வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
ஜடாயு
12 Aug 2009 |
அச்சிட
பெங்களூர் அல்சூர் ஏரி ஒரு ரம்மியமான இடம். மரங்கள் செறிந்த அழகான சாலைகள் சூழ்ந்த அந்த ஏரிக் கரையின் ஒருமூலையில் பாரம்பரியமிக்க Madras Engineering Group என்ற ராணுவ மையம் உள்ளது. இன்னொரு மூலையில் Lakeview Mahaganapathi என்று மாடர்னாக அழைக்கப் படும் பழைய குளக்கரை விநாயகர் இருக்கிறார்.. இன்னொரு மூலையில் ஒடுக்கத்தூர் மடமும் (இது ராமலிங்க வள்ளலாரின் சீடர் ஒடுக்கத்தூர் சுவாமிகள் நிறுவியது) அதற்குள்ளேயே அமைந்துள்ள அழகிய தண்டாயுதபாணி சுவாமி கோயிலும் உள்ளது..
அந்தக் கோயிலுக்கு முன்பு உள்ள ஒரு சிறு பூங்கா போன்ற இடத்தில் பழைய, துருப்பிடித்த கார்களுக்கு மத்தியில் ஒரு பீடத்தில் மொத்தையாக ஒரு உருவம் கோணியால் மூடப் பட்டுக் கிடந்ததைப் பார்த்திருக்கலாம், கடந்த 2-3 வாரங்கள் முன்பு வரை.
”உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று உரைத்த உலக குருவான மகரிஷி ஒருவரின் திருவுருவம் தான் அது. ராமன் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் போனது போல, பதினொன்று ஆண்டுகள் யாருக்கும் தன்னைக் காட்டாமல் கோணிக்குள் அமர்ந்து செய்த அக்ஞாதவாசத்திலிருந்து வெளிவந்திருக்கிறார் தெய்வப் புலவர்.
இந்த தேசம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் போற்றி வணங்கதற்கு உரிய தெய்வீக, கலாசார அடையாளங்கள் திருவள்ளுவரும், திருக்குறளும் . அதனை உணராது குறுகிய மொழிவெறியால் உந்தப் பட்ட சில மூடர்களின் செயல்பாடுகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் திருவள்ளுவரின் சிலை கர்நாடகத் தலைநகரில் இப்படிக் கண்காணாது மூடப் பட்டிருந்தது வெட்கத்திற்குரிய விஷயம்.
பா.ஜ.க தலைமையில் சென்ற வருடம் மாநில அரசு அமைந்த சில மாதங்களிலேயே, இந்தப் பிரசினையை சுமுகமாகத் தீர்த்து, கன்னடர் - தமிழர் நல்லுறவுக்கு உரம் சேர்க்கும் வகையில், இந்தச் சிலை திறந்து வைக்கப் படவேண்டும் என்று தேசிய உணர்வுள்ள பெருமக்கள் பலரிடமிருந்தும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது. அது பலித்திருப்பது சந்தோஷமான விஷயம். திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு வழிவகுத்து, ஒரு விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்து, அதோடு சென்னையில் கன்னடக் கவிஞரும், மகானுமான சர்வக்ஞரின் சிலைத் திறப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கும் கர்நாடக, தமிழக அரசுகளும் முதல்வர்களும் பாராட்டுக்குரியவர்கள். பெங்களூரில் சிலை திறப்பை எதிர்த்து பந்த் அறிவித்து, கலவரம் செய்ய முயன்று காவல்துறையால் கட்டுப் படுத்தப் பட்ட கருங்காலிகள் கண்டனத்திற்குரியவர்கள்; கன்னடத்துக் கரும்பில் முளைத்த கணுக்கள் அவர்கள்.
குடகு மலையில் தோன்றும் காவிரி என்கிற கன்னடத்தி, மலைமுகடுகளில் இளநடை பயின்று தன் யௌவனத்தின் முழுப் பொலிவுடன் தமி்ழச்சியாகித் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனை ஆதுரத்துடன் சென்று தரங்கம்பாடியில் தழுவிக் கொள்கிறாள், பின்னர் கடலோடு கலந்து உலகப் பிரஜையாக உருமாறி விடுகிறாள். இயற்கையே செய்திருக்கும் ஏற்றமிகு ஏற்பாடு!
சங்க இலக்கியங்களில் “கருநாடு” என்று குறிக்கப் படுவது கர்நாடகமே என்று ஒரு சாரார் கருதுகின்றனர். அறுபத்து மூன்று நாயன்மார்களும் கன்னட வீரசைவ மரபில் பூர்வாசாரியார்கள் என்று போற்றப் படுகிறார்கள். அதே ரீதியில், தமிழின் தலைசிறந்த புலவர்களில் ஒருவரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் பசவண்ணரின் சீடரான அல்லம பிரபுவைக் குறித்து ‘பிரபுலிங்க லீலை’ என்ற அழகிய பிரபந்தத்தை அருளியுள்ளார். ஸ்ரீராமானுஜர் மைசூர் மேல்கோட்டை பகுதியில் வாழ்ந்து ஹொய்சள ராஜ வம்சத்திற்கே குருவாக விளங்கி, அந்த வம்சத்தின் மன்னனை ”விஷ்ணுவர்த்தனன்” ஆக்கினார். தமிழகத்தின் புவனகிரியில் பிறந்து, கும்பகோணத்தில் வாழ்ந்த ஸ்ரீராகவேந்திர சுவாமி கர்நாடகம் எங்கிலும் கல்பதருவாக வணங்கப் படுகிறார்.
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் தோன்றிய சாளுக்கிய, பல்லவ மோதல் தவிர்த்து கன்னடர் தமிழர் நல்லிணக்கத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. பிற்கால சோழ அரசுகள், சாளுக்கியருடன் திருமண உறவு பூண்டு, தங்கள் வம்சங்கள் தழைக்க வகை செய்தன. மாலிக்காபூரின் ஆக்கிரமிப்பால் சிதைந்த மதுரை மாநகரை விஜயநகர மன்னர் கம்பண உடையார் படைகொண்டு சென்று மீட்டு, அன்னை மீனாட்சியின் ஆலயத்தை மீண்டும் நிர்மாணித்தார். பின்னர் தமிழகத்தை நெடுங்காலம் ஆண்டவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக இருந்த நாயக்க மன்னர்கள். தமிழகத்தின் ஏராளமான பழங்கோயில்கள் விஜயநகர அரசுளின் திருப்பணிகளை இன்று வரை பறைசாற்றி நிற்கின்றன.
அதோடு, கலை, இலக்கியம் என்று பல துறைகளிலும் இரு சாராருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருநெல்வேலிச் சீமையில் பிறந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் மைசூர் மன்னரின் அரசவையில் கர்நாடக சங்கீத பூஷணமாக ஜொலித்தார். மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், டி.பி.கைலாசம் ஆகிய புகழ்பெற்ற கன்னட இலக்கியவாதிகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்பாளிகளில் விட்டல் ராவ், எம்.கோபாலகிருஷ்ணன் என்று கன்னடத்தைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் உடன் நினைவுக்கு வருகிறார்கள்!
திருவள்ளுவரை நமக்கெல்லாம் தெரியும். யார் இந்த சர்வக்ஞர்?
”வள்ளுவ தேவன் வசனத்தை மெய்யாக
உள்ளுவ தேவன் உளன் ” (பெருங்கதை, 2001)
என்ற பாடலின் படி “வள்ளுவ தேவன் வசனம்” என்பது திருக்குறளுக்கு அமைந்த பல பெயர்களில் ஒன்றாகிறது.
இதே ரீதியில், கன்னட மொழியில் அறநெறிகளைக் கூறும் “வசனங்களை” இயற்றியவர் சர்வக்ஞர் என்ற 16ஆம் நூற்றாண்டுப் புலவர். குறள் இரண்டடிப் பாடல்களைக் கொண்டிருப்பது போன்று இவரது பாடல்கள் த்ரிபதி என்று மூன்றடிகளைக் கொண்டிருக்கும். இப்படி 2000 வசனங்களை இவர் இயற்றியுள்ளார்.
சர்வக்ஞர் என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். ஒருவன் எப்படி அனைத்தும் அறிந்தவனாக முடியும்?
ஸ்ர்வக்ஞனெம்பவனு கர்வதிந்தாதவனே?
ஸர்வரொளு ஒந்தொந்து நுடி கலிது வித்யெயெ
பர்வதவே ஆத ஸ்ர்வக்ஞ.
(க = ka, க = ga; ட = ta. ட = da; த = tha, த = dha; ப = pa, ப = ba; ……)
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்?
எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்!
கெலவம் பல்லவரிந்த கலிது
கெலவம் மாள்பவரிந்த கண்டு - மத்தே
ஹலவம் தானே ஸ்வத: மாடி திளியெந்த ஸர்வக்ஞ.
சிலவற்றை அறிந்தவரிடமிருந்து கற்க.
சிலவற்றை செய்பவர்களைக் கண்டு கற்க.
மற்ற பலவற்றையும் தானே சுயமாக எண்ணித் தெளிந்திடு சர்வக்ஞா.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவர் வாய்மொழியைத் தன் வாழ்வில் ஒழுகி, அதனைத் தன் தாய்மொழியில் தந்திருக்கிறார் இந்தக் கவிஞர் !
அன்னவனு இக்குவது நன்னியனே நுடிவுது
தன்னந்தே பரர பகெதொடே கைலாஸ
பின்னானவக்கு ஸ்ர்வக்ஞ.
அன்னம் இடுவது உண்மை மொழிவது
தன்னிலும் பிறரை மதிப்பது
இதுவே கைலாசத்திற்கு
இனிய வழியாகும் சர்வக்ஞா.
”ஈதல் இசைபடவாழ்தல்” என்ற பொய்யாமொழியுடன் இயைகின்றன இந்த வரிகள்.
வள்ளுவரைப் போன்றே சர்வக்ஞரின் வாழ்க்கை பற்றியும் விவரங்கள் தெளிவாகத் தெரிய வரவில்லை. வள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும், பகவன் என்ற அந்தணர்க்கும் மகனாகப் பிறந்தவர் என்ற தமிழ்நாட்டுக் கர்ண பரம்பரைக் கதை போன்றே ஒரு சைவ அந்தணருக்கும், மாலி என்ற சூத்திரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் சர்வக்ஞர் என்ற கதை உள்ளது! கர்நாடக மாநிலத்தின் தார்வாட் என்ற ஊரில் பிறந்து ஊரூராகத் திரியும் துறவியாகவே தன் இறுதி நாள் வரை சர்வக்ஞர் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.
”ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”
என்று வள்ளுவர் நொந்து கொள்வதைப் போலவே இவரும் பாடுகிறார் -
மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிதரு
கோர்க்கல்ல மேலே மளே ஹுயிதரே
நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.
மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது
பெருங்கல் மேலே மழை விழுவது போல.
நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற முதுமொழியின் எதிரொலியாக உள்ளது அவரது இந்த வசனம் -
எல்ல பல்லவரில்ல பல்லவரு பஹளில்ல
பலவில்ல பல்லவரித்து ஸாஹித்ய
எல்லரிகில்ல ஸர்வக்ஞ.
எல்லாம் அறிந்தவர் இல்லை. அறிந்தவரும் வெகுவாக இல்லை.
அறிவு இல்லாமலிருக்கலாம் அறிந்தவரிடத்தும். (எனவே) இலக்கியம்
எல்லாருக்குமானது அல்ல சர்வக்ஞா.
1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள்.
தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
12 August 2009 at 7:46 am
Thanks for this article Jataayu. I dont know anything about Sarvangnar and I know something about him thru this post. Good job.