நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை

இந்தின் இளம்பிறை தூங்க – அருள்
தந்தே மகிழ்விநா யகன்தாளைத் தாங்க;
முந்துமென் மனமென்னும் வீடு – அதில்
வந்தே வருள்செய அவனைநீ பாடு.

hindu-goddess

1.

கந்தங் கமழ்கூந்தல் வல்லி – அவள்
முந்தும் விழிக்கருணை பொழிகாம வல்லி.
சந்தத் திலேயவளைப் பாடி – அன்பு
சிந்தும் கவிஞர்கள் அநேக கோடி.

2.

கொன்றைச் சடைமுடி மீது – மதி
மின்னல் நதியோடு ஒளிவிடும் போது;
அன்னை நகைப்பிலே ஊடி; – மதி
தன்னுளம் வாடுமே தோல்விக்கு நாணி!

3.

தித்திமித் தீயென்றே யாடும் – சிவன்
தத்தை பதம்பற்றிக் கெஞ்சியும் நாடும்
உத்தமி பாதத்தைத் தேடும் – எந்தன்
சித்தத் திலேயருள் சிலிர்ப்புடன் கூடும்.

4.

இருவினை யாகின்ற விருட்டு – அவள்
திருமுகச் சோதியில் திகைத்தோடிப் போச்சு
மருவிலா முகச்செவ்வி நோக்கி – அந்தத்
திருமலர் தினங்காலை மலர்ந்தேபின் கவிழும்

5.

சம்சார மென்கின்ற கடலில் – அவள்
செம்பூம் பதங்களே புனையாக மாறும்
நம்புமுத் தமர்கள்தம் உள்ளம் – அவள்
சிந்தித் தருள்பொழிய விரைகின்ற பள்ளம்.

6.

எண்ணில் வரந்தரு மன்னை – அவள்
கண்ணசைய மூவரின் கரமசையு முண்மை
பண்ணில் கவித்தேனைக் குழைத்து – நாம்
கண்ணான தாயையே புகழ்வோம் பிழைத்து

7.

கொடுமைகள் தூர்ந்திடச் செய்வாள் – எங்கும்
தடையின்றி அறமெலாம் வளர்ந்தோங்கச் செய்வாள்
படுபாத கத்திலும் கனிந்து – நமை
விடுவிக்க விரைந்தோடி வருவாள் பரிந்து.

2 Comments

  1. அருமையான பதிப்பு! நவராத்ரி கொண்டாடும்போது படித்து சொல்லி வணங்க நல்ல தமிழ்ப்பாட்டு.

  2. கவிதை அருமையாக இருக்கிறது. முதலில் வேறு யாரோ பெரியவர் இயற்றியது எடுத்து போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டேன். இயற்றியது தாங்களா? அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *