வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

வங்கத்தில் – 130 வருடங்களுக்கு முன்

wilkins_book_imageவீன இந்துத்துவம் என்பது புத்தகத்தின் பெயர். எழுதியது டபிள்யு. ஜே. வில்கின்ஸ்  (Modern Hinduism by W. J. Wilkins). எழுதிய, புத்தகம் வெளிவந்த வருடம் 1887. ஆக, 130 வருடங்களுக்கு முன், ஒரு ஆங்கிலேயர் தாம் வங்கத்தில் கண்ட இந்துத்வத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்துத்வம் என்னவோ மிக மிகப் பழமையானது. இந்துத்வத்தின் தொடக்க கால நம்பிக்கைகளும் வாழ்க்கை முறையும் காலப் போக்கில் மாறிக்கொண்டு தான் வரும். ஆக, வில்கின்ஸ் 130 வருடங்களுக்கு முன் தான் கண்ட இந்துத்வத்தின் மாற்றங்களை அதன் நவீனமாக கண்டு எழுதியிருக்கிறார். அன்று அவர் கண்ட நவீன இந்துத்வம் இன்றைய இந்துத்வ நம்பிக்கை களுக்கும் நடைமுறைகளுக்கும் வெகுவாக மாறியிருக்கும் தான். அது பழமையான இந்துத்வம் தான். ஆனாலும், மாறாது காலம் தோறும் தொடரும்  நம்பிக்கைகளும் தத்வார்த்த தரிசனங்களும் உண்டு தானே. இதெல்லாம் போக, இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். வில்கின்ஸ் அறிந்த இந்துத்வம், அதன் எல்லா தோற்றங்களும், நம்பிக்கைகளும், பின்னிருந்து வழிகாட்டும் தத்துவங்களும் அவர் காலத்திய வங்காள இந்துக்களை மட்டுமே சார்ந்ததாகும். எனவே, நவீன இந்துத்வம் என்பதை விட இப்புத்தகத்தை இன்று படிக்கும் நாம், 19-ம் நூற்றாண்டின் கடைசி பத்திருபது ஆண்டுகளில் காணப்பட்ட  வங்க இந்து மக்களின் இந்துத்வ நம்பிகைகளும், வாழ்க்கையும் என்று நாம் புரிந்து கொள்வது நல்லது. இப்புத்தகத்தில் காண்பவை, வில்கின்ஸ் எழுதிய காலத்திலும் கூட, வங்கத்தை மாத்திரமே எல்லையிட்டுக்கொண்டவை. இப்புத்தகத்தில் நவீன இந்துத்வம் என்று அவர் காணபவை நிறைய இன்றைய வங்க மக்களுக்கே கூட பழம் சரித்திரமாகிப் போனவை. இன்றைய தலைமுறை வங்காளிகள், வில்கின்ஸ் சொல்லும் பலவற்றைக் கேட்டு ஆச்சரியப் படக்கூடும். நம்ப மறுக்கவும் கூடும். இன்னும் சிலவற்றை, இன்றைய நடைமுறை பலவற்றின் நேற்றைய ரூபங்களாக இனம் காணவும் கூடும்.

ஆக, 19-ம் நூற்றாண்டு கடைசி பத்திருபது வருடங்ககளில் வங்காளத்தில் காணப்பட்ட இந்து மத நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் படிப்பது அப்படி ஒன்றும் கடந்துவிட்ட ஒன்றை, இன்றைக்கு நமக்கு உபயோகமற்றைப் படித்தறிந்து கொள்ளும் காரியமாகாது. இதை ஒரு சரித்திர ஆவணமாக, ஒரு  வெள்ளைக்கார கிறிஸ்துவனின் ஒதுங்கிய பார்வையில், எழுதப்பட்ட ஒரு ஆவணமாகக் கொள்வதில் தவறில்லை. அத்தோடு, வங்காள எல்லைக்குள் சிறைப்பட்ட ஒரு ஆவணமாகவே இருக்கட்டும், அதை இன்று வங்காளிகள் மட்டுமல்ல, நமக்கும் கூட, ஹிந்து மதம் அதன் மாறா தத்துவார்த்த அடிப்படைகளில் இந்திய துணைக்கண்டம் முழுதும் நாம் எல்லோரும் ஸ்வீகரித்துக்குக் கொண்ட ஒன்றேயாக இருப்பதையும், அதே சமயம் அதன் அடுத்தடுத்த படி நிலைகளில், நம்பிக்கைகளில், வாழ்முறைகளில், இந்து மதம் எவ்வாறு தன்னை புணரமைத்துக் கொள்கிறது, காலத்துக்கு ஒவ்வாதவற்றை தன் சுய விமரிசனத்தின் மூலமே ஒதுக்கித் தள்ளிவிட்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது என்பதையும் இந்த ஆவணம் சாட்சிப்படுத்துகிறது. அந்த சுய விமரிசனமும், புணரமப்பும் எழுவது ஹிந்துமதத்தின் வெளியிலிருந்து வருவதல்ல, ஹிந்து மதத்தில் பிறந்த சிந்தனையாளர்களும், தீர்க்க தரிசிகளும் அதற்குக் காரணமாகிறார்கள் என்பதும் தெளிவாகும்.

வில்கின்ஸ் தான் பார்த்த ஹிந்துத்வத்தை விளக்க எடுத்துக்கொண்ட தூரிகை மிக விரிவானது, அகண்டது. இந்து மதத்தின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது. வாழ்க்கையும் வழிபாடும், நல்லொழுக்க நெறிகள், பெண்கள் நிலை, சாதி, இந்து மதத்தின் உட்பிரிவுகள், மரணம், சிரார்த்தம் என அவை விரியும். தத்துவார்த்த அடிப்படைகள், நம்பிக்கைகள், பின் அது சார்ந்த வாழ்க்கை முறை, என பிறப்பிலிருந்து மரணம் வரை இந்து மத நம்பிக்கைகளையும், அவை அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வழிப்படுத்துகின்றன என்பதையும் விவரிக்கிறார். மேலும் தன் முன்னுரையில் ஒரு போதகராக அல்லாது, தான் பார்த்த நிகழ்ச்சிகளை தொகுத்து அளிப்பவராகவே தான் செயல்பட்டுள்ளதாகவும் சொல்கிறார். போதகர் என்று தமிழில் படிக்கும்போது வில்கின்ஸ் ஆங்கிலத்தில் தன்னை கிறித்துவ மத போதகர் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறாரா அல்லது தான் ஏற்பதும் ஏற்காததுமான  அபிப்ராயங்களை ஒதுக்கியுள்ளதைத் தான் அப்படிச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் புத்தகம் முழுவதிலும் பெரும்மாலும் ஒரு பார்வையாளராகத் தான் தெரிகிறார்.

கருவுற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் பொதுவாக 13 வயதினளாக இருப்பாள். ஒரு சிகப்புக் கரையிட்ட புடவை அணிந்திருப்பாள். பொதுவாக கருவுற்றிருக்கும் பெண் வீட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு தனி குடிசையில் மிகுந்த கட்டுப்பாட்டுக்களிடையே தான் வாழ்கிறாள். பிள்ளைப் பேற்றில் இறந்துவிடும் இந்துப் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவள் பெரும் அச்சத்தில் தான் வாழ்கிறாள். குழந்தை பிறக்கப் போகும் நாளுக்கு முதல் நாள் ஒரு பெரும் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. (அதில் ஆபாச நடனங்கள் இடம் பெற்று வந்ததாகவும் அது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் வில்கின்ஸ் குறிப்பிடுகிறார்) அப்போது விருந்தினர் கூட்டம் நிறைந்து வழியும். கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு விருந்தினர் பரிசுகள் வழங்குவார்கள். விருந்தினரை அழைத்து வரவும் பின் அவர்கள் வீடு திரும்பவும் பல்லக்குகள் நிறைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். (1880 களில் வங்காளத்தில் பல்லக்குகள் தான் ஒரே போக்கு வரத்து சாதனம்) குழந்தை பிறந்த நான்காவது நாளோ என்னவோ இரவில் விதாதா (பிரம்மா) அந்த அறையில் நுழைந்து குழந்தையின் விதியை எழுதிச்செல்வதாக ஐதீகம். விதாதாவை வரவேற்க என்றே வழி பாடுகள் பூஜைகள் நடந்தேறும்.

பிறந்துள்ளது ஆண் குழந்தையாயின் ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண் குழந்தையாயின் மூன்று வாரங்களுக்குப் பிறகு, தாயின் தலை சுத்தப்படுத்தப்பட்டு நன்கு சீவி வாரி, படுத்த படுக்கையோடேயே பல்லக்கில் வைக்கப்பட்டு பக்கத்தில் இருக்கும் ஆற்றுக்கு (அது எத்தனை தூரமாயினும்) எடுத்துச் செல்லப்படுவாள். பல்லக்குத் தூக்கிகள் அவளை பல்லக்கோடு ஆற்றில் இறங்குவார்கள். பல்லக்கோடு உள்ளே இருக்கும் தாயும் ஆற்றில் முழுதுமாக மூழ்கி நனைந்து பிறகு, நனைந்த உடையோடேயே அவள் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அன்று அவள் தூய்மையாகிவிட்டாள். பெண் கர்ப்பமாகியதும் அவளை ஒரு தனி குடிசையில் அல்லது அறையில் தான் இருக்க வைப்பார்கள். ஒரு நாவிதனின் மனைவி தான் அவளுக்குத் துணையிருப்பாள். அவளுக்கு வேண்டிய சிசுரூஷைகளைச் செய்வாள். வெப்பம் மிகுந்த காலத்திலும் அத்தனி அறையை விட்டு அவள் வெளியே வரமுடியாது. தூய்மைப்படுத்தப்படும் வரையில்.

இன்றும் தமிழ் நாட்டில் கிராமங்களில் கர்ப்பவதி தனிமைப் படுத்தப் பட்டவள் தான். தனி உணவு தான். குடும்பத்தோடு புழங்க இயலாது தான். பழங்காலத்து வங்கத்தில் நடைமுறையில் இருந்த கொடுமை இப்போது அங்கும் இராது தான். நம்மூரிலேயே கூட, பழங்காலத்தில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரணமாக கிராமங்களில் நாவிதன் மருத்துவனாகவும் செயல்பட்டதாகச் சொல்வார்கள். அது எப்படி, ஏன் என்று தெரியவில்லை. நம்மூரில் வழங்கிய மறந்துவிட்ட இப்பழம் செய்தி, இங்கு 130 வருடங்களுக்கு முன் வங்கத்தில் கர்ப்பவதிக்கு துணையாகவும் மருத்துவச்சியாகவும் இருந்தது நாவிதன்   வீட்டுப் பெண் என்று படித்ததும், நினைவுக்கு வந்தது.

நிலம் சார்ந்து வாழ்ந்த மக்களிடையே என்றும் எங்கும் நிலவியது போல, வங்கத்தில் அக்காலத் தில் கூட்டுக் குடும்பமாகவிருந்த காரணத்தால், குடும்பத்தில் மூத்தவர் தான் குடும்பத்தலைவராகவிருந்தார்.  ஊருக்குப் பொதுவாகவிருந்த கோவில்கள் தவிர வீடுகளிலும் ஒரு அறை கோவிலாக வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. இதுவும் பொதுவான விஷயமே. வசதி உள்ளவர் வீடுகளில் பூஜைக்கு என்று ஒரு அறை இல்லாவிட்டாலும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

வங்கம் முழுதுமே அனேகமாக சக்தி வழிபாட்டைக் கொண்ட நாடுதான். துர்க்கைதான் எங்கும் காணப்படும் தெய்வம். துர்க்கை கோர வடிவினள். தாய்த் தெய்வம். காளி, மாரியம்மன், திரௌபதி என்று எந்தப் பெயரில் வழங்கினாலும் பலி வேண்டும் தெய்வம். தமிழ் நாட்டில் காளிகோயில் ஊருக்கு வெளியேதான் காணப்படும். விழாக்காலங்களில் கோழி, ஆடு என பலிகள் நடக்கும். கல்கத்தாவில் உள்ள காளி கோயிலில், ஊருக்குள்ளே காணப்படும் பிரதானமான அக்கோயிலில் இன்றும் ஆடுகள் பலிகொடுக்கப் படுவதையும், இரத்தம் சிறு வாய்க்கால்களாக ஓடுவதையும், ஆங்காங்கே கசிந்து கிடப்பதையும் காணலாம். ஆனால், வில்கின்ஸ் தான் கண்ட 1880 வங்கத்தில் இன்று படிக்கும்போதே இரத்தம் உறைய வைக்கும் செய்தியை வெகு சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார். இந்தச் செய்தி இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் திரும்பச் சொல்லப்படுகிறது. வழிபாட்டு முறைகளைப் பற்றிச் சொல்லும்போது,

Kalighat Temple, 1887
Kalighat Temple, 1887

பலிதானா: இது பலியிடுதல் ஆகும். பலியிடப்படுவது ஒரு குழந்தையாகவோ, ஆடாகவோ, எருமையாகவோ இருக்கக்கூடும்.”(ப.63) (கவனிக்கவும். பலியில் பசு சொல்லப்படவில்லை. ஆனால் குழந்தை?பசுவுக்குக் கிடைத்த தெய்வீகம் குழந்தைக்கு இல்லை போலும்!)

என்று சொல்கிறார் என்றால் அவருடைய காலத்திலும் இது சகஜமாக நடக்கும் ஒன்றாகவே தொனிக்கிறது. 1880 என்பது ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்தக் குரலும் இயக்கமும், பிரம்ம சமாஜமும் தோன்றிய அறுபது வருடங்கள் ஆகிவிட்ட காலம். பிரிட்டீஷ் ஆடி வலுவாக நிலைபெற்று விட்ட காலம். இந்தியன் பினல் கோட் அமலாக்கப்பட்டு விட்ட காலம். வெகு சாதாரணமாக பலியிடப்படுவது குழந்தையாகவோ.. இருக்கலாம் என்று சொல்கிறார். இரத்தத்தையும் பலிகளையும் வெறுத்து ஒதுக்கிய வைஷ்ணவ மதம், சாக்த மதத்திற்கு அடுத்தபடியாக செல்வாக்கு பெற்று விட்ட காலம். சைதன்ய மகாப்பிரபு தன் கிருஷ்ணபக்தியை ஊர் ஊராகப் பாடிச்சென்று  நூற்றாண்டுகள் பலவாகிவிட்ட காலம்.

இன்னொரு இடத்தில், இன்னம் விரிவாக கல்கத்தா காளி கோயில் வழிபாட்டைப் பற்றிச் சொல்கிறார்: “அவர்கள்(பக்தர்கள்) காளி கோயிலுக்கு வரும் முக்கிய காரணம், ஒரு குழந்தையையோ, எருமையையோ பலி கொடுப்பதற்காகத் தான். தங்களுக்கு ஆண்குழந்தை வேண்டும் என்பவர்களின் விருப்பம் நிறைவேறினால், ஒரு குழந்தையையோ, எருமையையோ காணிக்கையாக பலியிடுகிறார்கள்…..பலியிடப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு பென்ஸ் காணிக்கையாக வசூலிக்கப்படுகிறது..சில நாட்களில் பலியிடப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் வரை உள்ளது.”(ப.98)

வில்கின்ஸ் இன்னொரு இடத்தில் ஒரு வெளிநாட்டவராக, கிறித்துவராக, இந்துக்களின் ஒரு பொது குணத்தைப் பற்றி சொல்கிறார்: “இந்துக்களின் மற்றொரு நல்ல குணம், தங்கள் குழந்தைகளின்   மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் செய்யும் தியாகமும் ஆகும். …..தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தன்னலம் மறுப்பதிலும் ஏழைகளுக்கு அறம் செய்வதிலும் இந்தியர்களுக்கு இணையானவர்கள் இல்லை.”(ப.160). இந்த இனம் எப்படி குழந்தைகளைப் பலியாக்குவதை தெய்வ வழிபாடாகக் கொள்கிறது என்று அவருக்கு திகைப்பும் வருவதில்லை. இதை எப்படி அரசும் சமூகமும் அனுமதிக்கிறது என்றும் அவர் தன்னை ஒரு கேள்வி கேட்டுக்கொள்வதில்லை. பிரிட்டீஷ் அரசாங்கம் உடன் கட்டை ஏறுவதை ஐம்பது வருடங்களுக்கு முன்பே, 1830-லேயே தடை செய்துவிட்டது. அந்த அரசும் சட்டமும் குழந்தை பலியை அனுமதிக்குமா? குழந்தைகளை பலி கொடுக்கும் வெகு அபூர்வ நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன தான். இந்தியாவில் எங்கும். ஆனால், அவை வெகு ரகசியமாக, பூசாரிகளும் தாந்திரீகளும் தூண்டி ஆசை காட்ட நடக்கும். ஒரு சமூகம் தழுவிய  தெய்வ வழிபாட்டு முறையாக அல்ல. அவர்கள் செய்தது சிசுவதை. வழிபாடு என்று எந்த ஹிந்துவும் சொல்ல மாட்டான். மாறாக, அவர்கள் மனிதர்களாக அல்ல, மிருகங்களாகத் தான் இச்செய்தி கேட்கும் எவராலும் பார்க்கப் படுவார்கள்.

ஒரு வேளை பலி என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதோ, ஒரு வேளை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதோ? காலைச் சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரம் உண்ணா நிலை நோன்பு என்று கொள்ளப்பட்டது போல, ஒரு உயர்வு நவிற்சியாக இருக்குமோ. குழந்தைகள் பலி எப்படி இவ்வளவு வெகு சாதாரணமாக பேசப்படுகிறது? வங்க மக்கள் என்ன ஒரு காலத்திய ஆப்பிரிக்க நரபலி இனத்தின் வாரிசுகளா? எங்கு தவறு நேர்ந்துள்ளது?

வங்கத்தில் அவர் காலத்தில் கண்ட கிரதிகள் என்னும் பிரிவினர் செய்த காபாலிகா வழிபாட்டைப் பற்றிச் சொல்கிறார் வில்கின்ஸ். “தங்களைக் கத்தியால் வெட்டிக்கொள்கிறார்கள். நாக்கிலும் கன்னத்திலும் அலகுகளால் குத்திக்கொள்கிறார்கள். சட்டம் அனுமதிக்குமேயானால் தங்கள் உடம்பில் கொக்கிகளைப் பொருத்தி கயிற்றின் உதவியால் மூங்கிலோடு பிணைத்து ஊஞ்சலாடுகிறார்கள். அரசாங்கம் குறுக்கிடுவதற்கு முன் இத்தகைய கொடுமையான சடங்குகள் நடத்தப்பட்டு பலர் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். இது ஏதோ லாபம் கருதியே தவிர பக்தியால் அல்ல என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.இச்சடங்குகளைச் செய்பவர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி போதியில் தான் செய்கிறார்”(ப.303)

இந்நேர்த்திக் கடன்கள் இன்றும் தமிழ் நாட்டில் முருகன் அம்மன் திருவிழாக் காலங்களில் நடைபெறுகின்றன. தீமிதியும் இந்நேர்த்திக் கடன்களில் ஒன்று. லக்னௌ உத்தர ப்ரதேசத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம்கள் தீமிதிப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஷியா முஸ்லீம்கள் உலகம் முழுதும் தங்களைச் சாட்டையாலும் கத்தியாலும் வருத்திக்கொள்வது எல்லோரும் அறிந்தது. இது நேர்த்திக் கடன், வழிபாட்டைச் சேர்ந்தது என்று அரசு இங்கு தலையிடுவதில்லை. ஆனால், 130 வருடங்களுக்கு முந்திய வங்க அரசு இவற்றைத் தடை செய்தது என்று வில்கின்ஸ் சொல்கிறார். ஆனால் அதே அரசு குழந்தைகள் ஆயிரக்கணக்கில் பலியாவதைத் தடை செய்யவில்லை. வில்கின்ஸ் அலகு குத்திக்கொள்வதில் கொடுமையைக் கண்டவர், குழந்தைகள் பலியைக் கொடுமை என்று சொல்லவில்லை. ஆச்சரியம் தான். இதற்கெல்லாம் கஞ்சா தான் உதவுவதாக வில்கின்ஸ் சொல்கிறார். தமிழ் நாட்டில் அம்மன் கோயில் உத்சவங்களில் நேர்த்திக்கடன் செய்பவர்கள் முதல் பத்து நாட்கள் எத்தகைய விரதங்களை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர் அறியார். என்ன கஞ்சா எவ்வளவு உள்ளே போனாலும் தீக்கங்குகளின் மீது கால் வைத்து விட முடியாது.

இந்துக்களுக்கு கங்கை ஒரு புனித ஆறு. கங்கை எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கிறாள். மரங்கள், பசு, பூக்கள் போல எல்லாம் தெய்வ சொரூபங்கள் தொழத்தக்கவை. கங்கை தேவியாக உபாசிக்கப்படுகிறாள். அதில் நீராடுவது பாபங்களைப் போக்கும் என்று நம்பப் படுகிறது. இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் ஹிந்துக்களுக்கும் வாழ்வின் அந்திம காலத்திலாவது ஒரு முறை கங்கையில் நீராடவேண்டும் என்ற தாகம் உண்டு. தென்னிந்தியாவின் கோடியில் இருக்கும் வயோதிக ஹிந்து தன் சொத்துக்களைப் பிரித்து வாரிசுகளுக்கு உயில் எழுதிவைத்துவிட்டு கங்கைக்கும் காசிக்கும் யாத்திரை போவான். ஏனெனில் திரும்பி வருவது நிச்சயமில்லை. சரி. ஆனால் இது வில்கின்ஸின் காலத்தில் பெற்றிருந்த ரூபம் கொடுமையானது.

இனி பிழைக்கும் நம்பிகையில்லை என்று மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஜீவன், இனி இந்த உயிர் பிழைப்பது நம் கையில் இல்லை, இறைவன் பார்த்துக்கொள்வான், நம்மால் ஆனது அவனது ஆத்மா கங்கை நீரால் பாபங்கள் தொலைந்து புனிதமடைந்து சுவர்க்கத்தை அடையட்டும் என்ற நம்பிக்கையில் கங்கைக் கரையில் விட்டுவிட்டு உறவினர் வீடு திரும்பும் கொடுமையை தன் கண்ணால் பார்த்ததை வில்கின்ஸ் விவரித்துள்ளார். கங்கையைக் கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து விட்டவரைக் யாரும் காப்பாற்ற மாட்டார்களாம். காப்பாற்றுவது அவன் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுக்கும் பாப காரியம் ஆகும். நோய்வாய்ப்பட்டு இருக்கும் தன் மகனை இழக்கப் போகும் துக்கத்தில் இருக்கும் தந்தை, அவனை கங்கை ஆற்றின் கரையில் தனித்திருந்து சாகச் செய்வானே ஒழிய, அவர் மகன் பிழைக்கக் கூடும், மருத்துவரிடம் தானே எடுத்துச் செல்கிரேன் என்று வில்கின்ஸ¤ம் அவர் நண்பர்களும் சொன்ன போதிலும், தந்தை சம்மதிக்கவில்லை. மகனை இழக்கும் துக்கத்தோடு, அவனது சொர்ர்க்க வாழ்விற்குத் தடையாகவும் இருக்க மனமில்லை.(ப.332-333) மகன் ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரணமடைகிறான். இந்தப் பழக்கம் வங்காளத்தில் 19-ம் நூற்றாண்டில் மிகப் பரவலாக இருந்ததாக வில்கின்ஸ் சொல்கிறார். உண்மை என்று தான் தோன்றுகிறது. இதை அந்தர்ஜொலி என்று சொல்வார்கள். அந்தர்ஜொலி யாத்ரா என்று ஒரு வங்கப் படம், மனதைப் பிழிந்து எடுத்துவிடும் ஒரே சோகம், சாகப் போகும் ஒரு கிழவனுக்கு துணையாக ஒரு ஏழையின் இளம் பெண்ணையும் விவாகம் செய்து வைத்து இரண்டு பேரையும் ஆற்றங்கரையில் விட்டு வந்து விடுகிறார்கள். தன் ஏழ்மை, தன் பெண்ணின்    மீதான பாசம், மத நம்பிக்கைகள் இடையே தத்தளிக்கும் ஏழைப் பிராமணன். கடைசியில் ஆற்றின் வெள்ளத்தில் அந்தக் கிழவன் மூழ்க அவனைக் காப்பாற்றும் இளம் மனைவியின் போராட்டம் – இதென்ன உலகம், என்ன மனிதர்கள், என்ன குருட்டுத் தனமான மத நம்பிக்கைகள் என்று நம்மை கதி கலங்க வைக்கும். சில கொடூரமான நிகழ்வுகளையும் வில்கின்ஸ் பதிவு செய்கிறார். ஆற்றுக்கு எடுத்துச் செல்லபட்ட பெண் தண்ணீரில் மூழ்க அடிக்கப்படுகிறாள், அவள் வாயில் சேற்றை அடைத்து. மோட்சத்துக்கு நல்ல வழி காட்டுகிறார்கள்.(ப்.331). ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலர் உயிர் பிழைத்து வந்து விட்டால், அவர்கள் திரும்ப ஊரில், குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், கங்கை அவர்களுக்கு மோட்சம் அளிக்க மறுத்துவிட்டாள். கங்கை நிராகரித்தவளை எப்படி சேர்த்துக்கொள்வது? பிறகு அவர்கள் வேறு    கீழ்ச்சாதியினருடன் சேர்ந்து தான் வாழ்வேண்டியதாகிறது.

இவையெல்லாம் ஆதிகாலத்திலிருந்து வந்தவை அல்ல. வேதங்கள் எங்கும் இதை நமக்குப் போதிக்கவில்லை. பொதுவாக மக்கள் மதம் என்ன சொல்கிறது என்பதை வேதம் படித்தோ புராணங்கள் படித்தோ தெரிந்து கொள்வதில்லை. இதிகாசம், மதம், புராணம் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக புராணிகர்கள் சொல்லக் கேட்டு தெரிந்து கொண்டவை தான். அத்தோடு தலைமுறை தலைமுறையாக பெரியோர்கள், மூத்தவர்கள் கடைப்பிடிக்கும் பாரம்பரியம். பின்னர் ஒவ்வொரு இனத்தவர், பிரதேசத்தவர் பாரம்பரியாமாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகள், மதத்தின் பேரில் ஒட்டவைக்கப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் மகான்கள் தோன்றி மதத்தின் பெயரால் நடக்கும் இப்பிறழ்ச்சிகளை நீக்கி மதத்தின் சாரத்தை மக்கள் மனத்தில் புனர்ஜீவிக்கச் செய்கிறார்கள். ராஜா ராம் மோகன் ராய் சதியை, உடன் கட்டை ஏறுதலை கண்டித்தபோது, பழமை வாதிகளிடம் அவர் கேட்டது, எந்த வேதத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது? என்று தான். இடையில் வந்து சேர்ந்து இந்துமதத்தின் பேரில் நடந்த கொடுமைகளுக்கு எழுந்த எதிர்ப்புக் குரல்கள்  எல்லாம்  இந்து மதத்தினுள்ளிருந்தே எழுந்த சுயவிமர்சனத்தால் தான்.

sankara childஒவ்வொரு பிரதேசத்திலும் நிலவும் நம்பிக்கைகள் கதைகளைக் கேட்டால் மிக வேடிக்கையாக இருக்கும். நமக்கு ஆதி சங்கரரின் கதை தெரியும். ஆனால் சைவம் இல்லையென்றே சொல்லத் தக்க, வைணவமும் சாக்தமும் ஆட்சி செய்யும் வங்கத்தில், “சங்கரர் கடவுளின் அவதாரம் என்று சிலரும், வேறு சிலர், தகாத உறவு முறையில் பிறந்தவர் என்றும், அதனால் சங்கரரின் தாயார் சாதியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டார் என்றும், அவர் மரணமடைந்த போது அண்டை அயலார் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவோ, சிதைக்கு நெருப்பு கொடுக்கக் கூட மறுத்தார்கள் என்றும், தாயார் மரணத்திற்குப் பிறகு, சங்கரர் சன்னியாசம் வாங்கிக் கொண்டார் என்றும் சொல்வதாக வில்கின்ஸ் பதிவு செய்கிறார்(ப.295). எட்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய தத்துவ தரிசியை, இந்து மதத்திற்குத் திரும்ப ஜீவனூட்டி புணர் நிர்மாணம் செய்த  பெரிய சக்தியைப் பற்றி வில்கின்ஸ் அறிந்து கொண்டதும், வங்கம் அவருக்குச் சொன்னதும் இதுதான் என்றால், மேற்கத்திய அறிவார்த்தம் பற்றி பரிதாபப் படத்தான் வேண்டும். ஆனால் வில்கின்ஸ் மாத்திரமே மேற்கத்திய அறிவார்த்தத்தின் அடையாளம் அல்லவே.

இன்னொரு இடத்தில், “நாம் முன்பு வைணவ வழிபாட்டில் பார்த்தது போன்ற எந்த கவர்ச்சிகரமான அம்சமும் சிவ வழிபாட்டில் இல்லை. இந்த வழிபாடு பெரும்பாலும், பிராமணர்களிடையேயும், முனிவர்களின் செல்வாக்கை ஏற்றுக் கொண்டவர்களிடையேயும் மட்டுமே காணப்படுகிறது சிவ வழிபாட்டை நோக்கி மக்களை ஈர்க்க எந்த பிரபலமான நூலும் எழுதப்படவில்லை…..சிவ வழிபாடு ஆற்றல் மிக்கதாகவும் கொடூரமாகவும் உள்ளது. எனவே மக்கள் அச்சத்தின் காரணமாக அங்கு ஈர்க்கப்படுவதில்லை. இதனால் கிராமங்களில் சிவன் கோயில்கள் இல்லை”(ப.294) என்றும் எழுதியிருக்கிறார் வில்கின்ஸ். சாக்த வழிபாட்டில் இல்லாத  கொடூரமா? அந்த சாக்த வழிபாட்டின் அரசியல் வாரிசுகளாகத்தானே ஆரம்ப கால வங்க புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.அவர்கள் சக்தியை வழிபடுபவர்கள். தேச விடுதலைக்குத் தங்களை அர்ப்பணிப்பதாக காளியின் முன் ரத்தத்தில் தோய்த்து சத்தியம் செய்தார்கள். வங்கத்தில் சக்தி வாய்ந்த இன்னொரு பிரவாஹம் வைணவ கிருஷ்ண பக்தி இயக்கம். சைதன்ய மகாப் பிரபு, வித்யாபதியிலிருந்து தொடங்கி  ரவீந்திரநாத் தாகூர் வரை நீள்வது. பழங்குடி இனக்குழு மக்களாக இருந்த மணிப்புரி  மெய்தீ மக்களைக் கூட கிருஷ்ண பக்தியில் திளைக்கச் செய்த இயக்கம். மணிப்புரி மக்கள் தம் தாள வாத்தியத்தோடு ஆடும் சங்கீர்த்தனம் மிக அழகானது. நம்மை மெய்மறக்கச் செய்வது. அதை ஏனோ வில்கின்ஸ் “இரைச்சல் நிறைந்தது, பொருத்தமற்றது, மேலும் பண்பாடற்றது” (ப.290-91) என்று சொல்லியிருக்கிறார். அவரவர் ரசனை அவரவர்க்கு.

வங்கத்தில், ஒரு கால கட்டத்தில் நிலவிய மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் வைத்துக்கொண்டு இம்மாதிரியான முடிவுகளுக்கு வந்தால் அது எவ்வளவு விபரீதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் ஆகிவிடும் என்பதற்கு இது மட்டுமல்ல, நிறைய உதாரணங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

ஆனால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும் செய்திகளும் இதில் உள்ளன. நம் அரும் தமிழ் நாட்டில், ஏன், உத்தரபிரதேசம் பீஹார் மாநிலங்களில் காணும் சாதிவெறியும் சாதிச் சண்டைகளும் வங்கத்தில் அறவே இல்லை. ஆயிரக்கணக்கான ஜாதிகளாக நாம் பிரிந்து ஜாதிப் பிணக்குகளை வளர்த்துக் கொள்வது போல இல்லை. வங்கத்தில். சாதிகள் உண்டு தான். பிராமணர், வைஸ்யர், என்று சில பெரும் பிரிவுகள் தான்.(ப.233) அதற்குள்ளும் பிரிவுகள் உண்டு தான். ஆனால் தீண்டாமை இல்லை. பறையர் பள்ளர், வகையறாக்கள் இல்லை. இன்று இல்லையே, என்ன காரனமாக இருக்கும், சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஏதும் காரணமாக் இருக்குமோ என்று நான் யோசித்ததுண்டு. இல்லை. வில்கின்ஸ் காலத்திய 130 வருடங்கள் முந்திய வங்காளத்திலும் இல்லை.

வில்கின்ஸ் பிரம்ம சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்களைப் பற்றிப் பேசுகிறார். அவை வெகு சீக்கிரம் செல்வாக்கு இழந்து விட்டன. காரணம், பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகளிலும் கொள்கைகளிலும் கிறித்துவத்தின் செல்வாக்கு மிகுந்து இந்து மதம் சிந்தனைகள் மங்கத் தொடங்கியதும். ஆனால் சடங்குகளில் நம்பிக்கையற்று வேதங்களை முன்னிறுத்திய தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் இன்றும் ஜீவித்திருக்கிறது. வில்கின்ஸ் கேசவ் சந்திர சென்னைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த, கேசவ் சந்திர சென் வெகுவாக மதித்த ராமகிருஷ்ண பரம ஹம்சரைப் பற்றி வில்கின்ஸ் ஏதும் சொல்லவில்லை. ஒரு வேளை அவர் காலத்தில் பரம ஹம்சர் தக்ஷ¢ணேஸ்வரத்தில் வாழ்ந்த ஒரு வெறும் காளி கோயில் பூசாரியாகவே அறியப்பட்டாரோ என்னவோ. ராம க்ரிஷ்ண பரமஹம்சரை உலகறியச் செய்த விவேகானந்தர் இனித்தான் அரங்கில் வரவிருந்த காரணமாக இருக்கலாம்.

பதினொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் வங்கத்தில் நிலவிய இந்துமத வாழ்க்கையும் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். இந்து மதத்தின் வேதங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் முரணான, சம்பந்தமற்ற எவ்வளவோ கொடிய பழக்கங்கள் நம்பிக்கைகளும், இந்து மதத்தின் பெயரைச் சொல்லி அவ்வப்போது கால நீட்சியில் தோன்றியபோதிலும், அவ்வப்போது இந்துமதம் தன்னை விமர்சித்துக்கொண்டு புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது, அந்த விமர்சனங்கள் இந்து மதத்தின் உள்ளிருந்தே எழுகிறது என்பதை இந்த ஆவணம் நமக்குச் சொல்லாமல் சொல்கிறது.

(இந்த நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது –  நவீன இந்துத்வம்: டபிள்யூ ஜே வில்கின்ஸ்; தமிழில்: ச.சரவணன். சந்தியா பதிப்பகம், 57,          53-வது தெரு, 9வதுஅவென்யூ, அசோக் நகர், சென்னை-83).

4 Replies to “வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்”

  1. குழந்தைகள் ஆயிரக்கணக்கில் ‘பலி’ இடப்பட்டார்கள் என வில்கின்ஸ் எழுதியதைப் படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்பு ஹாரி மில்லேர் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மேலை நாட்டவர் பம்பாய் வந்துவிட்டுச் சென்றவர் அங்கே தினமும் காலையில் தெருக்களில் சடலங்கள் விழுந்து கிடப்பதாகவும் அவற்றை கார்ப்பரேஷன் அப்புரப்படுத்துவதாகவும் எழுதினாராம்.இது தவிர பல இடங்களில் ரத்தக் கரைகளைக் கண்டதாகவும் கூறினாராம். உண்மையில் அவர் கண்டது காலையில் தெரு ஓரங்களில் முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு தூங்கும் மக்களையும் வெற்றிலை போட்டு துப்பிய கரைகளையும்தான் . மேல் நாட்டவர்கள் தூங்கும்போது முகத்தை மூடிக் கொள்வதில்லை.இறந்தவர்களின் முகத்தைத் தான் மூடுவார்கள். தன்னுடைய ‘அனுபவத்தை’ வைத்து அவர் முடிவு கட்டியது அப்படி! இந்த குழந்தைகளை ‘பலி’ இட்ட விஷயமும் அப்படி ஏதாவது இருக்கலாம்.இல்லையென்றால் இதைப் பற்றி மற்ற எவரும் எழுத வில்லையே. .தவிர, அப்படி நடந்திருந்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கொரு சட்டம் கொண்டு வந்திருப்பார்களே.

  2. நாவிதர்கள் மருத்துவர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதை விட மருத்துவர்களே நாவிதர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அந்தச் சமூகத்திற்கு மதிப்பு கூடுமோ? பிரசவ வலி வந்துவிட்டால் “மருத்துவச்சியைக் கூப்பிடு” (நாவிதரின் மனைவி?) என்று தானே சொல்வதுண்டு! நாளடைவில் சம்பிரதாய அளவிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு, அல்லது சுத்தமாகவே மறந்து விட்டார்களோ? ஆங்கில மருத்துவத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கமும், சித்தம், ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகள் ஒரு பக்கமுமாக, மருத்துவத்தை அவர்களிடமிருந்து பிரித்து விட்டதோ?

    எது எப்படியோ, இவர்கள் தங்களை “மங்கல சமூகத்தினர்” என்று கருதிக்கொண்டு நலச்சங்கம் அமைத்து அச்சங்கத்தின் மூலம் தங்கள் மக்களுக்குத் தொண்டு ஆற்றுகிறார்கள் என்கிற உண்மை மனதுக்கு இதமளிப்பதாக இருக்கிறது. “தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்” நாளை மறுநாள் (17-11-09) தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை முருகன் கல்யாண மண்டபத்தில், காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் அவரின் ஆசிகளுடன் “முப்பெரும் விழா” நடத்துகின்றனர். நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் அவர்களின் “மங்கல சமூகத்தினர் மாண்புமிகு வரலாறு” என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டு, சிறப்பு மிக்கவர்களுக்கு விருதுகள், மற்றும் நலிந்தோர்க்கு உதவிகள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது.

    நிற்க, குழந்தைகளைத் “தானம்” செய்வதைத் தான் “பலி” என்று ஜே.வில்கின்ஸ் குறிப்பிட்டுள்ளாரோ? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுள்ள விஷயங்களைப் பொதுமைப்படுத்தி விட்டாரோ?

    எனக்கென்னவோ வில்கின்ஸ் அவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஸன் டிவி “காசி” பற்றி காண்பித்த “நிஜம்” நிகழ்ச்சி போல் இருக்கும் என்று தோன்றுகிறது.

    அருமையான கட்டுரை தந்தமைக்கு நன்றி ஐயா!

    அன்புடன்

    அஞ்ஜனாசுதன்.

  3. ஒரு கட்டுரையில் இருந்து பகுதியை இங்கு பதிக்கிறேன்.

    This is indeed a major disease. Let me describe it just a little bit more. The individual would be in contact with a case. He would get it from droplets expressed from the person he is talking with. Then he would inhale it and feel perfectly well for anywhere from a week to two weeks, seven to 14 days. Then he would come down with a high fever and be so sick and have head pain, chest pain, feeling absolutely miserable. At that point, after two or three days of this, a rash would begin. Until he developed the rash, he wouldn’t be able to communicate it to anybody—until the rash began. Then the rash would gradually emerge. It was a very ugly-looking rash, very painful. It’s like little pustules in the skin. They grew smaller and then they grew much larger.
    (From Smallpox–the Death of a Disease: The Inside Story of Eradicating a Worldwide Killer
    by D.A. Henderson, Devin T. Stewart/ A carnegie council Report)

    இது அம்மை வியாதியை உலகெங்கும் பல நாடுகள் சேர்ந்து ஒத்துழைத்து, ஒழித்துக் கட்டியதைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு பகுதி. இந்தியா 19ஆம் நூற்றாண்டில் இன்னும் நிறைய காடுகளும், விவசாயமே பிரதானமாகவும் இருந்த நாடு. தொற்று நோய்கள் ஏகம். ஆண்களின் சராசரி மரிப்பு வயது நடு முப்பதுகள். பெண்களுக்கு இன்னும் குறைவு.

    சிறிது அக்காலத்துக்கு நம் கற்பனையை இட்டுப் போனால், குடும்ப உறுப்பினர்கள் சமூகத்துடன் உறவாடி விட்டு வீட்டுக்கு வந்தால் என்னென்ன தொற்று நோய்களைக் கொண்டு வரக் கூடும், அவை என்னென்ன வடிவுகளில் வீட்டுக்குள் பரவும் என்பன பற்றிக் கறாரான அறிவியல் ஞானமோ, மருத்துவ அறிவோ பரவலாக இல்லாத ஒரு காலச் சூழலைப் பற்றி நம் கற்பனை நமக்கு நிறைய சொல்லும். அதற்கு முன் ஒரு 4 நூறாண்டுகள் இந்து சமுதாயம் பல விதமான படையெடுப்புகளில் ஏராளமான மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. ஒன்று அதில் திட்டமிட்ட தொழில் அறிவின் அழிப்பு. புத்தக அழிப்பு, கல்வி முறை அழிப்பு. நில உறவுகள், சமூக உறவுகளில் ஏற்பட்ட நெடிய சீர்குலைவு.

    மக்களிடம் எஞ்சியது பாரம்பரிய அறிவு என்பதை விட பாரம்பரியம் பற்றிய ஹேஷ்யங்களும், அரை நினைவுகளும், குறைப் புரிதல்களும் என்று நான் கருதுவேன். நொறுக்கப் பட்ட ஒரு நாகரிகம், சிதைத்து ஒடுக்கப் பட்ட ஒரு மக்கள் என்ன விதத்தில் ஒருங்கிணைந்த அல்லது மிக ஆழமான தர்க்கம் கொண்ட நியதிகளோடு வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? வில்கின்ஸ் போன்றார் நோயின் வேர்கள். அவர்கள் தாம் இந்தியாவில் கொணர்ந்த பேரழிவுககு ஒரு பொறுப்பும் எடுக்காமல் இந்திய நிலைகள் சாஸ்வதமானவை என்பது போலக் கருதி எழுதியதை நாம் தக்க விமர்சனம் இன்றி ஏற்பது நம் எதிர்காலத்துக்கு உலை வைப்பதாகும்.

    இந்திய கர்ப்பிணிப் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம், anti-biotics, தடுப்பூசிகள், பெரும் திரளுக்கு அவை கொடுக்கப் படுவது போன்ற 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த நோயெதிர்ப்பு முயற்சிகள் நடுவே இருந்து பார்த்தால் கொடுமையாகத் தெரியலாம்.
    ஆனால் இன்று கூட H1N1 காய்ச்சலுக்கு ஒரு எளிய தடுப்பு முறையாகக் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டு நபர்கள் வெளியிலிருந்து வந்தால் அவர்களை அணுகாமல், அவர்களுடைய மூச்சு அல்லது மூக்கு/ வாய் திரவங்களோடு நெருக்கம் இன்றி இருப்பது நல்லது என்று மேலை நாடுகளில் அறிவுறுத்தப் பட்டது. ஒரு காரணம் தடுப்பூசித் தட்டுப்பாடு.

    அந்த விலக்கல் கொடுமை அல்ல, முன் ஜாக்கிரதை, நோய்க் குறைப்பு முயற்சி.
    அமெரிக்கக் கண்டத்துக்கு அம்மை நோயைப் பரப்பி பல மிலியன் அமெரிக்கப் பூர்வ குடியினரின் மரணத்துக்குக் காரணமான யூரோப்பியர் வில்கின்ஸுக்குத் தம் இனத்தவரின் பேராசைகள் எத்தனை கோடி மக்களைக் கொன்றன என்பது நினைவு வராததில் அதிசயம் என்ன இருக்க முடியும்?
    மைத்ரேயன்

  4. அருமையான புத்தக விமர்சனம்.. தனக்கு முந்தைய காலத்தின் ஆசிரியரின் இந்தியப் பார்வையை நமது பர்வையிலிருந்து பார்க்கிறார் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். நமது மதப் பார்வைகளும், அதை வெளிநாட்டான் பார்க்கும் விதத்தையும் நமக்கு சொல்கிறார். அவனது பார்வையின் கோளாருக்கு கோபப்படாமல் அவரது பார்வை அவருக்கு என சொல்லிச் செல்கிறார். நம்மை நாம் திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது இந்தப் புத்தகமும், அதை எப்படிப் பர்க்கவேண்டும் என சொல்லித்தருவதுபோலிருக்கிறது இந்த புத்தக விமர்சனம்.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *