ஓங்காரத்து உட்பொருள்

சுவாமிநாதன்

swaminathaகும்பகோணத்துக்கு அருகில் சுவாமிமலை என ஒரு தலம் இருப்பதை அனைவரும் அறிவர். இந்தத் தலத்து இறைவன் சுவாமிநாதன் சில குடும்பத்தினருக்குக் குலதெய்வமும் ஆவன். முருகன் சுவாமிநாதனான புராணக்கதையைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவர். இந்தக் கதையைச் சில வேறுபாடுகளுடன் கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப் புராணம், முதலிய தலபுராணங்களும், பாம்பன் சுவாமிகளின் குமாரசுவாமியம், குமரகுருபரரின் திருச்செந்தூர் கலிவெண்பா முதலிய தோத்திர நூல்களும் கூறுகின்றன.

தந்தையாகிய சிவனின் சிஷ்யபாவத்தையும் தனயனான முருகனின் குருபாவத்தையும் உள் அடக்கி, அருணகிரிநாதர், கந்தரநுபூதியில்,

“நாதா குமர நமஎன்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள்தான்”

என வினவி, முருகன் ஓதிய அந்தப்பொருள் இன்னதென நம்மை உய்த்து உணர விட்டுவிட்டார்.

இந்த நிகழ்ச்சியினால் முருகனுக்கு உபதேசமூர்த்தி, சுவாமிநாதன், பரமகுரு, குமரகுரு, குருபரன் எனக் காரணப் பெயர்கள் எழுந்தன.

ஓம் – பொதுமந்திரம்

‘ஓம்’ எனப்படும் பிரணவ மந்திரத்தை இந்துக்களில் அனைத்துப்  பிரிவினரும் பயன்படுத்துகின்றனர். இறைவனின் பெயர்களாகிய மந்திரங்களுக்கு முன் ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து மந்திரத்தையும் இறுதியில் போற்றி எனப்பொருள்படும் நம: என்ற சொல்லையும் இணைத்து, மந்திரத்தை உச்சரிப்பர். ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் நாராயணாய நம: என்பன போல

சிவநெறியில் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் “ஓம்’ எனும் பிரணவம் ஆளப் பெற்றிருக்கும் முறைமையையும் அவற்றில் கூறப்படும் பொருளைச் சுட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

ஓங்காரத்தின் பலபெயர்கள்

பிரணவம், குடிலை, குண்டலி, பிரமம், பரம், சிவம், மாமாயை, சுத்தமாயை, நாதம், விந்து, வைந்தவம் எனப் பலபெயர்கள் ஓங்காரத்துக்கு உண்டு.

பிரணவத்திற்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தத்தால் அவ்விரண்டும் பிரணவமென்றோ சிவசத்தி என்றோ ஒருபெயரால் வழங்கப்படும். பிரணவம் சத்தியின் பெயராலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பெயர்களாவன: பரை(பரன்), வாகீசுவரி(வாகீசுவரன்), வித்தை, மாயை, பரவிந்து(பரநாதம்), பராசத்தி(பரசிவன்), மாமாயை, குண்டலி என்பன.

பிரணவம் – பிரபஞ்ச வித்து

ஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.
குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம்.

அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.

சிவம் முழுவதும் ஞானமே வடிவானது. சிவத்துடன் பிரிப்பின்றி இருப்பது சித்சத்தி. அது ஆற்றல் வடிவமானது. சிவத்துக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் சூரியனுக்கும் சூரிய ஒளிக்கதிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. உலகுக்குச் சூரியனால் பயன் சூரியக்கதிர்களால் வருவதுபோல, உயிர்களுக்குச் சிவத்தால் வரும் நன்மை சிவசத்தியால் கிடைக்கிறது. சூரியன் ஒளியால் அறியப்படுதல்போல் சிவத்தைச் சிவசத்தியால் அறியப்படும்.

சிவத்துக்குச் சிவசத்தி போல இன்னொரு சத்தியும் உண்டு. அதற்குப் பரிக்கிரக சத்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சக்தி என்று பெயர். இந்தப் பரிக்கிரகசத்தி ஜடசத்தி. ஜடம் என்றால் அறிவற்றது என்று பொருள். சித்சக்தி X ஜடசத்தி.

மாயை என்னும் பிரபஞ்ச முதற்காரணமாகிய ஜடசத்தி, சித்சத்தியைத் தாரகமாகக் கொண்டிருக்கும். சித்சத்தி சிவத்துடன், சூரியன் சூரியஒளி போலக் குணி குணசம்பந்தத்துடன் இருக்கும்.

இந்த மாயையே பிரணவம். இது சித்சத்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இப்பிரணவம் சித்சத்தியின் வடிவம் என்றும் கூறப்படும்.

மாயையும் சத்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதைக் காட்டும் ஒரு பெயர் மாயாசத்தி.

சித்சத்தியை குணமாகவும் சிவத்தைக் குணியாகவும் கொள்ளும் ஒருவடிவத்தில் சித்சத்தியாகிய பிரணவம் சிவவடிவம் என்றும் கொள்ளப்படும்.

சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன்  விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும்.

பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.
இதனைத் திருமந்திரம்,

“ஓங்காரத்தின் உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓங்காரம் அதீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ ரூபமே” (தந்திரம்9)
எனக் கூறியது.

மாயை சடப்பொருளாயினும் சிவசத்திசம்பந்தத்தால் அறிவுடைப்பொருள் (சேதனம்) ஆகவே கொள்ளப்படும்.

ஓங்காரம் சிவசொரூபம்

“கைலாஸ சிகராவாஸம் ஓங்கார ஸ்வரூபிணம்
மஹாதேவம் உமாஅர்த்த க்ருதசேகரம்”
என அதர்வண வேத மாண்டூக்யோபநிஷதமும்,

“துறந்தோர் குடிலை சிவனுருவம் என்றே உணர்ந்து சொல்லுவார்”
என வாயு சங்கிதையும் கூறுவதால்,
குணம் குறி கடந்த சிவபரம்பொருள், உயிர்களை உய்விக்க எடுத்துக் கொள்ளும் திருமேனிகளில் ஒன்று, ஓங்காரம் என்னும் பிரணவத் திருமேனி.

“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (திருவாசகம், சிவபுராணம்,33)
‘நான் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் பிரண வடிவமாக நிலைபெற்றுள்ள உண்மைப்பொருளே’ என்பது இதன் பொருள்.
ஓம் என்பதன் பொருள் சிவமே

உயிரில் சிவம் ஓங்காரமாய் நிற்கும் உபகாரம்

உயிர்கள் வினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகருதல் வேண்டும். அதனால் அனுபவம் ஏற்பட்டு ஆணவமலம் அல்லது அறியாமை என்னும் மறைப்பு சிறிது சிறிதாக நீங்கும்; அறிவு வளரும். வினைகள் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் செய்யப்படுவன. உடலாலும் வாக்காலும் வினைசெய்வதற்கு முன் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களில் செயல் பற்றிய சிந்தனை முகிழ்க்கின்றது.

om_namah_shiva_photoஅந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)

சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.

இது, சைவசித்தாந்தத்தில், சிவம் உயிருக்குள் உயிராக நின்று உயிரின் உணர்வினை நிகழச் செய்கின்ற முறையைக் கூறுவதாகும்.

ஓங்காரத்தின் வழி சிவம் ஆன்மாவின் இச்சை கிரியை ஞானங்களை எழுப்பிச் வினையை அனுபவிக்கச் செய்து மலபரிபாகம் வருவித்து முத்தியை அளிக்கும் நெறியைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.

சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற  சொற்றொடர்கள்  திருமுறைகளில் உள்ளன.

ஓங்காரம் –ஓரெழுத்து மந்திரம்

சிவம் கருணையால் கொள்ளுகின்ற வடிவங்களில் மந்திர வடிவமும் ஒன்று. சிவபரம்பொருளை வழிபடுபவர்கள் மந்திர எழுத்துக்களில் வைத்து வழிபடுவது வழக்கம். அம்முறையில் ஓங்காரம் சிவனது திருமேனி.

ஓங்காரம் சப்தவடிவினது. அது சுத்தமாயை என்னும் அறிவற்ற சடப்பொருளின் விருத்தி. சிவசத்தி சுத்தமாயையில் கலந்து இயக்கிக் கொண்டிருப்பதால்,அது சிவனின் திருமேனியாக உபசாரமாகச் சொல்லப்படும்.

முருகனே ஓங்கரத்துட்பொருள்:

“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு
தூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”
என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.

திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள், முருகன் ஓங்காரத்து உட்பொருளாக இருப்பதை,
” ஓதிய ஐந்து,
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே!”

என்று பாடினார்.

ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாகிய ஒரு பரம்பொருளே “குருசிஷ்ய பாவ”த்தின் மேன்மையை உலகு அறிந்து உய்யும் பொருட்டு , இரண்டு பொருளாகி, அரன் சீடனாகவும் குமரன் குருவாகவும் திருவிளையாடல் புரிந்தது என அறிதல் வேண்டும்.

விநாயகனே ஓங்காரத்துட் பொருள்

கச்சியப்ப முனிவர் தம்முடைய விநாயகபுராணத்தில் பிரணவம் என்பது ஏகாட்சரம் என்னும் பெயருடைய மந்திரம் என்றும் அது விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரம் என்றும் கூறியுள்ளார். யானைமுகப் பெருமானின் முகத் தோற்றமே ஓம் எனும் ஓரெழுத்துமந்திரம் போலக் காட்சி அளிக்கும்.

ஓங்காரத்துள் பிரபஞ்சம் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டவது விநாயகப் பெருமானின் பேழை வயிறு.

விநாயகன், கணபதி எனும் பெயர்கள் சிவனுக்கும் உண்டு. விநாயகனே சிவன். சிவனே விநாயகன்

விநாயகனும் முருகனும் சிவனின் தடத்த வடிவங்களே. எனவே, இவ்விருவரை வழிபடுவது சிவ வழிபாடே.

பிரமன் செய்த குற்றம்

சைவசித்தாந்தம் சத்காரிய வாதம் பேசும். அதாவது’ உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது’. உள்ளது போகாது; இல்லது வாராது’ என்பது சத்காரிய வாதம். சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணாகும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாகும்.

மாயா காரியமான பிரபஞ்சம் அதன் முதற்காரணமான(material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்றுவிப்பான்.  எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவுமாவன்.

எனவே, படைத்தல் தொழிலைப் புரியும் பிரமன், அழித்தல் தொழிலின் பின் நிகழும் உண்மைகளை உணரான்.  முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்கப்பட்டான் என்பது புராணக் கதை.  புராணக் கதையைச் சாத்திரப் பின்னணியில் உணரவேண்டும்.

முடிவுரை:

ஓங்காரத்தின் தோற்றமும் பொருளும் மேலோட்டமாக ஒருவாறு விளக்கப்பட்டது. இங்குக் கூறப்பட்டவை மிகக் குறைவே. ஞானசாத்திரங்களைக் கொண்டு விரிவாக விளக்கம் பெறல் வேண்டும்.

18 Replies to “ஓங்காரத்து உட்பொருள்”

  1. குரு முனைவர் ஐயாவுக்கு நன்றியும் வ‌ண‌க்க‌மும்..

    ந‌ற்ப‌ணி, அருளுறை விள‌க்க‌ம் தொட‌ர‌ வேண்டுகிரோம்.

  2. அய்யா,

    நானும் பின் வரும் மின் அஞ்சலை சம்பந்தப்பட்ட தொலை காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி விட்டேன்!

    //ஹிந்துக்கள் ஆகிய நாங்கள் அமைதியாக இருப்பதினால் தானே எங்களை நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை தயாரிகிறிர்கள். நாங்களும் பாகிஸ்தானியர் போலே இருந்து இருந்தால் இப்படி செய்ய முடியுமா?.

    ஹிந்துகளை இனி மேல் கிண்டல் செய்வது போன்ற நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம். உண்மையில் இந்தியாவில் கிண்டல் செய்து நிகழ்ச்சி தயாரிக்க வேண்டும் என்றால் அது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வைத்து தான். அதை விட்டு விட்டு அப்பாவிகளான ஹிந்துக்களை குறி வைப்பது ஏனோ?

    இன்னும் உங்களுக்கு என்ன என்ன ஆசையோ? புரியவில்லை! ஹிந்துகளை ஆகா மொத்தம் ஒரு இரோப்பிய நாய் அல்லது பன்றி கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்!

    விவாதிக்க இன்னும் எத்தனையோ தலைப்புகள் இருக்க ஹிந்து நம்பிக்கைகள் தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டுமா? தைரியம் இருந்தால் அரசின் திட்டங்களை குறித்து நீயா நானா நிகழ்ச்சி நடத்துங்களேன் பார்ப்போமே!
    //

    (comment edited & published)

  3. இது போன்ற விளக்கக் கட்டுரைகள் தொடர்ந்து வருதல் வேண்டும். முனைவர் அய்யாவின் இறைப்பணி தொடர்தல் வேண்டும்..

    வணக்கங்களுடன்,

    வெற்றிச்செல்வன்,

  4. ரத்தினம் போன்ற இக்கட்டுரையை வரைந்து வெளியிட்ட ஆசிரியருக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் மிக்க நன்றி…

  5. அய்யா, மிகச்சிறந்த விளக்கம்!

    எனக்கு ஒரு ஐயம். சிவபுராணம் என்பது மகரிஷி வேத வியாசர் இயற்றியது தானே, இங்கு நீங்கள் திருவாசகமும், தேவாரமும் சிவபுராணத்தின் பகுதி என்று எழுதி உள்ளீர்களே.. அப்படியானால் அந்த சிவபுராணம் வேறு, இது வேறா?
    திருவிளையாடல் புராணம் என்பது நம்பியாண்டார் நம்பி அவர்களும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியதாக சொல்கிறார்களே… புலவர் தருமி, நக்கீரர், மற்ற புனிதக்கதைகள் சமஸ்க்ருத புராணங்களிலும் உண்டா?

  6. ஐயா,

    1)உயிர்களுக்கும் சிவமுக்கும் உள்ள உறவு என்னதென்று இன்னும் சிறிது விளக்க முடியுமா?

    //அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)

    சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்//

    அப்படியானால் சிவம் வேறு உயிர்கள் வேறு என்ற கருத்தா?

    2)இங்கே உயிர் என்று குறிப்பிடப் படுவது நம் போன்ற மானுடர் உள்ளிட்ட அனைவருமா?

    அதாவது என்னை உயிர் என்றும், சிவம் என்னை இயக்குவதாகவும் பொருள் கொள்ளலாமா?

    3) //”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” //

    இதன் அர்த்தம் பாசம் முதலான தளைகளை களைந்து, விடுதலைக்கான வழியைக் காட்டி, அருளினார் என்பது போல பொருள் தோன்றுகிறதே.

    இது உயிர்களை, வினை செய்ய இயக்குவது சிவம் எனப் பொருள் கொள்ள சரியான செய்யுளா?

  7. திரு வள்ளுவன்
    //எனக்கு ஒரு ஐயம். சிவபுராணம் என்பது மகரிஷி வேத வியாசர் இயற்றியது தானே, இங்கு நீங்கள் திருவாசகமும், தேவாரமும் சிவபுராணத்தின் பகுதி என்று எழுதி உள்ளீர்களே.. அப்படியானால் அந்த சிவபுராணம் வேறு, இது வேறா?//
    சைவசித்தாந்த இலக்கியங்களை இரண்டுவகையாகப் பிரிப்பர். அவை தோத்திரங்களும் சாத்திரங்களும். தோத்திரங்கள் பன்னிரண்டு திருமுறைகள் எனப்படும். அவற்றில் முத்ல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர்ரல் அருளப் பெற்ற தேவாரப் பதிகங்கள். 4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசரால் அருளப்பெற்றன. 7ஆம் திருமுறை சு7ந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவார. 8ஆம் திருமுறை மணிவாசகரின் திருவசகமும் திருக்கோவையாரும். ஒன்பதாம் திருமுறை கருவூர்த் தேவர் முதலாகிய அருளாளர்களின் பாடல்களாகிய திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும். 10ஆம் திருமுறை திருமந்திரம். 11ஆம் திருமுறை காரைக்காலம்மையார் முதலாய அருளாளர்கள் அருளிய பிரபந்தங்கள். 12 ஆம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்.

    கட்டுரையில் சிவபுராணம் எனக் குறிப்பிடப்பட்டது, மணிவாசகரின் திருவாசகத்தில் முதலாவது பாடல். நீங்கள் குறிப்பிட்டது வடமொழியில் உள்ள பதினெட்டுப் புராணங்கள்.
    நம்பியாண்டார் நம்பி 11ஆம் திருமுறையைத் தொகுத்தவர். திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவரகக் கொண்டு இவ்ர் செய்த பிரபந்தங்கள் 11ஆம் திருமுறையில் உள்ளன.
    பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணம் மட்டுமே அன்றி, வேம்பத்துரார் திருவிளையாடற் புராணம், பெரும்பற்றப்பூலியூர் நம்பி திருவிளையாடற் புராணம் முதலியனவும் மதுரை பற்றிய தலபுராணங்கள் ஆகும். இவைய்யே அன்றித் தனியாக மணிவாசகரின் வரலாற்றைப் பாடும் திருவாதவூரர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முத்லியனவும் உண்டு. ஹாலாஸ்ய மகாத்மியம் என்பது வ்டமொழியில் இத்திருவிளையாடல்களைக் கூறும் புராணம். இதில் தருமியின் கதையும் அடங்கும்.

    சைவவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. இவை வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்டாலும் திருமுறைகளே இவற்றிற்கு முக்கியமான அடிப்படை. தமிழ் மொழியின் அமைப்பும் இலக்கணமும் சித்தாந்தக்கருத்துக்களுக்குப் பெருமளவில் அடிப்படை அமைத்துக் கொடுத்துள்ளன.
    தங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.

  8. திரு திருச்சிக்காரர் அவர்களின் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.

    சைவசித்தாந்தம் பதி பசு பாசம் என்னும் மூன்றுபொருள்கள் அநாதி என்று கொள்ளுகின்றது.
    ‘பதி,பசு, பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப்போல் பசுபாசம் அனாதி
    பதியினைச் சென்றணுகா, பசு பசம்
    பதி அணுகின் பசு பாசம் நிலாவே’ என்ற திருமந்திரப்பாடலை அறிந்திருப்பீர்கள். இறைவன் ஒருவன். ஆனால் உயிர்கள் பல. பாசம் என்பது தளை. செம்பில் இயல்பாகவே களிம்பு இருப்பது போல உயிரின் அறிவை ஆணவம் என்னும் மலம் அல்லது குற்றம் பற்ரியுள்ளது. இதனைப் போக்கஏ, இறைவன் உடல், உடலில் உள்ள அறிவுக்கருவிகள், செயற்கருவிகள் , உலக அனுபவங்கள் உலகம் ஆகியவற்றை உயிரின்மேல் வைத்த கருணையினால் படைத்துத் தருகின்றான். உடனிருந்து தாய் எழுதப் பழக்குவதைப்போல் அனுபவித்தும் அனுபவிக்கச் செய்தும் உபகரிக்கின்றான். உயிர் வினையைச் செய்வதற்கும் இறைவன் துணை வேண்டும். இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.

  9. எங்களது கேள்விகளுக்கு விளக்கம் அளித்த குரு ஆசான் முனைவர் ஐயாவுக்கு நன்றிகள்.

    ஐயா,

    தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே இப்படி தேடுதல் செய்கிறோமே அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன்.

    மிகப் பெரும் பிரச்சினையில் சிக்கி உள்ளோம் – அதாவது இந்த உலகில் நான் ஈட்டும் பொருளோ, சொத்தோ எனக்கு உதவிக்கு வாராது என்பது திண்ணம். சொந்த பந்தங்களை காக்கும் வலிமையும் நமக்கு இல்லை.

    எனவே சித்தார்த்தரின் மனநிலையிலே அதாவது காட்டுக்குப் போகும் முன், அவர் புத்தர் ஆகும் முன் இருந்த நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம். ஆனால் சித்தார்த்தருக்கு இருந்த வைராக்கியம் இல்லாமல் இருக்கிறோம்.

    எனவே தப்பிக்க வேண்டும் என்ற துடிப்பினாலே, வலியினாலே இப்படி தேடுதல் செய்கிறோமே (இதுவும் இரு வகையான சுயநலம் தான்) அல்லாது உங்களது பாராட்டுக்கு உரியவன் அல்லன்.

    நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்னும் படிக்கு மனவலிமை அடைய விரும்புகிறோம்.

    விரத முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கித் தருமாறு கோருகிறோம்.

    உணவுக் கட்டுப்பாடுகள் என்ன? வேறு என்ன கட்டுப்பாடுகள் அவசியம் ஆகியவற்றை விளக்கித் தருமாறு கோருகிறோம்.

    முழு விடுதலையை அல்லாது வேறு எதையும் வேண்டவில்லை.

  10. வணக்கம்

    **இதனைக் குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுத எண்ணியுள்ளேன்.**

    மிக்க ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

  11. முனைவர் அய்யா அவர்களே, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து என் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி… என் ஐயங்கள் தீர்ந்துவிட்டன!

  12. முனைவர் முத்துகுமாரசாமி அவர்களே, என் கோடான கோடி நன்றிகளை உமக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் குருவாக வரித்துள்ள முருகனே எமக்கு ஓம்காரத்தின் பொருளை சொன்னது போல் உள்ளது. நன்றி மிக்க நன்றி

  13. அருமையான கட்டுரை அய்யா. நன்றி. நல்ல ஆன்மீக விஷயங்களை புரியும்படி சொல்லுகிறீர்கள். நாங்கள் படித்து பயன் பெற உபயூகமாக உள்ளது. நன்றி.

  14. நன்றி ஐயா !

    மாயை எப்படி சிவம் ஆகும் என்று விளக்கியதற்கு நன்றி!

    இனியாவது படைப்பும் படைத்தவனும் வேறில்லை என்று பிறர் ( பாலைவன தர்மத்தினர் ) புரிந்துகொள்ள எல்லாம் வல்ல சிவன் அருளட்டும் !. நெறைய எழுதுங்க ஐயா! ஆவலோடு உள்ளேன்!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  15. அன்புள்ள ஐயா,

    சிவசக்தி இரண்டாக பிரிக்க முடியாத பொருள். சிவம் அசைவற்றது.
    சக்தி அசைவுள்ளது. அண்ணாமலை அசையாத சிவம். அதில் சக்தி
    ஒடுக்கம். சிதம்பர நடராஜர் அசைவார். அவரது நடனம் அசைவுகளை
    கொண்டது. அங்கு சக்தி சிவ தாண்டவத்தை பார்த்து பிரமித்து நிற்பாள்.
    பகவான் ரமணர இது பற்றி ஒரு பாடலும் எழுதியுள்ளார். மகரிஷி
    வியாசர் எழுதின சிவபுராணம் ௧௮ புராணங்களுள் ஒன்று. அதில் சிவா
    மகிமை கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் சிவ புராணம் திரு வாசகத்தில்
    வருவது. இது ௮ ஆம் திருமுறையில் அடங்கும். பெரிய புராணம் அறுபத்து மூன்று சிவ பக்தர்கள் கதை. அதில் மணி வாசகர் இல்லை.
    இது பற்றி முனைவர் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
    பெரிய புராணம் உபமன்யு பக்தி விலாசம் என்ற பெயரில் சமஸ்க்ரூ தத்தில் செய்யப் பட்டுள்ளது. தமிழில் இருந்து வடமொழி சென்ற ஒரே
    புராணம் இது தான். எனக்கு திருச்சிற்றம்பல கோவையார் அர்த்தத்துடன் படிக்க ஆசை உள்ளது. யார் பதிப்பிதுள்ளர்கள் என்று
    விவரம் தந்தால் நன்றாக இருக்கும். பழந தமிழர்கள் சைவ வைஷ்ணவ
    பேதம் பார்க்க வில்லை. சண்டையெல்லாம் அத்துவித துவித சண்டை தான். ராமானுஜர் தான் இதை ஆரம்பித்து வைத்தார். சிதம்பரம் கோவிலில் கோவிந்தா ராஜர ஆனந்தமாக யோகா நிதரையில் இருக்கிறார். சிதம்பரம் ௧௦௮ வைஷ்ணவ கோவில்களில் ஒன்று. ஆனார் வைஷ்ணவர்கள் அங்கு போவதில்லை. சென்றாலும் நடராஜரை பார்க்காமல் கோவிண்டராஜநை மட்டும் தரிசினம் செய்து
    விட்டு வந்து விடுவார்கள் இது என்? வேலக்குடி கிருஷ்ணன் அய்யன்காருக்கே வெளிச்சம்!

    அன்புடன்

    சுப்ரமணியன், இரா

  16. மிக அருமை அய்யா .தங்கள் தொண்டு ஸ்ரீ சிவகாமவல்லி உடனமர் ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமானின் திருவருளால் தொடரட்டும.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *