இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

August 7, 2009
By

நாம் நமது சரித்திரத்தையே மறந்து வாழ்கின்றோம்; அப்படி நினைவு கூர்ந்து கொண்டாலும் அது அன்றன்று ஆளும் கட்சியினருக்குச் சாதகமாகத்தான் சொல்லப்படுகிறது. உண்மையாக நாம் சில முக்கிய உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் வந்து தான் நாம் நிருவாக முறைகளைக் கற்றுக்கொண்டதாக எண்ணும் அளவிற்குத தான் இன்றைய பாட முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தியர்கள் கடல் வழி நிருவாகத் திறமையைப் பதிந்தே வைத்துள்ளனர். இது பற்றிஅர்த்தசாஸ்திரம் கூறுகிறது!

நிருவாக முறைகள்:

கிரேக்க சரித்திர ஆசிரியர்களும், கி. மு. நான்காம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் கடல் வழி வணிகம் சிறந்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். தாலமி தமது நூலில், அலெக்ஸாண்டர் சிந்து நதியைக் கடக்க 2,000 இந்தியக் கப்பல்களை உபயோகித்ததாகாக் குறிப்பிடுவது, இந்திய மாலுமிகளின் திறமையைப்பற்றிச் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம், அலெக்சாண்டருக்குக் கடல் கடக்கும் திறமை இருந்திருக்கவில்லை என்பதே ஆகும்.

இன்றைய ஐக்கிய நாடுகளின் கடல் கப்பல் சம்பந்தப்பட்ட அமைப்பு International Maritime Orgsnisation “பாதுகாப்பான கப்பல்களும், தூய்மையான கடலும்” என்ற கருத்தைத்தான் தனது இப்போதைய குறிக்கோளாக வைத்துக்கொண்டுள்ளது எனபதைக் காண்கையில் நமது நாட்டின் பண்டைய கருத்துக்கள் அன்றே எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தன எனபது புலப்படும!

கௌடில்யர் என்கிற சாணக்கியர்: அர்த்தசாஸ்திரம் தந்த மாமேதை

கௌடில்யர் என்கிற சாணக்கியர்: அர்த்தசாஸ்திரம் தந்த மாமேதை

மௌரியர் காலத்தில் கப்பல், அதைச் செலுத்தும் மாலுமிகள், அரசாங்கத்தின் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருந்தனர். அதன் படி, கட்டணங்கள் சரியாக விதிக்கப்பட்டிருந்தன. சட்ட திட்டங்களைச் சரிவரப் பேணாத கப்பல் தலைவர்களும் சொந்தக்காரர்களும் தண்டிக்கப்பட்டனர். பெண்களைக் கடல் மூலம் கடத்திச் செல்ல முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை கப்பல் தலைவனுக்கு இருந்தது. உடல் ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் கட்டண விகிதம் இருந்ததாகத் தெரிகிறது. கால்நடைகளுக்கும் நதியைக் கடக்கையில் கட்டண விகித்தில் சலுகை இருந்தது! அதே போல கடல் கொந்தளிப்பால் அவதியுற்ற கப்பல் தலைவனுக்கு உதவி அளிக்கும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன! சிறிய வர்த்தகர்களுக்குச் சலுகைகள் இருந்தன. இந்திய வணிக நெறிகள் என்ற நூலில் மோதிசந்திரர் இவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். படகுகளைப் பழுது பார்த்து சீரிய முறையில் வைத்துக்கொள்ளும் பொறுப்பு கப்பல் தலைவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. இன்று கூட இந்த நிலையில் மாற்றம் இல்லை என்பதைக்காணும் போது, அன்றைய அரசாங்கம் எவ்வளவு திறமையாகச் செயல் பட்டது எனபது விளங்கும்.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கடல் வழி வணிகம் குறித்தும், அதைச் சீராக வைத்திட பின்பற்றப்பட்ட விதி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. இன்றைய முறைகள் போல, அன்றும், கப்பல்களின் பாதுகாப்பு முறைகள், அவற்றின் பத்திரம், மற்றும் அவற்றில் வேலை செய்வோரின் பொதுநலம் பாதுகாப்பு முதலியவை பற்றிய அனைத்துமே விவரமாக சொல்லப்பட்டுள்ளன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் இவ்வாறு குறிப்பிடுகிறது.

மாதிரிக்குச் சில ஷரத்துகள்:

1. நகரத் தலைவன் விலைப் பண்டங்களுக்கு நகரத்தில் வரையறுத்த விதிகளை மரக்கலத் தலைவன் மேற் கொள்ள வேண்டும்.

2. திக்கு மயங்கியேனும் காற்றால் அலைப்புண்டேனும் வந்த வங்கத்தைத் தந்தையைப் போல பாதுகாத்தல் வேண்டும். நீரினால் கேடு உண்டான பண்டங்களுக்கு உல்கு பொருள் இல்லாமல் அல்லது அரைப்பகுதி விதிக்கலாம்.

3. இயங்கும் ஓடங்கள் உல்கு கொள்வதற்குரிய இடத்தை அடைந்ததும் அவற்றுக்கு உல்கு கேட்டல் வேண்டும். கொள்ளைக் கப்பல்களையும், பகை நாட்டை நோக்கிப் போகும் கலங்களையும் வாணிக நகர வழக்கங்களைக் குறைக்கும் கலங்களையும் அழித்தல் வேண்டும்.

4. உரிமையற்ற காலத்திலும் துறையல்லாத இடத்திலும் ஆற்றைக் கடப்பவனுக்குப் பூர்வ சாகசம் தண்டம் ஆகும்.

5. வலைஞர், விறகு புல் சுமப்பவர், மலர் வனம் பழத் தோட்டம் தோப்பு என்னும் இவற்றின் காவலர், ஆயர், ஐயுறப்பட்டவரையும் தூதரையும் பின் தொடர்பவர், படைக்குரிய உபகரணம் கொண்டு செல்பவர், ஒற்றர் ஆகியவர்களுக்குத் தண்டம் இல்லை.

6. அந்தணர், துறவோர், சிறுவர், முதியவர், பிணியாளர், கட்டளை கொண்டு செல்பவர், கருக் கொண்ட பெண்டிர், ஆகியவர் மரக்கலத் தலைவனின் முத்திரை ஓலையுடன் கடந்து போகலாம். உட்புகுவதற்குக் கட்டளை பெற்றவரும், வணிகக் குழுவுடன் வரும் அயல் நாட்டவரும் கடந்து வரும் தன்மை உடையவர்.

(அயல் நாட்டு வணிகக் குழுவினருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இதன் மூலம் நமக்குத் தெரிகிறது)

இன்னும் எவரெல்லாம் ஓடங்களில் ஏறக்கூடாது என்று கூறிய பின்னர், கப்பல் தலைவனுக்கு அளிக்கப்படும் தண்டனைகளையும் குறிப்பிடுகிறார் கௌடில்யர்.:

பணியாளர் குறைவினாலேனும், கருவிகளின் குறைவினாலேனும் செப்பனிடப் படாமையிலேனும் மரக்கலம் கேடு அடைந்தவற்றுக்கும் ஈடு செய்தல் வேண்டும் இதிலிருந்து அக்காலத்திலும் நல்ல காப்பீட்டு விதி முறைகள் இருந்தமை புலப்படுகிறது.

தென்னவர்களும் இக் கருத்துக்களைப் பின்பற்றி இருந்திருக்கின்றனர். நடைமுறையில், கௌடில்யர் காலத்திலும், தென்னாட்டினர் கடல் கப்பல் சம்பந்தப்பட்ட நல்ல விதி முறைகளைப்பினபற்றி வந்தனர் எனபதும், இந்திய நாடு முழுதும், ஒருங்கிணைந்த பல சிறந்த கடல் வழி, விதி முறைகளை அனுஷ்டித்தது என்பதும் நமக்கு சங்க இலக்கியம் மூலம் தெரிய வருகிறது.

துறைமுகங்கள்:

சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவாக கடல் வழி வணிகத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறுகின்றன. சங்க இலக்கியங்களிலிருந்து, புகார்த் துறைமுகத்தின் பெருமையைத்தெரிந்து கொள்ளமுடிகிறது; இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகின்றன; இத்துறைமுகத்தில், பெரிய பாய் மரக்கப்பல்கள், தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன. என்ற விவரத்தைத் தரும் பாடல் புறநானூற்றில் உள்ளது. இது ஒரு மிக முக்கியமான தகவலாகும். ஏனெனில், அவ்வாறு கப்பல்கள் வருகையில், அவற்றின் வேகம், அதிகமாக இருக்கும். சரக்குகளுடன் பளுவாகவும், ஆழமாகவும் மிதக்கும் ஆகையால், அவற்றைச் சுலபமாகக் கட்டுப்படுத்தவும் இயலாது! இன்றைய துறைமுகங்களில் கூட, வேகத்தைக் கட்டுப்படுத்தியே கப்பல்களைத் துறைமுகங்களுள் ‘டக்’குகளின் உதவியுடன் கொணர்கின்றனர். பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைய முடிந்ததெனின், அத்துறைமுகங்கள் நல்ல ஆழமும், பெரிய பரப்பளவும் கொண்டவையாய் இருந்திருக்க வேண்டும!

இதைப் புறநானூற்றில், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளி மேல் இயற்றிய பாடலில் காணகின்றோம்.

“யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ”

(புறநானூறு: 30: 10 -15)

(கூம்புடனே மேலே விரிக்கப்பட்ட பாயை இறக்காமலும், கப்பலின் சுமையைக் குறைக்காமலும், நதியின் முகத்துவாரத்தில் புகுந்த பெரிய கப்பல்கள், …)

பலதரப்பட்ட வணிகச்சரக்குகள், பெரிய, விரைந்து செல்லக்கூடிய ‘வங்கம்’ என்ற வகைக் கப்பல்களில், வந்திறங்குகையில், எழும் ஓசையை வர்ணிக்கும் மதுரைக்காஞ்சியின் பாட்டு, இன்றைக்கும், பெரும் ஓசையுடன் பொருள்களைக் கப்பல்கள் துறைமுகங்களில் இறக்குவதையே நினைவு படுத்தும். இதை எழுதிய மாங்குடி மருதனார் கப்பல்களைப் பற்றி நன்கு அறிந்திருக்காவிடின் அவ்வாறு எழுதியிருக்க முடியாது என்னும் உணமையைத் தவிர நாம் தெரிந்துகொள்ளும் இன்னொரு விவரம், கப்பல்கள், அவ்வாறு சாமான்களை இறக்குதல், முதலியன, அன்றைய மக்கள் வாழ்வில் ஒரு சாதாரணமான நிகழ்வாக அமைந்திருந்தது எனபதும் தான்!

மருதனார்கூறுகிறார்:-

“வால்இதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ்இசை மான, கல்லென
நனந்தலை வினைஞர் கலம்கொண்டு மறுக,
பெருங்கடற் குட்டத்துப்பலவுத்திரை ஓதம்
இருங்கழி மருவிப் பாய பெரிது எழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல்வேறு புள்ளின் இசைஎழுந் தற்றே,
அல்அங் காடி அழி தரு கம்பலை…”

– (மதுரைக்காஞ்சி 536 – 544)

(கடலுக்குப் பக்கத்திலுள்ள கழிகளில் நீர்ப்பறவைகள் இரவில் தங்கியிருந்தன. நள்ளிரவில் கடல் பெருகியது. பெருகிய அக்கடல் அக் கழிகளில் பாய்ந்தபோது, அப் பறவைகள் எழுந்து ஆரவாரித்தது போல அல்லங்காடியில் எழுந்த ஆரவாரம் கேட்டது. அத்துடன் அயல் நாட்டு வியாபாரிகள் தங்கள் சரக்குகளை விலை சொல்லிக் கூவுதும் கலந்து பெரிய ஓசை எழுந்தது எனக்கூறுகிறார்.)

mahabalipuram_dawnதுறைமுகப் பணித்துறையும், கப்பல் கட்டுதலும், அறிந்திருந்த தமிழர், அவற்றை நன் முறையில் வைத்திருக்கவும் கற்றிருந்தனர். வெளி நாட்டினர் கலங்கள் நம் துறைமுகங்களை அடையும் போது, வழி காட்ட அமைந்திருந்த கலங்கரை விளக்கங்கள் குறித்தும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. சரித்திர வாயிலாக மாமல்லபுரத்தில் இருந்த கலங்கரை விளக்கம் குறித்தும் அறிகிறோம். அதே போல வெளி நாட்டின் கலங்கள் புகார் வருகையில், அம்மாலுமிகள், கப்பலினின்றும் வெளியில் வந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தங்குவதற்கு ஒதுக்கி விடப்பட்ட மாலுமி இல்லங்களும் இருந்தன எனபதும், கப்பல்களுக்கெனச் செப்பனிடும் பணிமனைகளும் உலர் துறைகளும் அமைக்கப்பட்டிருந்தன எனபதைக் குறித்தும், மற்றும், வெளி நாட்டினர் நம் நாட்டைப்பற்றி நல்லெண்ணம் கொண்டு செல்ல வேண்டும், எனபதற்காக, அவர்களுக்குப் பராமரிப்பும் இருந்தன எனபது பட்டினப்பாலை மூலம் தெரிகிறது. இதே நூலில், சுங்க வரித்தீர்வை பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளன.

பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணினார், துறைமுகத்தில் இடைவிடாது நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி செயல்பாடுகள் ஒரு நல்ல உவமையுடன் விவரிக்கிறார். அது, தடங்கலேயின்றி, கடலினின்றும் நீர் ஆவியாகி, மேகமாக மாறி, திரும்பவும் மழையாகப் பெய்வதே போல, தொடர்ந்து ஓய்வின்றி நடைபெறுவதை கீழ்க்காணும் வரிகள் சொல்லும்.

“வான் முகந்த நீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போலவும்
நீரினின்று நிலத்துஏற்றவும்
நிலத்தினின்று நீரப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்புஅறியயாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலையுடை வல்அணங்கினோன்
புலி பொறித்துப்புறம் போக்கி
மதிநிறைந்த மலிபண்டம் . .”
(ப. பாலை 126 – 136)

(இன்றும் ஒரு துறைமுகத்தின் செயல் திறனைக் குறிப்பிட கப்பல்கள் வந்து தமது ஏற்றுமதி இறக்குமதி வேலைகளை முடித்துவிட்டு திரும்புவதற்கு ஆகும் மொத்த நேரத்தைக் கணக்கிட்டுத்தான் சொல்கின்றனர் இதை (Ship Turn Round Time) என்றுதான் குறிப்பிடுகின்றனர்! அதே போல, அங்கேயே சுங்கத் தீர்வை முடித்து அனுப்பப் படும் முறையை நோக்கின், மிகச் சமீப காலத்தில் நமது பெரிய துறைமுகங்களில் அறிமுகப் படுத்தப்பட்ட, ஒரே ஜன்னல் முறை – Single Window System – நினைவுக்கு வருகிறது!)

முக்கியமாக, பெரும் துறைகளி கிடங்குகள் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களைப் பத்திரமாக வைக்கவேண்டி, அமைக்கப் பட்டிருந்தன என்றும், சுங்கத்தீர்வைகள் அங்கேயே செய்யப்பட்டன என்றும் அவ்வாறு தீர்வைகள் செய்யப்பட்ட பொருள்கள் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டன என்றும் பட்டினப்பாலை வரிகள் “புலி பொறித்துப் புறம் போக்கி மதி நிறைந்த மலி பண்டம்…” தெளிவாக்குகின்றன! இங்கு மதி நிறைந்த எனபது பண்டங்களுக்கு உண்டான, மதிப்பை அறிந்து, என்றும, மலிபண்டம் எனபது, நிறைந்து கிடக்கும் என்றும் பொருள் கொள்ளப் படுவதாகும்.

இன்னும் எத்தனையோ உண்மைகள் நமது நாட்டினர் திறத்தைத் தெளிவு படுத்துவகையாக உள்ளன. நமது சந்ததியார்களுக்கு உண்மையான சரித்திரம் தெரியப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

”கடலோடி” நரசய்யா தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். கடல்வழிவாணிகம், கடலோடி, துறைமுக வெற்றிச் சாதனை ஆகிய நூல்களுடன், பல சிறுகதைகளும், சென்னையின் வரலாறு குறித்து மதராசபட்டினம் என்ற நூலும், மதுரை வரலாறு குறித்து ஆலவாய் என்ற நூலும் எழுதியுள்ளார். மேலும் விவரங்கள் இங்கே.

Tags: , , , , , , , , , , ,

 

ஒரு மறுமொழி இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

 1. R.Devarajan on August 7, 2009 at 9:53 pm

  சிலப்பதிகாரத்தில் கோவலனின் தந்தையாரின் பெயரான மாசாத்துவான் என்பது
  மஹா ஸார்தவான் என்ற வடசொல்லின் திரிபு என்றார் டாக்டர். நா. கணேசன்.
  சரக்கேற்றும் மரக்கலங்களின் உரிமையாளர் என்பது பொருள்.
  தெற்காசியா முழுவதும் பாரதத்தின் வணிகமும், சமயமும் கோலோச்சின
  என்று தெரிகிறது.

  தேவ்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*