி” என்கிற வார்த்தை பல முறை உபயோகப் படுத்தப் படிக்கிறது. மேலும் பாரத தேசம் முழுவதும், மற்ற மொழிகளைப்போல் அல்லாமல் ஸம்ஸ்க்ருத மொழி பரந்துள்ளது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்” என்று சொன்னார்.
(BCE - Before Common Era, பொது சகாப்தத்திற்கு முன்பு. CE - Comman Era, பொது சகாப்தம். உலகம் முழுதும் வரலாற்றுப் புத்தகங்களில் இப்போது இந்த முறையைத் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இன்னமும் நாம் காலனிய வழக்கப்படி எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத கிறிஸ்துவை முன்வைத்து கி.மு, கி.பி என்று எழுதிக் கொண்டிருக்கிறோம்).
பின்பு அவர், “மைகேல் விட்சல் அவர்கள் “கதாரண்யகா” என்ற நூலை எழுதியுள்ளார்கள். அதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ‘தைத்திரிய உபநிடதம்’ படிக்க வேண்டும். மேலும் இவர் ஹார்வார்ட் பல்கலையில் பேராசிரியராக இருப்பதாலும், இங்கே உரையாற்றுவதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவர்” என்றார். பிறகு மாக்ஸ் முல்லர் பெயரை ‘மோக்ஷ மூலர்’ என்று ஆக்கி அவரைப் புகழ்ந்து முன்பு எழுதப் பட்ட ஒரு ப்ழைய ஸ்லோகத்தில் அதற்குப் பதிலாக ”விருத்த சீலர்” (விட்சல்) என்ற பெயரைப் போட்டு அதே ஸ்லோகத்தைச் சொல்லி விட்சலைப் பாராட்டினார் !
பின்பு உரையாற்ற எழுந்த மைகேல் விட்சல், “எனக்கு இங்கு வந்ததில் மகிழ்ச்சி. நாளை குரு பூர்ணிமா தினம் ஆதலால் நாம் நம் ஆசிரியர்களை நினைத்து வணங்க வேண்டிய தினம். நான் இரண்டு வருடங்கள் அலகாபாத்தில் படித்துள்ளேன். அந்த ஆசிரியர்களை இப்போது நினைவு கூர்கிறேன். நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. நான் சொல்பவை உங்களுக்கு ஒத்துப் போகாமல் இருக்கலாம். நீங்கள் கேள்விகள் கேட்கலாம். நான் பதில் சொல்லாமலும் இருக்கலாம். உங்களுக்கு வேறு அபிப்பிராயங்களும் இருக்கலாம். இந்தியாவில் பல சம்ப்ரதாயங்கள் உள்ளன. என் பார்வையையும் ஒரு சம்ப்ரதாயமாகக் கொள்ளுங்கள். என்னுடன் நீங்கள் ஒத்துப் போகாவிட்டாலும் தயவு செய்து என் உரையைக் கேட்டுப் பின்னர் கேள்விகள் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்.
அவர், “ஆரியப் படையெடுப்பு பற்றி அரசியல் பேச நான் விரும்பவில்லை, என்னுடைய பேச்சு ரிக் வேதத்தைப் பற்றிய உண்மைகளைக் கொண்டதாக இருக்கும், அதில் உள்ள அறிவியல் தகவல்களைப் பற்றி என் உரை இருக்கும். இங்கே அந்த மாதிரியான அறிவியல் அறிஞர்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் ஒருமித்த கருத்திற்கு வரவேண்டும். ரிக் வேதம் பழைமையானது தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது உலோகக் காலத்தைச் (Bronze Age) சேர்ந்த படைப்பு தானே தவிர கற்காலமோ (Stone Age) அதற்கு முந்தைய காலமோ அல்ல. ரிக் வேதம் ஒரு குறிப்பிட்ட கவியலங்காரத் தன்மையுடன் ரிஷிகளால் இயற்றப் பட்டது. அதற்கு பூகோள எல்லையுள்ளது. அதில் உள்ளது பாணினி ஸம்ஸ்க்ருதமோ, காளிதாச ஸம்ஸ்க்ருதமோ அல்லது அதர்வண வேத ஸம்ஸ்க்ருதமோ அல்ல. காலப்போக்கில் மொழியியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அதற்கேற்றாற்போல் வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின் அர்த்தங்களும் கூட மாறுகின்றன. இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. இமயமலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் கீழே நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் வெவ்வேறானவை. கவியலங்காரத்தன்மையுடன் பேசப்பட்ட மொழிகள் கிரேக்க மொழியுடன் ஒற்றுமை காணும் பழைய மொழிகளை “வேதத்திற்கு முந்தைய , முந்து ஈரானிய மொழிகள்” (Before Vedic – Proto Iranian) என்றும், “ரிக் வேத - அவெஸ்தா காலத்திய மொழிகள்”’ (Rig Vedic – Avesthan) என்றும் இரண்டு வகைப் படுத்தலாம்” என்று கூறினார்.
பின்னர், “ரிக்வேத சோமபானச் சடங்கில் முக்கிய இடம் பெறும் “சோமா” செடி போன்றவைகள் மத்திய ஆசியாவில் கண்டுபிடிக்கப் பட்டு, பின்னர் ஈரானிலும், இந்தியாவிலும் கண்டு பிடிக்கப் பட்டன. மேலும் சில வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது, மத்திய ஆசியாவிலிருந்து மக்கள் (ஆரியர்) குடிபெயர்ந்து, ஈரான் வழியாக இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. (ஆரியர் குடிபுகுதலைப் பற்றிப் பேச மாட்டேன் என்றவர் மெதுவாக அதைத் தன பேச்சில் புகுத்துவதைக் கவனிக்க வேண்டும்) - மதத்தின் உயர் கட்டத்தில் பிராம்மணர் / க்ஷத்திரியர் போன்ற மேன்குடி மக்கள் ஆளுமை செலுத்தினர். கீழே தாச-தசயூக்கள் வைக்கப் பட்டனர். நகரங்களும் அதற்கேற்றவாறே அமைக்கப் பட்டன. சமீபத்தில் ஹரியானாவில் நடந்த அகழ்வாராய்ச்சியும் இதையே காட்டுகின்றது. ஆகவே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குழுமங்களாக மக்கள் இருந்தனர். அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசினர். திராவிடர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பேசினாலும் ஆரம்ப காலங்களில் திராவிட நிலப்பரப்பு என்பது மகாராஷ்ட்ரம் மற்றும் சிந்து நதி வரை பரவியிருந்தது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஒரிஸ்ஸா ஆகியவை ‘ஆஸ்திரேலிய-ஆசிய’ (Austro-Asiatic) நிலப் பரப்புகளாக இருந்தன. ஸம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் (ஆரியர்) ஆடு மாடுகளுடன் ஒவ்வொரு இடத்திற்கும் நகர்ந்தனர். ஆங்காங்கே உள்ள மக்களுடன் பழகிக் கலந்தனர். அரசர்களின் பெயர்களைப் பார்த்தாலே நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ரிக் வேதத்தின் கடைசி அத்தியாயங்களில் இவை சுவாரஸ்யமாக சொல்லப் பட்டுள்ளன” என்று பேசினார்.
மேலும், “சிவன், பசுபதி என்று நீங்கள் சொல்லக்கூடிய உருவங்கள் டென்மார்க் போன்ற இடங்களிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. எனவே அவை சிவன் என்ற கடவுள் இல்லை என்பது உறுதியாகிறது. இதே போல் தான் மகிஷாசுரமர்த்தினி உருவமும். பிற்காலங்களில் இந்த உருவம் ஹிந்து மதத்தில் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை! தற்போது மரபணு விஞானம் மூலம் தகவல்கள் சேகரிக்கப் படுகின்றன. ஒருவருடைய எச்சிலைக் கொண்டு அவரின் பெற்றோர்கள் உறுதி செய்யப் படுகின்றனர். உங்களில் எத்தனை பேர் மரபணு விஞானத்தைக் கவனித்து வருகிறீர்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் இந்திய விஞானிகள் கூட காஷ்மீர பண்டிட்களும், தென்னிந்திய மலை வாழ் மக்களும் ஒரே மரபணு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் அதற்கு அப்பாற்பட்டவர்கள் அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களில் உள்ளார்கள் (!?). இத்துடன் என் உரையை நிறுத்திக் கொள்கிறேன். கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்” என்று முடித்தார்.
ராமகிருஷ்ண ராவ் என்பவர் வேத காலக் கடவுள்கள் பற்றியும், சம்ப்ரதாயங்கள் பற்றியும், அவற்றுக்கும் மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி ஆகியவையுடனான தொடர்பு பற்றியும் கேட்ட இரண்டு கேள்விகளில், ஒன்றிற்கு சொதப்பலான பதிலும், மற்றதிற்குப் பதில் சொல்லாமலும் இருந்தார் மைக் விட்சல். ராமகிருஷ்ண ராவ் மேலும் தொடர்ந்த போது, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குறுக்கிட்டு நேரமின்மை காரணமாக இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறியது, மைகேல் விட்சலைக் காப்பாற்றும் செயலாகவே இருந்ததாகத் தோன்றியது. பின்னர் ராமகிருஷ்ண ராவ் விட்சலின் முகவரி அட்டையை வாங்கிக் கொண்டார்.
ஸம்ஸ்க்ருத கல்லூரியின் முதல்வர் தேவி பிரசாத் அவர்கள் தன் நன்றியுரையில், “பாரத கலாச்சாரத்தையும் ரிக் வேத கலாச்சாரத்தையும் பிரிக்க முடியாது. தாவரங்களையும், மலைகளையும், நதிகளையும், குறிப்பிட்டுச் சொல்லி தெய்வங்களாக இயற்கையை வணங்குவது பாரத பாரம்பரியம். அவற்றை மைகேல் விட்சல் போன்ற மேற்கத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் திருத்திப் பேசலாம். ஆனால் இங்கே கொடுக்கப் பட்டுள்ள தலைப்பில் பேசுவதை முடிக்க வேண்டுமானால் விட்சல் அவர்களுக்கு மேலும் சில மணிநேரங்கள் தேவைப்படும்” என்று ஆணியடித்தாற்போல் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் முப்பது பேர்கள் தான் இருப்பார்கள். பலருக்கு விட்சலின் ஆங்கிலம் புரியவில்லை. சிலர் பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர். ஓரளவிற்கு விவரம் அறிந்தவர்கள் அவர் உரையில் இருந்த தவறுகளையும், பேசும் பொருளைப் பற்றிய தெளிவின்மையையும், நன்றாகவே புரிந்து கொண்டு, “ரிக் வேதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல், நம் கடவுள்களை இல்லையென்று நம்மிடையே சொல்லும், காலாவதியாகிப்போன ஆரிய படையெடுப்பு மற்றும் இனவாதக் கோட்பாடுகளை கேட்பவர்களின் மேல் திணிக்க முயலும் ஒரு திறமையற்ற பேச்சாளரை ஸம்ஸ்க்ருத கல்லூரிக்கு கூட்டி வந்து பேச வைத்திருக்கிரார்களே” என்று நொந்து கொண்டனர்.
தலைமையுரை ஆற்றிய ஸம்ஸ்க்ருத பண்டிதர் டாக்டர் சங்கரநாராயணன் கூட, மைகேல் விட்சலின் உரையைக் கேட்டபின்னர், “சராசரிக்கும் மிகவும் கீழே தான் இந்த உரையை மதிப்பிட முடியும். ஹார்வார்ட் பல்கலையும் தரம் குறைந்து போய்விட்டது போலிருக்கிறது. இவரின் பேச்சைக் கேட்ட பின்னர், முன்னால் அவசரப்பட்டு இவரைப் பாராட்டிப் பேசிவிட்டோமே என்று வருத்தமுற்றேன்” என்று வருந்தினாராம்.
சென்னைப் பல்கலை நிகழ்வுகள்
மாமேதை மைகேல் விட்சலின் மதராஸ் விஜயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. எட்டாம் தேதி புதன் கிழமைக் காலை சென்னைப் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருதத் துறையில் இதே போல் ஒரு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நானும் நண்பர் வேதப்பிரகாஷ் அவர்களுடன் சென்றிருந்தேன். காலை பதினோரு மணிக்கு ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சிக்கு மொத்தம் “பதினைந்து” பேர்கள் வந்திருந்தினர். இதில் பத்து பேர்கள் துறை மாணவர்களே. மீதி ஐந்து பேர் (எங்களிருவரையும் சேர்த்து) தான் வெளியாட்கள். இவர்களை விட போலீசார்களின் எண்ணிக்கை அதிகம்.
சென்னைப் பல்கலையின் ஸம்ஸ்க்ருதத் துறைத் தலைவர் திரு தாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றும்போது, “மைகேல் விட்சல் அவர்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ஹார்வார்ட் பல்கலையிலிருந்து வந்திருக்கிறார் என்று சொன்னாலே போதுமானது. மேலும் அவர் ஏற்கனவே நம் நாட்டுக்கு வருகை தந்தவர் தான். நம் நாட்டின் நாகரிகங்களைப் பற்றியும் மொழிகளைப் பற்றியும் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்தவர். இங்கேயுள்ள நம் களஞ்சியத்தில் இருக்கும் நாம் சேகரித்துள்ள மூல ஓலைச் சுவடிகளைக் (original manuscripts) கண்டு செல்லவே வந்துள்ளார். இது தொடர்பான நம் செயல்முறைகளையும் காண ஆர்வம் கொண்டுள்ளார். நம்முடைய இந்தப் பணியானது 2012-ல் வெற்றிகரமாக முடிவடைந்துவிடும் என்று உறுதியளிக்கிறேன் - (இவர் நமக்கு உறுதியாளித்த்தாரா அல்லது மைகேலுக்கு உருதியளித்தாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு மைகேலின் காலில் விழாத குறையாக அவரை உயர்த்திப் பேசினார்) - இச்செயலை வெற்றிகரமாக முடிக்க பேராசிரியர் மைகேல் விட்சல் அவர்கள் நமக்கு வழி காண்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவர் ரிக்வேதம், மொழியாராய்ச்சி ஆகிய முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறார். அதைக் கேட்டு புரிந்துகொண்டு நாம் நமது ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்” என்று கூறிமுடித்தார்.
ஐராவதம் மகாதேவன் சம்ஸ்க்ருதத்தில் குருவை வாழ்த்தும் பாடல் ஒன்றைச் சொல்லி ஆரம்பித்தார்.
திரு. தமிழ்ச் செல்வனின் கட்டுரை கிடைத்ததற்கு மறுநாள், திரு. ஐராவதம் மகாதேவன் ஆற்றிய உரையின் அதிகாரபூர்வ வடிவமும் எங்கள் பார்வைக்கு வந்தது. அந்த வடிவத்தில் கண்டபடி மகாதேவன் உரையின் சுருக்கம் இங்கே - ஆசிரியர் குழு.
.. பேராசிரியரின் உரை இதே நகரில் மற்றொரு இடத்தில் நடந்த போது, சில வழிதவறிய மக்கள் அந்தக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கத் திட்டமிட்டிருந்தனர். காவல் துறையினர் பாதுகாப்பால், அந்தக் கூட்டம் அமைதியாக நடந்தேறியது. அங்கும் வெளியே நின்று சிலர் பிரசுரங்களை விநியோகித்தனர். அவர்களுக்கு என்ன பிரசினை? அவர்களுக்கு கருத்து ரீதியாக அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள அதையே காரணம் காட்டுவது ஒருபோதும் சரியல்ல. நமது கலாசாரம் அதிதி தேவோ பவ என்று கூறுகிறது, அதாவது “விருந்தினரைக் கடவுள் போன்று போற்றுங்கள்”.
சிந்துவெளி எழுத்துக்கள் விஷயத்தில் எனக்கும், விட்சலுக்கும் உள்ள முரண்பாடு உலகம் அறிந்தது. சிந்துவெளி லிபி ஒரு எழுத்துமுறையே அல்ல என்று அவர் கருதுகிறார். ஆனால் அது ஒரு முந்திய திராவிட மொழியின் எழுத்துவடிவமே என்பது எனது உறுதியான கருத்து. அதற்காக ஒரு துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டு விடலாமா? கூடவே கூடாது. எனது எழுதுகோலை எடுத்து அவரது ஒவ்வொரு சொல்லையும் மறுத்து எழுதுகிறேன். அது தான் கற்றறிந்த ஒருவர் செய்யக் கூடியது.
இந்து மதத்தின் சர்வமத சமரசம் என்ற கொள்கையானது மேற்கத்திய உலகின் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட மிக உயர்ந்தது என்று நான் உறுதிபடக் கூறுவேன். மேற்குலகில் சர்ச்சுக்கும், அரசுக்கும் இருந்த மோதலின் காரணமாக மதச்சார்பின்மை என்ற கருதுகோள் உருவானது. ஆனால் இந்தியாவின் கொள்கை அதை விட மிகவும் பழமையானது. புத்தரும், மகாவீரரும், வேதத்தை மறுத்தனர்; ஆயினும் நமது பன்முகப் பட்ட சமூகத்தில் அவர்களது மதங்களும் செழித்து வளரவே செய்தன.
தென்னகத்தின் சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று மகா ஆசாரியர்களும் மூன்றுவிதமான தத்துவக் கொள்கைகளை உருவாக்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் மூலநூல்களுக்கு பாஷ்யங்கள் எழுதித் தங்கள் கொள்கைகளை நாடு முழுவதும் சுதந்திரமாகப் பரப்பினர். இஸ்லாம் இங்கு வந்த பின்பு கூட கபீர்தாசர், குருநானக் என்று ஒருங்கிணைப்பு வழியில் குருமார்கள் தோன்றினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கையில், இந்தப் பன்முகப் பட்ட சமுதாயத்தில் எதிர்த்தரப்பு மீது அவமரியாதையுடன் நடந்து கொள்பவர்கள் இந்த சமூகத்தின் ஒரு மிகச் சிறுபான்மையினர் தான், இந்தியாவின் இதயம் பத்திரமாக இருக்கிறது என்று மேன்மை தங்கிய விருந்தினருக்கு நான் கூறிக் கொள்கிறேன்.
2300 ஆண்டுகளுக்கு முன்பு அசோகன் பிராகிருத மொழியில் தன் கல்வெட்டில் கூறியதை நினைவு கூர்கிறேன் - ‘ எதிர்த் தரப்பு எப்போதும் மதிக்கப் பட வேண்டும். தன் தரப்பின் மீதுள்ள அதீத அன்பால் தனது தரப்பை வானளாவப் புகழ்ந்து பிறரது தரப்பை இழித்துரைப்பவன், கடைசியில் தனது தரப்பை வலுவிழக்கச் செய்கிறான். அதனால் சமன்வயம் (”ஸமவாயோ”) தான் உயர்வானது; இரு தரப்புகளும் மற்றவரது கொள்கைகளை மரியாதையுடன் கேட்டு ஆராய்வது தான் சிறந்தது.
அபிப்பிராய பேதங்கள் பற்றி இவ்வளவு பேசிய மகாதேவன் அவர்கள், எதற்காக விட்சலை சென்னைக்கு வரவழைத்துள்ளனர், யார் அல்லது எந்த நிறுவனம் சொல்லி இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன, என்பதைப் பற்றி மட்டும் ஏனோ வாய்திறக்காமல் இருந்து விட்டார்.
பின்பு ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஆற்றியது போலவே இங்கும் ஏனோ தானோவென்று ஒரு உரையாற்றினார் மைகேல் விட்சல் அவர்கள். உரையின் இடையே பல்கலையின் ஸம்ஸ்க்ருதத் துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி இரண்டு மூன்று சந்தேகங்கள் கேட்டார். பின்னர் உரை முடிந்த பின்னர் அதே பெண்மணி நன்றி உரையாற்றினார்.
அதன் பிறகு விரும்புபவர்கள் ஓரிரு கேள்விகள் கேட்கலாம் என்று சொல்லப் பட்டது. துறையைச் சேர்ந்த ஒருவர் மைகேலின் உரையை வானளாவப் புகழ்ந்து பேசினார். அதற்குப் பின்னர் ராமகிருஷ்ண ராவ் கேட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில்களை மைகேலால் தர இயலவில்லை. அந்தக் கேள்விகளுள் ஒன்று, “இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாக்ஸ் முல்லர் அவர்கள் சொல்லியதையே தான் நீங்களும் சொல்கிறீர்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இதையே சொல்லிகொண்டிருப்பீர்கள்?” என்பதாகும். அதற்கு விட்சல், “பத்தொன்பதாம் நூற்றாண்டு மேற்கோள்களை இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படி காட்ட முடியும்? அவ்வாறு காட்டுதல் எப்படி சரியாகும்?” என்று கூறி தான் மாக்ஸ் முல்லர் வழியில் செல்லவில்லை என்பது போல சாதிக்க முயன்றார். ஆனால் ராமகிருஷ்ண ராவைத் தடுக்கும் முயற்சியில் துறைத் தலைவர் தாஷ் அவர்களும், மேலும் சிலரும் ஈடுபட்டனர். திரு தாஷ் அவர்கள் ராமகிருஷ்ண ராவிடம், “தனியாக ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்து அதில் கேள்விகள் கேட்கலாம்” என்று கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார். அதன் பிறகு திரு ஸ்ரீனிவாசன் என்பவர், “அறிவியல் அறிஞர் டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடுகளை உங்களின் பிலாலாஜி ஒத்துக் கொள்கிறதா?” என்று கேட்டதற்கும் மைகேல் சரியாகப் பதில் சொல்லவில்லை.
இதனிடையே நம் “தமிழ் இந்து” இணைய தளத்தில் கேட்கப்பட்ட்டுள்ள ஐந்து கேள்விகள் அடங்கிய தாளை எடுத்துக்கொண்டு நான் மைகேல் விட்சல் அவர்களை அணுகி என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, “என்னிடம் சில கேள்விகள் உள்ளன அவற்றிற்குப் பதில் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மகாதேவன் “மதிய உணவிற்கு நேரம் ஆகிவிட்டது. நாம் செல்லலாம்” என்று சொல்ல, விட்சல் என்னிடம் தன்னுடைய கார்டு ஒன்றைக் கொடுத்து எனக்கு இ-மெயில் அனுப்புங்கள் என்று சொல்லிப்போனார். பிறகு ஸம்ஸ்க்ருதத் துறை ஆசிரியர்கள்/மாணவர்கள் விட்சலுடன் புகைப் படம் எடுத்துக்கொள்ள கூட்டம் முடிந்தது. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் தங்களுக்கு ஜென்மசாபல்யம் கிட்டியது போல் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அன்று மாலை ரோஜா முத்தையா நூலகத்திற்கும் மைகேல் விட்சல் விஜயம் செய்துள்ளார்.
இதனிடையே ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று மைகேல் விட்சல் பாண்டிச்சேரி சென்று பிரெஞ்சு மொழியாராய்ச்சி நிலையத்தில் (French Institute of Indology) பல ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து பேசிவிட்டு வந்திருக்கிறார். சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முத்திரைகளும், கல் பட்டயங்களும் (tablets) ஹிந்து மத சம்பந்தம் இல்லாதவை; அவற்றில் மொழியின் வடிவங்களோ, எழுத்துக்களோ இல்லை; ரிக்வேதம் ஹிந்து மத சம்பந்தம் இல்லாதது; வேத நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; என்றெல்லாம் பேசியிருக்கிறார். அங்கிருந்து கிடைத்த செய்திகளின் படியும், இவரின் மொழியறிவும், மற்ற மொழியாராய்ச்சி விஷயங்கள் பற்றிய ஞானமும் அவ்வளவாக அவர்களை ஈர்க்கவில்லை என்பது தெரிந்தது.சென்னை வருவதற்கு முன்னால் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போய் வந்திருப்பதும் நமக்குத் தெரியவந்தது. ஒன்பதாம் தேதி புது டில்லி சென்றுள்ளார். அங்கு ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் (JNU), இந்திய சர்வதேச மையத்திலும் (India International Centre) “சொற்பொழிவு” ஆற்றியிருக்கிறார். ஆனால் அங்கு வருகை தந்தவர்களும் அதிருப்தியே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய சர்வதேச மையத்தில் தலைமை தாங்கிய கபிலா வாத்ஸ்யாயனன் மைகேலின் பல கோட்பாடுகளை ஒத்துக்கொள்ளவில்லையாம்.
1. மைகேல் விட்சலின் இந்தியப் பயணத்திற்குப் பின்னணி என்ன? இவருடைய பயணத் தகவல்கள் ஏன் ரகசியமாக வைக்கப் பட்டன? இவர் எதற்காக இப்படி ஒரு ரகசியமானப் பயணத்தை மேற்கொண்டார்?
2. இவர் அரசாங்க விருந்தினராக வந்துள்ளாரா? இல்லையென்றால் இவரை வரவழைத்த தனியார் நிறுவனம் எது? அல்லது இவரை வரவழைத்த தனி நபர்கள் யாவர்? எதற்காக இவரைப் போல் சராசரிக்கும் கீழான ஒருவரை “மேதை” என்று சொல்லி வரவழைக்க வேண்டும்?
3. சாதாரணமாக “வெளிநாட்டு அறிஞர்” என்கிற போர்வையில் யார் வந்தாலும் அவர்கள் பின்னே ஓடும் நம் ஊடகங்கள், குறிப்பாக இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக யார் பேசினாலும் பெரிதும் விவரிக்கின்ற ஊடகங்கள், ஏன் இவர் உரையாற்றியதை செய்தியாகவோ, விமரிசனமாகவோ மக்களுக்குத் தெரிவிக்கவில்லை?
4. மைகேல் விட்சல் தனியாக வந்திருக்கிறாரா? அல்லது ஒரு குழுவுடன் வந்திருக்கிறாரா? குழுவுடன் வந்திருந்தால் மற்றவர்கள் எங்கெல்லாம் சென்றனர்? என்ன மாதிரியான தகவல்களை சேகரித்தனர்? நம்முடைய பல்கலைகளில் உள்ள நூர்களஞ்சியங்களில் உள்ள பொக்கிஷங்கள் ஏதாவது இவருக்குக் கொடுக்கப் பட்டனவா? அல்லது விற்கப் பட்டனவா?
5. ஸம்ஸ்க்ருதக் கல்லூரி எதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டது? மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற கல்லூரி என்பதால் மத்திய அரசின் வற்புறுத்தல் இருந்ததா? அவ்வாறு வற்புறுத்தச்சொல்லி அமெரிக்க ஸ்தாபனங்கள் மத்திய அரசின் மீது அழுத்தம் தந்தனவா?
6. கிறிஸ்துவப் பாதிரிகள் சமீபத்தில் மும்பையில் ஹிந்து மத குருமார்களுடன் நடத்திய மத நல்லிணக்கப் பேச்சு வார்த்தையின் விளைவாக இவருடைய பயணம் மேற்கொள்ளப் பட்டதா? சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் சென்னை வந்து போன பிரான்சிஸ் க்ளூனி என்கிற ஏசுசபை பாதிரியார் அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார். அவர் வைஷ்ணவா கல்லூரியில் பேச இருக்கிறார். இவர்கள் ஏன் லயோலா, ஸ்டெல்லா மேரி, ராணி மேரி, கிறிஸ்துவ மகளிர், போன்ற கிறிஸ்துவ கல்லூரிகளில் தங்கள் “சொற்பொழிவை” வைத்துக் கொள்ளாமல் ஹிந்து கல்லூரிகளாக தேர்ந்தெடுக்கின்றனர்? இந்து நிறுவனங்களில் உரையாற்றிவிட்டு, நாளை அமேரிக்கா சென்று சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தித்தேன் என்று பெருமை பீற்றவா? இந்த மாதிரியான அரை வேக்காட்டு அறிஞர்களுக்கு, தீய உள்நோக்கம் கொண்ட மனிதர்களுக்கு, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் ஏன் உதவுகின்றனர்?
7. மைகேல் விட்சல் நிதி திரட்டுவதற்காக இந்தியா வந்துள்ளாரா? தற்போது உலகப் பொருளாதாரம் அடிவாங்கிய சூழ்நிலையில், ஹார்வார்ட் பல்கலை கூட கிட்டத்தட்ட முப்பது சதவிகித சொத்துக்களை இழந்துள்ளதாகச் சொல்லப் படுகிறது. அங்கு விட்சலின் “திறமை” மீது மிகவும் அதிருப்தி நிலவுவதாகப் பேசப் படுகிறது. கலிபோர்னிய பாட நூல் வழக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக மைகேல் விட்சல் நடந்து கொண்டதில் ஹார்வார்ட் பல்கலையின் பெயர் மிகவும் கெட்டுப் போயுள்ளது. அமேரிக்கா வாழ் இந்திய மக்களிடையே ஹார்வார்ட் பல்கலையின் மேல் மிகவும் அதிருப்தி நிலவுவதால், ஹார்வார்ட் பல்கலை விட்சல் மீது கோபம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கப் பலகலைகள் தங்கள் ஆசிரியர்களுக்கு சாதாரணமாக ஒன்பது மாதங்கள் தான் சம்பளம் வழங்குகின்றன. கோடை கால மூன்று மாதங்களுக்கான பயிற்சி வகுப்புகளையோ, அல்லது ஆராய்ச்சிக்கான நிதியையோ, அவர்களாகவே தான் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். ஹார்வார்ட் சம்ஸ்க்ருத துறை அம்மாதிரி எந்த ஏற்பாடும் செய்ய நிதி ஒதுக்கவில்லை. எனவே நிதி திரட்டுவதற்காக இவர் இந்தியா வந்துள்ளார் என்கிற பேச்சையும் ஒதுக்கி விடமுடியாது என்று விவரம் அறிந்தோர் கூறுகிறார்கள். மேலும் தன சுயலாபத்திற்காகவும் நிதி திரட்டக் கூடியவராக விமரிசிக்கப் படுகிறார் விட்சல். பாகிஸ்தானில் பிரசுரமாகும் “டான்” (DAWN) பத்திரிகையின் இணைய தளத்தில், தன்னை ஒரு “ஹிந்து-எதிரி” என்று கூறிக் கொண்டு தன “சேவைகளை” விளம்பரப் படுத்தியுள்ளார். எனவே, இவரை நம் நாட்டில் ஏன் உரையாற்ற அனுமதிக்கவேண்டும்?
8. கலிபோர்னிய பாட நூல் வழக்கில் மைகேல் விட்சல் ஹிந்துக்களுக்கு எதிராக வேலை செய்தபோது அவருக்கு ஆதரவாக Dalit Freedom Network (தலித் விடுதலை கூட்டமைப்பு) மற்றும் Dalit Solidarity Forum (தலித் ஒருங்கிணைப்பு மையம்) என்ற பெயரில் உலாவும் கிறிஸ்தவ முகமூடி அமைப்புகள் இயங்கின. தலித் ஒருங்கிணைப்பு மையயத்தின் தலைவர் பாதிரி ஜோசப் டிஸோஸா அகில இந்திய கிறிஸ்துவ சபையின் தலைவராகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதிலிருந்தே இந்தியாவில் தலித் மக்களை ஹிந்து சமூகத்திலிருந்து பிரித்தாள கிறிஸ்துவ சர்ச் சதி செய்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தலித்களிடையே மாபெரும் மதமாற்ற முயற்சிகளும், இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம் என்று பொய் சொல்லி மதம் மாற்றிய பிறகு தலித் கிறிஸ்துவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு ஷெட்யூல்ட் பிரிவு இந்துக்களின் இடங்களை கவரும் முயற்சிகளும் நடை பெறுவதும், இதன் தொடர்ச்சியான சதி தான். இம்மாதிரியான இந்தியாவிற்கு எதிரான சதிகளில் பங்கு வகிப்பவர் மைகேல் விட்சல், ஸ்டீவ் பார்மர், பிரான்சிஸ் க்ளூனி, போன்றவர்களாவர். அப்படி இல்லை என்றால் கலிபோர்னிய பாட நூல் வழக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக ஏன் தன்னை இணைத்துக் கொண்டார்? பதில் சொல்வாரா மைகேல் விட்சல்? உண்மையான விளக்கம் தருவாரா?
இந்த நாடு இந்து நாடு. இந்த நாட்டு மக்கள் இந்து மக்கள். இந்த நாட்டின் கலாசாரம் இந்து கலாசாரம். இந்த நாட்டின் தத்துவம் இந்துத்துவம். வேதங்களும், இதிதாசங்களும், உபநிடதங்களும், புராணங்களும் இந்த நாட்டின் பழம் பெருமைகளையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விளக்கிக் கூறுபவன. சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது நமது வேத நாகரிகமே. இங்கே ஆரிய-திராவிட இன வாதங்கள் வெள்ளையரால் ஏற்பாடு செய்யப் பட்ட பொய்யும் புளுகும் புனைச்சுருட்டும் கலந்த, சற்றும் ஆதாரம் இல்லாத கட்டுக் கதைகள் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டன.
மத மாற்றம் செய்ய கலாசாரக் களவில் (Inculturation) ஈடுபட்ட ராபெர்ட் நொபிலி போன்ற பாதிரிகளும், இந்துக்களை பிரித்தாள வழிவகை செய்த மாக்ஸ் முல்லர் போன்ற விஷமர்களும், காட்டிய வழியில் சிறிதும் வெட்கமோ தயக்கமோ இன்றி பயணிப்பவர் தான் மைகேல் விட்சல் போன்றோர். பண்பாட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என்கிற போர்வையில் தங்களுடைய தீய கோட்பாடுகளை நம் மேல் திணித்து நம்மை மாற்றி, நம் நாட்டையும் கிறிஸ்துவ நாடாக மாற்றுவதே இவர்களின் ஒரே நோக்கம். இவர்களை அழைத்து வந்து நம்மிடையே உரையாற்ற வைத்தால் நாம் இவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விடுகிறோம் என்பதை உணர வேண்டும்.
நாம் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும் அது. இவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களாக வந்தால் வாதம் புரிந்து தோற்கடித்து இவர்களை விரட்ட வேண்டும். வாதம் புரிய முடியாதென்று இவர்கள் சொன்னால் இவர்களைப் பேச விடாமல் துரத்த வேண்டும். நம் வேதங்களைப் பற்றியும், மொழிகளைப் பற்றியும், கலாச்சாரப் பாரம்பரியம் பற்றியும் நம் பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற பல வேத விற்பன்னர்களும், மொழியாராய்ச்சியாளர்களும், சான்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர். நமக்கு மைகேல் விட்சல் போன்ற ஒரு அரைகுறையான வெளிநபர் தேவையில்லை.
தன்மானமும் தேசப்பற்றும் கொண்ட எந்த ஒரு இந்தியனும் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. இனியாவது இந்துக்கள் தங்கள் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். தங்களைச் சுற்றிப் பின்னப்படும் மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, போன்ற வலைகளை கிழித்தெறியவேண்டும். இந்த தேசத்தின் ஹிந்து அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு பாரத மாதா அருள் புரியட்டும்.
கொசுறு: தமிழ் இந்து தளத்தில் கேட்ட ஐந்து கேள்விகளை நான் விட்சல் அவர்களுக்கு அவர் சொல்லியபடி இ-மெயில் செய்து ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பதில் வரவில்லை. மீண்டும் ஞாபகப் படுத்தி ஒரு மெயில் அனுப்பப்படும். ஆனாலும் பதில் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருந்தால் தானே வருவதற்கு?!



தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
16 July 2009 at 6:48 am
Hats off to you Mr Tamilselvan, another Vivekanda in the making!!, May Lord Sri Ram bless you with long life and good health to contiue your good work