யார் நப்பின்னை ?

தமிழ்  பக்தி  உலகிலும் , இலக்கிய  உலகிலும் , தனியிடத்தைப்  பெற்ற மர்மப்  பெண்  நப்பின்னை !

பலரும்  அறிந்த  வகையில்  திருப்பாவையிலும், பழமை  இலக்கியவாதிகள்  தெரிந்து  கொண்ட  வகையில்  ஓரிரு  பழம்  தமிழ்  இலக்கியங்களிலும்  ஒளிந்து கொண்டுள்ள இந்த  நப்பின்னை , ஒரு  புரியாத  புதிர்தான்.

nappinnai03இவள்  பெயர்  நப்பின்னைதானா? அல்லது  ஆயர்  குடியில்  இளையவளாகப் பிறந்ததனால் , நம் – பின்னை  என்று  பெயர்  பெற்றவளோ? ஆயர்  மகளான  இவள்  கண்ணனின்  மாமன்  மகளோ ? கண்ணனுக்கு  மனைவியென்று ஆழ்வார்களால்  பாடப்  பட்ட  இவளைப்  பற்றி எந்த  வடபால்  இலக்கியமும்  – கண்ணன்  சரிதையைக்  கூறும்  பாகவதம்  போன்றவையும் ஒன்றும்  கூறவில்லையே ?  இப்படிப்  பல  கேள்விகள்  நப்பின்னையைப்  பற்றி உள்ளன .

யார்  இந்த  நப்பின்னை  என்ற  ஒரு  ஆராய்ச்சியே  இக்கட்டுரை.

முதலில்  நப்பின்னை என்ற  பெயரின்  பொருளைத்  தேடுவோம் .நப்பின்னை , நம்பி  என்னும்  இரண்டு  சொற்களுமே  தங்கை  அல்லது  தம்பியைக்  குறிப்பதாக  வழக்கில்  இருந்திருக்கின்றது . சொந்த  தம்பி , தங்கை  என்றில்லை, பொதுவாகவே  வயதில்  இளையவர்களை  இவ்வாறு  விளித்திருக்கிறார்கள். யாரையாவது  பார்த்தால் , ‘என்ன  தம்பி , நல்லா இருக்கீங்களா? ’ என்று  ‘தம்பி ’ முறை  சொல்வது  போல , தம்பிக்கு  பதிலாக  நம்பி  என்ற  வார்த்தை  வழக்கில்  கூப்பிடுவதாக  இருந்திருக்கின்றது  என்பதை  சீவக  சிந்தாமணியில்  காணலாம் . சீவக  சிந்தாமணியில்  482 ஆவது  பாடலில் , நப்பின்னை  என்ற  சொல்லும்  வருகிறது . (விளக்கத்தைப் பிறகு பார்ப்போம்.) இந்தச்  சொல்லை விவரிக்கையில் , உரை  ஆசிரியர்  நச்சினார்க்கினியர் , “‘ந ’கரம்  சிறப்புப்  பொருள்  உணர்த்தும்  ஓர்  இடைச்  சொல் ” என்று  விளக்குவதால் , பின்னை  அல்லது  நப்பின்னை  மற்றும்  நம்பி  ஆகிய  இவ்விரு  சொற்களும் , வயதில்  இளைய  பெண் , ஆண்  பாலரைக்  குறிக்கும்  பொதுச் சொற்களாக  வழக்கில்  இருந்திருக்கின்றன  என்று  தெரிகிறது .

பின்னை அல்லது பிஞ்சை அல்லது நப்பின்னை என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில் வருகின்றன. ஆய்ச்சியர் குரவையில் வரும் இந்த சொற்களும். அவற்றைத் தொட்டு வரும் பொருளும், இவள் தங்கையா அல்லது தாரமா என்று இருவேறு விதமாகப் பொருள் கொள்ளும் வண்ணம் உள்ளன. முதலில் சிலம்பு கூறும் செய்திகளை அலசுவோம்.

சிலப்பதிகாரத்தில் பின்னை

கோவலன் பழியில் சிக்கிய வேளையில், ஆயர் சேரியில் துர்நிமித்தங்கள் தெரிந்தன. கன்று கறவைகள் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அத்தகைய வேளையில், முன்பு கோகுலத்தில் கண்ணன் தன் முன்னவனுடனும், பின்னையுடனும் ஆடிய பாலசரிதத்தை தாமும் ஆடினால், துயர் நீங்கும் என்று ஆய மகள் மாதரி கூறுகிறாள்.

“ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே;”

என்று மகளையும் மற்றவர்களையும் அழைக்கிறாள்.

பால சரிதை என்னும் பகுதி , கண்ணனின் கதையைக் கூறும் ஹரி வம்சத்தில் வருகிறது. இதையே பாஸர்  என்பவர் நாட்டிய நாடகமாகத் தந்துள்ளார். வடமொழியில், முதன் முதலில் எழுதப் பட்ட நாட்டிய நாடகம் இது. மாதரி ‘வால சரிதை’ என்று கூறுவது, இந்த பால சரிதா-வாகத்தான் இருக்க வேண்டும். ‘பா’  – ‘வா’ என்று  இடம் மாறுதல் தமிழில் உண்டு.

கண்ணனின் பால சரிதையைப் பாலைப் பண்ணில் அமைத்து, குரவை ஆடினர். நடன அமைப்பு பற்றி சிலம்பு கூறுவதை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நன்கு விளங்கும் வண்ணம் எழுதியுள்ளார்.

அதன் படி, ஏழு பெண்கள் ஏழு ஸ்வரங்களாக இருப்பார். ‘ச’ முதல் ஆரம்பிக்கும் ஏழிசையும், தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று வழங்கப்படும். இவை பற்றிய குறிப்புகளை திவாகர நூற்பாக்களில்  காணலாம். இவை முறையே   ச  முதல் (ஷட்ஜம்) நி வரை (நிஷாதம்) உள்ள ஸ்வரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் மாத்திரை அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குரலும் (ஷட்ஜம்), இளியும் (பஞ்சமமும்) ஆதாரமானவை. ரிஷபம் எனப்படும், இரண்டாவதான துத்தம், குரலைத் தொக்கியே – அதாவது ஷட்ஜத்தை  ஒட்டியே இருக்கும்.

இந்த ஏழு ஸ்வரங்களும் பலவிதமாக  ஒன்றுடன் ஒன்று இணைந்து  ராகம் – அதாவது தமிழில் ‘பண்’ என்று சொல்லப்படும் பல வகைப் பண்கள் எழுந்துள்ளன. ஆய்ச்சியர் குரவையில் வருவது, ஆய்ப் பாலைப் பண். இது பாலைப் பண்களில் ஒரு வகை.

குரவை என்று நடனம் ஆடும் பொழுது, இந்தப் பண் வகையில், ஸ்வரங்கள் எவ்வாறு சேருகின்றனவோ, அந்த வகையில், நடனமாடும்  ஏழு பெண்களும் சேர்ந்து, சேர்ந்து பண் வகையைக் காட்டி ஆடுகின்றனர்.
இதில், ஷட்ஜம் என்னும் குரல் வகையை மாயோன் என்னும் கண்ணனாக உருவகப்படுத்தியுள்ளனர். அடுத்த முக்கிய ஸ்வரமான பஞ்சமம் என்னும் இளியை, பலராமனாக உருவகப்படுத்தி ஆடுகின்றனர். இந்த இருவரை (இரு ஸ்வரங்களை) ஒட்டியே மற்ற ஸ்வரங்களும் (பெண்களும்) சேர்ந்து, பிரிந்து ராகம் என்னும் பண்ணைப் பலவிதமாகக் காட்டுகின்றனர். இதில், ரிஷபமான துத்தம், ஷட்ஜத்தை (குரல் என்னும் கண்ணன்) ஒட்டியே வரும். அந்த துத்தம் நப்பின்னை! இதுவே சிலம்பு விவரிக்கும் ஆய்ச்சியர் குரவை!

கண்ணனும், பலராமனும் எப்பொழுதும் ஒன்று கூடியே ஆடுவர் – குரல், இளி என்று. துத்தம் (நப்பின்னை) ஷட்ஜத்தை ஒட்டியே வருமாதலால், அவள் கண்ணனுக்கும் பலராமனுக்கும் இடையே எப்பொழுதும் ஆடுவாள்.

இதை குறிக்கையில் சிலம்பு இவ்வாறு சொல்கிறது.

“மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர”

மாயவன் தன் முன்னினோடும் – கண்ணன் தன் முன்னவனான, அதாவது அண்ணனான   பாலராமனோடும்.

வரிவளைக்கைப் பின்னையொடும் – வளையல் அணிந்த கைகளை உடைய பின்னவளோடும், அதாவது தன் தங்கையான சுபத்திரையோடும் – என்றுதான் இங்கே பொருள் காண முடிகிறது.

puri_jaganathஇதை நோக்குங்கால், ப்ரிஹத் சம்ஹிதையில், வராஹமிஹிரர் கூறுவது நினைவுக்கு வருகிறது. 58- ஆவது அதிகாரத்தில், கடவுளர் சிலைகளை வடிக்கும் விதம் பற்றி அவர் கூறுகிறார். அப்படிக் கூறுகையில், பலராமன் சிலையின் அங்க லக்ஷ்ணங்களைக் கூறி விட்டு, பலராமனைத் தனியாக பிரதிஷ்டை செய்யக் கூட்டாது என்றும், நடுவில் ஒரு பெண் சிலையை வடித்து, மறு பக்கம் கண்ணன் சிலையை வடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த அமைப்பே ஆய்ச்சியர்  குரவையிலும் வருகிறது. நடுவில் இருக்கும் பெண்  தன் வலக் கையில் வெள்ளைத் தாமரையை வைத்திருக்க வேண்டும். இடக் கை உடலின் குறுக்கே இருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு பலராமனும், கண்ணனும் இருபுறமும் இருக்க, நடுவில் ஒரு பெண்ணும் இருக்கும் அமைப்பு, பூரி ஜகன்னாதர் கோவிலில் வணங்கப்படும் பலராமன், சுபத்திரை , கண்ணன் உருவச் சிலைகளே!

பூரியில் உள்ள உருவச் சிலைகள் வடிக்கப்பட்டவைகள் அல்ல. ஆனால் இம்மூவரையும் ஒன்றாக வழிபடும் வழக்கம் இருந்திருக்கின்றது என்பதற்கு அது சாட்சி. வராஹமிஹிரரும், கடவுளர் சிலை வடிக்கப்படும் பரிமாணங்களைப் பற்றி விவரிக்கும் போது, இம்மூவர் சிலைகள் வடிப்பதையும் விவரிப்பதால், அந்நாளில், இம்மூவரையும் ஒன்றாக வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது. இம்மூவரின் மூலக் கதை, பால சரிதை. அதன் நடனமாக்கம் ஆய்ச்சியர் குரவை என்பது புலனாகிறது.

பால சரிதையில், கண்ணனின் இளம் பருவ ஆட்டங்களில், அண்ணனும், தங்கையுமே இருந்தனர். முன்னவன் என்பவன் அண்ணன் என்றால், பின்னை என்பவள் தங்கையாகத் தான் இருக்க முடியும். பூரி கோவில் தெய்வங்களே இதற்கு ஆதாரமாக – வழி வழியாக வந்த வழிபாடாகத் தெரிகிறது.

நப்பின்னை என்னும் தாரத்தைக் குறிப்பதாக ஓரிடம், ஆய்ச்சியர் குரவையில் வருகிறது.

அவரவர் பாத்திரங்களைச் சொல்லி, அவரவர் இருப்பிடங்களையும் சொல்கிறாள் மாதரி,

“மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;”

ஆனால், ஆட்டத்தின் போது  தங்கையாகிய பின்னையையும், அவள் அழகினைக் காணும் போது, நம்-பின்னை என்னும் தாரத்தையும், மாதரி குறிக்கிறாளோ என்றும் தோன்றுகிறது.

கண்ணனுக்கு இடப்பக்கமும்  பலராமனுக்கு வலப்பக்கமுமாக நடுவில், பின்னை ஆடுவதாகப்  பல இடங்களில் கூறினாலும் , ஆரம்பத்தில், பின்னையாக நடிப்பவளைப் பார்த்து, மயங்கி, மாதரி கூறுவது, நப்பின்னை என்னும் தாரத்தைப் பற்றியதாக இருக்கிறது.

“வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;”

‘வந்துழாய் மாலையை மாயவன் மேலே சாற்றி, குரவை ஆடத்  துவங்கும் அந்தப் பெண், மாயவன் தன் மார்பில் இருக்கும் திருமகளை நோக்காமல் இருந்ததற்குக் காரணமாகிய நப்பின்னைதானோ, ஐ ? ‘ – என்று தன் மகள் ஐயிடம் மாதரி வியந்து கூறுகிறாள். இந்த ஆட்டத்தில், தங்கையாக ஆடும் பெண், மாயவனை மயக்கிய நப்பின்னை போல இருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளும் வண்ணம் இருக்கிறது. ஏனைய இடங்களில், தங்கை என்றே பொருள் கொள்ளும்படி இருக்கிறது.

ஒவ்வொரு ஆயர் மகளும், கண்ணனே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பினாள் என்று, கலித் தொகைப் பாடல்களில் தெரிகிறது. ஆயர் குல மங்கை ஒருத்தியை, அதிலும் தமிழ் பேசும் ஆயர் குல மகள் ஒருத்தியை, கண்ணன் கைப் பிடித்திருந்தால்தான், இந்த அளவு, பிரேமை – ‘நப்பின்னை கல்ட்’ என்று சொல்லும் வண்ணம் தமிழ் வழி முறைகளில் வளர்ந்திருக்க முடியும்.

ஆய்ச்சியர் குரவையில் வரும் பின்னை, தங்கையாக இருக்கலாம் என்று பல இடங்களிலும், மேற் சொன்னவாறு காட்டினாலும், நப்பின்னை என்னும் ஆயர் குலப் பெண்ணை கண்ணன் மணம்செய்துள்ளான்  என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சீவக சிந்தாமணியில் பின்னை

சீவக சிந்தாமணியில், கோவிந்தையார் இலம்பகத்தில் ஆநிரை மீட்டுத் தருபவருக்குத் தன் மகள் கோவிந்தையை திருமணம் செய்து தருவதாக, நந்தகோன் முரசு அறைவிக்கிறார். சீவகன் ஆநிரை மீட்டுத் தருகிறான். சீவகனை நம்பி என்று விளித்துப் பேசும் நந்தகோன், தன் மகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கையில், முருகன் எவ்வாறு வள்ளியை மணந்தானோ, மாயவன் எவ்வாறு நப்பின்னையை மணந்தானோ அவ்வாறு தன் மகள் கோவிந்தையை சீவகன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.  (482)

இந்த வரிகள், இவ்விரு திருமணங்களும் களவொழுக்கப் படி அமைந்தனவோ என்று என்னும் வண்ணம் இருக்கிறது. வேட்டுவக் குலம் என்று குல வித்தியாசம் நினையாது வள்ளியை இணைந்தான்  முருகன். அது போல நில மகளுக்கே கணவனான மாயவன், ஆநிரைக் கூட்டத்தை உடைய நப்பின்னையின், இலவம் பூ போன்ற இதழ் அமிர்தம் நுகர்ந்தான் என்று சொல்லி, நந்தகோன் சீவகனை இணங்க முயற்சிக்கிறார். சீவகனும் எண்ணிப் பார்க்கிறான்.

கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.  (௪௮௩)

குல வேறுபாடு இருந்தாலும், ஒரு  பெண்ணிடம் ஏற்பட்ட காதலால் அவளை மணப்பது என்பது மாந்தர்க்கு முறைமைதான் என்று எண்ணி, பதுமகனுக்கு அவளை மணம் புரிவிக்கின்றான் சீவகன். வள்ளி, நப்பின்னை குறித்த இந்த பேச்சு, நப்பின்னை என்னும் ஒரு பெண்ணை  , குலமோ, அல்லது வேறு வகையிலோ வேறுபாடு உடைய ஒருத்தியை, கண்ணன் காதல் மணம் புரிந்திருக்கின்றான் என்று தெரிவிக்கிறது.

நப்பின்னை ஆயர் குலத்தில் உதித்தவள்  ஆனாலும், கண்ணன் துவரைக் கோமகன். அரசன். கண்ணன்  என்னும் என்னும் கரும் தெய்வம் அவன். அந்த விதத்தில் வேறுபாடு இருந்திருக்கின்றது. முருகக் கடவுள், வள்ளியை விரும்பியது போல, நில மகள் கேள்வனான திருமால் என்னும் கடவுள், நப்பின்னையை விரும்பியிருக்கிறான் என்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. இதன் மூலம் நப்பின்னை கண்ணனின் மாமன் மகள் என்று நிலவும் எண்ணம் அடிபட்டுப் போகிறது. கோவிந்தையின் மண நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, நப்பின்னை பற்றிய பல குறிப்புகளுக்கும் அர்த்தம் புரிகிறது.

சீவகனை வேண்டும் போது, சீர் வரிசையாக “செம் பொன் பாவை ஏழுடன் தருவல்” – பொன்னால் ஆனா ஏழு பாவை தருவேன் என்கிறார் நந்தகோன். திருமணத்தை விவரிக்கும் போதும், “நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன்.” என்று சீவக சிந்தாமணி கூறுகிறது.

“மென்  தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) கூறுவது, நப்பின்னையின் மேல் உள்ள காதலால், ஆயர் குல வழக்கப்படி, கண்ணன் ஏறு தழுவி அவளை மணந்தனன் என்று காட்டுகிறது. ஆய மகள் தோள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுமா? கொல்லேறு தழுவினால்தான் ஆய மகள் தோள் தழவ முடியும் என்று பல இடங்களில் நல்லுருத்திரனார் முல்லைக் கலியில் கூறியுள்ளார்.

radha_krishna_rஏழு என்னும் எண் ஆயர்  குலத்திற்கு முக்கியமானது போலும். திருமணச் சீராக, செம்பொன் பாவை ஏழு கொடுப்பதாக சீவக சிந்தாமணி கூறுகிறது.. கண்ணனைப் போன்ற பெரும் தெய்வம், பெறப் போகும் பாவையுடன், திருமணச் சீராக ஏழு செம்பாவைக்கும் ஏற்றாற்போல் ஏழு எருது தழுவியிருப்பான். அவனை மிஞ்சி, ஒருவரும் ஏறு தழுவியதில்லை. எவரேனும் ஏழு ஏறு தழுவியதாக எந்தக் குறிப்பும், கலித் தொகையில் காணப் படவில்லை. இதன் காரணமாகவும் ஆயர் மகளிர் கண்ணனைப் போல் ஒருவன் ஏறு தழுவி தன்னைக் கைப் பிடிக்க மாட்டானோ என்று ஏங்கியிருக்கலாம். (“இன்னன் கொல், மாயோன்  என்று  உட்கிற்று  என்  நெஞ்சு ” (கலித்தொகை 103))

ராமாயணத்தில், சீதையை தாரை வார்த்துக் கொடுத்தது போலவே, கையில் நீர் ஊற்றி தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார் நந்தகோன்.

தமிழர் மரபில், அற  வழி  மணம், மற வழி மணம் என்று இரு வகைகள் இருப்பதாக, சூடாமணி நிகண்டு கூறுகிறது.  அற வழி என்பது இன்றைய ‘அரேன்ஜெட் மாரேஜ்’ மாதிரி. குலம், கோத்திரம் பார்த்து, பெரியோர்கள் செய்யும் அறவழி மணம்பற்றி தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது. இதனை ‘பிரஜாபதி’ திருமணம் என்று நச்சினார்கினியரும், இதுவே  தமிழில் ‘ஒப்பு’ எனப்படும் என்று அடியார்க்குநல்லாரும் கூறுவர். கண்ணகியின் திருமணம் இந்த  வகைப் பட்டதே.

மற வழி என்பது, ஒரு போட்டியிலோ அல்லது வீர விளையாட்டிலோ தன் வீரத்தைக் காட்டி, அதற்குப் பரிசாக பெண்ணை மணம் புரிதல் ஆகும். இதிலும் தகப்பன் தாரை வார்த்துக் கொடுப்பார். ராமன் மற வழியில் தான் சீதையை மணம் புரிந்தான். கண்ணனும், மற வழியிலேயே நப்பின்னையை மணம் புரிந்தான் என்பதற்கு ஏறு தழுவின செய்தி நம்மாழ்வார் மூலமாக  ஆதாரமாக இருக்கிறது.

நப்பின்னை என்னும், ஆயர் மகளை கண்ணன் மணந்தான் என்பதுற்க்கு வேறு ஆதாரம் (சீவக சிந்தாமணி தவிர ) இருக்கிறதா என்று பார்த்தால் – இருக்கிறது, நப்பின்னையின் உண்மைப் பெயருடன்! நேமிநாதர் உரையில், நப்பின்னையைப் பற்றிய செய்தி வருகிறது.

நேமிநாதர் கூற்று:

திருவள்ளுவமாலை என்னும் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன்  பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

இந்தக் கருத்தையே நேமிநாதர் “நாலே திணையே” என்னும்  செய்யுள் உரையில் “உபகேசியானவள்  நப்பின்னைப் பிராட்டியார்” என்று கூறுகிறார்.

(மேற்சொன்ன செய்யுளில் திருவள்ளுவர் பற்றிய முக்கிய செய்திகள் இரண்டு வருகின்றன. (1) மணமுடித்த உபகேசி பற்றிக் கூறுவதால், மூன்றாவது அடியை, மாதானுபங்கி என்னும் பெண்ணை மணந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். மாதானுபங்கி என்பது பெண்பால் சொல். அது திருவள்ளுவரின் இயற் பெயர் ஆகாது. (2) திருவள்ளுவர் தென் மதுரைக்கு அச்சு என்றதன் மூலம், அவர் தென் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அல்லது முதல் சங்கம் நடந்த தென் மதுரையில் தான் அவரது குறள் அரங்கேறியது என்றும் கொள்ளலாம். இதன படி, திருவள்ளுவர் கி.மு. 31 -இல் தோன்றினவர் என்பதும், அதன அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று கொண்டு வந்ததும் தவறு எனத் தெரிகிறது. திருவள்ளுவர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று இந்த செய்யுள் தெரிவிக்கிறது.)

உபகேசி என்பது, நப்பின்னையின் இயற் பெயர். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. உபகேசி, என்பது தமிழ் பெயரா? அவள் வடபுலத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாமே? என்று. இதற்கு விடை தேடுவோம்.

சீவக சிந்தாமணி 482  செய்யுள் உரையில், நச்சினார்க்கினியர் “நப்பின்னை அவள் பெயர்’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். அவள் தமிழ் பேசும் தென் புலத்தில் இருந்திருந்தால் தான், நல்கூர் வேள்வியாரும் தன் செய்யுளில் அப்படி ஒப்புமை காட்டிக் கூறியிருப்பார். மேலும் கேசி என்பது ஆயர் குலத்தில் சரளமான ஒன்றோ என்றும் தோன்றுகிறது.

கேசி என்றால் கேசம் (கூந்தல் அல்லது தலை முடி) என்று பொருள். ஆயர் மகளிருக்கு கூந்தல் பற்றிய முக்கியத்துவம் உண்டு.

முல்லைக் கலிப் பாக்களிலும். சீவக  சிந்தாமணியில் வரும் வர்ணனைகளிலும், ஆயர் மகளிர் கூந்தல் அழகிகள் என்று தெரிகிறது. கூந்தலில் வரும் மணத்தை வைத்தே, மகள் யாரிடமேனும் காதல் வசப் பட்டிருக்கிராளா என்று தாய் கண்டு பிடிக்கும் செய்தி முல்லைக் கலியில் வருகிறது. மேலும் கேசி என்னும் குதிரையைக்  குறிப்பிடும் போது, “கூந்தல் குதிரை” என்று கலித் தொகை 103 – தெரிவிக்கிறது.

நப்பின்னை வாழ்த்த காலத்தில், அத்தகைய பெயர்கள் சர்வ சாதாரணமானவை. மாதானுபங்கி என்னும் சொல்லே வடசொல் சார்ந்ததுதான். ஆனால், இயல் தமிழில் தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். எனவேதான் பின்னை, நம்-பின்னை, நப்பின்னை, நம்பி போன்ற சொற்களை செய்யுள்களில்  அதிகம் காண முடிகிறது.

ஆயர் குலம் தொல்லிசைக் குலம். தென்னவன் தேசத்தைக் கடல் கொண்டு விட்டதனால், அவனோடு இடம் பெயர்ந்த தொல்லிசை நட்ட குடி, ஆயர் குடி என்று கலித் தொகை கூறிகிறது. இதனை கலி 104 -இல் காணலாம்.

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர்.

கடல் கொள்ளும் முன்பு 2 -ஆம் தமிழ் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தில், துவரைக் கோமான் கலந்து கொண்டார் என்று இறையனார் உரை தெரிவிக்கின்றது. துவரைக்குக் கோமான் ஒருவனே. அவன் மாயவன் எனப்படும் கண்ணன். அவனே துவராபதியை நிர்மாணித்தான். அவன் காலம் சென்றபின், துவராபதியைக்கடல் கொண்டு விட்டது.  எனவே துவரைக் கோமான் என்றது கண்ணனையே.

அவன், கடல் பின்பு கொண்ட தென்னவன் தேசம் வந்த பொது, அங்கே ஆயர் குடி என்னும் தொல்குடி இருந்தது என்பதை கலித் தொகை மூலம் அறிகிறோம்.  முருகன் வள்ளியைக் கண்டு விரும்பியது போல, கண்ணனும் ஆங்கிருந்த நப்பின்னையைக் கண்டு விரும்பியிருக்க வேண்டும். அவள் கைப் பற்ற வேண்டி, குல வழக்கப்படி ஏறு தழுவியிருக்க வேண்டும்.

“எளியவோ  ஆய்  மகள்  தோள்?
விலை வேண்டார் , எம் -இனத்து  ஆயர்  மகளிர் –
கொலை  ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்,
ஆங்கு குரவை  தழீ  யாம் , மரபுளி  பாடி ” (கலித் தொகை 103 )

என்று ஏறு தழுவினால் தான் , ஆயர் மகள் முலை தழுவ முடியும் என்பது மரபு என்று இருந்திருக்கின்றது.

பின்னை  மணாளனை ….என்னையும் ,
எங்கள்  குடி முழுதும்  ஆட்  கொண்ட ”(பெரியாழ்வார்  திருமொழி  -162)

என்று பெரியாழ்வாரும் இந்த திருமணத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்த ஆயர் மரபின் படியே – அவர்கள் சொல்லாட்சியின் படியே, திருப்பாவையிலும் நப்பின்னை பற்றிய செய்திகள் வருகின்றன.

“செப்பென்ன  மென்  முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த  மலர்  மார்பா”

போன்ற இவை ஆயர் மரபின் படி , அகப் பொருள்பாற்பட்ட , ஆய மகளிரால சர்வ சாதாரணமாக கையாளப் பட்ட சொற்களே.

நப்பின்னை – மாயவன் திருமணம் கடல் கொள்ளப் பட்டதற்கு முன், மிகவும் பேசப் பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும். செய்யுளாகப் பாடப் பட்ட ஒரு செய்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.

கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.

வைணவத்தில் நப்பின்னை:

மாயோன் என்னும் தெய்வத்தையே மணந்தவலாதளால், அவள் யார் என்பது திருமால் அடியார்களும் பேசும் ஒரு முக்கிய செய்தியாகும்.

ranganatha_sri_bhu_deviதிருமால் அவதரித்த போது, அவள் நப்பின்னை. மற்ற நேரத்தில் அவள் யார்? இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

தன் இட மார்பில் உள்ள திருமகளையும் நோக்காமல், தன்னையே நோக்கச் செய்த நப்பின்னையைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுமிடத்தே, திருமகளாம்  ஸ்ரீதேவியை ஒப்புமை காட்டுகிறது.

சீவக சிந்தாமணியிலோ, நில மகள் கேள்வன் என்று, பூதேவியை ஒப்புமை காட்டுகிறது. இதில் மீதம் இருப்பது, நீளா தேவிதான்.

நீளா தேவி யார் என்பதையோ, அல்லது நீளா தேவியையோ மாயவன் தன் அவதாரங்களில் இனம் காட்ட வேண்டும். அந்த வகையில், கிருஷ்ணாவதாரத்தில், நீளா தேவி, நப்பின்னையாக அவதரித்துள்ளாள் என்று ஆதாரம் காட்டலாம்.

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் (2-3-5 ) இதைக் காட்டுகிறார்.

“இன் துணை  பதுமத்து அலர் மகள்  தனக்கும்  இன்பன்
நற்  புவி  தனக்கு  இறைவன் ,
தன்  துணை  ஆயர்  பாவை
நப்பின்னை  தனக்கு இறை ,
மற்றையோற்கெல்லாம் வன் துணை ..”

திருமாலுக்கு மூன்று துணைவியார் உண்டு.
திருமகள், புவி மகள் – இவர்களுடன், மறைவாக உள்ள நீளா தேவி.
வேதத்தில் இம்மூவரைப் பற்றியும் சூக்தங்கள் உள்ளன.
நீளா தேவியை பற்றிய சூக்தம், ஆயர் குல சாயலை வெளிப்படுத்துகின்றது.

நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள். பூவுலகுக்கும், விண்ணுலகுக்கும் ஏற்படும் தொல்லைகளைப் போக்குபவள் என்பதே அதன் முக்கியக் கருத்து.

வேதாந்த வகையில் இதைப் பெரிதும்  விளக்க முடியும். ஆனால் சாதாரண மானுட அளவில்,  நெய்யும், பாலும் அள்ளித்  தரும் ஆயர் மகளாக அவளை அடையாளம் காட்டலாம்.

கடவுளைப் பார்க்கவும், உணரவும் முடியுமா என்றால், முடியும் என்று, ப்ரத்யக்ஷ கடவுளாக சூரியனை காயத்ரி மந்திரம் மூலம் அடையாளம் காட்டினார் விஸ்வாமித்திரர்.

அந்தக் கடவுளே காக்கும் தெய்வமான திருமால் அல்லது சூர்ய நாராயணன்.
அந்தத் திருமாலின் துணைவியார் மூவர்.
நாம் நிற்கும், இந்த நிலம் ஒரு துணைவி.
இந்த நிலத்தைச் சார்ந்து கிடைக்கும், பொன் , பொருள், வளி, நீர் போன்ற பலவற்றின் மூலமாக நமக்குக் கிடைக்கும் செல்வமே திருமகள்  என்னும் லக்ஷ்மி. அவள் ஒரு துணைவி.
இந்த இருவருக்கும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பவள் நீளா ஆதலால், அவள் இந்த பூமியைச் சுற்றி பாதுகாத்து வரும் காந்த சக்தி எனலாம்.

ஆய மகள் முலை போல் அவளுக்கும் இரு துருவங்களிலும் இரு முலைகள். ’நீளா துங்க ஸ்தன கிரி’ என்று மலை போன்ற முலைகள் என்று வைணவ இலக்கியங்களில் கூறுவது ஒரு அர்த்தத்துடன்தான் இருக்க வேண்டும்.

”கொலை  ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்”

என்று கலித் தொகை சொல்வது போல மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக்  ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

நீளா என்னும் துருவக் காந்தம், பூமி உண்டானதற்குப் பின்னால் உண்டானது. எனவே அவள் பின்னை ஆகிறாள்.

அவள் இரவில் துருவப் பகுதியில் ஒளி வீசி வயப்படுத்திகிறாள், இரவில் நப்பின்னையுடன் கருநீலக் கண்ணன் துய்ப்பது போல.

நப்பின்னையைப்  பார்த்தவர் யாரும் இல்லை. நம்மாலும், இந்த நீளா தேவியை காந்த சக்தியாக கண்ணனையே ஈர்த்தவளைப் பார்க்க முடியாது.

ஏறு தழுவி, ஆயர் மகள் முலை போன்ற அதன் முதுகினை அணைத்தவாறே (நப்பின்னை கொங்கை கை வைத்துக் கிடந்த மலர் மார்பன் – ஆண்டாள் கூற்று), வேகமாக ஓடும் எருத்தின் போக்கிலேயே, மாயவனும் அதன் மேல் பயணிக்கிறான்.

வாரம் ஏழு நாட்களும் மாயவன் பூமியை அணைத்து, காந்தத் துருவத்தோடு பயணிக்கும் அந்த காஸ்மிக் கோலமே, அவன் ஏழு ஏறு அடக்கி, நப்பின்னையை மணந்த செயலாக அவதாரத்தில் காட்டினானோ!

அந்த காஸ்மிக் காட்சியை நாமும் மனக் கண்ணால் கண்டால், துன்பமும், பயங்களும், துர் நிமித்தங்களும் பறந்து விடுமோ!

ஆயர் சேரியில் ஆடினார் போல் நாமும் குரவை பாடி கோலாகலம் பெறவேதான் இந்த நப்பின்னை அவதரித்தனளோ!

30 Replies to “யார் நப்பின்னை ?”

  1. அருமையான கட்டுரை.ஆசிரியர்க்கு நன்றி.

  2. விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை. நன்றி

    அன்புடன்
    ச.திருமலை

  3. அற்புதமான ஆராய்ச்சிக் கட்டுரை. ஆசிரியர் மேலும் பல கட்டுரைகள் தந்து தமிழ் இந்து தளத்திற்குச் சிறப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    நன்றி, அன்புடன்

    B.R.ஹரன்.

  4. யாரவது திருவள்ளுவர் ஹிந்து தான் என்பதை நிருபிக்கும் வகையில் தொடர் கட்டுரை ஆதாரத்துடன் எழுதுகளேன்.

  5. திருவள்ளுவர் வணங்கிய தெய்வம் பற்றி விரைவில் எழுதுகிறேன். கூடவே அவர் கூறும் இந்து மதக் கோட்பாடுகளையும் எழுதுகிறேன்.

  6. இந்தக் கட்டுரையைப் பாராட்டிய அனபர்கள் அனைவருக்கும் நன்றி.

    டாக்டர் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி. தங்கள் கட்டுரைகளைப் படித்தேன்.

    கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட சிலப்பதிகாரப் பகுதியைப் பற்றி சில வார்த்தைகள். மதுரைக் கண்டம், கொலைக்ககளக் காதையில் கண்ணகி கோவலனுக்கு உணவு பரிமாறி கவனித்துக் கொள்வதைப் பார்க்கும் ஐயையும், தவ்வையும், அவர்கள் பால் கண்ணனையும், நப்பின்னையும் காண்கின்றனர்.

    அசோதை பெற்றெடுத்த பூவைப் புது மலர் வண்ணனான கண்ணன் தான் இந்தக் கோவலனோ என்று வியக்கின்றனர்.
    யமுனை ஆற்றிலே (காளிங்கனை அடக்கிய) ஆயாசத்தைத் தீர்த்த நம் குலப் பெண் (நப்பின்னை?) இவள்தானோ என்று கண்ணகியைப் பார்த்து வியக்கின்றனர்.

    “இங்குப்
    பல்வளைத் தொளியும் பண்டு நம்குலத்துத்
    தொழுனை ஆற்றினுள் தூமணி வண்ணனை
    விழுமம் தீர்த்த விளக்குக் கொல்?”

    என்கிறது சிலம்பு.

    இந்த ‘விளக்கு’ யார் என்பது ஒரு கேள்வி.
    ஆய்ச்சியர் குரவையிலும் “தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை’ என்று வருவதால், இந்தப் பின்னை ராதையாக இருக்கலாமோ என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், காளியனை கண்ணன் அடக்கிய காலம் அவனது பால பருவம். அப்பொழுது அவனுக்குத் தோழிமார்கள் இருந்தனரே தவிர, தாரமோ, காதலியோ இல்லாத பருவம். எனவே ‘கிருஷ்ணா கல்ட்’- இல் ஆழ்ந்துள்ள ஆயர் மகளிர், கண்ணனது ஒவ்வொரு லீலைகளிலும், தம் குலக் கொழுந்தான நப்பினையையும் சேர்த்துப் பார்த்து, பரவசமாகி இருப்பார் என்றே கருத வேண்டி இருக்கிறது.

  7. அருமையான இலக்கியக் கட்டுரை ஜெயஸ்ரீ. நீளா தேவியின் தெய்வீகப் பரிமாணத்தை நப்பின்னைப் பிராட்டியுடன் இணைத்து எழுதியது அழகு. நீளா தேவியை காந்த சக்தியாக உருவகித்திருப்பது சிறப்பு – இது உங்களுடைய தனிப்பட்ட கோணம் என்று நினைக்கிறேன்.

    கண்ணன் விசேஷமாக மணம்புரிந்த ஆயர்குலப் பெண் என்ற வகையில் ராதையையே நப்பின்னையாக தமிழ் மரபில் கொண்டார்கள் என்று சொல்லலாமா? ராதையின் பெயர் பாகவதத்தில் வெளிப்படையாக சொல்லப் படவில்லை … அதிக ப்ரேமை பூண்டதால் ஆராதிக்கப் பட்டவள் (”ஆராதிகா”) என்றே வருகிறது என்று படித்திருக்கிறேன். மற்ற புராணங்களிலும், வட இந்திய வைஷ்ணவ பக்தி மரபிலும் ராதை வ்ருஷபானு என்ற கோ-நாயகனின் (கோனார்??) மகள் என்று கருதப் படுகிறாள். மதுரா பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள Barsana (வ்ருஷபானு என்பதன் திரிபு) என்ற ஊரே ராதையின் சொந்த ஊராகக் கருதப் படுகிறது. கிருஷ்ணனின் சக்தியாக ராதை கருதப் படுகிறாள்; சில பாகவத சம்பிரதாயங்களில் “ராதேஷ்வரி” என்று சக்திஸ்வரூபமாகவே ராதையை வழிபடுவது உண்டு.

    ”குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
    நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்”

    என்ற பாசுரத்திலும் (நம்மாழ்வார்??) நீங்கள் குறிப்பிட்டது போல, நீளா தேவியே ராதை/நப்பின்னை என்ற பொருள் தொனிக்கிறது.

  8. // நீளா தேவியை காந்த சக்தியாக உருவகித்திருப்பது சிறப்பு – இது உங்களுடைய தனிப்பட்ட கோணம் என்று நினைக்கிறேன்

    ஜெயஸ்ரீ அவர்கள் “Quantam Physics” படித்தவர்/அதில் ஆர்வம் கொண்டவர்

  9. Very good story I really like it very much I searching this type of good news thank you for the authors.

  10. Let me add some more “confusion” to this.
    In my research I noticed that AzhwArs never mentioned rAdhai. If they were reluctant to use the word “rAdhA” they could have used “irAdhai” just like “ilakkumaNan”, “vIDaNan” and similar Thamizhaized words. Obviously “rAdhA’ was used to denote a generic gOpi in North Indian writings rather than a specific individual. Some claim that rAdhA was a married woman and that made her relationship with Krishna tantamount to adulery. The so-called nILA dEvi description is also puzzling for the following reasons since nappinnai is equated with nILA dEvi by the AzhwArs.

    1. It is said that nILAdEvi was the daughter of YasOdhA’s brother. The term “nandagOpAlan marumagaLE” in tiruppAvai #18 indicates this possibility–that is she is the niece of nandagOpan. She is YasOdhA’s niece and by extension she is niece for nandagOpan too. The other possibility is that she is the daughter-in-law of nandagOpan if we take the meaning of daughter-in-law for “marumagaL” The term “maiththunan” in #18 referring to Krishna implies “husband” (and not necessarily brother-in-law). ANDAL ascribed that relationship between Krishna and nILA dEvi.

    2, The term “nappinnai kongai mEl vaiththuk kiDandha…” definitely indicates a spousal relationship but definitely not a “friend”. There is the further term “maNALanai” in #19 of tiruppAvai. This points out unequivocally that nappinnai was the “wife” of Krishna. Although Krishna was a pre-teen boy while dwelling in gOkulam the divine nature of Krishna was invoked in attributing spousal relationship. Besides, all these descriptions come long after Krishna himself disappeared from the scene. So all these descriptions gain credence on a post-facto basis.

    3. There is also the episode that Krishna tackled 7 bulls of a king in eastern India ( far away from gOkulam) and that the daughter of that king is nILA dEvi who was then given in marriage to Krishna. I think some AzhwAr pAsuram describes this phenomenon. The author may be able to cite it here.

    In view of so many inconsistencies (created by various interpreters) it is anybody’s guess as to who nappinnai is. Some people even said Lakshmi is (nap)pinnai since she came after mUdEvi (munnai). Others claim BhUmidEvi is nappinnai (by virtue of her taking the second place after Lakshmi in Vishnu’s abode). It is all anybody’s guess.

    For stauch Thamizh believers, somehow the Thamizh term nappinnai holds a glamor and ANDAL’s 3 pAsurams made it sacrosanct.

  11. நன்றி திரு ஜடாயு அவர்களே.

    உங்களைப் போலவே நானும் பல காலம் சிந்தித்ததுண்டு – ஆனால் அது நல்கூர் வேள்வியார் எழுதின செய்யுளைப் படிக்கும் வரை மட்டுமே.

    அதற்குத் துணையாக நேமிநாதர் உரையும், உபகேசி என்பது நப்பினையின் இயற் பெயர் – என்னும் செய்தியை வை. மு. கோபால கிருஷ்ணமாச்சர்யார் எழுதிய திருக்குறள் உரையிலும், பார்த்தவுடன், பழந்தமிழ் செய்யுள்களில் தேடினேன். சீவக சிந்தாமணி 482 செய்யுள், நப்பின்னை நம் பக்கத்துப் பெண் தான் என்று காட்டுகிறது. அர்ஜுனன் திக் விஜயம் செய்த போது, தமிழ்ப் பகுதிகளில் வந்து, அல்லியை திருமணம் புரிந்தது, தமிழ்ப் பகுதிகளில் பேசப்படும் கதை. அது போலவே, கண்ணன் தமிழ்ப் பகுதிகளில் வந்த போது, நப்பினையைப் பார்த்து மணந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

    இக்க்கட்டுரையில் சொல்லாமல் விட்ட ஒரு செய்தி, மெகஸ்தனீஸ் எழுதிய ஒரு குறிப்பு. கிருஷ்ணன் ( Herakles ) தன மகளான ‘பாண்டையா’ என்பவளை தெற்குக் கடல் அருகே உள்ள பகுதியில் 365 கிராமங்களைக் கொண்ட ஒரு நாட்டுக்கு அரசியாக்கினார் என்பது அது. அதன் படி, ஒவ்வொரு தினமும் அந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் அந்த அரசியின் அரண்மனைக்குப் பால், தயிர் கொடுக்கப் பட வேண்டும் என்பதே. இந்த செய்தியை மெய்ப்பிக்கிறாற்போல். சிலப்பதிகாரத்திலும், ஆய்ச்சியர் குரவை ஆரம்பிக்கும் பகுதியில், மாதரி, அன்றைய தினம் காலை எழுந்ததும், பாண்டியன் கோயில் முரசம் கேட்டவுடன், “நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, அன்றைக்கு, நெய், பால் போன்றவன தருவது, அவர்கள் முறை என்று சொல்வதும் இணைத்துப் பார்க்கத் தக்கது.

    இந்த மகள் நப்பின்னை- கிருஷ்ணனுக்குப் பிறந்த மகளாக இருக்கலாம் என்பதும் ஒரு சாத்தியக் கூறு.

    ராதை குறித்த செய்திகள் வடபால் இலக்கியங்களில் வருவதற்கு முன்னரேயே நப்பின்னை தமிழ் இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) வந்து விட்டாள். அவள் வடபால் ராதையாக இருப்பின், அங்கு முதலில் வராமல் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? மேலும் நப்பின்னையை கிருஷ்ணன் மணந்தான் என்றே தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. (உ.ம – சீவக சிந்தாமணி). ராதையைக் குறித்த கதைகள் அத்தகையவை அல்ல.

    குழல் கோவலர் மலர்ப்பாவை என்று தாங்கள் காட்டிய மேற்கோள், தமிழ் வழி வரும் வர்ணனையே தவிர, ராதை என்பதற்கு ஆதாரமானவை அல்ல. கொற்றலர் பூங்குழல் – அது நப்பினை என்று ஆண்டாள் கூறுவதும் கூட.
    முல்லைக் கலியிலும், சீவக சிந்தமணியிலும் ஆயர் மகள் கூந்தல் அலங்காரத்திற்கு எடுத்துக் கொள்ளும் வர்ணனைகள் உள்ளன. கலித் தொகை முதல், பிரபந்தம் வரை ஆயர் குறித்த வர்ணனைகள் முல்லைப் பாவர்ணனை வகையில் ஒரே விதமாக இருக்கின்றன.

    நீளாதேவி , காந்த மண்டலம் என்பது , என் குறிப்பே. வேதாந்தக் கருத்துக்கள் யாவையும் , பெயர் , பொருள் , காரணம் என்று பௌதிகப் பரிமாணத்தில் இருக்கின்றன என்பது சந்தோக்யம் சொல்லும் கருத்து . அதன் அடிப்படையில் , இராமானுசர் , ப்ருஹ்ம சூத்திரத்திற்கு உரையும் தந்துள்ளார் . அந்த வகையில் , நீளா என்பவள் இயற்கையில் இருக்க வேண்டும் . அது எப்படியாக இருக்க முடியும் என்னும் சிந்தனையின் பயனே காந்த மண்டலம் என்பது . இது குறித்த விரிவான வர்ணனை – நீளா சூக்தம் அடிப்படையில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன் .

    https://jayasreesaranathan.blogspot.com/2008/01/secrets-in-thiruppavai-secret-4_2717.html

    https://jayasreesaranathan.blogspot.com/2008/01/secrets-in-thiruppavai-secret-4_9423.html

  12. இன்னும் ஒரு சிந்தனை . ..
    தமிழ் வழியில் 11 ஆடல் வகைகள் உள்ளன. அவற்றுள் மூன்று கிருஷ்ணன் ஆடியவை. கரகாட்டத்திற்கு மூலம் போன்ற குடக் கூத்து, வாணன் பேரூர், அதாவது பாணாசுரன் ஊரில் – இது அந்நாள் மகாபலி புரமாக இருக்கலாம் – கிருஷ்ணன் ஆடிய கூத்து.
    இந்நாளைய அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக, மாமல்லன் அன்று பெயர் மாற்றியது, மகாபலிபுரத்தின் பழைய வரலாற்றையே மறக்கச் செய்து விட்டது. ஆழ் கடல் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய இடம் அது. கிருஷ்ணன் அங்கு வந்திருக்ககூடும் என்பது, தமிழ் நாட்டுடன் அவன் கொண்டிருந்த தொடர்பை உறுதிப்படுத்துவது.

  13. நன்றி திரு சாரங்.

    நீங்கள் நினைக்கும் அளவுக்கு எனக்கு பௌதிகம் தெரியாது.
    ஆனால் அண்டம் மாற்றும் அறிவியல் குறித்த செய்திகளை நான் உடனுக்குடன் படித்து விடுவேன்.
    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதால், சாதாரண நிலையில் உள்ளவற்றுக்கும், எங்கேயோ தொடர்பு இருக்கும். வேதாந்தக் கருத்தும் அதுவே.

    திட, திரவ, வாயு என்று மூன்று நிலைகள் போல, பூ.(bhoo) புவர் (Bhuvar), சுவர் (swar) (physical, vital and mental level ) என்று மூன்று நிலைகளில் இந்த உலகில் எல்லாப் பொருட்களும் இருக்கின்றன.

    நம் உடலை எடுத்துக் கொண்டால், எலும்பு, கடின உரு இவை பூ- தத்துவம் (physical )
    நம் உடலில் ஓடும் திரவப் பொருட்கள் (ரத்தம் முதலியன) புவர் (vital )
    உருவமாகப் பார்க்க இயலாத மனம் மற்றும் எண்ணம் சுவர் ( mental )

    இந்த உலகை எடுத்துக் கொண்டால், கடினமான நிலப் பகுதி, பூ
    கடல், நீர், காற்று ( திரவத் தன்மை உடையதால்) ஆகிய இவை புவர்
    ஆகாயம் சுவர்.

    இந்த வகையில்தான், காக்கும் கடவுளான மாயவனும், மூன்று தேவியரைக் கொண்டுள்ளார்.
    ஸ்ரீதேவி, பூ தேவி, நீளா தேவி.

    இவர்களுள், பூதேவி, பூ தத்துவமான திடப் பொருளால் ஆனவள்.

    ஸ்ரீ தேவி, மனத்தால் அனுபவிக்கப்படும் இன்பத்தைத் தரும் செல்வத்தைத் தரும் செல்வி. எனவே அவள் சுவர் தத்துவம்.

    இதில் நீளா தேவிதான் புவர் தத்துவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    ஓட்டமும், அலை பாயிதலும் இருக்க வேண்டும். அதே நேரம், ரத்தம் எப்படி ஜீவ சக்தியைக் காப்பாற்றுகிறதோ, அவ்வாறே உலகின் உயிர் ஓட்டத்தைக் காப்பாற்ற வேண்டும், அப்படி இருக்கும் சக்தி என்ன என்று ஆராய்ந்தால் அது காந்த மண்டலம் என்று புலனாகிறது.

    இதனுடன், நீளா சூக்ததையும் சேர்த்து ஆராய்ந்தேன்.

  14. //இந்த வகையில்தான், காக்கும் கடவுளான மாயவனும், மூன்று தேவியரைக் கொண்டுள்ளார்.
    ஸ்ரீதேவி, பூ தேவி, நீளா தேவி.//

    ஆம். ஸ்ரீ லக்‌ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஒன்று பின்வருமாறு:

    ஓம் ஸ்ரீமதே ஸ்ரீ லக்‌ஷ்மீ ந்ருஸிம்ஹப் பரப்ரஹ்மணே நமஹ;
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ;
    ஓம் பூம் பூம்யை நமஹ;
    ஓம் நீம் நீளாயை நமஹ.

    இதை தினமும் பனிரண்டு முறை சொல்லிப் பிரார்த்தனை செய்வது நன்மை பயக்கும்.

    நன்றி, அன்புடன்

    B.R.ஹரன்.

  15. நெஞ்சார்ந்த – மனம் நிறைந்த – பாராட்டுக்கள். இப்படிப்பட்ட ஆராய்சிக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வாருங்கள் அய்யா.நப்பினை சகோதரியா, தாரமா விளக்கம்அருமை.நம் இந்து மதம் தங்களைப் போன்றவர்களால்தான் காக்கப் படுகிறது. வாழ்க வளமுடன்

  16. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு,

    நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி. தங்களின் நப்பின்னை பற்றிய இந்த கட்டுரையை படித்து இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களின் முடிவான கருத்து என்ன? நப்பின்னை என்பது தத்துவமா? அல்லது க்ருஷ்ணாவதாரத்தின் போது physicalஆக வாழ்ந்து கண்ணனை மணந்த ஒரு பாத்திரமா?

    மேலும் ஒரு ஐயம். வங்க கடல் கடைந்த பாசுரம் பற்றியது. வங்கம் என்றால் கப்பல். பாற்கடலில் கப்பல் சென்றாற்போல கூறியுள்ளாளே? எப்படி?

    ஸ்ரீராம்

  17. இக்கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
    திரு ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு வருகிறேன். நப்பின்னை ஒரு உண்மைப் பாத்திரம் என்பது தமிழ் நூல்களில் காணப்படும் செய்திகளின் மூலம் தெரிகிறது. நான் தேடின வரையில் கிடைத்த ஆதாரங்களை இக்கட்டுரையில் தந்துள்ளேன். அவள் ஒரு உண்மைப் பாத்திரம் என்பது என் கருத்து.

    திருமாலின் அவதார காலத்தில், அவரது பரிவாரங்களுக்கும் பாத்திரப் படைப்பு இருந்து வந்திருக்கின்றது. திருமாலின் மூன்று தேவியரில், நீளா தேவியும், அவதார காலத்தில் எங்கேனும் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் நீளா தேவி நப்பின்னையாகப் பிறந்தாள் என்பது ஏற்புடையதே. வைணவ ஆசார்யர்கள் கருத்தும் இதுவே.

    இறைக் கருத்துக்களை பல வகையிலும் காணலாம். பார்க்ககூடிய தெய்வமாக இருக்கும் கடவுள், உள்ளிலிருந்து நம்மைச் செலுத்துபவனாக உள்ளத்திலும் உள்ளான். காணும் பொருளிலும், காணும் காட்சியிலும், நம் சூழலில் எங்கணும் உள்ளான். அவனே இவ்வுலகம் – இவ்வுலகம் அவனில் பரந்துள்ளது என்கையில், அவன் ஏற்றம் அதற்குத் தக்கவாறான பொருள்களில் காணப்படும்.

    சாந்தோக்கிய உபநிடதத்தில் இதைக் குறித்து – பெயர், பொருள் செயல்பாடு ஒத்ததே என்று சொல்லப்பட்டுள்ளது. இதை விவரிக்கும் வகையில், ஆகாயம் என்பது பிரும்மம் என்று சொல்கையில், அது எப்படியெனில், பிரும்மத்தைப் போல (இறைவனைப் போல) ஆகாயமும், பரந்து விரிந்து அளவிட முடியாதது, அழுக்கடையாதது, சுத்தமானது, கிட்டே இருப்பது போலத் தோன்றினாலும், தொட முடியாமல் போய்க் கொண்டே இருப்பது, எங்கும் எப்பொழுதும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. இறைவனுக்கொப்பான இந்த தன்மையுடைய ஆகாயம், நிறத்திலும் அவனைக் கொண்டு, நீலமும், கருமையும் பூண்டுள்ளது. இவ்வாறு தன்மையும், உருவமும், செயல்பாடும் அவனைப் போலிருக்கவே, பெயரிலும், அவனைக் கொண்டு கூறப் படும் என்பது சாந்தோக்யம் கூறும் கருத்து, ஆகவே ஆகாயம் என்பது பிரும்மம்.

    இதை சாந்தோக்கிய உபநிடதம் 8-14-1- இல் காணலாம்.

    (Translation:- “Verily, what is called ‘akasha’ is revealer of name and form.
    That within which they are is Brahman”

    அந்த வகையில், பூதேவி என்பவள் நிலம் என்னும் வளமாகவும், ஸ்ரீதேவி அந்நிலத்து உள்ளுறை செல்வமாகவும் சொல்லப்படுவது போல, நீளா தேவியும், பொருள், உருவம், செயல்பாட்டில் உருவகப்படுத்தப் பட்டு இருக்க வேண்டும், அப்படியான் உருவகம் என்னவென்று என் புலனுக்குத் தெரிந்த வரையில், காந்தவெளி மண்டலம் என்று கூறியிருக்கிறேன். நீளா தேவியாக, திருமாலின் நிழலாக உறைந்து, நப்பின்னையாகப் பிறந்து, இயற்கை நிலையில், காந்த மண்டலமாக இருக்கக் கூடும்.

    அடுத்த கேள்விக்கு வருவோம்:-
    வங்கக் கடல் என்று ஆண்டாள் கூறுவது பாற்கடலை.
    வங்கம் என்றால் கப்பல். காற்றிலே கப்பல் கூட அசையாதபடி கடையப்பட்ட பாற்கடல் என்பதால், இது ஆகு பெயர் ஆயிற்று.

    ‘ஆறாயிரப்படி’ வியாக்கியானத்தில், ஏன் வங்கம் என்று சொல்லப்பட்டது என்ற விவரம் வருகிறது. அவற்றின் சுருக்கம் வருமாறு:-

    * மரக் கலமும் அசையாதபடி நேர்த்தியாக கடையப் பட்டது

    *மந்தர மலை சுழலும் வண்ணம் கடையப் பட்டாலும், கடலில் ஒரு மரக்கலம் இருந்தாலும் அது அசையா வண்ணம் கடையப்பட்டது.

    * பாற்கடல் என்பது வங்கம் உலவும் கடல் தான், எப்படியெனில், வைகுந்தன் என்னும் தோணியைப் பிடித்துக் கொண்டு (பிறவிக் கடலை கடந்து) ஜீவர்கள் அவனை அடைய வேண்டும். இங்கே வங்கத்தைப் பிடித்துக் கொண்டு, பாற்கடலில் அவனை அடைய வேண்டும்.

    * ‘பாற்கடலில் பையத் துயின்ற” என்று அலை இல்லாத பாற்கடலில் அவன் துயின்றதை முதலில் சொல்லி, பின் இறுதியில் வங்கக் கடல் கடைந்த என்று சொன்னது, ‘அதில் கிடந்தது முன் கடைந்த’ பாங்கினைத் தெளிவுறுத்தவே என்பது ஆச்சார்யார்கள் கருத்து.

  18. என்னுடைய கேள்விகளை கீழே தருகின்றேன்.

    கேள்வி 1: தங்களின் கருத்துப்படி நப்பின்னை = நீளாதேவி. ஆனால் 19ஆம் திருப்பாவையில் “எத்துணையேலும் பிரிவாற்றகில்லாயால் தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்” என வருகிற இடம் பெரிய பிராட்டியை குறிப்பது போல தானே வருகிறது? மேலும் ‘விஷ்ணோரேஷா அனபாயினி’ என்றும் ‘அகலுகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பா’ என்றும் பெருமானிடமிருந்து பிரிக்கப்படமுடியாதவள் (எத்துணையேலும்) என்று பெரியபிராட்டியான லக்ஷ்மியை தானே குறிக்கின்றதாக வருகிறது? நப்பின்னை நீளாதேவியாக இருந்தால் அவளை ஏன் இவ்வண்ணம் குறிக்க வேண்டும்? ஆண்டாளே 20ஆம் பாசுரத்தில் ‘நப்பின்னை நங்காய் திருவே’ என்கிறாளே? இப்பாட்டின்படி ஆண்டாளின் கருத்து நப்பின்னை = திரு = லக்ஷ்மி என்று தானே வருகிறது. மேலும் அது என்ன ஏழு காளைகளை அடக்குதல்? இதில் ஏதாவது தத்துவம் இருக்கிறதா? மாட்டுப் பொங்கல் (ஜல்லிக்கட்டு) சமயத்தில் இந்த கேள்விக்கு விடை கிடைத்தால் பழந்தமிழர் வழக்கத்தின் நோக்கம் புலப்படும்.

    கேள்வி 2: ‘வங்கக்கடல் கடைந்த’ என்பதற்கு கப்பல் செல்லும் பாற்கடலை கடைந்ததாக கூறியுள்ளீர்கள். இந்த பாற்கடலைப் கடைந்த நிகழ்ச்சி பற்றி ஒரு ஐயம். கம்பராமாயணத்தில் அங்கதன் தன் தந்தையான வாலியைப் பற்றி கூறுங்கால்:-

    இந்திரன் செம்மல் பண்டு இராவணன் என்பான் தன்னை
    சுந்தரத் தோள்களொடும் வாலிடைத் தூங்கச் சுற்றி
    சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண
    மந்திரப் பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான்
    (யுத்தகாண்டம் அங்கதன் தூதுப் படலம் பாடல் 24)

    அதாவது..வாலி பாற்கடலை கடைந்தவன் எனக் கூறுகிறான். இதே கருத்தை தாரையும் வாலி இறந்த பின் அழுது புலம்பும் போது கூறுகிறாள்.

    “எந்தாய் நீ அமிழ்து ஈய, யாம் எலாம்
    உய்ந்தேம்” என்று, உபகாரம் உன்னுவார்,
    நந்தா நாள்மலர் சிந்தி நண்பொடும்
    வந்தாரோ எதிர், வான் உலோர் எலாம்?
    (கிட்கிந்தா காண்டம் பாடல் 171)

    வாலி பாற்கடலை கடைந்தான் என்று கூறுவது எவ்வாறு?
    தயவு கூர்ந்து மேற்கண்ட கேள்விகளுக்கு தங்கள் விளக்கங்களை
    அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ஸ்ரீராம்.

  19. முதல் கேள்விக்குப் பதில் ” தமிழர் கண்ட நீளா தேவி” என்னும எனது அடுத்த கட்டுரையில் இருக்கிறது. காண்க:-
    https://tamilhindu.com/2009/12/neela-devi-in-tamil-tradition/

    2-ஆவது கேள்விக்கு கம்ப ராமாயண வித்தகர்கள் பதில் தரலாம்.
    நீங்கள் கேட்ட விஷயத்தைக் , கம்ப ராமாயணத்தில் வழியே நான் ஆராய்ந்ததில்லை.

    வால்மீகி ராமாயணத்தில் இந்த இரு வர்ணனைகள் வரவில்லை. இராவணனையே வென்றவன் வாலி. எனவே கம்பர் அவன் பெருமையைத் தூக்கலாக வர்ணித்திருக்கலாம்.

    வாலி மாண்டதைக் கண்ட தாரை, இந்திரனுடன் அவனை ஒப்பிட்டுக் கூறுவதாக வருகிறது (வாலிமீகி ராமாயணம் 4-19-23)

    மேலும் 4- 23 – 28 & 29 -இல் வாலியின் போர் வல்லமைக் கண்டு இந்திரன் அவனுக்குப் பரிசு கொடுத்ததாகச் சொல்கிறாள். அங்கே மேரு மலையைப் பற்றிய ஒரு குறிப்பும் வருகிறது. மேருவைச் சுற்றும் சூரியன் அஸ்தமிக்கும்போது தன ஒளியை இழப்பான். ஆனால் வாலி இறந்தும் தன ‘ராஜ்ய ஸ்ரீ’ யை இழக்க வில்லை என்கிறாள்.

    அங்கதன் தூதிலும் கம்பர் சொன்ன வர்ணனைகள் வால்மீகியில் இல்லை. வாலியின் பெருமையாகக் கம்ப ராமாயணம் கூறுவது, கம்பர் வாலிக்குத் தரும் ஏற்றமே என்று கொள்ளலாம்.

  20. Pingback: azhwars
  21. ஆயர் குலம் பற்றி சற்று விரிவாக அறிய விரும்புகிறேன்
    தயவு செய்து முற்காலத்தில் வாழ்ந்ததை பற்றி விரிவாக கூறவும் …

  22. நப்பின்னையை கற்பனை என்று தான் எண்ணி இருந்தேன். ஆராய்ச்சிக்கட்டுரைக்கு மிக்க நன்றி. புதிர் மாதிரி இருந்த பல விஷயங்களுக்கு உங்கள் கட்டுரைகள் விடைகள் அளித்துள்ளன. லக்ஷ்மி ஸ்ரீதரன்.

  23. ஆழமான கட்டுரை, சுவையான விவாதங்கள், நன்றி.

  24. Nappinnai is the third consort of The Lord Neeladevi. She was born as Nappinnai in the mortal world. To get married to Nappinnai, The Lord incarnated Himself as Krishna. The purpose of the incarnation of The Lord as Krishna is interpreted in many ways such as Killing of demon Kamsa, to give Gita to the world, to reduce the burden of the Mother Earth, to enjoy with the cowherd girls and so on. But, Namazvar avers that all other act of Krishna were incidental and his main purposes were to marry Nappinnai and enjoy the pleasure of stealing and eating the butter of the cowherd clan. In his Thiruviruththam verse no 21 he explains the whole episode in an interesting manner. According to him, it was the few seconds of when His presence was blocked by the holy smoke of the incense sticks created by the celestial beings and cleared, required for The Lord to rush to the earth, marry Nappinnai and do all other incidental acts that are more popular and being celebrated for ever – **“சூட்டுநன்மாலைகள் தூயனஏந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அம்தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுஉண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன் கோட்டிடையாட்டின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே” Such is her importance and hence Sri Andal makes enough efforts through three consecutive verses invoking Nappinnai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *