போகப் போகத் தெரியும் 29

காட்சி, சாட்சி, கல்லா

திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் கூறுகிறார்:

k-balachandar1அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை நான் கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது. பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்த போதெல்லாம் இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்…

அண்ணாவின் அரசியல் எழுச்சியையும் கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அடுத்து ‘நல்லதம்பி’ படம் பார்த்தேன். தன் புதுமைக் கருத்துக்களால் சிரிப்போடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த கலைவாணரும் அண்ணாவும் சேர்ந்து அளித்த அந்தப் படமும் சொல்லப்பட்ட கருத்தும் என்னை பிரமிக்க வைத்தது.

அதில் ஒரு காட்சி வருகிறது. தாயையும், மகளையும் காண ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். ஆனாலும் இருவரையும் சேர்ந்தார்ப்போல் காண முடிவதில்லை அவரால். ஒருவர் வீட்டிற்குள் போனபின் தான் ஒருவர் வரமுடியுமென்ற நிலை. அதற்குக் காரணம் அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே சேலைதான் வீட்டிலிருந்து. அதை ஒருவர் கட்டிக்கொள்ள மற்றவர் கட்டியிருக்கும் கந்தல் துணியுடன் வெளியில் வரமுடியாது…

இந்த அவலம் நிறைந்த காட்சியை இவ்விதம் படமெடுத்த டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சுவானாலும் இக்காட்சியை அமைத்த கலைவாணராக இருந்தாலும் வசனம் தீட்டிய அண்ணாவாக இருந்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சில் பசுமரத்தாணி பதிந்ததுபோல் ‘நல்லதம்பி’ படத்தில் வந்த இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது.

-பக் 95, 96 / கே. பாலசந்தர் / மணிமேகலைப் பிரசுரம்.

1949 இல் வெளிவந்தது நல்லதம்பி திரைப்படம். Mr. Deeds goes to Town என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல்தான் இது. சி.என். அண்ணாதுரை வசனம் எழுதினார் என்று சொல்லப்பட்டாலும் ns-krishnanஅதில் என்.எஸ். கிருஷ்ணன் ஏகப்பட்ட மாற்றங்களை செய்துவிட்டார் என்றும் ஒரு செய்தி இருந்தது.

நல்லதம்பியைத் தொடர்ந்து ‘தம்பிதுரை’ என்ற திரைப்படம் அண்ணாதுரையின் வசனத்தோடு வெளிவரும் என்று அறிவித்தார் என்.எஸ். கிருஷ்ணன். ஆனால் அறிவிப்போடு சரி. அந்தப் படமுயற்சி முன்னேறவே இல்லை.

நல்லதம்பி திரைப்படத்தில் கட்டுவதற்குத் துணி இல்லாமல் தாயும் மகளும் படும் வேதனை பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற்றது. திரைப்படத்தில் ஜமீந்தாராக வருபவர் என்.எஸ். கிருஷ்ணன். அவர்தான் இந்தக் காட்சியைப் பார்க்கிறார்.

இந்தக் காட்சிக்கு ஒரு பின்னணி உண்டு.

காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத்தின் அனுபவம்தான் இந்தக் காட்சிக்கு அடிப்படை. 1937 தேர்தலில் அவர் பீகாரில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இந்தத் தாயையும், மகளையும் அவர் சந்தித்தார்.

காட்சியானவர்கள் ஏழைகள், அதற்கு சாட்சியானவர்கள் காங்கிரஸ் தலைவர். ஆனால் இதைத் திரைப்படத்தில் சேர்த்து கல்லாவாக்கித் கொண்டவர்கள் பகுத்தறிவுக்காரர்கள்.

மோனையையும் எதுகையையும் மட்டும் முதலீடாக வைத்து தொழில் நடத்தியவர்கள் அவர்கள். தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியது; இறந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடையவர்கள். அப்போது நடந்த தேர்தலில்

கூலி உயர்வு கேட்டான் அத்தான்;
குண்டடிபட்டு செத்தான்

என்று போஸ்டர் ஒட்டி வாக்குகளைக் குவித்தது தி.மு.க வினர்.

அடுத்தவர் துன்பத்திலும் அவர்களுக்கு வசூல் உண்டு.

நாம் சுயமரியாதைத் திருமணங்களைப் பார்ப்போமா?

ஐயருக்கு செலவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட திருமணங்களில் இப்பொது அதைப்போல ஆயிரம் மடங்கு செலவு செய்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்ற தலைவருக்கு நிச்சயமாக வருமானம் உண்டு.

தவிர கட்சிக்காக சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அதற்கு முன்பே வைதீகத் திருமணம் செய்து கொள்கிற வழக்கமும் இப்போது நடைமுறையில் இருக்கிறது. ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்திலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தார் ஈ.வெ.ரா-வின் வாரிசு மணியம்மையார். அவரிடம் ஏற்கெனவே வைதிக முறைப்படி திருமணம் நடந்துவிட்டது என்றும், ஊருக்காகவும் உலகத்திற்காகவும் சுயமரியாதைத் திருமணம் அதே மேடையில் நடக்கப்போகிறது என்றும் சொல்லப்பட்டது. மணியம்மையார் கோபப்பட்டார் என்ற செய்தி அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சுயமரியாதை திருமணத்தின் இன்னொரு விளைவைப் பார்ப்போமா?

‘ஜூனியர் விகடன்’ இதழில் 04. 04. 1990 இல் வெளிவந்த செய்தி இது:

மார்ச் இருபத்தேழாம் தேதி, மாலை நான்கு மணி, கடலூர் டவுன்ஹால்…

நிசப்தமான சூழ்நிலை, சோகமான எதிர்பார்ப்பு கலந்த முகங்களுடன் ஹாலுக்குள் நுழைபவர்கள் யாவரும் எதிர்ப்பட்டவரை ‘அந்த’ விழா உண்டா? எனக்கேட்டு உறுதி செய்துகொண்டபின் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

அப்படி என்ன விழா?

திருமணங்கள் நிறைவும் – முறிவும் – இதற்காக ஒரு ஸ்பெஷல் அழைப்பிதழ்.

விழா ஆரம்பமாவதற்கு முன்பு ஒரு ஃபிளாஷ்பேக். 1989 ஆம் ஆண்டின் இதே தேதியில் கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்த க. பொ. இளம்வழுதி என்ற பகுத்தறிவுவாதி தனது மகளான இளமதிக்குத் திருமணம் செய்து வைத்தார். பி. காம் பயின்ற இளமதிக்கு சென்னையைச் சேர்ந்த பி. எஸ். சி பட்டதாரியான பாரதி என்ற இளைஞர் மாலையிட்டார். சுயமரியாதைப் பாணி திருமணம்! இந்தத் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர் இலக்கியப் புரவலர் பலராமன் என்பவர்.

திருமணமாகி ஓரிரு மாதங்களே ஆன நிலையில் பாரதி ஏற்கனவே ஒரு ஆசிரியையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர் என்பதும் அவருக்குப் பத்து வயதில் ஒரு ஆண்மகனும் இரு பெண் குழந்தைகளும் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில்……

பகுத்தறிவுவாதியான பெண்ணின் தந்தை இளம்வழுதி தன் மகளுக்கு விவாகரத்து பெற்றுவிட முடிவு செய்தார். அதுவும் பகுத்தறிவுப் பாணியிலேயே…..

அதற்காகத்தான் இந்த திருமண முறிவு விழா.

விழா ஆரம்பமானது.

மேடையில் இளமதி, பாரதி இருவரும் இரண்டு நாற்காலிகள் இடைவெளிவிட்டு அமர்ந்த நிலையில் இளமதி மிகவும் சோகமாக நிலத்தை நோக்கியபடியும், பாரதி கூரையை வெறித்தபடியும் அமர்ந்திருந்தனர்.

முன்பு இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பலராமன் இளமதிக்கு வலப்புறம் ஒரு நாற்காலியில் அமர்ந்து தலையைக் குணிந்தபடி இருந்தார். பாரதியின் முதல் மணைவி மட்டும் வரவில்லை. அறுவைசிகிச்சை என ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது.

பெண்ணின் தந்தையான இளம்வழுதி..

’சரியாக ஓராண்டுக்கு முன்பு இதே தினத்தில் காலையில் மிகுந்த மகிழ்வுடன் கூடியிருந்தோம். ஆனால் இன்று மாலையில். இறுக்கமான சூழ்நிலையில் இருக்கிறோம்’ என தொடக்கவுரையிலேயே சூழ்நிலையை மேலும் சோகமாக்கிவிட்டு மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவரான க. அறிவுக்கரசைத் தலைமையுரையாற்ற அழைத்தார்.

அறிவுக்கரசு பேசும்போது ‘ஒரு கணவனுக்கு இரு மனைவிகள் என்பது சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கத்தக்கதாய் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் உள்ள மனித வாழ்வியலுக்கு இது ஒப்பாத செயலே! இங்கே ஆண் ஆதிக்க அடிப்படை வேர்விட்டுவிட்டது. அது முறிக்கப்பட வேண்டிய ஒன்று’ என ஆவேசப்பட்டார்.

மீடியேட்டர் பலராமனைப் பேச அழைத்தபோது கரகரத்த குரலில் என்னதான் பேசினார் என எவருக்கும் எட்டா வண்ணம் ‘மைக்’ அருகிலேயே அழ ஆரம்பித்துவிட்டார். மேடைக்கு வலப்புறம் உள்ள மறைவுக்குச் சென்று பெரிதாக விசும்பி வெடித்து கர்சீப்பால் வாய் பொத்திக் கொண்டார்.

பார்வையாளர்கள் பலருக்கும் இந்நிகழ்ச்சியைப் பார்க்க தைரியம் இல்லை. தேவைதானா இந்நிகழ்ச்சி என ஆத்திரப்படும் அளவுக்கு விழா நடந்துகொண்டிருந்தது.

திடீரென இளமதியின் தாயார் மேடையேறினார். அடுத்து அரங்கமே மௌனப் போர்வை போர்த்திக்கொள்ள, அது நடந்தது. பெற்ற தாயே தனது மகளில் கழுத்திலிருந்து புனித சின்னமான தாலியைக் கழற்றி இளமதியின் தந்தையார் கையில் வைத்திருந்த தட்டில்போட இளமதியின் கண்கள் கலங்கி நீர்த்துளிகள் உதிர்ந்தன.

தட்டில் போடப்பட்ட தாலியை நேராக பாரதியிடம் நீட்டினார் பெண்ணைப்பெற்றவர். நடுங்கும் கரத்துடனும் நிற்கவே திராணியற்ற கால்களுடனும் தள்ளாடியபடி தாலியைத் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டார் பாரதி. அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றுவிட்டு நோக்கமின்றி கையை ஆட்டி ஏதோ சைகை செய்தவர் உடனே மேடையிலிருந்து இறங்கி வெளியில் நடந்து சென்றுவிட்டார்.

பார்வையாளர்களாக வந்திருந்த சில கறுப்பாடை நண்பர்களின் கண்களில் நீர்! பெண்களைப் பொறுத்தமட்டில் அழாதவர்களே அநேகமாக அங்கு இல்லை.

ஹாலில் சம்பந்தப்பட்ட யாரையுமே தனிப்பட்ட முறையில் கருத்துக்கேட்க முடியவில்லை. கருத்து சொல்கிற நிலையிலும் அவர்கள் இல்லை.

ஜூனியர் விகடனின் அடுத்த இதழில் ‘பாரதியை அவமானப்படுத்தியது பகுத்தறிவுச் செயலா’ என்று கடிதம் எழுதினார் ஒரு வழக்கறிஞர்.

ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்வதும், ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்துகொள்வதும் ஹிந்துக்களைப் பொறுத்தவரை குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி மைக்கைக் கொடுப்பதுதான் பகுத்தறிவா என்று நாம் அறிய விரும்புகிறோம்.

‘ஈ.வெ.ரா – மணியம்மை’ திருமணம் பற்றிப் பலர் பேசுவதைப் பார்க்கிறேன். அதைப் பற்றி அந்தப் பகுதி வரும்போது விரிவாகப் பேசுவேன். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

‘சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் இந்தத் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.’

மேற்கோள் மேடை :

வைதீகம் வளர்ச்சி பெற்று வருகிறது. வருணாசிரம தர்மக் கோட்பாட்டாளர்கள் ராஜ நடைபோடுகிறார்கள். பார்ப்பனியத்தின் வெற்றிப் பவனியாகவே விநாயகர் சதுர்த்திகள் கொண்டாடப்படுகின்றன. சுயமரியாதைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து புரோகிதத் திருமணங்களின் எண்ணிக்கை விகிதம் வீங்கிக் கொண்டே போகிறது. எண் சோதிடம் என்ற ஒன்று பரப்பப்பட்டு சமஸ்கிருதப் பெயர்களே வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் சோதிடப் புத்தகங்களே.

– தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் / புதிய பார்வை / செப். 15-30. 2004 இதழ்.

(தொடரும்…)

4 Replies to “போகப் போகத் தெரியும் 29”

  1. This article implies that the Dravidian culture makes everything a show business, a publicized affair, rather than an inter-personnel experience of the family and human beings.

    Everything starts and ends on a stage with the purpose of appealing to the emotions of the audience than understanding and respecting emotions of the actually affected.

    If everything is done for the sake of others than what kind of “self” is there in that “self-respect”?

    No productive or development oriented life is possible with this kind of evangelical life style that lives and dies for convincing others than living out a life of actualization for realization.

    Gruesome culture it is. But, we cannot expect more from a culture created by evangelical christianity.

  2. showman balachander, who showed one percent irregularity as cent percent to make it cent percent will never forget this ignominy even after he breathes his last.

  3. கீழ்க்காணும் கேள்வியை “பெரியாரின் மறுபக்கம் – 13 இல், கேட்டிருக்கிறேன். அதையே மீண்டும் இங்கே தருவதன் நோக்கம், விடை காண விருப்பத்தில் தான். இரண்டு இடங்களிலும், ஒரே கேள்வி கேட்பது, தவறானால், மன்னிக்கவும்.

    “”””திராவிடக் கட்சியின் பெயரில் ”திராவிடம்” என்னும் சொல் பண்டைக்காலத் தமிழிலக்கியங்களில் உள்ளதா? இல்லையா? எனக்குத் தெரிந்தவரை (அவர்கள் பரிபாஷையில்), “இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என அபிப்பிராயம். ஆரியர்கள் இலக்கியங்களில் தென் தேசங்களைக்குறிக்கும் சொல், ’திராவிடம்’ என்னும் சொல் இருக்கிறது. அது, தெற்கிலுள்ள நாடுகளான, தமிழ் நாடு, கேரளம், கர்னாடகம், ஆந்திரா என்பவைகளைக் குறிக்கிறது. இருப்பினும், ”திராவிடம்” என்னும் சொல் “வடமொழி”ச் சொல்லை தங்களுக்குச் சூட்டிக்கொள்ளவும் அதைப்பற்றி பீற்றிக்கொள்ளும், திராவிடக் கட்சித் தொண்டர் யாராவதோ அல்லது அவர்களின் தற்போதய தலைவர் எனது கேள்விக்கு விளக்கம் தருவார்களா? இப்படி வடமொழிச்சொல்லை தனக்கு இட்டுக்கொண்டு வடமொழியை எதிர்த்தால் என்ன சொல்வது? ”உரே சொல்லட்டும் போ” “””””

  4. //காட்சியானவர்கள் ஏழைகள், அதற்கு சாட்சியானவர்கள் காங்கிரஸ் தலைவர். ஆனால் இதைத் திரைப்படத்தில் சேர்த்து கல்லாவாக்கித் கொண்டவர்கள் பகுத்தறிவுக்காரர்கள். //

    சபாஷ்!

    //தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியது; இறந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடையவர்கள். அப்போது நடந்த தேர்தலில்

    கூலி உயர்வு கேட்டான் அத்தான்;
    குண்டடிபட்டு செத்தான்

    என்று போஸ்டர் ஒட்டி வாக்குகளைக் குவித்தது தி.மு.க வினர்.

    அடுத்தவர் துன்பத்திலும் அவர்களுக்கு வசூல் உண்டு. //

    பலே!

    //ஐயருக்கு செலவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட திருமணங்களில் இப்பொது அதைப்போல ஆயிரம் மடங்கு செலவு செய்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்ற தலைவருக்கு நிச்சயமாக வருமானம் உண்டு. //

    அப்படி போடு!

    //கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி மைக்கைக் கொடுப்பதுதான் பகுத்தறிவா என்று நாம் அறிய விரும்புகிறோம்.//

    அட்டகாசம்!

    //‘சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் இந்தத் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.’//

    அல்லேக்!……சூப்பர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *