Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)

இந்த — ‘பண்பாட்டைக் கப்பலில் கொண்டுவந்து இறக்குமதி செய்த நாகரிகமான நாம் >< பூர்வ குடிகளாய் நிலத்தின் மதிப்பு தெரியாமலேயே அதற்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் நாகரிகமற்ற அவர்கள்’ — என்ற அமெரிக்க வரலாற்றுச் சாயம் படிந்த இந்த மனோபாவம் வெண்டி அம்மையாரிடம் நிறையவே உண்டு என்பதை ஆவணப்படுத்துவது போல் இருக்கிறது நூலின் பக்கங்கள் 303 — 320.

Wendy Doniger

திரு ராஜிவ் மல்ஹோத்ரா அம்மையாரை இருதரப்பு விவாதத்திற்கு அழைத்தபோது வெண்டி அவர்கள் கூறிய பதில் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று.

“In the world of scholarship, you are what my sainted mother, who was Viennese, would have called an ‘aufgestellte Mausdrek’, a mouse-turd standing up on end. You do not even know enough to know how much you do not know; you have no training, nor even the rudiments of a self-education in the most basic principles of academic discourse.”

இதே அம்மையார் மல்ஹோத்ராவுக்கு எழுதிய பதிலில் கூறுவது “I would indeed be happy to speak with you as scholar to native informant…… I would be very curious to know what prayers you recite, what rituals your two grandmothers performed, what stories your aunts told you when you were a little boy”.

அது மட்டுமன்று இந்த அம்மையார் பல பேருக்கு அணுகுமுறையில் தன்னால் தாக்கம் ஏற்பட்டது என்பதை தானே சொல்வதுபோல் இருக்கிறது இந்தச் சுயப் பிரகடனம். “It is true that I have, and am glad that I have, a parampara. But everything else that you imply about me–and it is all vague innuendo, never a reasoned argument— is untrue”.

ஆனால் மல்ஹோத்ராவின் விவாதத்திற்கான அழைப்பிற்கு ஜெஃப்ரி க்ரைபல், பால் கோர்ட்ரைட் இவர்கள் எல்லாம் ஒரு நிலைக்குப்பின் இணங்கினர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சில பேராசிரியர்கள் அம்மையாருக்குப் பயந்து தங்கள் கருத்துக்களோடு தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் வாழும் இந்தியச் சமுதாயம் தொடர்ந்து தங்கள் விழிப்புணர்வை வெளிப்படுத்தியதாலும், ஹிந்து சமுதாய மாணவர்களின் பேரவை அங்கு பால் கோர்ட்ரைட் எழுதிய கணேசா நூலை அங்கீகரித்த பல்கலைக் கழகம் அந்த நூலை மறு விமரிசனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றும், அவர் எழுதிய நூலில் என்னென்ன பகுதிகள் வலிந்து திரித்து வேண்டுமென்றே ஆபாசமாக விவரிக்கப் பட்ட பகுதிகள் என்று பட்டியலிட்டு கவன ஈர்ப்பு செய்ததனாலும், மேலும் சில பேராசிரியர்கள் (அமெரிக்கர்களும், வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் இந்திய பேராசிரியர்களும் அடங்குவர்) துணிந்து அபத்தமான ஆய்வுகளை கேள்விக்கு உள்ளாக்கியதாலும் நிலைமை சற்றே மாற்றம் காண ஆரம்பித்தது.

உளவியல் ரீதியாக ஹிந்துக் கடவுள்களை ஆய்கிறேன் பேர்வழி என்ற போக்கு இந்த ஆய்வாளர்கள் மீதே திருப்பி விடப்பட்டது. ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றனர், ஒரு கூட்டாக, ஒரு நோக்கத்தோடு என்ற விதத்தில் அறிவுலகத்தின் கவனமும், பொது அக்கறை உள்ள மக்களின் கவனமும், ஊடகங்களின், பத்திரிக்கைகளின் கவனமும் இந்த விஷயங்களை நோக்கி திரும்பத் தொடங்கின.

வாஷிங்க்டன் போஸ்ட் என்ற இதழின் பத்திரிக்கை நிருபர்களில் ஒருவரான சங்கர் வேதாந்தம் என்பவர் ஹிந்து சமுதாயக் குழுக்களைச் சார்ந்தவரை அணுகி விசாரிக்கலானார். அவருக்குப் பதில் அளிக்கையில் மல்ஹோத்ரா ‘தாம் ஹிந்து மத ஆய்வுகளை ஒரு சில மேலை நாட்டினரின் பிரத்யேக அதிகாரத்திலிருந்து விடுவித்து அந்தப் படிப்புகளில் ஹிந்து சம்ப்ரதாயத்தை உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கும் அறிஞர்களையும் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று பாடுபடுவதாகத் தெரிவித்தார். Blacks, யூதர்கள், கிறித்தவர், முஸ்லீம்கள் ஆகியோரைப் பற்றிய படிப்பில் அந்தந்த மரபுகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கான ஆஸனம் இருப்பது போன்று ஹிந்து மத ஆய்வுகளிலும் ஹிந்து மத நம்பிக்கையும் அனுஷ்டானமும் கொண்ட அறிஞர்களுக்கான பங்களிப்பும் ஆசனமும் இருக்க வேண்டும். வியாபாரம், மேலாண்மை, தகவல் தொழில் நுட்பம், போன்ற பல துறைகளிலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் செல்வாக்குகளையும், தரம் மதிப்பு முதலியவற்றையும் அமெரிக்கர்களுக்குச் சமமாக உயர்த்திக்கொண்டுள்ள பொழுது ஏன் மத ரீதியான படிப்புகளில் இன்னமும் மனோபாவத்தின் கஞ்சமும், கோணலும் கோலோச்ச வேண்டும் என்பது மல்ஹோத்ரா போஸ்டுக்குக் கவனப் படுத்திய முக்கியமான கருத்து.

ஆனால் பாவம் வேதாந்தம் இந்தியராய் இருந்தும் அதை முழுக்க முழுக்க அந்நியரின் கண்ணோட்டத்திலிருந்தே இதழில் எழுதினார். தலைப்பே Wrath over a Hindu God: U. S. Scholars’ Writings Draw Threats From Faithful என்று வந்தது. அதாவது அமெரிக்க மக்களுக்கு கவர்ச்சியாக இருக்கக் கூடிய ஆதிகால குடியேற்ற வரலாற்றைச் சேர்ந்த உருவகத்தில், அதாவது யூ எஸ் அறிஞர்கள் குடியேற்ற அமெரிக்கர்கள் ஸ்தானத்திலும், ஹிந்து நம்பிக்கையாளர்கள் பூர்வ குடிகளின் ஸ்தானத்திலும் வைக்கப்பட்டு, ஹிந்து நம்பிக்கையாளர்களால் அமெரிக்க அறிஞர்களுக்கு மிரட்டு என்பதுபோல் ஒரு திரிப்புச் சித்திரம்.!

ஆனால் போஸ்டின் வாசகர்கள் இதைச் சுட்டிக்காட்டி ஆட்சேபிக்காமல் இல்லை. அதுதவிர அறிஞர்கள் பலரும் மேலும் மேலும் கருத்து தெரிவிக்கத் தொடங்கிய நிலையில் இரு பக்கங்களையும் சரிவர கவனித்துப் பேசும் நிதானப் போக்கு மிகுதிப்பட்டது. வெண்டி அம்மையாரின் ‘அய்யோ ஆய்வுத்துறை மதவெறி மிக்க ஹிந்துத்வா தேசியவாதிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டது. அறிஞர்கள் ஆய்வில் ஒரு சின்ன தவறு நேர்ந்து விடக்கூடாதா? ஹிந்து மதத்தைப் பற்றி ஹிந்து அல்லாத ஒருவருக்குப் பேசவே உரிமையே இல்லையா?’ என்பது போன்ற ஆர்ப்பரிப்புகள் அறிஞர் சிலராலும், நடுநிலையாளர்களாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பேலூ மெஹ்ரா, ஜெஃப்ரி லாங் போன்றவர்கள் எதிர்த்துக் கருத்து தெரிவித்தார்கள். லுசிண்டா ஹாப்கின்ஸ் என்பவர் போஸ்டில் வந்த கட்டுரையை கண்டித்து விமரிசனம் எழுதினார். ’தம்முடைய அனுபவத்தில் தம் மதத்தைப் பற்றி பிறர் கூறுவதை, அது அறைகுறையாக மறுத்துச் சொல்லும் கருத்துக்களாய் இருந்தாலும்கூட நல்ல பக்குவத்துடனும், ஒரு ரசனையுடன் கூடிய சகிப்புத் தனமையுடனும் பொறுமையாகக் கேட்டு அமைதியாக அக்கறையுடன் பதிலளிப்பவர்கள் ஹிந்துக்களே என்பதைக் கண்டதாக’ வெளிப்படையாக எழுதினார். ஒரு சம்பிரதாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த ஸம்ப்ரதாயத்தை நன்கு அறிந்தவர்களிடம் பொறுமையுடனும், அடக்கத்துடனும் கேட்கத் தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரியாமல் போனதுவே வெண்டி அம்மையாரின் மிகப் பெரிய தவறாகும் என்று சுட்டிக் காட்டினார். ஹாப்கின்ஸ் அளிக்கும் இந்தப் பாடம் நம்மிலேயே பலருக்கும் பொருந்தும் என்பது சொல்லாமலே போதரும். இந்தத் தகவல்களை திரு கிருஷ்ணன் ராமஸ்வாமியின் கட்டுரை நன்கு முன்வைக்கிறது. (பக் 344).

இத்துணை   அளவும்   நாம்     மாற்றார்   நம்முடைய கலாச்சாரத்தில்,   மதக் கருதுகோள்களில்,   தெய்விக    உருவங்கள்,  புராணச் சித்திரங்கள்,    நம்   உளம் கெழு  வாழ்வின்   ஊற்றாய்த்  திகழும்   முனிவரர்களின்   வாழ்க்கை வரலாறுகள்    இவற்றையெல்லாம்   எப்படி   அணுகத் தெரியாமல்  அணுகி குழப்புகிறார்கள்   என்று  பார்த்தோம்.     அணுகு  முறை  தெரிந்தும் உள்நோக்கத்தோடு செய்யும்   விஷமத்தனங்களும்    என்ன  என்றும் பார்த்தோம்.  ஆனால்    இவை அத்தனைக்கும்     காரணம் அவர்கள்தாமா? முழுப்பழியும்     அவர்களின்   வாசலில்தான்   விழுகிறதா?     இந்தக் கேள்வியை நாம் வேண்டுமென்றேதான்     இவ்வளவு கடந்தபின்னர்    இப்பொழுது எழுப்புகிறோம்.   ஆனால்    நூலோ    மிக  யதார்த்தமாக   எடுத்த எடுப்பிலேயே முதல் அத்யாயத்திலேயே  கேட்டுவிடுகிறது.(பக் 6)

tantra_lotus_moonஒவ்வொரு  மதத்திற்கும்    அதனதன்   நாட்டில்   தேச பண்டிதர்களால்    ஆய்வு நடத்தப்படும் அமைப்பு இருக்கிறது.    யூத கிறித்தவ  மரபுகளா   அந்த நம்பிக்கையாளர்களில்  பண்டிதர்கள்    தங்கள் மதக் கோட்பாடுகளைப் பற்றி படிப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.    ஆனால்    இங்கு    ஹிந்துமதம் என்பதைப்பற்றிப்    பேசாமல்  இருப்பதுதான்   மதச்சார்பற்ற  தன்மை  என்பது போன்ற     மூளைச் சலவையில்     அறிவுஜீவிகளின் கூட்டம் சிக்கித் தவிக்கிறது.    பல   பல்கலைக  கழகங்களிலும் மத ஆய்வுகள் என்பதற்கே  ஆஸனங்கள்  உண்டா   என்பதே சந்தேகம்தான்.     ஸ்ரீவைஷ்ணவம்  பற்றியோ, சைவம் பற்றியோ,   சாக்தம்,   சமணம்,  பௌத்தம்     இவைபற்றியோ    ஒரு  ஹிந்து படிக்க  வேண்டும் என்றால்     மரபு ரீதியான    சாலைகளுக்கோ, மடங்களுக்கோதான்    போயாக  வேண்டும்.   கல்விக் கழகங்களின்  முக்கிய பாட்டையில்,     மதக்கல்வி என்பதே   மூடநம்பிக்கை,     மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது,     மதச் சண்டைகளை     ஏற்படுத்தக்  கூடியது என்ற    அபிப்ராய  மூட்டத்தில்,    மதங்களைப்  பற்றிப் படித்தல்   கைகழுவப் படுகிறது.    எனவே     விஞ்ஞானம்,  தொழில்,    தகவல்  நுட்பம்   என்பவற்றில் எல்லாம்    சிறந்த   அறிவாளிகளை   ஏற்படுத்தும் நாட்டில்    மதம் என்பதற்கு மட்டும்   வெளிநாடுகளுக்குத் தான் போயாக வேண்டும் என்ற நிலைமை   ஞானத்திலே பர  மோனத்திலே   உயர் நாடான     தேசத்தில்!.

In  other   words,  unlike  all  other   major  world  religions, Hinduism    does  not   have    its   own    home team,  by  which   we mean  a  committed    group  of  academic   scholars   who  are   both practitioners of  the  faith  and   well- respected    in  the  academy at  the  highest   levels. (pp 7)

அமெரிக்காவில் போய்   கோவில் கட்டுகிறார்கள்,   ஆலயம்     ஏற்படுத்துகிறார்கள். ஆனால்   தங்கள் பண்பாட்டைப்  பற்றியும், மதங்களைப்  பற்றியும்     ஆன   பொது    அபிப்ராயத்தை,   பொது ஜனத்திற்கான விளக்கத்தை,     மற்ற    உலக  மதங்களை   ஒப்பிட்டால், பொது  ஊடகங்களிலும், கலாசாலைகளிலும்    அந்நிய நாடுகளில்  ஏற்படுத்தத் தவறிவிட்டார்கள்   என்றே சொல்லலாம்.     மேலை நாட்டார் பெரிய  மனது  பண்ணி இவர்களைப்பற்றி     ஆக்கபூர்வமாக   எழுதினால்தான்  உண்டு என்ற  நிலை. இதனால்      கண்டவர்களும் வாய்க்கு  வந்தபடி    நம்மைப்  பற்றி உளறியதெல்லாம்     நம்மைச்   சித்திரிக்கும்    விளக்கங்களாக   ஆகி,   நமது குழந்தைகள்    அங்கேயே    பிறந்து,   அங்குள்ள   கல்விக்கழகங்களில் படிக்கப் போகும் போது  தங்களைப்  பற்றிய  எள்ளலான   சூழ்நிலைகளில்     தாம் இருப்பதைக்  கண்டு   மனம்  கவல்கின்றனர்.     தங்களுடைய அடையாளங்களையே சொந்தம்  கொண்டாட  மனம் அஞ்சுகின்றனர்.    வீட்டிற்கு   வந்து  தம் பெற்றோர்   இதுவரை    தங்களுடைய  பெரும் பண்பாடு   என்று     பீத்திக் கொண்டதெல்லாம்    தங்களுடைய   அன்றாட     அவமானக்  காரணங்கள்  என்று அந்நியப் படுகின்றனர்.

இந்தத் தருணத்தில்,   இந்தத் தருணத்திலாவது    நாம் ஒன்றை    நம்   வரலாற்றில் உணர்ந்துவிடுவது  நல்லது.     அமெரிக்க நாட்டில்   நடக்கும்    இது  போன்ற அவஸ்தைகள்,   ஹிந்துக்களால்   அனுபவிக்கப்  படுவது இது முதன்  முறையன்று. ஹிந்துவின் நெடிய   வரலாற்றில்     அவனுடைய வாழிடமே  அவனுக்கு அந்நியப்படுத்தப்பட்டு,  அவனுடைய    புராணங்களும்,    வேதங்களும்,     பக்தி நூல்களும்,   அனுஷ்டானங்களும்,    கடவுளரும்   ஹிந்துவுக்கு     எதிரான கருத்தும்,   சநாதன தர்மத்துக்குப்   புறம்பான    நெறிகளும்    கொண்ட கூட்டத்தார் பலரால்   பல  காலங்களில்      கையகப்படுத்தப்பட்டு     கீழான பல கேலிச்  சித்திரங்களையே  மூலப்பனுவல்களிலும்    நுழைத்துச்   செய்த சில்மிஷங்கள்    ஏராளம்.    ஸ்ரீவைஷ்ணவ  சம்ப்ரதாயம்  ஓர் அருமையான  கருத்தைக் கூறும்.     அதாவது   பிரமாணம்  என்றால்    சாஸ்திர  நூல்கள்,    பிரமேயம் என்றால்   கடவுளர்,  கோவில்கள். ஹிந்துவுக்கு என்றும் பிரமாண   ரக்ஷணமும்,    பிரமேய ரக்ஷணமும்  பெரும் சவால்களுக்கிடையில் தான் நடந்தேறி வந்திருக்கின்றன.    ஆனால்   பலகாலங்களில்   அவனுக்கு    ஹிந்து என்ற பெயருக்குப் பதில்  வேறு  பெயர்கள்    வழங்கின  என்பதுதான் வித்யாசம். பிரமாண   ரக்ஷணமும்,   பிரமேய ரக்ஷணமும்     ஒவ்வொரு ஹிந்துவின் கடமை என்று கூறும்    ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.

sankaranarayanarபிரமாணத்தை  எடுத்துக்கொண்டு   ஓடி  ஒளிந்த   அசுரனின் கதையும், பிரமேயங்களுக்கு   அவ்வப்பொழுது  ஊறு விளைத்தவர்களின் கதையும் நமக்குத்  தெரிந்ததுதானே.    ஹிந்து  முற்றிலும்   தனக்கு  எதிரான,     தன் வாழிடத்தையே  ஆக்கிரமித்த    அரசு  சக்திகளுடன்      ஓங்கிய     மத சக்திகளான    சமணம் பௌத்தம்    ஆகிய   உள்நாட்டு  விமரிசன     சக்திகளையும் கடந்தே, உள்வாங்கியே,  செரித்தே வந்திருக்கிறான்  என்பதை   அவனுடைய புராணங்கள்,    இதிகாச மாற்றுப் பிரதிகள், எதிர்ப்பிரதிகள்   இவற்றின் பெருக்கமே  காட்டுகிறது  அன்றோ!     இந்த விமரிசன  கல்மஷம் வைஷ்ணவம் சைவம்    ஆகிய    ஊக்கமுடையோர் மத்தியிலும்     தலை காட்டியது  என்பது நம்பிள்ளையின்   வாழ்க்கையில்  ஒரு  நிகழ்ச்சி மூலம்   அறியக் கிடைக்கிறது.

இறையிலி  நிலம்  தொடர்பாக   ஒரு  கிராமத்தில்   வந்திருந்த  அரசு அதிகாரியிடம்     பார்க்கச்  சென்ற இடத்தில்      ஒரு  சைவர்  நம்பிள்ளையிடம் வந்து  ‘ஐயா!    தாங்கள்    தமிழில்  மிகவும் துறைபோயவர்    என்று  கேள்வி. இந்தப்    பாட்டுக்குப்  பொருள்  சொல்ல  வேண்டும் என்று    ‘அரியலால் தேவியில்லை  ஐயன்    ஐயாறானார்க்கே’     எனற  பாடலைக் காட்டிக்  கேட்டார்.     நம்பிள்ளைக்குப்    புரிந்தது.    ஏதோ புராணங்களை வைத்துக் கேலிச் சித்திரம் உருவாக்கப்  படுகிறது  என்று.    தாம்   அதற்கு உரியவர் இல்லை,   தம்முடைய சம்பிரதாயம் வேறு    என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்.    நபர்  விடுவதாக  இல்லை.    (ஒன்றும் இல்லை இதற்குப் பொருள் சொன்னால்    ‘உங்க சாமி எங்க சாமிக்குப்   பொண்டாட்டிதானே,  ஹய் ஹய்’ என்ற    எள்ளலுக்குக்கான ’வெண்டித்தனம்’.)    நம்பிள்ளை நினைத்திருந்தால்   அவரும்   இந்தச்    சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எள்ளலில்   ஈடிபட்டிருக்கலாம்.  ஆனால்   அவர்  கூறிய   பதில் ஒவ்வொரு ஹிந்துவும் என்றென்றைக்கும்    மனத்தில் கொள்ள  வேண்டிய பதிலாக அமைந்துவிட்டது.

‘அப்பா!      நீ   ஒரு  தெய்வத்தை   வணங்குகிறாய்  என்றால்  அதற்கு    அனைத்து உயர் குணங்களையும்     சாற்றிப்   போற்ற வேண்டுமே அல்லாது     இழிவு கற்பிக்கும்    அம்சங்களைச் சொல்லக்  கூடாது.    ஒரு புருஷன்  ஸ்திரீ வேஷத்தில்  வந்தால்     அவனைக் கண்டு    மற்றொரு   புருஷனே மயங்கினால்    அதுவே நகைப்பிற்கிடமாகும்.   அவ்வாறிருக்க,    புருஷோத்தமன்      ஸ்த்ரீ வேஷமிட்டு வந்தால் அதை நீ  உயர்ந்த  பரதெய்வம்  என்று  நினைத்துக்   கும்பிடும் கடவுள்    உண்மை  என்று மயங்கிச்   சென்றது என்று   நீ  கூறுவது அந்தத் தெய்வத்திற்கு   எள்ளளவும்  உயர்வைச்  சொல்லாதே.     இப்படியெல்லாம் கதை கட்டினவன்    பிரமாணம் அற்றவன்  என்று  நீ   அலட்சியப் படுத்தி போகவேண்டியதுதான்    உன் பக்திக்கே நீ  காட்டும் மரியாதை’   என்றார்.

எனவே    நமது  முன்னோர்களும்,   ரிஷிகளும்,    யோகிகளும்     தத்வங்களை உள்பொதிந்து    பல கதைகளை    உருவகமாக    ஆன்மிக நிலைகளைச்  சித்திரிக்கக் கூறியிருக்கின்றனர்  என்பது  ஒருபுறம் உண்மையேயாயினும்     நடுவில் நாம் தாண்டி வந்த   எதிர்பிரச்சாரக் காலங்களில் ஏற்பட்ட   இழிவுபடுத்தும் இடைச்செருகல்களும்     கலந்துள்ளன.   இதை    நாம்    கவனத்துடன்   ஆராய்ந்து களைய  வேண்டும்.    இந்நிலை      நாம் மேற்கூறிய   Home  Team   Scholars நன்கு கிளர்ந்தால்தான்   உருவாகும்.    அத்தகைய    ஹோம் டீம்    நம்முடைய சநாதன   தர்மத்திலேயே     பழங்காலத்திலும் ஏற்பட்டதுண்டு.      ‘ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி  விசார்யச    புனப்புன:|     இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ   நாராயணோ  ஹரி:’   — ‘அனைத்து    சாஸ்திரங்களையும்     மீண்டும் மீண்டும்  விசாரித்து, ஆலோசித்துப்  பார்த்ததில்   இந்த  ஒன்றே  நிச்சயப்  படுகிறது— த்யானிக்கப் படவேண்டியது   நாராயணராகிய   ஹரி’    என்ற  ச்லோகமே    அத்தாட்சியன்றோ. அனைவரது  நித்ய பாராயணத்தில்  இருப்பது   அன்றோ  இது!     நாராயணரைச் சொல்லியிருக்கிறதே அப்பொழுது வைஷ்ணவமா    சைவமா   என்ற  நோக்கு  வேண்டாம். அது  இல்லை  இங்கு முக்கியமானது.     சாஸ்திரங்களை    நமது  முன்னோர் மீண்டும் மீண்டும்  ஏன் ஆராய வேண்டும்?  ஏன் விசாரிக்க  வேண்டும்?   பிறகு இதுதான்    கடைந்தெடுத்த முடிவு   என்று ஏன் நிர்தாரணம்    செய்ய வேண்டும்?      ஹோம் டீம்   என்பதின்  இயக்கம்   இங்கு   பல காலங்களில்    தெளிவையும், தேற்றத்தையும் நல்க வேண்டி      இயங்கி வந்திருக்கிறது   என்பதுதான்   மனம் கொள்ள  வேண்டிய விஷயம்.

இன்று ஹிந்து மதம்   என்பதற்கே   இத்தகைய    Home  Team     அறிஞர்கள் மிகவும் அவசியம் என்பதை     நூல்     கவனப்    படுத்துகிறது.

நான்   முன்னரே   Prof.  S  N  Balagangadhara   அல்லது   ’பாலு’ அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.   அவருடைய  கருத்துக்கள் சிலவற்றைப் பற்றிப்  பின்னர்   பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.   அந்தக் கருத்துக்கள் என்ன   என்பதை   இப்பொழுது  பார்ப்போம்.    இதுவரையில் கொஞ்சம் போரடிக்கிறது என்று    சற்றே கண்ணசந்தவர்கள் கூட    இப்பொழுது  முழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் விஷயம் முக்கியமானது.

பாலு   சொன்னது அனைத்தும்    அப்படியே  உண்மை என்று    அர்த்தமில்லை.ஆனால்    அவருடைய கவன  ஈர்ப்பின்   சாரம்    நாம்     யோசிக்க வேண்டியதாகும்.

அவர்  முக்கியமான  கேள்வி  ஒன்றை எழுப்புகிறார்.      ‘மேலை  நாட்டினர்   என்ன பேசினாலும்,   அது  ’இந்திய இயல்  ஆய்வுகளோ’   அல்லது    ‘சமுதாய  இயல் ரீதியான  ஆய்வுகளோ’    பேசும்   மொழியும்,  தொனியும்  ஒரே  மாதிரி இருக்கக் காரணமென்ன?’     திரு ராஜிவ்  மல்ஹோத்ரா   வெண்டியார்கள்    நிற வெறியும், கீழை-மேலை  பண்பாட்டு   மன்ப்பிளவின்பாற்பட்ட   ஓர் எண்ணமும் கொண்டு பேசுவதாக  பொருள் படும்படி     செய்யும்  அலசல்களை     திரு பாலு இன்னும் ஆழமாகக்   கொண்டு  போகிறார்.

அவர் கூற வருவது    மேலை நாட்டு   சமுதாய  இயலின்  மொழியே    கிறித்தவ மதத்தின்   பல்வேறு பிரிவினரிடையே  நடந்த   வாதங்களின்  மிச்சத்தைச் சுமந்தபடிதான்    ஆக்கப்பட்டிருக்கிறது   என்பது.   இதைச் சற்றே விளக்குவோம்.

மேலை  நாட்டுப்  பண்பாடு   என்பது    உண்மையில் கிறித்துவத்  தாக்கத்தில்   விளைந்த    விளைவேயாகும். கிறித்தவ   மதகோட்பாடுகளைப்பற்றிய    வாத பிரதிவாதமான   அலசல்களின் படிவுகளே   மேலைய  அணுகுமுறையின்    உள்கட்டடமாக  அமைந்து இருக்கிறது. கிறித்தவம்   தன்னை   பிரசாரப்படுத்திக்கொள்ள    மதமாற்றம்   என்பதைக் கையாளுவது  அனைவரும் அறிந்ததே. அது  ஒரு வித   முறையென்றால்    இரட்டை முறையின்  மற்றொரு  கை     ‘செக்யூலரைசேஷன்’.     எப்படி?     செக்யுலர் என்றால்  என்ன?  இந்த  வார்த்தையின்    புழக்கம் எங்கிருந்து  வந்தது?   எந்த வாத  பிரதிவாதத்தில்     இந்த  வார்த்தைப்  பயன்படுத்தப்பட்டது?    நம்மில் படித்தவர்களே என்ன சொல்வோம்?     ‘என்னய்யா…  ஆங்கில  நாட்டில் சர்ச்சும்,    ஸ்டேட்டும்   இணைந்து இருந்தது  கத்தோலிக்க   மத    ஆதரவாக அரசு இருந்தவரையில்.   பின்    ப்ராடெஸ்டன்ட்   ஆதிக்கம்   வந்தவுடன் சர்ச்சைச்  சார்ந்திராத    ஸ்டேட்   என்ற  கருத்து  வந்து    செக்யூலர் என்பது   அரசும் மதமும்    ஒன்றை ஒன்று  சாராக்   கொள்கையைக்  குறிக்க வந்தது’  என்போம்.     ஆனால்   கால ஓட்டத்தில்   இங்கு  செக்யூலர் என்றால் communalism   மதக்குழு ஆதிக்கம்   என்பதற்கு   எதிரானது என்ற பொருள் கொள்ளப்பட்டது.    மேலை நாட்டில்    செக்யூலர்   என்றால்    ‘சேக்ரட் அல்லாதது’  என்றே பொருள்.   சேக்ரட்   என்றால்    கடவுளுக்கு  விடப்பட்டது என்று   பொருள் என்பதை  முன்னர்   பார்த்தோம்.    கடவுளுக்கு என்று விடப்படாத    விஷயம்   செக்யூலர்  என்பது மேலை  நாட்டுப் பயன்பாடு    ரீதியாக பொருள்.    அப்பொழுது   செக்யூலர்  என்ற  வார்த்தைக்கே பொருள்  சொல்ல முதலில் நீங்கள்   கிறித்தவ   வாத பிரதிவாதங்களை உட்கொண்டாக  வேண்டும் என்றாகிவிடுகிறது.

கத்தோலிக்கம்    கூறியபடி   பார்த்தால்    மதம்   என்பது    ஒருவருடைய தனிப்பட்ட    அகவயமான    ஈடுபாடாய் இருந்துவிட  முடியாது.    ஏனெனில் கடவுளின்     வார்த்தைகளுக்கு    அவரவருக்குத்   தோன்றிய வழியில்    பொருள் கொள்ள   இயலாது.    கடவுளின்  கருத்தை      சர்ச்சுதான்    நன்கு விளக்கும்.    சர்ச்சைத்  தாண்டி    பைபிளைப் புரிந்து கொள்ளும் முயற்சி ‘டெவில்’  என்பதன்   பசப்பிற்கு  ஆட்படுதலாக  முடிந்துவிடும். கத்தோலிக்கத்தில்   ஒரு  முக்கியக்  கொள்கையாவது :  Extra ecclesium  nulla salus  —  there  is  no  salvation, i.e.,  being  saved  from  the clutches  of  the  Devil–outside   the  Church.    இதை மறுத்து ப்ராடெஸ்டன்டார்     கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் எவரும் தேவையில்லை.    ஒருவருடைய   நம்பிக்கையின்    உண்மைத்  தன்மையைக் கடவுளே   நிர்ணயிக்க   வல்லவர்.    மனிதருக்கு  மனிதர்    அவ்வாறு நிர்ணயிக்கத்  தகுதி  வாய்ந்தவர் அல்லர்   என்ற  வாதத்தை  முன்னெடுத்துச் சென்றனர்.    ஒரு  குறிப்பிட்ட காலக்  கட்டத்தில்   அவர்கள் அடைந்த  வெற்றியின் விளைவு     செக்யுலரிசம்   எனற வார்த்தை.    அதே  போல்   human  rights,
person,   போன்ற  பல  வார்த்தைகளும்    கிறித்தவத்தை உள்  பொதிந்து எழுப்பப்பட்ட  வார்த்தைகளாய் இருக்கின்றன.   எனவே     கிறித்தவத்தை வெளிப்படையாக எதிர்க்கும் மேற்கின்    ஆய்வாளர்களும்   சமுதாய இயல்கள் என்பதைக்  கைக்கொள்ளும் போது,  அவ்வாறு  கைக்கொண்டு    மற்ற  மதங்களைப் பற்றி அலசும்போது    அது    சுற்றி   வந்து    கிறித்தவத்தின்   மறைமுக  வெற்றியாக
ஆகிவிடுகிறது.

– (Ref: Chapter 12 Balagangadhara on the Biblical Underpinnings of “Secular’ Social Sciences pp 123 –131, Invading the Sacred)

இது   ஏதோ  வேண்டுமென்றே   செய்யப்பட்ட  சூழ்ச்சி  என்று  சொல்லவில்லை  திரு பாலு. மொழியாடலில் புதைந்திருக்கும் மேடு பள்ளங்களைத்தான் குறிப்பிடுகிறார். தன்    கோணங்களை  அவர் சாரப்படுத்திக்  கூறுவதாவது:

To  summarize  what  I  have  said  so  far,  Christianity    spreads  in two  ways:  through  conversion   and  through  secularisation.  The modern  day social  sciences   embody  the  assumptions  of   Christian
theology,  albeit  in  a  ‘secularised’   form.  (pp 131)

S N Balagangadhara

இவருடைய   கருத்துக்கள்   மேலெழுந்த  வாரியாக  நோக்கும்  பொழுது எனக்கு    கொஞ்சம்   அதிகப் படியான  ஒன்றாகப்   படுகிறது.   ஆனால் தாம்   இந்தக் கருத்துக்களைப் பற்றி  நெடுக   ஆராய்ந்து   நூல்கள்  எழுதி நிரூபித்திருப்பதாகக்  கூறுகிறார்.    அவற்றையும் நான்  படிக்காத நிலையில்    இந்தக் கருத்துக்கள் என்னால்    கொள்ளவும்  படவில்லை,  தள்ளவும் படவில்லை    என்ற ரீதியில் குறிப்பிடுகிறேன்.  (எப்படியும்  விவாதிக்கப்பட வேண்டிய   கருத்துக்கள்.     விவாதிப்போர்   மறக்காமல் திரு  பாலுவின் நூல்களைப்  படித்தபின்னர்  விவாதிப்பது    நலம்.)

எந்த  மொழியுமே  கடந்த  கால  மிச்சங்களால்    வனையப்பட்டதுதானே? வார்த்தைகள்    கடந்த காலத்தில்  பிறந்தாலும்    அவை    பயன்பாட்டை   ஆதிக்கம் மட்டும்  செலுத்துவதில்லையே.   நிகழ்காலத்தால்    ஆளப்பட்டுப் பொருள்   மாறி மாறிப்   பின்   புதுப்பிக்கப்பட்ட    வாழ்வுகளை   அடைகின்றன  அன்றோ?   அன்று அவை  ஆளப்பட்ட பொழுதும்  அதற்கு  முந்தைய  காலத்தின் மிச்சங்களைச் சுமந்துதானே வந்திருக்கும்.     அந்த  மிச்சங்களோடு சேர்த்துத்தானே     புது சாயைகளைச் சேர்த்து   ஆண்டிருப்பார்கள்?

உதாரணமாக    bride  groom  எபதை  எடுத்துக்கொள்வோம்.     grome     என்பது முதலில்   குதிரை லாயத்தில்  வேலை   செய்யும் பையனைக்   குறிப்பிட்டுப் பின்    bride-groom   என்னும் பொழுது குதிரையில்   பெண்ணைக் கொண்டு விடும்    வாலிபன்   என்றெல்லாம்     பொருளாகிப்  பின்னர்   நாளாவட்டத்தில் மணமகன்   என்ற  பொருளுக்கு  வந்து சேர்ந்தது   என்று எடிமாலஜி கூறுவார்கள். ஆனால்   இன்று   இந்தச் சொல்   சுட்டும்  யதார்த்தம் என்ன? நாம் ஒரு  சொல்லைக்  கையாளும் பொழுது   அது  கடந்த  காலத்தை  மட்டும்    ஏந்தி வராமல்    ஒப்புதலாலும், பயன்பாட்டாலும், சேர்த்தியாலும்      நாம் அளிக்கும்    பொருளையும்    உள்வாங்கிக் கொண்டு  மாற்றம் அடைகின்றதே.
இருந்தாலும்     ஒரு   வித்யாசமான பார்வையைத்   திறந்துவிடுகிறார்  பேரா  திரு S N   பாலகங்காதரா.

இந்த   அத்யாயத்தில்    சில   முக்கிய  விவாதத்திற்குரிய   வாசகங்கள் பட்டையெழுத்தில் காணப் படுகின்றன.    அவற்றில்   சிலவற்றை    இங்கு தருகிறேன்:-

1) The  enlightenment  thinkers   have  built  their  formidable  reputation (as  opponents  of  ‘all  organized  religion’   or  even   ‘religion’ tout  court)  by  ‘selling’  ideas   from   Protestant   Christianity  as though  they  were  ‘neutral’  and  ‘rational’.

2) I  am  not  in  the  least  suggesting  that  this  is  some  kind  of a  ‘conspiracy’.  I  am  merely explicating  what  I  mean  when  I  say that Christianity  spreads  also  through  the  process  of  ‘secularization’. What  has  been   secularized  are  whole  sets  of  ideas  about  Man  and
Society  which  I  call  ‘Biblical  themes’.   They  are  Biblical  themes because  to  accept  them  is  to accept  the  truth  of  the  Bible. Most  of  our  so-called  ‘social  sciences’  assume  the  truth  of  these
Biblical  themes.

3) Most  of  our  so-called  social  sciences  are  not  ‘sciences’  in  any sense  of  the  term: they  are merely  bad  Christian  theologies.

பேரா  திரு  S N பாலகங்காதரா  அவர்களுடைய   முக்கியமான   நூல்   The   Heathen in  His  Blindness: Asia,  the  west  and  the  Dynamic  of  Religion என்ற   மதத்தின்   இயல்பு   பற்றிய   ஆய்வாகும்.

இந்த  நூலைப்பற்றிய    விமரிசனத்தின்   நிறைவுப்பகுதியை  எட்டியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.     ஆனால்    தலைக்கட்ட  வேண்டிய     பகுதிக் கருத்துக்கள்   சற்று  அதிகம்.

முதலில்   நாம்  நன்றி  சொல்ல  வேண்டியது     இணையத்திற்கு,   இமெயிலுக்கு, குழும   கலந்துரையாடல்   என்ற    சாத்தியத்திற்கு.    ஏனெனில்     இணையம் மட்டும் இல்லையேல்    எங்கோ நடக்கும்     ஹிந்து மத     கருத்துப் புலத்தின்    ஆக்கிரமிப்பையும்,    சீர்குலைப்பையும்    கிட்டத்தட்ட உலக அரங்கில்   எங்கிருந்தெல்லாமோ    இருந்துகொண்டு    எதிர்த்து அணிதிரண்டு எப்படி    இத்தகைய விவாதக்  கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்க  முடியும்? ஸுலேகா.காமில்    திரு  ராஜிவ்  மல்ஹோத்ரா   தொடங்கிய    பனிப்பாறை   நகர்வு இன்று    ஹிந்துக்  கருத்துகளின்   வெளிப்பாடாக    நாதமிடும் நதியாக அன்றோ    பாய்கிறது.    அது  ஜீவ  நதியாகத்   தொடர்வது  நம்  கையில்.

இந்த    விவாதங்களின்   தொடக்கத்திலேயே    Antonio  de  Nicolas  என்பவர் துணிந்து    ஹிந்து   டயஸ்போராவின்    குரலுக்கு    ஆதரவும்  ஊக்கமும் சேர்த்தார்.    அடிமேல் அடி  வைத்தால் அம்மியும் நகரும்.    அமெரிக்க ’ஆராய்ச்சி’    நகராதா என்ன?   உண்மை,   துணிவு,  விடாமுயற்சி    இவை மூன்றும் சேர்ந்து  கிளப்பிய   வெப்பத்தில்    பனி  உருகத்  தொடங்கியது.     ’கணேசா’ என்ற  நூலில்   கண்டபடி    ‘ஆய்வு’க்  குப்பை   போட்டிருந்த பால்கோர்ட்ரைடின்      குரல்  மாற்றுத்  தொனியோடு   கேட்க  ஆரம்பித்தது. என்ன  காரணம்?

ஒரு  வைஷ்ணவர்,     ‘கணேசா’  வைப்பற்றித்தானே    என்று    சும்மா இருந்துவிடாமல்      தாமே   மேலை நாட்டுப்   பல்கலைக்  கழகத்தின் பேராசிரியராக  இருந்தும்    துணிந்து    சட்டையைப் பிடித்துக் கேட்காத குறையாகக்   குரல்  எழுப்பத்தொடங்கினார்.    அவர்தான்    ப்ரொபஸர் ராம்ப்ரஸாத்  சக்ரவர்த்தி.    அவர் எழுப்பியது    உரக்கக்  கேட்ட வெளிப்படையான   குரல்.   அமெரிக்காவின்     மத  ஆய்வு   நிறுவனக் குடையின் கீழ்  ஒண்டும்     ஆய்வாளர்களில்   ஹிந்துக்களாய்   இருக்கின்றவர்களைப் பார்த்தே   கேள்வி எழுப்பினார்.    ‘உள்ளே யாராவது இருக்கிறீர்களா?’ என்பது  போல்    எழுந்தது  அவருடைய    கேள்வி. (இவரை  வைஷ்ணவர்  என்றும், வைஷ்ணவராய் இருந்தும்    இவ்வாறு    செய்தார்   என்றும்  நானாகச் சொல்லவில்லை.   நூலே   இதைக்  குறிப்பிடுகிறது.  பக் 326)

Patrick  Olivelle  என்னும்  ஆய்வாளர்    பால்கோர்ட்ரைட் என்பவருக்கு   ஆதரவாகப்  பேசியதையும்  விமரிசிக்க  ஆரம்பித்தார்    திரு சக்ரவர்த்தி.     பால்கோர்ட்ரைட்  எழுதினால்    நீங்கள்    மாற்றுப்  பிரதி
எழுதிவிட்டுப்   போங்களேன்    என்ற  ரீதியில்  ஒலிவெல்   கூறியது  கவனத்துடன் கூறியதுதானா   என்று   வினா  எழுப்பினார்.  ஏனெனில்     வலிமை  மிக்க நிறுவனங்கள்   அளித்த    சான்றாண்மை ஆதரவு     பால் கோர்ட்ரைட்டுக்குக் கிடைத்தாற்போல்    ஹிந்து  டயஸ்போரா   அறிஞர்கள்    அமெரிக்க கல்விப் புலத்திற்கு வெளியே   நின்று  எழுதும் போது  கிடைக்காதே     அதற்கு  என்ன செய்ய   என்றார்.   இந்தப்   பிரச்சனையின் செம்பாதி  காரணமே    அமெரிக்க வாழ்    ஹிந்துக்கள்    தங்களைப் பற்றிய   சுயத்தின்  வரையறையையும், சுயத்தின்    உண்மையான    பிரதிபலிப்பையும்    உருவாக்கத் தவறியதே   என்று சரியாகச்  சொன்னார்.   இந்தியாவிலிருந்து   அமெரிகக  வந்தவுடன் ஹிந்துக்கள் பாய்ந்து  போய்   டாக்டராகவோ,    எஞ்ஜினீயர்கள் ஆகவோ, மேனேஜ்மண்ட்   கலந்தாலோசகர்கள் ஆகவோ   ஆவதற்குத்தான்  துடிக்கின்றார்களே அன்றி சமுதாய   இயல்,  அதிலும்    குறிப்பாக    மத இயல்   படிப்புகள் இவற்றில்  ஈடுபடுவதில்லை.    இத்தகைய     கருத்துக்களைக்  கூறிய   திரு சக்ரவர்த்தி    மற்றும் ஒரு  முக்கியமான   கவன  ஈர்ப்பைச்  செய்தார். என்னவெனில்     ஹிந்து   சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்    அமெரிக்காவில்   இந்த மாதிரி    ‘ஆய்வுகளுக்கு’த் தங்கள்    உணர்ச்சி பூர்வமான பாதிப்புகளையும்,     பொறுப்பற்ற    வாசகங்களுக்கான    எதிர்ப்பையும் எவ்வளவு   அறிவு பூர்வமாக  விளக்கித்  தெரிவித்தாலும்      மேற்கு நாட்டினர்    உடனே     ‘காவியுடைக் கொந்தளிப்பு’,   ’ஹிந்து  தேசியவாதம்’ ’ஹிந்துத்வா’    போன்ற    வசதியான    முத்ரைகளைக்   குத்தி   ஓரங்கட்ட முயல்வதைக்   கடுமையாக  எதிர்த்தார்   சக்ரவர்த்தி.     ’ஹிந்துக்களின் பழமைவாதம்’    என்று நீங்கள் இந்த    மனப்பான்மையைக் கருதுவீர்களேயானால்     அமெரிக்க   நாட்டில்   மக்களிடையில் எத்தகைய பழமைவாத  மனப்பான்மை   தங்கள்   பண்பாட்டைப்  பற்றிய    விஷயத்தில் இருக்கிறதோ  அத்தகைய பழமைவாதத்திற்கு     ஒப்பாக     வைத்துத்தான் ஹிந்துக்களின்    வாதத்தை  நோக்கவேண்டும்   என்று   வாதாடினார்.

திரு  சக்ரவர்த்தி   ஒரு  பக்கம்  என்றால்     டேவிட்   ஃப்ரீஹோல்ம் சலுகை,   கிடைக்கும்   சுலபம்,   விளம்பர வீச்சு    இவற்றில் பெருமளவில்     பார   வித்யாசம்    ஹிந்துக்களுக்கும்    ஹிந்துக்களைப் பற்றி ஆய்வோருக்கும் இடையே    இருக்கிறது  என்று  சுட்டிக்காட்டினார். இன்னும் ஒரு    நிதானத் துணிச்சல் குரல் திரு   ராம்தாஸ்  லாம்ப் என்பவருடையது.

If  our   research   does  not  reflect  reality.   then  we  are  out  of touch.  If  our  writings  are  not relevant  to  the people  and traditions  about  whom  we  write,  then  we  also  make   ourselves irrelevant.  (pp327,328)

திரு  ராம்தாஸ்  லாம்பைத்  தொடர்ந்து    பேரா.   ராம்பச்சன்   நம்பிக்கை வழியில்  நிற்கும்     மக்களுக்கும்   தங்கள்    எண்ணங்களையும், உணர்ச்சிகளையும்   வெளிப்படுத்தும்  உரிமை  உண்டு. எனவே    அதற்காக அவர்கள்    தீவிரவாதிகள்   என்று    சாயம்   பூசப்  படுவது  அநியாயம்   என்று குரல்  எழுப்பினார்.

‘அமெரிக்க  ஆய்வு’  அணியின்    உறுப்பினரில்   ஒருவரான    Laurie  Patton என்பவர்    ஆய்வாளர்கள்    தங்கள் அணுகுமுறையை    மறுபரிசீலனை செய்யத்    தொடங்க  வேண்டும்;   சுதந்திரத்திற்கும்,    பாதிப்பதற்கும் வித்யாசம்  இருக்கிறது    என்பதை  உணரவேண்டும்    என்றார்.    திரு சக்ரவர்த்தி    திறந்துவிட்ட  மாற்றுக்கருத்து பூதம்    பால்கோர்ட்ரைட்டை விடுவதாக  இல்லை.    கடைசியாக     கோர்ட்ரைடின்   பேச்சு   சுருதி மாறத்தொடங்கியது.    தாம்   ஆய்வு  செய்த   அந்தக்காலத்தில்   (1980, 1985) இப்பொழுது இருப்பதுபோல்      ஹிந்துக்கள்     மும்முரமாக கலந்துரையாடலில்    கலந்துகொள்ளவில்லை   என்றும்,   தாமே    இப்பொழுது அந்த    ஆய்வைச்  செய்தால்    பல  கவனங்களை   உள்   கொண்டு   செய்யலாகும் என்றும் கூறினார்.

பால்  கோர்ட்ரைட்டைத்  தொடர்ந்து    2003ல்   Eckerd  College  ஐச் சேர்ந்த    Constantine  Rhodes   Bailly  என்பவர் மேற்கத்திய   ஆய்வாளர்கள்    மற்ற     கலாசாரங்களைப்  பற்றி நிகழ்த்தும்     ஆய்வுகளின்    மீநிலைப்  பிரச்சனைகளை     அக்கறையுடன் அணுக  வேண்டும்    என்றார்.

அசோக்  அக்லுஜ்கர்,    சுசில் மிட்டல்    ஆகியோர் மல்ஹோத்ராவிற்குத்  தங்கள்  பாராட்டையும்  தெரிவித்து    பாடத்திட்டத்தில் இணையத்தில் இருக்கும்   மல்ஹோத்ராவின்    கட்டுரைகளையும்    மாணவர்கள் மாற்றுக் கருத்துக்களை   அறிவதற்கு வாய்ப்பாகத்   தரப்போவதாகத்  தெரிவித்தனர்.

ஆக  மொத்தம்     ஹிந்துக்களின்    தரப்பை    அலட்சியப்படுத்துவது  இனி முடியாத    காரியம்  என்பதை     ‘ஆய்வார்கள்’   கூட்டம்    சிறிது  சிறிதாக உணரத் தொடங்கிவிட்டது.      ஆனால்    பால்  கோர்ட்ரைட்டே    அவ்வாறு  கூறினாரே அன்றி,   தம்முடைய    ‘கணேசா’    ஆய்வைப்  பற்றி     விஷால்  அகர்வாலும், கலவை   வெங்கட்டும்     அக்கக்காக    அலசிப்   பொருந்தா     ஆய்வு    என்று எழுதியதை    எந்த   மேடையிலும்   நேர் நின்று     பதில் அளிக்கவில்லை.    தங்களுடைய    எண்ணங்களுக்கும்    செயல்களுக்கும்      எதிர் விளைவே   இருக்காது  என்ற   அதீத    நம்பிக்கை    அவர்களிடத்தில் ஆட்டம் கண்டதுதான்    நல்ல  துவக்கம்.

பேராசிரியர்களும்,    கல்வி நிறுவன  அமைப்பைச்  சேர்ந்தவர்களும் அமெரிக்காவில்    கருத்துகள் தெரிவித்தது போலவே     ஹிந்து    டயஸ்போராவைச் சேர்ந்த   பத்திரிக்கைகளும்  இந்தப்  பிரச்சனையை   நிதானத்துடனும், விவேகத்துடனும் கையாண்டன.   உதாரணமாக     India  Abroad   என்ற பத்திரிக்கையில்  பேரா. திரு ரமேஷ்  ராவ்    பால் கோர்ட்ரைட்டின் ஆய்வு பற்றிக் குறிப்பிடுகையில்,   American  Association  of  University Professors [AAUP]   சுதந்திரமான    விசாரம்   என்பதைப் பற்றிக்   கூறும் கவனமான  கருத்தொன்றை நினைவு படுத்தினார்.   ‘As  scholars   and  educational officers,  they  should  remember  that  the  public  may  judge  their profession  and  their  institution  by  their  utterances.’ (pp 399) எனவேதான்     ஆய்வாளர்கள்   அதுவும் மற்றைய   கலாசாரங்களைப்  பற்றி    அலசும் போது   மிகவும் கவனமாகவும்,  சரியாகவும்,   பண்பாடு  மிக்க  நிதானத்துடனும் அணுகுகின்றோமா   என்பதை  நன்கு  யோசித்துப் பார்க்க  வேண்டும்  என்று எழுதிய திரு  ராவ் ,    கோர்ட்ரைட்  அவ்வாறு     கவனத்துடன் தான்    ‘கணேசா’ வைப்  பற்றி  ஆராய்ந்தாரா    என்று  கேள்வி  எழுப்பினார்.

காலாவதியாகிப் போன    ப்ராய்டியக் கொள்கையைக்  கையாண்டு     ஏன் கணேசாவை  அணுக வேண்டும்?      இந்தக் கேள்விக்கு     பால்    திரு நந்தாவிற்குக் கூறிய அபிப்ராயத்தில்    விடை இருக்கிறது  என்று  சொல்லலாம்.   ‘Courtright  claimed that  he  was  culturally   constrained  to  use Freudian Psychoanalysis,    because  it  was   expected  of  him  by  the  Western academic establishment.'(pp 399)

உளவியலில்    வழக்கொழிந்துபோன    கொள்கையான    ப்ராய்டியத்தைப் புதுப்பித்துக்  கையாளும்    இந்திய  உளவியல்   அறிஞர்களாக    சுதிர் கக்கர் போன்றவர்களை    விமர்சிக்கிறார்     நடைமுறை    சைக்கோ   அனலிஸ்டான   ஆலன் ரோலண்ட்.    விவேகாநந்தர்,  காந்தி,    ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்களை     குருடாகிப்போன   ப்ராய்டியக்  கண்களால்    பார்க்க முயல்கிறார்    சுதிர் கக்கர்   என்றால்     ப்ராய்டியக்  கொள்கைக்கு அப்பாற்பட்டது     ஆன்மிக  அனுபவ நிலைகள்  என்று   சரியான   நிதானம் பேணுகிறார்    ஆலன்  ரோலண்ட்.    அவருடைய   கட்டுரை மிக  முக்கியமானது.   திரு ரமேஷ் ராவின்   முகவுரையோடு   அனுபந்தத்தில்  நூலில்   கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவும்  அதன்   சம்ப்ரதாயங்களும்    என்ற  தலைப்பில்     திரு பாலகங்காதரா      ஜெப்ரி க்ரைபல்லுக்கு     நேரடி  பதிலாக  எழுதியதும், இணையத்தில்    வாதம் நடந்தபோது     இணையத்தின் வழி    படிப்பவரின் பங்களிப்பையும்,  ஊக்கத்தைப் பற்றியும்     Yvette  C  Rosser  என்பவர் எழுதியதும்   அனுபந்தத்தில்  அலங்கரிக்கின்றன.     விரிவான     குறிப்புகள், விவரமான    துணை  நூல்  பட்டியல்,    உதவக் கூடிய   அகர முதலி   பொருள்  பெயர் பக்கச் சுட்டி  இவையெல்லாம்    நூலை    மிக்கப்  பயனுள்ளதாக  ஆக்குகின்றன. சுப்ரியா  ஜோஷியின்  அட்டைப்பட  அமைப்பு    நாகப்  பிணையலை   முன் வைக்கிறது.    காமம், யோகம்,   ஆன்மிக  எழுச்சியைக் குறிக்கும் குண்டலினி   ஆகிய  அனைத்தையும்   உள்ளடக்கிய குறிப்பா    அன்றேல்     நாகர் சிலையை  நினைவு  படுத்துவதன் மூலம்    பொதுஜன   நிலையில்  ஹிந்து   நம்பிக்கை உலகத்தின்     பெருவாரியான  ஒரு  குறியீடா    என்பது     வேறுபட்ட  பார்வைகளை உள்வாங்கும்    அட்டைப்படக் கலையாக  அமைகிறது.

முடிக்குமுன்    சில   கருத்துகள்.    இந்த    Invading  the  Sacred என்பது    ஏதோ  காலக்   குளிகை  போல்  இருக்கிறது.   இதில்  ஊன்றிப் பார்க்கப் பார்க்க    இந்த   இன்வேடிங்    த  சேக்ரட்    முதல்  முறையும்   அன்று, முதல்    விதமும்  அன்று    என்றே   படுகிறது.   அதுவும்   முக்கிய சநாதன    தர்மம்    என்ற     பாட்டையில்    அதற்கு   எதிராகவும், மறுப்பாகவும்,    அழிக்கும்  முயற்சியாகவும்     புறமான    கோட்பாடுகளும், நிறுவனமய     ஆகமங்களும்     தொடுத்த   நேரடி மறைமுக    ஆக்கிரமிப்புகளின்  தடயங்களைச்  சுமந்தபடிதான்     ஹிந்துவின் புராணங்களும்,     தொன்மச்  சித்திரங்களும்      மூளியாக்கப்பட்டோ சிதைந்தோ   கையொடிந்தோ  காலொடிந்தோ    அல்லது    குறைந்த   பட்சம்  தார் பூசப்பட்டோ     காட்சி   அளித்துக்   கொண்டிருக்கிறது.

siva-1மது  கைடபர்கள்    வந்து     தொல்லை   கொடுக்கும்  போதும்    அறிதுயில் உணர    ஹிந்து  கற்றுக்  கொண்டிருக்கின்றான்.      அவன்  மீது வெறுப்பும்,      பகையும்,   அலட்சியமும்,   அழிநோக்கமுமாக மாற்றார்    பண்பாட்டுக்  கடலைச்   சிலுப்புவதில்    எழுந்த விடத்தையும்     கழுத்தில்    நிறுத்திக் கவனமும்  நிதானமும்   பேண ஹிந்து    ஒருவனே    கற்றிருக்கின்றான்.    மாற்றார்    வலி  தொலைந்து  அவன் வாசற்  கண்     ஆற்றாது    வந்து     அடிபணியும்    நாள்    தொலைவில் இல்லை.    மற்றவர்கள்      மற்ற   மனிதரை    செயிக்கக் கற்றிருக்கின்றனர்.     ஹிந்துவோ  அனைவரிடமிருந்தும்     சாரத்தைச் செரிக்கக்   கற்றிருக்கிறான்.   அவன்  மீது    நீங்கள்    வெறுப்பை   உமிழ முடியும்;   அவன்  அதைத்  தாங்குவான்;    ஆனால்    அவ்வாறு  உமிழ்ந்தவர் சருகாக    உதிர்ந்த நடைபாதையாகத்தான்      காட்சியளிக்கிறது    வரலாற்றின் நெடிய  பாதை   காற்றுத் தேவன்  வந்து அவற்றைக்  கூட்டி  எரிக்கும்  வரை.

ஏன்    ஸ்ரீராமகிருஷ்ணரை    முக்கியமாகத்    தாக்கிலக்காகக்   கொள்கின்றனர் இந்த     நவீன    சும்ப நிசும்பர்கள்?     —   இந்தக்  கேள்விக்கு     நாம் விடை  கண்டோமெனில்     ஒரு   பெரும்    கால  மூடமான சதியின்   திறவுகோலைக் கைப்பற்றி  விட்டோம்  என்று  பொருள்.    இதைப்  புரிந்து  கொள்ள     நாம் ஒரு கணம்    ஸ்ரீராமகிருஷ்ணர்     என்று  ஒருவர்    தோன்றவில்லை  என்று வைத்துக்கொள்வோம்.   அப்பொழுது நிலைமை  என்ன?      வைஷ்ணவம்,    சைவம், சாக்தம்,      சமணம்,   பௌத்தம்,  இவற்றோடு    தொடர்பு   கொண்டோ   தொடர்பு இன்றியோ      கிராம    தேவதை  வழிபாடு.     ஏதோ   ஒரு  மரபில்    ஹிந்து பிறப்பான்.     வைணவத்தில்     பிறந்தால்    முழுக்க    முழுக்க வைணவ    ஆசாரியர்கள்    காட்டிய   வழியும்,    நெறியுமே     மார்க்கம். வைணவத்திற்குள்  இருந்தபடிதான்    மற்றவற்றைக்  காண்பான்.     அதே  போல் சைவத்தில்   பிறந்தால்    முழுக்க  முழுக்கச்   சைவன்.    மற்ற வழிபாடுகள்    சைவம்    வகைப்படுத்தும்  அகப்புறம்,  புறம்,   புறப்புறம் சார்ந்த    முழுமையற்ற,  சிறுதெய்வ        வழிபாடுகள்   அவ்வளவே. சாக்தத்தில்    நின்றால்   மும்மூர்த்திகளும்   கூட    சக்தியின் பிராகார  தேவதைகளாய்     ஆதிசக்தியை   அண்டிப்   பிழைப்போரே.   இவர்கள் அனைவரையும்     இணைப்பது   வேதம்  ஒன்றே.     இதுவே    சமணர்,   பௌத்தர் என்று   வந்தால்     வேதமே    சம்மதம்  இல்லை.    பின்  என்ன    பொதுவான இணைப்பு?    ஜின  ஆகமமும்,    புத்தாகமமும்     அவரவரை   இணைக்கும்   ஒன்றாய் இருப்பது.

வைதிக    அடிப்படையில்    இருக்கும்    மதங்களில்  ஒன்றான     வைணவத்தில் ஒருவர்   பிறந்தால்     அவர்  தம்    மரபு  ரீதியான    வழிபாட்டில் சிறந்து   தோய்ந்து,  பின்    சைவமோ,   சாக்தமோ   என்ன    உலகத்தைக் காட்டுகிறது  என்று   பார்க்கப்   புகுந்தால்   ஒன்று   அவர்    பூர்வ பக்ஷமாக  அதைப்  பார்க்க  நேரிடும்.   அல்லது அந்த நெறியிலேயே   ஆழ்ந்து   நேரடியாகப்  போனால்    அவர்    தம் நெறியில்  தவறியவர்  ஆகிவிடுவார்.  ஏனெனில்    பல  நெறிகளில்     சென்று காணல்  என்பது    பண்டைய    சான்றோர்    செய்தது   கிடையாது.   மற்ற வழிபாடுகளில்   எல்லாம்  இருந்து     பின்   திருந்தியவர்கள் உண்டு.   ஆனால்    ஒரே  இலக்கை நோக்கித்தான்     அத்தனை  மார்க்கங்களும் செல்கின்றன   என்று     தோய்ந்து    அவ்வவற்றிடையே  ஒன்றிச் சொன்னவர்கள் இல்லை.   ஆனாலும்    ‘வணங்கும்  துறைகள்  பலப்பலவாக்கி’  என்றும்,    ஆகாசாத் பதிதம் தோயம்    யதா  கச்சதி  சாகரம்    என்றும்    ஒவ்வொரு  விதத்தில் இந்தப்  பலவழி  ஓரிலக்கு    என்ற   கருத்தைக்   கோடிகாட்டாமலும் இல்லை.    ஆகமங்கள்    சிறக்க  ஆரம்பித்த    காலங்களிலிருந்து    இந்தப்
பல்சமய   சௌக்கியத்திற்குள்    பேணப்படும்    பாரமார்த்திக    தத்வம் ஹிந்துவின்  மனத்தில்    திரண்டு கொண்டேதான்    வந்திருக்கிறது.    பல விதங்களிலும்   அவன்   இதை   வெளிப்படுத்தியதும்  உண்டு.   எனவேதான் ‘அவரவர்    இறையவர்    குறைவிலர்  இறையவர்’   என்றும்,   ’அவரவர்   விதிவழி அடைய நின்றனர்’    என்றும்  அவனால்    பேச  முடிந்திருக்கிறது. இருந்தாலும்    படித்தரமாக்கி   அதில்   வந்து  வந்து     பின்     உயர்ந்த உண்மைச்    சமயத்திற்கு    வரவேண்டும்    என்பதுதான்    அதுவரை  இருந்த நிலை.

Ramakrishna Paramahansa
Ramakrishna Paramahansa

அதாவது    ஒவ்வொரு  ஹிந்துவுக்கும்   இருப்பதான     concentric    identity என்பதில்    மரபு  ரீதியான விஷ்ணு மத,  சிவ  மத,  சக்தி மத அடையாளமான     தனித்தனி   நெறியின்  identity  தான்    முன்னில் நிற்கிறது.    அனைத்து  நெறிகளின்  உள்ளும்    கலந்து    அனைத்திற்கும் இலக்காகித்  திகழும்   பாரமார்த்திக    சத்யத்தை   முழுமையாக     ஏற்று நிற்கும்   ஹிந்து    என்ற    சர்வதோமுகமான    identity பின்னுக்குத்    தள்ளப்  பட்டு  விடுகிறது.    சரியாகப்  புரிந்து கொள்ளப்படாமல்   பரம ஐகாந்திகத்திற்கான    பங்கமாகக்   கருதப்பட்டு விடுகிறது.     காரணம்   அவனுக்கு     அந்தப்   பரந்த     பார்வையை முனிவரர்  யாரேனும்  வந்து     அனுஷ்டானம்  செய்து   காண்பித்துச் சான்றாண்மை       வழங்க  வேண்டியிருக்கிறது.     அத்தகைய    ஒரு சான்றாண்மைதான்     ஹிந்து   என்ற    concentric  identity என்பதற்கு     ஸ்ரீராமகிருஷ்ணர்   தந்தது தம்முடைய      சாதனை    முகங்களாலும்,     ஞானப்    பிரபாவத்தாலும். அவருடைய     தெளிவாக்கத்திற்கு   பின்னர்     ஒரு  ஹிந்துவால்     மரபு ரீதியான    கடுஞ்  சைவனாகவும்   இருக்க  முடியும்.     அதே   நேரத்தில் அனைத்து   மரபுகளினுள்ளும்     தோய்ந்து வலம்  வரும்      ஹிந்துவாகவும் இருந்துவிட  முடியும்.  அதே  போல்தான்     வைணவனாக    இருப்பதிலும். ஹிந்து  மதம்   என்பதற்கான     தெளிவான    புரிதலும்,   ஆவணமும் அவனுக்கு    அளிக்கப்பட்டது     ஸ்ரீராமகிருஷ்ணராலும்,   அவருடைய      ஞான அதரங்களான     விவேகாநந்தராலும்.    அவர்களுடைய    கண்கள்   ஸ்ரீராமகிருஷ்ணரை நோக்கி    இருக்கும்  வரை     ஹிந்துக்கள்     மேலும் மேலும்    தெளிவையும்,    வலிமையையும்,    தம்முள்    ஒற்றுமையையும், உணர்வு  ரீதியான  ஒன்றிப்பையும்      நோக்கிப்   போய்க்கொண்டே இருப்பார்கள்.     ஹிந்துவினுடைய    வளர்ச்சி   விச்வரூபமாக   ஆகிக்கொண்டே இருக்கும்.     அதை  எப்படி   பார்த்துக்கொண்டு  சும்மா இருப்பது?    ஹிந்து   தன்னுடைய   அடிமனத்தில்     யாரை   வைத்துத்   தன் வழியை    ஒப்பு    நோக்கிக்  கொண்டிருக்கின்றானோ
அந்த     ஸ்ரீராமகிருஷ்ணரையும்,     விவேகாநந்தரையும் அவநம்பிக்கைக்குரியவர்களாக   ஆக்கிவிட்டால்     பின்     தம்முள் பிணங்கும்    பழைய    சமய  நெறிகள்தான்    மிஞ்சும்.    ஹிந்து    என்ற பிரதான     identity  ஐக்  கேள்விக்குரியதாக    ஆக்கிவிடலாம்.      இந்த உள்கருத்து   ஓடியிருப்பதால்தான்     தேடித்தேடி ஸ்ரீராமகிருஷ்ணரை     ’ஆய்வுக்கு’    இலக்காக்கி  இருக்கின்றனர் ‘புத்திசாலிகள்’.

விழித்தெழும்   ஹிந்துவுக்கு    அரைத்துக்கத்தில்   திரும்பின    இடத்தில் எல்லாம்    முட்டிக்கொள்ள   வேண்டியிருக்கிறது.   அவன்     தன்னுடைய ஸ்வாதீனமான    ஆன்மிகச்  சிறப்பை   உணரத்தொடங்கினால்     உடனே அறிவு,   ஆய்வு,    அறிவியல்  என்பது     எல்லாம்    ஏதோ    மேற்கத்திய சூழ்ச்சிகள்   போல்     அவனுக்கு    சித்திரித்துக்  காட்டப்படுகின்றன. அதையெல்லாம்  தூர  எறிந்துவிட்டு  அவன்   பண்டைய  முனிவரர் போல்    ஞான  திருஷ்டியிலேயே    அனைத்தையும்     தெரிந்துகொள்ளும் பௌராணிக     சித்திரத்துள்    அடைக்கப்  படுகிறான்.     சாஸ்திரங்களைப் பற்றிய    பூரண  ஞானம்     அவனுக்கு    வழிகாட்ட முனைவோரிடம்  இல்லை. பாதி   பகவத்  கீதை,   பாதி  ஸ்லோகங்கள்,       மீதி    பிரதேச   மொழியில் எழுதியுள்ள   அருளாளர்களின்   பனுவல்கள்   இப்படித்தான்    அவனுடைய மேற்கோள்    சுருக்குப்பை   நிரம்பிக்கிடக்கிறது.   பண்டைய   குருகுலங்களில் கற்ற   முறையிலும்,      ஸ்ரீவைஷ்ணவ     ஆசாரியர்கள் காலத்தில்    கற்ற கிரந்த காலக்ஷேப   முறையிலும்,     சைவ  சித்தாந்த    ஆதீனங்களில்     பாடம் சொன்ன முறையிலும்      அகல  ஆழமாக  நெடுகக்    கற்ற    கலங்கரை விளக்கங்கள்     ஹிந்துவுக்கு    இன்றைய   தேவை.    அது  மட்டுமன்று ஹிந்துவினுடைய     சாஸ்திரங்களே     அவனுடைய  வேதாந்தமே     விடாப்பிடியான அறிவு  நெறிக்  கோட்பாட்டுகளினால்    ஆக்கப்  பட்டவை    என்று  அவனுக்கு யாரேனும்  கஷ்டப்  பட்டுப்  புரிய  வைக்க  வேண்டும்.    இல்லையேல்     அறிவு நெறி  என்பதெல்லாம்    மேற்குலக மாயை   என்று  அவனை  மயக்கி     வழிதப்பச் செய்ய,   அவனுக்குள்ளும்     வெளியேயும்   ஆள்  இருக்கிறது. சாங்க்ய  தத்வமும்,    நியாயம்,   நவ்ய  நியாயமும்,    வைசேஷிகமும், நுட்பமான    வியாகரண,    மீமாம்ஸா தத்துவங்களும்,  படிப்புகளும் அவனுடைய     மதங்களைத்   தாங்கி  நிற்கும்      அஸ்திவாரங்கள்     என்பது அவனுக்குப்  போகப்  போகத்தான்   புரியவரும்.     அதுவரையில்   ஹிந்துவின் புலரி  விழிப்பைப்   பொன்றாமல்    காக்க     விவேகம்   மிக்க வீரர்களின்    திருக்கூட்டம்  வேண்டும்.     அதை  நோக்கி     இந்த   நூல் எழுப்பிய    விழிப்பு    பயன்படுவதாகுக     என்பதே    என்    பிரார்த்தனை.

‘கலியும்  கெடும்  கண்டு  கொண்மின்!’

முற்றும்.

8 Replies to “Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)”

  1. Wonderful analysis Sri Mohanarangan.
    It can be understood clearly why Ramakrishna’s avtar was so important for us-he came just as Sri Sankara [ Shanmatah sthapana-integration] or Sri Ramanuja [ ananya bhakthi ] came at the right time.
    btw, Ariyalal Deviyillai is a pasuram by whom?I have been wondering since long.
    The ordinary Hindu , who isnt a bigot knows the Tatva behind it-the active component and passive component combination-the active Mayavi /Maya and the Yogi in combination.
    A worshipper of Hariharasuthan knows that the dear young boy who sits at Sabarimala is the combined form of Shiva and Vishnu .
    Whatever one worships,the Yogi or the enchanting Mayavan -a true bhakthiman as you rightly point out cant be a bigot.One who is that aand also thinks wife is somehow inferior to husband may have asked that question.

  2. மோகன ரங்கன் அவர்களே

    மிக அற்புதமான கட்டுரை அதிலும் ராமகிருஷ்ணரின் பங்கினை பற்றி நீங்கள் கூறியது மிக மிக அருமை

    // ஆனால் இவை அத்தனைக்கும் காரணம் அவர்கள்தாமா? முழுப்பழியும் அவர்களின் வாசலில்தான் விழுகிறதா?

    நாம் விட முயற்சிக்கு கஜினி முஹமேதிவை அல்லவே மேற்கோள் காட்ட பழகிவிட்டோம் – பதினெட்டு முறை படை எடுத்து அந்த சண்டாளன் செய்தது அதனையும் அட்டூழியமே

    ஆனால் அதே பதினெட்டு முறை ராமானுஜர் திருகொஷ்டியூருக்கும் திருவரங்கதிருக்கும் நடையாய் நடந்து ஒரு மாதம் உணவின்றி விரதம் இருந்து திருமந்த்ரார்ததை கற்று கற்றதின் பயனை மற்றவர்க்கு அளித்ததை பற்றியா படிக்கிறோம்

  3. சனாதன தர்மம் நம்முடயது என்ற வரிகள் கீழ்காணும் வீடியோவை நியாகப்படுத்தியது. நம்முடயது மட்டுமல்ல எல்லோருடயதும்தான்.
    https://www.youtube.com/watch?v=FCA2yH7Wz8M

  4. கருத்துகள் இட்ட அனைவர்க்கும், தெரிவிக்காது மனத்தால் பாராட்டிய பலர்க்கும் நன்றி. அதை விட இந்த விழிப்புணர்ச்சியை விவேகத்தோடும், எதிர்கால தர்சனத்தோடும், ஆழ்ந்த தன்னம்பிக்கையோடும் ஒவ்வொருவரும் தம் தம் அளவில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கு ஹிந்துமதம் என்பதைப் பற்றி ஆழ அகலமாகப் பலர் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைகளுக்கு ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட ஆக்க பூர்வமான, சான்றாண்மை மிக்க புரிந்துகொள்ளலை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஒரு சிறு தொடக்கமாக இருக்கட்டுமே என்று மின் தமிழ் குழுமத்தில் ‘பாரெல்லாம் புகழ் பரவும் ஹிந்து மதம்’ என்ற இழை தொடங்கியிருக்கிறேன். அவ்வப்பொழுது பல காலங்களில் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ அறிஞர்கள், கலைஞர்கள், வியாபார விற்பன்னர்கள் உலகம் முழுக்க ஹிந்து மதத்தைப் பற்றி என்னெவெல்லாம் பாராட்டிக் கூறியிருக்கிறார்கள் என்று சின்ன சின்னத் திவலைகளாகப் பார்க்கலாமே என்ற விதத்தில் இழை ஓடுகிறது. நீங்களும் அவ்வப்பொழுது கண்டு களிக்கலாம். இங்கு https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/8852b08eb5758213#

  5. வணக்கம்

    /////சாஸ்திரங்களைப் பற்றிய பூரண ஞானம் அவனுக்கு வழிகாட்ட முனைவோரிடம் இல்லை. பாதி பகவத் கீதை, பாதி ஸ்லோகங்கள், மீதி பிரதேச மொழியில் எழுதியுள்ள அருளாளர்களின் பனுவல்கள் இப்படித்தான் அவனுடைய மேற்கோள் சுருக்குப்பை நிரம்பிக்கிடக்கிறது. பண்டைய குருகுலங்களில் கற்ற முறையிலும், ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் காலத்தில் கற்ற கிரந்த காலக்ஷேப முறையிலும், சைவ சித்தாந்த ஆதீனங்களில் பாடம் சொன்ன முறையிலும் அகல ஆழமாக நெடுகக் கற்ற கலங்கரை விளக்கங்கள் ஹிந்துவுக்கு இன்றைய தேவை. அது மட்டுமன்று ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது.////

    நியாயமான வார்த்தைகள்.

  6. சமயம் மற்றும் இதரபண்பாட்டுக்களுக்கான வளர்ச்சி போக்கினை இந்துமதம் என்ற கற்பிதம் பற்றியும் சிறப்பாக காலசுவட்டில் இவருடைய எழுத்தினை தொகுத்தில் மூலம் தெரிந்தது சிறப்பக வரப்பெற்றது செழுமைபடுத்திய முழுமையன படைப்பாக வெளிவரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *