புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு
அரவிந்தன் நீலகண்டன்
11 Dec 2009 |
அச்சிட
குமரி மாவட்டம். வெள்ளிமலைச்சாரலின் அடிவாரம்….மாலை வேளை தொலைவில் கேட்கிறதா உங்களுக்கு? ஹிந்து வித்யா பீட மாணவர்கள் பாடுகிறார்கள். “அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகிறாள்…”
அவர்களில் எவரும் தொலை நோக்கி மூலமாக வானத்தை பார்த்தவர்களில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதையும் வானோக்கி மூலமாக விண்மீன்களை காண்பதிலேயே செலவிட்ட ஒரு விஞ்ஞானி இதே முடிவுக்கு வந்து ஏறக்குறைய இதே வரிகளை கூறுகிறார் என்றால்…மேற்கத்திய மரபின் புனித பயணம் அது என்று சொல்லலாம். வான் நோக்கியின் நானூறு ஆண்டுகால புனிதபயணம் - பிரம்மத்தை வான்வெளியில் தரிசிக்க.
“Whereas you, Galileo, the son of the late Vincenzo Galilei, Florentine, aged seventy years, were in the year 1615 denounced to this Holy Office for holding as true the false doctrine…..” இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கியக் கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாகப் பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர், தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார். சில அடிகளே உள்ள, மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு, விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? ஆம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கலிலியோ கலிலி என்கிற கணிதப் பேராசிரியர் தமது வான் நோக்கியை வெனீஸ் நகரின் நகரசபையாருக்கு சமர்ப்பித்தார்.
ஆனால் அது அன்று வான் நோக்கியாக வாங்கப்படவில்லை. தொலைநோக்கியாக குறிப்பாக, கப்பல் படையெடுப்புக்களைப் பார்க்கும் இராணுவ உபகரணமாகத்தான் வாங்கப்படவிருந்தது. அறிவியலின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள், ’தொலைநோக்கியை முதன் முதலாக வானத்தை நோக்கி திருப்பி வான் ஆராய்ச்சி செய்தவரும் கூட கலிலியோ அல்ல’ என்கிறர்கள். ஆனால் கலிலியோவின் முக்கியத்துவம் அவர் முதன் முதலாக தொலைநோக்கியை இரவு வானின் விண்மீன்களையும் கிரகங்களையும் நோக்கும் கருவியாக பயன்படுத்தினாரா என்பதில் இல்லை. 1610 இல் அவர் தொலை நோக்கியை வான் நோக்கியாகப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருந்ததுடன், தாம் கண்டவற்றை ஒழுங்காகப் பதிவு செய்தார்.
அதன் அடிப்படையில் வானத்தில் கோள்களின் இயக்கங்கள் குறித்து கணிக்கவும் செய்தார். முக்கியமாக, 1610 ஆம் ஆண்டு அக்டோ பர் 1 முதல் டிசம்பர் 30 வரை வெள்ளி கிரகத்தின் வளர்கலை-தேய்கலைகளை அவர் கவனித்து வரைபடங்களாக்கினார். தாலமியின் புவி மையக் கோட்பாட்டின் (Geo-centric theory) அடிப்படையில் வெள்ளியின் கலைகளை விளக்க முடியாது என உணர்ந்த கலிலியோ இதன் அடிப்படையிலேயே கோப்பர்நிக்கஸின் சூரிய மையக்கோட்பாட்டினை ஆதரித்து நூல் எழுதினார். பின்னர் நடந்தவை வரலாற்றின் முக்கிய மைல்கற்கள். அடிப்படை வாத மேற்கத்திய மதத்துடன் அறிவியலுக்கு ஏற்பட்ட மோதல் இன்றைக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வானியலை பள்ளிச் சிறார்களுக்கும் சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்வது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கிறது. பிரபஞ்சமெங்கும் வெளிப்படும் அழகிலும் ஒழுங்குணர்விலும் ஒரு இறைத்தன்மையை உணருவதன் மூலம் பெறும் ஆன்மிக அனுபவம் அது. மத எல்லைகளைத் தாண்டி மானுடத்தை சிருஷ்டியுடன் இணைக்கும் ஆன்மிகம் அது. அறிவியலைப் பொது பிரக்ஞைக்குக் கொடுப்பது ஆரோக்கியமான சமுதாய சூழ்நிலை உருவாக முக்கியமான தேவை. இதில் பெரிய பங்காற்றியுள்ள ஒரு ஆளுமை ஜான் டோப்ஸன் (John Dobson). “விண்மீன் துறவி” (Star Monk) என அழைக்கப்படும் ஜான் டோப்ஸன் (John Dobson) இராமகிருஷ்ண மடத் துறவியாக இருந்து வானியலாளர் ஆனவர்.

John Dobson
இன்றக்கும் தென் கலிபோர்னிய வேதாந்த நிறுவனத்தில் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் குறித்து ஆண்டுக்கு இருமாதங்கள் வகுப்புகள் எடுக்கிறார் தொண்ணூறு அகவையைத் தாண்டிய இந்த மாமனிதர். இவரது மிகப்பெரிய வாழ்நாள் சாதனை அனைவராலும் எளிதாக பயன்படுத்த முடிந்த, விலை குறைவான, சக்தி வாய்ந்த வான்நோக்கிகளை உருவாக்கியது. டோப்ஸன் வான்-நோக்கி (Dobson Telescope) என அழைக்கப்படும் இவர் வடிவமைத்த தொலைநோக்கிகளே அமெரிக்காவில் இளைய தலைமுறையினரிடையே வானியலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் உந்து சக்தியாக அமைந்தது. இன்று அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அவர் உருவாக்கிய “நடையோர வானியலாளர்கள்” (sidewalk astronomers) என்ற பொதுஜன வானியல் ஆர்வலர்கள் அமைப்பு பரவியுள்ளது. ஜான் டோ ப்ஸன் வானியலுக்கும் அதனூடாக நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனத்துக்கும் வேதாந்தத்துக்குமான இணைத்தன்மை குறித்து கூறுவதை கேளுங்கள்:
அனைத்தின் அடிப்படையான இருப்பினை, காலமும் வெளியுமாக வெளிப்படும் அதனை அன்னையாகக் கண்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். நாம் எதையும் செய்யவில்லை அனைத்தியக்கத்திலும் அன்னையே செயல்படுகிறாள்.
பார்க்க: சுவாமி விவேகானந்தரின் கவிதை “அன்னை காளி”
டோப்ஸன் லாவோட்ஸை மேற்கோள் காட்டுகிறார்: அவளில் சரண் புகுந்தேன் இப்போதும் என்றென்றும் அவளுக்கே தலை வணங்குவேன்.
சில கணங்களில் ஜான் டோப்ஸனின் அறிவியல் இசைதுதியாகவே மாறுகிறது:
அன்னையே ஹைட்ரஜன்! அன்னையே அகணித தாரா கணங்கள்! கடும் உலோகங்களை உதிர்ப்பவள் அவளே. பாறை மேலோடுகள் கொண்ட கிரகங்களாகுவதும் அவளே. அவளே புவியெங்கும் தாதுக்களானாள். அவற்றை சேகரித்து நம்மை ஜனித்தாள். சூரிய ஒளியாகி தாவரங்கள் மேல் தகித்தாள். பிராணவாயு வெளியேறியது. தாவரங்களை நாம் புசித்தபடி இப்பூமியின் பரப்பெங்கும் நாம் அவசர அவசரமாக ஓடுகிறோம். நமக்கு எல்லாம் தெரியுமென்ற எண்ணம். ஆனால் அனைத்துமாகி நிற்கும் அவளது ஆட்டத்தில் நாம் ஒரு அங்கமென்பதை மறந்தோம். காலத்திலும் வெளியிலும் மாற்றமற்ற அது தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் அசைவற்றத்தன்மையென்றொன்று இருக்குமா? அது இல்லையெனில் மின்சாரம் இருக்குமா? அபின்னமான அது தன்னை வெளிக்காட்டவில்லையெனில் ஈர்ப்புப் புலமும் எதிரெதிரானவையிடம் ஈர்ப்பும் இருக்குமா? இருமையிலிருந்து பன்மை வரவில்லையெனில் நமக்கு தனிமங்களின் அணு எண் அட்டவணை கிட்டியிருக்குமா? பன்மையினை இருமை பேணாவிடில் அணுக்கள்தாம் இருக்குமா? இப்படித்தான் நான் பிரபஞ்சத்தை பார்க்கிறேன். வெளி என்பது பலவற்றை பிரிக்கும் ஒன்றல்ல. ஒன்றானதை பலவானது போல காட்டிடும் ஒன்று. அவ்வெளியில் அந்த ஒருமை ஒளிர்கிறது அவ்வொளி எங்கும் எதிலும் பிரகாசிக்கிறது. [ஜான் டோப்ஸன், பிப்ரவரி 28 2002]
நிறுவன கிறிஸ்தவத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு புனித புயணத்தின் பரிணாம வளர்ச்சி இன்று பாரதத்தின் வேதாந்த மரபினில் இசைவு பெறுவது பொருத்தமான விஷயம் தான. ஆம் அறிவியலை பாட முடியும் - இங்கு இந்த மண்ணின் கலாச்சாரத்தில் இந்து மண்ணின் ஆன்மிகத்தில் - கவிதையாக இறைத்துதியாக…எளிய பஜனைப் பாடலாகக்கூட:
அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதி பராசக்தி ஆடுகிறாள்
சகல சராசரத்தும் தங்க சிலம்பொலிக்க
ஜெகதீஸ்வரி அவள் ஆடுகிறாள்
அகிலாண்டேஸ்வரி ஆடுகிறாள்அகில உலகில் உள்ள ஆருயிர் இனங்களும்
ஆழப்பெருங்கடலில் வாழுயிர் இனங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கு தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகிறாள்
ஆதி பராசக்தி ஆடுகிறாள்
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அன்னை, அறிவியலாளர், அறிவியல் கட்டுரை, ஆன்மிகம், இந்துப் பார்வை, கலிலியோ, காலம், சக்தி, சிருஷ்டி, சூழலியல், தத்துவம், பரிணாமக் கொள்கை, பிரபஞ்சம், பிரம்மம், மேற்குலகம், ராமகிருஷ்ணர், வானியல், விண்வெளி, வேதாந்தம்
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
11 December 2009 at 8:24 am
அரவிந்தன், அற்புதம்! டாப்ஸனின் வரிகள் பெரும் புத்துணர்வும் உவகையும் ஏற்படுத்துகின்றன. வானியலை வெகுஜன அளவில் கொண்டு செல்லும் அமைப்புகள் இந்தியாவில் பெருக வேண்டும்.
மக்களை கருத்துக் குருடர்களாக்கும் சோதிடம் என்ற போலிக் கருத்தாக்கத்தின் பின் சென்று ஏராளமான பணம் செலவழிக்கும் இந்து செல்வந்தர்கள், அதற்குப் பதிலாக இத்தகைய எளிய, விலைகுறைந்த வான் நோக்கிகளை வாங்கி (இவை அமெரிக்காவில், ஐரோப்பில் கடைகளிலேயே கிடைக்கும்) பள்ளிகளுக்குப் பரிசளிக்கலாம். பிரபஞ்ச சக்தியை உணர, அனுபவிக்க அவை உண்மையிலேயே துணை செய்யும்.
பாரதி அறிவியலாளன் அல்ல, கவிஞன்.. ஆயினும் இதே பிரபஞ்ச தரிசனத்தைக் கண்டடைகிறான் -
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக் காளியென்றேத்துவேன்
நிலத்தின் கீழ் பல் உலோகங்களாயினை
நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை
தலத்தின் மீது மலையும் நதிகளும்
சாரும் காடும் சுனைகளுமாயினை
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலம் துய்த்தனை
புலத்தை ஈட்டி இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே !
போற்றி போற்றி நினதருள் போற்றியே.
(பார்க்க: பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள் - http://jataayu.blogspot.com/2006/12/blog-post_14.html)