திரைப்பார்வை: அவதார்
அரவிந்தன் நீலகண்டன்
22 Dec 2009 |
அச்சிட
கொஞ்சம் அறிவியல், ரொம்ப கிராபிக்ஸ் - கூடவே நெய்யூரின் அழுகுரல்.
பல பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படங்களை தந்த ஜேம்ஸ் காமரோனின் கனவு இலட்சியம் என இத்திரைப்படம் சொல்லப்படுகிறது. 
பிரம்மாண்டத்தில் இத்திரைப்படம் நிச்சயமாக ஏமாற்றவில்லை.
மிகப் பிரம்மாண்டமான கிராபிக்ஸ். புத்தம் புதியதோர் உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு இயற்கை அம்சமும் பிக்ஸல் பிக்ஸலாக அணு அணுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மகோன்னத விசித்திர கனவுக்குள் நுழைந்து மீண்டு வரும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு திரைப்படம் அளிக்கிறது. ஒருவிதத்தில் இதைத்தான் எல்லா ஹாலிவுட் பெரும் வசூல் அள்ளும் திரைப்படங்கள் அனைத்தும் செய்கின்றன. ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.

மற்றொரு விதத்தில் இது அவர்களின் ஒரு ஏக்கம். இழந்த தொன்மையினை எண்ணி ஆழ்மனம் அடையும் ஏக்கம்.
இத்திரைப்படம் அறிவியல் புதின வகையறாவைச் (science fiction) சார்ந்தது. வருங்காலத்தில் பண்டோ ரா என தாங்கள் பெயரிடும் ஒரு புதிய உலகத்துக்கு மானுடம் செல்கிறது. சமூக அறிவியலாளர்கள், ஒரு பெரும் வர்த்தக அமைப்பு அத்துடன் இராணுவம் என மூன்றுவித உப குழுக்கள் கொண்ட பெருங்குழு. அவர்களின் நோக்கம் அந்த புதிய உலகில் ஏற்கனவே வாழும் அறிவுகொண்ட ஜீவராசிகளான பத்தடி உயரமும் வலிமையும் கொண்ட நா’வ்வி (Na’vi) யுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்கள் அவர்கள் வாழும் வனப்பரப்பிலிருந்து அகற்றுவது. காரணம் அந்த வனத்தின் அடியில் ஒரு விலைமதிப்பற்ற தாதுப்பொருள் இருப்பதை மானுடம் கண்டுபிடிப்பது.
இதற்காக நா’வ்விகளுக்கு கல்விச்சாலைகள் அமைத்து மேற்கத்திய பண்பாட்டையும் ஆங்கிலத்தையும் கற்றுத்தருகிறார்கள். மருத்துவசாலைகள் அமைக்கிறார்கள். ஆனால் நா’வ்விக்களை தங்கள் வழிமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. கூடவே மானுட ராணுவமும் அவர்களைத் தாக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
மற்றொருபுறம் சமூகவியலாளர்கள் அவர்களை அறிந்து அவர்களுடன் உரையாடி அவர்களை வழிக்கு கொண்டு வரமுடியுமா பார்க்கிறார்கள். இதற்கு அவர்களுள் ஒருவராக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியே “அவதார்”.
பொதுவாக சொல்லப்படுவது போல இந்த “அவதார்” என்கிற வார்த்தைக்கும் ஹிந்து புராணங்களின் அவதாரக் கோட்பாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த அவதார் கோட்பாடு சைபர் வெளியில் ஒருவர் உருவாக்கும் விர்சுவல் ஆளுமைக்கு கொடுக்கப்படும் பெயராகும். இங்கு நா’வ்வி உடல் உருவாக்கப்படுகிறது. அதன் மூளை ஒரு இயந்திரத்துக்குள் இருக்கும் மானுடனால் இயக்கப்படும். அந்த நாவ்வி உடலுக்குள் மானுடன். ஹை டெக் கூடு விட்டு கூடு பாய்தல்!
ஆனால் இது வெறும் ஹைடெக் அதீதக்கற்பனை அல்ல என்பதுதான் உண்மை. மேற்கத்திய மானுடவியலின் அடிப்படை அணுகுமுறை இதுதான். இதைத்தான் இன்றைக்கும் நம்முடைய மானுடவியல் துறைகளில் பயன்படுத்துகிறோம்.
“அவர்களில் ஒருவனாகாமல் அவர்களில் ஒருவனாக” நடித்தல் அல்லது தகவல் தருபவர்களை - உளவாளிகளை - “அவர்களுக்குள்” உருவாக்கி தகவல் சேகரித்தல் – இவைதான் நம் சமூகவியல் அணுகுமுறைகள். நமது சமூக அறிவியல் துறைகளில் வனவாசி சமூகங்களையாகட்டும் குல தெய்வ வழிபாட்டு முறைகளையாகட்டும் இப்படித்தான் அணுகுகிறது. சுருக்கமாக நாம் “பிறர்” என கருதுவோரை அணுக இத்தகைய ஒரு உத்தியைத்தான் பயன்படுத்துகிறோம்.
ஏனெனில் மேற்கத்தியர்கள் இந்த முறைகளைத்தாம் தம்மைவிட “கீழ்நிலை” மனிதர்களாக கருதிய பண்பாடுகளை “அறிந்து” கொள்ள பயன்படுத்தினார்கள்.
ஆனால் இந்த முறை சில அடிப்படை உண்மைகளை கனகச்சிதமாக எப்போதுமே தவறிவிடும். அவ்வாறு தவற விடப்பட்ட உண்மைகள்தான் “ஆராயப்படும்” பண்பாட்டின் ஆதார உயிர் நிலைகளாக அமையும். பல நேரங்களில் வேண்டுமென்றே அந்த தவறு நடத்தப்படும். ஏனெனில் “அவர்கள்” உண்மையான் இதயத்துடிப்புடன் இருப்பது “நமக்கு” பல சங்கடங்களை விளைவிக்கும். குறிப்பாக “அவர்களை” அழித்தொழிப்பதில்.
இந்த அவதார்களில் ஒருவனான கதாநாயகன் இழந்த கால்களை பெறும் வாக்குறுதியை ராணுவ மேஜர் ஒருவன் கொடுக்கிறான். அதை நம்பி நா’வ்விகளிடம் கிடைக்கும் தரவுகளை ராணுவ மேஜருக்கு அளிக்கிறான். ஆனால் சிறிது சிறிதாக நா’வ்விகளின் வாழ்க்கை முறையில் தன்னை இழந்து நா’வ்விகளில் ஒருவனாகிவிடுகிறான். இதுவும் நிகழக்கூடிய விஷயம்தான். உதாரணம் பாரதத்துக்கு வனவாசிகளை மதம்மாற்ற வந்து அவர்களூள் ஒருவராகி மதமாற்றங்களையும் வனவாசிகளை ஹிந்து சமுதாயத்திடமிருந்து பிரிப்பதையும் எதிர்த்த வீரியர் எல்வின்.
வீரியர் எல்வின் பற்றி மேலும் அறிய, பார்க்க: வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே
இறுதியில் மானுடத்தின் பேராசை வெற்றி அடைகிறதா? அல்லது நா’வ்விகளின் இயற்கையோடிணைந்த பண்பாடும் வனத்தின் மீதான அவர்களின் உரிமையும் வெற்றி அடைகிறதா? என்பதுதான் கதை.
இயற்கையில் பரிணமிக்கும்/வெளிப்படும் உயிர் உறவுகள் புனிதம் கொண்டவை - அவற்றுடன் நம்மை இணைத்துக்கொள்வதே ஆன்மிகம். அந்த இணைப்பை நமக்கு உணர்த்துபவையே சடங்குகள். இது இத்திரைப்படத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு அடிப்படையான விஷயம்.
புனித மரங்கள் புனித வனங்களை உருவாக்கிய பண்டைய பண்பாடுகள் இந்த இணைப்பை உணர்ந்து அவற்றின் பொருண்மையான குறியீடுகளாக புனித வனங்களையும் புனித மரங்களையும் கண்டடைந்தன.
பாரதம் முழுவதும் இத்தகைய தெய்வீக வனங்கள் உள்ளன. படையெடுக்கும் ஆக்கிரமிக்கும் பண்பாடுகளின் முக்கியமான தாக்குதல் இலக்காக இந்த வனங்களே அமைந்துள்ளன.
கிறிஸ்தவம் ஐரோப்பிய மதமாக தன்னை நிலைநிறுத்துவதற்கு முன்னால் ஐரோப்பிய பாகனிய பண்பாடுகளில் இந்த புனித மர பண்பாடு இருந்தது. ஆனால் ஆபிரகாமிய மதங்களில் இது விக்கிரக ஆராதனையாகவும் பண்பாடற்ற மூட நம்பிக்கையாகவும் கருதப்பட்டு அழிக்கப் பட்டது.
இத்திரைப்படத்தில் நா’வ்விகளின் ஆன்மிகம் அன்னை வழிபாடாகவும் வன-மலை வழிபாடாகவும் காட்டப்படுகிறது. எய்வா எனும் அனைத்து சிருஷ்டியாகவும் இருக்கும் அன்னை சக்தி எல்லாவற்றுள்ளும் சென்று அனைத்தையும் இணைக்கிறது. பல பயிற்சிகளின் மூலம் இதனை உணர்ந்து கொண்டு ஒரு நாவ்வி தன்னை சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இணைத்துக் கொள்ளும் போது அவன் “இரு பிறப்பாளன்” ஆகிறான்.
நா’வ்விகளின் நம்பிக்கைகளை அறிவியல் தனக்கே உரிய விதத்தில் உறுதி செய்வதை மேற்கத்திய மானுடர்கள் கண்டடைகிறார்கள். பெண் சமூகவியலாளர் இதனை எடுத்து கூறுகிறார். நிலத்தனடியில் மரங்களின் வேர்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து தகவல் பரிமாற்றம் செய்வதாகவும் அது நம் மூளையின் நியூரான்களின் செயல்பாட்டை ஒத்திருப்பதாகவும் கூறுகிறார். ஆக அந்த புனித வனமும் ஒருவிதத்தில் அந்த முழு கிரகமும் ஒரு அதி-உயிரியாகவும் (super organism) பிரக்ஞையுடையதாகவும் செயல்படுவதாக சொல்கிறார். மேலதிகாரிகள் சிரிக்கின்றனர் “பாட்டி கதை” என்கின்றனர், “அதாவது இங்கிருந்து ஒரு கல்லை எந்த திசையில் வீசினாலும் அது விழுகிற இடம் ஒரு புனித இடமாகத்தான் இருக்குமா?” என கேலி செய்கின்றனர்.
அதீதக்கற்பனையாக இது தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் உலகத்தை ஒரு அதி-உயிரி போன்று செயல்படுவதாகக் கூறும் Gaia கருதுகோள் முதலில் மேற்கத்திய அறிவியலாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடியில் தாவரங்களின் வேர்களுக்கிடையே உயிர்-வேதியியல் பொருட்களின் மூலம் நடத்தப்படும் தகவல் தொடர்புகள் பெரிய ஆச்சரியங்களை அறிவியலாளர்களுக்கு அளித்துள்ளது. உதாரணமாக 2004 இல் Trends in Plant Science எனும் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் சர்வதேச நூல் பிரசுரித்த கட்டுரையின் தலைப்பு: How plants communicate using the underground information superhighway. இத்திரைப்படத்தின் மூலம் புதுமையான அறிவியல்பார்வைகளை இளம் உள்ளங்களுக்கு கொண்டு செல்லவும் முடியும்.
அந்த பெரிய புனிதமரம் ஏவுகணைகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டு கீழே விழுகிறது. அதனைக் கண்டு சிதறி ஓடும் வில்லம்புகளால் போரிட்டப்படி சாகும் நா’வ்விகள் துடிக்கின்றனர். வன ஆராதனையாளர்கள் கண்ணீர்விடுகின்றனர். செய்வதறியாமல் ஓலமிடுகின்றனர். மரம் படிப்படியாக கீழே விழுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மானுடத்தின் புற்று நோயென காலனியம் பரவிய கண்டங்களிலெல்லாம் வீழ்த்தப்பட்ட புனித மரங்களின் மௌன ஓலங்கள்… அவற்றை வழிபட்ட சமுதாயங்களின் கண்ணீர் ஒரு மெகா கிராபிக்ஸ் வாக்குமூலமாக நம் முன் தோன்றுகிறது.

உலகெங்கிலும் பரவியிருந்த வனங்களை வணங்கும் ஆன்மிகப் பண்பாடு இன்றைக்கு மிஞ்சியிருக்கும் ஒரே தேசம் பாரதம். இங்கு இன்னும் புனித வனங்கள் எஞ்சியுள்ளன. தலவிருட்சங்கள் உள்ளன. இங்கு இன்னும் நாகதேவதைகள் தெய்வ வனங்களை காக்கின்றனர். வனங்கள் மானுடத்துக்கு மூலிகைகளை அளிக்கின்றன. நிலத்தடி நீரை வளப்படுத்துகின்றன. மண் அரிப்பை தடுக்கின்றன. கரியமில வாயுவை உள்வாங்கி பிராணவாயுவை நல்குகின்றன. இந்த பண்பாட்டையும் இந்த வளத்தையும் அழிக்க இங்கும் போர் நடைபெறத்தான் செய்கிறது.
(உடைக்கப்பட்ட வனசாஸ்தா கோவில் : திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் - தமிழ்முரசு 30-12-2006)
பிற்சேர்க்கை-1
புனிதவனங்களை வெட்டிச்சாய்க்கும் பண்பாடற்ற மானுடம் கிராபிக்ஸ் அதி கற்பனைகள் அல்ல. வேதனையான உண்மை. எங்கோ என்றோ அல்ல. மிக அருகில். உதாரணமாக இதோ ஒரு மிஷினரி அறிஞர் சாமுவேல் மாட்டீரின் வாக்குமூலம். இத்திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இதிலிருக்கும் வரிகள் கிராபிக்ஸின் பின்னாலிருக்கும் வரலாற்று யதார்த்தத்தை வடித்துக்கொடுக்கும். இதனைப் படித்த பிறகு படத்தை பார்த்தால் அத்திரைப்படத்தின் ராட்சத பின்னணி இசையையும் மீறி இவ்வரிகள் காட்டும் காட்சி இதயத்தில் எதிரொலிக்கும்.
Some of the demons are supposed to reside in certain trees (compare Deut xvi.21) at the foot of which a rough stone is placed on which turmeric powder is rubbed. None will pass by these places after night. Such trees are usually very large, old and well grown as it is considered sacrilegious and dangerous to hew them down. In some parts of the these trees are quite common. In one of the mountains of Travancore grew a noble timber tree which our assistant missionary Mr. Ashton wished to secure for use in the erection of the large chapel at Neyyor. The trunk was so large that four men with outstretched arms could not compass it and the branches were as thick as the ordinary trees of that species. …Even the native government has refrained from cutting down the monarch of the forest for their public works. …The mountaineers firmly refused to assist in cutting down the tree, so that the missionaries had to bring Christian workmen from considerable distance. At last the tree feel with a terrible crash, which echoed amongst surrounding mountains, amidst screams and cries of the heathen who from that time seemed to listen more readily to the exhortations of the missionary. Much of the wood-work of the chapel was made of this single tree; so that what had formerly been used in the service of the devil now became subservient to the worship of the one true and living god.
[“Rev”. Samuel Mateer, Land of Charity pp.206-7, London, 1870]
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: Avatar, அன்னை வழிபாடு, அறிவியல், அறிவியல் புதினம், அவதார், இயற்கை, உலகத் திரை, உளவியல், கலாசாரம், காடு, காலனியம், கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்துவம், சமூகவியல், சூழலியல், திரைப்படம், மேற்குலகம், வனவாசி
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
22 December 2009 at 5:45 pm
அரவிந்தன் நீலகண்டன்,
அற்புதமான விமர்சனம். நன்றி. அத்துடன் இது ஒரு கற்பனைக் கதையல்ல, ஆபிரகாமிய உளவியலை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
ஐரோப்பாவில் மட்டும் அல்ல, அரேபியாவிலும் புனித மரங்கள் இருந்தன. அவை முஹமதின் உத்தரவின் பேரில் அவரது சஹாபாக்களால் அழிக்கப் பட்டன. பின்னாளில் வஹாபிகள் சவுதியை கைப்பற்றியபோதும், மரங்கள் சாத்தானின் உறைவிடங்கள் என்று இஸ்லாம் சொல்வதாகச் சொல்லி அழித்தனர்.
அரேபியாவில் தற்போது நிறைய மரங்களை காணமுடிகிறது. வெளியிலிருந்து தருவித்தும் நடுகிறார்கள். போகப் போக இந்த மரங்களின் மூலமாவது மனிதத்தன்மை அங்கே நுழைந்து பாகனியப் பண்பாடு மலரும் என்று நம்புவோம்.
3D இருப்பதால், சிறார்களுக்கும் படம் பிடிக்கும். உங்களது சீரியஸான விமர்சனத்தை படித்துவிட்டு இது எதோ தத்துவ ரீதியான படம் என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். இது எதுவுமே புரியாமல் பார்த்தாலும் மிகவும் ரசிக்கக் கூடிய திரைப்படம் இது.