சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

Pamban swami

சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள் சந்த மறையும் தமிழும் தேர்ந்த தன்னேறில்லாத் தவமுதல்வர். அவர் இயற்றிய வேதத்தைக் குறித்த வியாசம் என்னும் நூலில், “சூத்திரரும் பெண்களுஞ் சமமாவார்கள். அவர்கள் வேதம் ஓதவும் கேட்கவும் அருகர் அல்லர் எனச் சின்னூல்கள் கூறுமாறென்கொல்லோ” எனும் வினாவுக்கு அளித்த மறுமொழி இங்கு தரப்படுகின்றது. சுவாமிகளின் உரைநடை இக்காலத்தவருக்குக் கடுமையாக இருக்கும். ஆதலால் மொழி நடை எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

சூத்திரர்களில் பெரும்பாலார் மாமிச உணவு உண்ணுதலினாலும் இழிதொழில் செய்தலினாலும் பெண்களுக்கு மாதவிலக்கு முதலிய சூதகங்களாலும் அசுத்தம் உண்டு என்ற காரணத்தால் அந்த நூல்கள் அவ்வாறு கூறும். பார்ப்பார் குலத்திற் பிறந்து கள்ளும் ஊனும் உண்டு அந்தண ஒழுக்கம் கெட்டவனும் இழிதொழில்கள் செய்பவனும் வேதம் ஓதவோ கேட்கவோ தகுதியில்லாதவனாவான். அவ்வாறே ஆசாரமில்லாத மற்றை எவரும் வேதம் ஓதத் தகுதி இல்லாதவர் என்பது நீதியே ஆகும்.

வேதத்தின் கரும காண்டம் விசேடக் கிரியைகள் அடங்கியது. அது எல்லாருக்கும் பொதுவாகாது.

ஞானகாண்டம் வருணாச்சிரமங்கள் கடந்த ஞானத்தை இனிது கூறுதலினால், அது எல்லாருக்கும் பொதுவாகும்.

இதனையும், ”சமஸ்கிருதத்தில் ஓதவும் கேட்கவும் முதன் மூன்று வருணத்துப் பெண்களுக்கும் சூத்திரகுலத்து இருபாலாருக்கும் அதிகாரமில்லை; தமிழ் முதலிய வேறு மொழிகளில் மட்டுமே அதிகாரம் உண்டு” என்பதே சில பார்ப்பார் தீர்மானம்.

இது நியாயமாகமாட்டாது. ஏனெனில், ஆசாரமுடைய நான்கு வருணத்தாரும் ஓதவும் கேட்கவுமாகவுள்ள சிவாகமங்கள் அச்சமஸ்கிருத மொழியிலேயே இருக்கின்றன.

இதுவேயும் அன்றி, இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஐதரேயப் பிராமணம்  இரண்டாவது பஞ்சகத்தில்,  அடிமைத் தொழில் செய்பவர் ஒருவரது மகனாகிய கவச ஐலுசன் (Kobhadha Alusha) என்னும் பெயர் உடைய சூத்திரன் இருக்குவேத சங்கிதையை ஆக்கிய நூலாசிரியன் எனப்படுவதினாலும், அங்கதேசத்து அரசனுடைய அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது.

வடநாட்டில் நால்வருணத்தாரும் வேதம் ஓதுதலை இக்காலத்தும் காணலாம்.

யஜுர்வேத சதபதப் பிராமணத்தில், ‘யாககர்த்தா விப்பிரனாயின் (வேதம் கற்ற பிராமணன்) ”ஏஹி” =வருக; சத்திரியனாயின் வைசியனாயின் ”ஆதி” (இவ்விடம் வருக) யாக கர்த்தா சூத்திரனாயின் ”அதாவாதூ” (இவ்விடம் ஓடி வருக) என்று அழைக்கின்றது. இதில் விதித்துள்ளபடி சூத்திரன் வேத கர்ம யாக கர்த்தாவுமாக இருக்கலாம் என அறியலாம். அதனால்தான் மேலே கூறிய கவச ஐலுசன் யாக காரியத்தில் சேர்க்கப்பட்டான் என மேலே குறித்த ஐதரேயப் பிராமணம்  இரண்டாவது பஞ்சமுகம் கூறிற்று.

முதல் மூவருணத்தார்க்கும் உள்ளவாறு சூத்திரருக்கு உபநயனம் எனப்படும் இருபிறப்பு (துவிஜத்துவம்) இல்லை எனஸ்மிருதிகள் மட்டுமே கூறும். அப்படி வேதம் கூறுவதில்லை.

மநு ஸ்மிருதி 3ஆவது அத்தியாயம் 197வது சுலோகத்தின்படி பார்ப்பார் பிருகு வமிசத்தினரும், சத்திரியர் ஆங்கிரசு வமிசத்தினரும் வைசியர் புலஸ்தியர் வமிசத்தினரும் ஆனதுபோல் சூத்திரர் வசிஷ்டர் வமிசத்தினராதலினால், அந்தச் சூத்திரரும் இருடி கோத்திரத்தாரேயாவர். இங்கு அனைவரும் தோன்ற முதல் மூல பரனாக எழுந்தருளிய சிவபரஞ்சோதியைக் கூறுவது சிறப்புடைமையின் யாவரும் சிவ கோத்திரத்தவர் ஆவர்.

The Seven Rishis
The Seven Rishis

விவேகஞானம் இல்லாதானைச் சூத்திரன் என்பதே வேதத்தின் கருத்தாகும். ஞானகுருவுக்குப் பணிவிடை புரிந்து ஞானம் பெறவேண்டும் எனும் விவேகம் இன்றி அன்னதானத்தையே மிகவும் செய்து வந்த பெளத்திராயண ஜானசுருதி என்னும் பெயருடைய ஒரு அரசன் ரைக்வர் என்னும் பெயருடைய ஒரு பிரமஞானியைக் கண்டு அவர் முன்பு அறுநூறு பசுக்களையும் அரிய குதிரைகள் பூட்டிய தேரினையும் காணிக்கையாக நிறுத்தி வந்தித்து பிரம்ம ஞானோபதேசத்தை விரும்பினான். அப்பொழுது அந்த ஞானியார், சத்திரியனாகிய அந்த அரசனை “ஏடா சூத்திரா!” என விளித்தார். (சாந்தோக்கிய உபநிஷத். 4ஆவது பிரபாடகம் 3ஆவது அனுவாகம்).

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக” என்று பொருளாகும்படி,
“அபிவா யச் சண்டாள: சிவ இதிவாசம் வதேத் தேந ஸஹ ஸம்வஸேத்தேந ஸஹபுஞ்சீத” என முண்டகோபநிடதம் மொழிகின்றது. இது நீலகண்ட பாஷியத்து 4ஆம் அத்தியாயத்து 1ஆம் பாதத்து 15ஆம் சூத்திர பாஷியத்து உள்ளது. இதனைத் திராவிட மாபாடிய ஆசிரியரான மாதவச் சிவஞான முனிவர்கள் மொழிபெயர்த்துத் தம் குருவணக்கமாக மொழிகிறார்கள் –

“சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனோடு கலந்து பேசுக அவனோடு
அருகிருந்து உண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோடு உடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவேறு
எனக்கிலை கலைசையாண் டகையே”

வேதம் ஓதவும் கேட்கவும் அதிகாரம் இல்லாதவர் வேதத்தின் மூலமான பிரணவத்தையும் உச்சரிக்கக் கூடாது என்பதுவும் சில வேதியர் தீர்மானம். இதுவும் மேலே கூறியபடி அறியாமை உடையார் பற்றியே அன்றி ஞானம் உடையார் பக்கம் ஆகாது. இந்த முடிவை ஞானகாண்டத்தை அனுட்டித்தற்கு உரிய பிரணவத்தால் விருத்தி அடையத் தக்க யோக ஞான ஆசாரமுள்ள பல வருணத்தாரும் அடைந்து அந்தமில் இன்பம் பெற்றனர் எனக் கூறும் பல நூல்களும் உறுதிப்படுத்தும். “உயர்ந்தோர்க் குரிய ஓத்தினான” என்று தொல்காப்பியனார் கூறியதும் அக்கருத்து பற்றியதே.

எவ் வருணத்துப் பிறந்திருப்பினும் பூர்வ புண்ணிய பலம் உடையவர்களுக்கே பெரியோர்களால் பிரணவம் திருவைந்தெழுத்து முதலியன உபதேசிக்கப்படும், நூலும் கிடைக்கும்.

ஒழுக்கம் நிரம்ப ஏற்படுத்திய ஜாதி வேறுபாடு அவ்வொழுக்கத்திலிருந்து நித்திரை செய்வோன் கைப்பொருள் போலத் தானே நீங்கப் பெறுதல் தகுதி உடையவர்கள் இடத்தே ஆகும்.

பிராமணத் தன்மைக்குரியது ஜீவன் அன்று; உடம்பன்று; ஜாதி அன்று; கல்வி அன்று; கருமம் அன்று; தருமம் அன்று என எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கிப் பிரம ஞான அனுபவம் உடையவனே பிராமணன் என்று வஜ்ரசூசி உபநிடதம் முடிவு கூறுகின்றது. இது உபநிடதங்கள் பலவற்றிற்கும் சம்மதம். இதுவே அநுபவத்திற்கும் ஒத்தது.

இவ்வாறு உண்மையை அறியாமல் வேதம் ஒரு சாதியாருக்கே உரியது எனக் கூறுவார் உரை எல்லாம் நடுவு நிலைமை பிறழ்ந்து கூறும் அநீதி என்க.

21 Replies to “சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2”

  1. It is a nice article. All religous leaders should try to bring this in practice.

    If you look at our Gods, most of them (in fact, none) are not Brahmins. Name, Shiva, Vishnu, Brahma, Rama, Krishna, Subrahmanya etc., Everybody has got Poonal as Poonal is common & is supposed to be worn by everybody (Many communities were not wearing as it is inconvinient for them while performing their work).

    Hindus should unite by leaving aside the caste bias.

  2. // வேதம் ஓதவும் கேட்கவும் அதிகாரம் இல்லாதவர் வேதத்தின் மூலமான பிரணவத்தையும் உச்சரிக்கக் கூடாது என்பதுவும் சில வேதியர் தீர்மானம்.

    திருப்பானாழ்வார் நாலாவது வர்ணத்தையும் தாண்டியவர் – அவரது முதல் மூன்று பாசுரத்தின் முதல் எழுத்துக்கள்

    “அ”மலன் ஆதிபிரான் ….

    “உ” வந்த உள்ளத்தனாய்

    “ம” ந்திப்பாய் வடவேங்கட

    இந்த “அ” “உ” “ம” தானே ப்ரணவமாகிறது – இதை நான்கு வர்ணத்திற்குள்ளும் அடங்காதவர் அழகாக பயன் படுத்தி உள்ளாரே

    நம்மாழ்வாரும் இதே போல் தான்

    அவரது முதல் பாசுரத்தின் முதல் மூன்று வரிகளின் முதல் எழுத்துக்கள்

    “உ” யர்வற உயர்வரம் ….
    “ம” யர்வற மதின் நலம்…
    “அ” யர்வறு அமரர்கள்…

    இங்கேயும் அ” “உ” “ம” – இவர் கூட மூவர்னத்தை சேர்ந்தவர் அல்லவே

  3. “வேதத்தை எல்லோரும் படிக்க கூடாது என்று வேதத்திலே எங்காவது சொல்லியிருக்கிறது என்பதை யாராவது காட்ட முடியுமா?” இந்த கேள்வியை விவேகானந்தர் கேட்டார்.

    “வேதத்திலேயே காட்ட முடியுமா?” – என்று தெளிவாக கேட்டார்.

    அதே கேள்வியை நானும் இங்கே வைக்கிறேன்.

    பெண்களும் படிக்கலாம். படித்தால் என்ன? வேண்டுமானால் அவர்கள விலக்காக இருக்கும் நாளில் படிக்க வேண்டாம், அதையும் அவர்களுக்கு அக்காலத்திலே வயிறு வலி போன்ற உபாதைகள் இருப்பதால் சொல்கிறோம்.அவர்களுக்கு படிக்க முடியும் என்றால் அந்த நாட்களில் கூட படிக்கலாம்.

    நம் உடலிலேயே மலம் இருக்கிறது. காலையில் மலம் கழித்த பின் நம் உடலில் மலமே இல்லாமல் போய் விடுகிறதா? மறுபடியும் உணவு சீரணம் ஆகி மலம் உருவாகவில்லையா? அந்த மலத்தை சுமந்து கொண்டுதானே எல்லா வேத படிப்பு, பாராயணம், வேள்வி , அர்ச்சனை எல்லாம்? அப்படியானால் பெண்களுக்கு மட்டும் என்ன தனிக் கட்டளை?

    பெண்கள் படிக்கலாம், எல்லா சாதியினரும் படிக்கலாம்.

    தலித் சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்கள் படிக்க முழு உரிமை தகுதி உண்டு. உலகிலே எல்லோரும் படிக்கலாம். ஞான காண்டம் பகுதி முக்கியமானது.

    பெரும்பாலான உப நிடதங்கள்- குறிப்பாக கட உபநிடதம், முண்டக உபநிடதம் … இவை போன்றவை இணையத்திலே டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

    அடிமை நிலையில் இருந்து விடு பட்டு சுதந்திர நிலை அடைய விரும்புபவர் படிக்கலாம்.

    இந்த உலகத்திலே நாம் சுகமாக வாழப் போகிறோம் என கனவு காண்பவர் மயக்கம் தெளிய வூதுகிற சங்கை வூதுவோம். பின்னர் அவரவர் விருப்பம்.

  4. ஐயா முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
    மிக நன்றி இதை எழுதி பகிர்ந்தமைக்கு.
    இதன் முதல் பாகம் எங்கே ?
    கிடைக்கவில்லையே ?
    தயவுசெய்து சிவானந்த லஹரியின் தமிழாக்கம் வெளியிட முடிந்தால் செய்தருளவும்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  5. // “வேதத்திலேயே காட்ட முடியுமா?” – என்று தெளிவாக கேட்டார்.

    அதே கேள்வியை நானும் இங்கே வைக்கிறேன். //

    இது பற்றி நான் எனது பழைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ——————–
    வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள் –
    https://jataayu.blogspot.com/2007/03/blog-post_08.html

    வேதம் ஒரு குறிப்பிட குழுவுக்கு மட்டும் உரியது என்ற கருத்து வேதங்களில் எங்குமே இல்லை. வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த சத்யகாம ஜாபாலன் கதையை உபநிஷதத்தில் படித்திருப்பீர்கள். வேதங்களைத் தொகுத்த வியாசரே மீனவப் பெண்ணின் மகன் தான். சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்தை எடுத்துக் காட்டி சுவாமி விவேகானந்தர் இதனை அழகாக விளக்குகிறார்.

    “yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
    Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha”

    Just as I am speaking these blessed words tothe people,
    in the same way you also spread these words among all men and women –
    the Brahmanas, kshtriyas, vysayas, Sudras andall other,
    whether they are our own people or aliens.

    வேத ரிஷி கூறுகிறார் – “(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். நம் மக்களாயினும் சரி, வேறு மக்கள் ஆயினும் சரி, எல்லாரிடமும் இச்சொற்களைப் பரப்புங்கள்”
    ——————–

  6. நண்பரே

    //
    பெண்களும் படிக்கலாம். படித்தால் என்ன? வேண்டுமானால் அவர்கள விலக்காக இருக்கும் நாளில் படிக்க வேண்டாம், அதையும் அவர்களுக்கு அக்காலத்திலே வயிறு வலி போன்ற உபாதைகள் இருப்பதால் சொல்கிறோம்.அவர்களுக்கு படிக்க முடியும் என்றால் அந்த நாட்களில் கூட படிக்கலாம்.
    //

    படித்தலும் ஓதுதலும் வேறு என்பதை அறிந்து நீங்கள் கூறுவதானால் உங்களின் கூற்றில் சில உண்மைகள் இருக்கிறது என ஏற்கலாம் – மற்றபடி இந்த பெண்கள் ஏன் வேதம் உரைப்பது கூடாதென்பதை அறிய நாம் வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் – வேதம் என்பது ஸ்ருதி – நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்ருதி என்பது சொல்லப்படுவது – வேதம் உரைப்பது அவ்வளவு எளிதல்ல – அந்த சப்தங்களை சரியாக உச்சரிக்க வேண்டும். சரியான சப்தம் இல்லையென்றால் வேதமே இல்லை – சொமஹா என்று வரும் இடத்தில அதே பொருள் படும் சந்திரஹா என்று நாம் மாற்றி கூற முடியாது. பல் போனவர்கள் கூட வேத பாராயணம் செய்ய கூடாதென சொல்வார்கள் – இதன் நிமித்தமாகவே பெண்கள் வேத பாராயணம் செய்வதில் கட்டுப்பாடு

    //அப்படியானால் பெண்களுக்கு மட்டும் என்ன தனிக் கட்டளை?

    இது பல பிரச்சனைகளை கிளப்பும் – நமக்கு பொதுவாக பல விதிமுறைகள் உண்டு – இந்த விலக்கின் போது மட்டுமல்லாமல் பல நேரங்களில் வேத பாராயணம் செய்வதோ, கோவிலுக்கு செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது – குழந்தை பிறந்தால் வ்ருத்தி, ஒருவர் இறந்தால் தீட்டு – இந்த காலங்களிலும் தடை உள்ளது – இவை வயிறு உபாதை, மலம் இதற்கும் அப்பாற்பட்ட விதி முறைகளே

    இந்த மலப்ரிச்சனையை தவிர்க்கத்தான் உணவு கட்டுப்பாடு உள்ளது – ஒரு எடுத்துகாட்டாக – இறந்து போன ஒருவருக்கு திவசம் செய்கிறோம். செய்யும் கர்த்தா திவசத்தின் முந்தைய நாள் ராத்திரியிலிருந்து உணவு உட்கொள்ள கூடாது – திவசத்தன்று, திவசம் முடியும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்

  7. நண்பரே Sarang,

    //படித்தலும் ஓதுதலும் வேறு என்பதை அறிந்து நீங்கள் கூறுவதானால்//

    நன்றி. படிப்பது – கற்பது, மனப் பாடம் செய்வது, ஒப்பிப்பது.
    ஓதுவது- வேள்வியில் பங்கு பெற்று மந்திரங்களை சொல்வது

    //மற்றபடி இந்த பெண்கள் ஏன் வேதம் உரைப்பது கூடாதென்பதை அறிய நாம் வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் – வேதம் என்பது ஸ்ருதி – நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்ருதி என்பது சொல்லப்படுவது – வேதம் உரைப்பது அவ்வளவு எளிதல்ல – அந்த சப்தங்களை சரியாக உச்சரிக்க வேண்டும். சரியான சப்தம் இல்லையென்றால் வேதமே இல்லை – சொமஹா என்று வரும் இடத்தில அதே பொருள் படும் சந்திரஹா என்று நாம் மாற்றி கூற முடியாது. பல் போனவர்கள் கூட வேத பாராயணம் செய்ய கூடாதென சொல்வார்கள் – இதன் நிமித்தமாகவே பெண்கள் வேத பாராயணம் செய்வதில் கட்டுப்பாடு//

    பெண்க‌ள் ச‌ரியாக‌ உச்ச‌ரிக்க‌ மாட்டார்க‌ளா? எந்த‌ அடிப் ப‌டையில் இதை நீங்க‌ள் சொல்கிறீர்க‌ள்? கல்வியில், உச்ச‌ரிப்பில் பேச்சில், இசையில் பெண்க‌ள் சிற‌ந்து விள‌ங்க‌வில்லையா? ஸ்ரீ மதிகள் M.S.S, பட்டம்மாள் , MLV பாட்டு கேட்ட பிறகும் அப்படி சொல்ல முடியுமா?

    //இது பல பிரச்சனைகளை கிளப்பும் – நமக்கு பொதுவாக பல விதிமுறைகள் உண்டு – இந்த விலக்கின் போது மட்டுமல்லாமல் பல நேரங்களில் வேத பாராயணம் செய்வதோ, கோவிலுக்கு செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது – குழந்தை பிறந்தால் வ்ருத்தி, ஒருவர் இறந்தால் தீட்டு – இந்த காலங்களிலும் தடை உள்ளது – இவை வயிறு உபாதை, மலம் இதற்கும் அப்பாற்பட்ட விதி முறைகளே//

    நான் சொன்னது படிப்பதற்கு தான். காலையில் எழுந்து பல் விளக்காமல், முகம் கழுவாமல் அப்படியே விழாவிற்கு போக முடியாது என்பது காமன் சென்ஸ் தான் நண்பரே.

    //இந்த மலப்ரிச்சனையை தவிர்க்கத்தான் உணவு கட்டுப்பாடு உள்ளது – ஒரு எடுத்துகாட்டாக – இறந்து போன ஒருவருக்கு திவசம் செய்கிறோம். செய்யும் கர்த்தா திவசத்தின் முந்தைய நாள் ராத்திரியிலிருந்து உணவு உட்கொள்ள கூடாது – திவசத்தன்று, திவசம் முடியும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்//

    அப்படி இருந்தால் கூட உடலிலே சிறிது கூட சிறுநீரோ, மலமோ இல்லை எனக் கூற முடியுமா? இது எல்லாம் நமது குற்றம் இல்லை நண்பா.

    நாம் முடிந்தவரை சுத்தமாக இருக்க முயற்ச்சி செய்வோம். நம்முடைய சம்சாரமே (நம் அறியாமையே) மலம் தான்.

    ஆயிரம் காரணம் கட்டி ஆட்டையைப் போடாதீர்கள். இந்த கர்ம காண்டங்களை நீங்கள் சந்தோசமாக வைத்துக் கொண்டு, ஓதுங்கள், வேள்விகளை செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள், குடிக்காமல் இருங்கள்.

    இந்த ஞான கண்ட பகுதியை- உப நிசத்துக்களை எல்லோருக்கும் பொதுவாக்குங்கள். அதுவும் உங்களுக்கு கடினம் என்றால் அவர்களாகவே மனதிலே ஆரய்ந்து அந்த உணமைகளை புரிந்து கொள்வார்கள்.

  8. நண்பரே

    //பெண்க‌ள் ச‌ரியாக‌ உச்ச‌ரிக்க‌ மாட்டார்க‌ளா? எந்த‌ அடிப் ப‌டையில் இதை நீங்க‌ள் சொல்கிறீர்க‌ள்? கல்வியில், உச்ச‌ரிப்பில் பேச்சில், இசையில் பெண்க‌ள் சிற‌ந்து விள‌ங்க‌வில்லையா? ஸ்ரீ மதிகள் M.S.S, பட்டம்மாள் , MLV பாட்டு கேட்ட பிறகும் அப்படி சொல்ல முடியுமா?

    M.S.S, பட்டம்மாள் , MLV பாட்டு வேறு, வேதத்தில் வரும் சப்தங்கள் வேறு ( நானும் நிறைய பாட்டு கேட்பவன் என்ற முறையில் கூறுகிறேன்) – நீங்கள் வேண்டும் என்றால் ஒரு ஆய்வு நடத்தி பாருங்கள். வேத சப்தங்களை அப்படியே உச்சரிப்பது ஆண்களுக்கே மிக கடினமானது – சிறிய வயதிலேயே பழகவில்லை என்றால் ஆண்களுக்கும் மிக சிரமமாக இருக்கும் (சந்தை சொல்லிதிதரும் யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம்). அழகாக உச்சரிபதர்க்கும் துல்லியமாக உச்ச்சரிபதருக்கும் வித்யாசம் உள்ளது. பல சிறந்த பெண் பேச்சாளர்கள் உள்ளனர் – வேண்டும் என்றால் அவர்களை வேதத்தை முழுவதுமாக உச்சரிக்க சொல்லி கேட்டுப்பாருங்கள் அப்புறம் உங்கள் கருத்தை கூறுங்கள் (நீங்கள் அறிவியல் ரூபமாக எதையும் யோசிப்பவர் என்பதனால் சொல்கிறேன்) – எனக்கு தெரிந்த நன்கு உச்சரிக்கும் பெண்களிடம் நான் முயற்சி செய்து விட்டேன். பொதுவில் பெண்களுக்கு மெல்லியே அழகிய குரல் வளம் தான் இருக்கும் – பாடகர்களுக்கு முச்சு பிடிப்பது தான் முக்கியம் – சப்த பிரயோகம் அல்ல. இன்னும் சில நாட்களுக்கு பிறகு வேள்வி செய்வதற்கு என்னவெல்லாம் தேவை என்று விரிவாக எழுதிகிறேன்.

    இது அறிவியல் சார்ந்த உண்மை தானே –

    //
    ஆயிரம் காரணம் கட்டி ஆட்டையைப் போடாதீர்கள். இந்த கர்ம காண்டங்களை நீங்கள் சந்தோசமாக வைத்துக் கொண்டு, ஓதுங்கள், வேள்விகளை செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள், குடிக்காமல் இருங்கள்.
    ///

    நான் தெளிவாக தானே சொல்லிருந்தேன் 🙁 – எல்லா காண்டத்தையும் பெண்கள் தாரளமாக படிக்கலாம் அனால் பாராயணம் செய்வது கடினமானது என்பது அறிவியல் சார்ந்த உண்மையே – சில பெண்கள் இதையும் செய்வார்கள் – ஆனால் பொதுவில் பெண்களுக்கு வேத பாராயணம் செய்வது மிக கடினமனடாகவே இருக்கும். இதன் காரணமாகவே பெண்கள் சந்தை பழகவோ, வேள்வியில் ஈடுபடவோ கட்டுப்பாடு – இது ஒன்னும் அவர்களுக்கு எதிரான சதி அல்ல, நல்ல எண்ணத்துடன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடே

    //நாம் முடிந்தவரை சுத்தமாக இருக்க முயற்ச்சி செய்வோம். நம்முடைய சம்சாரமே (நம் அறியாமையே) மலம் தான்.
    //

    நானும் இதையே தான் வலியுறுத்தினேன்

    – வாடினேன் வாடி வருந்தினேன் பெரும் துயரிடும் பையில் பிறந்து

  9. நண்பரே,

    //இன்னும் சில நாட்களுக்கு பிறகு வேள்வி செய்வதற்கு என்னவெல்லாம் தேவை என்று விரிவாக எழுதிகிறேன். //

    நல்லது, வரவேற்கிறோம் எழுதுங்கள்.

    //அழகாக உச்சரிபதர்க்கும் துல்லியமாக உச்ச்சரிபதருக்கும் வித்யாசம் உள்ளது. பல சிறந்த பெண் பேச்சாளர்கள் உள்ளனர் – வேண்டும் என்றால் அவர்களை வேதத்தை முழுவதுமாக உச்சரிக்க சொல்லி கேட்டுப்பாருங்கள் அப்புறம் உங்கள் கருத்தை கூறுங்கள் (நீங்கள் அறிவியல் ரூபமாக எதையும் யோசிப்பவர் என்பதனால் சொல்கிறேன்) – எனக்கு தெரிந்த நன்கு உச்சரிக்கும் பெண்களிடம் நான் முயற்சி செய்து விட்டேன். பொதுவில் பெண்களுக்கு மெல்லியே அழகிய குரல் வளம் தான் //

    ஓட்டப் பந்தயத்திலோ , உயரம் தாண்டுதலிலோ பெண்கள் ஆண்களைப் அளவுக்கு செயலாற்ற முடியாது என்றால் அதை அறிவியல் பூர்வமானது என்று கூறலாம்.

    ஒவ்வொரு வருடமும் படிப்பிலே பெண்கள் ஆணைகளை விட சிறப்பாக தேர்ச்சி பெறுகின்றனர்.

    பாட்டிலே வரும் உச்சரிப்பு வேறு, வேதத்திலே வரும் உச்சரிப்பு வேறு என்கிறீர்கள். வேதம் என்பது சமஸ்கிருத மொழி வார்த்தைகளை வைத்து எழுதப் பட்டதுதானே?

    விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பல கீர்த்தனைகள் சமஸ்கிருத மொழியிலே உள்ளன. வேதங்களுக்கு மட்டுமாக சமஸ்கிருதத்திலே தனியாக வார்த்தைகள் உள்ளனவா? மம, மாதுஹு, பிதாமஹா, பிரபிதாமஹா இப்படி பல வார்த்தைகள் எல்லா இடத்திலும் புழங்கும் வண்ணம் உள்ளன.

    நீங்கள் MSS போல சிறப்பாக பாடக் கூடியவர்களை வேதம் சொல்லச் சொல்லி, அவர்கள் சரியாக சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டு பிடித்தீர்களா?

    யாஞ்க்வல்ங்க ரிஷியின் முக்கிய சீடர்களாக இருந்தது இரண்டு பெண்கள் தான்.

  10. ராம்,

    உல‌கிலே க‌ட‌வுளின் பெயரால் ப‌ல்வேறு இன‌ அழிப்பு, இன‌ப் ப‌டுகொலை, காட்டு மிராண்டி, காம‌ கொடூர‌ க‌ருத்துக்க‌ள் கூறப்ப‌ட்டு விட்ட‌ன‌.

    அவ‌ற்றை எல்லாம் செம்மைப் ப‌டுத்தாவிட்டால் ம‌த வெறியும், இன‌ப் ப‌டுகொலைக‌ளை நியாய‌ப் ப‌டுத்துவ‌தும் அதிக‌ரிக்கும்.

    பிற‌ மார்க்க‌ங்க‌ளில் உள்ள‌ ச‌கிப்புத் த‌ன்மை க‌ருத்துக்க‌ளையும் அவ‌ர்க‌ளுக்கு நினைவூட்ட‌ வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை.

  11. நண்பரே

    //
    நீங்கள் MSS போல சிறப்பாக பாடக் கூடியவர்களை வேதம் சொல்லச் சொல்லி, அவர்கள் சரியாக சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டு பிடித்தீர்களா?
    //

    நீங்கள் சொல்வதை பார்த்தல் வேதம் சொல்ல கர்நாடக சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் போல இருக்கே – MSS போல குரல் வளம் வேண்டும் என்றால் கூட ஒரு சிலரே தேறுவார்கள்

    நான் கேட்ட பெண்களுக்கு MSS அளவு குரல் சிறப்பாக இல்லை என்றாலும் அனைவரும் நல்ல குரல் வளம் உடையவர்களே – அவர்களுக்கு நன்கு பாடும் ஆற்றலும் நன்றாகவே இருந்தது

    //
    ஓட்டப் பந்தயத்திலோ , உயரம் தாண்டுதலிலோ பெண்கள் ஆண்களைப் அளவுக்கு செயலாற்ற முடியாது என்றால் அதை அறிவியல் பூர்வமானது என்று கூறலாம்.
    //

    உடலில் இருக்கும் வேறுபாடு குரலில் மட்டும் இருக்கக்கூடாதா

    //
    விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பல கீர்த்தனைகள் சமஸ்கிருத மொழியிலே உள்ளன. வேதங்களுக்கு மட்டுமாக சமஸ்கிருதத்திலே தனியாக வார்த்தைகள் உள்ளனவா? மம, மாதுஹு, பிதாமஹா, பிரபிதாமஹா இப்படி பல வார்த்தைகள் எல்லா இடத்திலும் புழங்கும் வண்ணம் உள்ளன
    //

    நான் என்ன பெண்களுக்கு சமஸ்கிருத உச்சரிப்பு வராது என்றா சொன்னேன்? 🙁

    ஒரு சமஸ்கிருத வார்த்தையை வெறுமே படிப்பதற்கும் வேத பாராயணம் சொல்லும் போது அதே வார்த்தையை உச்ச்சரிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு – “ததாசாஷ்தே” யஜுர் வேததில் வரும் இதை வெறுமே படிப்பதற்கும் சரியான “intonation” உடன் படிப்பதற்கும் எக்கசக்க வித்யாசம் உள்ளது. சமஸ்கிருத வார்த்தைக்கு என்று இப்படி ஒரு கட்டுப்பாடு கிடையாது – உத்தரனதிருக்கு பகவத் கீதையில் வரும் வாக்கியங்களை சாதரணமாக உச்சரித்தால் போதுமானது – இங்கு சப்தத்தை விட அர்த்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. அனால் வேத பாராயணத்தில் சப்தத்திர்க்கே முக்கியத்துவம் அதிகம்

    ராமா நீ சமானமெவரு என்று வெறுமே படிப்பதற்கும் பாடுவதற்கும் எத்தனை வித்யாசம் உள்ளது – இதை கரஹரப்ரிய என்ற வரையறைக்குள் எப்படி வேண்டுமானுலும் சங்கதி போட்டு பாடலாம் ஆனால் வேத வாக்கியம் அப்படி அல்ல – அதை எப்படி சொல்ல சொன்னார்களோ அப்படிதான் சொல்ல வேண்டும் – இதனால் தான் பாடுவது வெறும் வேதம் ஓதுவது வேறு என்றேன்

  12. பெண்க‌ளோ அல்ல‌து ஆண்க‌ளோ, அவ‌ர்க‌ளால் வேத‌ம் சொல்ல‌ முடியாது என்று பிற‌ரைப் ப‌ற்றி நாம் க‌ருத்து கூறுவ‌து வெகுளித் த‌ன‌மான‌து. ம‌ற்ற‌வ‌ரால் முடியாது என்று சொல்ல‌ ந‌ம‌க்கு உரிமையோ, திற‌மையோ இல்லை.

    யாராவ‌து த‌ன்னைப் ப‌ற்றி வேண்டுமானால் க‌ருத்து சொல்ல‌லாம். என்னால் முடியாது, என‌க்கு விருப்ப‌மில்லை என்று சொல்ல‌லாம்.

    பிற‌ரால் முடியாது என்று அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்பு குடுக்காம‌லே சொல்வ‌து, அவ‌ர்க‌ளும் க‌ற்றுக் கொண்டு விடுவார்க‌ளோ என‌ அஞ்சியே ஆர‌ம்ப‌த்திலே முட்டுக் க‌ட்டை போடுவ‌து ஆகும்.

    பாடுவ‌து வேறு, வேத‌ம் ஓதுவ‌து வேறாக‌வே இருக்க‌ட்டும். எப்ப‌டி சொல்ல‌ வேண்டுமோ, அப்ப‌டி கேட்ட‌தை அதே போல‌ அச்சு அச‌லாக‌ திருப்பி சொல்ல‌ வேண்டும்‍ – அவ்வ‌ள‌வுதானே.

    ஆண்க‌ளுக்கு எந்த‌ வ‌கையிலும் குறையாத‌ வ‌கையிலே பெண்க‌ளால் ஓத‌ முடியும் என்று நான் உறுதியிட்டுக் கூறுகிறேன்.

    வேத‌ பாராய‌ண‌த்தில் ச‌ப்த‌த்திற்க்கு முக்கிய‌த்துவ‌ம் குடுக்க‌ வேண்டும் என்றால் குடுப்பார்க‌ள்‍ ‍‍ அதிலே பிர‌ச்சினை இல்லை.

    ஆண்க‌ளை விட‌ வேத ம‌ந்திர‌ங்க‌ளை சிறப்பாக‌ உச்ச‌ரிக்க‌ கூடிய‌ , ஒரு ஆண் வேதத்தை ஓதிய‌ போது, ச‌ப்த‌ம் த‌வ‌று, இப்ப‌டி சொல்ல‌ வேண்டும் என்று திருத்தி சொல்லிக் காட்டிய‌ பெண்க‌ளை நான் பார்த்து இருக்கிறேன். அத‌னால் தான் இவ்வ‌ள‌வு தூர‌ம் எழுதுகிறோம்.

    வேதம் யாருக்கும் ப‌ட்டா பாத்திய‌தை இல்லை. இந்து ம‌த‌த்தை த‌ர்ப்பை சில‌ பேர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று அடைத்து குறுக்கி விட‌ முடியாது. இந்து ம‌த‌மும் வேத‌மும் இந்த‌ உல‌கில் உள்ள‌ எல்லோருக்கும் பொதுவான‌வை.

    க‌ட்டைப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பை ஏற்க முடியாது.முற்கால‌த்தில் பெண்களும் பூணூல் அணிந்து வேத‌ம் ஓதி உள்ள‌ன‌ர். யாஞ்க்வல்ங்க ரிஷியின் முக்கிய சீடர்களாக இருந்தது இரண்டு பெண்கள் தான்.

    ச‌ப்த‌ம் முக்கிய‌ம் தான், ச‌ரியாக‌ச் சொல்ல‌ வேண்டும், த‌ப்பும் த‌வ‌றுமாக‌ உள‌ருவ‌தை நான் ஆத‌ரிக்க‌வில்லை. அதே நேர‌ம் கொஞ்ச‌மாவ‌து அர்த்த‌த்தையும் தெரிந்து கொண்டு சிந்தியுங்க‌ள். வெறும‌னே ச‌ரியாக‌ ச‌ப்த‌ம் ம‌ட்டும் போட்டு பிர‌யோச‌ன‌மில்லை. ந‌ஹி ந‌ஹி ர‌க்ஷ‌தி டுக்ருங்க‌ர‌னே.

  13. நண்பர்களே

    வேதம் ஒதும் சண்டையில் சிக்காதீர்கள். இறைவனின் ஒரு பெயர் போதும் நம்மை கடைதேற்ற. முதலில் நாம் நம்மை தகுதி படுத்திக்கொண்டால், ஞானம் கைகூடும். ஞானமே வேதத்தின் முடிவு. பக்தியும், யோகமும், சத்சங்கமும், இறை அருளுக்கான தீவிர நாட்டமும் இருந்தால், எல்லாம் நம்மைத்தேடி வரும். நாம் எதைத் தேடியும் போக அவசியமில்லை.

    இறை அருள் எப்போதும் சுரந்து கொண்டிருகின்றது சூரியனை போல், நாம் நம்மை தாமரை போல் தயார் படுத்திக் கொண்டால் மலர்வது எளிது.
    பாம்பன் சுவாமிகள் தன்னை தயார் படுத்திக் கொண்டதால் அவரை தேடி மந்திர உபதேசம் வந்தது. இறை அருளும் பெற்றார்.

    நமக்கிருக்கும் காலம் மிகக்குறைவு ஆதலால் விவாதங்கள் தேவை இல்லை.
    நல்லோர் வீண் விவாதங்களில் இருந்குவதில்லை. நாம் நல்லோர் வழி செல்வோம். நம்மை அறிவோம், நம்மில் உரையும் திருவை அறிவோம்.

    நம சிவாய வாழ்க

  14. அய்யா நீங்கள் கூறுவது போல பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதற்கு என்ன சான்று உள்ளது.ஆதி சங்கரர் மண்டன மிஹிரருடன் வாதம் புரியும் போது நடுவராக இருந்தது அவரது மனைவி. அவரும் வேதத்தில் சிறந்தவர் எனப்படுகின்றார். இது நடந்தது வேத காலத்திற்கு பின், அப்பொழுதே இவ்வாறு என்றால் வேத காலத்தில் அதிக பெண்கள் இருந்துதான் இருக்க வேண்டும்.

  15. முன்பு ஒதுக்கி வைக்கவில்லை. அநேகமாக கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின் ஒதுக்கி வைக்கப் படுவது ,ஆணாதிக்கம் ஆகியவை அதிகமாகி இருக்கலாம்.
    முன்பு ஒதுக்கவில்லை , இப்போதும் ஒதுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

  16. திரு பாஞ்சஜன்யன் அவர்களே

    பெண்களை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை – மிக முக்கிமானடாக கருதப்படும் ப்ரிஹுதாரன்யாக உபநிஷத்தில் பெரும் பகுதி (முக்கியமான பகுதி) யஜ்னவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரீயிக்கும் இடையே நிகழும் பேச்சாக உள்ளது (பெண்கள் அதிக வேத ஞானம் கொண்டவர்கள் என்பதற்கு இது ஒரு சான்று) . பெண்கள் நலன் கருதி ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்று சொன்னால் உடனே முட்டுக்கட்டை போடுகிறார்கள், எங்கே முன்னேரிவிடுவார்களோ என்ற பயம் என்றெல்லாம் ஏறிட்டு சொல்ல அரமபித்து விடுகிறோம்

    நமெக்கெல்லாம் நாம் புதுமைவாதிகள் – பெண்கள் சமத்துவம் தெரியும் அனால் முன்னோர்கள் அப்படி இல்லை என்ற உணர்வு – ஏதோ நாம் தான் இத சிரம் தூக்கி ஏற்பதுதி கொடுப்பதாக நினைப்பு. முன்னோர்களை ஏன் வீணாக மட்டம் தட்டுகிறோம் எனக்கு புரியவில்லை

    நீங்கள் கேட்டதால் மத்வர் பகவத் கீதா முன்னுரையில் மேற்கோள் காட்டுவதை இங்கே சொல்கிறேன் (இந்த வரிகள் நாராயண அஷ்டாக்ஷர கல்பத்தில் வருகின்றன )

    – வேதாந்த ஞான அதிகார வர்ஜிதம் ச ஸ்த்ரியாதிகம் ….

    இது என்னவோ கீபீ பத்தாம் நூற்றாண்டுக்கு பல நூற்றாண்டு முன்னர் இயற்றப்பட்டது – இதன் பொருள் – வேதம் ஓத முடியாத பெண்களுக்கெனவே வியாசர் மகாபாரதத்தை இயற்றினார்

    இதுவும் இல்லாமல் – வேத பாராயணம் செய்வதற்கு உபநயனம் ஆகி யக்யோபவிதாரணம் இருக்க வேண்டும் – திரிகால சந்த்யா வந்தனம் செய்தே ஆகா வேண்டும் (இதற்க்கெல்லாம் வேதத்திலேயே பல மேற்கோள்கள் உள்ளன) – பெண்கள் எப்படி விளக்கின் போது சந்த்யா வந்தனம் செய்வார்கள்? அப்படி செய்யவில்லை என்றால் எப்படி வேதம் ஓத முடியும்

    பல பெண்களுக்கு வேத ஞானம் உண்டு – வேதம் கற்க கூடாது என்று எங்குமே சொல்லவில்லை – அவர்கள் வேத அத்யானம் செய்வது நல்லதல்ல என்பதே விளக்கம் – இதற்கு பெயர் பட்ட பஞ்சாயத்து இல்லை – நாட்டமை தனம் இல்லை. வேதம் எல்லோருக்கும் பொது தான் – அத்வைதத்தின் படி ஞானம் மட்டுமே வீடு பேரு அளிக்கும் – பெண்களுக்கு ஞானம் அதிகமாகவே உள்ளது

    பெண்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள்போல் திறன் புரிய முடியாது என்றால் அது நாட்டமை தீர்ப்பல்ல,வெகுளிதனமல்ல, அனால் முன்னோர்கள் பெண்களின் நலன் கருதி வேத பாராயணம் தேவை இல்லை என்றால் அது நாட்டாமை தீர்ப்பு 🙂 . இது முன்னுக்கு பின் முரணாக இல்லை?

    வேதத்தில் வருவது எல்லாம் பொது என்று வைத்துகொள்வோம் – அதர்வ சம்ஹிதையில் “black magic” வருகிறது – இதையும் பெண்கள் செய்யலாமா சொல்லுங்கள்? சமநீதி கோருவோர் கவனிக்க – விஷ்ணு ஸ்ம்ரிதி கூடாது என்று தனித்துவமாக சொல்கிறது – “women should NOT practice incantations with root”

    இதை தவிர ப்ரிகுதாரன்யாக உபநிஷத்தில் வேதம் ஓத என்னவெல்லாம் வேண்டும் என்று பல மேற்கோள்கள் உள்ளன – சில நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்

    தயவு செய்து உபநிஷத் அப்படி சொன்னால் அது தவறு அதை ஒத்துகொள்ள முடியாது என்று கூறி விடாதீர்கள் – அது “circular logic” ஆகிவிடும்

  17. பயனுள்ள விவாதத்தை நடத்தும் அன்பர்களே,
    ஒரு விவரத்தை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன். வேத மொழி சமஸ்க்ரிதம் அல்ல, அது கீரவாணி.
    இப்படிக்கு
    தமிழன்

  18. This problems will not arises in Tamil Vedhams. Any body can chant
    Thirumurai’s with Bhakthi. We will encourage our families to chant Thirumurai’s in our home and in our home functions.

  19. நாமே ஆசையினால் தூண்ட‌ப்ப‌ட்டு த‌வறு செய்தால் தான் அது அசிங்க‌ம் என‌க் க‌ருத‌ப் ப‌ட‌ முடியும். ஒரு ஆண், பெண்ணுட‌ன் உற‌வு கொண்டு விட்டு ,குளிக்காம‌ல் வேத‌ம் ஓதினால் அது த‌வறு. ஆனால் பெண்களுக்கு மாத‌ வில‌க்கு வ‌ருவ‌த‌ற்க்கு அவ‌ர்க‌ளை குற்ற‌ம் சொல்ல‌ முடியாது.

    என‌க்கு பிஸ்துலா என‌ப் ப‌டும் மூல‌ வியாதி ப‌த்தாண்டாக‌ உள்ள‌து. அறுவை சிகிச்சை செய்தும் குண‌ம் ஆக‌வில்லை. என் ஆச‌ன‌ப் ப‌குதியில் இருந்து சீழும் , இர‌த்த‌மும் நாள் முழுதும் வெளியேறுகிர‌து. அதோடுதான் நான் ச‌ந்தி நிய‌ம‌ம் , ம‌ன‌க் குவிப்பு முத‌லான‌ எல்ல‌வ‌ற்றையும் செய்கிரேன். அது த‌வ‌றா?

    இந்து ம‌த‌த்திலே தேவை இல்லாத‌ சில‌ க‌ட்டுக்க‌தைக‌ளும், ஒதுக்குத‌ல்க‌ளும் உருவ‌க்க‌ப் ப‌ட்டு விட்ட‌ன‌. அவ‌ற்றை எல்லாம் வில‌க்கி, புதிய‌ இந்து ம‌த‌ம் எல்லொரையும் நோக்கி பாயும் நிலையிலே ப‌த்தாம் ப‌ச‌லித் த‌ன‌ம் தேவை இல்லை. சூரிய‌ கிர‌ஹ‌ண‌ம் என்ப‌து சூரிய‌னை பாம்புக‌ள் பிடிப்ப‌தால் வ‌ருவ‌து என்று எல்லாம் கூடாத் தான் எண்ணி இருந்தார்க‌ள். அவ‌ர்களிட‌ம் இருந்த‌ க‌ருவிக‌ளை வைத்து அக்கால‌த்தில் அவ‌ர்க‌ள் வூகித்த‌து அப்ப‌டி. அவ‌ர்க‌ள் மேல் தவ‌று இல்லை. ஆனால் இந்த‌க் கால‌த்திலும் நாம் அதையே ந‌ம்பினால் நாம் தான் த‌வ‌று செய்த‌வ‌ர்க‌ள். இந்து ம‌த‌ம் உண்மைக்கு முழு அதிகார‌ம் கொடுக்கும் ம‌த‌ம், எல்லோரையும் ச‌மமாக‌ப் பாவிக்கும் ம‌த‌ம்.

    ச‌மூக‌ங்க‌ளுக்காக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌ சாதி அமைப்பை, இந்து ம‌த‌த்தின் மேலே ஏற்றி, அதை சிர‌ம‌ப் ப‌டுத்திய‌து போதும்.

    பார்ப்ப‌ன‌ர் ம‌ட்டும் வேத‌ம் ஓத‌ அனும‌திக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். இன்றைக்கு 99% பார்ப்ப‌ன‌ர் வேத‌ம் ப‌யிலுவ‌து இல்லை. என‌வே பிற‌ பிரிவின‌ரும் வேத‌ம் ஓத‌ வ‌ந்தால் அவ‌ர்களுக்கு ந‌ன்றி சொல‌வ‌தை விடுத்து, அதை முட்டுக் க‌ட்டை போட்டு, மிச்ச‌ சொச்ச‌ம் வ‌ழ‌க்கில் இருக்கும் வேத‌ பாட‌ங்க‌ளையும் ஒரே அடியாக‌ காணாம‌ல் போட‌ப் போகின்ர‌ன‌ர், ப‌ழ‌மை வாதிக‌ள்.

    பைய‌ன் பேர‌ன் எல்லாம் அமேரிக்காவில் இருப்பார்க‌ள், இங்கே இருப்ப‌வ‌னும் காசுக்காக‌ காலை முத‌ல் இர‌வு வ‌ரை அலைவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு வேத‌மும் தெரியாது, ஒன்றும் தெரியாது. இவ‌ர்க‌ளும் ப‌டிக்க‌ மாட்டார்க‌ள். இங்கே இருக்கும் ம‌ற்ற‌வ‌ர்களையும் ப‌டிக்க‌ விட‌ மாட்டார்க‌ள். ( Edited and Published)

  20. நான்கு வர்ணங்கள் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆகி விடமுடியாது, வேதத்தில் பாண்டித்யமும் கடும் வாழ்க்கை நெறியுமே ஒருவனை பிராமணன் ஆக்குகிறது. இதற்கு வேதக்கதைகளும் இதிகாச புரானங்களுமே சாட்சி.

    எந்த வர்ணத்தவருக்கும் பெண்டிருக்கும் மோட்சபதவியும், பரமபதமும் நிராகரிக்கப்படுவதில்லை, நாமசங்கீர்த்தனம் மூலம் எவரும் இதைப்பெறலாம். வேதம் ஓதுவதனால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது. பெண்டிரும் சூத்திரரும் வேதம் ஓதத் தகுதி இல்லை என்பதை, உயர்நிலைப்பள்ளியில் பயிலுபவன் post graduation தேர்வு எழுத முற்படுவது போன்று. அவர்களும் பாண்டித்யமும் ஞானமும் பெற்றால் வேதம் ஓதத் தகுதி ஏன் இல்லை? ஆனால் எந்தத் தகுதியையும் முயலாமல் வேதம் ஓதுவது ஒரு உரிமை என்பதுபோல் பேசுவதற்கு வேதம் கல்லாத பிராமணனுக்குக் கூட உரிமை இல்லை.

    இடைக்காலத்தில் சில சுயநலமிகள் தங்கள் லாபத்திற்காக இதை பிறப்பின் அடிப்படையில் விளக்கி இருக்கலாம். ஆனால், வேதத்தில் உள்ள சில நிகழ்வுகளும், வியாசர் பராசரர் போன்ற ரிஷிகளின் கதைகளும், இராமானுஜர் போன்ற மகான்களின் வாழ்க்கைமுறையும் , எவரும் முயன்று வேதம் ஓதும் தகுதியைப் பெறலாம் என்பதையே காட்டும். அன்றி மாற்றி interpret செய்வது, நம்மை பிரித்தாளும் அரசியல்வாதிகளுக்கும், பிற மதத்தினருக்குமே நம்மை இரையாக்கும்.

    இத்தகைய கட்டுப்பாடுகள் வேதம் மற்றும் சாஸ்த்திரப் பிரமாணங்களைத் தவறாக எடுத்தாள்வதைத் தடுத்து, அவற்றின் புனிதத்தன்மையை காப்பதற்காக இடப்பட்டிருக்கலாம்.

    சமூகத்தில் பிற்பட்டவர்களிடம் மற்றவர்கள் பைபிளைக் கொடுக்கும் முன் நாம் கீதையைக் கொடுத்து அவர்களை நம்மில் ஒருவர் ஆக்கலாமே. அதற்கு ஒன்றும் தடை இல்லையே!

  21. தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘திருமாலை’யில் கூறுவதைப் பாருங்கள்:
    “அடிமையில் குடிமையில்லா அயல்சதுப் பேதிமாரில்
    குடிமையில் கடைமைப் பட்ட குக்கரில் பிறப்பரேலும்
    முடியினில் துன்பம் வைத்தாய் மொயகழர்க் கன்பு செய்யும்
    அடியரை யுக்தி போலும் அரங்கமா நகருளானே”
    ‘திருத்துழாய் மாலை அணிந்தவனே! உனக்குக் கைங்கர்யம் செய்வதில் ஊக்கமில்லாதவராய் நான்கு வேதங்களையும் ஓதினவரான வேதியரைக்காட்டிலும் குடிப்பிறப்பில் கீழோரான சண்டாளர்களுக்கும் கீழ்ப்பட்டு பிறந்தாலும் உன் திருவடிகளுக்கு பனி செய்யும் அடியவர்களையே நீ உகக்குவையன்றோ!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *