டைம் (கொரிய திரைப்படம் 2006)
கிருஷ்ணன் சந்திரசேகரன்
8 Sep 2009 |
அச்சிட
ஒரு கதையாகச் சொல்வதற்கு டைம் அவ்வளவு எளிதான படமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் திரைப்படமாகப் பார்க்கும்போது இந்தத் திரைப்படத்தை இதை விட எளிமையாகச் சொல்லியிருக்க முடியாதோ என்று தோன்றுகிறது.
ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவமனையிலிருந்து முகமுடி அணிந்த ஒரு பெண் வெளிவருகிறாள். வழியில் அவசரமாக ஓடும் ஓர் இளம் பெண் அவளுடன் மோதுவதால் முகமுடி அணிந்த பெண்ணின் கையிலிருக்கும் புகைப்படம் கீழே விழுந்து சிதறுகிறது. இளம் பெண் அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சரிசெய்யப் புறப்படுகிறாள். அந்த இளம்பெண் ஷெ ஹீ.
இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத்தக்கது காலம்தான். இதை ஷெ ஹீ முற்றிலும் அறிந்தவளாகவே இருக்கிறாள். ஜீ வூ-உடனான தன்னுடைய இரண்டு வருடத்துக் காதல் இந்தக் காலத்தால் மாற்றமடைந்து வருவதாக அவள் உணர்கிறாள். சந்தேகம் பிறக்கிறது. சண்டைகள் எழுகின்றன. ஏறக்குறைய பிரிவை நோக்கித் தள்ளப்படுகிறது உறவு.
தன்னுடைய காதலைக் காப்பாற்ற தானே வேறு ஒரு மனுஷியாக அவதாரம் எடுக்கத் தீர்மானிக்கிறாள் ஷெ ஹீ. ஆறு மாதம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகிறாள். தனிமையில் தவிக்கிறான் ஜீ வூ. பல பெண்களையும் சந்திக்கும் அவனால் ஷெ ஹீயை மறக்க முடியவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் முற்றிலுமாக வேறு ஒரு மனுஷியாக தோற்றத்தில் மாறி ஜீ வூ-வை மீண்டும் காதலிக்கிறாள். அந்தக் காதலில் அவள் மகிழ்ச்சியுடனிருந்தால் குழப்பமில்லாமல் ஒரு வண்ணத்தை நாம் ஷெ ஹீ மீது பூசிவிடலாம். ஆனால் அவளின் அடையாளச் சிதைவினால், தானும் அமைதி இழந்து தன்னுடைய காதலையும் சிதைக்கிறாள். கடைசிவரை இந்தக் கதாபாத்திரத்தின் தன்மை நமக்கு விளங்கவேயில்லை.
புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய
மனுஷியாக நம்பி, காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் - தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடிப் போகப்போவதாக முகம்மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான்.
அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ, ஷெ ஹீ எடுத்த அதே முடிவையே தானும் எடுக்கிறான். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் தானும் புதிய மனிதனாக அவதாரம் எடுக்க முடிவு செய்கிறான். புதிய முகம் கொண்ட ஜீ வூ யாராக இருக்க முடியும் என்று தெரியாமல் தவிக்கிறாள் ஷெ ஹீ. தனியாக இருக்கும் எந்த ஆணும் ஜீ வூவாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறாள். இந்தச் சமயத்தில் ஷெ ஹீக்கு ஜீ வூ தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் - ஆனால் முற்றிலுமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடுகிறான் (தான் பட்ட தவிப்பு அவளும் படட்டுமே என்று இருக்கலாம்). அவனைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் போது ஜீ வூ ஒரு டிரக்கில் அடிபட்டு இறக்கிறான்.
மனப் பிழற்சி ஏற்பட்ட நிலையில் தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டரிடம் ஜீ ஹீயின் ரத்தத்தின் கறை படிந்த கைகளோடு சென்று மன்றாடுகிறாள் ஷெ ஹீ. அந்த டாக்டரின் அறிவுரையின் பேரில் மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மீண்டும் இந்த உலகத்தைப் புதிதாகச் சந்திக்க முடிவு செய்கிறாள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெளியே வரும் அவள் மீது வேகமாக ஓடி வரும் இளம் பெண் மோதுகிறாள். இரண்டாம் முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவள் கையிலிருந்து விழுந்து சிதறுகிறது. மோதிய இளம் பெண் அந்தப் புகைப்படத்தை சரிசெய்து கொடுப்பதாகக் கூறி எடுத்துச் செல்கிறாள். எடுத்துச் செல்லும் இளம் பெண் வேறு யாருமல்ல - எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்வதற்கு முன் இருந்த ஷெ ஹீ. திரைப்படம் முடிகிறது.
இந்தக் கடைசிக் காட்சியையும் முதல் காட்சியையும் இணைத்த சாமர்த்தியம் சற்றும் எதிர்பாராதது. கவித்துவமோ அலங்காரங்களோ இல்லாமல் சென்ற இந்தத் திரைப்படம் ஏன் இப்படி முடியவேண்டும்? ஒரு விதத்தில் பார்த்தால் கடைசி காட்சியும் முதல் காட்சியும் (உண்மையில் இவை இரண்டுமே ஒரே காட்சிதான்) திரைப்படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எந்த மாற்றமும் வந்திருக்காது. அப்படி இருக்க இந்தக் காட்சியமைப்பு எதற்காக? ஷெ ஹீ-இன் சிதைவிற்கு அவளே காரணம் என்ற இயக்குநரின் கருத்தை அந்தக் குறியீடின் வாயிலாக அவர் அங்கே பதிவு செய்திருப்பதாகத்தான் நாம் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் மட்டுமே கிம் கி டுக் நம்முடன் நேரிடையாகப் பேசுகிறார்.ஒரு திறமையான இயக்குநரால் எப்படி ஒரு திரைப்படத்திற்கு கவித்தன்மையைப் புகுத்த முடியும் என்பதற்கு இது உதாரணம்.
முதல் பாதியில் சந்தேகிக்கும் ஒரு காதலியிடம் பிரிந்த காதலன் அப்பிரிவில் ஒரு ஆணுக்குரிய சபலங்களாலும் காதலியின் மேல் கொண்ட பிரேமையினாலும் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறான். அவள்மேல் கொண்ட காதலினால் பிற பெண்களைச் சந்திக்கும்போது குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அவளது பிரிவின் வலியில் துடிக்கிறான். பிற பெண்களை அணுகாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் காதலியையும் மறக்க முடியவில்லை. அவள் இருக்கிறாளா இல்லையா என்ற நிலையும் தெரியாமல் தவிக்கிறான்.
பிற்பகுதியில் காதலி தன் காதலின் மேல் கொண்ட அபாரமான பிரேமையினால் அவள் தன்னைத் தானே வருத்திக் கொள்கிறாள். ஏறக்குறைய இரண்டு விதமான ஆளுமைகளில் சிக்கித் தவிக்கிறாள். அவளின் இந்தக் குழப்பமான ஆளுமையால் காதலனை அவள் சோதனைகளுக்குட்படுத்தும் போது நமக்கு காதலன் மீது பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பகுதியில் ஜீ வூ பட்ட எல்லாத் தவிப்பையும் ஷெ ஹீ இரண்டாம் பகுதியில் அனுபவிக்கிறாள். இந்த இரண்டாம் பகுதியில் ஷெ ஹீயின் தவிப்பும் பார்ப்பவர் எல்லாம் ஜீ வூவாக இருப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் தன்னுடைய காதலைக் காக்க அவளின் போராட்டமும் அவளின் நிலையில்லா மனதின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகின்றன.
இந்தக் கதாபாத்திரங்கள் அனைவரும் சராசரியான மனிதர்களாகவும், சிதையும் மன நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட சமுகத்தின் பிரதிநிதிகளாகவும்தான் இருக்கின்றனர். மனதிற்கு பதில் முகமும் உடலுமே தனது அடையாளங்கள் என்று ஏற்றுக் கொண்ட ஒரு சமூகத்தின் பின்னடைவையும் இப்படிப்பட்ட சமூகத்தின் அவலத்தையும் கிம் கி டுக் அம்பலப்படுத்துகிறார்.
பொதுவாகவே கிம் கி டுக்-இன் திரைப்படங்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பதில்லை. அதனால் கிம் கி டுக்-இன் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு டைம்-இல் இருந்து தொடங்குங்கள் என்று ஆலோசனை கூறுவேன். பூடகத்தன்மையும், முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் தன்மையும் கொண்ட அவரின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் டைம் சற்றே எளிமையானது என்பது என் கருத்து. சில சமயம் திரைப்படங்களை அணுகும்முன் அதன் இயக்குநர்கள் பற்றிய ஒரு கருத்தைத் தேற்றிக் கொள்வது திரைப்படத்தை அணுக எளிதாக இருக்கும்.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
8 September 2009 at 10:31 pm
நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று தான் தோன்றுகிறது. நன்றி கிருஷ்ணன்