இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையின் 1909 ஆம் வருட ஜூன் மாத இதழிலிருந்து:

(உரையைத் தமிழாக்கம் செய்தவரும் பாரதியே என்பது கண்கூடு!)

1909 ஆம் வருடம் கல்கத்தாவில் உத்தர்பாரா தர்ம ரக்ஷணி சபையின் இரண்டாவது வருஷாந்தரக் கொண்டாட்டத்தில் ஸ்ரீ சத்குரு அரவிந்தர் பின்வருமாறு சொற்பொழிவாற்றினார்.

சுதேசீயமாவது யாது?

arabindo01
ஸ்ரீ அரவிந்தர்

இன்று, உங்களுடைய வருஷாந்தரக் கூட்டத்தில் உங்கள் முன்பு பேசவேண்டுமென்று என்னைச் சிலர் கேட்டுக்கொண்டபோது நான் இன்று பிரசங்கத்திற்காகக் குறிப்பிடப்பட்டதாகிய ‘ஹிந்து மார்க்கம்’ என்ற விஷயத்தைப் பற்றி பேசலாமென்று எண்ணினேன். ஆனால், இப்போது அந்த எண்ணத்தை நிறைவேற்றுவேனோ என்பது எனக்கே சந்தேகமாயிருக்கிறது. எனென்றால், இங்கு வந்து உட்கார்ந்த பிறகு, என் மனதிற்கு ஒரு வார்த்தை ஞாபகம் வந்தது. அதனை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். அந்த வார்த்தை எனக்குச் சிறைச்சாலையிலே கூறப்பட்டது. அந்த வார்த்தையை நான் பாரத ஜாதி முழுமைக்கும் நான் சொல்லியாக வேண்டும். அந்த வார்த்தையை எனது ஜனங்களுக்கெல்லாம் எடுத்து உரைக்கும் பொருட்டாகவே நான் சிறைச்சாலையினின்றும் வெளியே வந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கு நான் முன்பு வந்து ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. அப்போது நான் தனியாக வந்திருக்கவில்லை. சுதேசீய தர்மத்தின் மகா சக்திமான்களாகிய ரிஷிகளிலே ஒருவர் தன் பக்கத்திலே அப்போது வீற்றிருந்தார். ஈசன் தம்மை அனுப்பியிருந்த தனிமை வாசத்திலிருந்து அவர் அப்பொழுதுதான் வெளியேறி வந்தார். அத்தனிமை வாசத்திற்கு அவரை ஈசன் தனது திருவாக்கை நன்கு கேட்கும் பொருட்டாகப் போக்கி ஒரு சிறையிலே அடைத்திருக்கும்படி செய்தார். அங்கிருந்து மீண்டு வந்த அவருக்கு நல்வரவு கூறும் பொருட்டாகவே நீங்கள் அப்பொழுது நூற்றுக்கணக்காக இவ்விடத்தில் கூடியிருந்தீர்கள். இப்பொழுது அவர் வெகு தூரத்திலே இருக்கிறார். எனக்கும் அவருகும் இடையே பல்லாயிரம் யோசனைத் தூரம் இருக்கின்றது.

நான் ஒரு வருஷகாலம் சிறைச்சாலையிலே செலவிட்டேன். இப்பொழுது வெளியே வந்து பார்க்கும் பொழுது எல்லாம் மாறியிருக்கக் காண்கிறேன். நாட்டிலே ஒரு சண்ட மாருதம் வந்து வீசிப்போனது போலிருக்கிறது. எப்பொழுதும் என் பக்கத்திலே துணையாயிருந்த ஒருவர் – எனது தருமத்திலே கூட்டுழைப்பாளியாயிருந்த மஹான் இன்று பர்மாவிலே சிறைப்பட்டிருக்கிறார். இன்னுமொருவர் வடக்கே காவலுட்பட்டு வருந்துகிறார். நான் சிறையிலிருந்து வெளியேறிய பொழுது, எனது துணைவர்களும், எனக்கு உள்ளக் கிளர்ச்சியளித்த மேலோர்களும், எங்கே இருக்கிறார்களென்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை! அதுமட்டுமா? நான் சிறைச்சாலைக்குள்ளே சென்ற காலத்தில் தேசமுழுதும் ‘வந்தே மாதரம்’ என்ற தொனி நிரம்பியிருந்தது.

ஒரு ஜாதியின் பக்தி – பதித ஸ்திதியிலிருந்து புதிதாக எழுச்சி பெற்ற பலகோடி ஜனங்களும் புதிய நம்பிக்கை – மேற்கொண்டதாகி நாடு முழுதும் உயிர்க்கிளர்ச்சி பெற்று விளங்கிற்று. நான் சிறையினின்றும் வெளியேறியவுடனே, அந்த முழக்கம் காதில் விழுமாவென்று உற்றுக் கேட்டேன். எங்கு பார்த்தாலும் மௌனமாய் அடங்கிப் போயிருந்தது.

இனி செய்தற்குரிய தென்ன?

எந்த வழியிலே போவதென்று தெரியாமல் எல்லா மனிதர்களும் தயங்கிக் கொண்டிருந்ததாகத் தோன்றிற்று. இனி நாம் செய்யவேண்டிய அடுத்த விஷயம் என்ன? ‘என்ன செய்வது? … என்ன செய்வது?’.. என்ற கேள்வி எல்லாத்திசைகளிலிருந்தும் எனக்கு வந்து எட்டியது எந்த வழியில் போவதென்று எனக்கே தெரியாமலிருந்தது. நமது அடுத்த காரியம் இன்னதென்பது எனக்கு இப்பொழுது தோன்றவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டிலும் அறிந்தேன். அது யாதெனில் சர்வ சக்திமானாகிய ஈசனே நம்முள் அந்த முழக்கத்தையும், அந்த நம்பிக்கையும் எழும்படி செய்திருந்தான். அந்த ஈசனே இந்த மௌன நிலையை நம்மீது விடுத்திருக்கிறான். நாடு வாய்திறவாமலிருப்பதின் அர்த்தத்தை நானே கண்டறிந்திருக்கிறேன். நான் காவலிலிருந்த நெடிய ஒரு வருஷத்தினிடையே எனக்கு லாபம் கிடைத்திருக்கிறது. நான் அப்பொழுது மிக அரிதாகிய ஓருண்மையை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன். (ஆதலால் தேசத்தையும் இப்பொழுது வாய் திறவாமலிருக்கும்படி ஈசன் செய்வித்தது ஒரு பெருந்தந்திரம் பற்றியே என்பதை அறிந்து கொண்டேன்.)

பாபு விபினசந்திர பாலர் சிறையிலிருந்து மீண்ட பொழுது ஒரு கட்டளையுடன் மீண்டனர். அக்கட்டளை ஈசனிடமிருந்து பிறந்தது. அவர் அப்பொழுது செய்த பிரசங்கம் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது. அது வெறும் ராஜரீக சம்பந்தமான உபந்நியாசமன்று. இயைபிலும், கருத்திலும் தார்மிகமான உபந்நியாசம். அதுபோலவே இன்று நானும் உங்களைச் சந்தித்திருக்கிறேன். நானும் சிறையிலிருந்தே வருகின்றேன். நீங்கள் எனக்கு இப்பொழுது நல்வரவு கூற வந்திருப்பது வெறும் ராஜரீக சம்பந்தமான சபையிலன்று, நமது ஹிந்து தர்ம ரக்ஷணத்தின் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சமாஜத்தில். பக்ஸார் நகரத்துச் சிறைக்கூடத்திலே ஈசன் விபினசந்திர பாலருக்கு அருளிச்செய்த கட்டளையையே எனக்கு அலிப்பூர் நகரத்து ஜெயிலில் மீண்டும் கொடுத்தருளினன். நான் காவலிலிருந்த நெடிய வருஷ முழுமையிலும் ஒவ்வொரு நாளும் அக்கட்டளையை அவன் எனக்கு மீண்டும் மீண்டும் தந்தனன். அக்கட்டளையையே நான் வெளியேறியவுடன் உங்களுக்குக் கூறும்படி அவர் எனக்கு ஆக்கினை கொடுத்திருக்கிறான்.

ஏகாந்தமாயிருந்த வருஷம்

நான் வெளியில்வந்து விடுவேனென்று எனக்கு முன்னமேயே தெரியும். ஏகாந்தமாயிருந்த வருஷம் எனக்குப் பயிற்சிக் காலம். (அக்காலவரையின் பின்பு) என்னைச் சிறைக்குள்ளே வைத்திருக்க எவனால் முடியும்? ஈசன் நான் பிறரிடம் சொல்வதற்கு வார்த்தையும் நான் செய்வதற்குக் காரியமும் கட்டளையிட்டிருக்கின்றான். அந்த வார்த்தையை பேசி முடியும் வரை – அந்த வேலை செய்து முடியும் வரை எவ்விதமான மனுஷ சக்தியாலும் என்னை அடக்கமுடியாது; என்னைத் தடுக்கமுடியாது.

நான் இப்போது வெளியே வந்திருக்கவே இந்தச் சில நிமிஷங்களில் அவ்வார்த்தையைப் பேசும்படி அவன் என்னைப் பணித்திருக்கின்றான். என் மனதிலிருந்த விஷயத்தை அவன் வெளியே கொண்டு காண்கிறான். நான் அவனுடைய புன்னகைகளின் கீழ் அவனுடைய வற்புறுத்தலுக்கு இணங்கிப் பேசுகிறேன். என்னைப் பிடித்து லால் பஜார் டாணாவிற்குக் கொண்டுபோய் வைத்த சமயத்தில் எனக்கு இறைவனுடைய திருவுள்ளம் நன்கு விளங்கவில்லை. சிறிது நேரம் கலங்கிப் போய்விட்டேன். ’என்ன ஆச்சரியம்’, நான் எனது தேசத்து ஜனங்களுக்குள் ஒரு தர்மத்தைப் பிரசுரிக்க வந்தவனென்று நம்பியிருந்தேன். என்காரியம் நிறைவேறி முடியும் வரை நான் உனது பாதுகாப்பிலிருப்பேனென்று காத்துக் கொண்டிருந்தேன். இப்படி ஏகாந்தமாயிருக்கும் பொழுதுதான் கட்டளை பிறந்தது.

சிறிது காலம் என் முயற்சியினின்றும் பிரிந்து நின்று ஏகாந்தமாகப்போய் என்னுள்ளே சோதனை செய்து, அவனுடன் உறவுகொண்டு நிற்கும் வண்ணம் கட்டளையிட்டான். நான் துர்ப்பலஞ் சார்ந்திருந்தேன். ஆதலால் அக்கட்டளைக்கிணங்க முடியவில்லை. மேலும் எனது தொழில் எனக்கு மிக அருமையானது. எனது நெஞ்சிலிருந்த கர்வத்தால், ‘நானிருந்தாலொழிய என்வேலை தடைப்பட்டுப் போகும். அது தவறிஒன்றுமில்லாமல் போய்விடும் ஆதலால் அதைக் கைவிடமாட்டேன்’ என்றேன்.

அப்பொழுது அவன் சொன்னான்; ‘நீ அறுப்பதற்கு வலிமையற்றிருந்த தளைகளையெல்லாம் நான் அறுத்துவிட்டேன். எனென்றால், நீ அதில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்பது எனது கருத்தன்று. எனது சித்தம் அப்படியில்லை. நான் உனக்கு இப்பொழுது வேறொரு காரியம் வைத்திருக்கிறேன். அதன்பொருட்டாகவே உன்னை இங்கு கொண்டுவந்தேன்’ என்றான். அப்பால் எனது கையிலே ‘கீதையை’க் கொடுத்தான்.

அவனுடைய சக்தி என்னுள்ளே புகுந்தது. அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் என்ன கட்டளையிட்டாரென்பதையும், அவருடைய காரியம் செய்யவிரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் என்ன கட்டளையிடுகிறாரென்பதையும், நான் பக்தியால் தெரிந்துகொண்டது மட்டுமன்றிச் சைதன்யத்திலே அனுபவித்துத் தெளிந்தேன். ஹிந்து மார்க்கத்தின் பொருளைத் தெரிந்து கொண்டேன். ‘ஸநாதன தர்மம்’ ஹிந்து மார்க்கம் என்று அடிக்கடி பேசுகின்றோம், ஆனால் அந்த தர்மத்தின் பொருளை மிகச்சிலரேயறிவார்கள்.

ஸநாதன தர்மம்

மற்ற மார்க்கங்களெல்லாம் ஆசாரத்தையும், பக்தியையும் தழுவியனவாகும். இந்த ஸநாதன தர்மமே பழமைதொட்டு ஸர்வஜன காருண்யத்தையும், புருஷ தத்துவத்தையும், மோஷத்தையும் காட்டுவதாகும். இந்த மார்க்கத்தையே நமக்கு ஈசன் கொடுத்திருக்கின்றார். நாம் இதனை உலகத்தாருக்குக் கொடுக்கும் பொருட்டாக இந்த தர்மத்தை உலக முழுமைக்கும் வீசும் பொருட்டாக இப்போது பாரத தேசம் எழுச்சி பெறுகின்றது.

பாரதநாடு மற்ற நாடுகளைப்போல, எழுவதன்று. எளியாரைமிதித்து, இம்சை செய்து மேல் எழுச்சி பெறுவதன்று. உலகமுழுதிலும் ஓர் ஒளி வீசும் பொருட்டாகப் பாரத தேவி எழுகின்றாள். உலக முழுமைக்கும் ஓர் அழிவற்ற நித்யஜோதி காட்டும் பொருட்டு மாதா எழுச்சி பெறுகின்றாள். எனவே, ஈசன் எனக்கு ஹிந்துதர்மத்தின் உட்பொருளைக் காண்பித்தனர். அதை நான் அநுபவத்திலே தெளியும்படி செய்வித்தார். அவர் சிறைக்காவலாளிகளின் நெஞ்சங்களை என்வசமாகத் திருப்பிவிட்டார்.

அக்காவலாளிகள் தங்கள் மேலதிகாரியாகிய ஆங்கிலேயரிடம் போய் என்பொருட்டு மன்றாடினார்கள். ‘அரவிந்த பாபு ஏகாந்தமாய் அறையில் மிகவும் கஷ்டப்படுகிறார். அவரை வெளியே சிலசமயம் நடந்து வரும்படிக்கேனும் செய்யலாகாதா?’ என்று அவனிடம் கேட்டார்கள். அவனும் இணங்கிவிட்டான். அந்த ஏற்பாட்டின்படி நான் வெளியே சுற்றிவர இடமுண்டாயிற்று..

அப்போது ஈசனுடைய வலிமை என்னுள்ளே புகுந்தது. நான் எங்கும் வாசுதேவனைக் கண்டேன். ஒரு மரத்தடியே நடந்து சென்றேன். அங்கே வாசுதேவன் – ஸ்ரீ கிருஷ்ணன் நின்று எனக்கு நிழல் கொடுக்கக் கண்டேன். எனது சிறையின் கதவைப் பார்த்தேன். அதிலும் வாசுதேவனைக் கண்டேன். நாராயணனைக் கண்டேன். நான் படுத்திருக்கும்பொது நாராயணன் என்னைத் தனது கைகளால் ஆதரித்துக்காத்தான். அவனது புயங்களினிடையே நானிருப்பது கண்டேன். எனது தந்தை, எனது காந்தன், என்னைத் தன் கையால் கட்டிக் காப்பதைத் தெளிந்து கொண்டேன். இதுதான் அவன் எனக்குக் கற்பித்த முதற்பாடம்.

சிறைச்சாலையிலிருந்த கைதிகளையெல்லாம் பார்த்தேன். அவர்களெல்லாம் நாராயணனே யென்பது கண்டேன். திருடர்கள், கொலையாளிகள், மோசக்காரர்கள் எல்லோரும் வாசுதேவனே. குற்றத்தின் பொருட்டுச் சிறையுண்டிருந்த திருடர்களும் கொள்ளைக்காரரும் எனக்கு நாராயணனாகத் தென்பட்டார்கள். என் மனதில் வெட்கம் ஜனிக்கும்படியாக அத்தனை அன்பும் அனுதாபமுள்ள இவர்கள் அக்கூட்டத்தினிடையே இருந்தனர்.

இன்னுமொரு விஷயம் பார்த்தேன். எழுதப் படிக்கத் தெரியாத நம்மவனாகிய ஒரு கிராமவாசி அங்கே இருந்தான். நாம் சாதாரணமாக அவன் போன்ற ஜனங்களை கீழ்க்குலத்தாரென்று சொல்லுகிறோம். ஆனால் அந்த மனிதன் ஒரு ரிஷியாக இருப்பதை நான் கண்டேன். இந்த மனிதன் பதினான்கு வருஷம் கடுங்காவல் தீர்ப்புக்கு உட்பட்டிருந்தான். ஈசன் என்னை நோக்கி கூறுவன்: ‘நான் உனக்கு அனுப்பியிருக்கும் ஜனங்களைப் பார். இவ்விதமான மனிதர்களையே நான் மேலே எழச் செய்துகொண்டிருக்கிறேன்.’

இளவயதில் ஸ்ரீஅரவிந்த, மனைவி மிருணாளினி தேவியுடன்
இளவயதில் ஸ்ரீஅரவிந்தர், மனைவி மிருணாளினி தேவியுடன்

மறுபடியும் கோர்ட் தொடங்கிற்று. எங்களை மாஜிஸ்திரேட் முன்பு கொண்டுவந்தார்கள். அப்பொழுது பரமாத்மா என்னிடம், ‘அடா, நீ ஆரம்பத்திலே சிறைக்கு வந்த காலத்தில் அதைரியப்பட்டு, ஈசா உனது துணை எங்கே என்று கூவினை. இப்பொழுது இந்த மாஜிஸ்திரேட்டைப் பார். அந்த வக்கீலைப் பார். அவர்களையெல்லாம் உற்று நோக்கு’ என்றான். நான் உற்றுப் பார்த்தேன். அங்கே ஆஸனத்தில் மாஜிஸ்திரேட்டைக் காணவில்லை. வாசுதேவ நாராயணன் ஆசனத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். நன் வக்கீலைப் பார்த்தேன். அங்கே ஸ்ரீ கிருஷ்ணன் வீற்றிருந்தான். எனது காந்தன் என்னுடைய நண்பன் அங்கே வீற்றிருந்து என்னை நோக்கிப் புன்னகை செய்தான். ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லினன்; ‘இப்பொழுது நீ அஞ்சுகிறாயா! நான் உனக்குத் துணை இருக்கிறேன். நீ அஞ்சவேண்டாம் என்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வழக்கை என் பார்சத்திலே விட்டுவிடு. இதிலுனக்குச் சம்பந்தமில்லை. என்னுடைய காரியம் நடப்பதற்கு இஃதோர் உபாயம்.’

மறுபடி ஸெஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடக்கத் தொடங்கிய காலத்தில் நான் எனது வக்கீலுக்கு குறிப்புகள் எழுதலானேன். சாக்ஷிகள் இன்னின்னது சொல்லலாம், இன்னின்னது சொல்லலாகாது என்பதெல்லாம் எழுதிவைத்தேன். அத்தருணத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. என்பக்கத்துக்கு வழக்கை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளெல்லாம் மாறுபாடடைந்து போயின. வேறொரு புதிய வக்கீல் என் வழக்கை நடத்துவதற்கு வந்து சேர்ந்தர்ர்.

இவர் திடீரென்று வந்தார். அவர் வருவது எனக்குத் தெரியாது. நான் அங்கே, அவரை முன்போலவே பார்த்தேன். அவர் மறுபடியும் என்னுடன் பேசினார். ‘இவர் உன் காலைச்சுற்றியிருக்கும் கண்ணியிலிருந்து உன்னை மீட்டிடுவார். இந்தக் காகிதங்களைத் தூரவைத்துவிடு. நீயல்ல இவருக்குப் போதிக்க போகிறவன்’ என்றார் பகவான். ஸ்ரீயுத சித்தரஞ்சன தாஸ் என்னும் இவரை நீங்களெல்லோரும் அறிவீர்கள். என்னைக் காப்பாற்றும் நிமித்தம் தமது எல்லா வேலைகளையும், கேஸுகளையும் விட்டுவிட்டார். இவர்தான் என்னைக் காப்பாற்ற வந்த வக்கீல்; எனது போதனைகள் தூரவைக்கப்பட்ட போதிலும், இவர் வந்த சமயமுதல் எனக்கு மிக்க திருப்தியுண்டாயிற்று. நான் என்னுடைய வக்கீலுடன் ஒரு பேச்சாவது பேசவில்லை, அவருக்கு எவ்வித போதனையும் செய்யவுமில்லை. கேஸை முற்றிலும் அவர் பொறுப்பாக விட்டுவிட்டேன். கேஸின் முடிவு உங்களெல்லோருக்கும் தெரியும்.

என்னுள் ஒரு தொனி

நான் அடிக்கடி பின்வரும் சொற்களைக் கேட்டிருப்பதால் அதனுடைய தாத்பரியம் எனக்குத் தெரியும். ‘நான் உன்னை நடத்துகிறேன். ஆகையால் பயப்படாதே. நான் எவ்வேலைக்காக உன்னை ஜெயிலுக்குக் கொண்டுவந்தேனோ, அவ்வேலையைச் செய். நீ வெளியே வரும்பொழுது பயப்படாதே, நிதானியாதே. தடுமாறாதே. நான் இதைச் செய்கிறேனென்பதை ஞாபகத்தில் வை. ஆகையால் எவ்வித மப்புகள் மூடிக்கொண்டபோதிலும், எவ்வித கஷ்டங்கள் அல்லது அசாத்தியங்கள் நேர்ந்தபோதிலும் ஒன்றும் எனக்கு அசாத்தியமல்ல. எனெனில் நான் வாசுதேவன் – நாராயணன். நான் என்ன இஷ்டப்படுகிறேனோ அதுதான் உண்டாகும். எவ்வித மானிடப் பிரயத்தனமும் அதைத் தடுக்க முடியா’ தென்று ஓர் தொனி என்னுள் உண்டாவதை உணர்ந்தேன். அது என்னை மறுபடியும் என்னுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களிடத்திற்குக் கொண்டுவந்தது.

உங்களில் பலர் எனது தேஹ சுப பரித்யாகத்தைப் பற்றி பேசி இருக்கிறீர்கள். நான் ஜெயிலினின்று வெளிப்பட்டது முதல் இவ்விதப் பேச்சைக் கேட்டுவருகிறேன். என்னைச் சுற்றிலும் பல வாலிபர்களைக் கண்டேன். எவர்களுடைய பலத்த தைரியமும் தேகசுக தியாகமும் எனதுடன் சரிபார்க்கும்போது எனது ஒன்றுமில்லாததாக முடியுமோ அத்தகைய குணங்களுடைய பலரை அவர்களில் கண்டேன். என்னைவிட இவர்கள் பராக்கிரமசாலிகளாக இருப்பதைக் கண்டேன். இவ்வாலிபர்கள்தான் பிற்கால சந்ததியார்; இப்போது அபிவிருத்தியடைந்துவரும் பராக்கிரமமுள்ள ஜாதி இவர்களே. நீ ஏன் பயப்படுகிறாய்? நீ இங்கே தூங்கும் பக்ஷத்தில் உன் வேலையை எடுத்துக்கொள்ள இதோ இந்த வாலிபர்கள் இருக்கிறார்கள் பார். நீ ஏன் அதைரியப்படுகிறாய், இந்த ஜாதியை உயர்த்தும்படியான வார்த்தைகளைப் பேச இதோ உனக்கு நான் வலிமையைத் தந்திருக்கிறேனென்றார் ஈஸ்வரன். சுவாமி இவைகளெல்லாவற்றையும் எனக்குக் காண்பித்தார்.

பிறகு ஓர் விஷயம் உடனே நேர்ந்தது. ஓர் தனியறைக்கு நான் பரபரப்பாகக் கொண்டு போகப்பட்டேன். அந்தச்சமயம் என்ன நேர்ந்ததோ அதைச்சொல்ல இப்போது சமயமில்லை. நாளுக்கு நாள் அவர் எனக்கு தம் அற்புதங்களைக் காட்டிவந்தார். ஹிந்து மதத்தின் தத்துவங்களை எனக்கு உணரச்செய்தார். முற்றும் வேறான கொள்கைகளையுடைய இங்கிலாந்து தேசத்தில் நான் வளர்க்கப்பட்டேன். எல்லாம் மனக்கல்பனை, கனவு, அஹங்காரம், அதில் ஒன்றும் உண்மை கிடையாதென்று நான் நம்பியிருந்தவன்.

ஆனால், நாளாக நாளாக, மனதிலும், தேகத்திலும், ஹிருதயத்திலும் ஹிந்து மதத்தின் உண்மைகளை அனுபவத்தில் கண்டுகொண்டேன். அது எனக்கு ஜீவித ஸத்தியமாக ஆய்விட்டது. பௌதீக சாஸ்திரங்களால் வெளிப்படாத பல ரஹஸியங்கள் எனக்குத் தெரிந்தன. நான் முதல் முதலில் அவரை முழுமையும் பக்தி அல்லது ஞானமார்க்கத்தினால் அண்டவில்லை.

சுதேசியம் ஆரம்பிப்பதற்கு முன்னமே நான் பரோடவிலிருக்கும் போதே அவர் தரிசனமானார். நான் அந்தக் காலத்தில் ஈஸ்வர தரிசனமடைகையில் அவரிடம் எனக்கு நிஜமான பக்தியுண்டாயிருக்கவில்லை. தெய்வம் ஒன்று இருக்கிறதென்று எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. வேதத்தின் உண்மைக்கும், கீதையின் சத்தியத்திற்கும், ஹிந்து மதத்தின் தத்துவத்திற்கும், ஏதோ ஒன்று என்னை இழுத்துவிட்டது. யோகத்திலும், மதத்திலும் ஓர் பலமான உண்மை இருக்கிறதென்பதை உணர்ந்தேன்.

‘நீ ஒரு வஸ்துவாயிருக்கும் பக்ஷத்தில், என் மனதையறிந்திருக்கும் பக்ஷத்தில் எதற்காக என் வாழ்நாட்களை ஸமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அந்த ஹிந்து ஜாதியை உன்னத பதவிக்குக் கொண்டுவர எனக்குச் சக்தியைத் தாரும். நான் முக்தியைக் கேட்கவில்லை. இதரர்கள் கேட்கும் வேறு எதையும் கேட்கவில்லை. வெகுநாளாக அதற்காகநான் பிரயத்தனப்பட்டேன். பிறகு தனிக்காவல் அறையில்நான் ஏகாந்தமாக இருக்கையில் என்ன உத்திரவு கொடுக்கிறீரென்று கேட்டேன்; நான் என்னவேலை செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரியவில்லை. எப்படி செய்வதென்றும் தெரியவில்லை. நான் என்ன செய்வதென்று கேட்டேன்.

bharat_mata_tshirtஇரண்டு உத்திரவுகள் கிடைத்தன. அதில் முதலாவது, ’நீ இந்த ஜாதியை உயர்த்தப் பிரயத்தனப்பட வேண்டும்.. வெகு சீக்கிரத்தில் நீ ஜெயிலினின்று விடப்படுவாய்; நீ தண்டிக்கப்பட்டு, இதரர்களைப் போல ஜாதிக்காக ஜெயிலில் கஷ்டப்பட்டுக் காலம் கழிக்க வேண்டுமென்று எனக்கு இஷ்டமில்லை; உன்னை நான் வேலை செய்யக் கூப்பிட்டு வந்தேன். நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். போய் வேலை செய்’ என்றார். பிறகு இரண்டாவது உத்தரவு என்னவென்றால், ஒரு விஷயம் ஏகாந்தமாய் நீ இருந்த இவ்வருஷம் காண்பிக்கப்பட்டது. அதுதான் ஹிந்துமத தத்துவம். உலகத்தார் முன் இதைத்தான் பரவச் செய்துவருகிறேன். இதைத்தான் ரிஷிகள் மூலமாயும் அவதாரங்கள் மூலமாயும் பரிபூரணத்திற்கு கொண்டுவந்து அபிவிருத்தி செய்து வந்தேன். நீ ஜனங்களுக்குப் பிறகு போதிக்க அது இப்போது உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய வாக்கைப் பிரசுரப்படுத்த இந்த ஜாதியை நான் முன்னுக்குக் கொண்டு வருகிறேன். இதுதான் ஸநாதான தருமம்; நீ இதற்கு முன் அறிந்திராத ஸநாதான தருமத்தைத்தான் நான் உனக்குப் போதித்தேன். நான் நீ திருப்தியடையும்படியான சில அத்தாக்ஷிகளை உனக்குக் கொடுத்திருக்கிறேன். வெளியே புறப்பட்டுப்போய் உன் ஜாதியாருக்கு இந்த வார்த்தைகளைச் சொல் ஸநாதன தர்மத்திற்காகத்தான் இவர்கள் உயர்த்தப் படுவதை தெரிவி.

உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்.

மதத்தைக் கனப்படுத்துவதென்றால் தேசத்தைக் கனப்படுத்துவதென்று பொருள். நான் எங்குமிருக்கிறேன் என்பதை உனக்குக் காண்பித்திருக்கிறேன். நான் தேச க்ஷேமத்திற்காகப் பாடுபடுவோர்கள் உள்ளிருந்து வேலை செய்துவருகிறேன். எல்லாரிடத்திலுமிருந்து வேலை செய்கிறேன். ஏனெனில், அவர்கள் எல்லோரும் என் வேலையையே செய்கிறார்கள். நீ எந்தப் பக்கம் அசைகிறாய் என்பது உனக்குத் தெரியாது. எனது சக்தியானது முன்னே சென்று இருக்கிறது. வெகு காலத்திற்கு முன்னமேயே அதை நான் தயார்படுத்தி வந்தேன்.

ஹிந்து மதமென்பதென்ன?

ஹிந்து மதமென்பதென்ன? ஹிந்துக்கள் மதத்திற்கு ஹிந்து மதமென்று பெயர். எனெனில் ஹிந்து ஜாதி இதை அனுஷ்டித்து பலகாலமாக காத்து வந்தார்களான படியினாலே உலகத்தில் ஓர் எல்லையை உடைய ஒரு பிரத்தியேகமான தேசத்தை இது குறிப்பிடவில்லை. ஹிந்து மதம் ஸநாதனமான மதம். எல்லா மதங்களுள் அடங்கிய ஸர்வ ஸம்மதமான மதம் இதுவே. இந்த ஓர் மதம்தான் லோகாயத தர்மத்தை (Materialism) வெல்லக்கூடியது. இந்த மதம்தான் மனிதன் ஈசுவரனை அடையக்கூடுமென்று நம் மனதில் அழுத்துகிறது. இந்த ஒரு மதம் தான் ஜனங்களுக்கு உலகம் அநித்யமென்பதைக் காண்பிக்கிறது. இதுதான் வாசுதேவனின் லீலை. லீலை இன்ன ஸ்வரூபமாக இருக்கிறது என்பதைக் காண்பிப்பது இந்த ஒரு மதம்தான்.

இந்த ஒரு மதம்தான் இவ்வாழ்நாட்களிலேயே பரோக்ஷ தரிசனம் அடையலாமென்று கூறுகிறது.

இப்பொழுது தேசத்திலுண்டாயிருக்கும் கிளர்ச்சி, ராஜரீகத்தாலல்ல. ஜாதியத்துவத்திற்கும் ராஜரீகத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஜாதியத்வம்தான் ஸனாதன தர்மம். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது.

(இந்திய சுதந்திரத் திருநாளான ஆகஸ்டு 15 ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளும் ஆகும்).

4 Replies to “இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை”

  1. ஆன்மீகம் என்பது ”ஏதோ” சமாச்சரமென்று பலர் நினைத்து வருகின்றனர். அரவிந்தர் விளக்கம் கொஞ்சம் அதற்கு ஒளிகாட்டுமென்று நம்பலாம். இலக்கியத்தின் எல்லைக்கோடு ஆன்மீகம் என்று முன்பொரு பேட்டியில் சொன்னபோது என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர். எதில் ஆன்மீகமில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

  2. ஸ்ரீ அரவிந்தருடைய உத்தர்பாரா உரையை, பாரதி மொழிபெயர்ப்பில் அதுவும், ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளாகிய இன்று வெளியிடப்பட்டிருப்பது, மிகவும் விசேஷமே.

    கொஞ்சம் கூர்ந்து கவனித்து பார்த்தால், நம்அனைவருக்குமே ஸ்ரீ அரவிந்தருக்குக் கிடைத்த மாதிரி ஆதேஷ் [இறைவனது திருவுள்ளக் குறிப்பு] கிடைக்குமென்பது திண்ணம். இறைவனது திருவுள்ளக் குறிப்பை ஏற்று, அதன்படியே நடக்க உறுதி கொள்ளும் ஒவ்வொருவருக்குமே, பார்த்தனுக்குத் தேரோட்டிய பார்த்தசாரதியாக, இறைவனே துணை வருகிறான் என்பதும் திண்ணம்.

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *