இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

violinதென்னிந்திய இசையில் வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை வடிவங்கள் அடிப்படையில் ஒரே பயிற்சி முறைகளைக் கொண்டவை. 19ஆம் நூற்றாண்டு இசை நூல்களில் இவற்றை ‘அப்பியாசகான உருப்படிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பா இசைக் கருவியான வயலின் வாய்ப்பாட்டிசையிலும், அரங்கிசையிலும் முதன்மை இடம் வகித்து வருகின்றது. பாடகருடன் கூடவே இசைத்து வரும் வழக்கம் இன்றும் உள்ளது. இது கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான மாற்றத்தை உண்டாக்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் வடிவேலு போன்ற வயலின் மேதைகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பழக்கம், இன்று வரை வாய்ப்பாட்டிற்கு துணையாகத் தொடர்கிறது. இப்போதெல்லாம் கிதார், மாண்டலின், சாக்ஸஃபோன் போன்ற கருவிகளில் கர்நாடக இசையை வாசித்து வந்தாலும், பல மேடைகளில் வயலினே பாட்டிற்குப் பக்கபலமாக இருப்பதைக் காணலாம்.

மிருதங்கம், கடம், வயலின் போன்ற இசைக் கருவிகளில் பயிற்சி பெறுவோர் வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் மேற்கொள்வர். கர்நாடக சங்கீதப் பயிற்சி பல கட்டங்களைக் கொண்டது. பயிற்சியை மட்டும் பல வருடங்களுக்கு ஒருவர் மேற்கொள்ள முடியும். ஐரோப்பா இசை பயிற்சியில், சில சுரக்கோர்வைகளை கற்றுக்கொண்டு சின்ன பாடல்களையோ, துணை இசைக் கோர்வைகளையோ இசைக்கலாம். கர்நாடக சங்கீத பயிற்சிப் பாடங்களோ படிப்படியாக சுரங்களைப் பாடுவதையும், அவற்றைக் கோர்த்து ஒரு ராகத்தைப் பாடுவதையும் உருவாக்கும். இந்தப் பயிற்சியிலும் பல நிலைகள் உள்ளன. சாதாரணமாக, அடிப்படைப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் ராக மாலிகாவையோ, கடினமாக ராக அமைப்பு கொண்ட ஆலாபனைகளையோ உடனடியாகப் பாடமுடியாது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முதன்மையானதுeuro-violin கர்நாடக சங்கீதக் குறியீடுகளில் (Notation) உள்ள சிக்கல்கள். வாய்ப்பாட்டு வழியே வளர்ந்த மொழியானதால், கர்நாடக சங்கீதத்தை முறையாகத் தொகுத்து, பாட்டுகளுக்கான குறியீடுகளை உருவாக்குவதற்குள் இருபதாம் நூற்றாண்டை அடைந்து விட்டோம். நுணுக்கமான சாகித்தியங்கள், தாள வகைகள், மற்றும் நுணுக்கமான கால வரையறைகள் உள்ளதால் ஐரோப்பா இசைக் குறியீட்டையும் இதற்கு உபயோகப்படுத்த முடியாது. ஐரோப்பா இசையில் கால நுணுக்கங்களை 3/4.6/8 போன்ற குறியீடுகளில் குறிப்பிடுவர். ஆனால், கர்நாடக சங்கீத சுரங்கள் இதைவிட நுணுக்கமான கால அளவுகளை மேற்கொள்வதால் குறியீட்டு மொழியால் அவற்றை விவரிப்பது கடினமாகிறது. பல நூற்றாண்டுகளாக குருகுல அமைப்பில் படிப்படியாக கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொடுக்கும் வழி உருவானது. இதனாலேயே நேரடியாகப் பாட்டுக்களையோ, ராக ஆலாபனைகளையோ குறியீட்டின் துணையால் பாடி விட முடியாது. ஐரோப்பா இசையில் இதற்கு சாத்தியம் உள்ளது. அதனாலேயே மோசார்ட், பீத்தோவேன் போன்ற கலைஞர்களின் இசைத் தொகுப்புகளை இன்றும் குறியீட்டை மட்டும் கொண்டு ஒரு குழுவினரால் இசைக்க முடியும். குறியீடுகளைப் பற்றியும் அதற்கான வெவ்வேறு முயற்சிகள் பற்றியும் விரிவாக அடுத்தப் பகுதிகளில் பார்க்கலாம்.

வாய்ப்பாட்டிசை மற்றும் வாத்திய இசைக்கான அடிப்படைப் பயிற்சிகள் படிப்படியாக மாணவர்களை இசை உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் முறையாகும். அவை முறையே:

1. சுராவளி – சுரங்களின் ஆவளி (வரிசை) – சரளிவரிசை என்றும் கூறுவர். தமிழிசையில் இதற்குப் பெயர் கோவை வரிசைகள்.

2. ஜண்டை சுர வரிசைகள் – இரட்டைக் கோவை வரிசைகள்.

3. மேல் ஸ்தாயி வரிசைகள் – தமிழிசையில் இதை மண்டில வரிசைகள் என்பர்.

4. கீழ் ஸ்தாயி வரிசைகள் – மெலிவு மண்டில வரிசைகள்.

5. தாட்டு வரிசைகள் – தாண்டு வரிசை என்றும் அழைக்கப்படும்.

6. அலங்காரங்கள்

7. கீதங்கள்

8. ஸ்வரஜதிகள்

9. வர்ணங்கள்

அப்பியாசம் என்பது பயிற்சிக்கானச் சொல். இந்தப் பயிற்சிகளை அரங்கிசைக்கு பாடமாட்டார்கள். அதனாலேயே அப்பியாச கானத்தை மட்டும் பயின்ற ஒரு மாணவனால் அரங்கில் சோபிக்க முடியாது. அரங்கிசைக்கென தனி இசை வடிவங்கள் உண்டு. ஆனால் அவை இந்தப் பயிற்சிகளின் மேல் கட்டப்பட்டுள்ள வடிவங்களே. ஐரோப்பா இசைப் பயிற்சியில் வாத்தியத்துக்கும், வாய்ப்பாட்டிற்கும் வெவ்வேறு முறைகள் உண்டு. வாத்தியத்தில் கார்ட்ஸ் (Chords) என்ற சுரங்களின் கூட்டணியை முதலில் கற்றுக்கொள்வர். இதன் அடிப்படையிலேயே சின்னச் சின்னப் பாடல்களை இசைக்கும் பயிற்சியையும் தொடங்குவர். பின்னர் triad போன்ற மூன்று சுரக்கூட்டணியின் தொடர்புகளைக் கொண்ட Circle of Fifths போன்றவற்றைக் கற்றுக்கொள்வார்கள். இதனால் பல்வேறு சுரக்கூட்டணிக்குள் இருக்கும் தொடர்பும், எந்த வரிசையில் இவற்றை இசைக்க வேண்டுமென்ற கலையும் உருவாகும்.

முதல் சில கர்நாடக சங்கீத பயிற்சிகள், சுரங்களைப் பாட/இசைக்க மேற்கொள்ளும் பயிற்சியாகும். இதில் தேர்ந்த ஒரு மாணவர் அடுத்த கட்டமான கீதங்கள், ஸ்வரஜதிகள் போன்றவற்றில் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

பயிற்சி முறைகள் அனைத்தையும் இங்கே கொடுப்பது கடினமானது மட்டுமல்ல, அது இந்தக் கட்டுரைகளுக்கான இலக்கும் கிடையாது. அதனால் அப்பியாசகான முறைகளிலிருந்து ஒரு சில பயிற்சியை மட்டும் விரிவாகப் பார்க்கலாம். இதன் மூலம் நாம் குறியீடுகளைப் பற்றியும், பயிற்சியில் வரும் சுரக் கூட்டணிகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மேலும் விபரம் வேண்டுமாயின், கீழே கொடுக்கப்பட்ட புத்தகங்களிலிருந்துப் பெற்றுக்கொள்ளலாம்.

1. சுராவளி – கோவை வரிசைகள்

ஸ ரி க ம | ப த | நி ஸ் ||
ஸ் நி த ப | ம க | ரி ஸ ||

Get this widget | Track details | eSnips Social DNA

(ஒலியைக் கேட்க மேலே உள்ள ப்ளேயரில் play பொத்தானை அழுத்தவும்).

இது மாயாமாளவ கெளைள ராகம் (மேளகர்த்தா 15, அக்னி சக்கரம்). எல்லா சுரங்களும் வரிசையாக வருவதால், இதுவே சுலபமான முதல் பயிற்சியாகும். இங்கே பல குறியீடுகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

ஸ்தாயி என்றால் என்ன?

ஸ்தாயிக்கள் மூன்று வகையுண்டு:

1. மந்திரஸ்தாயி
2. மத்தியஸ்தாயி
3. தாரஸ்தாயி

மந்திரஸ்தாயி குறியீட்டில் சுரத்திற்குக் கீழே புள்ளி இருக்கும்
மத்தியஸ்தாயி வெறும் சுரம் மட்டும் இருக்கும்.
தாரஸ்தாயி சுரத்திற்கு மேலே புள்ளி இருக்கும்

மத்தியஸ்தாயியை ஐரோப்பா இசையில் Middle C எனக் குறிப்பிடுவர். வாய்ப்பாட்டு கலைஞர்களும், வாத்தியக் கருவி இசைப்பவர்களும் முதலில் தங்கள் ஸ்தாயியை வரையறுத்துக்கொள்வார்கள். இது கிட்டத்தட்ட in tune என வாத்தியக் கருவிகள் தங்கள் சுரஸ்தாயிகளை ஒரே அளவில் வைத்துக்கொள்ளச் செய்யும் விஷயமே. மேற்கத்திய இசையில் இதை tuning எனக் கூறுவர். கர்நாடக சங்கீத அமைப்பில் தம்புரா சுரஸ்தாயியை தீர்மானிக்கப் பயன்படும். `கட்டை` என்ற சொல்லாலும் வாய்ப்பாட்டு கலைஞர்கள் இதைக் குறிப்பிடுவர். பொதுவாக பெண்களுக்கு ஆறு அல்லது ஏழு கட்டை வரைகூட குரல் செல்லும். அவ்வளவு சுர உயர்வுகளை அவர்களால் எட்ட முடியும்.இதை modal register எனக் கூறுவர். Tenor எனப்படும் கலைஞர்கள் தங்கள் குரல்களின் ஸ்தாயியைக் கொண்டு ஓபெரா (Opera) இசை முறைகளில் பாடுபவர்கள். பல ஸ்தாயிகளை அடிப்படையாகக் கொண்ட இவர்கள், கூட்டணியில் பாடும்போது இசை நாடக உணர்வுகளை அற்புதமாக வெளிக்கொணர்வார்கள்.

ஸ்’ என்பது மேல் நிலை ஸ வைக் குறிக்கும் குறியீடாகும். அதாவது புள்ளி வைத்த சுரங்கள் மேல் ஸ்தாயியைக் குறிப்பன.

| – ஒரு தாளத்தில் பாடி முடிக்க வேண்டிய கால அளவு. அதாவது ஸரிகம மற்றும் பத ஒரே கால அளவில் பாட வேண்டும்.

|| – தாளத் தொடர்ச்சியின் முடிவு.

ஸ ரி ஸ ரி | ஸ ரி | க ம ||
ஸ ரி க ம | ப த | நி ஸ்||
ஸ் நி ஸ் நி | ஸ் நி | த ப ||
ஸ் நி த ப | ம க | ரி ஸ ||

சரி, கால அளவை எப்படி கணக்கில் வைத்துக்கொள்வது?

ஸ ரி க ம | ப த | நி ஸ் || – என்ற சுரவரிசையை பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளலாம்.

வாய்ப்பாட்டில், உட்கார்ந்து கொண்டு பாடும் வழக்கம் உள்ளதால், கால அளவைத் தீர்மானிக்க ஒரு எளிய வழியுள்ளது. சம்மணம் இட்டு உட்கார்ந்து கொண்டு, வலது தொடையில் ஒவ்வொரு சுரத்திற்கும் உள்ளங்கையில் தொடங்கி, சுண்டு விரல் என நடுவிரல் வரை தட்டுவர் ( இது ஸ,ரி,க,ம விற்கு). பின்னர் உள்ளங்கையால் தொடையை தட்டி (ப), பின்புறம் திருப்பி தொடையில் தட்டுவர் (த). மீதமுள்ள (நி,ஸ்) விற்கு கடைசி இரண்டு செயல்களை மறுபடி செய்வார்கள்.

இதன் அடிப்படையில் முதற்காலம் – ஒரு சுரத்தையும், இரண்டாம் காலம் – இரண்டு சுரத்தையும், மூன்றாம் காலம்- நான்கு சுரத்தையும் கொண்டிருக்கும். இப்படியாக மொத்தம் பதினான்கு பயிற்சிகள் சுராவளியில் உள்ளன.

2. ஜண்டை வரிசை

சுரங்களை இரண்டு இரண்டாக வரிசைப்படுத்தி பலவிதங்களில் பாடுவது ஜண்டை அல்லது இரட்டைக் கோவை வரிசை எனப்படும்.

ஸஸ ரிரி கக மம | பப தத | நிநி ஸ்ஸ் ||
ஸ்ஸ் நிநி தத பப | மம கக | ரிரி ஸஸ ||

Get this widget | Track details | eSnips Social DNA

இதைப் போல பல வடிவங்களில் சுரங்களை அடுக்குவதால் மொத்தம் ஒன்பது விதமான பயிற்சிகள் உருவாகும்.இந்த இரண்டு பயிற்சிகளிலும் முக்கியமாக சுரங்களின் ஸ்தாயியை கவனிக்க வேண்டும். த் என்ற இடத்தில் மேல் ஸ்தாயியிலும், என்ற இடத்தில் மத்யத்திலும் பாட வேண்டியது முக்கியமாகும்.

3. கீதங்கள்

கீதங்கள் அடிப்படையான முதல்கட்டப் பயிற்சி அல்ல. இதற்குள் நுழைய சுர வரிசைகளையும், தாளத்தின் அடிப்படைகளையும் நன்றாகத் தெரிந்துகொள்வது கட்டாயமாகும். இசை மாணவர்கள் கீதத்தில்தான் முதன்முறையாக சுரங்களுக்கிணையான பாட்டு வரிகளை உபயோகப்படுத்துவர். பாட்டின் வரிகளில் இருக்கும் வார்த்தைகளை எப்படிப் பாட வேண்டும் என்பதற்கு சுரங்களின் வரிசையால் தெரிவிப்பர். சுரத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பாட்டின் போக்கும் மாறுபடும். இதன் மூலம் சுரங்களுடன் கோர்வையாக எப்படிப் பாடவேண்டும் என்பதை மாணவர்கள் முதலில் உணர்வார்கள்.

உதாரணத்திற்கு, மலஹரி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் கீத வகை பயிற்சியின் பாடமாகும்.

geetham

மேல் வரியில் ரி – ஒரு புள்ளியைத் தலையில் வைத்துள்ளது (தாரஸ்தாயி). கீழ் வரிசையில் அதற்குண்டான பாடல் சொற்களை நிரப்பியுள்ளார்கள். இதன்மூலம் சொற்களை எந்த ஸ்தாயியில் எப்படி பாடவேண்டுமென்பதை மேலேயுள்ள அதற்கு இணையான சுரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

() என வரும் இடத்தில் அதற்கு முந்தைய சொல்லை அதன் கால அளவுப்படி நீட்ட வேண்டும் என்பது குறியீடு.

அடுத்தக் கட்டுரையில் மேலும் சில பயிற்சி முறைகளைப் பற்றியும் குறியீட்டைப் பற்றியும் விபரமாகப் பார்க்கலாம்.

இந்தக் கட்டுரைக்கு உபயோகப்பட்ட புத்தகங்கள்/ வலைத் தளங்கள்.

1. கானாம்ருத போதீ – ஸங்கீத பால பாடம் – வித்வான் ஏ.எஸ் பஞ்சாபகேச அய்யர்.

2. சிவகுமார் கல்யாணராமனின் வலைமனை – இது ஒரு பொக்கிஷம். கர்நாடக சங்கீதத்தின் அத்தனை முறைகளுக்கும் உதாரண ஒலிப் பயிற்சிகளும், பாடல்களும் உள்ளன.

இந்தக் கட்டுரையில் உபயோகப்படுத்தியிருக்கும் பயிற்சி ஒலிகள் சிவகுமாரின் வலைத்தளத்திலிருப்பவை. அவருக்கு தமிழ்ஹிந்து சார்பாக நன்றிகள்.

Tags: , , , , ,

 

8 மறுமொழிகள் இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

 1. முத்துக்குமாரசுவாமி on August 20, 2009 at 8:25 am

  . நான் முன்னர் கேட்டுக்கொண்டபடி ஒலி உதவியையும் சேர்த்துகொண்ட இந்த வலைப்பதிவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாயாமாளகெளளை சுரக்கோவையை இசைப்பயிற்சிக்கு முத்னமுதலில் அற்முகப்படுத்தியவர் புரந்தரதாசர் என்றும் அதற்கு முன் அரிகாம்போதி சுரக்கோவையும் சங்கராபரண இசைக்கோஐயும் அடிப்படியாக இருந்தன எனச் சிலத் தமிழிசை நூல்கலில் நான் வாசித்திருக்கின்றேன். உரிய இடத்தில் இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டுகின்றேன்.சுத்தம் அந்தரம் காகலி முதலிய சுர வேறுபாடுகளையும் அதனால் பிறக்கும் இராக வேறுபாடுகளையும் இந்தப் பதிவில் உள்ளதுபோல் ஒலிப்பதிவுடன் விளக்க வேண்டுகின்றேன்

 2. முத்துக்குமாரசுவாமி on August 20, 2009 at 10:30 am

  Thank you for introducing me to sivakumar kalyanaraman web site on music.

 3. ரா.கிரிதரன் on August 20, 2009 at 5:46 pm

  அடிப்படையில்,அரிகாம்போதி சுரக்கோவையும் சங்கராபரண ராகமும் பயிற்சிக்கு அடிப்படியாக இருந்தன என தமிழிசை புத்தங்களில் உள்ளன. ஆனால், இப்போது பயிற்சி வகுப்புகளில் இதை ஆரம்ப பயிற்சிக்கு உபயோகப்படுத்துவதில்லை.

  தொடர்ந்து தங்கள் கருத்துகளை பதிவதற்கு நன்றி.

 4. Sankaran on September 18, 2009 at 3:25 pm

  கானாம்ருத போதீ – ஸங்கீத பால பாடம் – வித்வான் ஏ.எஸ் பஞ்சாபகேச அய்யர்.
  This page is Not Opening in the same way as the next one : as in Sivakumar’s.

  Can Shri Ra.Giridharan correct it, Please.

 5. ரா.கிரிதரன் on September 22, 2009 at 2:07 am

  Sankaran

  There is no link for கானாம்ருத போதீ . சிவகுமாரின் வலைதளம் அடுத்த லிங்கில் உள்ளது.

  நன்றி
  ரா.கிரிதரன்

 6. […] குரல்களின் ஸ்தாயியைக் கொண்டு ஓபெரா (Opera) இசை முறைகளில் பாடுபவர்கள். பல […]

 7. s.s.bama on May 21, 2017 at 10:14 am

  thank you for information above that about music

 8. ஜெரால்ட் on October 24, 2017 at 1:33 am

  மிகவும் சிறப்பான கட்டுரை

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey